பயோடேட்டா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 28, 2024
பார்வையிட்டோர்: 335 
 
 

முருகன் கோவில் வெளிப்புறம், மீசை தாத்தா கருப்பு சால்வையை விரித்துகொண்டிருக்கிறார். அப்போது பாத்திரக்கடையையும் திறந்திருப்பார்கள்.

அது அப்படிதான். அது என்ன ஒட்டுதலோ அவர்களுக்குள், ஒருவர் கடையை விரிக்கும்போது சரியாக எதிர்புறமும் கடைக்கதவை திறந்து விடுவார்கள்.

மீசை தாத்தா, சாதாரண செருப்பு தைக்கும் தொழிலாளி என்றாலும், கறார் பேர்வழி. அதை விட பயங்கர பேச்சாளர். உள்ளூர் முதல் உலக அரசியல் வரை ஒருவாறு, வாருவார் பாருங்கள்.

நம்முள் பிய்ந்துபோன அரசியல் சொரணை எல்லாம் இழுத்து வந்து ஒருசேர தைத்து அனுப்புவது போல் இருக்கும். செருப்பு தைக்கப்போனால்

அதனூடே சூடான அரசியல் செய்திகளையும் வாங்கி ஜோடி போட்டு வரலாம். பல முறை வாங்கிய அனுபவமுமுண்டு.

பாத்திரக்கடை திறந்துதான் இருக்கிறது. இதோ வெறும் 3 ஜாமானம் தான். ஒரு கரண்டி, சாம்பார் குண்டா, சாப்பாட்டு தட்டு. பக்கத்து வீட்டுக்கு

நம் சமையலை கொடுத்து அனுப்பினால், பாத்திரங்கள் சரியானவையாக திரும்பி வருவதில்லை. கொடுப்பதை நிறுத்தச் சொன்னாலும் இவர்கள் அதைக் கேட்பதில்லை.

உடனே அம்மாவிடமிருந்து இந்த உத்தரவு.

‘அவங்க மறந்தாலு காய வெக்கும்போது நானே நம்ம பாத்திரத்த எடுத்துக்குவேன். நீ போய் முத்தண்ணன் கடைல குடுத்து, இந்த மூணுக்கும் நம்ம பேர் அடுச்சுட்டு வா’.

அலுப்பான வேலை தான். பின்னே, இன்று காலை வேலை விஷயமாக ராகேஷ்-ஐ பார்க்க வேண்டும் என்று நேற்றே சொல்லியாகிவிட்டது.

தெரிந்தும் இந்த அண்டா, குண்டா வேலைக்கு என்னை அனுப்புவது. அம்மாவுக்கு இதே வேலைதான்.

ஏதோ இவரின் சாப்பாட்டு கடை வருவாயால் வீடு போஜனம் அடைகிறது என்பதற்காக இதையும் செய்ய வேண்டி இருக்கிறது.

போக, காலமே கால் செய்வதாக சொன்ன ராகேஷ் ஏனோ இன்னும் அடிக்கவில்லை. அதற்குள் இந்த வீட்டு வேலையை முடித்துவிட்டால்,

இதன் மூலம் அம்மாவிடம் ஏற்படும் ஒரு வார அர்ச்சனையிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

கோவில் மணியோசை கண்களை திருப்ப, அங்கே மீசை தாத்தா சிரிக்கிறார். 2 மாதம் முன் அவர் தைத்துக் கொடுத்த செருப்பு இன்னமும் பிய்ந்து போகாமல்,

அதே அன்புடன் என் காலில் உறவாடுவதை எண்ணி பெருமைப்படுவாராயிருக்கும். பதிலுக்கு ஒரு ஜோடி புன்னகையை எடுத்துவிட்டபடியே,

முத்தண்ணனின் பாத்திரக்கடை வாசலை அடைந்தேன். அவர் facebook-உம், கையுமாக இருந்தார்.

‘என்னன்ணே பண்ணிட்டு இருக்கீங்க?’ – சம்பிரதாயமாகத்தான்.

‘வா குமாரு’ – கைபேசியை அணைத்துவிட்டு லெளகீக வாழ்க்கைக்குள் நுழைய கடமைப்பட்டவாறு, ‘என்ன ஆளையே காணோம்? சும்மாவாவது ஒரு எட்டு வந்துட்டு போலாம்ல’

பிரயோஜனப்படாத புன்சிரிப்பை வெளிக்கொணர்ந்துவிட்டு, பாத்திரங்களை எடுத்து அவர் முன் வைத்தேன். கையில் எடுத்து கண்களில் ஒற்றிக்கொள்வதைப்போல் துருவித்துருவிப் பார்த்தார்.

சொல்லாமலே தெரிந்துகொண்டவராய், ‘பழசா இருக்கும்போல?’.

‘ஆமாண்ணே. கடைக்கு கொண்டுபோற பாத்திரத்துக்கு மட்டும்தா முன்னாடி அடிச்சோம். இது பக்கத்து வீட்டுக்கு சேர்த்து பொலங்கறது.

சரி, இதையும் அடிச்சுட்டு வா’ன்னு அம்மா சொல்லிட்டா’

‘ஓ! ஸ்கூல், காலேஜ் தொறந்ததால கடை மறுபடியும் பிஸி ஆயிருச்சா?’

‘ஆமாண்ணே! லீவ் முடிஞ்சுருச்சுல்ல’

அவர் பாத்திரங்களை எடுத்து பெயர் அடிக்க தோதான இடம் பார்த்துக்கொண்டிருந்தார்.

எங்கே பொழுது போகாமல் என் வேலை விஷயமாக வாயை கிளற ஆரம்பித்துவிடுவாரோ என எண்ணி, கைபேசியில் சென்னை ஸ்ட்ரீட் foods சேனல்காரர்கள் சொல்லும்

வெற்றி வரலாறை மேய்ந்துகொண்டிருந்தேன். கைபேசி கண்டுபிடிக்கும் முன் வாழ்ந்த வேலை இல்லா பட்டதாரிகள் இந்த சூழ்நிலையில் என்ன செய்திருப்பார்கள்?

“ஸ்தோத்திரங்கள் ஆண்டவரே… நான் கட்டளையிட்டால் நீ என் நண்பர்களே. ஒரு அடிமை தன் அடிமைகளிடம் நம்பிக்கை கொள்ளாததால் நான் உங்களை அடிமைகளாக அழைக்கவில்லை.

பிதா என்னை நோக்கி: நீ என் சிநேகிதர்..” தேவாலயத்தின் ஒலிப்பெருக்கியிலிருந்து வந்த அந்த வார்த்தைகள் பல வருடங்கள் பரிச்சயமானவையாதலால் அன்னிச்சையாக மனம் அதை முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

கைபேசியில் அகழாய்ந்த மனதை ஒரு வாட்ஸப் மெசேஜ் வெளிக்கொணர, கண்கள் மகிழ்ச்சிப்பட்டது.

அப்பாடா, ராகேஷிடம் இருந்துதான்.

‘Come to home now. Pls don’t forget to bring our old photos. Pls dont call.’. கூடவே, location-ம் அனுப்பியிருந்தான். சட்டென பேண்ட் பாக்கெட்டில் கைகளை வைத்து புகைப்படம் வைத்திருக்கும்

பாலித்தீன் உறையை உறுதிப்படுத்திக் கொண்டேன்.

‘பல வருடங்களுக்கு முன் எடுத்த புகைப்படத்தை மறக்காமல் கேட்டவன், சம்பிரதாயமாகக் கூட என் வேலை விஷயத்தைப் பேச மறுக்கிறானே..’ என மனம் ஒருபுறம் அல்லல்பட்டது.

‘ஹாட்பேக் இப்ப புது மாடல்-ல வந்துருக்கு குமாரு. நம்ம பேரோ, போட்டோவோ விருப்பப்பட்டதை அதுல print பண்ணி குடுக்கறாங்களாம்.

அதெல்லாம் எத்தனை நாளைக்கு வரும்?’ முத்தண்ணன் அவரின் தொழில் போட்டிகளை என்னிடம் ஏளனம் செய்துகொண்டிருந்தார்.

‘அண்ணே.. அடிச்சு வைக்கறீங்களா. நா ஒரு அரைமணி நேரத்துல வந்து வாங்கிக்கற…’

‘என்ன friend- அ பாக்க போறியா..’

ஆச்சரியப்பட்டவனாய், ‘எப்படின்னே…?’ Salute வைக்க போக,

‘வேல வெட்டி இல்லனா அதத் தான பண்ணனும்’ என்று எமதர்மனாக சிரித்தார்.

சட்டென வந்த அமங்கல வார்த்தைகளை முணுமுணுத்து விட்டு, பொடிநடையாக ராகேஷ்’ஐ நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

ராகேஷ்…

“ராகேஷ் உண்மையிலேயே எனக்கு உதவ வேண்டும் என்று எண்ணித்தான் அழைக்கிறானா?

‘Don’t forget to bring the old photos’ – அவன் அனுப்பிய இவ்வரிகளே ஏனோ திரும்பத் திரும்ப என்னுள் முட்டிக் கொண்டிருந்தது!

வேலைக்கு சிபாரிசு வாங்க எடுக்கும் முயற்சிகள் பலிதமாகுமா? என்று நினைக்கையில் புன்னகையையும் கண்ணீரையும் ஒரு சேர அனுபவிப்பது போல் இருந்தது!

Alphine tech ltd.-ல் SEO-வாக இருப்பதால் எப்படியும் நமக்கு ஒரு வேலையை ஏற்பாடு செய்து விடுவான். பல நூறு பேர் வேலை செய்யும் பன்னாட்டு நிறுவனம் அது.

போன மாதம் கடையில் சாப்பாடும், பார்சலுமாக இருக்கும்போது, அம்மாதான் கூப்பிட்டு சொன்னார் – ‘ஏன்டா, அந்த பையன எங்கயோ பாத்த மாறி இல்ல?.’ விழிகளை மேயவிட்டு,

‘ஆமாம்மா.. கொஞ்சம் இரு’ என்று அவன் அருகில் நெருங்கினேன். எங்கள் கடை என்று தெரியாமல் வந்தமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.

மொட்டை போட்டதைப்போல் முடியை குறைத்திருந்தான். அடர் நிற டி.ஷர்ட்-ம், அரைக்கால் டிரௌசருமாக விடுமுறை தினச் சீருடையை அணிந்திருந்தான்.

‘ஹேய் ராகேஷ்’

‘டேய்’- கவளத்தை வாயில் போடப்போனவன், நிறுத்திவிட்டு ‘ஹாய் கிஷோர்.. உக்காரு!’

‘இது எங்க கட தான்டா!’ என்று சொல்ல, ஏனோ என்னிடம் கடன் வாங்கியவனைப் போல் நெளிந்து அசௌகரியமானான்.

‘நீ இங்க என்ன பண்ற?’

‘எனக்கு வேல இங்க தா. போன மாசத்துலருந்து’

‘ஓ.. ஆனா நீ Bangalore-ல இருக்கனு fb-ல பாத்த?’

‘இல்லடா, இங்க இருக்கற branch-க்கு ஒரு senior employee வேணுமா.. அதா என்னய இங்க மாத்தீட்டாங்க. கம்பெனி apartment இருக்கு.. Hybrid தா.. ஆஃபிஸ்ல 3 நாள், வீட்ல 2 நாள்!’

‘ஓஹோ’- நான் இன்று காலையில் இருந்து என்னென்ன செய்தேன் என்று தொகுத்துச் சொல்ல தயாராகிக்கொண்டிருந்தேன்.

‘உனக்கு work எப்டி போகுது?’

‘இந்த கட அம்மாவோடது டா! 8 மாசம் ஆச்சு ஆரம்பிச்சு. நா global head-ல lab assistant-க்கு அப்ளை பண்ணி இருக்கேன். இன்னைக்கு கடை-ல வேல அதிகம்-னு கூப்பிட்டதால சரின்னு வந்தேன்.’

4 பேர் மட்டுமே அங்கே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதை அப்போது தான் கவனித்துத் தொலைத்தேன். தாழ்வு மனப்பான்மையில் சட்டென்று மனம் குறுகியது.

அவன் தட்டிலிருந்து தக்காளியைப் பொறுக்கி வைக்கும் தோரணையிலேயே எல்லாம் தெரிந்து விட்டது என்பதை உணர்ந்தேன்.

அடுத்த கவளம் எடுப்பதற்குள் -‘இன்னிக்கு sunday டா. இல்லினா பக்கத்துல IT office, school, college எல்லாம் இருக்கறதால எப்பவும் கூட்டம் இருக்கும்.

Infact, எங்க கடைக்கே இப்ப இன்னொரு ஆள் தேவைப்படுது.’ – சொல்லும்போதே அம்மாவுக்கு கேட்கிறதா என்று எதேச்சையாக திரும்பிப் பார்த்துக்கொண்டேன்.

அவர் காலியான மேசைகளுக்கு நடுவில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார். கொஞ்சம் ஆசுவாசப்பட்டது.

ராகேஷ்-க்கு இன்னொரு ‘வெஜ். பிரியாணி’ வேண்டுமா? எனக்கேட்க, வேண்டாம் என்று கையசைத்து, குவளை நீரில் கைகளைக் கழுவிக்கொண்டான்.

பக்கத்து மேசைக்கு எலுமிச்சை சாதமும், தயிர் சாதமும் வைக்க வந்த அப்பா, எங்களைப்பார்த்து ‘விருந்தோம்பலாக’ சிரித்துவிட்டு நகர்ந்தார். தனியாக வந்து ஒரு பிளேட் மட்டும்

சாப்பிடும் வாடிக்கையாளனை அதற்கு மேல் அவர் மனம் விரும்பியிருக்காது.

அவன் எழுந்து போகாமல் நான் பேச்சை முடிப்பதற்காகக் காத்திருந்தான்.

‘இவனிடம் வேறு என்ன கேட்கலாம் என்று தெரியவில்லை.

ராகேஷின் பெற்றோர் அவன் சிறுவயதிலேயே மனம் ஒத்துப்போய் பிரிந்து விட்டனர். இவன் தன் தந்தையுடன் வசித்துக் கொண்டிருந்தான்.

எங்கள் வகுப்பு ஆசிரியையான நிர்மலா மிஸ்ஸின் மகள் வர்ஷினியும், இவனும் நல்ல நண்பர்களாக இருந்து பின் ஒரே காலேஜில் படித்த போது காதலாகி கசிந்துருகி

திருமணம் செய்து கொண்டனர். ஆனால் எங்கள் பெரும்பாலானோர்க்கு அவன் திருமணத்திற்கு அழைப்பு வரவில்லை.

எங்களுடன் படித்த அவன் நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் தான் அழைப்பு.

எனக்கெல்லாம் ப்ரிண்ட் அவுட் கடைக்காரருக்கு போட்டோ அனுப்புவதைப் போல் வாட்ஸப்பில் பத்திரிக்கையை மட்டும் அனுப்பியிருந்தான்.

நினைவுகளை வெறுமை சூழ கவனத்தை மீட்டேன் – ‘அங்கிள் எப்டி இருக்காரு?’

‘ம்ம், he is fine.’

‘Wife?’

‘She’s also fine. Bangalore-லதா இருக்கா..’

டேபிளை சுத்தம் செய்யும் பையன் அங்கே வர, அவனிடம் மேஜையை ஒப்படைத்துவிட்டு இருவரும் எழுந்தோம்.

ராகேஷ் தன் pant pocket-ல் இருந்து 35 ரூபாயை எடுத்து கல்லாவில் இருக்கும் அப்பாவிடம் நீட்டினான். என்னை திரும்பிப்பார்த்து ‘வருகிறேன்’ என தலையசைத்து விட்டு,

தான் இதுபோன்ற சின்ன கடையில் சாப்பிட நேர்ந்ததை எண்ணி வருந்துபவனைப் போல், ரோட்டில் நடப்பவர்களுக்கு பரிதாபமாக முகத்தைக் காட்டிக் கொண்டு நடந்து சென்றான்.

இப்போது விட்டால், இவனை போன்ற சிபாரிசு செய்யும் ஆட்கள் மீண்டும் கிடைக்காமலே கூட போகலாம், – ‘ராகேஷ்’!

திரும்பி நின்றான். ஓடிச்சென்று, ‘ஒன்னுல்ல, number தாயேன்’.

சட்டென ஞாபகம் வந்தவனைப்போல், தன் packet-ல் இருந்து எடுத்து, என் நம்பரை வாங்கி, missed call கொடுத்தான்.

பின் மெல்ல அவனிடம், ‘எதுக்கும் என் resume உனக்கு அனுப்பறேன், ஏதாவது vacant இருந்தா சொல்லேன்’.

‘ம்ம்… கண்டிப்பா’ – பலபேர் இது போல் அவனிடம் கேட்டிருக்கக்கூடும். அவன் குரலில் அலட்சியம் தெரிந்தது.

‘அதான் செல்போன் எண் இருக்கிறதே.. எங்கே போகப்போகிறான்’ என நினைத்துக்கொண்டேன். அவன் என்னிடம் அப்பாவியாய் விடைப்பெற்றுக் கிளம்பினான்.

திடீரென முன்பை விட சற்று வேகத்தைக் கூட்டி நடந்ததைப்போல் தெரிந்தது.

ஒரு வாரம் அவனிடம் இருந்து எந்த பதிலும் வராததால், இழுத்துப்பிடித்து வைத்திருந்த நம்பிக்கையை தளர்த்திவிட்டு, மீண்டும் பழைய மனநிலைக்குச் சென்றேன்.

மறுபடி வீட்டுக்கும், கடைக்கும் கடமைப்பட்ட அலைச்சல்கள். சாப்பாடு, சாம்பார் வினியோகம், 2 தக்காளி, 3 லெமன் சாதத்திற்கான பார்சல் கணக்குகள்.

ராகேஷின் நியாபகம் வரும் சமயம் அவனது வாட்ஸப் புகைப்படத்தை பார்த்துக் கொள்வேன். கைகளை விரித்து அவன் ஏகாந்தமாய் அரவணைத்துக் கொள்வதைப் போல் இருக்கும்

படத்தைப் பார்க்கும் போது விசித்திரமாய் தெரிந்தது. விபரம் தெரியாத வயதுகளில் எப்போதுமே ராகேஷ் என்னை சட்டை செய்ததில்லை.

எங்கள் வீட்டிலிருந்து இவன் வீட்டிற்கு 10 நிமிட தூரமென்பதால் சில நேரங்களில் இருவரும் முகம் பார்த்துக் கொள்வதுண்டு. ஒருமுறை இவன் வீட்டில் வைத்திருந்த பழைய

ஃபிலிம் கேமரா நாங்கள் புகைப்படம் எடுக்கும் சமயம் கை தவறி கீழே விழுந்ததில், என்னுடைய சேர்க்கையைக் கண்டித்து இவனுக்கு இவன் அப்பாவிடமிருந்து பயங்கர வசை.

அதிலிருந்து போக்குவரத்து மெல்ல மெல்லத் துண்டிக்கப்பபட்டு பின் முற்றிலும் அறுந்து போனது.

எனினும் சிறுவயதில் இவனுடன் விளையாடும் போது ஒருமுறை என் புது cycle-ஐ காட்ட எடுத்துக் கொண்டு வந்த தினம் மட்டும் இன்னமும் நிறைவாக மனதில் இருக்கிறது,

இப்போது அதையெல்லாம் பேசினால் நான் இன்னும் பக்குவப்படவில்லை என்று நினைக்கக் கூடும்.

ஆனால் தினமும் காலை எழுந்து பல் தேய்த்தவுடன் வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ் போடுவதை வழக்கமாக வைத்திருந்தேன்.

களவாணியை கண்காணிக்கும் காவல் அதிகாரி போல் அவன் அதைப் பார்க்கிறான் என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்வேன்.

போன வாரம் ராகேஷ்-இடம் இருந்து message வந்தது. ‘அடுத்த வாரம் வேலை விஷயமாக பேசலாம்’ என்று. மகிழ்ச்சியுடன் ‘சரி’ என்று தம்ஸ்-அப் போடுவதற்குள்

மேலும் அடுத்தடுத்து குறுஞ்செய்திகள் – ‘உங்கிட்ட நம்ம ஸ்கூல் டைம்ல எடுத்த போட்டோஸ் எல்லாம் இருக்கா?’ ‘எனக்கு தர முடியுமா?’

எதிர்காலத்தில் ஆக வேண்டியதை யோசித்துக் கொண்டிருக்கையில் பழைய பஞ்சாங்கத்தைக் கேட்கிறானே! ‘இருக்கு டா.. கொண்டு வர்றேன்.’

அடுத்த நாளே தன் வீட்டிற்கு வருமாறு தந்தி அனுப்பினான்.

இதோ, ராகேஷின் அபார்ட்மெண்ட் நெருங்கிவிட்டது. நான் நடந்து வரும் ஓசை கேட்பதாலோ என்னவோ அங்கங்கே மாடியில் நின்று கொண்டிருக்கும் சிலர் கீழே திரும்பிப் பார்த்தனர்.

எங்கள் தெருவையே ஒன்றாகச் சேர்த்தாலும் இங்கே இருப்பதைப் போல் இரண்டு வீடுகளைத் தான் உருவாக்க முடியும்.

அநேகமாக எல்லார் வீடுகளிலும் கார்கள் இருந்தன. ஒரு வயதான தம்பதி அவர்கள் தெருவில் நடப்பவனை ஏதோ உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் ஒருவனைப் பரிதாபத்துடன்

பார்ப்பதைப் போல் ஏறிட்டு விட்டு பின் திரும்பவும் தங்களின் பேச்சில் நுழைந்தனர். 2 தெரு தள்ளி பார்த்தால், இங்கே இப்படி அபார்ட்மெண்ட்கள் இருப்பதை யாருமே நம்பத் தயங்குவார்கள்.

அவ்வளவு தனிமைப்பட்டிருந்தது. சுற்றிலும் அங்கொன்றும் இங்கொன்றுமான ஊமை வீடுகள். அப்பார்ட்மெண்ட் பக்கத்தில் தனிமைக்குத் துணைநிற்கும் இன்னொரு சின்ன அப்பார்ட்மெண்ட்.

அநேகமாக ஏதேனும் ஆபிஸ் வளாகமாக இருக்கலாம். பக்கத்தில் ஒரு சிறிய மளிகை கடை. நாம் இங்கொரு கடை வைத்தால் தேவலை போலிருக்கிறது.

Lift-ஐ நெருங்க படிக்கட்டில் ஏறினேன். ‘3rd floor’ என குறுஞ்செய்தியில் ராகேஷ் குறிப்பிட்டிருக்கிறான். பலமாதக் காத்திருப்புக்கு பலன் கிடைக்கப்போவதை எண்ணிச் சிலிர்த்தவாறே

அரைலிட்டர் ஆக்சிஜனை உள்ளிழுத்து ‘303’-ஐ அடைந்தேன்.

அழைப்புமணி-யை ஒருமுறை அடித்து, அடுத்த அழைப்புக்கு எத்தனிப்பதற்குள், கதவை திறந்துவிட்டான்.

குழந்தையை புருவம் உயர்த்தி சிநேகிப்பதைப்போல் வரவேற்று அவன் உள்ளே செல்ல, அவனைப் பின் தொடர்ந்தேன். Basket ball மைதானத்தின் முக்கால்வாசி அளவு ஹாலாக விரிந்திருந்தது.

இடது பக்கம் ஒரு அறை, படுக்கையறையாக இருக்கலாம். ஹாலைத்தாண்டி உள்ளே ஓர் அறை இருப்பதற்கான அறிகுறிகள் தெரிந்தன. நான் உள்ளே வந்த சமயம் அங்கே சில வேலையாட்கள்

வீட்டினுள் plastic wrapper-களால் சுற்றப்பட்ட பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர். ஏதோ வீட்டிற்கான பொருட்களை வாங்கி வந்திருக்கிறான் என்று மட்டும் புரிந்தது.

அவன் மனைவியும் இங்கே வர திட்டமிட்டிருப்பதால் அதற்கான ஏற்பாடாயிருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.

நான் உள்ளே வருவதை திரும்பிப் பார்க்காமலே, அங்கிருந்த வேலையாட்கள் பொருட்களைக் கையாளுவதை கண்காணித்துக் கொண்டிருந்தான். நான் என்னுடைய புன்னகைக்கு அவனது

பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் அங்கே சுத்தம் செய்யப்பட்டிருந்த படுக்கையறைக்குள் நுழைந்தான், யாருமில்லாத அறையாதலால் என்னிடம் பேசும் நோக்கம் இருக்கலாமென்று

அவனைப் பின் தொடர்ந்தேன்.

“Resume கொண்டு வந்தியா..?” என்று கேட்க, ஆர்வத்துடன் நீட்டினேன்.

அதைப் புரட்டிப் பார்த்து “இத நா வெச்சிருக்க.. அப்டியே நீ என்னோட mail-id’க்கும் ஒரு soft copy அனுப்பீரு..” என்று அதை அங்கிருந்த டேபிளில் வைத்தான்.

திடீரென என்னைப் பார்த்து அவன் சிரிக்க எனக்கு காரணம் விளங்கி கையோடு கொண்டு வந்திருந்த புகைப்படங்களை எடுத்து நீட்டினேன். வாங்கியவன் அப்படியே மெத்தையில் அமர்ந்து அதையே உற்று நோக்கிக் கொண்டிருந்தான். உதட்டில் அவனுக்கு மட்டுமே தெரிந்த ஒரு சிறு புன்னகை ஒட்டிக் கொண்டிருந்தது. அவன் பார்த்து முடித்ததும் அதை வாங்கக் காத்திருந்தேன்.

அவன் பெருமூச்சு விட்டபடியே அதை ஓரம் வைத்துவிட்டு வெளியே நடந்தான். சரியாக அந்த வேலையாட்களும் பொருட்களை வைத்துவிட்டு வெளியே வர, இவன் அவர்களிடம் தலையை மட்டும் ஆட்டினான். அவர்களில் மூத்தவராக பெரிய மீசை வைத்திருந்த ஒருவர் சல்யூட் வைப்பதைப் போல் சைகை காட்டி, தலையசைத்துவிட்டு அனைவருடனும் வெளியேறினார்.

எனக்கு புகைப்படங்களை எப்போது தருவான் என்பது மட்டுமில்லாமல் வேலையை பற்றியும் மண்டையில் குடைந்து கொண்டிருந்தது.

“8 மாசமா வேலை தேடி அலுத்துப் போச்சு டா.. ரொம்ப frustrating-ஆ இருக்கு..” அவன் மனம் இறங்கக் கூடும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

ஒரே வார்த்தை ‘நா பாத்துக்கறன்டா! உனக்காக இது கூட செய்ய மாட்டனா?’ என்று ஒரு பேச்சுக்கு சொல்லி விட்டால், பிறகு யாருமில்லாத இந்த சுவர்களுக்குள்ளிருந்து வெளியேறிவிடலாம்.

அவன் தலை குனிந்தவாறே சில நொடிகள் அமைதியாக நின்று கொண்டிருந்தான். பின் சட்டென உள்ளே சென்றவன் ஏதோ மந்திரம் போட்டு ஆரஞ்ச் ஜூஸுடன் வெளிவந்தான்.

நான் வாங்கிப் பருகியவாறு வீட்டின் மோட்டுவளையை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

“Actual-ஆ வர்ஷினி things எல்லாத்தையும் எடுத்துட்டு வீட்டுக்கு போயிட்டாடா.. அதா எனக்கு தேவையானதை தனியா வாங்கிக்கிட்டேன்” என்று கூறிய அவனை நான் நிலைகுத்தியவாறு

பார்த்துக் கொண்டிருந்தேன். என் மனதுக்குள் தோன்றிய புரிதல் சரிதானா என்று சட்டெனக் குழம்பினேன். அவன் பெருமூச்சு விட்டவாறு தோற்றுப்போனவனைப் போல்

தலை குனிந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் மேல் திடீரென எனக்குப் பரிதாபம் படர்ந்தது. பிறகு முகம் மாறி “அந்த ஃபோட்டோல இருக்கற உன்னோட ஸ்கூல் சைக்கிள் எல்லா இப்பவும் வெச்சிருக்கியா?” என்றான்.

இவனுக்கு என்ன பைத்தியமா என்று தோன்றியபோதே, “இல்ல டா” என்றேன்.

பிறகு திடீரென உள்ளே சென்று புகைப்படங்கள் வைத்திருந்த காகித உறையை மட்டும் கொண்டுவந்து நீட்டி “Thanks” என்று கூறியதும்,

இப்போதே இவனிடம் சண்டையிட வேண்டும் என்று தோன்றியது. உடனே அம்மாவிடமிருந்து அலைபேசி வர அதை எடுத்து அணைத்துவிட்டு,

அவனிடம் பேச எத்தனிக்கையில் சட்டென வேலை விஷயம் தோன்றியது. அதை அப்படியே நிறுத்தி விழுங்கி விட்டேன்.

அதற்கு மேல் அங்கிருக்க முடியாமல் அவனை ஏறெடுத்துப் பார்த்துவிட்டு உடனே வெளியேறினேன்.

அவன் வீட்டிற்குள் நுழைந்த வேகத்தை விட என்னையறியாமல் கால்கள் இப்போது பரபரக்க lift-ஐ பிடித்து சட்டென கீழிறங்கினேன். உண்மையில் யாரோ என்னை பிடித்து வெளியே தள்ளுவதைப் போல் தான் தோன்றியது. ‘வேலை விஷயம் முடியட்டும் அப்பறம் பாக்கற எப்டி குடுக்காம போறான்னு…’ என்று மனதைத் தேற்றிக் கொண்டேன்.

மீண்டும் அம்மாவிடமிருந்து விடாமல் அழைப்பு. எரிச்சலுடன் எடுத்து ‘என்னம்மா?” என்று கேட்க, “உனக்கு பேர் அடிச்சுட்டு வர்றக்கு இவ்ளோ நேரமாடா.. எங்க இருக்க இப்ப?” என்று கேட்க,

“எங்க இருந்தா என்ன.. உனக்கு தேவ பாத்திரம் தான.. கொண்டு வர்றேன்.. வை..” என்று சட்டென அமர்த்தினேன். அப்போது ராகேஷிடம் இருந்து குறுஞ்செய்திகள் வந்திருப்பதை

கவனித்தேன். நான் வெளியேறிய சிறிது நேரத்திற்கெல்லாம் அனுப்பியிருந்தான். புகைப்படங்களை திரும்ப வந்து வாங்க சொல்கிறானோ என்று எண்ணி அதைப் பார்க்க, “Just now I called the HR.

It seems there is no vacant at this time. Let me try after 3 months..” என்று இருந்தது. எனக்கோ எரிச்சல் தலைக்கேற உடனே அவன் வீட்டை நோக்கி மீண்டும் திரும்பினேன்.

கஷ்டப்பட்டு இத்தனை வருடங்கள் பாதுகாத்த புகைப்படங்களை இவ்வளவு சுலபமாக வாங்கி வைத்துக் கொண்டானே என்று நினைக்க நினைக்க எரிச்சல் பற்றி வளர்ந்தது.

வீட்டிலிருந்தோ விடாமல் மீண்டும் மீண்டும் அழைப்புகள்.

இந்த முறை அப்பா, “ஏண்டா, பாத்திரத்த கொண்டு வர்றியா, இல்லயா? இங்க ஏகப்பட்ட வேல கெடக்கு.. உனக்காக எவ்ளோ நேரம் wait பண்றது..”

“ப்பா, நா கொண்டு வந்துருவன்னு உங்களுக்கு தெரியாதா.. ஏ வேல விஷயமா இன்னிக்கி வெளீல போகணும்னு சொல்லீருந்தன்ல.. அப்றம் என்ன?”

“அதா உ ஃப்ரெண்டே எல்லாத்தையும் பாத்துக்குவான்னு சொன்னல்ல டா… அப்றம் என்ன கவல உனக்கு…?”

இவர் வேறு நேரம் காலம் தெரியாமல் மேலும் எரிச்சலூட்டுகிறாரே என்று நடந்ததை அவரிடம் கூறினேன்.

“உங்கிட்ட இருந்து வாங்கிக்க தாண்டா போட்டோ கேட்டிருக்கான்.. இது கூட தெரிலயா? வேணா அத scan பண்ணிக்க வேண்டிதான..”

“ஒரிஜினல் என்னோடது.. அவன் resume அனுப்ப சொல்லாம, எதுக்கு நேர்ல கொண்டு வர சொன்னா.. இப்ப புரியுதா உங்களுக்கு?”

“டேய்.. நீங்க ரெண்டு பேரும் இருக்கற ஃபோட்டோ தான அது.. உனக்கு அது எவ்ளோ புடிக்குமோ அதே மாறி அவனுக்கும் அது புடிச்ச ஃபோட்டோவா இருந்ததால தான உரிமையோட கேட்டிருக்கான்.. அதா 3 மாசம் கழிச்சு வேல விஷயமா பேசலாம்னு சொல்லீருக்கான்ல, அப்ப நியாபகப்படுத்திக்கலாம்.. இப்ப எதுக்குடா திருப்பிக் கேட்டு அவன insult பண்ற? பைத்தியக்காரா…”

என்று சிரித்துவிட்டு அவர் போனை cut செய்தார். இவர் எனக்காக எப்போது பரிந்து பேசியிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டேன்.

‘உரிமையாமா, உரிமை…? அது எனக்கு தெரியாதா? இவருக்கு தா தெரிஞ்ச மாறி……’ கால்கள் மீண்டும் பாத்திரக்கடையை நோக்கித் திரும்பின.

இந்த சுட்டெரிக்கும் வேளையில் மீண்டும் நடக்க வேண்டும் என்று நினைக்கும் போதே மனம் சோர்வாகியது.

ராகேஷைப் பற்றி யோசிப்பதை நிறுத்துகையில், எங்கிருந்தோ என் உதடுகள் அன்னிச்சையாக முணுமுணுத்தது –

“ஸ்தோத்திரங்கள் ஆண்டவரே… நான் கட்டளையிட்டால் நீ என் நண்பர்களே. ஒரு அடிமை தன் அடிமைகளிடம் நம்பிக்கை கொள்ளாததால் நான் உங்களை அடிமைகளாக அழைக்கவில்லை. பிதா என்னை நோக்கி: நீ என் சிநேகிதர்..”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *