கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 13, 2026
பார்வையிட்டோர்: 79 
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்

(1981ல் வெளியான ஆர்மேனியச் சிறுகதை 1991ல் மொழிபெயர்க்கப்பட்டது, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வீட்டிலிருந்து சதுக்கத்துக்கு; சதுக்கத்திலிருந்து வீட்டுக்கு. 

காலை முதல் மாலை வரை அவன் கண்காணிக்கிற எல்லை அது தான். முன்னர், அவன் தச்சுவேலைக்காரனாக இருந்தபோது கூட, நகரத்தில் அவன் போவதற்கு விசேஷமான இடங்கள் எதுவும் இருந்ததில்லை. ஆயினும், சனிக்கிழமை மாலை வேளை களில் வீட்டுக்கு வந்ததும், அவன் நேரே மதுச்சாவடியை நோக்கி நடைபோடுவான். ஆனால் இப்போது யுத்தமும், பஞ்சமும், இன்னும் இதர பல விஷயங்களும் சேர்ந்து அவனையும் அடியோடு அமுக்கிவிட்ட காலத்தில், அவனுக்குப் போக்கிடமே இல்லை என்றாகிவிட்டது. அவன் வேலை செய்யவில்லை. ஏற்கெனவே கிழடாகிவிட்டான். முற்றிலும் ஓய்ந்துபோனான். தரித்திரம் பிடித்த கிராமம் ஒன்றில் தீனிக்கு வழியின்றிக் கிடக்கும் ஒரு நாய்க்கு – எவரையும் பயப்படுத்தாமலும், தான் இருப்பதை எவருக்கும் உணர்த்த முடியாமலும் வெறுமனே கம்மிய குரலில் குரைத்துக்கொண்டிருக்கிற அப்பாவி ஜந்துவுக்கு – இருக்கிற முக்கியத்துவம்தான் அவனுக்கும் இருந்தது. 

வேலையிலிருந்து நீக்கப்பட்ட ஒரு தச்சன் அவன். அவ்வளவு தான். 

கடைசியாக அவனை வேலைக்கு வைத்திருந்த ஆசாமி அவனைச் சக்கையாக முற்றிலும் பிழிந்தெடுத்த பிறகு வீட்டுக்கு அனுப் பினான். அவனது சவப்பெட்டிக்கும் புதைகுழிக்கும் அவனை அனுப்பிவிட்டான் என்றே சொல்லவேண்டும். 

நாற்பது வருஷங்கள் உழைத்தும் அவன் எதுவும் மீத்திருக்க வில்லை. உடல் பலமோ, பணமோ, நண்பர்கள் என்று எவருமோ அவனுக்கில்லை. அனல் பறக்கப் பாய்ந்து ஓடும் குதிரைகள் பூட்டிய வண்டி மாதிரி அனைத்தும் அவனை விட்டுப் பறந்தோடின. தணிக்க முடியாத பசி ஒன்றுதான், நன்றியுள்ள நாய் மாதிரி, கடந்த காலத்தின் எச்சமாக அவனோடு ஒட்டிக் கொண்டிருந்தது. முன்னாள் கைவினைஞனின் ஆரோக்கியமான வயிறு பிடிவாதமாக இயங்கியது. 

தின்பது, முடிவேயில்லாமல் தின்பது- அதுதான் அவனது அடங்காத அவா. 

காலை முதல் இரவு வரை, அவனுடைய பேச்சு, செயல், திட்டம் எல்லாம் தின்பதைப்பற்றியே இருந்தன. அவன் தனது இருக்கையிலிருந்து எழுந்து, உணவுப் பதார்த்தங்கள் இருக்கிற அலமாரி அருகே போய், அதைத் திறந்து. அதன் இண்டு இடுக்குகள் பூராவும் ஆசையோடு தேடுவான். சட்டி பானைகளின் மூடியைத் திறந்து பார்ப்பான். எப்போதும் ருசிகரமான எதையாவது கண்டுகொள்ளலாம் என்ற நம்பிக்கையோடு, அல்லது தீவிர விருப்பத்தோடு, சிறு துணிகளின் மடிப்புகளைக் கலைத்து ஆராய்வான். தன் வாயில் போட்டுக்கொள்ள ஒரு துணுக்கைக்கூடக் காணாதபோதும், அவன் திறந்த அலமாரியின் முன்னே நெடுநேரம் யோசனையில் மூழ்கியவாறு நின்றுவிடுவான். தினம் ஒவ்வொரு மணி நேரமும் இப்படிச் செய்துகொண்டே இருப்பான். 

வீட்டில் எந்த இடத்திலாவது ஏதேனும் ரொட்டி இருந்தால் அதை நொடிப்பொழுதில் அந்தத் தச்சன் தின்று தீர்த்து விடுவான். கண்ணுக்குப் புலனாகாத இடுக்குகளில் அவன் மனைவி சர்க்கரைக் கட்டியில் முக்கால்வாசியை மறைத்து வைப்பாள். ஆயினும், தச்சன் சிறிதளவு ரொட்டிக்காசு, அல்லது மொச்சைக்காக, நெடுகத் தேடிக்கொண்டேயிருப்பான்… 

வீட்டில் ஒன்றுமே இராது; உயிரைக் கொடுத்தால்கூட எதுவும் கிடைக்காது. அவனுடைய பசி அதிகரித்தது: உக்கிரமாக வளர்ந்தது. தச்சன் பெருமூச்செறிவான். அவன் வாய் கோணி, எச்சில் வழியும். அவன் உதடுகளைச் சப்பியபடி தனது இருப்பிடம் திரும்புவான். சுவரின்மீது முதுகையும் தலையையும் சாய்த்துக்கொண்டு, எதிர் சுவரில் உள்ள ஒரு புள்ளி மீது தனது அரைக்கண் பார்வையைப் பதிப்பான். மணிக்கணக்கில் அதே நிலையில் இருப்பான். 

அவன் தூங்குவான். எனினும், அது தூக்கம் அல்ல. கனவுக் காட்சிகள் தோன்றியவாறிருக்கும். 

வான்கோழியின் தொடைக்கறி, பருப்புகள் கலந்து பக்குவப் படுத்தப்பட்ட ஆற்று மீன், மீன்கறி சேர்ந்த கொழுக்கட்டை, ஆட்டு இறைச்சியாலான கறிவகைகள், இப்படிப் பலவும் தினவெடுத்த அவன் கற்பனையில் தோன்றும். எல்லையிலாப் பெரும் விருந்து, பசியைக் கிளறிவிடும் வகைவகையான பானங் களோடு, அவன் முன்னே பரப்பப்பட்டிருக்கும். சுவை தரும் மணங்கள் காற்றில் கலந்திருக்கும். 

ஒளிரும் வெண்ணிற மென்மையான ரொட்டியில் பொதிந்த சாறு நிறைந்த மசாலா இறைச்சி ஏதோ ஒன்று அவனது உதடு களின் வழியே உள்ளே புகும். பக்குவமாக உப்பிட்ட இறைச்சியின் ரசம் ரொட்டித் துண்டுகளை ஊறவைத்து அவன் நாக்கிற்கும் தொண்டைக்குமிடையே இளகி ஓடும். 

சட்டென்று அவனது எச்சில் தொண்டையை நனைத்தபடி அவனுள் இறங்கும். அவன் இருமியவாறு விழித்துக்கொள்வான். விழிப்படைவான். பசித்த ஓநாயின் கண்களை ஒத்த அவனுடைய கண்கள் சுற்றுப்புறம் நெடுகிலும் சஞ்சரிக்கும். பயங்கரமான, கொடிய யதார்த்த நிலைமை அவனைத் தன் நினைவுக்குக் கொண்டு வரும். 

அவனுடைய பசி பெரும் கோபமாய் மாறும். அவன் துள்ளி எழுவான். முதலில், கிறக்கத்தினால் தள்ளாடுவான். தயங்கியபடி நிற்பான். பிறகு சுவரைப் பிடித்தபடி வெளியே முகப்புக்குப் போவான். 

அவன் துணைவி அவனுடைய வாழ்க்கையைச் சட்டை செய்வதில்லை; அவன் போக்குகள்பற்றிக் கவலைப்படுவதேயில்லை. அவன் குதிக்கலாம்; இஷ்டம்போல் எத்தனை தடவை வேண்டு மானாலும் வெளியே போய்விட்டு உள்ளே வரலாம். அவனது செயல்கள் எதுவுமே அவன் மனைவிக்குப் புதுமையானது இல்லை. தச்சன் ஜீவிப்பதை விட்டுவிட்டான். அவனுடைய அசைவுகள், சொற்கள், செயல்கள் எல்லாமே ஏற்கெனவே தீர்மானிக்கப் பட்டவை; ஒரு சடங்கு மாதிரி, ஆயிரம் வருஷங்களாக இயங்கி வரும் ஒரு கிரியைபோல, திரும்பத் திரும்ப இயந்திர கதியில் நடைபெறுவனதான். 

அது அலுப்புத் தந்தது. இலையுதிர்காலத்தின் மழை மாதிரி சலிப்பூட்டியது. 

பசித்த அந்த மிருகம் தன் மனைவியின் கவனத்தைக் கவர்வதற்கு என்ன செய்ய வேண்டும்? அழிக்கமுடியாத ஒரு விதியின் தீர்ப்புக்கிணங்க அவள் கணவன் செய்ததையே செய்து கொண்டிருப்பான். அவன் வெளியே மாடி முகப்புக்குப் போவான்; வெயிலில் காய்வதற்காக ஒரு மூலையில் பரப்பி யிருக்கும் கறுத்த உருளைக்கிழங்குகளின் பக்கம் வருவான்; அவற்றை ஒவ்வொன்றாய் எடுத்து, நடுங்கும் கைகளில் வைத்துப் பரிசீலனை செய்வான்; நாக்கால் தொட்டுப் பார்ப்பான்; கீழே போடுவான். பிறகு, தனது பிரம்பை எடுத்துக்கொண்டு படியிறங்கிக் கீழே போய்த் தெருப்பக்கம் செல்வான். எந்த இடத்துக்குப் போவான்? அதுவும் விதியினால் முன்பே திட்டமிடப் பட்டதுதான். சதுக்கத்துக்கே போவான் அவன். 

அவன் அனைத்து முடுக்குமூலைகளிலும் அலைவான். நகரத் தராசு மேடை, முலாம்பழங்கள், தர்பூசணி, வெள்ளரிக் குவியல்கள்,பால் சாலை எல்லாம் சுற்றுவான். அவை அனைத்தின் விலைகளையும் விசாரிப்பான். பிறகு, கசாப்புக்கடை பக்கம் போவான். சன்னல்கள் முன்னே நிற்பான். இறைச்சி வகைகளைக் கண்ணோட்டமிட்டபின், உள்ளே நுழைவான். மென்மையும் சதைப் பிடிப்பும் உடைய கறிவகைகளைத் தடவிப் பார்ப்பான். பிறகு, வீடுநோக்கி நடப்பான். சதுக்கத்தின் ஓரத்தை அடைந் ததும், அங்கே உள்ளே உயர்ந்த நடைமேடையின் மீது உட்காருவான். பிரம்பின்மேல் கைகளை ஓய்வாக வைத்தபடி அவன் சதுக்கத்தையும் அதில் குவிந்துகிடக்கிற அனைத்துவித உணவுப் பொருள்களையும் பார்வையிடுவான். 

உலகத்தில் வளம் கொழித்தது; ஒவ்வொன்றும் மிக நிறையவே இருந்தது. ஆனால், பரிதாபத்துக்குரிய விஷயம், ஒவ்வொன்றும் மிக்க விலை உயர்ந்ததாக இருந்தது. 

பச்சை திராட்சைகள், தெய்வீக முலாம்பழங்கள், நேர்த்தி யான பாலாடைக் கட்டிகள் ஆகிய அந்த வற்றாப் பெரும் செல்வத்திலிருந்து ஒரு துணுக்கு, அல்லது ஒரு மணி, அல்லது ஒரு துளிகூட அவனுக்குக் கிட்டாது! 

இந்த உலகம் ஒரு கனவு; பிரமிக்கவைக்கிற, வேதனை நிறைந்த, கொடுமையான கனவு! எவ்வளவு பெரும் பசி, எவ்வளவு உணவுகளின் பெருக்கம்; அவற்றை அடைய முடியாத நிலைமையும்கூட. 

இதெல்லாம் எங்கே முற்றுப்பெறும்? ஒரே ஒரு தடவை தன் வயிறு நிரம்ப உண்டு களிப்பதற்கு அந்தத் தச்சன் ஆண்டுக் கணக்கில் ஏங்கவேண்டுமா? 

இந்த உலகத்தைப் பொறுத்தமட்டில், உயிர் பிரியாத நிலையிலேயே அவன் ஏற்கெனவே செத்துப்போனவன். ஏனெனில், செத்தவர்கள்தான் சாப்பிடுவதில்லை. ஆயினும், அவன் உயிரோடு இருந்தான். அவன் தன் கண்களால் அனைத்தையும் பார்த்தான். தர்பூசணியின் குளுமையான வட்டத்தை இப்போது தானே அவன் தொட்டுப் பார்த்தான்; ஆட்டுக் குட்டியின் மிருதுவான கறியை அவன் தடவினானே… ஆகவே, அவன் உயிரோடு இருக்கிறான்; இன்னும் சாகவில்லை. உலகத்துக்கு என்ன வந்துவிட்டது? வயிறாரத் தின்னாமல் அவன் நிஜமாகவே செத்துவிடுவானா?.. 

அவன் கசப்புற்றான், கோபம் கொண்டான், வெறி அடைந்தான். 

தனக்குத் தானே பேசியபடி அவன் வீட்டுக்குத் திரும்பிப் போவான். 

அவன் முற்றத்தில் அடிவைத்ததுமே, அவனுடைய மயக்கப் பிதற்றல்களை அவன் மனைவி கேட்டுவிடுவாள். அவன் உள்ளே நுழைவதைப் பார்ப்பதற்காக அவள் தன் கண்களை அசைக்கவும் மாட்டாள். அவன் மயக்கநிலையில் ஆயிரம் தடவைகள் அவ் வீட்டுக்குள் புகுந்திருக்கிறான்; மாடிப்படிகளைத் தன் பிரம்பினால் ஆயிரம் முறை தட்டியிருக்கிறான். அமங்கல நினைப்புகளோடு உறுத்து நோக்குகிற, எதையும் பார்க்காத, அவனது மங்கலான கண்களை அவள் எப்போதும், நிரந்தரமாகக் கண்டிருக்கிறாள். 

உண்மைதான். தச்சன் எந்த ஆளையும் எந்தப் பொருளையும் பார்க்கவில்லை. ஒவ்வொன்றிலும் தனக்கு விருப்பமானதை- உணவையே – அவன் தேடினான். 

தச்சன் தனது இடத்துக்கு வந்து உட்காருவான். சுற்று முற்றும் பார்ப்பான். புதுமையானது ஒன்றுகூட இல்லை. உலகம் உறைந்துபோனதுபோல், அதன் சக்கரம் அசையாது நிற்பது போல் தோன்றும். 

அவன் மனைவி வாசல்படியில் அமர்ந்து காலுறை பின்னிக் கொண்டிருப்பாள். இப்போது வாய்திறந்து பேசவேண்டும். தன் இதயச் சுமையைக் கரைப்பதற்காக ஏதேனும் குரல் எழுப்ப வேண்டும் என்ற அவசியத்தை தச்சன் உணர்வான். 

“நான் சதுக்கத்துக்குப் போனேன். அங்கே நல்ல தக்காளிகள் இருந்தன. கொஞ்சம் வாங்கலாம் என்று நினைத்தேன். புளிக் காடியோடு சேர்த்து நாம் சாப்பிடலாமே. நாசமாய்போக, விலை ரொம்ப அதிகம். என்னிடம் பணம் இல்லை!” 

வருத்தத்தோடும் நம்பிக்கை வறட்சியோடும் அவன் எச்சிலைக் கூட்டி விழுங்குவான். பாலைவனத்தில் வழி தவறிப்போன ஒரு பிராணிபோல் அவன் காணப்பட்டான்; புகலிடம் எதையும் காணாது நடந்து நடந்து அலுப்புற்றான். இன்றும் நேற்றுப் போலவேதான். 

அங்கு மவுனமே நீடித்தது. அவன் மனைவி பேசமாட்டாள். அவள் என்ன பேசுவது? அவளுக்கே ஏகப்பட்ட கவலைகள். அவள் பாடுபட்டுத்தான் வாழ்க்கை நடத்தவேண்டியிருந்தது. துணி துவைப்பது, துணிகளை வெளுக்கச்செய்வது போன்ற வீட்டு வேலைகளைச் செய்து சொற்பமான ரூபிள்களை அவள் சம்பாதிப்பதே சிரமமாக இருந்தது. அவள் சம்பாத்தியம் முழுவதும் ரொட்டி வாங்குவதிலேயே காலியாயிற்று. அப்படி வாங்கிய ரொட்டியில் பெரும்பகுதி அவள் புருஷனின் வயிறு என்கிற படுகுழிக்குள்தான் போய்ச் சேர்ந்தது. அந்த அபலைப் பெண் நாள் முழுவதும் கடுமையாக உழைத்துக் கொண்டுவந்த பணம் இரண்டு பவுண்டு ரொட்டி வாங்குவதற்குத்தான் போது மானதாக இருந்தது. அதுவே திருப்திகரமானது என்று எண்ணி, அவள் ஒரு வார்த்தைகூடப் பேசுவதில்லை. 

கடைசியாக அன்றைய தினத்தின் புனிதமான, ஆனந்த மயமான நேரம் வந்துவிட்டது. அவன் மனைவி உணவு எடுத்து வரப் போவாள். நிலவறையிலிருந்து மொச்சையோ தேயிலையோ கொண்டு வருவதற்காக அவள் போயிருக்கும் வேளையில், தச்சன் ஒரு கடுவாய்போல் எழுந்து, ரொட்டி இருந்த இடத்துக்குப் போவான்; அதைக் கிள்ளுவான்; கையில் எடுத்து அப்படியும் இப்படியுமாகப் புரட்டுவான்; தனது அழுக்குக் கைகளால் தடவுவான்; மோந்து பார்ப்பான். மேலும் தன்னைக் கட்டுப் படுத்த இயலாதவனாய், வெறித்தனமாக அதைத் தின்னத் தொடங்குவான்; கடித்துக் கடித்து, மெல்லாமல், சுவைக்காமல், விழுங்குவான். விக்கிக்கொண்டு தொண்டையைச் சொறிவான்… 

அவன் மனைவி உள்ளே வருவாள். அனைத்தையும் பார்ப்பாள். சத்தம் செய்யமாட்டாள். அவ்வாறு செயல்புரிவதை இயல் பாகக் கொண்ட ஒரு மிருகத்தின் காப்பாளராக அவள் தன்னைக் கருதினாள். இடையிடையே அவள் தனக்குத் தானே குறைகூறிக் கொள்வாள்; சிலசமயம் மன்னிப்பாள். பிறகு மீண்டும் பழிப்பாள். ஆனால், பெரும்பாலும் அவள் சும்மா இருந்து விடுவாள். தனது துரதிர்ஷ்டத்தைச் சகித்துக்கொள்வாள். 

சாப்பாடு விசனத்தோடும் வேகமாகவும் முடிந்துவிடும். ரொட்டியை விழுங்கி முடித்ததும், தச்சன் சக்தி பெற்ற வனாய்ப் பேசத் தொடங்குவான். 

“போன வருஷம் இந்தச் சமயம் நம்மிடம் ஒரு மூட்டை வெங்காயம் இருந்தது” என்றோ, ‘அவித்த மொச்சையில் சாயங்காலத்துக்குக் கொஞ்சம் வைத்திருக்கிறாயா?” என்றோ கூறுவான். 

“சாயங்காலத்துக்கு என்று ஒதுக்கி வைக்கும்படி அதில் எவ்வளவு இருந்துவிட்டது?'” என்று அவன் மனைவி வெடுக்கெனக் கூறி, தட்டுகளை அகற்றுவாள். 

ஆனால் அவை எல்லாம் ஒரு சடங்குபோல் மறுபடியும் நிகழும்; அசையாத துயரநிலையிலிருந்து எதையும் அது மாற்றாது. 

பனிக்காலம் அதன் கவலைகளோடும் எதிர்பார்ப்புகளோடும் வந்தது. 

தச்சன் மாடி முகப்பின் கம்பி அளி அருகில், அதன் விளிம்பில் மோவாயை வைத்தபடி, எதிர்வீட்டு முற்றத்தில் நடைபெறும் காட்சியைக் கவனித்துக்கொண்டிருந்தான். அண்டை வீட்டில் வசிக்கும் கடைக்காரன் ஒரு வண்டி மரக்கட்டைகள் வாங்கி யிருந்தான். அவை வண்டியிலிருந்து இறக்கப்படுவதை அவன் பார்த்தவாறு நின்றான். சிவந்த கன்னங்களை உடைய கிழவன் ஒருவன் ஊக்கத்தோடு மரம் அறுத்துக்கொண்டிருந்தான். அவன் சீர்தவறாது சிணுங்கிக்கொண்டுமிருந்தான். ஒரு ஜோடி காளைகள், ஒன்று நின்றவாறும் இன்னொன்று தரைமீது படுத்தபடியும், பாரம்பரியமான மந்தகதியில் அசைபோட்டுக்கொண்டிருந்தன. புல் மணமும் மர வாசனையும் கலந்த ஏதோ ஒரு வாடை தெருவில் மிதந்துகொண்டிருந்தது. 

அன்றைய தினம் பிரகாசமாக இருந்தது. சூரிய ஒளி சிவப்பு ஆம்லெட் நிறத்தில் மிளிர்ந்தது. தச்சன் அதை எல்லாம் பார்த் தான். தன் பசியினால் தவித்தான். மாரிக்காலத்துக்காக அவனும் சேமித்து வைத்த ஆனந்தமயமான பழைய நாட்களை நினைவுகூர்ந்தான். இனிமையான, ஆனால் திரும்பவும் கிடைக் காத, தனது குழந்தைப் பிராயத்தை அவன் நினைத்தான். 

முதிய அறுப்புக்காரன் வேர்வையால் நனைந்துபோனான். அவன் மேலும் தீவிரமாக உழைத்தான். ஒரு மணி நேரம் மரம் அறுத்தானதும், அவன் வேலையை நிறுத்தினான். தன் பையிலிருந்து, சிவப்பான நாட்டுப்புறத்து ரொட்டித் துண்டு ஒன்றை வெளியே எடுத்தான். தனது மெலிந்த கைகளால் அதைத் துண்டு துண்டாகப் பிய்த்தான்; ஒவ்வொரு துண்டாக வாய்க்குள் திணித்து, வேகமாகத் தின்றான். தச்சன் அவனையே பார்த்தான்; அவனும் அறுப்புக்காரனோடு சேர்ந்து மனசினால் ரொட்டி தின்பதில் முனைந்தான். பிறகு, நம்பிக்கை இழந்து மாடுகளைப் பார்த்தான். அவையும் அசைபோட்டுக்கொண் டிருந்தன. நாளின் சகல நேரமும் தச்சனின் நினைப்புகள் அசை போடுவதைச் சுற்றியே இயங்கின. எனவே, அந்தக் காட்சி அவனது கற்பனையை ஆத்திரமாக முடுக்கின. அவனைச் சுற்றி யுள்ள உலகம் முழுவதும் அசைபோட்டுக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில் ஒவ்வொரு ஓசையும், ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு விஷயமும் அசைபோடுவது தவிர வேறு எதுவுமில்லை. தச்சனின் கண்கள் படுத்துக்கிடந்த காளைமீது பதிந்தன. அதன் பின்பக்கத்துத் தொடை கொஞ்சம் துருத்திநின்றது. அவன் தன் மனசினால் அந்தத் தொடையைத் தோலுரித்து, அதன் சதையைத் துண்டங்களிட்டு, அவற்றைப் பானைகளில் போட்டு, சமைத்துச் சாப்பிட்டான். முடிவில்லாமல் தின்றான். 

அவன் வாயில் நுரை சாடியது. அவன் பயங்கரமாக மாறினான். அவன் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. அவ்வேளையில் அவன் உண்மையில் ஒரு மிருகம் போலவே தோன்றினான். பசி எடுத்த வயிறு தவிர வேறு எதுவுமாக இல்லை அவன். 

இறுதிவரை அவன் அவ்வாறே உட்கார்ந்திருந்தான். அப்புறம், வண்டி நகர்ந்தது. அறுப்புக்காரன் அதன் பின்னால் போனான். வெட்டப்பெற்ற கட்டைகள் உள்ளே எடுத்துச் செல்லப்பட்டன. அப்போது தச்சனுக்கு உடல் நடுக்கம் ஏற்பட்டது. சூரியக் கதிர்களின் அடியில் மறைந்திருந்த ஒரு குளிர் ஊர்ந்து வந்து அவனைப் பற்றிக்கொண்டது. அவன் வீட்டுக்குள் போய், தனது பழைய பெரிய மேல்சட்டையை எடுத்துத் தன் உடம்பைப் போர்த்தினான். 

சில தினங்களுக்குப் பிறகு அவனுக்குக் கடுமையான நோய் கண்டது. அப்படி ஒரு துயரநிலையையும் எதிர்பார்த்திருந்த அவன் மனைவி, அந்தச் சந்தர்ப்பங்களுக்குத் தகுந்தபடி தன்னை அனுசரித்துக்கொண்டு, தனது இறுதிக் கடமைகளை நிறை வேற்றினாள். ஒருவன் தன் உயிருக்காகக் கெஞ்சி மன்றாடுவது போல், தச்சன் சிறிதளவு சூப்புக்காக ஏங்கினான். ஆனாலும், அந்தச் சொர்க்க உணவை அளித்து அவனைத் திருப்திப்படுத்து வதற்கு வகை எதுவும் இல்லை. மாறாக, உலர்ந்த செர்ரிப் பழங்கள் ஐந்தை ஊறவைத்த குளிர்ந்த நீரை, அவன் தாகத்தைத் தணிப்பதற்காக, அவன் மனைவி அவனுக்கு அளித்தாள். 

ஆனால், நோயாளி ஒரு பிளேட் சூப்பு வேண்டுமென்று அதிகாரமாகக் கேட்டான். காலை முழுவதும் அதைப்பற்றியே பேசினான். ஆவலோடு காத்திருந்தான் – எல்லாம் வீணாகத்தான். 

மதிய உணவுக்குக் கரடுமுரடான ரொட்டித் துண்டுதான் இருந்தது. சீக்காளி அதைத் தின்ன முயன்றான். ஆனால் அவனால் அதை விழுங்க இயலவில்லை. 

சாயங்கால நேரத்தில், பக்கத்துவீட்டுப் பெண் ஒருத்தி, தச்சன் மனைவி குழப்பத்தோடு காணப்பட்டதைக் கவனித்தாள். அவள் அருகில் வந்து விசாரித்து, என்ன விஷயம் என்று புரிந்து கொண்டாள். அவள் இரக்கப்பட்டு, தன் மகளைப் பால்சாலைக்குத் தயிர் வாங்கி வரும்படி அனுப்பினாள். அங்குத் தயிர் இல்லை. அதனால், சூப்புத் தயாரிப்பது மறுநாள் காலைக்கு ஒத்தி வைக்கப் பட்டது. 

ஆனால் இரவில் தச்சனின் நிலைமை மோசமாயிற்று. ஜுரம் அதிகரித்து, அவன் புலம்பலானான். உணவைப்பற்றிய பேச்சை எடுக்காத அவனுடைய முதலாவது புலம்பல் அதுதான். முற்றி விட்ட ஜுரத்தில், சில எடுபிடிகள் எங்கே எடுத்துச் செல்லப் பட்டன என்று அவன் தன் மனைவியைக் கேட்டான். எந்த எடு பிடிகள், எங்கே எடுத்துச் செல்வது என்பது எதுவும் அவளுக்குப் புரியவில்லை. ஆகவே அவள் அவனுக்குப் பதில் சொல்லவில்லை. நோயாளி கண்களைத் திறந்து, மனைவியை நோக்கினான். அவளையே பார்த்தபடி, “அப்படியானால் நீ என்ன சாப்பிடுவாய்?” என்று கேட்டான். அவன் இன்னும் சூப்புக்காகக் காத்திருக்கிறான் என்று அவள் எண்ணினாள். 

“அது சீக்கிரம் வந்துவிடும். கொஞ்சம் பொறுத்திரு” என்று அவள் தச்சனுக்கு ஆறுதல் வார்த்தை கூறினாள். 

நான் போன பிறகு நீ என்ன சாப்பிடுவாய்?” என்று தச்சன், தனது மரணத்தைக் குறிப்பிட்டபடி, திரும்பவும் கேட்டான். 

“கடவுளே, அது எனக்கு எப்படித் தெரியும்?” என்று அவள் துயரக்குரலில் முணுமுணுத்தாள். 

அவ்வேளையில் அண்டை வீட்டுக்காரி ஒரு தட்டு நிறைய சூப்பு எடுத்து வந்தாள். அதை மேஜைமேல் வைத்துவிட்டு, ஆராயும் கண்களால் சீக்குக்காரனை உற்றுநோக்கினாள். 

“அவள் சூப்புக் கொண்டு வந்திருக்கிறாள். உனக்கு வேண்டுமா?” என்று சீக்காளியின் மனைவி கேட்டாள். 

“அது உனக்குத் தெம்பளிக்கும்!” 

“ஊம்?” என்று ஜுர வேகத்தில் அவன் கேட்டு, கண்களைத் திறந்து பார்த்தான். 

சூப்பு அருகில் கொண்டுவரப்பட்டது. ஒரு கரண்டியில் அதை எடுத்து அவன் உதடுகளில் வைக்கப்பட்டது. அவர்கள் தனக்கு உணவு ஊட்டுகிறார்கள் என்பது உள்ளுணர்வினால் நோயாளிக்குப் புலப்பட்டது. அவன் தன் உதடுகளைச் சுவைத் தான். ஆனால் உணவை உட்கொள்ளவில்லை. அவனுக்குப் பசி இல்லை. 

அவனது வாழ்விலேயே முதல் முறையாக அவனுக்குப் பசி இல்லை. உலகம் மாறிவிட்டது. ஒரு காலத்தில் அக்கை வினைஞனது உடலமைப்பின் ஆனந்தமாகவும், பிற்காலத்தில் அவனுக்குத் தண்டனையாகவும் இருந்த பசியை அவன் இழந்துவிட்டான். 

அவன் சாப்பிடவில்லை. சோகமாகத் தன் மனைவியையும் அடுத்த வீட்டுக்காரியையும் பார்த்தான். பெருமூச்சுவிட்டான். 

“பரவாயில்லை. நீ அப்புறம் சாப்பிடலாம்” என்று கூறி அண்டை வீட்டுக்காரி தட்டைத் தச்சன் மனைவியிடம் தந்தாள். 

பின்னவள் உளம் நெகிழ்ந்தாள். அவள் துக்கத்தோடு சூப்பை நோக்கினாள். பிறகு, செத்துக்கொண்டிருக்கும் தன் கணவனைப் பார்த்தாள். தட்டை அலமாரியில் வைப்பதற்காகப் போனாள். 

அவள் அலமாரியைத் திறந்தபோது, அவளுக்கு எழுந்த இரக்க உணர்வினால் அவள் இதயம் வலித்தது. அந்த அலமாரி எத்தனை எத்தனை முறைகள் திறந்து மூடப்பட்டிருக்கிறது: எத்தனை வகையான இனிய பொருள்கள் அதில் வைக்கப்பட்டிருந்தன; அதிலிருந்து தின்பதற்கு இனிய பொருள்களை நிறைய நிறைய எடுத்தபோது எத்தனை நண்பர்களின் கண்கள் சந்தோஷத்தால் ஒளிர்ந்தன. அப்படி ஒரு காலத்தில் வளம் நிறைந்து குலுங்கிய தங்கள் வாழ்க்கை அலமாரியைத் தச்சன் தான் எத்தனை தடவைகள் திறந்து திறந்து மூடியிருக்கிறான்! 

அவள் இன்னும் அந்தத் தட்டை அலமாரிக்குள் வைக்க வில்லை. 

அதற்குள், பக்கத்து வீட்டுக்காரி மெல்லிய குரலில் என்னவோ கூறி அவளை அழைத்தாள். 

சீக்காளி செத்துக்கொண்டிருந்தான். 

அவன் நெடுமூச்செறிந்தான். ஏதோ சொல்ல ஆசைப் பட்டான். 

அவனது சுருங்கிய தொண்டைக்குள்ளிருந்து தெளிவில்லாத ஒரு சத்தம் வெளிப்பட்டது. 

சுருங்குகிற தொண்டைக்கும் கனத்த மூச்சு உயிர்த்தலுக்கு மிடையே அவன் கூறியது கேட்டது. “சாவது இப்படித்தான் என்றால், நான் சித்தமாக இருக்கிறேன்” என்று நோயாளி சொன்னான். 

அவன் அமைதியாக, வேகமாகவும்கூட, இறந்துபோனான். அறையில் மரண அமைதி நிலவியது. 

அப்புறம் என்ன? எல்லாம் அவ்வளவுதானா? 

அவன் மனைவி ஏதோ ஒரு மாறுதலுக்காகக் காத்திருந்தாள். ஆனால் எதுவும் நடக்கவில்லை. அவள் தன் முன்னே பார்த்தாள். ஒரு பக்கம் பசித்த தச்சனின் திறந்த, உறைந்துவிட்ட கண்களைக் கண்டாள். மறுபுறம் அலமாரியைப் பார்த்தாள். அதுவும் திறந்து, இயக்கமற்று இருந்தது; அவளை வதைத்துவந்தவன் பார்த்தது போலவே அதுவும் அவளைப் பார்த்தது. 

– டி.தெமிர்ச்யன் (1877-1956) 

– ஆர்மேனியச் சிறுகதைகள், தொகுப்பாசிரியர்: ஸோஃபி அவாகியான், ஆங்கில மொழிபெயர்ப்பு: ஃபெய்னா கிளாக்கொலீவா, ஏ.மக்ஹொவ்லியன், ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம்: வல்லிக்கண்ணன், தமிழாக்கம் முதற் பதிப்பு: 1991, நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *