கைமேல் கூலி…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 2, 2021
பார்வையிட்டோர்: 2,414 
 

“மாரியம்மா! வீட்டுக்குள்ளாற யாராச்சும் இருக்கீங்களா…?”

உரத்த குரலுக்கு சொந்தக்காரன் வெள்ளியங்கிரி….! மாரப்ப கவுண்டரின் தோட்டக்காரன்…

“உள்ளேயிருந்து கோணி படுதாவை விலக்கிவிட்டு வந்தாள் மாரியம்மா…வயிறு லேசாக மேடிட்டிருந்தது…!”

“என்னங்கண்ணா…. பொழுது இன்னும் விடியல…அதுக்குள்ளாற?”

“வெங்காயம் தோண்டணும் பிள்ள… ஆள் குறையா நிக்குது… இன்னும் இரண்டு பேர் இருந்தா சரியா இருக்கும்…உன்னிய கூப்பிட சங்கட்டமாத்தான் இருக்கு…முடியுமான்னு பாக்க வந்தேன்…!!”

“என்னங்கண்ணா …. மூணு மாசம் தானே ஆவுது… எனக்கும் செலவுக்கு பணம் வேணாமா….?

போங்க…பின்னாடியே வரேன்….!”

அண்ணா…ஒரு நிமிசம்…பக்கத்து தெரு ராமாத்தாள கூட கூட்டிக்கலாமில்ல….!”

“அதானே பாத்தேன்…அவ இல்லாம நீ வரமாட்டியே…. உன் ஜோடி அந்தப்புள்ளதானே…!”

“சும்மா வம்பிழுக்காதீங்க…..அந்த பிள்ள வீட்ல அடுப்பெரிஞ்சு மூணுநாளாச்சு….ஆகாதவனக் கட்டிகிட்டு அவ கிடந்து அல்லாடுறா…!”

“ஆமா…உன்ற வீட்டுக்காரன் உத்தம ராசா….அவன சொல்லப்போயிட்ட…!”

“சரி..சரி… ஓடிப் போனவன் கதையெதுக்கு….தலையில எழுதிப்பிட்டானே…..காட்டு வேலைதான் சுடுகாடு போறமுட்டுமின்னிட்டு…!”

வெள்ளியங்கிரி ஏன்தான் விடிகாலையில் இந்த பேச்சை எடுத்தோமென்று தன்னைத் தானே நொந்து கொண்டான்…

***

மாரியம்மா மூன்று பெண்களுக்கு நடுவில் பிறந்தவள்…மூன்று வேளை சோறு சாப்பிடுவதே பெரிய காரியம்…

அவளுக்கு பத்து வயதிருக்கும் போதே அப்பா சீக்காய் படுத்து இறந்து விட்டார்…மூத்த பெண்ணுக்கு மட்டும் சொந்தத்தில் திருமணம் செய்துவிட்டார்….

நினைவு தெரிந்த நாளிலிருந்து அம்மாவும்… இரண்டு பெண்களும் காட்டு வேலைதான்…

சின்னவயதில் களையெடுப்பு…

வெண்டை..கத்திரி.. தக்காளி பறிப்பது… அப்புறம் கரும்பு தோட்டம்…

ஆடு மேய்க்கும் வேலைகூட செய்தவள்தான் மாரியம்மா….!

உடம்பு முழுக்க சுறுசுறுப்பு… ஆள் பார்த்தால் மடித்து கைப்பையில் வைத்துக் கொண்டு விடலாம்… ஆனால் உழைப்புக்கு அஞ்சாத மன உறுதி…..

சிறுவயதிலிருந்தே காட்டு வேலை செய்து காய்ப்பேறிய கைகள்….

முதல் முதலில் களையெடுக்கப் போனவள்.. பின்னர் கத்திரி.. வெண்டை… தக்காளி.. பறிக்கக் கற்றுக் கொண்டாள்…

ஆரம்பத்தில் சென்னமனல்லுரில் ஆறுமுகக் கவுண்டர் தோட்டத்தில்தான் அவள் வேலை கற்றுக் கொண்டாள்…
வெண்டை விதைகள் சீர் செய்யப்பட்டு தயாராயிருக்கும்…ஆளுக்கு இரண்டு பார்கள்…

ஆறு மணிக்கு சாப்பாடு கட்டிக்கொண்டு கிளம்பி விடுவார்கள்…பத்துமணிக்கு ஒரு டீயும் …போண்டாவும்..

ஒரு மணிக்கு ஆத்தாளும்…இரண்டு மக்களும் மரத்தடியில் அமர்ந்தபடி கட்டி வந்த புளிக் குழம்பையும்…சோற்றையும் குழைத்து முழுங்கும்போது உழைத்த களைப்பு சிறிது அடங்கும்..!!!

ஆத்தா பச்சமுத்து மட்டும் கொஞ்சம் கண்ணசருவாள்…

மாரியும்…. தங்கச்சி சின்னக்கண்ணுவும் பக்கத்து வீட்டு மகேசுவரியை வம்பிழுப்பார்கள்…!

புதிதாக திருமணம் ஆனவள் மகேசு…புருஷன் உள்ளங்கையில் வைத்து தாங்குவான்….இவளைக் காட்டு வேலைக்கு அனுப்புவதில் கொஞ்சமும் விருப்பமில்லை… ஆனாலும் மகேசுக்கு அதில் பொழுது போவதால் சரியென்று விட்டுவிட்டான்….

மறுபடி தலையில் துண்டைக் கட்டிக்கொண்டு ஆரம்பித்தால் .. மூன்று மணிக்கு இன்னொரு டீயும்…போண்டாவும்….

பொழுது சாயுமுன் ஆளுக்கு அன்றைய கூலி இருநூறு ரூயாயுடன் வீடுதிரும்புவார்கள்….

ஆறுமுகக் கவுண்டர் தங்கமான மனுஷன்…பெண்பிள்ளைகளிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டுமென்று அவனிடமிருந்து கற்றுக் கொள்ளவேண்டும்…

‘கையில துட்டு…வாயில தோசை…’ என்பது போல அன்றைய வேலைக்கு உடனே கூலி குடுத்து விடுவான்…

மாரியை அங்குள்ள எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும்… எப்போதும் சிரிப்பும்…. பாட்டும் தான்…

மஞ்சள் தேமல் நோய்… சுருட்டைப்புழு…வாடல் நோய்… என்னென்ன செடிகளுக்கு என்ன பூச்சி மருந்து அடிப்பதென்பது அவளுக்கு அத்துப்படி…

தோட்டக்காரன் மயில்சாமிக்கு ஓடி ஓடி உதவி செய்வாள்..

ஒரு நாள் மாரி வேலைக்கு போகவில்லையென்றால் தோட்டமே ‘ களை ‘யிழந்து விடும்…

பதினெட்டு வயதிருக்கும்….மாரிக்கு சொந்தத்திலிருந்து நிறையபேர் பெண்கேட்டு வந்தாலும் கையில் கால்காசு இல்லாத நிலையில் மாரியே எல்லா வரனையும் தட்டிக் கழித்தாள்…

அவளுடைய போதாத காலம் பழனியப்பன் கண்ணில் அவள் பட்டுவிட்டாள்…!

பழனி ஒரு சோக்குப் பேர்வழி….பேசியே ஆளைக் கவுக்கும் கலையில் கைதேர்ந்தவன்… காய்கறிகள் ஏற்றிச் செல்லும் லாரியின் க்ளீனராய் இருந்தான்…

எந்த ஆணையும் ஏறெடுத்தும் பார்க்காத மாரி அவன் விரித்த வலையில் விழுந்து விட்டாள்…திருமணம் செய்து கொள்வதாய் கையிலடித்து சத்தியம் செய்தான்…

ஒரு மாசம் தள்ளிப்போனதும்தான் தான் செய்த தவறு பூதாகாரமாய் கண்முன் நின்றது….

யாருமில்லாத அனாதை என்று சொல்லி ஒரு நல்ல நாளில் ஊரறிய ஒரு கோவிலில் அவள் கழுத்தில் தாலி கட்டினான்…..

எண்ணி முப்பது நாள்தான் அவனுடன் வாழ்ந்தாள்….. ஒரு நாள் திடீரென்று மாயமானான் பழனி….மாரி அவன் செத்து விட்டதாகவே எல்லோரிடமும் சொல்ல ஆரம்பித்தாள்….

மனதில் ஒரு வைராக்கியம்….இனி அவள் வாழப் போகும் நாட்கள் அவளுடைய குழந்தைக்காக மட்டும்தான்…..

மாரிக்கு பிரசவ காலம் நெருங்கி வந்தது…காட்டு வேலைக்கு போக முடியாததால் வீட்டிலேயே பொழுது கழிந்தது…

அஞ்சலைப் பாப்பா அப்பனையே உரித்து கொண்டு பிறந்திருந்தாள்…
ஏகப்பட்ட கடன்….அக்கா புருஷன் தயவால் கொஞ்ச நாள் வண்டி ஓடியது…

அக்காவும் தன்னுடைய குழந்தைகளுடன் அஞ்சலையை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொண்டாள்…

இனியும் சும்மா இருந்தால் …?

ஆனால் பிள்ளை பெத்த உடம்பு…. வெயில் தாங்குமா…..???

***

“மாரி….நம்ப கண்ணப்பன் கொட்டப்பாக்கு ஃபாக்ட்ரில ஆளெடுக்கறாங்களாமா பிள்ள….. ஒரு நாள் கூலி முன்னூறு கைல சுளயா நிக்கும்….வெய்யில்ல காயவேண்டியதில்ல பிள்ள….வரியா… நாளிலிருந்து போகலாம்னு இருக்கேன்….”

அடுத்த வீட்டு பவானி சொன்னதும் மறுநாள் அவளுடன் கிளம்பி விட்டாள்…..

மாரியின் வீட்டிலிருந்து நரசீபுரம் அதிக தொலைவுஇல்லை…

கண்ணப்பனுடைய கொட்டைப் பாக்கு
பாக்டரிக்கு கூட்டிப் போக காலையில் ஏழுமணிக்கு வண்டிவந்துவிடும்…

அவசர அவசரமாய் அஞ்சலை பாப்பாவுக்கு பாலைக் குடுத்து விட்டு…அக்கா கட்டிக்குடுக்கும் கலந்த சோற்றைக் கட்டிக் கொண்டு பவானியுடன் கிளம்பி விட்டாள் மாரி…

“யக்கோவ்….பிள்ள பத்திரம்….!!”

“அடிப்போக்கத்தவளே….உன்ற பிள்ளைய பெத்தது மட்டும்தான் நீ…என்னவோ பெரிசா பேசவந்துட்டா….!!!”

மாரிக்கு கொஞ்சம் நடுக்கமாய் இருந்தது…காட்டு வேலையே பழகினவளுக்கு ஃபாக்ட்ரி எப்படியிருக்குமோவேன்ற பயம்…

அதுவும் தவிர கண்ணப்பன் முதலாளியைப் பற்றி அரசல் புரசலாய் கேள்விப்பட்டது….
‘ அவன் ஒரு பொம்பிள பொறுக்கி….’

பவானி தான் தைரியம் சொன்னாள்…

“நானு வேலைக்கு சேர்ந்து ஆறுமாசமாச்சு பிள்ளை…. எங்கிட்ட அவன் வாலாட்ட விடமாட்டேன்.. நான் பாத்துக்கிறேன் உன்னிய….நமக்கு வேண்டியது துட்டு…..!!!”

“வணக்கங்கண்ணா….இவ மாரி…. வேலைக்கு கூட்டியாந்தேன்….”

கண்ணப்பன் மாரியை ஏற இறங்க பார்த்தான்… மாரிக்கு உடம்பு கூசியது…

“இதுக்கு முன்ன வேல பாத்திருக்கியா…??”

“காட்டு வேலதானுங்கண்ணா…. சீக்கிரம் கத்துக்குவேன்…!!!”

“புருசன் என்ன செய்யுறான்….??”

“புருசன் இல்லீங்கண்ணா…..!!!”

கண்ணப்பனின் முகத்தில் தோன்றிய பிரகாசத்தை மாரி கவனிக்க தவறவில்லை….

“சரி புள்ள ….பாவானி கூட்டுப்போ….!!!”

கொத்து கொத்தாய் மாட்டு வண்டியில் வந்து இறங்கியிருந்தது பாக்கு பழ சாக்கு மூட்டைகள்….

“மாரி… இன்னிக்கு நீ பழத்தை தொளிச்சு காய் தனியா….தொப்ப தனியா பிரிச்சு போடு… இன்னும் ஒரு வாரத்துக்கு இதுதான் உனக்கு வேல…

நானு போய் அடுப்பில சட்டிய வச்சு வெட்டின பாக்க வேவிக்கணும்…பாத்து பதமா நடந்துக்க பிள்ளை… மதியம் சாப்பிட சேந்து போவலாம்.. வரட்டா….!

ஒரு வாரம் போனதே தெரியவில்லை… மாரி நினைத்த மாதிரி கண்ணப்பன் ஒரு தொந்தரவும் தரவில்லை… சொல்லப் போனால் அந்த பக்கமே எட்டிப் பார்க்கவில்லை…

திங்கட்கிழமை…

கண்ணப்பன் வந்தான்….

“என்ன பிள்ளை மாரி… வேலையெல்லாம் நல்லா கத்துக்கிட்ட பொலயே….!!!கேள்விப்பட்டேன்…ஏதாச்சும் சங்கடம் இருந்தா எங்கிட்ட தயங்காம சொல்லு…!”

“இல்லீங்கண்ணா…!”

ஈனஸ்வரத்தில் பதில் வந்தது…

“நிமுந்து பாத்து பேசு பிள்ளை..நானொன்ணும் உன்னிய முழுங்கிடமாட்டேன்……!”

“பவானி…இந்த வாரம் இந்த பிள்ளைய உன்னோட வச்சுக்க…சாரம் காச்சட்டும்….!!!”

திரும்பிப் பார்க்காமல் நகர்ந்து விட்டான் கண்ணப்பன்…..

வெட்டிய பாக்கு கொட்டைகளை பெரிய அடுக்கில் தண்ணீர் விட்டு சுமார் பன்னிரண்டு மணிநேரம் கொதிக்க கொதிக்க வேக வைக்க வேண்டும்.. கொஞ்சம் சிரமமான வேலைதான்….

வடிகட்டி வெயிலில் ஏழெட்டு நாட்கள் காய வைத்தால் முடிந்தது வேலை…..

அப்புறம் பேக்கிங் தான்…….

“மாரி… இந்த மாசம் வட்டிகட்டலயின்னா வீட்ட அடகு வச்சி கடன திருப்பி குடுத்தாகணும்னு இஸ்மாயில் சாகிப் வந்து கத்திட்டு போறாரு பிள்ளை…. உன்ற முதலாளி கிட்ட கேட்டுப் பாரேன்…அடவான்ஸூ கிடைக்குமான்னிட்டு…..”

அக்கா ஒரு பாட்டம் புலம்பித் தீர்த்தாள்…

மாரி சரியாகத் தூங்கி முழுசாய் ஒரு வாரம் ஆகிவிட்டது…

இன்றைக்கு தீர்மானம் பண்ணிவிட்டாள்….. முதலாளியிடம் கடன் கேட்டாக வேண்டிய அவசியம் வந்து விட்டது…!

“வேல முடிஞ்சதும் என்னிய வந்து பாரு…”

***

“இத பாரு பிள்ள… காசு விஷயத்தில நானு ரொம்ப கறாரு…. எவ்வளவு வேணாலும் தரேன்…ஆனா மாசம் பொறந்தா வட்டிய கழிச்சிட்டுத்தான் தருவேன்….சரியா ஒரு வருஷத்தில அசல் வந்தாகணும். இல்லைனா என்னோட இன்னொரு முகத்த பாக்க வேண்டியிருக்கும்….!!!”

பணத்தை எண்ணி வாங்கும்போது மாரியின் கை நடுங்கியது….

“பயப்படாத பிள்ள…..
பிள்ளைங்கள மிரட்ட மாட்டேன்….நீயே போகப் போக என்ன புரிஞ்சுப்ப….”

இப்போதெல்லாம் கண்ணப்பன் அடிக்கடி அவளிடம் வந்தான்… லேசாய் அங்கே…இங்கே..தொட ஆரம்பித்தான்…

ஒருநாள் அவள் கையைப் பிடித்து…
“ஐய்யோ…. கையெல்லாம் காஞ்சு கிடக்குதே… களிம்பு தரேன்..வந்து வாங்கிக்க….வேல முடிஞ்சு வா….!”

ஒரு வருஷத்துக்குள் இவன் அசலை வட்டியுடன் சேர்த்து முகத்தில் எறிந்துவிட்டு வேறு வேலை தேடவேண்டியதுதான்……

***

திங்கட்கிழமை…. கண்ணப்பன் எல்லோரையும் கூப்பிட்டு அனுப்பினான்..

“நானு பேர் சொல்ற பிள்ளைங்க எல்லாம் தனியா நில்லுங்க…

இந்த வாரம் உங்களுக்கு ‌ நாயக்கன் பாளையத்தில வேல…வண்டி இங்கிருந்து கூட்டிப் போய் அஞ்சு மணிக்கு கொண்டு விடும்…அம்பது ரூபா எச்சா போட்டிருக்கேன்….

ஆறு பேரில் மாரியும் இருந்தாள்.. பவானி லிஸ்டில் இல்லை…

முதன் முறையாக பவானி இல்லாமல் போவதில் ஒருவித பயம்..

வேலை ஒன்றும் புதியதாய் தோன்றவில்லை… ஆனால் சாரம் காய்ச்சும் போது செங்கல் பொடி கலரில் ஒரு பொடி……

சுண்ணாம்பு.. மற்றும் சில புதிய பொடிகள்…!!! வாசம் ஒரு மாதிரி குடலைப் பிரட்டியது….

நல்ல சிவப்பு நிறத்தில் கரைசல் இருந்தது… இரண்டு நாள் காய்ச்சி காய வைக்க வேண்டியதுதான்…

வேலை முடிந்து வண்டியில் ஏறும்போது சூப்பர்வைசர் ஏகாம்பரம் எல்லோரையும் கூப்பிட்டான்…

“இத பாருங்க… நீங்க இங்க செஞ்ச வேலையைப் பத்தி வெளிய போய் பொரணி பேசிகிட்டு திரிய வேண்டாம்…எப்பவும் செய்யிற வேலைதான்னு சொல்லிட்டு வாயப் பொத்திகிட்டு போங்க…தெரியுதா….?

வரும்போது வண்டியில் மயான அமைதி…

வீட்டுக்கு வந்ததுமே பவானியைப் பார்க்கப் போனாள் மாரி…..

“பிள்ள…எனக்கென்னவோ என்று நடக்கறது ஒண்ணும் தெரியல…!”

“நீ என்ன சொல்ல வர…!?”

அன்றைக்கு நடந்ததைச் சொன்னாள்…. இல்லாவிட்டால் தலை வெடித்துவிடும் போலிருந்தது…..

“இது ஒண்ணும் பெரிய ரகசியமில்ல…எல்லாம் அஸ்ஸாமுக்கு போவுது…நானும் கொஞ்ச நாளு அங்க வேல பாத்தவதான்…நல்ல துட்டு…இல்லாட்டி நாலு வீடு வச்சிருப்பானா…? நாம அதையெல்லாம் கண்டுகிட்டா நம்ப வீட்ல உல பொங்குமா….??

“வாயில் புத்துநோயி வரும்னு சொல்லுவாங்களே…!”

“ரொம்ப யோசிக்காத பிள்ள…தப்பு செய்யிறவன் அவன்..விடுவியா..!!!”

“என்ன எதுக்கு அவங்கிட்ட சேத்துவிட்ட…! வேலைய விடலாம்னா கடன் வாங்கி தொலச்சுபுட்டேனே…பயம்மா இருக்கு பவானி…தப்பு செய்யுறோமோன்னு மனசு கிடந்து அல்லாடுது…!!”

“வேலைய விடறதப்பத்தி கனவு கூட காண்டுறாத…! தொலச்சுபுடுவான்…”

மசால் வடைக்கு ஆசைப்பட்டு எலிப்பொறியில் மாட்டிக் கொண்ட எலியா…?

வட்டி போக மீதிக் காசு போன இடம் தெரியவில்லை….

இரண்டு மாசம் ஆச்சு வட்டி கட்டி…கண்ணப்பன் மாரியை கூப்பிட்டு அனுப்பினான்…

“என்ன பிள்ள…நானு கேனயன்னு நினச்சிட்டியா…?”

“என்னங்கண்ணா…! இப்பிடி கேக்குறீங்க….எங்க வீட்ல பொங்குற சோறு உங்களாலதானுங்களே…அடுத்த மாசம் மூணு மாச வட்டிய ஒண்ணா கட்டிட்டுவேன் முதலாளி…”

“பயந்திட்டியா…நானு ஒண்ணும் செய்ய மாட்டேன்புருசன் இல்லாம நீ தவிக்கிற தவிப்பு எனக்கு புரியாதா பிள்ள….நீ மட்டும் ‘உம்’ முன்னு ஒரு வார்த்தை சொல்லு.வட்டியாவது.அசலாவது..? நீ ஒண்ணும் உடனே சொல்லவேண்டாம்…ஒரு வாரம் எடுத்துக்க…உன்ன ராணி மாதிரி பாத்துக்குவேன்…”

மாரிக்கு அவமானமாய் இருந்தது..

‘நானா இம்மா நேரம் அவன் பேசினதையெல்லாம் கேட்டுக் கிட்டு நிக்கிறவ….!!! இதவிட நாண்டுகிட்டு சாவலாமே…!’

விருட்டென்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்…

ஒரு வாரம் ஒரு யுகமாய் போனது…பவானியிடம் ஒன்றும் சொல்லவில்லை….

அடுத்த வாரம் மறுபடி தனியாக வரச்சொன்னான்…

இப்போதே ஆளாளுக்கு கண்..காது.. மூக்கு வைத்து பேச ஆரம்பித்து விட்டார்கள்….

“இப்பிடி கிட்ட வா மாரி… யாரும் செய்யாததையா நாம செய்யப் போறோம்…வேணும்ன்னா உன்ற கடன் கழிஞ்சவுடன் உன்ன தொடமாட்டேன்….போதுமா….?”

மெதுவாய் வந்து அவள் தோளைத் தொட்டான்….

“இன்னிக்கு ராத்திரி எட்டு மணிக்கு தோப்பு பங்களாவுக்கு வந்திடு….என்ன…!!!”

கையை விருட்டென்று தட்டிவிட்டாள்…

“என்ன … ரொம்ப ராங்கி பண்ணிகிட்டு திரியறவ….நானு இதுவரைக்கும் குடுத்த மரியாதைய காப்பாத்திக்க…குடும்பத்தோட உலகத்த விட்டே ஒழிச்சிப்புடுவேன்…யோசிச்சு பாரு…”

அடக்கி வைத்த கண்ணீர் அருவியாய் கொட்டியது…புடவைத் தலைப்பால் அழுந்தி துடைத்துக் கொண்டாள்…கண்ணெல்லாம் சிவந்திருந்தது…

பாவானியிடம் கொட்டித் தீர்த்தாள்….

“பவானி…இவன சும்மா விடக்கூடாது…ஊர் பஞ்சாயத்துக்கு போக முடிவு பண்ணிட்டேன்…!”

“என்ன சொல்லப் போற..உங் கையப் பிடிச்சு இழுத்தான்னா…?”

“ஐய்யே…அப்பிடியா சொல்லுவேன்…கலப்படம் பண்றான்னு…!”

“அவசரப் படாதே மாரி…! வெள்ளந்தியா இருக்கியே…ஊரே இவன் கைக்குள்ளாற…பஞ்சாயத்து தலைவரோட உறமுறயில மாடசாமின்னு ஒரு ஆளத் தெரியும்…நல்லவரு…உதவின்னா ஓடி ஓடி செய்வாரு….அவரப்போயி நாயம் கேட்போம்…அப்புறம் என்ன செய்யலாமின்னுட்டு யோசிப்போம்…!

மாடசாமி ஊரில் இல்லை…வர ஒரு வாரம் பிடிக்குமாம்…

மாரி பித்து பிடித்தவள் போலானாள்… கையில் கிடைத்த பொருளையெல்லாம் தூக்கி வீசினாள்….

காரணமில்லாமல் அஞ்சலைப் பாப்பாவுக்கு அடியும்… உதையும்… அக்காவிடம் எரிந்து எரிந்து விழுந்தாள்…

“நிறுத்துடி உன் ஆட்டத்த…எங்கேயிருக்கிற கோவத்த இங்க காட்டிகிட்டு…. சொல்லுடி….என்னாச்சு….???”

மூலையில் பேசாமல் உட்கார்ந்து விடுவாள்…..

இந்த ஒரு வாரமாய் கண்ணப்பன் ஃபாக்ட்ரிக்கு வரவில்லை…

அடுத்த வாரம் மாடசாமியை பார்க்க புறப்பட்டார்கள்…

“என்ன பவானி…சவுக்கியமா…? இதாரு…?”

“என்ற வீட்டுக்கு பக்கத்தால இருக்கா..பேரு மாரியம்மா…உங்களால இவளுக்கு ஒரு காரியம் ஆகணும்…!”

“சொல்லும்மா….என்னால என்ன உதவி முடியுதோ செஞ்சுப்பிடலாம்…”

“நாங்க கண்ணப்பன் முதலாளியோட பாக்கு ஃபாக்ட்ரில வேலை பாக்குறோம்…!”

“நரசீபுரத்தில பாக்கு தயாரிக்கிறவன் தானே…! பாவம்…நேத்துத்தான் கேள்விப்பட்டேன்…!!

‘ஐய்யோ… ஊருக்கே தெரிஞ்சு போச்சா…??’

மாரிக்கு மயக்கமே வரும்போல இருந்தது….

“என்னங்கண்ணா…? அவருக்கு என்ன…?”

“உங்களுக்கு தெரியாதா…?? முந்தாநாள் ரத்த வாந்தி எடுத்தாப்ல…சீரியசா ஆஸ்பத்திரியில கிடக்காரு….!

ஒரு வருஷமா வாயில் புண்ண வச்சிகிட்டு இருந்திருக்காரு…புத்து நோயாம்…உடம்பெல்லாம் பரவியிருக்கும் போல..அதிக நாள் தாங்காதுன்னு டாக்டருங்க சொல்லிட்டாராம்…ஆமா… உங்களுக்கு என்ன செய்யணும்…!

இருவரும் ஒருவரையொருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டே நின்றனர்…

“என்ன அமதியாய்ட்டிங்க…!! முதலாளிய நினச்சு வருத்தமா இருக்கா…என்ன உதவி கேட்டு வந்தீங்க..? எனக்கு அவசரமா ஒரு இடம் வர போக வேண்டியது இருக்கு….சீக்கிரம்….!! கூலி..கீலியில தகராறு செய்யிறானா…??”

“ஐய்யோ….அதேல்லாம் இல்லீங்கண்ணா…கைமேல கூலி…!”

“அப்புறம்…வந்த வேலயைச் சொல்லுங்க….!”

“வந்த வேல முடிஞ்சிருச்சு…!”

“என்ன பிள்ளைங்களா….டமாசு பண்ணிக்கிட்டு…சரி…எனக்கு நேரமாவுது…ஏதாவது வேணுமின்னா எப்போ வேணாலும் வந்து பாருங்க…!”

“…”

“அக்கா, இன்னிக்கு பாயாசம் வைக்கணும்…அஞ்சலி பாப்பாவுக்கு…நானேதான் செய்யப் போறேன்…..!!!”

“இந்த பிள்ளைக்கு என்னாச்சு……???”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *