பாத்திரங்களில் மோகம்
கதையாசிரியர்: வசுமதி ராமசாமி
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: September 20, 2026
பார்வையிட்டோர்: 198
(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்புள்ள சுஜாதா,
பெண்கள் பாத்திரங்கள் நிறைய வாங்கி வைத்துக் கொள்ளுவது நல்லதா என்று கேட்டிருக்கிறாய்? கல்யாண மென்றால் உடனே வெள்ளிப்பாத்திரம், பித்தளைப் பாத்திரம், எவர்ஸில்வர் பாத்திரம் என்றுதான் பேசுகிறோம். குடித்தனத்துக்குப் பாத்திரங்கள் ஓரளவு தேவைதான். ஆனால் ஆசை எல்லை மீறக் கூடாது.
வனஜாவின் குடும்பம் என்றும் அமைதியாகத்தான் இருக்கும். நான் ஒரு நாள் அவர்கள் வீட்டுக்குப் போன சமயம் அவர்கள் சினிமாவுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். வனஜாவின் கணவர், “என் புதுக் கோட்டு எங்கே?” என்று அலைத்து கொண்டிருந்தார். அவள் சின்னப் பெண் வல்லி சமையல் அறையிலிருந்து ஒரு எவர்ஸில்வர் கிண்ணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவந்து, ”அப்பா! உங்கள் புதுக்கோட்டைப் பாத்திரக்காரனுக்குப் போட்டுவிட்டு அம்மா இந்தக் கிண்ணத்தை வாங்கினாங்க” என்று உற்சாகமாகக் கத்தினாள். கோபமே வராத வனஜாவின் கணவர் ருத்திரமூர்த்தி ஆகிவிட்டார். சென்ற மாதம்தான் அந்தக் கோட்டை முப்பது ரூபாய் கொடுத்துத் தைத்ததாகக் கத்தினார்.
ஒரு குடும்பத்தில் இரண்டு மருமக்கள் இருந்தார்கள். வீட்டில் உள்ள பாத்திரங்களைப் பங்கிட்டுக் கொண்டார்கள். கடைசியில் ஒரு வெண்கலப் பானை மிகுந்தது. அதை விடுவதற்கு இருவருக்குமே மனம் வர வில்லை, கடைசியில் அந்த வெண்கலப் பானையை உடைத்து ஆளுக்குப் பாதியாக எடுத்துக் கொண்டார்கள். இது கதை யில்லை. உண்மையாகவே நடந்ததுதான். பெண்களின் பாத்திர ஆசை அந்த அளவுக்குப் போய் விடுகிற தென்று தெரிகிறதல்லவா?
ஒரு சமயம் என் தூரத்து உறவினர் இருக்கும் ஊருக்குப் போயிருந்தோம். மலை அடிவாரத்தில் அந்த ஊர் இருந்தது. என் உறவினர் வீட்டில் ஒரு பெரிய அம்மாள் இருந்தார். அவர்களுக்குக் கண்ணாடி ஜாடி என்றால் உயிர். விதம் விதமாக வாங்கி அடுக்கி வைத்திருந்தார். இரவு எல்லோரும் சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருக்கும் சமயம் ‘அன்று இரவு பூகம்பத்தின் சின்னம் அந்தப் பிரதேசத்தில் இருக்கக் கூடும்’ என்று ரேடியோ அறிவித்தது. இதைக் கேட்டது தான் தாமதம், பெரிய அம்மாள் பதறி எழுந்து ஓடினார்.
அன்று மாலை கடையில் வாங்கிய அழகிய ஜாடியைத் தன் பக்கத்தில் அணைத்துக் கொண்டு படுத்துக் கொண்டார். பூகம்பச் சின்னம் ஒன்றுமில்லை. மறு நாள் அந்தப் பெரியம்மாளின் போக்கைப் பற்றிப் பேசிச் சிரித்து வீட்டை அதிரச் செய்து கொண்டிருந்தோம்.
என்னுடைய தோழி ஒருத்திக்கு நான்கு குழந்தைகள், நிறைய டம்ளர்களும், கிண்ணங்களும், வாங்கி விதம் விதமாக அடுக்கி இருப்பாள். ஆனால் அதை எடுத்து உபயோகப்படுத்த அவளுக்கு மனம் வராது. தோழியின் கணவர் எதையாவது தொட்டு விட்டால் தாவி ஓடிப் பிடுங்கி வைத்து விடுவாள். குழந்தைகளுக்குக் கூட அந்தப் பாத்திரங்களில் காப்பியோ தண்ணீரோ கொடுக்க மாட்டாள். டம்ளர்கள் அழுக்காய்ப் போய் விடுமென்பது அவள் எண்ணம். அதற்காக ஒரே டம்ளரில் ஒவ்வொருவராகக் காப்பியோ, தண்ணீரோ சாப்பிட வேண்டும். இவைகளினால் வேலை வளர்ந்து வேறு ஒன்றுக்கும் அவகாசம் இருப்பதில்லை. சாமான்களை அழகாக வைத்திருப்பது கவர்ச்சிகரமாக இருந்தாலும் அதை உபயோகப் படுத்தாமல் இருப்பதில் யாருக்குப் பிரயோசனம்? ஆகையால் பாத்திரங்களில் வீண் மோகமில்லாமல் இருக்க வேண்டும்.
பூமாதேவி.
– தேவியின் கடிதம், கல்கியில் 1956-இல் தொடங்கிய தொடர்.
![]() |
ஏப்ரல் 21. பிரபல எழுத்தாளர் வசுமதி ராமசாமியின் பிறந்த தினம். வசுமதி இராமசாமி (21 ஏப்ரல் 1917 - 4 சனவரி 2004) இந்தியப் பெண் எழுத்தாளர் வரிசையில் குறிப்பிடப்பட வேண்டியவர். சமூக சேவையாளர். சென்னை அகில இந்திய வானொலியின் முதல் ஒலிபரப்பாளர்களுள் ஒருவர். இதழாசிரியராக இருந்தவர். காந்தியை நேரடியாகச் சந்தித்து, அவரிடம் சமூக சேவைக்கான பயிற்சி பெற்றவர். மகாத்மா தென்னிந்தியா வந்தபோது, அவர் சென்ற இடமெல்லாம் தானும் சென்றவர்.…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
கடைசி பேருந்து
புஷ்பராஜ் கந்தசாமி
October 3, 2026
சுகந்தம்
பொ.கருணாகரமூர்த்தி
October 3, 2026
கோணங்கள்
ரேவதி பாலு
October 3, 2026
