சர்க்கரைக் கிண்ணம்

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 13, 2026
பார்வையிட்டோர்: 123 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

(1981ல் வெளியான ஆர்மேனியச் சிறுகதை 1991ல் மொழிபெயர்க்கப்பட்டது, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திபிலிஸில் இளைஞன் ஒருவன், கையில் ஒரு சிறு மூட்டை யுடன், ஸால்தாத்ஸ்கி பஜார் வழியாக நடந்தான். அங்கே ஜனங்கள் ஊறவைத்த வெள்ளரி, மட்டரக வெண்ணெய், திருட்டுத் துணிமணிகள், மற்றும் பழைய தட்டுமுட்டுச் சாமான்களை விற்றுவந்தார்கள். 

அவன், ஒரு விலாசத்தைத் தேடி அலையும் அந்நியன்போல், நிலையாக அங்குமிங்கும் பார்த்தபடி, அழுத்தமாகவும் ஒழுங்கற்றும் அடி எடுத்துவைத்து நடந்தான். அத்துடன், அவன் முகம், விமர்சகர்களால் அவமானப்படுத்தப்பட்ட கவிஞர் களுக்கு மட்டுமே இருக்கக்கூடியது போன்று, பாதி இடருற்றும் பாதி அவமதிப்புக்கு உள்ளாகியும் காணப்பட்டது. 

அவன் தனது பழைய இங்கிலீஷ் குல்லாய்க்குப் பதிலாக அகல விளிம்பு கொண்ட பிரஞ்சுத் தொப்பி அணிந்திருந்தால், ஒரு தொப்பி வாங்குவதற்காக அல்லது நாடகம் பார்ப்பதற்காக நகரத்துக்கு வந்திருக்கும் நாட்டுப்புற உபாத்தியாயர் என்றே எவரும் அவனை மதிப்பிடுவர். அல்லது, அவனுடைய நீண்ட, ரொம்பவும் சுருங்கிப்போன, கசங்கி வர்ணம் மங்கிய நீள மேலங்கிக்குப்பதிலாக, ரசாயன சாதனங்களால் சலவை செய்யப் பட்ட இறுகலான சட்டை ஒன்றை அவன் அணிந்திருந்தால், நாகரிகமற்ற ஒரு நகரத்திலிருந்து வந்திருக்கும் சிறிய கடைக் காரன் என்றே பிறர் அவனைப்பற்றி நினைப்பார்கள். 

ஆனால், உண்மையில் அவன் அப்படி யாரும் இல்லை. நிஜத்தைச் சொல்லவேண்டுமானால், அவன் அப்போதுதான் விடுதலையாகி வந்த ஒரு கைதியாவான். 

ஓ, சிறையின் இரும்புக் கதவுகள் அவனுக்கு முன்னே திறக்கப்பட்டு, விண்ணிலிருந்து லேசான மழை தூறிக் கொண்டிருந்த தெருவுக்கு அவன் வந்தபோது, அவன் இதயம் எத்தகைய உவகையினால் துடித்தது. அந்த நேரத்தில், நிச்சய மாக அவன், ஜெயிலிலிருந்து வெளியே வருகிற ஒவ்வொரு நபரும் உணர்வது போலவே, எல்லாவற்றைப்பற்றியும் மிக 

அதிகமான உணர்வுக்கிளர்ச்சி கொண்டான். ஜனங்களும், திறந்த ஜன்னல்களை உடைய வீடுகளும், நகர்ந்து சென்ற வண்டிகளும், வானிலிருந்து பெய்த மழைத்துளிகளும், இனியன வாகத் தோன்றின. இவை தவிர அவன் வேறொன்றையும் உணர்ந்தான். எங்கோ ஒரு நிலவறையிலிருந்து, அல்லது ஏதோ ஒரு வீடு அல்லது உணவு விடுதியிலிருந்து உணவுப் பொருள்களின் சுவையான மணம் மிதந்து வந்தது; சூடாக ஏதேனும் உணவு உண்ணவேண்டும் என்ற ஆசையை அது தூண்டியது. ஆகவே, எதிர்ப்பட்ட முதல் உணவு விடுதிக்குள் அவன் நுழைந்தான். வயிறாற உண்ட பிறகு, திருப்தி அடைந்தவர்கள் இயல்பாகச் செய்வதுபோல், அவன் தனது நிலைமைகுறித்து எண்ணலானான். அன்றைய இரவுப்பொழுதைக் கழிப்பதற்கு எங்கே போவது என்று அவன் நினைத்தான். அந்நகரில் அவனுக்கு உறவினர் எவரும் இல்லை. தேடிப்போவதற்கு உரிய நண்பர்களும் இல்லை. அவன் கையில் ஒரே ஒரு ரூபிள்தான் இருந்தது. அதில் முப்பது கோப்பெக் காசுகளைச் சாப்பாட்டுக்குக் கொடுத்துவிட்டான். லோரி வட்டாரத்திலிருந்து வந்து அந்த நகரத்தில் ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபட்டிருந்த தனது ஊர்க்காரர்களை, ஒரு சிறிது அறிமுகமானவர்களை அவன் எண்ணிப் பார்த்தான். கான்னஸ் என்ற தையல்காரன் வீட்டுக்குப் போய், தனக்கு ஒரு வேலை கிடைக்கும் வரை சில நாட்களுக்கு உதவிபுரியும்படி அவனைக் கேட்கலாம் என்று நினைத்தான். ஆனால், ஒரு வருஷத்துக்கு முன்பு அந்தத் தையல்காரன் தன்னிடம் கோரிய உதவியை இவன் இது வரை செய்யவேயில்லை – அவன் கேட்ட மொச்சைப்பயறை ஊரிலிருந்து கொண்டு தரவேயில்லை என்பது நினைவுவந்தது. அப்புறம், செருப்பு தைக்கும் நிக்கொலாஸிடம் போக நினைத் தான். அதுவும் சாத்தியமில்லை என்று பட்டது. ஒரு தடவை ஒரு தகராறு எழுந்தபோது, இவன் அந்தச் செம்மானை பூர்ஷ்வா என்று பழித்தான்; அதனால் அவன் மிகவும் மனம் நொந்து போனான். பின்னர், மற்றுமுள்ள ஊர்க்காரர்களை எண்ணினான்- சார்கிஸ் என்ற வியாபாரி, ஒரு கடைச் சிப்பந்தியான பாக்ரத், மற்றும் கருமான் சைமன். ஆனால் அவர்கள் சம்பந்தப்பட்ட கசப்பான நிகழ்ச்சிகளும் அவனுக்கு நினைவுவந்தன. முடிவில், ஏபெல் என்ற கடைக்காரனிடம் நேரடியாகச் சென்று முயற்சி செய்யலாம் என்று அவன் தீர்மானித்தான். இறந்துபோன இவன் தந்தையை அவனுக்கு நன்றாகத் தெரியும். இவனுடைய தந்தைதான் அவனை ஊரிலிருந்து நகருக்கு இட்டுவந்து ஒரு ஆள் ஆக்கிவிட்டார்.ஏபெல்தான் மிகுந்த நம்பிக்கைக்கு உரியவனாகத் தோன்றினான். 

இப்போது அவன் ஸால்தாத்ஸ்கி பஜாரின் சந்தடியுள் புகுந்து கடைக்காரன் ஏபெலை நோக்கி உதவி கேட்பதற்காகப் போய்க்கொண்டிருந்தான், நடக்கும்போது, ஏபெல்பற்றி, மூன்று வருஷங்களுக்கு முந்தி இவன் போயிருந்த அவனது கடையைப்பற்றி, ஒரு தட்டு நிறைய ஆப்பிள்கள், ஒரு பீயர் பழம், ஒரு கட்டி வெல்லம் ஆகியவை தீட்டப்பட்டிருந்த அவனுடைய பெயர்ப்பலகைபற்றி எல்லாம் எண்ணினான். இப்படி எண்ணம் வளர்ந்ததனால், ஏபெல் தனக்கு உதவிபுரிய மறுக்கலாம் என்ற சந்தேகம் அவனுக்கு எழவேயில்லை. 

“நிச்சயமாய் அவன் மறுக்கமாட்டான். ஏனென்றால் என் அப்பா அவனை ஆளாக்கிவிட்டிருக்கிறார். என் அப்பா உதவி செய்திராவிட்டால், அவன் இப்போது பழம் செருப்பு அணிந்து ஆடுகள் மேய்த்துக்கொண்டிருப்பான்… அவன் எனக்கு உதவி செய்ய விரும்பாவிட்டால், எனக்குச் செலவுக்குக் கொஞ்சம் பணம் கடனாகத் தரும்படி நான் அவனைக் கேட்பேன். அப்புறம் அதை அவனுக்குத் திருப்பிக் கொடுத்துவிடுவேன்…” இப்படி அவன் தனக்குத் தானே கூறிக்கொண்டான். 

மண்டைக்குள் இவ்வித நினைப்புகள் குடைய, அவன் ஏபெலின் கடையை அடைந்தான். ஜன்னலின் முன்னால் நின்று உள்ளே கவனித்தான். கடையில் வேலைக்காரப் பையன் ஒருவன் மட்டுமே இருந்தான். அவன் எதையோ வாயில் போட்டு அவசரமாகச் சுவைத்துக்கொண்டிருந்தான். இளைஞன் உள்ளே நுழையலாமா வேண்டாமா என்று முதலில் தயங்கினான். ஆனால், பின்னர் தனது நிலையைத் தெளிவாகப் புரிந்துகொண்டு – இரவைக் கழிப்பதற்கு இடம் எதுவும் இல்லை: சாப்பாட்டுக்குச் செலவு செய்யப் பணமும் இல்லை என்பதை உணர்ந்து-அவன் துணிவு கொண்டான். உள்ளே போனான். 

அவனைக் கண்டதும் சிறுவன், வாயில் கிடந்த ‘சூயிங் கம்’ மை அவசரமாக வெளியே எடுத்து, அதைத் தன் சட்டைப் பைக்குள் திணித்தான். 

“என்ன வேண்டும்?” என்று அவன் அதட்டலாய்க் கேட்டான். 

இளைஞன் ஒரு கணம் தயங்கினான். 

“மிஸ்டர் ஏபெலை, உன் முதலாளியை, நான் பார்க்க வேண்டும். அவர் இங்கே,உள்ளே,இருக்கிறாரா?” என்று முணுமுணுத்தான். 

“அவர் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார். நான் அவரைக் கூப்பிடவேண்டுமா?” 

இளைஞன் மீண்டும் தயங்கினான். வேளைகெட்ட வேளையில் அவன் அங்கே வந்திருந்தான். சிறிது காலம்தாழ்த்தி வந்திருந் தால் ரொம்ப நன்றாக இருந்திருக்கும்… ஆனாலும் பரவாயில்லை. அவரது சாப்பாட்டுக்கு இடைஞ்சல் இல்லை என்றால், பையன் முதலாளியைக் கூப்பிடலாம் தான். 

சிறுவன் மெதுவாகக் கடையின் உட்புறம் நகர்ந்தான். இளைஞன் கடைப்பலகையை நெருங்கி,ஏபெல் வருகிற வரையில், அங்கிருந்த ஒரே மாதிரியான சர்க்கரைக் கிண்ணங்களைப் பார்வை யிடலானான். மூடிபோட்ட கிண்ணங்கள். வழக்கமாக நாட்டுப் புறப் பாதிரிமார்களும், நகரத்து மாதாகோயில் அதிகாரிகளும் மட்டுமே உபயோகிக்கக்கூடியவை அவை. அவன் ஒவ்வொன்றாய் மூடியைத் திறந்து சிரத்தையில்லாமலே நோக்கினான். ஏபெல் தன்னை அடையாளம் காண்பது சிரமம்தான் என்று எண்ணினான். அவர்கள் முன்பு சந்தித்ததுக்குப் பிறகு மூன்று வருஷங்கள் ஓடியிருந்தன… ஆனால், தன்னைக் கண்டுகொண்டால் அவன் சந்தோஷப்படுவான். ஏனெனில் இவனது தந்தையின் உதவியால் தான் ஏபெல் இப்படி ஒரு கடைக்குச் சொந்தக்காரனாக முடிந்திருக்கிறது. சந்தேகம் வேண்டியதில்லை. அவன் மறுக்க மாட்டான். தனக்கு உதவி செய்வான். 

“ஆனால், நான் திருடிவிட்டு ஜெயிலில் இருந்தேன் என்று அறிந்தால், அவன் உதவாமல் போகலாம்” என்று அவன் தனக்குள் கூறிக்கொண்டான். “நான் குற்றம்புரியாதவன், குற்றமற்றவன் என்ற முறையில் விடுவிக்கப்பட்டவன் என்பதை அவன் ஒருபோதும் நம்பமாட்டான். ஜெயிலிலிருந்து விடுவிக்கப் பட்டவர்களின் குற்றமற்ற தன்மையை ஜனங்கள் நம்புவதில்லை…” அவன் கடையைவிட்டு வெளியே போய்விட விரும்பினான்; தனது ஊர்க்காரன் தன்னைப்பற்றித் தெரிந்து கொள்ளவேண்டாமே என்று நினைத்தான். ஆயினும், அப்புறம் அவன் இல்லாதபோது அவனைப்பற்றி அவர்கள் மிக மோசமான விஷயங்களைக் கூறக்கூடும் என எண்ணி அவன் அங்கேயே நின்றான். 

அந்த நேரத்தில்தான், தடுப்புச் சுவரின் பின்புறமிருந்து வேகமான காலடிகளின் சத்தம் கேட்டது. அவர்கள் தன்னைச் சந்தேகிக்கக் கூடாது என்பதற்காக, இளைஞன் சர்க்கரைக் கிண்ணத்தின்மேலே வைத்திருந்த கையோடு அசையாது நின்றான். 

நடுத்தர வளர்த்தி உடைய ஒரு மனிதன், கைகளை அகட்டி வைத்தபடி (அவற்றில் உணவு படிந்திருக்கும் என் ன்று தோன்றியது) வந்தான். சரியான லோரி வட்டாரத்து ஆசாமி. 

அன்புள்ள, கீழ்மையான முகம் உடையவன். குட்டையான், நரைத்த முடி அடர்ந்த அவன் தலையும் முகமும் முள்ளம்பன்றி யின் தோற்றத்தை நினைவுபடுத்தின. இளைஞனைப் பார்த்து, “உனக்கு என்ன வேண்டும்?’ என்று அவன் கேட்டான். 

இளைஞன் கிண்ணத்தின் மூடியை அப்படியும் இப்படியும் திருப்பிக்கொண்டே, “நான். நான் வந்து…’ என்று இழுத்தான். 

பாதிச் சாப்பாட்டில் எழுந்து வந்து, பொறுமையற்ற கண்களால் தன்னைக் கவனித்த மனிதனின் முன்னே அவன் குழம்பித் தவித்தான். 

சர்க்கரைக் கிண்ணத்தைச் சுழற்றியவாறே அவன் தொடர்ந் தான்: “நான் வந்து…” 

கடைக்காரன் அமைதியில்லாமல் அசைந்தான். இளைஞன் சர்க்கரைக் கிண்ணத்தையே தொடர்ந்து பார்த்துக்கொண் டிருப்பதைக் கவனித்து, ” நல்லது. நீ ஒரு சர்க்கரைக் கிண்ணம் வாங்க விரும்புகிறாய். இல்லையா? அது ஒரு ரூபிள் விலை ஆகும்” என்றான். 

“இவன் தன்னைக் கண்டுகொள்ளவில்லை” என்று இளைஞன் நினைத்தான். தான் யார் என்று அறிவிக்க விரும்பினான். 

”பாருங்கள். நான் கேச்சன் மாமா மகன்’” என்றான். வெட்கி முகம் சிவந்தான். மடத்தனமாக உளறிவிட்டோமே என்று நினைத்தான். இதைச் சொல்லத் தேவையேயில்லை. 

‘கேச்சன் மாமா மகனா! நம்ம கேச்சன் மாமாவின் மகனா?’ என்று கடைக்காரன் வியப்போடு கத்தினான். 

”ஆமாம்”. இளைஞன் மகிழ்ச்சி அடைந்தான். அவன் நல்ல படியாகத்தான் பேச்சைத் துவக்கியிருக்கிறான் என்று தோன்றியது. இப்போது ஏபெல் அவனைக் கேள்விகள் கேட்கலாம்… 

“நல்லது. நீ வந்து நம்ம கேச்சன் மாமா மகனானால், விலையைக் கொஞ்சம் குறைத்துக்கொள்ளலாம்” என்று கடைக் காரன் தொடர்ந்தான். “தொண்ணூறு கோப்பெக் கொடு. அதை எடுத்துக்கொள். அது அருமையானது. அதை வாங்கியதுக் காக நீ வருத்தப்பட நேராது.” 

இளைஞன் மவுனமாக நின்றான். தான் தொடங்கியதை மேற்கொண்டு தொடர்வது எப்படி என்று சிந்தித்தான். ஏபெல் தன்னைக் கேள்விகள் கேட்கவேண்டும் என்றே அவன் ஆசைப் பட்டான். ஆனால் ஏபெல் பேசவேயில்லை. கைகளை அகட்டி வைத்து நின்றபடி பொறுமையற்று இவனையே பார்த்துக் கொண்டிருந்தான். 

“நல்லது. உனக்குச் சம்மதம் இல்லையா?” 

“நான்… நீங்கள் பாருங்கள்…” என்று இளைஞன் ஆரம்பித் தான். இப்போதுதான் அவன் சிறையிலிருந்து வெளிவந்திருப் பதையும், அவனுக்கு உதவி தேவை என்பதையும் சொல்ல விரும்பினான். ஆனாலும், மீண்டும் பேசாமலே நின்றான். 

அவனிடம் அதைச் சொல்லி என்ன பயன்; அதனால் என்ன நன்மை? 

“என்னை நம்பு. அதைவிட குறைக்கமுடியாது” என்று கடைக்காரன் அழுத்தமாகச் சொன்னான். “நான் உனக்காகத் தான் விலையைக் குறைக்கிறேன். எப்பவும் நாங்கள் ஒரு ரூபிள் இருபது கோப்பெக் விலைக்கே விற்கிறோம். இப்போது நான் அதை உனக்குத் தொண்ணூறு கோப்பெக்குகளுக்குத் தருகிறேன். சாமானைப்பற்றி ஒன்றும் சொல்லத் தேவையில்லை. அது ஓடெஸ்ஸா தயாரிப்பு. உறுதியான நயம் சரக்கு. நீ அதை உடைக்காமல் இருந்தால், அது இருபது வருஷங்கள் நிலைத் திருக்கும்.>> 

இளைஞன் தயங்கியவாறு அசைந்தான். 

“பாருங்கள்.நான் இப்போதுதான் சிறையிலிருந்து விடுதலை யானேன். அதனால்… அவன் தொடர்ந்து பேச முயன்றான். ஆனால் கடைக்காரனை மீண்டும் பார்த்ததும், பிறகு சிறுவனை நோக்கியதும், அவன் நிறுத்திவிட்டான். மவுனமாக நின்றான். 

ஏபெல் மறுபடியும் அமைதியின்றி அசைந்தான். பாதிச் சாப்பாட்டில் எழுந்து வந்த ஒரு நபர், அல்லது அவசரமாக எங்கோ போகிறவர்தான் அவ்விதம் செய்ய முடியும். 

“அடக்க விலையே அதுதான். அதை வாங்கிய விலை அது.. என்று அவன் அவசரமாகச் சொன்னான். 

தன் ஊர்க்காரனுக்கு, தான் அதிருப்தி விளைவித்துக்கொண் டிருப்பதை அவன் குரலிலிருந்து இளைஞன் அறிந்தான். அந்தச் சிறுவனுக்கும் இவன் அதிருப்தி தந்துகொண்டிருக்கலாம் என்று தோன்றியது. சிறுவன் துடுக்காகவும் அகந்தையோடும் இவனை நோக்கினான். ஆகவே இவன் வெளியே போக நகர்ந்தான். 

*‘உனக்குப் பிடிக்கவில்லையா?” என்று கடைக்காரன் கேட்டான். 

இளைஞன் துணிவு கொண்டான். 

“இல்லை. விலை ரொம்ப அதிகம்.” 

“நீ எவ்வளவு தருவாய்?” 

அவன் வேண்டுமென்றே விலையைக் குறைத்தான்.

“எழுபது கோப்பெக்.” 

“அப்படியானால் நஷ்டம்தான் ஏற்படும்!” 

“என்னால் அதிக விலை தர இயலாது” என்று விருப்பமின்றிக் கூறிவிட்டு இளைஞன் வாசல் பக்கமாக விரைந்தான். 

“எண்பது கொடு” 

“என்னால் முடியாது” என்று இளைஞன் உறுதியான குரலில் தெரிவித்தான். கதவைத் திறந்து வாசல்படியில் கால் வைத்தான். சரி சரி, வா. வந்து அதை எடுத்துக்கொள்” என்று கடைக்காரன் அவனை அழைத்தான். “வா… நீ நம்ம கேச்சன் மாமா மகனாக இருப்பதால், நாம் இதில் அதிகமாக எதுவும் பண்ணுவதற்கில்லை…” 

இளைஞன் எதுவும் பேசாமல் திரும்பி வந்தான். எழுபது கோப்பெக்குகளை – அவனிடமிருந்த பணம் முழுவதையும் – கொடுத்து, சர்க்கரைக் கிண்ணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினான். 

சில நொடிகளுக்குப் பிறகு அவன் திரும்பவும் ஸால்தாத்ஸ்கி பஜார் வழியாக நடந்துகொண்டிருந்தான். அவன் கையில் பழைய மூட்டையுடன் புதிய சர்க்கரைக் கிண்ணமும் இருந்தது இப்போது. 

– ஸ்டீபன் ஸோரியன் (1889-1967) 

– ஆர்மேனியச் சிறுகதைகள், தொகுப்பாசிரியர்: ஸோஃபி அவாகியான், ஆங்கில மொழிபெயர்ப்பு: ஃபெய்னா கிளாக்கொலீவா, ஏ.மக்ஹொவ்லியன், ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம்: வல்லிக்கண்ணன், தமிழாக்கம் முதற் பதிப்பு: 1991, நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *