கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை நாடகம்
கதைப்பதிவு: October 8, 2026
பார்வையிட்டோர்: 106 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

(1947ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பாத்திரங்கள் 

ராமச்சந்திரன்: பூகோள உபாத்தியாயர் 

ரங்கநாதன் : கணித ஆசிரியர் 

சகுந்தலா : ரங்கநாதனின் மனைவி 

டாக்டர் 

முதற் காட்சி 

[ஓட்டு வீடு. வாசலிலிருந்து நுழைந்ததும் ஒரு முற்றம். முற்றத்தின் இடது புறத்தில் நாற்காலி போல் நான்கு கால்களையுடைய ஒரு சட்டம். அதன் மீது ஒரு தேக்கம் பலகை. அதில் பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்கள் சிலவும்,அவைகளுடன் கதைப் புத்தகங்கள் சிலவும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. சட்டத்தின் நீளத்துக்கு அதிகமாகவே புத்தகங்கள் இருப்பதால், அவை கீழே விழாமல் அடைத்துக் கொண்டிருக்கும் பலகை, சட்டத்திற்கப்பால் நீண்டு கொண்டிருக்கிறது. அடுக்கி வை கப்பட்டிருக்கும் புத்தகங்கள் மீதும், சில புத்தகங்கள் போடப்பட்டிருக்கின்றன. முன்னால் ஒரு சாய்வு நாற்காலி. அதில் இருக்கும் ரெட்டு சற்று அதிகமாகவே அழுக்கடைந்திருக்கிறது. அதற்குச் சமீபத்தில் ஒரு படுக்கையில் ராமச்சந்திரன் படுத்திருக்கிறார்.] 

ராமச்சந்திரன்: வியாதிகளில் எத்தனை வகைதான் உண்டோ, தெரியவில்லை. அதில் நமக்கு வந்திருப்பது ஒரு விநோத வகையைச் சேர்ந்ததாய் இருக்கிறது. 

(ரங்கநாதன் புன் சிரிப்புடன் உள்ளே நுழைகிறார். ராமச்சந்திரன் உட்காரச் சொல்லவே, சாய்வு நாற்காலியில் அமர்கிறார்.) 

ரங்கநாதன்: என்ன ஐயா! படுத்துக் கொண்டு விட்டீர்கள்? உடம்புக்கு என்ன செய்கிறது? 

ராமச்சந்திரன்: (முகத்தில் கவலைக் குறிகளுட ன்) மறுபடியும் பழைய தொல்லைதான்! 

ரங்கநாதன்: ஏன், என்ன செய்கிறது? 

ராமச்சந்திரன்: (சலிப்புடன்) வயிற்றுக் கோளாறு தான்.

ரங்கநாதன்: வயிற்றுக் கோளாறு என்றால், என்ன தான் செய்கிறது? 

ராமச்சந்திரன் : பசியில்லை. 

ரங்கநாதன்: (சிரித்துக்கொண்டு) இதற்கு யாராவது கவலைப் படுவதுண்டா? உத்தியோகம் செய்ய வேண்டிய கவலை நீங்கிற்று! பசிப் பிணியைத் தீர்க்கத்தானையா, இந்த உத்தியோக மெல்லாம். அது இல்லையென்றால், பேசாமல் இருந்த இடத்தில் இருந்து ஈசுவரத் தியானம் செய்து கொண்டிருக்கலாமே! எனக்கு இந்த மாதிரி நோய் வர மாட்டேன் என்கிறதே! 

ராமச்சந்திரன்: தலையெல்லாம் கொதிப்பது போல் தோன்றுகிறது! 

ரங்கநாதன்: இந்த விநோதத்தைப் பாருங்கள்! அடி வயிற்றில் கோளாறு வர, உடனே அது உச்சந் தலையைப் பிடிக்கிறது பாரும்! என்னையா அதிசயம்! 

ராமச்சந்திரன்: உங்களுக்கு இதெல்லாம் இப்பொழுது கேலியாகத்தான் இருக்கும். தனக்கு வந்தால் தான் ஒவ்வொருவருக்கும் அதனதன் கஷ்டங்கள் தெரியும். 

ரங்கநாதன்: உம், அப்புறம் என்ன செய்கிறது?

ராமச்சந்திரன் : பித்தத்தினால் உண்டாகும் கோளாறுகள் எல்லாம் இருக்கத்தான் செய்கிறது. 

ரங்கநாதன்: பித்தமாவது வாதமாவது! எல்லாம் மதி மயக்கந்தான்! வேறொன்றுமில்லை. 

ராமச்சந்திரன் : நீங்கள் இப்போது அப்படித்தான் சொல்லுவீர்கள். 

ரங்கநாதன்: அமாவாசை, பௌர்ணமிகளில் இந்தத் தொல்லை அதிகமாய் இருப்பதாகச் சொல்வீர்களே. உங்கள் விஷயமெல்லாம் வேடிக்கையாகத்தான் இருக்கிறது.பெளர்ணமி வருவதையும், அமாவாசை வருவதையும் உங்கள் உடம்பு எப்படித்தான் அறிந்து கொள்கிறதோ, தெரியவில்லை! 

ராமச்சந்திரன்: நேற்றுப் பௌர்ணமிதானே! 

ரங்கநாதன்: இந்த முட்டாள்த் தனத்தை எல்லாம் என்னால் சகித்துக் கொண்டிருக்கவே முடிய வில்லை. நான் சொல்லுகிறேனே,எல்லாம் மனக் கோளாறுதான்! 

ராமச்சந்திரன்: காலையில் எழுந்திருந்ததும் தினந் தோறும் பித்தமாய் வாந்தி எடுக்கிறேன். சிற்சில சமயங்களில் தலை சுற்றுகிறது. இதை எல்லாம் எப்படி மனக் கோளாறு என்று சொல்வது? 

ரங்கநாதன்: என்ன ஆச்சரியம் பாருங்கள்! நீங்கள் பூகோள ஆசிரியர் அல்லவா? ‘பூமி சுற்றுகிறது! பூமி சுற்றுகிறது!’ என்று சொல்லிக் கொடுத்த தன்பயனாய், இப்பொழுது உங்கள் தலையே சுற்ற ஆரம்பித்துவிட்டது போலும்! (உரத்துச் சிரிக்கிறார்) 

ராமச்சந்திரன் : உங்களுக்கு எல்லாம் வேடிக்கையா யிருக்கிறது! என் கஷ்டங்களை இருந்திருந்து எல்லாம் உங்களிடம் சொல்கிறேனே!

ரங்கநாதன்: (சிரித்துக் கொண்டே) அது போகட்டும். பூமி மேற்கிலிருந்து கிழக்கு முகமாகச் சுற்றுகிறதாம். உங்கள் தலை எந்த முகமாய்ச் சுற்றுகிறது ? 

ராமச்சந்திரன்: (புன் சிரிப்புடன்) அதிலும் ஓர் அதிசயத்தைப் பாருங்கள்! வலது புறம் திரும்பிப் படுத்தால், தலை சுற்றுகிறது; இடது புறம் படுத்தால், சுற்றுவதில்லை. 

ரங்கநாதன்: என்ன வேகத்துடன் சுற்றுகிறதோ? பூமி மணிக்கு 72,000 மைல் வேகத்தில் சுற்றுவதாகச் சொல்வீரே! 

ராமச்சந்திரன்: உங்களுக்கு எல்லாமே வேடிக்கை யாகத்தான் இருக்கிறது. 

ரங்கநாதன்: பெளர்ணமி, அமாவாசை உபவாச மிருப்பீர்களே! அது என்ன ஆயிற்று? 

ராமச்சந்திரன்: இருந்து கொண்டுதான் இருக்கிறேன்.

ரங்கநாதன் : ஒரு லேகியம் சாப்பிடுவீர்களே. இப்போது. கிடையாதோ? 

ராமச்சந்திரன்: சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். அதில் எல்லாம் கொஞ்சம் குணம் தெரியத்தான் செய்கிறது. 

ரங்கநாதன் : தலை சுற்றுகிறது, வாந்தி எடுக்கிறது, வயிற்றுக் கோளாறு என்பதெல்லாம் வெறும் பிரமைதான். உங்களுக்கு ஒரு வியாதியுமில்லை. அந்த லேகிய டப்பாவைத் தூக்கிக் குப்பையில் எறிந்து விடுங்கள். உபவாசத்தை நிறுத்திவிட வேண்டும். எனக்கு இம்மாதிரி வியாதி வந்தால் என்ன செய்வேன் தெரியுமா? நன்றாய்ச் சாப்பிடுவேன்; ஓடுவேன்; ஆடுவேன். நான் சொல்லுகிறேன் கேளுங்கள். நன்றாய்த் தேகப் பயிற்சி செய்யுங்கள்; அப்புறம் ஒரு நோயும் அணுகாது. (திடீரென்று கடிகாரத்தைப் பார்க்கிறார்.) பள்ளிக்கூடத்திற்கு நேரம் ஆகிவிட்டது. உங்களுக்கு இரண்டு நாளைக்கு ரஜாவாக்கும். சரி, போய் வருகிறேன். 

(செல்கிறார்). 

இரண்டாம் காட்சி 

[காரை மச்சுப் போட்ட வீடு. வீட்டு முற்றத் தில் ஓர் அழகிய கண்ணாடி பீரோவில் புத்தகங்கள் நிறைய அடுக்கப் பட்டிருக்கின்றன. தமிழ், ஆங் கில’ இலக்கியங்களும், கணிதம், கலை சம்பந்தமான நூல்களும் காட்சி யளிக்கின்றன. மேஜையைச் சுற்றிலும் நான்கைந்து நாற்காலிகள் போடப்பட்டிருக்கின்றன. மேஜையின் மீது சில நோட்டுப் புத்தகங்கள் விரித்தும், மூடியும்,மடங்கியும், கிடப்பது, அவைகளை உபயோகிப்பவரைப் பற்றி ஏதோ சொல்லுவது போல் தோன்றுகிறது. புத்தகங்களின் மீதும், மேஜையின் மீதும் தூசி படிந்திருக்கிறது. ரங்கநாதன் படுக்கையில் படுத்து நிலை கொள்ளாமல் புரண்டு கொண்டிருக்கிறார். திடீர் திடீரென்று அவருக்குக் கோபம் வருகிறது. யாராவது எதுவும் கேட்டால் சீறி விழுகிறார்.) 

ரங்கநாதன்: இத்தத் தரித்திரம் பிடித்த தொழில்களுக்கு ஒரே முழுக்காய் முழுகிவிட வேண்டும். அதனால்தான் இந்தத் தொல்லை எல்லாம். வாத்தியார் உத்தியோகமும் அப்படித்தான். எழுதும் தொழிலும் அப்படியே. இரண்டும் அஷ்ட தரித்திரம்! வேறு எந்த வியாதியானாலும் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால், இதைப் பொறுக்க முடியாது. ஐயோ! 

(புத்தகங்களையும் நோட்டுக்களையும் வீசி எறிந்து விட்டு, மீண்டும் வந்து படுத்துக் கொள்கிறார்.) 

சகுந்தலா! அடீ சகுந்தலா!,ஆ ஆ! டாக்டருக்கு ஆள் அனுப்பச் சொன்னேனே! அனுப்பினாயா இல்லையா! 

சகுந்தலா: அனுப்பி யிருக்கிறேன். 

ரங்கநாதன்: ஏன் இன்னும் வரவில்லை? 

சகுந்தலா : (மௌனம்) 

ரங்கநாதன்: ஏன் இன்னும் வரவில்லை யென்று கேட்கிறேன்! (உரத்த சப்தத்தில்) காது கேட்கவில்லையா? 

சகுந்தலா: (ரங்கநாதனைச் சமாதானப்படுத்தி) இப்போது வந்து விடுவார். வீணில் மனதை அலட்டிக் கொள்ளாதீர்கள். பேசாமல் படுத்திருங்கள். 

ரங்கநாதன்: வேறு எந்த வியாதியையும் பொறுத்துக் கொள்வேன். ஆனால் இதை என்னால் அரைக் கணமும் பொறுக்க முடியாது. 

(யாரோ வரும் காலடிச் சப்தம் கேட்கிறது.) 

ரங்கநாதன்: (தனக்குள்) இதோ டாக்டர் வந்து விட்டார். ஆனால், அவரிடம் நான் இதை என்ன என்று சொல்வேன்! தெரியவில்லையே! 

(ராமச்சந்திரன் முற்றத்தில் நுழைகிறார். ரங்கநாதன் நிராசையுடனும், முகத்தில் வேதனைக் குறிகளுடனும் படுக்கையில் புரளுகிறார்.) 

ராமச்சந்திரன் : (முகத்தில் கவலைக் குறிகளுடன்) உடம்புக்குச் சௌகரிய மில்லையாமே. இப்பொழுதுதான் கமலா சொன்னாள்: ‘ரொம்பக் கஷ்டப்படுகிறார். போய்ப் பார்த்து விட்டு வாருங்கள்’ என்றாள். ஏன் என்ன செய்கிறது? 

ரங்கநாதன்: என்ன வெல்லமோ செய்கிறது! ஒன்றா இரண்டா சொல்வதற்கு! உடம்பெல்லாம் என்னமோ செய்கிறது! 

ராமச்சந்திரன்: என்ன செய்கிறதென்று சொன்னால், கைப்பக்குவம் ஏதாவது செய்து பார்க்கலாம்; அதற்காகத்தான் கேட்டேன். 

ரங்கநாதன்: கைப் பக்குவத்தில் எல்லாம் இது கட்டுப் படுமா? டாக்டரைக் கூட்டி வரச் சொல்லி யிருக்கிறேன். (வேதனையுடன் புரண்டு படுக்கிறார்.) ஐயோ! 

ராமச்சந்திரன்: வேதனை பொறுக்க முடியவில்லை போலிருக்கிறதே! காய்ச்சல் அடிக்கிறதோ? 

(உடம்பைத் தொட்டுப் பார்க்கிறார்.) 

ரங்கநாதன்: காய்ச்சலாயிருந்தால், இப்படிக் கஷ்டப் பட மாட்டேன்! 

ராமச்சந்திரன்: பின் என்னதான் செய்கிறது? சொல்லுங்களேன்? 

ரங்கநாதன்: (கோபத்துடன்) வியாதித் தொல்லை ஒரு புறமிருக்க, உங்கள் தொல்லையல்லவா பெருந் தொல்லையாய் இருக்கிறது! நீங்கள் என்ன டாக்டரா என்ன? உங்களிட மெல்லாம் சொல்லி என்ன பிரயோஜனம்? 

(டாக்டர் நுழைகிறார்.) 

ரங்கநாதன்: வாருங்கள்! 

(டாக்டர் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு படுக்கைக்குப் பக்கத்தில் உட்கார்ந்து நெஞ்சு, முதுகு எல்லாம் ‘ஸ்டெதஸ்கோப்’பை வைத்துப் பார்க்கிறார். நாக்கை நீட்டச் சொல்கிறார்.) 

டாக்டர்: உடம்புக்கு என்ன செய்கிறது? 

ரங்கநாதன்: உடம்பெல்லாம் என்னவோ செய்கிறது! என்ன செய்கிறதென்றே தெரியவில்லை.

டாக்டர்: உம். (நோயாளியைக் கூர்ந்து கவனிக்கிறார்.)

ரங்கநாதன்: எடுத்ததற்கெல்லாம் கோபம் வருகிறது.

டாக்டர்: (புன் சிரிப்புடன்) அதற்கு என்னால் ஒரு பிரயோசனமு மிருக்காதென்று நினைக்கிறேன். கோபம் பெரிய வியாதிதான். ஆனால் அது மருந்து கொடுத்துக் குணப்படுத்தக் கூடியதல்ல! 

ரங்கநாதன் : ஒரு நிலையில் இருப்புக்கொள்ள வில்லை. மனது சஞ்சலப் படுகிறது. 

டாக்டர்: (நெற்றியில் கை வைத்துப் பார்க்கிறார்.) நெற்றி கொஞ்சம் சுடுகிறது. 

ரங்கநாதன்: ஆம்,தலை கொதிக்கிறாப் போலிருக்கிறது. 

டாக்டர்: நாக்கை நீட்டுங்கள். 

(ரங்கநாதன் மறுபடியும் நாக்கை நீட்டுகிறார். டாக்டர் மீண்டும் நாக்கைப் பார்க்கிறார்.) 

டாக்டர்: வயிற்றுக் கனம் இல்லாதிருக்கிறதா?

ரங்கநாதன்: கொஞ்சம் அஜீர்ணம்தான். பித்தமாய் வாந்தி எடுத்தேன். 

டாக்டர்: தலை சுற்றுகிறதோ? 

ரங்கநாதன்: ஆம், உட்கார்ந்திருக்கும் போதும், நடக்கும் போதும், சில சமயங்களில் சுற்றுகிறது. வலதுபுறம் திரும்பிப் படுத்தாலும், சில சமயங்களில் சுற்றுகிறது. 

டாக்டர்: பசி இருக்கிறதா? 

ரங்கநாதன்: கொஞ்சம் மட்டுத்தான். 

டாக்டர்: உங்களுக்கு ஒன்றுமில்லை. பயப்பட வேண்டாம். மனக் கலக்கம் வேண்டாம். பீதியும் வேண்டாம். இப்போது ஒரு மருந்து கொடுக்கிறேன். தற்காலிக குணம் இருக்கும். பின்னால் ஒரு லேகியம் கொடுக்கிறேன். ஒரு மாதம் சாப்பிடுங்கள். நல்ல குணம் தரும். 

ரங்கநாதன்: லேகியமா? 

டாக்டர்: ஆமாம், எனக்கு ஆயுர் வேதத்திலும் அதிக நம்பிக்கை உண்டு. இந்தப் பெளர்ணமியிலிருந்து அடுத்த பௌர்ணமி வரைக்கும் சாப்பிட்டால் போதும். 

ரங்கநாதன்: பௌர்ணமியா?

டாக்டர்: ஆம், நாளைக்குப் பௌர்ணமி யல்லவா? நீங்கள் லேகியம் சாப்பிடுவதுடன், நன்றாய்த் தேகப் பயிற்சி செய்ய வேண்டும். நல்ல பசி யிருந்தால் மட்டும் சாப்பிட வேண்டும். இல்லை யானால் உபவாசம் இருப்பது நலம். சரி, போய் மருந்தை அனுப்புகிறேன். பயப்படாதீர்கள். எல்லாம் குணமாகி விடும். 

(போகிறார்.) 

ராமச்சந்திரன்: (புன்சிரிப்புடன்) நான் சொல்கிறேன், கேளுங்கள். நெற்றி கொதிக்கிறது, தலை சுற்றுகிறது, வாந்தி எடுக்கிறது என்பதெல்லாம் சுத்தப் பிரமை. உங்களுக்கு ஒரு வியாதியு மில்லை. இந்த டாக்டர் சொல்லுகிறார் என்று கேட்காதீர்கள். அவர் ஏதாவது லேகியம் கொடுத்தால், பேசாமல் அதைக் குப்பையில் எறிந்து விடுங்கள். உபவாசம் கிபவாசம் என்ப தெல்லாம் சுத்தப் பைத்தியக்காரத்தனம். எனக்கு இந்த மாதிரி வியாதி வந்தால், நான் என்ன செய்வேன் தெரியுமோ? நன்றாய்ச் சாப்பிடுவேன்! ஓடுவேன்! ஆடுவேன்! இப்படிப் படுத்திருக்க மாட்டேன். 

ரங்கநாதன்: (மீதி நீங்கிய வராய்ச் சிறிது உற்சாகத்துடன்) கண்ணாடி வீட்டில் இருப்பவர்கள் பிறர்மீது கல்லெறியக் கூடாது! 

ராமச்சந்திரன் (எழுந்திருந்து சென்றுகொண்டே புன் சிரிப்புடன்) அது உடைந்த வீடா யிருந்தால்! 

[திரை]

– உபகுப்தர் (நாடகங்கள்), முதற் பதிப்பு: பிப்ரவரி 1947, அருணோதய நிலையம், வேலூர்.

சு.குருசாமி சு.குருசாமி (Trichi. S.V. Guruswamy Sarma, திருச்சிராபுரம் சு.வை.குருசாமி சர்மா) என்பவர், தமிழில் முதல் சில புதினங்களில் ஒன்றான "பிரேம கலாவதீயம்" (1893) எழுதிய ஒரு முக்கியமான தமிழ் புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் 1940களில் "வாடா விளக்கு" போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும், பல கதைகளைத் தொகுத்து வெளியிட்டதோடு, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவியவர். மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை, பண்டித எஸ்.எம்.நடேச சாஸ்திரி, பி.ஆர்.ராஜமையர், சு.வை.குருசாமி சர்மா, அ.மாதவையா ஆகியோர் முதற் காலக்கட்டத் தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *