திறப்பு
கதையாசிரியர்: நீ.பி.அருளானந்தம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: September 23, 2026
பார்வையிட்டோர்: 177
(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரவு படுத்தபின்பு நன்றாக எனக்கு நித்திரை போய்விட்டது. காலையில் நித்திரை விட்டெழுந்து வெளியே நான் வந்து பார்த்தபோது, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று முடிவில்லா மனிதர் கூட்டம் காலைச் சாப்பாடு வாங்கிக் கொள்ள நிரையில் நின்று கொண்டிருந்தார்கள்.
அந்தப் பரிதாப கரமான நிலையில் எல்லோரையும் அங்கே நான் கண்டபோது, என் மனம் மோசமாகப் பாதிக்கப்பட்டது. நான் துயரத்தில், மேலே உள்ள வானத்தை நீண்ட நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். முகாமெங்கிலும் பெரும் சத்தங்கள்! அவை யெல்லாம் என்காதில் விழுந்து கொண்டிருந்தன. என்றாலும் சத்தங்கள் எதையும் உள்வாங்கிக் கொள்ளாது, செவிடானது போல என் காதுகள் அவைகளை ஒதுக்கித் தள்ளியபடி இருந்தன.
நான் மண்டையைப் பிளக்கும் கவலையில் மூழ்கியி ருந்தேன். என் சிந்தனைகள் மரத்துப் போய்க்கிடந்தது. என் மொத்த இருப்பும் சூனியத்தில் இருந்தது.
எந்தக் காரணமும் இல்லாமல் சாம்பல் நிறவானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த என் கண்கள், திடீரென சூரிய ஒளியால் தாக்குப்பட்டது. அதன் பிரகாசமான ஒளிக் கீற்று என்னில் தாக்குப் பட என் நினைவுகள் விழித்துக் கொண்டது. மூளைக்குள் முன்பு என் கண் முன்னே நடந்த அந்தக் காட்சிகள் ஒன்றின் பின் ஒன்றாய் நகர்ந்து சென்றன.
யுத்தம் நடக்கும் காலமெல்லாம் வீடுவாசல்களிலே நானும் என் மனைவியும் பிள்ளையும் நிம்மதியாகவா இருந்தோம்? தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருக்கும் நான், ராணுவம் ஊருக்குள் வந்து விட்டது என்று எல்லாரும் கிடந்து கலவரப்படும்போது வீட்டைப் போய்ப்பார்க்க முடியுமா? செல்வந்து விழுந்துகொண்டிருக்கும் போது என் உயிரைத் தப்பித்துக் கொள்வதற்கு எங்காவது திசையை நோக்கி நான் ஓடிவிடவேண்டுமல்லவா? இப்படித்தான் இடம் பெயர்ந்து எல்லோரும் ஓடிக்கொண்டிருக்கும் போது, தன்னுடைய தாயை, தன்னுடைய மனைவியை, தன்னுடைய மகனை, தன்னுடைய மகளை – என்று ஓடிக்கொண்டிருக்கும் சனத்துக்குள்ளே பிரிவைச் சந்தித்தவர்க ளெல்லாம் நின்று கொண்டு தேடிக் கொண்டிருப்பார்கள்.
இவ்வாறாகத்தான் ஒரு நாள் நான் அவ்விடத்தில் வந்து செல்விழுகிறது என்ற பயத்தில் ஓடிவர, என் மனைவியும் மகளும் என்னைப்போலவே பயந்துகொண்டு வீட்டிலிருந்து எங்கே யாவது போவோம் என்ற நினைப்பில் வெளிக்கிட்டு ஓடி வந்திருக்கிறார்கள். அவர்கள் இருவரும் வெறுங் காலோடுதான் ஒடிவந்திருக்கிறார்கள். அந்நேரம் மனைவியின் மண்டைக்குள் மட்டும் என்னைப்பற்றிய கேள்விகள் இருந்ததாம்!
மகள் பிறகு அதைப்பற்றியெல்லாம் எனக்குச் சொன்னாள்.
“அவர் எங்க போனாரோ? என்ன ஆனாரோ? எங்கள எங்கயும் இதுகளுக்க அவர் நிண்டுகொண்டு தேடுறாரோ?”
மகள் அதை எனக்குச் சொல்ல, நான் கேட்டு விட்டுக் குழறிக் கத்தினேன். அதற்குப் பிறகு அவளை நினைத்து நான் அழுது அழுதுதான் என் கண்ணீரெல்லாம் எனக்கு வற்றிப் போனது.உடலே எதையும் செய்வதற்கு உதவ மறுத்தது.
இன்று இங்கே நாங்கள் வந்தது முதலாய்,எவ்வளவு நாட்கள் கழிந்து விட்டன. கமலம் நிறத்தில் ரொம்ப அழகு தான்! இப்போது என்மகள் அவளின் அச்சுத்தான்! அம்மா மாதிரித்தான் அவள்! என்னைப் போல் இல்லை! இவளுக்குப் பதினேழு வயதாகிறது. பெரிய கண்களும், கறுத்த முடியும், வலது கன்னத்தில் பெரிய மச்சமும் இருக்கிறது தாயைப்போல! இந்தச் சந்தோஷத்தோடு மீண்டும் அதை நான் நினைக்க, என் முகம் வெளிறிப்போகிறது. எந்த நம்பிக்கையில் நான் இந்த உலகத்தில் இனி வாழ்வேன்? என்றாலும் மதநம்பிக்கையில் நான் எதை எதை யோ வெல்லாம் தேடிக்கொண்டிருக்கிறேன். ஆனாலும் எதுவுமே எனக்கு ஆறுதலளிக்கவில்லை. என் ஆன்மாவை எப்பொழுது அழைப்பாய், என்று நான் இப்போது கடவுளிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அப்படி நான்கேட்டும் கடவுள் என் ஆன்மாவை அழைப்பது போல் இருக்கின்றதாகவேயில்லை.
விதியைப்பற்றியெல்லாம் எனக்குக் கொஞ்சம் கூட அக்கறை யில்லை. செல் வந்து விழுந்து அதில் சிக்குண்டுதான் என் மனைவி இறந்தாள் என்பது உறுதி. அவளோடு அவள் எண்ணங்களும் மரணம்கொண்டு விட்டன. இந்த யுத்தம் தான் என் மனைவியைக் கொன்றது. அந்தச்செல்லை என் மனைவி மீது ஏவிவிட்டவன் கைது செய்யப்படவில்லை. விசாரணைக்காக அழைத்துச்செல்லப்படவில்லை.
இந்த முகாமில் நான் இருந்தாலும் என் வேட்டிக் கட்டுக்குள்ளே சிறுபொட்டலம். ஒன்று மறைப்பாக இருக்கிறது. அதில் கொஞ்சம் நகைகளும் ஐம்பதினாயிரம் ரூபாய்களும் இருக்கின்றன. என் உடல் நிலை மோசமாகிக் கொண்டு வரும் போது இதையெல்லாம் என் மகளிடம் நான் கொடுத்து விடவேண்டும். என் மனநலமும் குன்றி விட்டது.
என் மனைவி இறந்த அந்த நினைவுகளை விட வேறெதிலும் என்நினைவுகள் நகர மறுக்கின்றன. என்மனைவியும் பிள்ளையும் வீட்டை விட்டு ஓடி வரும்போது கொஞ்சம் தள்ளியதாய் உள்ள ஒரு வீட்டுச் சுவர்க்கரையில் அந்தச் செல் வீழ்ந்ததாம்.
“அப்படித்தான் நடந்தது” என்று என் மகள் சொன்னாள்.
தன் மகள் மீது அந்தத் தாய்க்கு எவ்வளவு பாசம்! செல் விழுந்து குடல் தனியே கிடக்கிற நிலையிலும் “என்னை விட்டு ஓடி விடு வேகமாய் நீ ஓடிப் போய்விடு” என்று அவள் சொல்லியிருக்கிறாளே? என்றாலும் என் மகள் தாயை விட் எங்கும் போவதற்கு அசையவே இல்லை. அவளின் கண்களுக்கு முன்பாகத்தான் என் மனைவி தன் கடைசி மூச்சை விட்டாள்.
மகளுக்கு அன்று அசதியுற்ற மூளை இன்னும் வருந்திக்கொண்டுதான் இருக்கிறது. எங்கள் இருவருக்கும் விடிவு என்பதே இல்லாமல் போய் விட்டது. திரும்பத்திரும்ப முகாம்களுக்கும் அலுவலகங்களுக்கும் நாங்கள் அலைந்து கொண்டுதான் இருக்கிறோம். இவ்வளவு பாடுகளையும் நாம் பட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனாலும் எல்லோரும் ஒத்த குரலில் “சமாதானம் வரும் சமாதானம் வரும்” – என்று தான் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கூறுகிற சமாதானம் வருமா? என் மனம் இதை நினைத்து சோர்ந்து போகிறது. இன்று இரவும் முகாமில் நான்படுத்துக் கிடக்கிறபோது, நல்ல நித்திரையிலும் என் உடல் சில அசைவுகளைக் காட்டியது. செயலற்றுக் கிடந்த என் கைகள் வேட்டி இடுப்புக்குள் கட்டிவைத்திருந்த பொட்டலத்தைத் தடவிப்பார்த்துக் கொண்டது கவனத்துடன்.
(சுடர் ஒளி – செப்.08, 2009)
– வெளிச்சம் சிறுகதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2010, திருமகள் பதிப்பகம், கொழும்பு.
![]() |
நீ. பி. அருளானந்தம் இலங்கையின் இலக்கியத் தளத்தில் நாவல், சிறுகதை, கவிதை எனப் பல்துறைகளிலும் பங்களிப்பு வழங்கி வரும் ஒரு முக்கியமான தமிழ் எழுத்தாளர் ஆவார். பிறப்பும் பின்னணியும் இவர் 1947 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி இலங்கையின் வவுனியாவில் உள்ள சூசைப்பிள்ளையார்குளம் என்ற இடத்தில் பிறந்தார். யாழ்ப்பாணம் அச்சுவேலியைச் சேர்ந்த ஹென்றி தம்பித்துரை தம்பிமுத்து மற்றும் சில்லாலையைச் சேர்ந்த லூர்தம்மா தம்பதியினரின் மகனாவார். வவுனியா இறம்பைக்குளம்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
மிகநீண்ட மூன்று நாட்கள்
வாசுகி நடேசன்
October 6, 2026
இளிச்சவாயன் பட்டம்
ஸ்ரீ.தாமோதரன்
October 6, 2026
சரசுவின் சௌந்தர்ய லஹரி
கவிஞர் கண்ணதாசன்
October 6, 2026
