கழுதை
கதையாசிரியர்: நாஞ்சில்நாடன்
தின/வார இதழ்: கணையாழி
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: October 4, 2026
பார்வையிட்டோர்: 128
(1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கழுதைகள்… நிறையக் கழுதைகள்… ஒருமித்து இத்தனை கழுதை களைப் பார்த்தது கிடையாது. திகைப்பு ஏற்படுத்துவதுபோல இருந்தது அவை கூட்டம் கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்த தோற்றம். ஒருக்கால் சுற்றி அமைந்துள்ள சிறுசிறு கிராமங்களில் கழுதைகளை விவசாயத்துக் குப் பயன்படுத்துகிறார்களா என்பது தெரியவில்லை.
இரண்டு கழுதைகளை இணைத்துக் கொண்டுசெல்வது என்பது மிக எளிதான காரியமும் அல்ல. நாய்கள், காகங்கள் போல, யாருக்கும் உரிமையற்று, தான்தோன்றியாக அவை வளரலாம். மிக அண்மையில் குன்றும் அல்லாமல் பெருமலையும் அல்லாமல் காடும் அல்லாமல் குப்பம் குப்பமாய்க் கிடப்பவற்றில் இருந்து அவை இறங்கியும் வந்திருக் கலாம். கழுதைகள், மலைகள் காடுகளில் வாழ்பவையா என்பது விசாரித்து அறிய வேண்டியதொன்று.
ஜுன் மாதத்து மழை பருவத்தே தொடங்கிப் பொழிந்து கொண்டி ருந்தது. முதல் மழையில் படர்ந்த பச்சை காடடையத் தொடங்கியிருந் தது. வெண்டைபோலப் பூப் பூக்கும் ஒரு செடி, இரவில் கரங்கூப்புவது போல் அகன்ற இலைகளை மேல் நோக்கி மடித்துக் கொண்டது. பாம்பு கள் பகலிலும் கூட அச்சமற்று வெளியே உலவின.
ஒருநாள் நெடுஞ்சாலையில் இறங்கி, பெண்கள் நடமாட்டம் கவனித்து, ரோட்டோரம் நின்று ஒன்றுக்குப் போனபோது, மூத்திரம் சென்று விழுந்த சிறுபாறையின் இடுக்கொன்றில் இருந்து குஞ்சுப் பாம் பொன்று புறப்பட்டு நெளிந்ததைக் கண்ட அதிர்ச்சியில் மூத்திரம் ஆடை யில் சிதறியது.
இந்த ஊரில் பாம்புகள் அனைத்துமே நாகம் என்ற பீதியில் மக்கள் அநியாயமாய் அவற்றை அடித்துக் கொன்றனர்.
காலனிக்கு உள்ளே வர, புதிதாகப் போடப்பட்டிருந்த சாலையில், கனமான வாகனம் ஒன்றில் அடிபட்டு சாரைப் பாம்பொன்று சிதைந்து கிடந்தது. வேலை முடிந்து தினமும் முன்னிரவில் வீட்டுக்குத் திரும்பும் போது, டார்ச் எடுத்துக்கொண்டு வரவேண்டும் என்று தோன்றும்.
மாநில அரசின் ஆதரவில், நகரின் மையப்பகுதிக்கு நாற்பது கிலோ மீட்டர் வெளியே அமைந்திருந்த அந்தக் காலனியில் தனக்கு அனுமதிக் கப்பட்டிருந்த வீட்டைப் பார்க்க வந்தபோது, முதன் முதலாய் நெடுஞ் சாலையில் திருப்புமுனையில் ஒரு கழுதையைத்தான் அவன் சந்தித்தான்.
கழுதைகள் அவன் கவனத்தைச் சாதாரணமாக ஈர்ப்பன அல்ல என்றாலும் பிறவியிலேயோ பின்னரோ அமைந்த சதைகள், அந்த கழுதையின் மூக்குத்துவாரங்களுக்குக் கதவுகள் போல அமைந்திருந் ததைக்கவனித்தான். மூச்சு விடும் போது திறப்பதும் இழுத்தபின் அடைப் பதுமாய் அசைந்த வண்ணம் இருந்தன. இது எவ்வளவு அசௌகரியமான காரியம்? செம்மறிகள் போல்தும்முவது முதலில் அருவருப்பு ஏற்படுத்துவதாக இருந்தது.
இதில் அருவருக்க என்ன இருக்கிறது?
கழுதைகள் என்றாலேயே ஒரு அருவருப்பு உணர்வுதான் ஆரம்பத் தில் ஏற்பட்டது.
முதல் கழுதையை எப்போது சந்தித்தோம் என்று யோசித்தான். துல்லியமாக, இத்தனாமத்த வயதில் என்று சொல்ல முடியவில்லை.
ஆனால் சிறு பருவத்தில் இருந்தே சந்தித்து வந்திருக்கிறான். பூவுக்கு ஒன்றேகால் கோட்டை நெல் கூலிக்கு ஆச்சி,அம்மா, அப்பா, ஏழு பிள்ளைகள் ஆகியோருடைய துணிகளை வெளுத்த இசக்கி ஓட்டிக் கொண்டு வந்திருக்கிறாள்.
இசக்கிக்கு அப்போதே அறுபதுக்குமேல் வயதிருக்கும். இசக்கியும் அவள் மகளுமாக – மகள் பெயர் நினைவேட்டில் இருந்து மாய்ந்து போயிற்று-வருவார்கள். இரண்டு பேருமே ஜெம்பர் போட்டிருக்க மாட்டார்கள் ஆச்சியைப் போல. ஆனால் ஆச்சியைப்போல அல்லாமல் நல்ல கண்டாங்கிகள் உடுத்தியிருப்பார்கள்.
இரண்டு கழுதைகள் அடிவயிற்றுக்கும் தரைக்கும் இடையே ஓரடி இடைவெளி இருக்கும்படியாக, வெளுத்த துணிகளை வரும்போதும் அழுக்குத் துணிகளைப் போகும்போதும் மூட்டையாகப் பொதிந்து, முதுகின் இரண்டு பக்கமும் சரித்துக் கட்டி ஒட்டிப் போவார்கள்.
எப்போதும் இசக்கியின் வரவு, பிற்பகல், கதிக்க இரண்டுமணிக்கு மேல்தான் இருக்கும். மூட்டையை இறக்கி, திண்ணையில் கிடத்தி விட்டு, கழுதையின் முன்னங்கால்களைப் பிணைத்து ஆற்றங்கரை யோரம் மேய்ச்சலுக்கு ஓட்டிவிட்டு வருவாள்.
அழுக்கு மூட்டையைச் சேர்த்துக்கட்டி, இருளடையச் சற்று நேரமே இருக்கும் வேளையில், கழுதைகளின் முதுகில் பாரமேற்றுவது வரை, அவை முன்னங்கால்களைத் தாவிப்போட்டு, சருகோ, கூளமோ, புல் மேடுகளையோ மேய்ந்தவாறிருக்கும்.
வீட்டுக்கு வந்ததும் இசக்கி, ‘யம்மா பசிக்கே” என்று கேட்டு வாங்கி, வாழையிலை மூட்டில் பிழிந்து பழையதும் பழங்கறியும் வாங்கித் தின்று, கார நெடி அடிக்கும் வெளுப்புக்குக் கணக்குச் சொல்லி, காணாமற் போக்கியதற்கு, கிழிந்ததற்கு, மாத்துக் கொடுத்ததற்கு, கொணர மறந்ததற்கு, சாயம் போனதற்கு சாக்குச் சொல்லி, இருபத்தி மூன்று நாட்களுக்கு ஒரு முறையே வெள்ளை கொண்டு வருவதற்கு பாட்டுக் கேட்டு, அழுக்குகளை எண்ணி எடுத்து, தீண்டற் சேலைகளைத் தனியாகக் கட்டி, கொண்டு வந்திருக்கும் குத்துப்போணியில் சோறும் பெரிய வட்டச் சருவத்தில் குழம்பும் வாங்கி, அடுத்த வீட்டுக்குப் போய்…
மூட்டைகளைக் கட்டியானதும் கழுதைகளைத் தேடுவார்கள்.சில சமயம் விட்ட இடத்திலேயே சற்று தூரம் மேய்ந்து சென்று காணும் படியாகக் கிடக்கும். சிலசமயம் இலக்கில்லாமல் எங்கேனும் போய்விட் டிருக்கும். விளையாட்டெனக் கருதிச் சிறுவர் எங்கேனும் ஓட்டி விட்டிருப்பர். பாதிச் சிரட்டையை விளிம்பில் கீறிப் பிளந்து கழுதையின் காது மடலில் ஓட்டி வலி பொறுக்காமல் ஓடுவதை விலாவெடிக்கச் சிரித்துப் பார்த்திருப்பர். வாலில்தகரப்டப்பாவைக்கட்டி, ஒட்டி, எழும் ஓசையில் கழுதை மிரண்டு ஓடுவதை ரசித்திருப்பர். காதில் கட்டெறும்பு விட முயன்றவரும் உண்டு.
கழுதைகள் பற்றித் தனக்கு வேறென்ன தெரியும்? அதன் காதுகள் நீளமானவை.
‘ராஜாக் காது கழுதைக் காது’ என்றொரு கதை நினைவில் இருக்கிறது. அதன் மூக்கு வெள்ளை.
வெள்ளி மூக்குக் குதிரை என்றொரு புனைபெயர் அதற்கு உண்டு. அதன் கனைப்பு அல்லது கத்தல் மனிதக் காதுகளுக்கு இனிமையான தல்ல.
அதற்கு பஞ்சகல்யாணி என்றொரு ஜனாதிபதி விருது உண்டு.
எந்தச் சாமிக்கும் வாகனமாயிருக்கும் பெருமை பெற்றதல்ல.
பெண்ணுக்கோ ஆணுக்கோ அதன் எந்த உறுப்பையும் உவமானம் சொல்ல முடியாது.
பார்த்துப் பொறாமைப்படும் ஆண்குறியை உடையது.
ஆத்தா சொன்ன கதைகளில் எல்லாம் தண்டிக்கப்பட்டவர் முகத்தில் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, மொட்டையடிக்கப்பட்டு ஊர்வலம் வந்தனர் கழுதைமேல்.
அதன் பெயரால் ஒருவனை அழைப்பதே வசவு.
அதன் குட்டிகள் பார்க்க கம்பீரமாக இருக்கும்.
அவை எப்போதும் துக்கத்தின் வயப்பட்டது போல் தலையைத் தாழ்த்தியே நடக்கின்றன.
எந்தப் பள்ளியிலும் அதைப்பற்றி வியாசம் எழுதச் சொன்னது கிடையாது.
பழந்தமிழ் இலக்கியத்தில் கழுதை என்று யாரோ எம்ஃபில் அல்லது பிஹெச்டி செய்வதாக அறிவு.
அவை மஞ்சள் நிறத்தில் கொழுப்பாக மோர்க்குழம்பு போல் மூத்திரம் பெய்கின்றன.
சில கழுதைகள் சினிமாவில் நடித்துள்ளன.
அதன் முகதரிசனம் நல்ல சகுனம் என்பர்.
பின்னிரு கால்களைத் தூக்கி உதைப்பதும் கடிப்பதும்தான் அவை கற்றிருக்கும் போர் முறைகள்.
கிளியோபாத்ரா அதன் பாலில் குளித்தாள். எனவே மூத்த குடிக்கும் முதல் குடிக்கும் உள்ள தொன்மை அதன் குடிக்கும் உண்டு.
பெற்ற அறையில் குழந்தைகளுக்கு வரும் சிவப்பு ரோகத்துக்கு வண்ணார்குடியில் இருந்து கழுதைப்பால் கறந்து வந்து கொடுப்பார்கள்.
மிகச் சமீபகாலம் வரை கழுதைக் கறியை மனிதர் உண்பதில்லை. தமிழனின் தலைநகரில் ஆட்டிறைச்சியுடன் கழுதைக்கறியைக் கலப் பதாக ஒரு வதந்தி உண்டு. அது போல் கோழி இறைச்சிக்குப் பதிலாக வறண்டு கிடக்கும் ஏரிகளில் வலைவிரித்துக் கழுகு பிடிப்பதாகவும் கேள்வி உண்டு.
மாடுகள் இறந்து போனால் தோலை உரித்து, அந்தத் தோலிலேயே தனக்கும் தெருக்காரர்களுக்கும் வாக்கான இறைச்சியை அறுத்து எடுத்து விட்டு மீதியை அப்படியே கழுகுகளுக்கு விட்டுச் செல்வது போல், கழுதைகள் இறந்தால் செய்வதில்லை. குழி தோண்டிப் புதைக்கிறார்கள். புதைக்காவிட்டால் கொள்ளை நோய் பரவும் என்றொரு பீதி. வண்ணார் மட்டுமே ஊரில் கழுதை வைத்திருந்தனர். இவை தவிர கழுதை பற்றித் தனக்கென்ன தெரியும்?
அதன் இன்றைய சந்தை விலை என்ன? அது உயிர்வாழும் ஆண்டுகள் எத்தனை?
உத்தேசமாய் எத்தனை குட்டிகள் போடும்?
சிவப்பு மாருதியில் கழுதை சவாரி செய்ததுண்டா?
கழுதைக்கும் கோவேறு கழுதைக்கும் என்ன வேறுபாடுகள்?
முகத்தில் அறைவதுபோல் இங்கு கழுதைகள் தென்பட்டுக் கொண்டே இருந்ததால் மனதிலோர் முன்னடைவாக அவை ஆகி விட்டன.
ஒருநாள் இரவில், திரும்ப நேரமாகி, குடையை விரிப்பது அனா வசியம் என்றுணர்ந்து, மழையில் நனைந்து, இருளடைந்திருந்த சாலை யில், பாம்புகள் நடமாட்டம் அஞ்சி, வீடு திரும்பும்போது, மழைக் கோணத்தை எதிர்கொண்டு, முகத்தை மேலும் தாழ்த்தி, நான்கு கழுதை கள் நின்றவாறே இருந்தன.
அவை மழையின் குளிரை உணரமாட்டாவா?
மரம் தேடியேனும் ஒதுங்க வேண்டும் என்று தோன்றாதா? இந்த நேரத்தில் அவை எவைபற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கும்? அன்று இரவு நெடுநேரம் அவன் அந்தக் கழுதைகள் பற்றிச் சிந்தித்த வாறே கிடந்தான்.
மழையெல்லாம் வெறித்தபிறகு, இந்தக் கழுதைகள் தான் தோன்றி யல்ல, சில வேலைகளுக்காகப் பராமரிக்கப்பட்டு வருபவை என்பது தெரிந்தது. விலாப் பக்கமாய்க் கிழிக்கப்பட்ட கோணியைக் கழுதையின் முதுகின் இருபுறம் பாதிப்பாதி வரும்படி போட்டு அதில் மணல், ஜல்லிகள், சுடு செங்கற்கள் நிறைத்து இரண்டிரண்டாய் மும்மூன்றாய் ஓட்டி, அவை தம்வயமற்று நடந்து போய், இலக்கில் நின்றதும் மூச்சுப் பிடித்து, சாக்கைச் சரித்து, திருப்பி ஓட்டிவந்து….
இந்தக்கட்டிட வேலைக்காரர்கள் அனைவரும் தெலுங்கு பேசினர். காமாட்டிகள் என்று அழைக்கப் பெற்றனர். பெண்கள், கண்ணாடிச் சில்லுகள் வைத்துத் தைத்த, முதுகு திறந்த மேற்சட்டைகள் அணிந்திருந் தனர். உள்பாடி நாகரீகம் இன்னும் உடலைச் சென்று சேர்ந்திருக்க வில்லை என்றாலும் வனப்பான முலைகள் கொண்டிருந்தனர்.
குடும்பத்துக்கு ஒன்றிரண்டு கழுதைகள் வைத்திருந்தனர். கூட்டம் கூட்டமாய், அரபுகாரவான் போல, அவர்கள் இடம் பெயர்ந்த போது, வீட்டுக்கூடாரமூங்கில்கள் கோணிகள், சமையற் பாத்திரங்கள், விரிப்புத் துணிகள் என வரிந்து வட்டி, கழுதை முதுகுமேல் ஏற்றி ஓட்டிச் சென்றனர். சில சமயம் சிறுவர் ஒன்றிரண்டு பேர் கூட அமர்ந்திருப் பதுண்டு.
இங்கும், காலனியின் கனவான் வீட்டுப் பிள்ளைகள் கூடி கழுதை களை வடக்கும் போகவிடாமல், தெற்கும் போகவிடாமல் கல்லெறிவது காணத் துன்பமாக இருக்கும்.
ஓடிவந்து கடிக்கவோ, உதைக்கவோ அவை தெம்பற்று இருந்தன. பயமுறுத்தவேனும் ஒரு பொய்யுறுமலை, சாரைச் சீற்றத்தை அவை கற்று வைத்திருக்கவில்லை. அதன் கத்தல் கூட எப்போதும் ஒரு பரிதாபம் கலந்து, துன்பம் தோய்ந்து, முறையீடு கலந்திருந்தது.
மழை வெறித்து, சுற்றி அடைத்திருந்த காட்டுச்செடிகள் மீது பளிச் சென்று பிரதானமாக வெயிலடித்த காலையில் அலுவலகம் போகவென நடந்து கொண்டிருந்தபோது, அவன் முன்னால் நர்ஸரியில் படிக்கும் சிறு பையனைப் பிடித்தபடி, மறுகையால் கேன்வாஸ் புத்தகப்பை, ஆப்பிள் வடிவத் தண்ணீர் பாட்டில், குடை எல்லாம் கொண்டு, பருவம் தாண்டிய பெண்ணொருத்தி நடந்துகொண்டிருந்தாள்.
அவர்கள் முன்னால், முதுகில் வைத்துக் கட்டிய குழந்தையைச் சுமந்தபடி, கழுதை ஒன்றை ஒட்டிக்கொண்டு பருவம் வாய்த்திருந்த பெண்ணொருத்தி போனாள். கையில் துணியால் வண்டு கட்டிய பொட்டலமும் தூக்குவாளியும் காம்பு நீண்ட குடையொன்றும்… வேலைக்குப்போவதான தோற்றம் கொண்டிருந்தாள். பொட்டலத்தில் நேற்றிரவு, எண்ணெய் தடவாமல் தீயில் வாட்டி வாட்டிச்சுட்ட, கனமான பெரிய சோள ரொட்டியும் பூண்டுச்சட்டினியும் இருக்கலாம். அல்லது பொரித்த கூனிப்பொடி கருவாடு இருக்கலாம். வலுவான ரொட்டியைச் சட்னியுடன் சேர்த்து, பசி மீதூற உண்பதைப் பல சமயம் அவன் கவனித் திருக்கிறான். வேலை செய்யும் இடத்தில் நிழலற்று இருக்கலாம். மரங் கள் தறிக்கப்பட்டிருக்கலாம். குடையை விரித்து, குழந்தையைக் குடை நிழலில் கிடத்தியபடி, எப்போதாவது எட்டிப் பார்த்து முலை சுவைக்கக் கொடுத்தபடி, வேலை செய்ய வேண்டியதிருக்கலாம்.
பள்ளிக்குப் பையனைக் கூட்டிச் செல்லும் பெண், கழுதை ஒட்டிப் போன பெண்ணைத் தாண்டிக் கொண்டிருந்தபோது, இந்தியைத் தெலுங் குத் தொனியில் உச்சரித்து அந்தப் பெண் கேட்டாள்.
“தாயி… மணி என்னாச்சு?”
”ஒன்பதாகப் போகுது.”
‘பையனைப் பள்ளிக்குக் கூட்டிப் போறையா?’
“ஆமா.”
“எந்தக் கிளாஸ் படிக்கான்?”
“நர்ஸரி…”
“கிளாஸ் எப்பம்?”
“ஒன்பதிலிருந்து பன்னிரண்டரை…”
“அடேப்பா…!”
நேரமாயிற்றென்ற அவசரத்திலோ, அல்லது சரிநிகர் உரையாடிச் செல்ல இவள் தகுந்தவள் அல்ல என்றதோர் உணர்விலோ, பள்ளிக்குப் போகும் பெண் தாண்டிப் போனாள்.
அவன் கவனம் சற்றே திசைமாறியபோது, “நீயும் பள்ளிக் கொடத்துக்குப் போறையா?” என்று அந்தப் பெண் வினவியது கேட்டது.
முதுகில் உறங்கி வந்த தன் பிள்ளையைக் கேட்டாளா அல்லது ஓட்டிச் சென்றுகொண்டிருந்த தன் கழுதையைக் கேட்டாளா என்பதை அவன் அறியவில்லை.
– கணையாழி, 1988.
நன்றி: https://nanjilnadan.com
![]() |
நாஞ்சில்நாடன் வாழ்க்கைக் குறிப்பு: பெயர் : G. சுப்ரமணியம் (எ) நாஞ்சில் நாடன்எழுதும் துறை : நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரைபிறந்த நாள் : 31 டிசம்பர் 1947பிறந்த இடம் : வீரநாராயணமங்கலம்தாழக்குடி அஞ்சல், தோவாளை வட்டம்,கன்னியாகுமரி மாவட்டம்.தமிழ் நாடு – 629 901.முகவரி : G. Subramaniyam (NanjilNadan)Plot No 26, First Street, VOC Nager, Near Euro Kids, KovaipudurCoimbatore – 641 042, Tamilnadu.Phone:…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
மிகச்சிறிய மிருகங்கள்
நீ.பி.அருளானந்தம்
October 12, 2026
நவீன நல்லதங்காள்
இரா.கலைச்செல்வி
October 12, 2026
ஸ்க்ரைப்
ஜூனியர் தேஜ்
October 12, 2026
