பிரசாதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 7, 2019
பார்வையிட்டோர்: 20,490 
 

பிரபல முற்போக்கு எழுத்தாளர் எஸ். அகஸ்தியரின் 93 ஆவது (29.8.1926 – 08.12.1995) பிறந்தநாளை நினைவு கூரும் முகமாக அவர் எழுதிய சிறுகதை.

கண்டி நகரத்து மெயின் வீதியை அண்டிய கட்டுக்கலைத் தோட்டத்து மலைச்சாரலின் கீழே செங்குத்தாக விழுகிறது ஒரு பள்ளத்தாக்கு. அதை மருவி ஒரு மண்டபம்.

அதுதான் விநாயகமூர்த்தி எழுந்தருளிய திருக்கோயில்.

கிழக்கு முக வாசல்; மேற்கால் இடக் கை மடப்பள்ளி. ‘பெரிய புள்ளி’களின் பாத்தியத்தையும் அதற்கு உண்டு. ‘பக்கத்தேயுள்ள இந்து சபையின் கடாட்சத்தால்தான் அது உயிர் வாழ்கிறது’ என்று வெளியூரில் பேச்சு. வருஷந்தோறும் வருகிற விழாக்களுக்கு அதுவே நெய்வேத்திய ஸ்தலம். தனவான்களுக்கு நோய் நொடி கண்டால் அங்கு விசேஷ அன்னதானங்களும் உண்டு. அரிசிப் பஞ்சமிருந்தும் இப்படி அன்னதானங்களுக்கு ஈடுகொடுக்கிற சூத்திரம் விநாயக மூர்த்திக்கே வெளிச்சம். ஆனால், அவரோ வாய் விடாச்சாதி. கேட்பானேன்? பிச்சைப் பட்டாளங்களுக்குக் காலகதியில் அதுவோர் அன்ன சத்திரமாகவே விளங்கியது.
தூர ஒரு மேட்டுத் திடல். அந்த மேட்டுத் திடலில் ஏலவே இடம் பிடித்துக் ‘குடித்தனம்’ நடத்துகிற தோட்டிகளுடன், அன்று வெள்ளியும் வெறு வயிறுமாக வந்து சேர்ந்தாள் மூக்காயி.

அவன் வயிற்றுப் பிள்ளைக்காரி. புருஷன் தோட்டக் கூலி. புடி உயர்வு கேட்டு ‘ஸ்ரைக்’ செய்த வேளை பொலிஸ் படை நடத்திய துப்பாக்கி வேட்டையில் ஒரு காலை இழந்து போனான். கூலி கூட்டாத தோட்டத்துச் சொந்தக்காறன் கால் இழந்தவனைக் கட்டி அழுவானா? அவன் சீட்டுக் கிழித்து விட்டான். சங்கம் அவனுக்காகப் போராடியது. என்றாலும், சங்கத்துக்கும் தெரியாமல் எங்காவது கோயில் குளத்தை அண்டி வயிறு வளர்க்கலாம் என்ற தீர்மானத்துடன் குழந்தை குட்டிகளோடு நகரத்தைத் தேடி வந்தாயிற்று. கடைசியாக இந்த விநாயமூர்த்தி மேட்டுத்திடல்தான் கைகொடுத்தது.

இந்த புதுக் குடித்தனத்தைக் கண்ட சிறுவர்கள் ‘கிலு முலு’த்துக்கொண்டு சூழ்ந்து கொண்டார்கள். தங்கள் நிர்வாண கோலத்தைப் பற்றிய கூச்சம் அவர்களுக்குத் தட்டியபோதும், அந்தப் புதுத் தம்பதியை விடுப்புப் பார்க்கவே ஆசை, சிறுவர்களின் தாய்மார்கள் தங்கள் பணிவிடைகளை அப்படியே ஒதுக்கி வைத்து விட்டு வந்த தம்பதியோடு அளாவத் தொடங்கினார்கள்.

‘எங்கிட்டால வர்றீங்க?’ என்று கேட்டாள் ஆத்தா.

‘மடக்கும்பரத் தோட்டத்திலேந்து வரோம்’ என்றாள் மூக்காயி.

‘அம்மாடி. பெறுமாத வயித்துக்காரியாச்சே. அந்தால அக்கம் பக்கமா எடங் கெடைக்கலியா?’

‘ஒழைக்கிறவங்களே லயங்கள்லே அடைஞ்சிட்டிருக்கப்போ, ஒழைச்சுக்க வக்கில்லாத நம்பளுக்கு எடங்கெடைக்குங்களா?’
மூக்காயி கண்களை நாலு பக்கமும் சுழற்றினாள். அப்பொழுது அவள் மனசு ஆசுவாசப்பட்டது. ஏதோ ஒரு புதிர். விடைகாண ஆவல்.

‘ஆமா, நீங்கெல்லாம் இம்புட்டுப் புள்ள குட்டீங்களோட ஒண்ணா இருக்கிறீங்களே! இந்தால ‘வூடு வாசல்’னு ஒண்ணெயுங் காங்கலியே?’

சூழ்ந்து நின்ற சிறுவர்களும் தாய்மார்களும் மூக்காயி பேச்சைக் கேட்டுக் ‘கொல்’லென்று சிரித்தார்கள்.

மூக்காயிக்கு அது மிகவும் முழுசாட்டமாயிற்று அவன் எல்லாரையும் ஏற இறங்க வியந்து பார்த்ததாள்.

ஆத்தா மடிப் பெட்டியை எடுத்து, வெற்றிலைப் பாக்கைப் பொடியாக்கி, உள்ளங் கையில் வைத்து துவைத்து வாய்க்குள் திணித்த அலங்காரத்தை மூக்காயி நுணுக்கமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

வாயைக் குதப்பிவிட்டு, ஆத்தா சொன்னாள்:

‘வூடு கெடந்தாத்தானே, வாசலும் இருக்கும்?’

சிறுவர்கள் மறுபடியும் ஓகோவென்று கலகலத்துச் சிரித்தார்கள். ஆத்தா கடைவாயைப்; புறங்கையால் வழித்து விட்டு மூக்காயின் காலைச் சுரண்டிச் சொன்னாள்:

‘வூடு வாசல் கட்டிக்க வேணும்’னா மொதல்ல தமக்கின்னு ஒரு துண்டு நிலம் வோணும். இல்லேன்னா, சாமியாட்டம் எல்லாம் ஒன்ணென்னு நெனச்சு, அம்புடுற எடத்திலே குந்திக்க வேண்டியதுதான். அதுதான் நாம்பளும் சாமி குடிகொண்டாப்பல அவகூட எடம் புடிச்சிட்டோம்’

மூக்காயிக்கு இப்போதுதான் விஷயம் புரிந்தது. கதை இப்பிடிப் போய்க்கொண்டிருக்க, அப்போது ஆத்தாவின் வயசுப்பெண் வைத்த ஒரு பதற்றக் குரல் ‘கிண்’ணிட்டது.

‘எம்மாச்சி, சோத்துப் பொட்டலகத்தே நாயி துன்னுட்டுப் பூட்டுது இங்கிட்டு ஓடியாஞ்சி’

கதை வாக்கிலே ஓரமாய்க் கூடியிருக்க, சேர்த்து வைத்த சோற்றுப் பொட்டலத்தை தெரு நாய் வேலை பார்த்துவிட்டது என்ற சங்கதி அவள் யூகத்தில் சடாரென்று பிடிபட்டது. ஆவேசமாக உன்ன எழுந்து ஒரு கல்லை வறுகி எடுத்து அதன்மீது விட்டெறிந்தாள்.

நாய் ‘ங்காய், ங்காய்’ என்ற சிணுங்கலோடு எங்கோ ஓடிற்று. ஆத்தாளுக்கு ‘வெப்பிசாரம்’ அடங்கவில்லை. வசவு, வக்கனம், கும்மல் என்று பாக்கியில்லாமல் தன் பெண்ணை மொத்தினாள். அதனால் அவனைவிட அவளை மொத்தின இவளுக்குத்தான் இளைப்பெடுத்தது.

‘டியே ஆத்தா, ஒனக்கென்ன வெசராடி புடிச்சிட்டுது? ஒரு கவளச் சோத்துக்காக வயசுப் பொண்ணுக்கு என்னாட்டம் மோங்கிறே?’ என்று ஒரு கிழவி நச்சரித்துக் கத்தியதைக்கூட ஆத்தா தூக்கியெறிந்துவிட்டாள்.

‘பொழுது கருகியிட்டுதே இனி எங்கிட்டுத் திரியிறது? இன்னிக்குப் பட்டினி கெடந்து சாவடி மூதேவி’ என்று தொண்டை நரம்பு புடைக்கக் கத்திக் கொண்டே திரும்பினாள் ஆத்தா.

மழைத் தூறல் அப்போது சாடையாக விழுந்து கொண்டிருந்தது. உடனே ஒடுக்கோர முடுக்குகளில் ஒதுக்கிடம் பார்த்துக் கூனிக்கொண்டிருந்த குடித்தனங்களோடு மூக்காயி அணைந்துகொண்டே தனக்குள் வெந்து சினந்து புறு புறுத்தாள்:
‘சங்கத்து ஆளுங்கள வுட்டுப்புட்டு, சத்திரத்தைத் தேடிக்கிட்டு வந்ததாலதான் இந்த ஒத்தரிப்பு’

பெய்த மழை விடவில்லை. ‘சோ’வென்று இரைந்து வாரிக் கொட்டியது.

கோயில் மூலஸ்தானத்திற்குள்ளே நின்ற குருக்கள் சற்று வெளியே தலை நீட்டிப் பார்த்தார். வெளிவாசல் ‘கேற்’ திறந்;து கிடந்தது. பூஜைக்கு ஆயத்தமாகின்ற வேளை முடுகின்ற நேரம். குருக்களுக்குப் பயமாக வந்தது.

‘மூட்டை முடிச்சுகளையும் தூக்கிக்கிட்டு, இந்தச் சக்கிலியக் கூட்டம் உள்ளே வந்து கோயில் சத்திரத்தை அசிங்கமாக்கி விடுமே’ என்று ஊகித்தபோதே குருக்களின் முகம் அஷ்டகோணமாகியது. குடல் கும்மித்துப் புரட்டி வருகிற அழுந்தல் வாய்க்குள்ளே ஓங்காளித்துத் துப்பினார்.

அடுத்த கைங்கரியமாக ஓடிப்போய்க் குடை ஒன்றை எடுத்துப் பிடித்துக்கொண்டு சுணங்காமல் இரண்டு கவட்டுப் பாய்ச்சலில் சடாரென்று ஓடி வந்து ‘கேற்’றை அடித்துப் பூட்டினார், குருக்கள்.

பூட்டி விட்டு நடக்க, யாழ்ப்பாணத்து மாவிட்டபுரக் கந்தசாமி கோயில் விவகார நிகழ்ச்சிகள் நினைவில் தட்டி அவரைப் பெருமிதத்தில் ஆழ்த்தின. அந்தச் சுமையோடு உள்ளே குருக்கள் அன்னநடை பயின்றார்.

‘பூசாரி சாமி சத்திரத்து வாசலப் பூட்டிக்கிட்டுப் பூட்டாரு. இங்கின மனுஷர் போய்ச் சத்தை ஒதுங்கி நின்னா, கொரைஞ்சிபூடுமோ? நாசமாப் போறவங்க’ என்று ஒரு பாட்டம் திட்டித் தீர்த்தாள் ஒருத்தி.

சிறிது வேளைக்குள் மழை சாடையாக ஓய்ந்தது. மழையில் தோய்ந்துபோன சிறுவர்களின் அம்மண ஊற்றைச் சடலங்கள், ‘போஸ்ட் லைட்’ வெளிச்சத்தில் நாக்கிளிப் புழுவாட்டம் மினுங்கின… கூதலால் விறைத்த நாடிச் சொண்டுகள் பற்களொடு கிடு கிடுத்து உதறின. கூடு கட்டிய பறட்டைத் தலைகளை விரல்களால் கோதி விட்டுக்கொண்டே உடனே வீதியில் இறங்கினார்கள். இறங்கி ஒதுக்கான தெருவோரக் குப்பைச் சல்லடைகளைக் கிளறி நாலைந்து ஓலைக் கிடுகுகளையும் இலைச் சருகுகளையும் தேடி எடுத்துக்கொண்டார்கள்.

மழை கொட்டி நனைந்த கந்தல் துணிகளுக்குள்ளே தங்கள் தாய்மார்களின் கொடுகி விறைத்துப்போன சடலங்கள் ஈனித்து நடுங்குவதை அவர்கள் அறிவார்கள்.

தேடி எடுத்த குப்பைச் சருகுகளையும் கிடுகு ஓலைகளையும் ஒரு கன்னப்பாடாகக் குவித்தாகிவிட்டது.

‘ஆத்தாஞ்சி ஓங்கிட்ட நெருப்புப்பெட்டி உண்டுமா?’ என்று கேட்டான் ஒருவன்.

ஆத்தா ஓர் அடிச்சோணைப் பெட்டியை இடுக்கி எடுத்துப் பார்த்தான். மழைத் தண்ணீர் பொசிந்து அது எப்பொழுதோ ‘தெப்பி’ விட்டது.

‘அதுக்கென்னு மாடியூடா கேடக்கு, நம்பளவுட அதான் கரைஞ்சிட்டுது’ என்று சுத்தமாகச் சொன்னாள் ஆத்தா.

அவ்வளவுதான். பக்கத்துப் பவானி ஹோட்டலைத்தேடி ஒரு பாய்ச்சல்.

கடதாசித் துண்டு துணுக்களைக் கொண்டு வந்து வீதி ஓரத்தில் குவித்த ஓலைச் சருகுகளை வைத்து மூட்டிய சொற்ப நேரத்தில் அந்தக் குப்பைமேடு விளாசி எரிந்தது, சிறுவர்களுக்குக் குதூகலம். அவர்கள் மூட்டி அந்தச் சூளை நெருப்பின் செவ்வொளி நகர முனிசிபல் விளக்கு ஒளியையே தோற்கடித்துவிட்டது. எதையோ சாதித்துவிட்ட பெருமிதமும் ஆனந்த ஆரவாரமும் அவர்கள் முகங்களில் பிரகாசித்தன.

பசியைப்பற்றிய நினைவே அவர்களுக்கு அப்போது இல்லை. கொடுகி விறைத்துப்போன தாய்மார்களின் சடலங்களில் அனல் ஏற்ற அவர்களுக்கு ஓர் தவிப்பு.

‘என்னது கையைக் கட்டி நின்னு சும்மா பாத்துக்கிட்டிருக்கீங்க? துணி மணிங்கள வெக்கையில விரிச்சுப் பிடிச்சுக் காச்சுங்கடி’ என்று உரத்துச் சத்தம் வைத்தாள் ஆத்தா.

நாய் சோற்றுப் பொட்டலத்தைக் கொண்டுபோனபோது, தன் வயசுப் பெண்ணை வைது அடித்துக் கும்மியது. அவள் நினைவில் இப்போது தட்டிற்று.

‘மோட்டுத்தனமா வயசுப் புள்ளய அடிச்சுப்புட்டன், பாவி’ என்று வாய்ச்சொல்லாக வந்த அந்தகாரம், தாய்ச் சுரங்கத்தில் அவ்வேளை இரங்கி ஊற்றெடுத்தது.

‘ஏ புள்ள இங்கிட்டு வாடாம்மா, அங்கின சித்தே கவனிச்சிருந்தா அந்த மூதேவி நாயி வாய வச்சிருமா? போன சவத்தே விடு; வந்து நெருப்புக் காயி’

அவள் குமரி. அவளுக்கு வெளி;த்தில் வர நாணம், மேனியோடு ஒட்டியிருந்த ஒரே பாவாடையும் கந்தல், தொடைச் சதை தெரிகிற அளவு அதிலே கிழிசல். மேலும் ‘பப்ளிக் ரோட்’. குளிரைக் காட்டிலும் கூச்சம் அம்மிக் கொண்டது, பெண்ணுக்கு.
தாய்க்கு அந்த விஷயம் புரிந்துவிட்டது.

‘ஏ புள்ள வெறச்சுச் சாவாம பாவாடைச் சட்டைய உரி;ஞ்சிட்டு ஓரமா வச்ச படங்கைக் கட்டின்னு வந்து நெருப்பில் நில்லுடி’ என்று விசாரமாகக் குரல் வைத்து விட்டு மூக்காயியைப் பார்த்துச் சொன்னாள்:

‘எம்மாளு, நீனு எங்கூடச் சோமாந்து இருந்துக்கோ. வவுத்துப் புள்ள நக்கிரப்போவுது, ஒடம்பு வெறைச்சா புள்ளக்கி ஆவாது’
நெடுப்புச் சூளையை மறைத்துக்கொண்டு அந்தக் கூட்டமே நிரை கட்டிக் குவிந்துவிட்டது.

எல்லாரும் இரண்டு ஆளுக்கு ஒவ்வொரு துணியாக எடுத்து விரித்து வெக்கை காட்டி உலர்த்திக் கொண்டார்கள். சூளையைச் சுற்றிப் படபடத்துக்கொண்டிருந்த நெக்குத் துணிகளின் கிழிசல் ஓறைகளினூடாக, நெருப்புக்கொள்ளிகள் செக்கச் சிவந்த எரி நட்சட்திரங்கள் போல் மின்னிக் கூசின. மழைத் தூவானம் பனி மண்டலப் புரையாக அப்பொழுதும் புகைந்து கொண்டேயிருந்தது.

அப்பொழுது விநாயகர் கோயில் சத்திரத்தைத்தாண்டிக்கொண்டு திடீரென்று ஒரு கார் உறுமி வந்து அங்கே தரித்தது.

காரின் உறுமல் கேட்டபோதே சிறுவர்களின் கவனம் உடனே அங்கேதான் சென்றது. உற்றுப்பார்த்தார்கள்.

ஒரு துரை கழுத்தை உடம்போடு நீட்டிக்கொண்டு பயில்வான் மாதிரி மெல்ல இறங்கினார்.

அவரின் மனைவி நோணா, முன் சீட்டிலே வலு உல்லாசமாக ஊமாண்டி போல் உட்கார்ந்திருந்தா. அவவை அவர் கவனிக்கவில்லை.

என்றாலும் காரிலிருந்து யார் இறங்கியது என்பதைச் சிறுவர்கள் சுளுவாகத் தெரிந்துகொண்டார்கள்.

ஒரே குஷி; பெரிய கொம்மாளம்;

‘டே, வாத்தியாத் தொரே வந்துட்டாருடர் ஓடியாங்கடா.’

‘டேய் இது அவரில்லே, நம்ம இந்து சாமிச் சவெத் தலைவருடர் ஓடியாங்கடா’

எல்லாச் சிறுவர்களும் தாங்கள் ஏந்திப் பிடிச்சிருந்த கந்தல் துணிகளையே உதறி எறிந்துவிட்டு செம்மறிப் புருவைகளைப் போல் அள்ளுப்பட்டு ஒரு சேர நிர்வாணிகளாக ஓடி வருகிற கோலத்தை, காருக்குள்ளே இருந்து நோணா கண்ணாடிக்கு ஓடாகப் பவ்வியமாகப் பார்த்தபோது, அவமுகம் தூஷணித்த வாய் மாதிரிக் கோணிற்று.

நெஞ்சுச் சட்டைக்குள் கை ஓட்டி திணித்து வைத்த லேஞ்சியை எடுத்தா, எடுத்து உடனே மூக்குச் சோணைத்தை அப்பிக் கொண்டா. மனசு அருவருக்க, உடம்பு அருக்குளித்துக் கொண்டது.

அவவைக் கண்டதே மறந்துபோன பசி அப்போது தான் அவர்களுக்கு மறுபடி தலை தூக்கிற்று.

சடாரென்று அவர்கள் காரைச் சூழ்ந்து விட்டார்கள். கண்கள் அவவையே தோண்டின.

உலர்ந்த பாதி உடுக்காத சாடையாக அவர்கள் தாய்மார்களும் அள்ளிப் பிடித்தபடி அந்தக் காரைத் தேடிப் படை எடுத்துக்கொண்டிருந்தார்கள்.

ஷண நேரத்தில் நோணாவுக்கு ஏதோ சிணி அடிப்பது போல் நாறிற்று. ஓங்காளம் அடிவயிற்றைக் கும்மிற்று. கண்ணாடியை நீக்கி வெளியே ‘குவாக்’கென்று குமட்டித் துப்பினா நோணா.

அது அந்த வயிற்றுப் பிள்ளைத்தாச்சி மூக்காயின் வயிற்றுச் சள்ளையில்தான் சொல்லி வைத்தமாதிரி ‘தொழுப்’பென்று பட்டது.
இதைக் கவனித்த ஆத்தாவுக்குக் கோபம் தாங்கமுடியவில்லை. பீரிட்டுக் கொண்டு வந்தது.

‘என்னங்க நோணும்ம கண்ணு கிண்ணு கெட்டுப் பூட்டுதுங்களா? அவவே வவுத்துப்புள்ளக்காரி, அதும்மேலே எச்சியத் துப்பிட்டீங்களே, அக்கம் பார்த்துத் துப்பிக்க வேணாமா?’

‘எடே, சக்கிலிச்சியின்ர வாய்க்கு றாங்கியான கதையைப் பாரன்?’ என்று நோணாவின் மனசு பிரளயித்தது.

குற்ற உணர்விலும் பார்க்க நாண உணர்ச்சிதான் நோணாவின் நெஞ்சை அப்போது துருத்தியது.

‘சரி, சரி; ‘சொறி சொறி;’

‘சொறியா? அப்புடின்னா, அதையாச்சும் தாங்களேன்!’ என்று கேட்டுக் கை நீட்டுகிற பாவனையில் ஆவலோடு கண்ணெறிந்து பார்த்தான் மூக்காயி.

திமிறி வந்த சிரிப்பை நோணா அடக்கிக் கொண்டு, திருப்பிச் சொன்னா:

‘ஐயையோ, அது தாறதில்லை. சொறி;; மன்னிச்சுக்கோ?’

‘ப்பூ, இம்புட்டுத்தானா? பொண்ணாப் பொறந்தவங்கற எரக்கங்கூட ஒங்ககிட்ட இல்ல் மன்னிச்சுடுங்கிறீங்களே?’ என்று எரிந்தாள் ஆத்தா.

‘நீங்க சும்மா இருங்க ஆத்த, நோனாம்மா தெரியாமச் செஞ்சிட்டுது. நாம மட்டுமா வுவுத்துப் புள்ளக்காரி? நோணாம்மாவும்தான் வயித்தில உண்டுமாயிருக்கிறா. அதுதான் அப்படி ஓங்காளிச்சிருக்கா. நாம பெத்த பொண்ணுங்க வயித்துக்கு ஒண்ணென்னா மசங்கி ஓங்காளிக்கிறதில்லையா?’

மூக்காயி எடுத்து விளக்க, ஆத்தாவுக்கு இரக்கம் பிறந்தது.

‘எஹே அம்மாடி, அதெ அப்பவே சொன்னா என்ன கொறைஞ்சிடும்?’

நோணா ’களுக்’கென்று சிரித்தா.

அவவுக்கு வயிற்றில் இல்லை வாயிலும் இல்லை. மனசிலேதான் அந்தக் குமட்டல் என்ற சங்கதி கேவலம் இந்தச் ‘சக்கிலிச்சி’களுக்குத் தெரியாது.

இந்த நல்ல தருணம் பார்த்து ஒரு சிறுமி இடது உள்ளங் கையால் அடி வயிற்றுச் சோணத்தை மறைத்துக் கொண்டு, வலது கையை நீட்டியவாறு கேவுந் தொனியில் கேட்டாள்:

‘நோணாம்மா, காசு தாங்கோ?’

நோணா அசையவில்லை. அவ மனசு ‘இங்கிலீஷ் டமிலில்’ ஆவேசித்துப் புழுங்கிற்று.

‘சிக்கே, ப்ளடி டேட்டி லோ காஸ்ற்ஸ், எளிய சக்லியச் சனியங்கள். மிருகங்களாட்டம் உரிஞ்சு விட்டுக்கொண்டு நிக்குதுகள்’
அதே விறுக்கத்தில் நின்ற அடுத்த பையன் தொடங்கினான்:

‘நோணா, பசிக்குது நோணா. காசு தாங்கோ?’

அவ நெஞ்சு பொரிந்து கமறியது.

‘சனியங்கள், ஆனவாக்கில குளிச்சு முழுகிறேல்ல. மேல் முழுக்க ஏழு பறை ஊத்தை, புழுத்த நாத்தம்’

இந்தக் கூத்துக்குள்ளே இரண்டு கரங்களையும் கூப்பிக் கும்பிட்டபடி ஒரு சிறுவன் குரல் வைத்தான்:

‘பசிக்குது நோணா, தேத்தண்ணி குடிக்கச் சல்லி தாங்கோ’

அவர்கள் கிட்ட நெருங்க, அவர்களிடம் வீசிய நாற்றம் நோணாவைச் சீண்டியது. மனசு ‘கடுகடு’த்தது.

‘மூதேவியளின்ர தேகத்தில கிடக்கிற ஊத்தை, பினாட்டுப்போல அப்பிப்போய்க் கிடக்கு.’

இந்தக் கரைச்சலுக்குள்ளே அந்தச் ‘சக்கிலயச் சனியன்’களில் இரண்டு ஏககாலத்தில் ஓலம் வைத்துக் கேட்டன:

‘நோணாம்மா, புண்ணியங் கெடைக்கும், ஏதும் தாங்கம்மா?’

இப்பொழுது நோணாவுக்குக் கோபம் வந்து விட்டது.

‘செத்த சவங்களாட்டம் சனியங்கட தேகம் நாறுது. இந்தச் சக்கிலியச் சாதியள் ஆடு மாடுகளைப்போல நெடுகலும் பெத்துக் கொட்டுறதுதான் வேலை’

‘நோணாம்மா ஏதும் தாங்கம்மா?’

‘நோணாம்மா பசிக்குதம்மா?’

எல்லைமீற நெருடி எழுகின்ற நச்சரிப்புகள் அவவுடைய நெஞ்சினை அரிக்கத் தொடங்கின.

நோணாவால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அவுக்கென்று ‘ஹான்ட்பாக்’கைத் திறந்து புதிய ஐம்பது ரூபாய் நோட்டுக்களை நீவி இடுக்கி எடுத்த ஒரு ரூபாய்த்தாள், அவசரத்தில் தவண்டையடித்துப் பதறியது.

அதை அவ அவர்களுக்குக் கொடுத்தாவோ, வீசினாவோ அல்லது திருப்பி வைத்தாவோ நோணாவுக்கே நினைவில்லை.

மௌனத்தின் அழலைக் கலைத்துக் கொண்டு அவரைப் பார்த்து அவ வைத்த குரல்மட்டும் ‘கீச்’சிட்டு ஒலித்தது:

‘என்ன செய்யிறியள்? பெருந் தொல்லையாக் கிடக்கு. வாருங்கோ, சுறுக்காப் போவம்’

மனைவியின் குரல் ‘கடிந்து’ அத்துமீறி வருகிறதை அவர் உணர்ந்தார். இறங்கி வந்து பிரசாதம் வாங்கவில்லையே என்று ஒரு யோசனை. அதை வினவாமலே அவர் வாங்காத பாதி வாங்கின மீதிப் பிரசாதத்துடன் அவசரமாக வந்து காரில் ஏறிக்கொண்டார்.

‘தொரே பிரசாதம்’

‘பிரசாதம் தாங்க தொரே’

‘தொரே தொரே’

சிறுவர்களின் குரல்கள் ஏகோபித்து மறுபடியும் அமர்க்களம் பண்ணத் தொடங்கின.

ஒரு கவளம் பிரசாதத்தை, அகப்பட்ட ஏதோ ஒரு கையில் எடுத்து வைத்துவிட்டு, சிரித்தவண்ணம் அவர் திருவாய் மலர்ந்தருளினார்:

‘சத்தம் போடாமல் நேரே கோயிலுக்குள்ள போய்ப் பிரசாதம் கேளுங்கோ, குருக்களும் தருவார்’

அவர்கள் மின்சாரம் அடித்த மாதிரி வாயடைத்துப் போய் நின்றார்கள்.

‘நீங்கள் அதுகளுக்கு உபதேசம் பண்ணனது காணும்; சுறுக்காக் காரை எடுங்கோ?’ என்று நச்சரித்து முணுமுணுத்தா நோணா.
கார் இரைந்துகொண்டு பேராதனை வீதியில் இறங்கியது.

நோணாவுக்கு அப்போதுதான் புதிதாக ஒரு சந்தேகம் கிளம்பியது.

அதுசரி, ஊரிலயெண்டால் கோயிலுக்குள்ள எளிய சாதியளை அண்டவே விடமாட்டம். நீங்களெண்டா இதுகளைக் கோயிலுக்குள்ள போய் பிரசாதம் வாங்குங்கோவெண்டு சொல்றீங்களே; இங்கே சக்கிலியச் சாதியளைக் கோயிலுக்குள்ள விடுவினமோ?’

‘இஞ்ச அதை இடத்துக்குத் தக்கமாதிரிச் செய்து கொள்ளுவினம்’

‘அப்ப, இந்தச் சக்கிலியரை இஞ்சை விடுவினமோ?’

‘இல்லை, விடாயினம்; விடக்கூடாது’

‘அப்படியெண்டால் கோயிலுக்குள்ள போய்ப்பிரசாதம் வாங்குங்கோ வெண்டு ஏன் சொன்னனீங்கள்?’

அவர் சிரித்துவிட்டுச் சொன்னார்:

‘இதுகளைக் குருக்கள் கடைசிவரை உள்ளே விடமாட்டினமென்டு வடிவாத் தெரிஞ்சபடியால்தான் வெளியே வந்து உள்ளே போங்கோவெண்டு சொன்னனான்’

நோணாவின் சந்தேகம் தீர்ந்தது. அவ இப்போதுதான் வாய் விரியச் சிரித்தா.

அப்பொழுது இந்து சபை மண்டபத்தைத் தாண்டிக் கொண்டிருந்தது கார்.

சிறுவர்கள் ஆவேசம் பொங்க, அந்த இந்து சபைத் தர்மகர்த்தாவின் காரை ‘முறைத்’துப் பார்த்துக்கொண்டே நின்றார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *