கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 8, 2021
பார்வையிட்டோர்: 3,268 
 

“கிட்டத்தட்ட அஸ்திவாரத்திற்குத் தேவையான எல்லாப் பொருட்களும் வந்திருச்சு.கடைக்காலுக்கு பள்ளம் தோண்டியாச்சு. நாளைக்கு முதலமைச்சர் வந்தவுடனே, பூஜை போட்டு, கடைக்கால் மட்டும்தானே ஊனனும். அப்பறம் என்ன பிரச்சினை ஆகும்னு சொல்ல வறீங்க”

“அதெல்லாம் இருக்கட்டும் இன்ஜினியர் சார். இந்த மாதிரி பெரிய வேலையெல்லாம் செய்யும்போது பலி கொடுப்பது வழக்கம். அதுவும் உயிர்பலி கொடுத்தால்தான் பாலம் எல்லாம் உறுதியாக இருக்கும்னு நாங்க நம்புறோம்”

“அதுக்கு நீ தரமான பொருட்களை வச்சு கட்டனும்” என நக்கலாக சொன்னார் இன்ஜினியர் சுரேஷ்.

“அட, இந்த மாதிரி பொருட்களை வச்சு தான் நிறைய மேம்பாலங்கள் கட்டிருக்கோம்.ஆனா இதுவரைக்கும் நாங்க கட்டின எல்லா பாலமும், ஒரு சின்ன கீறல் கூட விழாமல் ஸ்ட்ராங்கா இருக்குதுன்னா, அதற்கு காரணம் கட்டுமான நுணுக்கங்கள் மட்டுமில்ல. உயிர் பலியும் தான்னு” கோபப்படாம பதில் சொன்னாரு காண்ட்ராக்டர் கணேஷ்.

“அட உயிர்பலி கொடுக்கணும்னா, சந்தையில ரெண்டு ஆடு வாங்கிட்டு வா. உயிர் பலி குடுத்துடலாம்”

“அட எந்த காலத்துல நீங்க இருக்கீங்க. உயிர்பலி நாங்கள் சொன்னது ஆட்டையோ, மாட்டையோ இல்லை. நரபலி”

“நரபலியா!” என்று தனது புருவத்தை உயர்த்தியவாறு காண்ட்ராக்டரை ஏறெடுத்து பார்த்தார் இன்ஜினியர். “அநியாயமா இருக்கேப்பா!” என பதட்டத்துடன் கேட்டார்.

“ஒரு உயிரைக் கொடுத்தா தான் பின்னாடி பல உசுரு போகாமல் காப்பாற்ற முடியும். யோசிச்சு பாருங்க! புராணத்திலே வருமே.!”

“என்ன வரும்”

“குருஷேத்திர போர்ல தர்மம் ஜெயிக்கனும்னு அரவானை நரபலி குடுப்பாங்க.அப்படி செய்யவும்தான் பாண்டவர்கள் போர்ல வெற்றி பெற்றாங்க.அதுமாதிரி தான் நாமலும் நரபலி குடுத்தா பாலம் உறுதியா இருக்கும்”

“அதெல்லாம் நடைமுறைக்கு சரிபட்டு வருமா?”

“சார் நீங்க எங்க வேணாலும் போய் பாருங்க. அதுல யாராவது ஒருத்தரை பலி குடுத்திருப்பாங்க.இல்ல ‘இறந்து போயிட்டாங்கன்னு’ நன்றி சொல்லி கல்வெட்டு இருக்கும். அவங்க விபத்துல செத்துருப்பாங்க. இல்லை வேணும்னே சாகடிக்கப்பட்டுருப்பாங்க. ‘கலவை சரியா இருக்கான்னு’ போய் பாருங்க. ‘சிமெண்ட் சரியா பூசியிருக்கான்னு’ போய் பாருங்க அப்படின்னு சொல்லி தெரியாமல் தள்ளிவிட்டுருவாங்க.இப்படியும் பலி குடுக்கலாம்”

கொஞ்ச நேரம் யோசித்த இன்ஜினியர்,

“அது சரி இப்ப இங்கே யாரப்பா பலி செய்யப் போறீங்க ? நரபலி கொடுக்கறதுக்கு வெளியூரிலிருந்து ஆளைக் கூட்டிட்டு வரணுமா ? தான் உயிரை கொடுப்பதற்கு யார் இங்க இருக்கா ? அப்படி தெரியாமல் தள்ளிவிட்டாலும், நாளைக்கு அதுவே பெரிய பிரச்சனையாகிட போது”

“அத பத்தி கவலை படாதீங்க! நரபலி கொடுக்க நீங்க உறுதி மட்டும் கொடுங்க. அதெல்லாம் நாங்க பாத்துக்குறோம்”

“சரி,எனக்கு பிரச்சினை வராம முடிங்கன்னு” சொல்லிட்டு கிளம்புனாரு இன்ஜினியர்.

“நான் பாத்துக்கிறேன்னு” சந்தோஷமா சொல்லிட்டு, சாலைக்கு அருகில் இருந்த கிராமத்தை பார்த்து கொண்டிருந்தார்.

ரயில்வே மேம்பால பணிக்காக மறுநாள் முதல்வர் வந்து அடிக்கல் நட்டு தொடக்கி சென்றார். பிறகு மேம்பால பணிகள் மும்மரமாக தொடங்கின. நகரின் முக்கிய வழிதடத்தில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம்.இன்னும் சில மாதங்களில் தேர்தல் என்பதால் ‘பால வேலைகளை விரைந்து முடிக்க வேண்டும்’ என அரசு உத்தரவிட்டுள்ளது.

நகரின் அருகில் இருந்த கிராமத்து மக்கள், பல பேர் இந்த பால வேலைக்காக வந்து தினக்கூலியாக வேலை பார்த்து சென்றனர்.ஒரு மாத பணிகள் நிறைவடைந்தன.

இரண்டு நாட்களாக வேலைக்கு வராத இளவரசியை,திட்டியவாறு கணவருக்கு காப்பி போட்டுக் கொடுத்தார் மனைவி வேணி.

பால வேலைகளால் ரொம்ப டென்ஷனில் இருந்தார் இன்ஜினியர் சுரேஷ்.

“இந்த இளவரசி வேலைக்கு வரவே இல்ல.அழுக்கு துணி நிறைய சேந்துக்கிச்சு.சம்பளத்தையும் வாங்கிகிட்டு இப்புடி வேலைக்கு வராம இருக்காளே!”

“ஏன்டீ! நீயே வீட்ல துவைக்க,சமைக்க வேண்டியதுதானே”

“நான் ஏன் வேல பாக்கனும். அதுக்குத்தானே சம்பளத்துக்கு வேலையால வச்சிருக்கேன். நீங்க லட்ச கணக்குல சம்பாதிக்கிறீங்க. பெரிய இன்ஜினியர் வேற. வீட்டு வேலை செய்கிறதுக்கு ஒரு நல்ல வேலக்காரிய வக்ககூடாதான்னு” கணவரை வேணி திட்டிட்டு இருக்குறப்பவே,அழுதுக்கிட்டே இளவரசி வந்தாள்.

அவளை பார்த்தவுடனே! “ரொம்ப கொழுப்புதான் உனக்கு. வேலக்கி வரலன்னா ‘வரலன்னு’ சொல்லு. வேற ஆள நான் வேலக்கி வச்சுக்குவேன்னு” திட்டினாள்.

“அம்மா எம் புள்ளய ரெண்டு நாளா காணோம். எங்க போனான்னு தெரியலை. அதான் தேடிட்டு இருந்தேன் அதனாலதான் வர முடியலன்னு” அழுதுகிட்டே பதில் சொன்னாள் இளவரசி.

இளவரசியை கவனித்த சுரேஷ்,

“அந்த மெண்டல் பயலா?” என்றார்.

கண்ணீர் வடித்தபடியே,”ஆமான்னு” தலையாட்டினார்.

“சரி இப்ப எதுக்கு வந்த” என்றாள் வேணி.

“இன்ஜினியர் ஐய்யாவ பார்த்து உதவி கேட்கலாமான்னு வந்தேன்” என்றாள் இளவரசி.

“என்ன உதவி”

“போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுக்க நீங்க கொஞ்சம் உதவி பண்ணுங்க சார். நீங்க சொல்லி என் பிள்ளையை தேட சொல்லுங்கய்யா”

“மூள வளர்ச்சி இல்லாத பய,எங்கயோ போயிட்டான்.தொலஞ்சான்னு விடு.அவன எங்கன்னு போய் தேட”

அவரின் வார்த்தையால் கோப்பட்டாள்.’என் மகன், எனக்கு விலைமதிப்பில்லாத பொக்கிஷம் தான்.பண மமதையில, அதிகார போதையில இருக்குற உனக்கெல்லாம் எப்படி என் வேதனை புரியும்” என்று நினைத்தால்,ஆனாலும் என்ன செய்ய முடியும் உதவி கேட்டு வந்திருப்பதால் எந்த உணர்வையும் காட்டிக் கொள்ளாமல் இருந்தாள் இளவரசி.

“சரி நான் உதவி செய்றேன் போன் பண்ணி போலீஸ் கண்ணன்கிட்ட நான் சொல்றேன். நீ போய் கம்ப்ளெய்ண்ட் லெட்டர் எழுதி குடு,மத்தது அவங்க கண்டுபிடிச்சு கொடுத்துடுவாங்க” என்றார்.

“சரி” என்று கண்ணீரை துடைத்து கொண்டாள்.

“அப்படியே இந்த அழுக்கு துணிமணிகள எல்லாம் துவைச்சிட்டு, போயிரு” என்றாள் வேணி.

மௌனமாக இருவரையும் பார்த்த இளவரசி “சரின்னு” மண்டைய ஆட்டிக்கிட்டு வீட்டுக்குள்ள போய் துணி மூட்டை எல்லாத்தையும் எடுத்து போட்டு துவைத்தால் பிறகு போலீஸ் ஸ்டேஷன் போய் இன்ஸ்பெக்டர் கண்ணனை பார்த்தாள்.

“இன்ஜினியர் சார்,சொன்னாரு.நீ அவர் வீட்டுல வேல பாக்குறீயா ?”என்றார் கண்ணன்.

“ஆமாங்க” என்றாள் இளவரசி.

“சரி,உன் புள்ள பேரு.அவன் அடையாளம் சொல்லு.அப்படியே, போட்டோ எல்லாம் குடு” என்றார்.

வடியும் கண்ணீரை துடைத்தபடியே,”அவன் பேரு கோபால கிருஷ்ணன்” என்றாள்.

“ம்…அவன் வயசு”

“14”

“எப்ப காணம போனான்”

“ரெண்டு நாள் முன்னாடிங்க”

“என்ன படிக்கிறான்”

“படிக்கல.அவன் புத்தி சுவாதினம் இல்லாதவன்”

ஏறெடுத்து பார்த்த கண்ணன், “மெண்டல் பயல எங்கன்னு போய் தேடுறது.யாராவது புடிச்சிட்டு போய் உறுப்புகள திருடிட்டு,கொன்னு போட்டுருவானுங்க.இல்லன்னா, கண்ணை நொண்டிவிட்டு மும்பை பக்கம் ரோட்டுல பிச்சை எடுக்க விடுவானுங்க” என்றார்.

“அய்யோ,அய்யோன்னு” அடித்து அழ ஆரம்பித்தாள்.

“இந்தாம்மா…..அழுகைய நிப்பாட்டு,பய போட்டா இருக்கா ?”

“இருக்குன்னு” பாஸ்போட் அளவு போட்டோவை எடுத்து கொடுத்தால்.

“ம் சரி,தகவல் கிடைச்சா,சொல்றேன் போ” என்று அலட்சியமாக சொன்னார்.

“சார்,இந்த ஒரு போட்டா தான் இருக்கு”

“அதுக்கு என்ன இப்ப ?”

அவரின் மிரட்டலான பேச்சு.மேற்கொண்டு அவரிடம் பேசாமல் அங்கிருந்து புறப்பட்டாள்.

மகனின் புகைப்படமாக ஒரு சின்ன போட்டோ தான் அவளிடம் இருந்தது. தன்னை மகனை காட்டி, விசாரிக்க கூட வேற போட்டோ இல்லை.தனக்கான ஓரே ஆறுதல் தன் மகன்தான்.உணவு கூட உண்ணாமல்,’என் மகன் சாப்படானோ!,இல்லையோன்னு” மனம் தவித்தபடி தேடி அலைந்தாள்.

அக்கம்பக்கத்தில் உள்ள சிறுவர்களிடம் விசாரித்தாள் இளவரசி.

“கடைசியா,ரெண்டு நாள் முன்னாடி,அந்த புது பாலம் கட்டுற இடத்துல கிருஷ்ணாவ பார்த்தேன்” என்றான் ஒரு சிறுவன்.

பால வேலை நடக்குற இடத்தை நோக்கி ஓடினாள்.

“என் குழந்தைய பார்த்தீங்களா ?, என் பிள்ளைய பார்த்தீங்களா ? இந்த பக்கம் வந்தானா ?” என்று பால வேலை நடக்கும் இடத்தில் கேட்டாள்.

“இல்லம்மா நாங்க யாரும் பாக்கல” என்று தான் அங்க இருந்தவங்க பதில் சொன்னாங்க.

“ரெண்டு நாளைக்கு முன்னாடி, இந்த பக்கம் தான் விளையாண்டாங்கன்னு பசங்க எல்லாம் சொன்னாங்க. பார்த்தீங்களா?, ஏங்க நீங்க பாத்தீங்களா? என்று பித்துபிடித்தவள் மாதிரி விசாரித்தாள். “இந்தாம்மா பாலம் வேலை நடந்துட்டு இருக்கு. அந்தப் பக்கமா போமா, கல்லு உன் தலையில விழுகப்போது, அந்த பக்கமா போ” என்று அங்கு வந்த காண்ட்ராக்டர் கணேஷ் திட்டினார்.

“இங்க யாரும் வரலையா? என்று அழுதபடியே சென்றாள்.

“எங்கயாவது பயல விடுறது.அப்பறம் இங்க வந்து கத்துறதுன்னு” முனுமுனுத்தபடியே சென்றார் கணேஷ்.

பால வேலைகளை மேற்பார்வையிட வந்த இன்ஜினியர் சுரேஷ்.சுற்றி வேலைகளை எல்லாம் கவனித்துவிட்டு,கணேஷை அழைத்து பேசினார்.

“மாற்று வழியை ஏற்பாடு பண்ணிட்டீங்களா?” என்றார்.

“அதெல்லாம் பண்ணியாச்சு” என்றார் கணேஷ்.

“சரி ஏதோ பலிகொடுக்க, ஒரு நல்ல நாள் பார்த்துட்டு இருந்தீங்களே! முடிஞ்சுதா ?”

“அதெல்லாம் சிறப்பா ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் நெறஞ்ச அமாவாசையில முடிஞ்சது”

“யார் பலிக்கு கிடைச்சா ?”

“ஒரு கிறுக்கு பய சுத்திகிட்டு இருந்தான். அவன புடிச்சு நைட்டு பன்னெண்டு மணிக்கு பூஜை போட்டு, பலி கொடுத்தாச்சு. அதுல தான் அந்த கான்கிரீட் ரெடி ஆயிட்டு இருக்கு” என்றார்.

“கிறுக்கனா ?, பார்க்க எப்படி இருந்தான்னு” சந்தேகமாக கேட்டார் சுரேஷ்.

“சின்ன பையங்க. ஒரு 13, 14 வயசுதான் இருக்கும்” என்றார் கணேஷ்.

உடனே தன் மகனைக் காணமென்று அழுத இளவரசி ஞாபகம், அவருக்கு வந்தது. “அடப்பாவிங்களா” என்று மனசுக்குள் நினைத்து கொண்டு அங்கிருந்து சென்றார்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.ஆனாலும் இரண்டு வருடங்களுக்குப் பிறகுதான் பாலம் உருவானது.அதில் போக்குவரத்தும் ஏற்பட்டது.ஆனால் என்றாவது ‘தன் மகன் கிடைப்பான்’ என்று அந்தப் பாலத்தில் பயணிப்பவர்களை நிறுத்தி,’என் புள்ளய பாத்தீங்களா?’ என்று அந்த பகுதியிலே ஒவ்வொருவரையாக கேட்டுக்கொண்டிருந்தாள் இளவரசி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *