நிறம் மாறும் நிஜங்கள்…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 21, 2019
பார்வையிட்டோர்: 6,629 
 

நெடுநேரம் பேசாமல் எதிரும் புதிருமாய் அமர்ந்திருக்கும் ராஜலட்சுமி, ஹசீனாபேகத்திற்குள் ‘இந்த சிக்கலை எப்படித் தீர்க்க…? ‘ என்பதில் தீவிர யோசனை. மூளைக்குள் வண்டு குடைச்சல்.

ராஜலட்சுமியின் மகன் ரகோத் ஞாயிறு விடுமுறை நாளான இன்று காலையில்தான் தயங்கித் தயங்கி….. ”அம்மா…! ” என்று அருகில் அமர்ந்திருந்தவளை அழைத்து பேச்சை ஆரம்பித்தான்.

தினசரி படித்துக் கொண்டிருந்தவள் அதை நிறுத்தி, தாழ்த்தி, திரும்பி.. ”என்னப்பா..?” என்றாள் பாசமாய்.

”ஒ…ரு சேதி…!” குரல் தெளிவாக வந்தாலும் வார்த்தைகள் தடுமாறியது.

” சொல்லு ? ”

அவன் தன் கைபேசி எடுத்து……அதில் ஆல்பம் திறந்து, ”இந்த பொண்ணு என்னோட அலுவலகத்தில் வேலை பார்க்கிறா. நல்லா இருக்காளா பார்த்துச் சொல்லு ?” நீட்டினான்.
வாங்கி ஒரு நிமிடம் உற்றுப் பார்த்து முடித்த ராஜலட்சுமி, ” பொண்ணு அழகா அம்சமா இருக்காள். ஆனா…..” கைபேசியை அவனிடம் திருப்பி மெலிதாய் இழுத்தாள்.

”ஆங்…! நீ நெனைக்கிறது சரி. இவள் இந்து இல்லே முஸ்லீம். பேரு பாத்திமா பீவி.!” என்றான்.

ராஜலட்சுமிக்கு தன் கணிப்பு சரியானதில் திருப்தி. அடுத்துப் பேசவில்லை. மௌனமாய் இருந்தாள்.

”ரெண்டு வருசமா காதலிக்கிறோம்! ” ரகோத் மெல்லிய குரலில் விசயத்தை உடைத்தான்.

‘ எதிர்பார்த்ததுதான்! ‘ – ராஜலட்சுமி எந்தவித அசைவும் அதிர்ச்சியுமின்றி அமைதியாய் இருந்தாள்.

தொடர்ந்தான். ”இந்த விசயத்தை உன்னிடம் நான் முன்கூட்டியே தெரிவிக்காமல் காலதாமதமாய் சொல்ல காரணம் இருக்கு. மதம் மாற்றக் காரணத்தால் ரெண்டு வீட்டிலேயும் எப்படி சம்மதிக்க வைக்கிறதுன்னு தினம் எங்களுக்குள் யோசனை, வாக்குவாதம்.” நிறுத்தினான்.

”…………………………”

”இதனால்…. நாங்க ரெண்டு பேரும் ரெண்டு வீட்டிலும் வாயைத் திறக்கலை. இப்போ திறக்கக் காரணம்…….? ” நிறுத்தி தாயைப் பார்த்தான்.

‘ ஏன் ஏதாவது தப்பு நடந்து போச்சா ? ‘ என்ற கேள்வி சட்டென்று இவளுக்குள் எழுந்து அடங்கியது.

ஏறிட்டாள்.

”ஆணும் பெண்ணும் வாழ சாதி மதமென்பதெல்லாம் ஒரு தடை இல்லே. மனம் இருந்தால் போதும் என்கிற தெளிவு. அதாவது நாங்க திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்கு வந்துட்டோம்.!” நிறுத்தி நிதானமாகச் சொன்னான் ரகோத்.

இதற்கும் ராஜலட்சுமியிடமிருந்து அசைவும் பதிலுமில்லை.

தாயின் மௌனம் அவனை கலக்கியது.

” என்னம்மா பேச மாட்டேன்கிறே. …..வருத்தமா ? ” என்றான் கலவரமாய்.

” பேச ஒன்னுமில்லே ரகோத். என்னிடம் சொல்ல உன்கிட்ட இன்னும் மிச்சம் மீதி சேதி இருக்கு. சொல்லு. நான் கடைசியாய்ப் பேசறேன். ” என்றாள்.

” சொல்;றேன். சாதி மதம் பார்த்து ரெண்டு வீட்டிலேயும் சம்மதிக்கலைன்னா நாங்க உங்களையெல்லாம் உதறி, ஒதுக்கி திருமணம் முடிச்சு வாழறதாய் இல்லே. ஒரேயடியாய் உதறிட்டு மேலே போறதாய் முடிவு! ” மெல்ல சொல்லி குண்டை வீசினான்.

இவன் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. ராஜலட்சுமி மகனைத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்.

”ஆமாம்மா. நாங்க ரெண்டு பேரும் யோசனைப் பண்ணி யோசனைப் பண்ணி, பேசி, வாக்குவாதம் செய்து…… இறுதியாய் எடுத்த தீர்க்க, திடமானமான முடிவு. இதில் மாற்றமென்பதே கிடையாது.! ” எந்தவித அலட்டலுமில்லாமல் நிறுத்தி நிதானமாகச் சொன்னான் ரகோத்.

மகனின் அழுத்தம் திருத்;தமான பேச்சு ராஜலட்சுமிக்குள் அமிலத்தை உற்பத்தி செய்தது. ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்…

” ரகோத் ! இந்த முடிவு….முடிவாய்த் தெரியலை. பெத்தவங்களை வழிக்குக் கொண்டுவரும் மிரட்டல் ! ” என்றாள்.

”இது பொய் மிரட்டல் இல்லேம்மா. நிஜம்! மகன், மகள்களைப் பெத்து வளர்த்த உங்களுக்கும் எங்களைக் குறித்து எதிர்காலம், ஆசாபாசங்கள், எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறைய இருக்கும். அதையெல்லாம் எங்கள் மேல் திணிச்சு எங்களைப் பிரிக்கவோ கெடுக்கவோ கூடாது என்கிறதுக்காகத்தான் இந்த முடிவு! ”

” இதுக்குப் பேசாமல் எங்களை மதிக்காமல்….ஒதுக்கி, விலக்கி விட்டு நீங்க திருமணம் முடிச்சு வாழலாம்…! ” என்றாள் மெதுவாய்.

” செய்யலாம். ரெண்டு குடும்பத்திலும் வருத்தம்தான் தூக்கலாய் நிக்கும். அது மட்டுமில்லாமல்…மான அவமானங்களெல்லாம் உங்களை நெருக்கும், பாதிக்கும். இதனால் எந்த குடும்பத்;திலும் தற்கொலைக்குக்கூட வாய்ப்பிருக்கு. அதுக்குப் பேசாமல் நாங்கள் தற்கொலை செய்து முடிவை முடிச்சிக்கிறது நல்லதில்லையா ? ”

‘ ரொம்ப பேசி இருக்கிறார்கள் ! ‘ என்று நினைத்துக் கொண்ட ராஜலட்சுமி, ” நீங்க செத்துப் போவதால் மட்டும் எங்களை வருத்தம், மான அவமானங்கள் தீண்டாது, நாங்க தற்கொலை செய்து கொள்ள மாட்டோம் என்கிற உங்கள் நினைப்பு முடிவு எப்படி சரி ? ” கேட்டு ஏறிட்டாள்.

அதற்கும் ரகோத் பதிலைத் தயாராய் வைத்திருந்தான்.

”அதெல்லாம் எங்க உயிர்போன பின்னால் நடப்பது. எங்களுக்குத் தெரியாது. அதனால் அதைப் பத்தி நாங்க கவலைப்பட வருத்தப்பட வழி இல்லே.! ”

ராஜலட்சுமிக்கு அவர்களின் முடிவு தெளிவாகத் தெரிந்தது. அதை இன்னும் தெளிவு படுத்திக் கொள்ள….

”அதாவது உங்க முடிவில் நீங்க தெளிவாய் இருக்கீங்க.?! ” கொக்கி போட்டாள்.

” அ…ஆமாம்.! ” ரகோத் திடமாக தலையசைத்தான்.

”அந்த தற்கொலை முடிவு…? ”

” ரெண்டு பேர் வீட்டு சம்மத்தோட எங்கள் திருமணம் நடக்கனும். முடியலைன்னா அதிலும் மாற்றமில்லே.! ” அவனிடமிருந்து பதில் கறாராக வந்தது.

” பெத்தவங்க யோசனைப் பண்றதுக்கெல்லாம் அவகாசம் கொடுக்காமல் இதென்னப்பா தடலாடி, அடாவடி முடிவு!? ” ராஜலட்சுமி மடக்கினாள்.

அதற்கு அவனும் அசரவில்லை.

”அம்மா…. நீங்க வாழப்போறதில்லே. நாங்க வாழப்போறோம். நீங்க வாழ்ந்து முடிச்சாச்சு.”

”உங்க திருமணத்துக்குப் பிறகு எங்களுக்கு வாழ்க்கை இல்லே என்கிறீயா ? ”

” அம்மா! நான் அந்த அர்த்தத்துல சொல்லலை. நீங்களும்… வாழனும், வாழப்போறீங்க. எங்கள் திருமணத்திற்குப் பிறகு…. நீங்க….உற்றார் உறவினர், சுற்றம் நட்பு, அக்கம் பக்கத்தினால் பேச்சு அவமானங்களைச் சந்திக்க நேரும். அதையெல்லாம் தாங்கி, தாக்கி அழிச்சி திடமாய் வாழனும்ன்னா… நீங்க தெளிவாய் இருக்கனும்.! ”

புரியாமல் பார்த்தாள்.

”மதம், சாதி, எங்கள் திருமணம் பத்தி பேச்சு எடுப்பவர்களிடம்…..எங்க சம்மதத்தோடத்தான் திருமணம். எங்களுக்கு எங்க புள்ளைங்க முக்கியம். அதுங்க வாழ்க்கை அவசியம்ன்னு நீங்க பதிலடி கொடுக்கனும்.. அப்படிப் பேசினால் உங்களை எதிர்க்க ஆளும் கிடையாது. எதிரியும் இல்லே.”

இவளுக்குப் புரிந்தது.

”அம்மா! இன்றைக்குக் காதல் திருமணம்தான் நடைமுறை. மலிவாய்ப் போச்சு. எதையும் சுலபமாய் ஏத்துக்கிட்டா சுலபம். கஷ்டம்ன்னு நினைச்சாதான் கவுரவக் கொலைகள் அது இதுன்னு கஷ்டம்! ”

‘சரி. காதலர்கள் எதிலும் சரியாய், தெளிவாய் இருக்கிறார்கள்!’ – ராஜலட்சுமிக்குத் துள்ளியமாய்த் தெரிந்தது. சம்மதிப்பதைத் தவிர வேறு வழி இல்லை என்றும் புரிந்தது. அடுத்த கட்ட நடவடிக்கைக்கு ஆயத்தமானாள்.

” ரகோத் ! பெண் வீட்டிற்கு இந்த விசயம் சொல்லியாச்சா ? சேதி தெரியுமா, அங்கே சம்மதமா ? ” கேட்டாள்.

அம்மா வழிக்கு வந்தாச்சு உணர்ந்த ரகோத், ” பாத்திமா இப்போ… இன்னைக்குச் சொல்லி இருப்பாள். இங்கே நான் சொன்னதைத்தான் அவளும் அங்கே சொல்வாள். ” என்றான்.

”……………….”

” அம்மா ! கண்டிப்பாய் சொல்றேன். ரெண்டு வீட்டு சம்மதத்தோடுதான் எங்கள் திருமணம் நடக்கும், நடக்கனும். திருமணத்திற்குப் பிறகு உங்கள் விருப்பு வெறுப்பு, கோபதாபங்கள், ஒதுக்கி வைப்புகள் குறித்து எங்களுக்குக் கவலை இல்லே. இதில் மாற்றமிருந்தால்தான் வில்லங்கம்!” திடமாய்ச் சொல்லி எழுந்தான்.

கேட்ட ராஜலட்சுமிக்குச் சட்டென்று நெஞ்சு படபடத்தது. உடல் குப்பென்று வியர்த்தது.

”உட்காருப்பா !” அவன் கையைப் பிடித்து கீழே இழுத்தாள்.

அமர்ந்தான்.

”பொண்ணு எந்த ஊரு ? ” மகனைக் கூர்ந்து பார்;த்தாள்.

” இதே சென்னைத்தான். ராயப்பேட்டை! ”

” ரொம்ப நல்லாதாப் போச்சு. பூர்வீகம் ? ”

” அதெல்லாம் தெரியாது. எனக்கு அநாவசியம்! ”

” நல்லது. கிளம்பு. இப்பவே பெண் பார்க்கப் புறப்படலாம்! ” எழுந்தாள்.

” அம்மா…ஆ..! ” ரகோத் இதை எதிர்பார்க்கவில்லை. ஆச்சரியமாக அதிர்ந்தான்.

” இதில் என் சம்மதம் மட்டும் செல்லாது ரகோத். எதிராளியும் சம்மதிக்கனும். சம்மதமில்லேன்னாலும் சம்மதிக்க வைக்கனும்.! ” என்றாள்.

”நீ சொல்றது சரிம்மா. அவ இப்போதான் சொல்லி இருப்பாள். பதில் தெரியாமல் அங்கே போய் பிரயோசனம் ? ” தாயைக் கேள்விக் குறியாய்ப் பார்த்தான்.

”எந்த பதிலையும் அங்கே போய் தெரிஞ்சுக்கலாம். அங்கே சம்மதம்ன்னா நாள் வைச்சுக்கலாம். இல்லேன்னா சம்மதிக்க வைக்கலாம். பெண் வீட்டிற்குப் போக இதுதான் சரியான சந்தர்ப்பம், நேரம் காலம் எல்லாம். இப்போ நாம வர்றோம்ன்னு மட்டும் பாத்திமாவுக்குத் தகவல் சொல்லு. அங்கே நடக்கும் சாகதம், பாதகம் பத்தி கேட்காதே. அது நமக்குத் தேவை இல்லாதது. நான் கிளம்பறேன். பாத்திமாவுக்குச் சேதி சொல்லிட்டு நீயும் கிளம்பு.” என்று உத்தரவிட்டு அடுத்திருந்த அறைக்குள் நுழைந்தாள்.

ரகோத் உடன் தன் கைபேசியை எடுத்துக்கொண்டு மாடி அறைக்குச் சென்றான்.

பத்து நிமிடங்களில் ராஜலட்சுமி கிளம்பி அறையைத் திறந்து வெளியே வந்தபோது அவன் இவளை எதிர்பார்த்து கிளம்பி தயாராய் இருந்தான்.

” போலாமா ? ”

” போகலாம். ”

” தகவல் சொல்லிட்டியா ? ”

” சொல்லிட்டேன்! ”

” அவள் வீட்ல விசயத்தை உடைச்சுட்டாளா ? ”

” உடைச்சாச்சு.”

” பதில்……நிலவரம் ? ”

” ஏறக்குறைய நமக்குள் நடந்த அதே வாக்குவாதங்கள் அங்கேயும் நடந்திருக்கு.”

” எதிர்ப்பு அப்பாவிடமிருந்தா அம்மாவிடமிருந்தா ? ”

”அவளுக்கு அப்பா இல்லே. என்னைப் போலவே அவள் பதினைந்து வருடங்களுக்கு முன் அவரை இழந்து விட்டாள். இறந்துட்டார்.”

” ஓஓ….!………சரி. பிரச்சனை இல்லே. போவலாம்.” நடந்தாள்.

பின் தொடர்ந்தான். பாத்திமா வீடு போய் இறங்கும்வரை தாயும் மகனும் பேசவில்லை. காரைவிட்டு இறங்கி அழைப்பு மணி அழுத்தி உள்ளே சென்றதும்தான்…..பாத்திமா தாயைப் பார்த்த ராஜலட்சுமிக்கு அதிர்ச்சியிலும் அதிர்ச்சி பேரதிர்ச்சி!!

இவளைப் பார்த்த ஹசீனா பேகத்திற்கும் அதே.

” நீ…நீ…..நீங்க….” இவள் தடுமாற…..

” அக்கா….ஆ….! ” மீண்டு, சுதாரித்து அரற்றி ஹசீனாபேகமே ஒடி வந்து ராஜலட்சுமியை அணைத்து, கட்டிப்பிடித்துத் தழுவினாள்.

காலப்பிரிவு. எதிர்பாராதவிதமாய் ஒருவரை ஒருவர் பார்த்ததில் அழுகை. ராஜலட்சுமி கலங்க… ஹசீனா பேகத்திற்குத் தாரை தாரையாக கண்ணீர்.

பெற்றவர்கள் செய்கை…. பிறந்தவர்களுக்குப் புரியவில்லை. குழம்பமாய் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள்.

” பாத்திமா உன் ம..களா…? ” அணைப்பை விட்டு விலகாமலே கேட்டாள் ராஜலட்சுமி.

” ம்ம்…..ரகோத் ? ”

” என் மகன்தான். ” அணைப்பை விட்டு விலகி பதில் சொன்னாள்.

இவர்களுக்கு அறிமுகம் தேவை இல்லை. ரகோத்திற்குப் புரிந்தது.

” நீங்க ரெண்டு பேரும் ஏற்கனவே அறிமுகம், பழக்கமா ? ” தன் தாய் ராஜலட்சுமியைப் பார்த்துக் கேட்டே விட்டான்.

”ஆமாம். ”

” எங்கே, எப்படி ? ”

” நாங்க ரெண்டு பேரும் ஒரே மருத்துவமனையில் பக்கத்து பக்கத்து கட்டிலில் இருந்து பிரசவம். ”

” அப்போ எங்கள் பிரச்சனை சுலபமா தீர்ந்தது. ” என்றான் மலர்ச்சியாய்.

அதே மலர்ச்சி பாத்திமா முகத்திலும் இருந்தது.

” இல்லே ரகோத்!. நாங்க ரெண்டு பேரும் கொஞ்சம் தனியா பேசனும். அதுக்கு அடுத்தப்படியாய்த்தான் முடிவு.” என்றாள் ராஜலட்சுமி.

கேட்ட ரகோத் முகம் சட்டென்று சுருங்கியது. அதே முகத்துடன்….

” முடிவு…..சாதகமா இருக்குமா பாதகமா இருக்குமா ? ” தாயைத் திருப்பிக் கேட்டான்.

”அது தெரியாது! ” வழுக்கினாள்.

சுருங்கிய இளசுகள் முகங்களில் கலவர மேகங்கள். புரியாமல் நின்றார்கள்.

”நாங்க ரெண்டு பேரும் அதிகம் பேசனும். எங்களுக்குத் தனிமை தேவை.” என்றாள் ராஜலட்சுமி அவர்களைப் பார்த்து.

”நாங்க மாடியில இருக்கோம் அத்தே..! ” என்றாள் பாத்திமா.

வார்த்தை….சுருக்கென்று நெஞ்சில் முள் தைத்தது ராஜலட்சுமிக்கு.

ஒரு வினாடி அதைக் கஷ்டப்பட்டுத் தாங்கி, ” நீங்க ரெண்டு பேரும் மாடிக்குப் போக வேணாம். வீட்டை விட்டே போகனும். சுமார் ரெண்டு மணி நேரம் கழிச்சு திரும்பலாம்.” என்றாள்.

காதலர்கள் இருவரும் மௌனமாக வெளியேறினார்கள்.

அவர்கள் வெளியேறிய அடுத்த வினாடி….எதிரெதிரில் அமர்ந்த ராஜலட்சுமி, ஹசீனா பேகம் அதிக அதிர்வு, அதிர்ச்சியின் விளைவால் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை. மாறாக அவர்கள் மனத்திரையில் பழங்கால படம் ஒன்று விரிந்தது.

சேலம் மருத்துவமனையில் இவர்கள் இருவரும் நிறைமாத கர்ப்பிணிகளாய் பக்கத்து பக்கத்துக் கட்டில்களில் இருந்தார்கள். ராஜலட்சுமி வருவதற்கு முன்பே ஹசீனா தன் கட்டிலில் இருந்தாள்.

கட்டிலில் வந்து உட்கார்ந்து ஆசுவாசப் பட்டபின்….” நீங்க வந்து ரொம்ப நாளாச்சா ? ” பக்கத்து இருக்கைகாரி;யை வாத்சல்யமாக விசாரித்தாள் ராஜலட்சுமி.

”வந்து ரெண்டு நாளாச்சு? ”

”பேரு ? ”

”ஹசீனா பேகம். உங்க பேர் ? ”

இவள் சொன்னாள். ”எப்போ பிரவசம் ? ” கேட்;டாள்.

”ரெண்டு மூணு நாள்ல ஆகும்ன்னு சொன்னாங்க. உங்களுக்கு ? ”

”பொய் வலி. ஒரு வாரம் ஆகும்ன்னு சொல்லி சேர்த்துட்டாங்க.”

மறுநாள்.

” இது உங்களுக்கு முதலாவது பிரசவமா பேகம் ? ”

” இல்லே. நாலாவது.”

”அப்புறம் ஏன் எப்போ பார்த்தாலும் ரொம்ப கவலை, யோசனையாய் இருக்கீங்க ? ”

”அ…..அது இது பொட்டப் புள்ளையாய்ப் பொறக்கனுமேன்னு கவலை. அல்லாகிட்ட வேண்டுதல்.” சொல்லி முடிக்குமுன் அவள் கண்களில் சடக்கென்று கண்ணீர் முட்டி வெளி வந்தது.

‘ ஏன் கேட்டோம் ? ‘ என்று ராஜலட்சுமிக்குள் சடக்கென்று உதைப்பு.

அவளே தொடர்ந்தாள்.

”அவருக்குப் பெட்டைப் புள்ளைகள்ன்னா உயிர். முதல் குழந்தையே அப்படி பொறக்கனும்ன்னுதான் ஆசைப் பட்டார். ஆணாய்;ப் பொறந்துட்டான். மனசைத் தேத்திக்கிட்டு பெண் வேணும் பெண் வேணும்ன்னு மறுபடி ரெண்டு பொறந்ததும் ஆண். ஆசையில் மண். ஆள் மனசு வெறுத்து… ”இந்தத் தடவை நீ ஆணைப் பெத்தா கண்டிப்பா தலாக்தான்” சொல்லி கண்டிச்சி அனுப்பிச்சிருக்கார். பாவம்;க்கா. அவர் நல்ல மனுசன். மனுச ஆசை நிராசை ஆக்கி வேடிக்கைப் பார்ப்பதில் அல்லாவுக்கு என்ன ஆசையோ தெரியலை. அதான் பொட்டையாய்ப் பொறந்து என் வாழ்க்கையைக் காபந்து பண்ணி அவர் ஆசையையும் நிறைவேத்தனும்ன்னு எப்போதும் அல்லாவையே வேண்டுறேன்.” என்றாள்.

கேட்ட ராஜலட்சுமிக்கு மனசைப் பிசைந்தது.

‘ வீட்டுக்கு வீடு வாசல்படி ! ‘ நினைத்தாள்.

” என்னைப் போல உங்க முகமும்தான் எப்போதும் வாடி கவலையாய் இருக்கு. ஏன் குழந்தைப் பெத்துக்கப் பயமா ? ” பேகம் இவளைத் திருப்பிக் கேட்டாள்.
” எனக்கு ஆம்பளைப் புள்ளை வேணும்ன்னு வேண்டுதல். பொண்ணாப் பொறந்தா செத்துடும்.! ” குரல் கரகரத்தது.

” செத்துடுமா ஏன்? ” பேகம் அதிர்ந்து துணுக்குற்றாள்.

”எங்க வீட்ல எல்லாம் பெண் வாரிசு. மாமியார் பெத்த அஞ்சும் பொண். அதுங்க பெத்ததும் பெண்கள். விளைவு…? அத்தை ஆசைக்காக ஒரு பையனைத் தத்து எடுத்து வளர்த்தாங்க. அதுதான் என் வீட்டுக்காரர். அவர் மூலம் அவுங்களுக்கு ஆண் வாரிசு வேணும்ன்னு ஆசை. அத்தை ஆசையை நிராசையாக்குவதைப்போல எனக்குப் பொறந்ததுகளும் பொண். பிறந்த அஞ்சாம் நாள் அத்தை முதல் குழந்தைக்கு நெல்மணியைக் கொடுத்து கொன்னாங்க. அடுத்ததுக்குக் கள்ளிப்பால். மூணாவது குழந்தையை மூக்கைப் பிடிச்சு மூச்சுவிடமுடியாமல் செய்து கொலை. இது நாளாவது…..வலி வந்து மருத்துவமனைக்குப் புறப்படும்;போதே…..” இதையாவது ஆணாய்ப் பெத்து எடுத்து வா. பெண்ணாய்ப் பெத்தால் என்னால இனி கொலைக்காரி ஆக முடியாது. நீதான் பால் கொடுக்கிற மார்ல அணைச்சி அழுத்தி சாவடிக்கனும்.! ” சொல்லி அனுப்பினாங்க. கேட்ட எனக்கு உயிரே போயிடுச்சு. என்னால அப்படியெல்லாம் செய்ய முடியாது பேகம். அப்படிக் கொன்னா…. அடுத்த நிமிசம் நானும் செத்துடுவேன். ஏன்…? இனி எனக்குப் பெத்துக்க சக்தியும் இல்லே. கொல்ல துணிச்சலும் இல்லே.” அடக்கி வைத்திருந்தது வெடிக்க… அழுதாள்.

‘ தன் கதைதான் பெரிய சோகமென்றால் இது அதைவிடக் கொடுமை! ‘ – அழுத ராஜலட்சுமியைப் பாவமாகப் பார்த்தாள் ஹசீனா. அவள் மீது இவளுக்கு இரக்கம், பரிதாபம் வந்தது. அதேசமயம் உள்ளுக்குள் திடீரென்று ஒரு யோசனையும் உதித்தது.

”அழாதீங்கக்கா! இதுக்கு ஒரு வழி இருக்கு.” என்றாள் அவசரமாய்.

” என்ன ? ” கண்ணீரைத் துடைத்து இவள் அவளைப் பார்த்தாள்.

” நம்ம வேண்டுதலுக்கு மாறாய் குழந்தை பிறந்தால் யாருக்கும் தெரியாமல் மாத்திக்கலாமா ? ” ஆர்வமாய்க் கேட்டாள்.

ராஜலட்சுமிக்கு சட்டென்று என்ன பதில் சொல்வது தெரியவில்லை.

” அக்கா நம்ம வாழ்க்கையைக் காபந்து பண்ண இதைத் தவிர வேற வழி இல்லை. சாதி, மதம் பார்த்து தடை சொல்லாதீங்க. அப்படிப்பார்த்தால் நம்ம வாழ்க்கைதான் வீணாப் போகும். அதெல்லாம் வந்து சோறு போடாது. இப்போதைக்கு நமக்கு ஒரே நாள்ல பிரசவம் நடக்கனும். நமக்கு வழக்கம் போல ஆண், பெண் குழந்தை பிறக்கனும். அதுங்களை யாருக்கும் தெரியாம நாம மாத்திக்கனும்ன்னு வேண்டிக்கோங்க. இதுதான் சரி.” என்றாள்.

ராஜலட்சுமி ஒரு நிமிடம் சிந்தித்தாள். பின்……

”உன் யோசனை சரி. எனக்கு…..என் வேண்டுதலுக்கு மாறாய்ப் வழக்கமாய் பெண்ணும். உனக்கு உன் வேண்டுதல் பலனாய் பொண்ணு பெற்றால்….நம்ம திட்டம் ? ! இந்த யோசனை ? ” – கேட்டு ஏறிட்டாள்.

” அதை விதின்னு ஏத்துக்கிறதைத் தவிர வேற வழி இல்லேக்கா. யார் வாழ்க்கையும் யார் கையிலும் இல்லை. இதுதான் நிஜம். ” சொல்லி பளிச்சென்று முடித்தாள்.

இவர்கள் வேண்டுதல் பலனோ என்னவோ…. இருவருக்கும் ஒரே நாளில் ஒரு நேரத்தில் அடுத்தடுத்து வலி வந்து குழந்தைகள் பிறந்தது.

கட்டிலில் மயக்கம் நீங்கி கண் விழித்தவர்களுக்கு அதிர்ச்சி.

பத்தாவது நிமிடம்….கையில் நோட்டும், பேனாவுமாக பிறப்பு குறிப்பெடுக்க வந்த செவிலிக்கு இவர்களை விட அதிர்ச்சி.

” என்ன இங்கே ரெண்டு பேருக்கும் புள்ளைங்க மாறி இருக்கு. இது யார் செய்த வேலை.? ” பதறினாள்.

” நாங்கதான் மேடம்…! ” மெல்லிய குரலில் பதில் சொன்னாள் ராஜலட்சுமி.

” இது தப்பு. ஏன் ? ”

பேகமும் ராஜலட்சுமியும் சுருக்கமாய்த் தங்கள் கதைகளைச் சொன்னார்கள்.

கேட்ட செவிலி, ”அதெல்லாம் முடியாது. நான் கறார். என் வேலையை நான் சரியாய்ச் செய்யனும்.” என்றாள்.

” தயவு செய்து பொண்ணாப் பொறந்த நீங்க….எங்களைப் புரிஞ்சுக்கோங்க எங்களுக்கு வாழ்க்கைக் கொடுங்க. உங்க கால்ல விழறோம். ” சொல்லி பேகம் சடக்கென்று எழுந்தாள்.

பெண்ணென்றால்தான் பேயும் இரங்குமே. இவள் எம்மாத்திரம். ! இரக்கப்பட்டாள்.

” சரி! ” தலையசைத்தாள். இவர்கள் விருப்பப்படி இருப்தை எழுதிச் சென்றாள்.

படம்; ஓடி முற்றுப் பெற்றதும் சிறிது நேரம் அமைதியாய் இருந்து யோசித்த ராஜலட்சுமி, ” பேகம் ! எனக்கு என் மகளே மருமகளாகவும், உனக்கு உன் மகனே மருமகனாகவும் ஆகிறதை நினைச்சுப் பார்த்தால் கொடுமையாய் இருக்கு இல்லே ?! ” வருத்தமாய்க் கேட்டாள்.

”ஆமாம் அக்கா. ஆனா….நிஜம் உனக்கும் எனக்கும் மட்டும்தானே தெரியும். மத்தவங்களுக்குத் தெரியாது.” என்றாள்.

”ஆமாம் பேகம் வலி நமக்கு மட்டுமே சொந்தம். மத்தவங்களுக்குக் கிடையாது.” ராஜலட்சுமி ஒத்துக்கொண்டதற்கு அடையாளமாய் தலையசைத்தாள்.

பேகம் மேலும், ” இதை சொன்னால் மத்தவங்களும் நம்ப மாட்டாங்க. நம்ம பொண்ணும் புள்ளையுமே ஏத்துக்க மாட்டாங்க. ஏன் ?….பிறப்பைச் சரிபார்க்க சான்றிதழ்கள் கூட சரி இல்லே. நாம அப்போ சரி பண்ணினதால் இப்போ அது அவுங்களுக்குச் சாதகமாய் இருக்கு. இதனால் பிள்ளைங்க……எங்களைப் பிரிக்க நீங்க பொய் சொல்றீங்கன்னு சொல்வாங்க. விளைவு….? அவுங்க கடைசி ஆயுதத்தை எடுத்து சாவாங்க.” நடக்கப் போகும் நிதசர்னத்தை எடுத்துச் சொல்லி நிறுத்தினாள்.

கேட்ட ராஜலட்சுமிக்கு அடி வயிற்றைக் கலக்கியது. இதயத்தை எவரோ எடுத்துப் பிசைவதைப் போல் வலித்தது.

” அப்போ…..இந்த விசயத்த நம்ம புள்ளைகங்ககிட்டகூட சொல்ல வேணாம்ன்னு சொல்றீயா ? ” பரிதாபமாகப் பார்த்தாள்.

”சொல்லாம விடுறதுதான் நல்லது. இவர்கள் திருமணத்திற்கு எது தடங்கல் ? ரெண்டு பேரும் ஒரு வயித்துல பொறந்த சகோதரன் சகோதரிகள் கிடையாது. மேலும் எப்படிப் பார்த்தாலும் பிறப்பாலும் வளர்ப்பாலும் இவர்கள் வேறுவேறு மதங்கள். திருமணம் முடிக்கிறது தப்பில்லே. உண்மையைச் சொன்னாலும் காதல் தீவிரம்…. இதையேக் காரணம் காட்டி அவர்கள் கண்டிப்பா திருமணம் முடித்து நம் முகத்தில் கரியைப் பூச்சு நடக்கும். சொல்லியும் பிரயோசனமில்லே.! ” நிறுத்தினாள்.

எல்லாம் ராஜலட்சுமி மனசுக்குள் ஏறியது. மௌனமாக அசை போட்டாள்.

”அப்புறம் அக்கா! நம்மோட காயம், புண் ஒரு பக்கமிருந்தாலும்….மருமகனோ மருமகளோ புகுந்த வீடுளுக்கு மாற்று மகன், மகள்கள் போல. அந்த வகையில் பார்த்தால் உனக்கு….. கற்பனை கலப்பு இல்லாமல் மகளே மகளாகிறாள். எனக்கு மகனே மகனாகிறான். நமக்கு நிழல் நிஜமாகிறதைவிட நிஜமே நிஜமாகிறது. நிஜம் நிறம் மாறுகிறது. ஏற்றுக்கொள்வதில் என்ன தப்பு.? ” என்றாள் பேகம்.

ராஜலட்சுமிக்கு பேகம் சொன்னதெல்லாம் ஏற்றுக்கொள்வது போலிருந்தாலும் மயிரிழையில் சின்ன உறுத்தல்.

”அப்போ….நம்ம பிள்ளைகளிடம் கண்டிப்பாய் உண்மையை மறைக்கலாம் என்கிறாயா ? ” பார்த்தாள்.

”காதல் மறுத்தால் சாவு என்பது அவர்களின் பிடிவாதம், முடிவு என்கிற போது உடைப்பது வீண். உடைப்பதால்… அநியாயமாய் ரெண்டு உயிர்கள் போகவும் வழி இருக்கு. பிள்ளைங்க சாகிறதுக்கா நாம பெத்தோம் ? வாழனும். வாழ விடுவோம் ! ” பேகம் அழுத்தம் திருத்தமாகச் சொல்லி ராஜலட்சுமியைப் பார்த்தாள்.

உறுத்தல் மறைய…..

”சரி.” – அவள் முகம் தெளிவாகி தலையசைத்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *