கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினகரன் (இலங்கை)
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 23, 2026
பார்வையிட்டோர்: 166 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“பிள்ளைகளே பாத்தீனியம் எனும் இந்தச் செடிபற்றி நன்றாக நீங்கள் தெரிந்து கொண்டு இனிமேல் விழிப்புடன் இருங்கள். இந்தச் செடி விஷம் கொட்டும் மிகவும் ஒரு நச்சுத் தன்மையுடைய செடி. மற்றைய தாவரங்களின் இரை கௌவி போலத்தான் இந்தச் செடியையும் சொல்லக் கூடியதாக இருக்கிறது. இத்தாவரம் மிக வேகமாக விவசாய நிலங்கள், வீட்டுச் சூழல் தொகுதிகள், வீதியோரங்கள், மேட்டு நிலங்கள், குளத்தின் நீரேந்துப் பிரதேசங்கள் – ஆகிய இடங்களில் அதிகளவில் பரவி வளர்ந்து காணப்படுகின்றன. இதனால் இந்தச் செடிக்கு கட்டாயம் நீங்கள் விலகி இருங்கள். பாத்தீனியம் சிறு அளவில் உயரமாய் வளரும் செடிகள்தான்! ஆனால் இதற்குள்ள வேர்களென்றால் மற்றைய செடிகளைப் போலல்லாது பெரிய அளவுடையதாகவே இருக்கும். இத்தாவரத்திலிருந்து சுரக்கப்படும் ‘பார்த்தெனின்’ – எனப்படும் நச்சுப்பதார்த்தம் மனிதனின் தோலில், அரிப்பு, சிவப்பு, தடிப்பு, கொப்பளம், மூக்கடைப்பு, ஆஸ்துமா – போன்ற கடினப்பட்ட நோய்களையும் உண்டாக்கி விடுகிறது. 

எமது வருங்கால சந்ததியினருக்கும், விலங்குகளுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் இக்களையைப்பற்றி நீங்கள் இப்போது சிறிய அளவிலாவது தெரிந்து கொண்டீர்கள் தானே சரி..! இனிமேல் இதிலே நிற்கின்ற நீங்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு செடியைக்கூட தப்புவதற்கு விட்டுவிடாமல் அவை எல்லாவற்றையும் முதன் முதலாக நிலத்திலிருந்து பிடுங்குங்கள்… அடுத்ததான உங்களது வேலை நீங்கள் பிடுங்கிய அந்தச் செடிகளையெல்லாம் ஒரு இடத்தில் வெயில் காயக் கூடியதாகப் போடுங்கள் நாளை இவற்றை தீயிட்டு நாங்கள் கொளுத்தி விடலாம். அதற்கு பிறகுதான் இந்த இடம் உருப்படும்…” 

-என்று பள்ளிக்கூடத்தின் விளையாட்டு மைதானம் உள்ள பக்கம், அதைத் துப்பரவு செய்வதற்காக வந்து நின்ற எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர் கூறிக்கொண்டிருந்தார். மாணவர்களுக்கு பாத்தீனியம் செடிகள் பற்றிய விவகாரம் ஏலவே இருந்து சிறிய அளவிலாகத் தெரிந்ததுதான்! அதன் காரணமாக அவர்கள் அச் செடிகளின் வெண்நிறப்பூந்துணர்கள் உள்ள ஈனப்பூக்களை மன வெறுப்புடன் பார்த்தார்கள். அதை அழிப்பதற்கு தங்களுக்கும் பெரிய பங்களிப்பு உண்டென அவர்களும் உணர்ந்து கொண்டார்கள். அதனால் அவர்கள் அச் செடிகளைப் பிடுங்கி, வேர்களில் சேர்ந்து ஒட்டி வந்த மண் பிடியை உதறி ஒரு பக்கமாகப் போட்டார்கள். அந்த நிலத்தில் பாத்தீனியம் எங்கும் பரவியதாய் முளைத்திருப்பதைப்பார்த்து அவர்களது பிஞ்சு மனங்களிலும் சினம் மூண்டது.

ஆனாலும் அந்தச் செடிகள் எல்லாவற்றையும் பிடுங்கி அவ்விடத்தை வெட்ட வெளியாக்கிவிட அவர்களுக்கென்றால் அரை மணித்தியாலநேரமளவுதான் சென்றது. 

இளவெயில் பரவியது. வெட்ட வெளியில் நின்று கொண்டிருந்த மாணவர்களின் முகங்களிலே காலைச் சூரியனின் கனிந்த வெளிச்சம் விழுந்துகொண்டிருந்தது. பூக்களில் இரைதேடும் வண்ணத்துப் பூச்சிகள் அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்திலே பறந்தவாறு போய்க் கொண்டிருந்தன. சிறகுமுளைத்த பூக்களாகத் தெரிந்த வண்ணத்துப் பூச்சிகளை பார்த்துக்கொண்டு அதிலே நின்ற மாணவனொருவன் மற்றைய மாணவர்களுக்குச் சொன்னான்: 

“இந்த வெண்ணிறப் பூ முடிகளை நூற்றுக்கு மேற்பட்டதாய் தோற்றுவிக்கக்கூடிய இந்தச் செடியால் வருகிற கேடு பற்றி எம் ஆசிரியரும் கூறி இப்போதுதான் நாம் அவற்றை நன்கு அறிந்து கொண்டோம். இங்கே முளைத்து நிற்கின்ற இந்தச் செடிகளை விடவும், இன்னும் அனேகமாக எங்கள் வீடுகளின் வளவுகளிலேதான், இதைப்போன்று குடை விரித்தாற்போல நிற்கும் இந்தச் செடிகளை நாங்கள் பிடுங்கி எறிய வேண்டியதாய் இருக்கும்….” 

அவன் அதைச் சொல்லவும், அவனுக்குஎதிரே முன்னால் நின்று கொண்டிருந்த மாணவன், மெல்லத்தன்தலையை உயர்த்தி அவனுடைய கண்களை ஊடுருவிப் பார்த்துவிட்டுச் சிரித்தான். 

“உம்… எங்கள் வீட்டைச் சுற்றி காணிநிலமே இப்போது இல்லையே.. காணிநிலம் இன்றைய சூழ்நிலையில் நல்ல விலை ஏறியதால் என் தந்தை அவற்றைத் துண்டுபோட்டு கேட்டவர்கள் பலருக்கும் அவைகளை விற்றுவிட்டார். இப்போது அங்கே எங்களுக்குத் தனி வீடு மட்டும் தான் உண்டு…” 

அவன் இவ்விதம் சொல்ல எல்லோரும் அதைக் கேட்டுச் சிறிது நேரம் மௌனமாய் நின்றார்கள். அந்த மௌனத்தைக் கலைத்துக் கொண்டு இன்னொரு மாணவன் சொன்னான்: 

“இந்த நச்சுச்செடியானது இந்தியாவிலிருந்துதான் இங்கே வந்து பரவியதாம். இந்திய இராணுவம் ‘அமைதிப்படை’ என்று சொல்லிக் கொண்டு இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளுக்கு வருகிற போது, தங்கள் உணவுக்காக இங்கே கொண்டு வந்த ஆட்டு மந்தைக் கூட்டங் களுடன் இந்தப் பாத்தீனியவிதைகள் ஒட்டுண்ணிகளாக அவைகளுடன் சேர்ந்து வந்து நிலத்தில் விழுந்து முளைத்துத்தான் நம் நாட்டிலெல்லாம் இது உற்பத்தியானதாகச் சொல்கிறார்கள்”. 

“இந்தச் செடிகள் முளைப்பதால் அது எங்கள் விவசாயத்தையும் பாதிக்கிறது. எங்கள் இடத்தின் வளர்ச்சிப் பணிகளும் பாதிக்கப் படுகின்றன. இவைகள் எங்களது உடல் நலத்தையும் கூட கெடுக்கிறது…” 

என்று சொன்னான் இன்னொரு மாணவன். 

“இந்தக் கணக்கற்ற செடிகள் முளைத்துப் பரவும் அளவுக்கு இந்த மண்ணே அதற்குப் போதாது… அந்தளவுக்கு இதைச் சொல்லு மளவிற்குத் தீவிரமாக இருக்கிறது இதன் நெருக்கம்…” 

என்று சொன்னான் பிறிதொரு மாணவன். 

“மனிதர்கள் வசிக்காத தீவுகளிலே இவைகள் அங்கேயெல்லாம் முளைக்கின்றதா, இல்லையே? இங்கே மனிதர்களான நாங்கள் வசிக்கின்ற இந்த இடங்களில்தானே, இவையும் தாங்கள் வளரவேண்டும் என்ற நிலைப்பாட்டில் போட்டி போடுகிற அளவுக்கு இருக்கின்றன..” 

“ஓ.. அப்படித்தான். அப்படித்தான்! நாங்கள் இப்போ பார்க்கின்ற அளவிற்கு பாத்தீனியம் எனும் செடிகள்தான் எங்குமே முளைத்து வளர்ந்ததாய் இருக்கின்றன. இதோடு போட்டி போட்டு முளைக்க இங்குள்ள தகரைச் செடிகளுக்குக்கூட முடியாது தான்..” 

தான் பிடுங்கி வைத்திருந்த செடிகளைக் கொண்டுபோய் கும்பலில் அடக்கமாகப் போட்டுவிட்டு வந்த இன்னொரு மாணவன் அவர்களுக்குச் சொன்னான்: 

“இதெல்லாம் இன்று வடகிழக்குப் பகுதியான – இடங்களிலேதான் பெருகி விட்டிருப்பதாக விவசாய திணைக்களமும் டெங்கு நோய் மற்றும் சுகாதார மேம் பாட்டிற்குமான விஷேச செயலணியும் கணக்கெடுத் திருக்கிறது. எங்கள் ‘வவுனியா’ மண்ணின் பச்சைப் பசுமைப் பண்பாடு நிலைமையை அதல பாதாளத்துக்குக் கொண்டுபோய் விடுமள விற்குத்தான் இந்தப் பாத்தீனியம் செடிகள் பயங்கரமாகப் பரவி முளைத்துக் கொண்டிருக்கின்றன… அதனால்தான் எம் பகுதிகளிலிருந்து எந்த மரஞ்செடிகன்றுகளையும் தென் பகுதிக்கு எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டிருக்கிறது… எங்கள் ஊர் எல்லையில் வீதியோரம் பெரிய அறிவிப்பே விளம்பரப் பலகையில் அதற்காக எழுதிப் போட்டிருக்கிறார்கள்… அதை நீங்கள் யாருமே பார்க்கவில்லையா?” 

அந்த மாணவர்களது உரையாடல்களை தூரத்தில் நின்று கொண்டு, ஆசிரியரும்தான் கேட்டு அவர்களுக்கிருக்கும் பொது அறிவைப்பற்றி மிக அமைதியாகச் சிந்தித்துக்கொண்டிருந்தார். 

பாடசாலை மணி ‘டாண்டாண்” என்று ஒலித்தது. மைதானத்தில் நின்று கொண்டிருந்த மாணவர்களெல்லாம் தண்ணீர்க் குழாயடிக்குப்போக அகலக்காலெறிந்துநடந்தார்கள். அங்கே தங்கள் கை கால்களை சுத்தமாக தண்ணீரால் கழுவிட்டு புத்தூக்கத்துடன் பள்ளிக் கூடத்துக்குள் நுழைந்தார்கள். நேரம் செல்லச்செல்ல வெயில் ஏறிக்கொண்டிருந்தது. 

மாணவர்கள் பிடுங்கிக் குவித்து விட்டிருந்த பாத்தீனியம் செடிகள் அந்த வெயிலினது வெக்கைக்கு வாடி வதங்கியபடியே குவியல் உயரம் அடங்கிய நிலைக்குப் போய்க் கொண்டிருந்தன. நாளைக் காலையில் அல்லது அடுத்தநாள் காலையில் பாத்தினியக் குப்பைகள் நெருப்பில் எரிவது என்னவோ நிச்சயம்தான்! 

ஆனாலும் அந்தச் செடிகளிலிருந்து விழுந்து கிடக்கின்ற அசுரவித்துக்கள், அதே மைதானத்தில் இப்போதும் தங்கள் உயிர்த்தலுக்காய் முளைகட்டியபடி தயார்நிலையில் இருந்து கொண்டிருக்கின்றனவே. 

(சுடர் ஒளி – ஏப்ரல் 2009) (தினகரன் வாரமஞ்சரி – மே மாதம் 3ம் திகதி 2009) (தாமரை – செப்டெம்பர் 2009)

– வெளிச்சம் சிறுகதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2010, திருமகள் பதிப்பகம், கொழும்பு.

நீ.பி.அருளானந்தம் நீ. பி. அருளானந்தம் இலங்கையின் இலக்கியத் தளத்தில் நாவல், சிறுகதை, கவிதை எனப் பல்துறைகளிலும் பங்களிப்பு வழங்கி வரும் ஒரு முக்கியமான தமிழ் எழுத்தாளர் ஆவார். பிறப்பும் பின்னணியும் இவர் 1947 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி இலங்கையின் வவுனியாவில் உள்ள சூசைப்பிள்ளையார்குளம் என்ற இடத்தில் பிறந்தார். யாழ்ப்பாணம் அச்சுவேலியைச் சேர்ந்த ஹென்றி தம்பித்துரை தம்பிமுத்து மற்றும் சில்லாலையைச் சேர்ந்த லூர்தம்மா தம்பதியினரின் மகனாவார். வவுனியா இறம்பைக்குளம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *