வடிவேல் வாத்தியார்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 30, 2021
பார்வையிட்டோர்: 3,869 
 

பார்த்திபனுக்கு எரிச்சலாய் வந்தது…

முந்தைய நாள் சனிக்கிழமை…

படுக்கும்போதே இரண்டு மணி..

காலை சிற்றுண்டி…. மதியம் லஞ்ச்… எல்லாவற்றையும் சத்தியமாய் தியாகம் செய்து… தூக்கம் மட்டுமே பிரதானம் என்று சபதம் செய்து விட்டு…

ஒன்றுக்கு இரண்டாய் கம்பளியைப் போர்த்திக்கொண்டு..

டிசம்பர் மாத பாஸ்டன் குளிருக்கு நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருந்தவனுக்கு விடாமல் அடித்துக் கொண்டிருந்த மொபைல் போன் சத்தம் எரிச்சலூட்டுமா. .இல்லையா. ??

“யாரு இந்த வேளை கெட்ட வேளைல…??”

திட்டிக் கொண்டே போனை எடுத்தான்..

‘ புகழ் ‘என்று அறிவித்தது ஃபோன்…

“டேய்…படுபாவி…! சன்டே நிம்மதியா தூங்க விடமாட்டியா…?

விடிகாலைலயே என் தூக்கத்த கெடுத்திட்டியே மச்சான்….நீ உருப்படுவியா….?”

“என்னது….காலேலயா….இப்போ உங்க ஊர்ல மணி என்ன தம்பி….?

டே லைட் சேவிங் இவ்வளவு மாறிடிச்சா….? எனக்குத்தாண்டா நடுராத்திரி . உனக்கு பகல் பன்னிரண்டுடா….! எரும.

என்னடா ‘ நேத்து ராத்திரி …. ம்ம்ம்…. பார்ட்டியா…?

குடுத்து வச்சவண்டா….”

“டேய்…. என்ன எழுப்பி விட்டுட்டு என்னடா கத அளக்கிற…? நான் ஃபோனக் கட் பண்ணப் போறேன்….”

“ஏய்…. ப்ளீஸ்டா.. நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்லத்தான் கூப்பிட்டேன்.

நம்ப வடிவேல் வாத்தியார் போய்ட்டாருடா. ?”

போர்வையெல்லாம் வீசி எறிந்து விட்டு.. எழுந்து நின்று விட்டான்….

“எப்போ. எப்பிடிடா. ?”

“இன்னைக்கு காலைல செல்லதுரை ஃபோன் பண்ணிச் சொன்னான்….தூக்கத்திலேயே போய்ட்டாராம்….”

“பாவமே. நீ போலியா…?”

“இல்லடா….எங்கம்மாவ தனியா விட்டிட்டு போக முடியலடா….

நெனச்சாலே மனசு ஆறலடா.
உங்கிட்ட சொன்னாலாவது ஆறுதலா இருக்கும்னு தான்….!”

“புகழ்… நான் இன்னிக்கு இங்க உக்காந்து கை நிறைய சம்பளம் வாங்குறேன்னா அது அவர் போட்ட பிச்ச தானேடா….!

உனக்கு நியாபகம் இருக்காடா….??

தூக்கமெல்லாம் பறந்தே போனது….

***

வடிவேல் வாத்தியார்….?

‘ தேர்வு எழுத காத்திருக்கும் மாணவன் டெஸ்க்கில் வந்து விழும் விடைத்தாளைப் போன்று வெள்ளை வெளேறென்ற ஜிப்பாவும், பைஜாமாவும். ..

நெடு நெடுவென்று உயர்ந்து, சிவந்து மெலிந்த தோற்றமும்.

பளீரென்று மின்னும் கண்ணாடியும்….படிய வாரிய கருகருவென்ற முடியும்.

ஜிப்பாவில் செருகியிருக்கும் தங்க மூடிப் பேனாவும்…

ஒரு முறை கேட்டால் போதும்…நேராக தேர்வு அறைக்குச் செல்லலாம் என்று அடித்துச் சொல்லும் பாடம் நடத்தும் நேர்த்தியும்….

வகுப்பில் அவர் நுழையும் முன்பே நுழைந்திருக்கும் மெல்லிய சென்ட்டின் மணம்…

இதெல்லாம் சேர்ந்ததுதான் வடிவேல் வாத்தியார் என்று கற்பனை பண்ணி வைத்திருந்தீர்களென்றால் ஏமாந்து போவீர்கள். !!

வடிவேல் வாத்தியார் இதற்கு நேர்மாறானவர்.

சற்றே குள்ளமான உருவம்..தலை பாதி வழுக்கை…மீதியில் அன்று முளைத்த புல்லைப்போல , கருப்பும் வெளுப்புமாய் தூக்கி நிற்கும் முடி…

லேசான காவி படிந்த பற்கள்…பழுப்பேறிய வேட்டி…சட்டை… கையில் ஒரு பிரம்பு…. !!

எல்லாவற்றையும் மீறி அவர் வருவதைக் கட்டியம் கூறும் மூக்குப் பொடி வாசனை ….

( நாற்றம்…??).

இத்தனைக்கும் வயது நாற்பது கூட நிறம்பவில்லை என்றால் நம்ப முடிகிறதா…?

பின் எப்படி ‘ எங்க வடிவேல் வாத்தியார் மாதிரி வருமா…?’ என்று மாணவர்களை சொல்ல வைக்க முடிந்தது….?

இராமநாதபுரம் சூரன் கோட்டையைச் சேர்ந்தவர்கள் தான் பார்த்திபன்… புகழேந்தி… செல்லதுரை…

வானம் பார்த்த பூமி… ஊருக்கு ஒதுக்குப் புறமாய் இருந்த அந்த பள்ளிக்கூடம் தான் மூன்று பேரையும் நண்பர்களாக்கியது….

சூரன்கோட்டையில் அருந்ததியார் சமூகத்தினர் அதிகம் வசித்து வந்தனர்.பார்த்தியும் புகழும் அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தான்…

பெரும்பாலும் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்கள்…கல்லூரியை எட்டிப்பார்த்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்…

கொஞ்சம் வசதி படைத்தவர்கள் பிள்ளைகளை ராமநாதபுரத்துக்கோ…பரமக்குடிக்கோ..அனுப்பி விடுதியில் தங்கி படிக்க வைத்தார்கள்..

பெரும்பாலான பிள்ளைகள் அங்கிருக்கும் கவர்மென்ட் பள்ளிகளில் படிப்பவர்கள் தான்…

புறநகரில் இருந்த பள்ளியில் மூவரும்’ ஒண்ணாப்பு’ முதல் S.S.L.C.வரை சேர்ந்து படித்தது மட்டுமல்லை. சேர்ந்தே சாப்பிட்டு….சேர்ந்தே விளையாடி..!

இந்த இருபத்தைந்து வயதிலும் சேர்ந்தே இருப்பது என்றால் அவர்களுக்குள் இருக்கும் நட்பின் ஆழம்….?

இதில் வடிவேல் வாத்தியாருக்கும் முக்கிய பங்கு உண்டு. .

‘அதியமான் அரசு மேல்நிலைப்பள்ளி ‘ தலைமை ஆசிரியர்தான் வடிவேல் வாத்தியார்…

காக்கா.. குருவி கூட வருவதற்கு தயங்கும் காய்ந்த பூமி…

பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளை எதிர்பார்ப்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லைதான்…

வரும் பிள்ளைகளும் மதிய உணவை எதிர்பார்த்து வருகிறார்களே தவிர படிக்க வருகிறார்களா என்ற சந்தேகத்தை முற்றிலும் மாற்றியவர் இந்த வடிவேல் வாத்தியார்….

***

பார்த்திபன் வீட்டில் கொஞ்சம் நுழைந்து பார்ப்போம்….

பார்த்தியின் அப்பா மரமேறுபவர்..தென்னை..பனை ..மரம் ஏறுவதற்கு நல்ல பயிற்சி வேண்டும்.. அதுவும் பனை மரத்திலிருந்து கள் இறக்குவது சுலபமான வேலையில்லை…

குருத்துக்கு நடுவிலிருந்து பாளையை வெட்டி.. பானையில் இறுக்கமாய் கட்டி…சொட்டு.. சொட்டாய் விழும் கள்ளை இறக்க வேண்டும்…

‘ தேனெடுப்பவன் புறங்கையை நக்காமல் இருக்க மாட்டான்’. .
கள் இறக்குபவன் உள்ளே கள்ளை இறக்காமல் விட மாட்டான்…’

வேலை முடிந்ததும் நேராக வீட்டுக்கு வரமாட்டான்…
பாதி நாள் அவனைத் தேடி பார்த்திதான் தோட்டத்துக்கு வரவேண்டியிருக்கும்…

அப்பா என்ற வார்த்தையையே வெறுத்தான்…

அம்மா ஒரு இரண்டும் கெட்டான்.. ஒரு நாள் இருந்ததுபோல மறுநாள் இருக்க மாட்டாள்..!

ஒருநாள் எண்ணெய் தடவி பளபளவென வாரி முடித்த கொண்டையில் மல்லிகைச் சரமும்…கொசுவிக் கட்டிய கண்டாங்கி சேலையும்.. வாய் நிறைய வெற்றிலையும்.. மனம் நிறைய பிரியமுமாய்..

சுருசுருவென்று வீட்டு வேலைகளை முடித்துவிட்டு சம்புடம் நிறைய பணியாரம் சுட்டு வைத்து குழந்தைகளுக்காக காத்திருப்பாள்…

அவளுடைய இன்னொரு பக்கம் ….

வாராமல் விட்ட சிக்கு பிடித்த கூந்தல்…துவைத்து பலநாளான கந்தல் புடவை… கண்ணில் ஒரு மருட்சி…வாயில் சரமாரியாக வரும் வசவு வார்த்தைகள். காய்ந்து கிடக்கும் சட்டி..பானைகள்….!

அவளுக்கு பேய் பிடித்திருப்பதாய் அக்கம் பக்கத்தில் சொன்னதும் பார்த்திபனுக்கு வந்துவிடும் கோபம்…

அவளுடைய பெயரே எல்லோருக்கும் மறந்துபோய் விட்டதோ….?

‘ பிச்சி…பைத்தாரி பொம்பள..கோட்டி..இரண்டுங்கெட்டான்… கிறுக்கு சிறுக்கி…’

இதுபோன்ற வார்த்தைகளைப் கேட்டு பார்த்திபன் தனிமையில் நிறையவே அழுததுண்டு…

“யாராச்சும் அம்மாவ ஏசுனீக….கொண்டே போடுவேன்….”

சிலவேளைகளில் அம்மாவை இழுத்துக் கொண்டு கிணத்தடியில் நிறுத்தி பக்கெட் பக்கெட்டாய் தண்ணியை இறைத்து அழுக்குப் போக குளிப்பாட்டி விடுவான்..

அவனுக்கும் கீழே பிஞ்சு பிஞ்சாய் ஒரு தம்பியும் தங்கச்சியும்…

மூன்று வேளை சாப்பிட்டதாய் நினைவேயில்லை….

காலையில் தண்ணி விட்ட பழையதை கொஞ்சம் மோர் விட்டு…இரண்டு லோட்டாவில் நிரப்பி…. ‘ கடிச்சிக்கிற ‘ வெங்காயம் வைத்து தம்பி தங்கைக்கு குடுத்து விட்டு. ..

அவர்களை பாலவாடியில் விட்டுவிட்டு…அடுத்த வீட்டு ஆயாவைக் கூப்பிட்டு…

“ஆயா…நானு கெளம்பிட்டேன்…அம்மாவ….!”

“அடப் போ சாமி..நெதைக்கும் சொல்லணுமா…?”

அவசர அவசரமாய் பையைத் தூக்கிக் கொண்டு பள்ளிக்கூடத்துக்கு ஓடிப் போய்ச்சேரும் போது வடிவேல் வாத்தியார் ‘ தினம் ஒரு குறள் ‘ ஆரம்பித்திருப்பார்….

***

புகழேந்தியின் கதை சற்று வித்தியாசமானது….

புகழுக்கு எல்லாமே அம்மாதான்…அப்பா அவனுக்கு நாலு வயது இருக்கும்போதே வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு மனைவியைத் தனியே தவிக்க விட்டு போய்விட்டார்…

அன்றைக்கு ஆரம்பித்த உழைப்பு….அம்மா கையில் சல்லிக்காசு இல்லாமல் அவனை ஒரு ஆளாக்க பட்டபாடு.

காலையில் எழுந்திருந்து காட்டு வேலைக்கு போகவேண்டும்…. அம்மாவுக்கு உதவியாக எல்லா வேலைகளையும் செய்துவிட்டு பள்ளிக்கு போகும்போது மணி அடித்து வடிவேல் வாத்தியார் குரல் கணீரென்று கேட்கும்…

வழக்கம்போல் பார்த்திபன் வெளியே நின்றிருப்பான்…

“வாங்க… புகழேந்தி சார்…. உங்களுக்காகத்தான் காத்துகிட்டு இருக்கோம்… இரண்டு பேரும் உள்ள வாங்க….”

ஆரம்பத்தில் ரொம்ப பயமாக இருந்தது… உடம்பெல்லாம் நடுங்கியது…

வடிவேல் வாத்தியார் பயங்கர கோபக்காரர் என்று மாணவர்கள் சொல்லக்கேள்வி…

மேசைமேல் இருந்த பிரம்பும் அதை ஆமோதிப்பது போல இருந்தது…

புகழ் பார்த்தியை முன்னால் தள்ளி விட்டான்..

“டேய்…அவன ஏண்டா தள்ளி விடுத…. இரண்டு பேரும் ஒண்ணா வாங்க…. வலது கைய நீட்டுங்க..!

இரண்டுபேரும் கண்ணை மூடிக் கொண்டார்கள்…பிரம்படிக்காக காத்திருந்தார்கள்..!!

இரண்டு பேரின் கையையும் ஆதரவாகப் பிடித்து முகர்ந்து பார்த்தார் வாத்தியார்..

“ரண்டு பேரும் காலல ஒண்ணும் நாஷ்டா பண்ணல போல….! ஒரு வாசத்தையும் காணமே….!

இங்கனக்குள்ள எத்தன பேருலே காலைல வெறும் வகுத்தோட ஸ்கூலுக்கு வந்திருக்கீக….??? எந்திருச்சு நில்லுங்க….!

எட்டு பேரைத்தவிர ஒட்டு மொத்த வகுப்பும் எழுந்திருந்து நின்றது…

வடிவேல் வாத்தியாருக்கு கண்ணில் நீர் ததும்பி நின்றது…

“ஏண்டா….காஞ்ச வவுத்தோட பாடம் படிச்சா எப்பிடிடா மண்டைல ஏறும்…?

நாளைக்கு காலைல பள்ளிக்கூடத்துக்கு வாரதுக்கு முந்தி எங்க வீட்டுக்குப் போயி அம்மா குடுக்கிற கஞ்சிய குடிச்சிட்டு அப்புறமா படிக்க வரலாம்…. என்ன…?? வெளங்குதா. ?”

“ஏண்டா…பிரம்பால பின்னி பெடலெடுத்துடுவாருன்னு சொன்னாங்களே. .கஞ்சி ஊத்தறேங்கிறாரே….”

புகழுக்கும்..பார்த்திக்கும் ஒரே ஆச்சரியம். ..

கொஞ்சம் கொஞ்சமாய் மாணவர்களின் மனதில் இடம் பிடிக்க ஆரம்பித்தார் வடிவேல் சார்.

திங்கட்கிழமை அவருடைய வகுப்புக்காக எல்லோருக்கும் ஆர்வமாய் காத்திருப்பார்கள்..

‘ தினம் ஒரு குறள் ‘ எனும் தலைப்பில் ஒரு மாணவன் முன்வந்து ஒரு திருக்குறளை பார்க்காமல் சொல்ல வேண்டும்.. மற்ற மாணவர்கள்
விளக்கங்களைக் கொடுக்கலாம்…

நான்..நீ.. என்று போட்டி போட்டுக் கொண்டு அவர்கள் அளிக்கும் விளக்கம் சிலசமயம் ஆசிரியரையே வியப்பில் ஆழ்த்திவிடும்…!

அதே போல் மனக்கணக்கு பயிற்சி….

பார்த்தியைப் போல கணக்கு போடுபவர்கள் அந்த பள்ளியிலேயே கிடையாது…

கணக்கைத் தவிர மற்ற பாடங்களில் அவனால் கவனம் செலுத்த முடியவில்லை..

“பார்த்திபா..நீ கணக்க வச்சே பொழச்சிக்கிடலாம்.. கவலைப் படாதே..நீ நிச்சயம் பெரிய ஆளா வருவ..”

சொன்னபடியே இன்று அவன் அமெரிக்காவில் லட்ச லட்சமாய் சம்பாதிக்கும் ‘ investment banker ‘..

எவ்வளவுக்கெவ்வளவு அன்பாயிருப்பாரோ அவ்வளவு கண்டிப்பானவரும் கூட…

கடைசி பெஞ்சில் தூங்கும் மாணவனைப் பார்த்துவிட்டால் சாக்பீஸ் குறிதவறாமல் அவன் மீது துப்பாக்கி குண்டு மாதிரி துளைத்துவிடும்.

ஒரு முறை ஒரு மாணவன் தூக்க கலக்கத்தில் அந்த சாக்பீஸை வடிவேல் சார் மீதே திருப்பி எறிந்து விட்டான்..மற்ற
உதறல் எடுக்க ஆரம்பித்தது…

“காளியப்பா…இங்க வாலெ…எல்லாரும் ஒரு முற பலமா கை தட்டுங்க.. நீதான் நம்ம பள்ளியோட ஜாவலின் சாம்பியன்…வேணாப்பாருங்க.. இவன் நம்ப நாட்டுக்கு கப்பு வாங்கித் தரப்போறான்…”

ஒரு முறை சில மாணவர்கள் சேர்ந்து கொண்டு அவருடைய மூக்குப்பொடி டப்பியை மறைத்து வைக்க முடிவு செய்தனர்..

இம்மாதிரி செயல்கள் எல்லாம் நல்லதம்பிக்கு கைவந்த கலை…

அவர் சிலசமயங்களில் மதியம் சாப்பிட்டுவிட்டு லேசாக கண்ணசருவதுண்டு… அப்போது மேசையிலிருந்த பொடி டப்பாவை நல்லதம்பி எடுத்து ஒளித்து வைத்து விட்டான்..

“டேய்..மூக்குப்பொடி இல்லைனா வாத்தியார் கோவம் தலைக்கேறிடும்டா… அப்புறம் பிரம்பு தான்…”

சார் மூக்குப்பொடி டப்பாவைத் தேடுவது அவர்களுக்கெல்லாம் வேடிக்கையாக இருந்தது…

“எல்லோரும் எந்திரிச்சு நில்லுங்க…வரிசையா கைய நீட்டுங்க…”

பயந்து நடுங்கியபடி நின்றார்கள்..

ஒவ்வொரு கையாக முகர்ந்து பார்த்தார்..

நல்லதம்பி விரைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான்…

இன்னும் அவனுக்கு முன்னால் மூன்று..நாலு.. மாணவர்கள் இருக்கும்போதே அவர் நல்லதம்பி முன்னால் வந்து நின்று விட்டார்… அவன் சட்டைக் காலரைப் பிடித்தார்..

“டேய்.. பையில இருந்து எடுடா டப்பிய…”

பயத்தில் டிரவுசரெல்லாம் நனைந்து விட்டது..

“நல்லதம்பி.. நான் இன்னக்கி நேத்து பொடிபோடல.. எங்கிட்டு இருந்தாலும் எம்மூக்கு சொல்லிப்போடும்….

எடுத்தது தான் எடுத்த பைக்குள்ளாறவேயா வச்சிக்கிடுவாங்க… எட்டூருக்கு வாசம் தூக்குதே….சுத்த கேனயனா இருக்கியே….!

இவனுக்கு என்ன தண்டன குடுக்கலாம்….?”

ஆளாளுக்கு ஒன்று சொன்னார்கள்….

“இன்னையிலிருந்து வகுப்பு நடத்தும்போது பொடிடப்பியக் கையாலக்கூட தொடமாட்டேன்….

தண்டன எனக்குத் தான்…! தப்பு செஞ்சது நாந்தானே…. என்ன நல்லதம்பி….?”

“சார்..மன்னிச்சிடுங்க ‌….!”

நல்லதம்பி நெடுஞ்சாண்கிடையாய் அவர் காலில் விழுந்தான்….

எல்லோரையும் கண் கலங்க வைத்து விட்டார்..

எந்த மாணவனையும் குறைவாக மதித்ததே இல்லை….! எப்படியோ எல்லோரிடமும் ஒரு திறமையைக் கண்டு பிடித்து விடுவார்….

வருடம் ஒரு முறை எல்லா மாணவர்களுக்கும் அவர் வீட்டில் விருந்து….!!

அவருடைய மனைவி மிகவும் அன்பானவர்…

“பரமேஸ்வரி….பிள்ளைங்களுக்கு பாத்து பாத்து வெளம்பு….வயிறு முட்ட தின்னுபோட்டுதான் இங்கனக்குள்ள இருந்து போகமுடியும்….ஆமா…சொல்லிபுட்டேன். .”

“சார்..உங்க பிள்ளைங்க எங்க சார்…?”

ஒரு நிமிடம் வாத்தியார் முகம் கறுத்து..இறுகி விட்டது…

“நம்ப குமரேசனப் பத்தி கேக்குறீங்களா?? அவன் பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சுபுட்டு இப்பம் எம்புட்டு ஒசரத்தில இருக்கான் தெரியுமா….??”

“ஏன் சார்…எப்பம் வருவாரு….?பாக்கணமின்னிட்டு ஆவலா இருக்கு…!”

“பாக்கலாம்.. பாக்கலாம்….! ஈஸ்வரி… எல்லாத்துக்கும் பாயசம் ஊத்தி குடுத்தியா….??

இன்னும் வேணுமின்னா கேட்டு வாங்கி சாப்பிடுங்க.. நீங்க எல்லாருமே எங்களுக்கு குமரேசு மாதிரிதான்…!?”

செல்லதுரை , சாருக்கு கொஞ்சம் தூரத்து உறவு… அரையும் குறையுமாய்
தனக்குத் தெரிந்த சமாச்சாரங்களை புகழுக்கும்… பார்த்திக்கும் சொல்லுவான்…

அதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கும் என்று இருவருக்குமே தெரியும்…!

இறுதி ஆண்டு வரும் சமயத்தில் பார்த்தியின் அப்பா குடித்துவிட்டு மரமேறி கால் தவறி கீழே விழுந்துவிட்டார்.. ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் இருந்தும் பிழைக்க வில்லை…

வாத்தியார் குடுத்த ஊக்கத்தில் ஒரு மாதிரி தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெற்று விட்டான்..

ஆனால் மேற்கொண்டு படிக்க போவதில்லை என்று சொன்னது புகழுக்கும் செல்லதுரைக்கும் அதிர்ச்சியைக் குடுத்தது..

சாரிடம் போய் சொல்லிவிட்டார்கள்…

சார் பார்த்தியை வீட்டுக்கு அழைத்தார்..

“பார்த்திபா… உங்க வீட்டு நெலம எனக்கு நல்லா வெளங்குது…. நான் உம்மேல இருக்கிற அக்கறயில சொல்லுதேன்… கணக்கு பாடத்தில நூத்துக்கு நூறு வாங்கியிருக்க…

நான் உனக்கு சிபாரிசு பண்ணி காலேஜ் ஃபீஸ் இல்லாம சேத்த வைக்கிறேன்…உம்புத்தகம்… மேற்கொண்டு ஆற செலவெல்லாம் என்னுது….

உங்கம்மாவ நல்ல டாக்டரா பாத்து காட்டலாம்…படிச்சு திருப்பி குடு..சந்தோசமா ஏத்துகிறேன்…

ஆனா படிப்ப மட்டும் நிறுத்திப் போடாத அய்யா….!”

சொன்னபடியே செய்தார் வடிவேல் வாத்தியார்…. அவனும் தான்.

***

செல்லதுரையின் பாட்டனார் நல்ல வசதி படைத்தவர்.. ஏக்கர் கணக்கில் பூமி.. எல்லாம் உழைத்து சம்பாதித்தது..

ஆனால் பிள்ளையோ ஊதாரி..உட்கார்ந்தே தின்னால் கட்டி வைத்த சோறு எத்தனை நாளைக்கு…?

செல்லதுரை படித்துமுடிக்கும்போது அவரும் சொத்தையெல்லாம் காலி பண்ணிவிட்டார்..

அவனுக்கும் படிப்பு ஏறவில்லை… அப்பா போனபின் இருக்கும் கடனையெல்லாம் அடைத்தபின் மிஞ்சியது நாலு ஏக்கர் நிலம்தான்..

ஊரிலேயே தங்கி விவசாயத்தைப் பார்த்துக் கொண்டான்..

அவ்வப்போது வடிவேல் சாரைப் பார்த்து விவரம் சொல்வதும் அவன்தான்.

***

“டேய்…தொரை…வெளிநாட்டிலேயிருந்து உனக்கு ஃபோன்..எப்பவும் கூப்பிடுமே .. அந்த பிள்ளதான்… “

“டேய்..பார்த்தி…கேள்விப்பட்டியா..!”

“நடந்தது ஒண்ணு விடாம விவரமா சொல்லுடா…!”

“பார்த்தி.. ஒரு வாரமா சொகமில்லாம கெடந்தாரு.. நானும் அப்பப்போ போயி பாத்துகிட்டுத்தான் இருந்தேன்….பாவண்டா…நம்ம பேரெல்லாம் கூட நெனவு வச்சு கூப்பிடுவாரு…உன்னைய மறக்கவேயில்ல. அம்மாதான் என்னியக் கட்டிப்பிடிச்சு அழுவாங்க….”

“ஏண்டா.. அவுங்களுக்கு குமரேசன்னு பையன்….உசரத்தில இருக்காருன்னு சார் சொல்லுவாரே ..வரலியா…??”

“அந்த கொடுமைய ஏண்டா கேக்குற..ஈஸ்வரியம்மா எல்லாத்தையும் எங்கிட்ட விவரமா சொல்லி அழுதாங்க.

“செல்லதுரை..இப்ப நீ பாக்குற சாரு வேற..முந்தி இருந்தவரு வேற….அவருக்கு கோவம் வந்திச்சுன்னா யாரு எவருன்னு பாக்க மாட்டாரு..பள்ளிக்கோடத்துக்கு கொண்டு வராரில்ல… ஒரு பிரம்பு….அத அவர் கையில எடுத்து நீங்க பாத்ததில்ல..

குமரு வாங்கின அடிக்கு இந்நேரம் அந்த பிரம்பு முழுசா இருக்கிறதே அதிசயம்…

ஒரு நாளு குமரு எங்கியோ சுத்திப்போட்டு லேட்டா வந்தாப்பல.மக்கியா நாளு ஏதோ பரீட்சை போல…

பிரம்ப கைல வச்சுகிட்டு புலி உறுமுதமாறி உறுமிக்கிட்டு கெடந்தாரு…

“பிள்ளைக்கு இன்னிக்கு சோறு…தண்ணி…காட்டாத… மீறிச் செஞ்ச…ஆத்தாளும்..மவனும்… உள்ள காலு வைக்க விடமாட்டேன்… பையன் மேல சத்தியம்”

எனக்கு ஈரக்குலயெல்லாம் நடுங்கிடிச்சு..

எட்டு மணிபோல வந்தான் குமரு…

“டேய்..நில்லுடா..அங்கனயே….”

“அப்பா. ”

“வாயத் தொறந்த. .!”

பிரம்பால் விளாறி விட்டார் மனுசன்..கை.. காலெல்லாம் ரத்தம்..

‘விடுங்க..பிள்ள செத்துருவாங்க….’

‘சாவட்டும் விடு.. இப்படி ஒரு பிள்ள எனக்குத் தேவயில்ல. ஒனக்குத் தேவையின்னா நடங்க இரண்டுபேரும்..வீட்ட விட்டு….!”

திரும்பிப் பாக்காம போன பிள்ளதான்…ரயில்ல தலயக் குடுத்துட்டானே நாம் பெத்த ராசா..!

அன்னைக்குத் தொட்ட பெரம்புதான்….”

பார்த்தி…சாரு நம்பளயெல்லாமே குமரேசனாத்தான் பாத்திருக்காரு…. அப்புறம் மூணு நாள்தான் இருந்தாரு…

தூக்கத்திலேயே போயிட்டாரு….

பார்த்தி..பார்த்தி…அழுவுறயா….சாரோட அம்மாவ நாமதான் பாக்கணும்..அடுத்த முற வரும்போது நம்ப ஊருக்கு வராம போயிடாத..என்ன. ?”

எட்டாத உசரத்தில இருக்கான்னு சொல்வீங்களே சார்.. இப்பத்தான் புரியுது…. அவனப்பாக்கணும்னு தோணிப்போச்சா….?? சார்..உங்கள மறக்கமுடியுமா….?….

பார்த்திக்கு பேச்சே வரவில்லை. .தொண்டை அடைத்தது….

“பார்த்தி ….பார்த்தி. இருக்கியாடா….?”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *