தொலைந்து போனவள்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 19, 2026
பார்வையிட்டோர்: 122 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘மூர்த்தி… மூர்த்தி” என்று ரகசியம் பேசுகிற குரலில் என்னை யாரோ கூப்பிடுவது, மாடியில் இருந்த எனக்குக் கேட்டது. இப்படிக் கூப்பிடுவது வேறு யாராக இருக்கும்? சித்தப்பாதான். எட்டிப் பார்த்தேன். அவரேதான் ஒட்டடைக் குச்சிக்குச் சட்டை போட்டது மாதிரி, மீன் முள் போன்ற வெளுத்த தலைமயிரோடு, கையில் குடையை மாட்டிக் கொண்டு, நிழலுக்காக எதிர்வீட்டுக் குறட்டில் நின்று கொண்டு, மாடியை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தார் சித்தப்பா. 

“என்ன சித்தப்பா…” என்றேன் அங்கிருந்தபடியே. 

“மத்தியானம் மூணு மணிக்கு வீட்டுக்கு வறியா? வேற வேலையிருந்தா வேணாம்…” 

“எதுக்கு சித்தப்பா…” 

அவர், ரோட்டில் யாரும் போகவில்லை என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு, “அதுக்குத்தாண்டா” என்று பல் தெரியாமல் சிரித்துக்கொண்டு மெதுவாகச் சொன்னார். எனக்குப் புரிந்து விட்டது. 

“சரி… சரி… மூணு மணிக்கு வந்துடறேன் சித்தப்பா” என்றேன். “கட்டாயம் வரணும்… ஏமாத்திட மாட்டியே…” 

“சேச்சே…” 

சித்தப்பா நிம்மதியாக வீதியில் இறங்கி மெதுவாக நடந்து போனார். நடப்பதால் பூமிக்கு வலித்துவிடக் கூடாது என்பது போல மெது நடை. சத்தம் போட்டுப் பேசினால். மற்றவர் கவனம் திரும்புமே என்று வெட்கப்படும் சுபாவம். யாராவது ஒரு வண்டிக் காரன், மாட்டைச் சுளீரென்று அவர் கண் முன்னால் அடித்து விட்டான் என்றால், ஏதோ தன்னையே அடித்து விட்டாற்போல் மனம் நொந்து போய்விடும் சித்தப்பா… 

அவர் கூப்பிட்டது, எதற்கு என்பதை நான் அறிவேன். சீத்தா அக்காளைப் பெண் பார்க்க யாராவது வருவார்கள். எடுபிடி வேலைக்காக நான் அழைக்கப்பட்டிருக்கிறேன். 

சீத்தா அக்காவைப் பெண் பார்க்க வருபவர்கள் இரண்டு வகைப்பட்டவர்களாக இருப்பார்கள். காலை நேரத்தில் வருபவர்கள் மற்றும் மாலை வேளையில் வருபவர்கள். மிக நிம்மதியாகக் காலைப் பலகாரம் சாப்பிட்டு விட்டு, பெரும்பாலும் ஞாயிறுகளில் பொழுது போக்க வேறு ஒரு காரியமும் இல்லையெனில், அப்படியே தமாஷாக அக்காவைப் பார்க்க வருபவர்கள். மாலை வேளைக் காரர்கள், நல்ல சினிமாக்கள் இல்லாத பொழுதிலும், ‘சும்மா சும்மா கடற்கரையா? என்று சலிப்புறுபவர்களும், காலாற நடந்து ஒரு மாறுதலுக்காக’ வருபவர்கள். 

மாலை வேளைக்காரர்களுக்குப் பலகாரம் வாங்கிக் கொடுப்பதும், அக்காவைப் பெண் பார்த்து மாப்பிள்ளை வீட்டார் போவது வரைக்கும் மாடி அறையில் பதுங்கியிருக்கும் சின்னக்கா சகுந்தலாவுடன் பேசிக் கொண்டிருப்பது என் கடமைகள். 

“பதுங்குவது எதற்காக?” என்று ஒரு நாள் கேட்டேன்.

“அக்காவைக் காட்டிலும் நான் கொஞ்சம் சிவப்பில்லையா? அதனால அவளைப் பார்க்க வர்றவங்க, என்னைப் பார்த்து என்னைக் கேட்டுட்டா?” என்று சொன்னது சின்னக்கா சகுந்தலா. 

சித்தப்பா சொன்னபடி சரியாக மூன்று மணிக்கே அவர் வீட்டுக்குப் போய் விட்டேன். சீத்தா அக்கா வாசலில் நின்று கொண்டு தலைவாரிக் கொண்டிருந்தது. சீப்பு, சிக்கில் மாட்டிக் கொண்டு பல்லை உடைத்துக் கொண்டிருந்தது. 

“என்னக்கா? மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்றாங்களா?” என்றேன். 

“ஆமா. ஆனை மேலயும் குதிரை மேலயும் வர்றாங்க” என்றது அக்கா. 

“உன்னைக் கட்டிக்கிடனும்னா ஆனை மேலதானே வரணும்..? ஆட்டோவில் வந்தா, அப்புறம் உனக்கென்ன மரியாதை?’ 

அக்கா, சிரித்தது. அக்கா சிரித்தால் அழகாக இருக்கும். ஒரு கூடை மல்லிகைப் பந்தை முகத்தில் அடித்த மாதிரி இருக்கும். 

“சரியான வாயாடி ஆயிட்டே… போயி வழக்கமாக ஸ்வீட்கார மெல்லாம் வாங்கியாந்துடு” என்றது அக்கா. 

அக்கா வீட்டில் அதற்கென்றே ஒரு பை வைத்திருந்தார்கள். அக்காவே எம்பிராய்டரி செய்த பை. ஒரு பச்சைக் கிளி வாயில் பழத்தை வைத்துக் கொண்டிருக்கிற படம் போட்ட பை. வளைவு வளைவாக ஓரம் மடிப்பு வைத்துத் தைக்கப்பட்டிருக்கும். நானே ஐந்து ஆறு வருஷமாக அந்தப் பையில்தான் இனிப்பும் காரங்களும் வாங்கி வருகிறேன். அன்றைக்கின்று மேனி கருக்கழியாமல் அந்தக் கிளியும், பழமும் கூட அப்படியே இருந்தன. அந்த அக்காவைத்தான் இதுவரை எந்தக் கிளியும் கொத்திக் கொண்டு போகவில்லையே. 

சித்தப்பாவின், அவரைவிட வயதான சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். பாவம் அந்தச் சைக்கிள். அதைப் பார்க்கும் போதெல்லாம் ஒரு கழுதையைப் பார்க்கிற மாதிரி இருக்கும் எனக்கு. களைத்து போன வயோதிகக் கழுதை. அதன் உணர்வை மதித்தோ என்னவோ சித்தப்பாகூட அதைப் பெரும்பாலும் உபயோகப் படுத்தாமல் வைத்திருந்தார். 

முனகிக்கொண்டே என்னைச் சுமந்துகொண்டு சென்றது சைக்கிள். குஞ்சுவையர் கடையில் சைக்கிளை நிறுத்திப் பூட்டிக் கொண்டு படியேறும் போதே குஞ்சுவையர் கேட்டார். 

“என்ன அக்காவைப் பெண் பார்க்க வர்றாளாக்கும்?” 

“உம்” என்றேன். அக்கா அவ்வளவு பிரபலமாயிருந்தாள். தொடக்கத்தில் சொஜ்ஜியும் பஜ்ஜியுமாகத்தான் அக்கா பண்ணிக் கொண்டிருந்தாள். சித்தி இல்லாத காரணத்தால், அக்காவே சொஜ்ஜியும் பஜ்ஜியும் பண்ணி, முகம் கழுவி, தலைவாரி, இருப்பதில் நல்லதை உடுத்திக்கொண்டு பெண்ணாக, வந்தவர்களுக்கு முன் போய் நிற்பதில் இருக்கிற சங்கடங்களை உணர்ந்து இந்த இரண்டு பலகாரங்களையும் விட்டுவிட்டாள். ஆகவே நான் குஞ்சுவையரிடம் தேங்காய் பர்பிகளையும், பாம்பே மிக்சரையும் வாங்கிக்கொண்டு கிளம்பினேன். 

வீட்டுக்கு வந்து சேர்கையில் எனக்கு ஓர் ஆச்சரியம் காத்தி ருந்தது. வீடு புதுமுகம் கொண்டிருந்தது. வாசல் தண்ணீர் தெளித்துக் கூட்டப்பட்டிருந்தது. நாற்காலிகள், மேசை, மேசை மேல் இருக்கும் புத்தகங்கள் எல்லாம் பதவிசாக அதனதன் இடத்தில் இருந்து வீடே ஒழுங்குமயமாகியிருந்தது. ஒவ்வொரு மாப்பிள்ளை வரும்போது நடக்கக் கூடிய சங்கதிதான் இது. எனினும் எனக்கு இது ஆச்சரிய மாகத்தான் இருந்தது. 

“தேங்காய் பர்பிதானே வாங்கியாந்தே?” என்றது அக்கா. அக்காகூடப் புதுசாக இருப்பதுபோல் பட்டது. 

“இனிப்புச்சேவு வங்கியாரலாம்னு நினைச்சேங்கா… நீ கோவிச்சுக்கப் போறியோன்னு பர்பியே வாங்கியாந்துட்டேன்.” 

“திங்கவா வர்றாங்க, ஒரு மரியாதைக்கு ஏதாவது கொடுக்கனும் அவ்வளவுதானே!” 

திடீரென்று எனக்குச் சொல்ல வேண்டும் போல் இருந்தது. 

“எனக்கென்னமோ இந்த இடம் முடிஞ்சுடும்னு தோனுதுக்கா” என்றேன். அக்கா என்னை உற்றுப் பார்த்தது. என்ன காரணத் தாலோ அதன் கண்களில் கண்ணீர் கோத்துக்கொண்டது. மை இட்டதுபோல், கண்ணீர், கண்களின் ஓரம் திரண்டது. 

“உன் வாக்கு பலிக்கட்டும்” என்றது அக்கா. 

நான் மேலே சின்னக்கா பதுங்கியிருக்கும் இடத்துக்குப் போனேன். 

மாப்பிள்ளை வீட்டார் மிகச் சரியாக ஐந்து மணிக்கே வந்து சேர்ந்தார்கள். மிகக் கறாரான மனிதர்களோ என்று பட்டது. ஆட்டோவில்தான் வந்து இறங்கினார்கள். 

நான் அக்காவின் காதில் “என்னக்கா, யானையை எங்கே காணோம்?” என்றேன். “எங்காவது மேயப் போயிருக்கும்” என்றது அக்கா. “இல்லேக்கா… பிச்சை எடுக்கப் போயிருக்கும்” என்றேன். “இருக்கும்” என்றது அக்கா. 

மாப்பிள்ளையை முன்னிட்டுக் கொண்டு, ஒரு சின்னக் கூட்டமே வந்திருந்தது. தத்தம் சௌகரியத்துக்கேற்ற இருக்கைகளில் உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள். நாங்கள் எதிர்பார்த்திருந்த கூட்டம் வந்தது. சித்தப்பா வழக்கம் போல என்னை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். 

“என் அண்ணா பையன்… படிச்சிருக்கான். வேலைக்கு முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கான்” என்றார். 

அக்கா பலகாரத் தட்டை எடுத்துக் கொண்டு வந்து வைத்தது. நானும் சிலருக்கு எடுத்து வந்து வைத்தேன். 

எல்லோரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். நாங்கள் எதிர்பார்த்ததும் இதுதானே. சொஜ்ஜியும் பஜ்ஜியும் எதிர்பார்த்த கூட்டம் திகைத்தது. பிறகு சுதாரித்துக் கொண்டு சாப்பிடத் தொடங்கியது. 

மாப்பிள்ளை மிக நாசுக்காகப் பர்பியை விண்டுத் தின்றார். அச்செய்கையே அவரை மாப்பிள்ளையாக அறிவித்தது. எல்லா மாப்பிள்ளைகளையும் போலத்தான் அவரும் இருந்தார். அதே விறைப்பு, அதே ஒட்டாத பார்வை, அதே வருவித்துக் கொண்ட சங்கோஜம், பெண் வீட்டாரைப் பார்க்கையில் அற்பப் பிறவிகள் என்கிற அலட்சியத் தோரணை எல்லாம். எனக்கு இதெல்லாம் பழகித் தமாஷ் என்கிற நிலைக்கு இக்காட்சிகள் வந்துவிட்டன. சிரித்துவிடக் கூடாது என்று மிகப்பாடுபட்டேன். 

எல்லாம் முடிந்ததும், எப்போதும் ஏற்படும் அந்தச் சங்கடமான மௌனம் சிறிது நேரம் நிலவியது. 

மாப்பிள்ளையின் அப்பா கேட்டார், “இந்த வீடு சொந்த வீடுதானே?” 

“ஆமா” என்று தலையசைத்தார் சித்தப்பா. 

“உங்களுக்கு ரெண்டு பொண்ணு, ரெண்டு பையன்கள்னு சொன்னாரே தரகர்…?” 

“ஆமாங்க…சின்னப் பொண்ணு டீச்சரா இருக்கா.. பையன்கள் ரெண்டு பேருமே வெளியூர்ல இருக்காங்க… எல்லாரும் குடும்பமா இருக்காங்க…” 

மாப்பிள்ளை அப்போது குறுக்கிட்டார். “மிஸ் சீத்தாவுக்கு என்ன அடிப்படைச் சம்பளம்? நானூற்றைம்பதா?” 

“ஆமாங்க தம்பி” என்றார் சித்தப்பா. 

“எழுநூறுக்கு மேலேன்னாரே தரகர்…” 

“அப்படிச் சொல்லியிருந்தா அது தப்புங்க… நான் எப்பவுமே அப்படிச் சொன்னதில்லை, சொல்லவும் சொல்லலே.” 

“அப்போ நானூத்தம்பதுன்னா மொத்தத்துல ஏறக்குறைய ஆயிரம் தானே வரும்” என்றான் மாப்பிள்ளை அலுப்பாக. 

சித்தப்பா எப்போதும் சிரிக்கிற அந்தப் பரிதாபச் சிரிப்போடு, “அவ்வளவுதான் வரும்” என்றார். 

அக்கா அதுவரை அங்கிருந்தது எழுந்து உள்ளே போய்விட்டது. நான் மட்டும் இருந்தேன். பேச்சு அப்புறம், சீதோஷ்ண நிலைமை குறித்தும், இந்தப் பக்கத்தில் மனைவிலை குறித்தும் படர்ந்தது. ஒரு வழியாகச் சரியாக ஆறரை மணிக்கு எல்லோரும் எழுந்து, விடை பெற்றுக் கொண்டு கிளம்பினார்கள். 

“தரகரிடம் சொல்லி அனுப்பறேன்” என்றார் மாப்பிள்ளையின் அப்பா. “நல்ல பதிலாகவே சொல்லியனுப்பறேன்” என்றார் தொடர்ந்து. 

“ஆகா… மறக்கப்படாது” என்று கும்பிட்டார் சித்தப்பா… போகும் போது எல்லோரும் நடந்தே போனார்கள். 

மாப்பிள்ளை வீட்டார் தலை மறைந்ததுமே நானும் அக்காவும் உடனடியாக மாடிக்கு ஓடி வருவோம். சின்னக்கா அறைக்குள் புழுங்கிக் கொண்டிருக்குமே. அப்படித்தான் இருந்தது. 

அக்கா ஒரு தட்டில் பர்பியும் கொஞ்சம் மிச்சரும் காபியும் எடுத்துக் கொண்டு வந்திருந்தது. 

“எப்படிக்கா? இந்த இடம் முடிஞ்சுடுமா..” என்றது சின்னக்கா. பர்பியின் ஒரு துண்டை விண்டு வாயில் போட்டுக் கொண்டு, “பிரமாதம்” என்றது. 

“முடியும்னுதான் தோணுது…” என்றது அக்கா. 

சித்தப்பாவும் வந்து சேர்ந்தார். படி ஏறியதில் அவருக்கு மூச்சு இறைந்தது. வந்ததும் அங்கிருந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார். 

“என்னப்பா? இந்த இடம் முடிஞ்சுடும் தானே?” என்று அவரிடம் கேட்டது சின்னக்கா, வெகு ஆவலுடன். 

“அவங்க விருப்பம் இருக்கட்டும் நாமும் யோசிக்க வேண்டியிருக்கும்மா.” 

‘என்னப்பா சொல்றீங்க?” என்றது சின்னக்கா. 

“அந்த மாப்பிள்ளை பையன் பண விஷயத்துல ரொம்பவும் குறியாக இருக்கிறார்… அதான்” 

“பண விஷயத்துல குறியாய் இருக்கிறது நல்லது தானேப்பா? அள்ளி இறைச்சா குடும்பத்துக்கு ஆகுமா?” என்றது அக்கா. 

சித்தப்பா திடுக்கிட்டு இருக்க வேண்டும். அவர் இதை எதிர்பார்க்கவில்லை. 

“குறியா இருக்க வேண்டியது தாம்மா, பணத்தைவிட மனசு பெரிசில்லையா? இப்பவே கணக்குப் பார்க்கிறவர்…” சித்தப்பா முடிக்கு முன் அக்கா இடைமறித்துச் சொன்னது; “எப்பவும் கணக்கா இருப்பார்…” 

சித்தப்பா இருண்டு கொண்டிருக்கும் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். காற்று எங்கிருந்தோ குளிர்ச்சியாய்த் திரண்டு வந்து கொண்டிருந்தது. 

“சரிம்மா… உனக்குச் சம்மதம்னா எனக்குச் சம்மதம்தான். வாழப்போறவ நீ தானே…” என்று விட்டு எழுந்தவர், தன் சின்னப் பெண் பக்கம் திரும்பி, “சாப்பிடும்மா. ரொம்ப நாழியா அடைஞ்சு கிடக்கறியே..” என்று சொல்லிவிட்டுக் கீழே போனார். 

சித்தப்பா போனதும் சின்னக்கா கேட்டது. 

“அக்கா… அப்பா என்னவோ சொல்றா…ர் உனக்கு முழுச் சம்மதம் தானே…” 

அக்கா சில நிமிஷங்கள் கால் கட்டை விரலால் கோடு கிழித்துக் கொண்டிருந்துவிட்டுப் பிறகு சொன்னது, 

“சகுந்தலா… வரப் போறவரை முழுக்கப் புரிஞ்சுக்கிட்டு அவர் கிட்ட இருக்கிற நல்ல குணத்தை, அல்லது கெட்ட குணத்தைப் புரிஞ்சுக்கிட்டுக் கல்யாணம் பண்ணிக்கிற மாதிரியா நாம இருக்கோம்? கண்ணுக்கு விகாரமா இல்லை; ஏதோ சம்பாதிக்கிறார், அப்படீன்னு மட்டும் தானே பார்க்க முடியும். அதுக்கு மேலே நம்மால போக முடியாதுடி. ஒவ்வொரு சம்பந்தமும் முறிஞ்சு போறப்போ, அப்பா எவ்வளவு சங்கடப் படறார்?… தூக்கம் வராமே ராத்திரி முழுக்க உலாத்திக்கிட்டே இருக்காரே… அது என்னத்துக் குன்னு நம்மால புரிஞ்சுக்க முடியாதா? எனக்கு இப்போவே இருபத்தெட்டு முடிஞ்சு போச்சு… மனசுக்குள்ளே ஏற்கனவே எனக்கு ஐம்பது ஆயிட்டுதும்மா… உனக்கும் வயசாயிட்டுது. நீ என்னைவிடப் பார்க்க லட்சணமா இருக்கே. உனக்குக் கட்டாயம் நல்ல இடமா அமையும். நிச்சயம் அமையும். நான் எதுக்கு சும்மா நந்தி மாதிரி நடுவில கிடந்து உன் வாழ்க்கையை மறிக்கணும்? எனக்கு வாய்க் கிறவர் என்னைப் புரிஞ்சுகிட்டா சந்தோஷம். இல்லேன்னா என்ன குடி முழுகிடப் போறது? பத்தோடப் பதினொன்று…” 

சின்னக்கா எழுந்து வந்து அக்காவைக் கட்டிக் கொண்டது.

“அக்கா… அக்கா…” என்று தேம்பியது. 

“சேச்சே. குழந்தையாட்டமா என்ன இது… எனக்கு உன்னைப் பற்றி தாண்டி கவலை… உனக்கு நல்ல இடமா அமையனுமே” என்று சின்னக்காவின் முதுகைத் தடவிக்கொண்டு சொன்னது அக்கா. 

நான் புறப்பட்டேன். “மூர்த்தி சொன்னது பலிச்சுட்டுது” என்றது அக்கா சிரித்துக்கொண்டே. என்னால் தான் சிரிக்க முடியவில்லை. 

– 1985

– பிரபஞ்சன் சிறுகதைகள், முதற் பதிப்பு: 2004, கவிதா பப்ளிகேஷன், சென்னை.

பிரபஞ்சன் பிரபஞ்சன் (ஏப்ரல் 27, 1945 - டிசம்பர் 21, 2018) தமிழ் எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். வார இதழ்களில் பணியாற்றிய இதழாளர். அரசியல் கட்டுரையாளர். தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது 1995-ம் ஆண்டு பெற்றவர். பிரபஞ்சன் 1980-1982-ல் குங்குமம் வார இதழிலும், 1985-1987-ல் குமுதம் வார இதழிலும் பின்னர் 1989-1990-ல் ஆனந்த விகடன் வார இதழிலும் பணியாற்றினார். நக்கீரன் இதழில் அரசியல்கட்டுரைகளும், மொழியாக்கங்களும் செய்துவந்தார். பிரபஞ்சன் பொதுவாசிப்புக்குரிய பெரிய இதழ்களில் பணிக்குச்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *