விளையாட்டாய் சொன்ன பொய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: May 28, 2019
பார்வையிட்டோர்: 25,197 
 

கோவையிலிருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் தனது புறப்படு பயணத்தை ஆரம்பிக்க இன்னும் பத்து நிமிடமே இருந்தது. பாபு இரண்டாம் வகுப்பு அறையில் தனது ரிசர்வேசன் பகுதியை கண்டு பிடித்து, கொண்டு வந்த சூட்கேஸ், பை அனைத்தையும் வைத்துவிட்டு எதிர் இருக்கைக்கு வரவேண்டிய யாழினிக்காக காத்துக்கொண்டிருந்தான். நேரம் கடந்து கொண்டே இருந்தது. யாழினி வருகிற பாட்டை காணோம். இவனுக்கு பதற்றமாகி விட்டது. நாளை காலை ஒன்பது மணிக்கு அலுவலகத்தில் இருக்க வேண்டும். இப்பொழுதே மணி இரவு பத்து மணிக்கு மேல் ஆகி விட்டது. காலை ஆறு ஆறரைக்கெல்லாம் விட்டு விட்டால் அங்கு ஏதாவது ஒரு அறை எடுத்து குளித்து அலுவலகத்துக்கு போய்விடலாம். கட்டாயம் அங்கு ஆஜராக வேண்டிய தேர்வு அது. இவனோடு யாழினி மட்டுமே கோவையிலிருந்து தேர்வாகி இருக்கிறாள்.

இருவரும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள், பக்கத்து தெருக்காரகள், பட்டம் வாங்கிய பின் இரு வருடங்கள் அங்கும் இங்கும் வேலை பார்த்து பின் இந்த அரசுத்தேர்வை எழுத முடிவு செய்த போது யாழினியும் நானும் எழுதுகிறேன் என்று இவனுடன் சேர்ந்து கொண்டாள். இருவரும் போட்டி போட்டு படித்ததால் தேர்வில் வெற்றி பெற முடிந்தது. அதன் பின் நாளை நடை பெற போகும் இறுதி தேர்வுக்கு சென்னைக்கு வரச்சொல்லி விட்டார்கள். ஒரு வாரம் முன்னேயே ரிசர்வேசனும் செய்து விட்டார்கள். இவன் கூட சொன்னான், முதல் நாளே சென்று விடலாம் என்று. அவள் ஒத்துக்கொள்ளவில்லை. இராத்திரி இந்த டிரெயின்ல போனா நாளை காலையில போயிடலாம் என்று சொல்லி இந்த டிரெயினிலேயே ரிசர்வேசன் செய்ய சொல்லி விட்டாள்.

இன்னும் ஐந்து நிமிடங்களே இருந்தன, பாபு யாழினிக்கு போன் அடித்து அடித்து பார்த்தான், “எல்லைக்கு அப்பால் இருக்கிறார்” என்ற பதிலே வந்தது, என்ன செய்வது? யோசித்த பாபு ஏதோ முடிவு செய்தவன் போல எழுந்து ரயில் பெட்டியின் கழிவறைக்கு உள்ளே சென்று கதவை தாழிட்டுக்கொண்டு செல்போனிலே “நூறுக்கு” போன் செய்து “இப்பொழுது சென்னைக்கு கிளம்ப செல்லும் ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது” என்று சொல்லி விட்டு,போனை சுவிட்ச் ஆப் செய்தவன்,தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, அமைதியாக வந்து தன் இருக்கையில் அமர்ந்து கொண்டான்.முகம் வேர்த்து விறு விறுத்து போயிருந்தது,நெஞ்சு பட படவென அடித்துக்கொண்டது.

ஐந்து நிமிடத்தில் கிளம்ப வேண்டிய டிரெயின் பத்து நிமிடம் ஆகியும் நகராமல் இருந்தது.ஏன் வண்டி கிளம்பவில்லை? எல்லா பெட்டிகளிலிருந்தும் ஆட்கள் இறங்கி கூட்டமாய் பேசிக்கொண்டிருந்தனர். அங்கு நடந்து வந்து கொண்டிருந்த டி.டி.ஆரிடம் ஏன் இன்னும் கிளம்பவில்லை? என்று கேள்விகளால் துளைத்தனர். அவர் எனக்கு தெரியாது? என்று சொல்லிவிட்டு இடத்தை காலி செய்ய ஆரம்பித்தார்.

சற்று நேரத்தில் பெரும் போலீஸ் படையொன்று பெட்டி பெட்டியாய் எதையோ தேடிக்கொண்டு வந்தனர். ஒவ்வொரு பெட்டியிலும் ஏறி ஒவ்வொரு அங்குலமாக தேடிக்கொண்டிருந்தனர். கூடவே மோப்ப நாய்களும் பெட்டி பெட்டியாய் உள்ளே வந்து முகர்ந்து பார்த்துக்கொண்டிருந்தன. பயணிகள் இப்பொழுது கிலி அடித்த்து போல் உட்கார்ந்து கொண்டிருந்தனர். என்ன நடக்கிறது? எதற்கு இத்தனை போலீஸ்? தேடுவதை பார்த்தால் வெடி குண்டு ஏதாவது இருக்குமா? ஒன்றும் புரியாமலும், வரும் போலீசிடம் எதற்கு தேடுகிறீர்கள்? என்று கேட்கவும் பயந்து கொண்டு அமைதியாய் இருந்தனர்.

அரை மணி நேரம் ஓடியிருந்தது. பாபு இருக்கும் பெட்டியிலும் போலீஸ் நுழைந்து அங்குலம் அங்குலமாக தேட ஆரம்பித்தனர்.பாபுவுக்கு எதிரில் இருந்த பெரியவர் ஒருவர் தேடிக்கொண்டிருந்த போலீசிடம் என்ன சார் தேடுறீங்க? என்று கேட்க அவரும் யாரோ ரயிலுக்கு குண்டு வச்சிருக்கறதா போன் பண்ணியிருக்காங்க, அதான் நல்லா தேடிகிட்டு இருக்கோம். “பாமா” பெரியவர் அப்படியே அதிர்ச்சியாகி அப்ப நான் கீழே இறங்கறேன், என்று அவசரமாய் இறங்க போனார். பெரியவரே பயப்படாதீங்க எல்லா இடத்துலயும் செக் பண்ணிட்டோம், ஓண்ணும் இல்லை, என்று சொல்லி சிரித்துக்கொண்டே இறங்கி போனார் அந்த போலீஸ்கார்ர்.

அப்பொழுது வேக வேகமாக வந்து கொண்டிருந்தாள் யாழினி, அவள் முகம் வெளுத்து வேர்வை ஆறாக ஓடிக்கொண்டிருந்தது. அவள் பெட்டியை தேடி பார்த்துக்கொண்டே வந்தாள்.

அப்பொழுது வெளியே எட்டி பார்க்க வந்த பாபு “யாழினி” என்று உரக்க கூப்பிட்டான்.

அந்த பக்கம் நின்று கொண்டிருந்த பயணிகள் அனைவரும அந்த சத்தம் கேட்டு திரும்ப யாழினியும் திரும்பி பார்த்தவள், வெளியே பாபு நின்று இந்த பெட்டிதான் வா..வா என்று கூப்பிட அப்பொழுது ஒரு இன்ஸ்பெக்டர் வேகமாக வந்து உங்க பேரென்னம்மா? என்று கேட்டார். இந்த கேள்வியில் மிரண்டு போன யாழினி பயத்துடன் தன் பெயரை உச்சரித்தாள். நீங்க இந்த டிரெயின்லதான் போகணுமா? ஆமா, உங்க டிக்கெட்ட காட்டுங்க? அவளின் டிக்கெட்டை வாங்கி பார்த்தவர், எதுக்கு போறீங்க சென்னைக்கு? அவள் நாளை நடை பெற இருக்கும் தேர்வை பற்றி சொன்னாள். அவள் கையிலிருந்த பெட்டி, மற்றும் கைப்பைகளை சற்று நேரம் பார்த்த இன்ஸ்பெக்டர் சரி சரி போங்க, டிரெயின் கிளம்ப போகுது என்று வழி விட்டார்.

அதற்குள் பாபு இறங்கி அவள் அருகே வந்தவன், எங்க நீ வராமே போயிடுவியோன்னு பயந்துட்டேன், சொல்லியவாறு அவளிடமிருந்த பெட்டி, பைகளை வாங்கிக்கொண்டு அந்த பெட்டியில் ஏறி அவளுக்கு வழி காட்டிக்கொண்டே சென்றான்.

யாழினியின் முகம் சற்று பேயறைந்த்து போலவே இருந்தது. என்ன யாழினி இவ்வளவு லேட்டா வர்றே? நாளைக்காலையிலே ஒன்பது மணிக்கு நாம அங்கிருக்கணும், காலையிலேயே போலாமுன்னு சொன்னேன் கேட்டியா? இப்ப பாரு எவ்வளவு அவஸ்தை. பேசிக்கொண்டே போனவன் ஒரு கட்டத்தில் நின்று அவளை திரும்பி பார்க்க அவள் பெட்டிக்குள் ஏறியவள் இருந்த இடத்தை விட்டு நகராமல் வெறித்தவாறு நின்று கொண்டிருந்தாள். திரும்பி வந்தவன் “யாழினி” பிடித்து உலுக்கவும் அவள் தன்னுணர்வு பெற்று என்ன? என்ன? என்று இவனை கேள்வி கேட்டாள்.

சரியா போச்சு போ ! அவளிடம் அலுத்துக்கொண்டு, முதல்ல உன் இடத்துல போய் உடகாரு, அவளை உட்கார வைத்தவன், தான் செய்த காரியத்தை நினைத்து அதுவரை பயந்து கொண்டிருந்தவன் கொஞ்சம் நிம்மதியானவன் போல் காணப்பட்டான். ஆனால் யாழினியின் முகத்தை பார்க்க அவனுக்கு புதிராக இருந்தது. ஏன் இப்படி மிரண்டவள் போல் காணப்படுகிறாள்? வண்டி தவற விட்டு விடுவோம் என்ற பயத்தினால் இருக்கலாமோ?

நள்ளிரவு! திடீரென கண் விழித்து எதிர் இருக்கையை பார்த்த பாபு அங்கு யாழினி இல்லாததால் மெல்ல தலை திருப்பி பார்த்தவன் அதிர்ந்தான். இரயில் கதவை திறந்து நின்று வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள் யாழினி. இவன் மெல்ல எழுந்து சத்தமிடாமல் அவள் பின் புறம் சென்று முன்னெச்சரிக்கையாக அவள் முன்புறம் கையை கொண்டு போய் “யாழினி”இந்த நேரத்தில் என்ன செய்கிறாய்” இவன் குரல் குரல் கேட்டு இவன் எதிர்ப்பார்த்த்து போலவே திடுக்கிட்டு வெளியே விழப்போனவளை அப்படியே திருப்பி உள்ளே தள்ளியவன் சடாரென கதவை இழுத்து சாத்தினான்.

உனக்கு என்ன பைத்தியமா? குரலை உயர்த்தி சத்தமிட்டவன்,தூக்கத்தில் இருந்து பலர் சட்டென தலையை உயர்த்தி பார்டக்கவும், குரலை தாழ்த்தி “ப்ளீஸ்” வா வந்து உட்கார், என்ன பிரச்சினை? சொல் என்று மிருதுவாக கேட்கவும் அவள் குலுங்கி குலுங்கி அழுக ஆரம்பித்தாள். பாபு என்னை மன்னித்து விடு, இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்த இரயிலில் வெடி குண்டு வெடித்து நாம் எல்லோரும் இறக்கப்போகிறோம். சொல்லி விட்டு முகத்தில் அறைந்து கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள்.

என்ன சொல்கிறாய்? முகத்தில் பீதியுடன், திடுக்கிட்டு கேட்டான்.ஆமா, பாபு இந்த பெட்டியை வச்சுட்டு அப்படியே சென்னைக்கு முன்னாடி பெரம்பூர் ஸ்டேசன்ல இறங்கிடனும்னு எனக்கு உத்தரவு. சொன்னவள், இதை நான் செய்யலையின்னு தெரிஞ்சா அங்க எங்க அப்பா,அம்மா இரண்டு பேரையும் கொன்னுடனமுன்னு புடிச்சி வச்சிருக்காங்க.

அப்படியே அதிர்ந்து போய் உட்கார்ந்தவன், ஒரு நிமிடம் அவளை அப்படியே அறையலாம் என்று நினைத்தான். ‘இவள் என்ன செய்வாள்? இதை முதலில் ஆரம்பித்து வைத்தவன் நான்தானே. யோசி, யோசி அடுத்து என்ன செய்வது? மனதை நிதானித்தவன், சட்டென அந்த சூட்கேசை அவள் இருக்கையின், அடியில் இருந்து எடுத்து திறக்கப்போனான். அவள் தடுத்தாள். பாபு திறந்து விடாதே, அவர்கள் சொல்லும்பொதே இடையில் திறந்து வெளியே எடுத்து வீச நினைத்தால் அது உடனே வெடித்து விடும் என பயமுறுத்தி இருக்கிறார்கள்.

சட்டென எழுந்தவனுக்கு ஞாபகம் வந்தது, இன்னும் சற்று நேரத்தில் ஒரு ஆற்றை கடக்க வேண்டியிருக்கும் என்று, உடனே கதவோரம் வந்தவன், கதவை திறந்து காத்திருக்க ஆரம்பித்தான்.

பாலத்தில் செல்லும் கடக் கடக் எனும் ஓசையோடு இவன் சட்டென கதவை திறந்து அந்த சூட்கேசை பலம் கொண்ட மட்டும் வெளியே எறிந்தான். அதை பாலம் தடுப்பு சுவரை தாண்டி தண்ணீரை நோக்கி சென்று விழுந்தது.த்ண்ணீருக்குள் விழுந்தவுடன் ”க்ளுக்” என்ற சத்தம் கேட்ட்து கூட இவர்களுக்கு கேட்க நேரமில்லாமல் ரயில் விரைவாக பாலத்தை கடந்தது. உள்ளே வந்தவன் சட்டென தன் பொருட்களை எடுத்துக்கொண்டு, யாழினி, எல்லாத்தையும் எடுத்துக்கோ, அடுத்த ஸ்டேசன்ல இரண்டு நிமிசம்தான் நிக்கும், நாம் இறங்கி போலீஸ் ஸ்டேசன் போகணும். சொல்லிவிட்டு அவள் தான் கொண்டு வந்திருந்த கை பைகளை எடுத்துக்கொண்டவுடன் வரப்போகும் அடுத்த ஸ்டேசனில் இறங்குவதற்காக யாழியினியுடன் காத்திருக்க ஆரம்பித்தான்.

அதுவரை தூக்க கலக்கத்தில் இருந்த அந்த இரயில்வே போலீஸ் ஸ்டேசன், இவர்கள் இருவரும் சொன்ன கதையை கேட்டு சுறு சுறுப்படைந்தது..இன்ஸ்பெக்டர் கணேசன் கொஞ்சம் வயதானவராக இருந்தார். அவர்கள் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தவர், சிறிது நேரம் யோசித்து ஏம்மா நீ இறங்கினதுக்கப்புறம் எத்தனை மணிக்கு வெடிக்கும் அப்படீன்னு ஏதாவது சொன்னாங்கலா?

இல்லே சார், சென்னைக்கு முன்னாடி நிக்கற ஸ்டேசன்ல இறங்கிக்கோ அது மட்டும்தான் அவங்க சொன்னது. மத்தது எல்லாம் அப்புறம் தானா தெரியும்.இதை மட்டும்தான் சொன்னாங்க.

கொஞ்ச நேரம் தாடையை சொறிந்தவர், போன் எடுத்து இப்பொழுது இரயில் எங்கு சென்று கொண்டிருக்கிறது என்று விசாரித்தார். பின் எந்த இடத்துல போயிட்டிருந்தாலும், வண்டிய அங்கேயே ஒரு அரை மணி நேரம் நிறுத்தி வைக்க சொன்னார்.

பின் சடாரென எழுந்தவர், என் கூட வாங்க என்று அவர்களை கூட்டிக்கொண்டு தன் ஜீப்பில் அந்த ஊர் காவல் நிலையத்துக்கு கூட்டிச்சென்றார். அங்கிருந்த இன்ஸ்பெக்டரிடம் நடந்ததை விவரமாக கூறி யாழினியின் பெற்றோருக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை உடனே செய்து கொடுக்க சொல்லிவிட்டு, பாபுவிடம் நல்ல வேளை யாழினி இறங்க வேண்டிய ஸ்டேனுக்கு, டிரெயின் இன்னும் போய் சேரவில்லை, அதனால், உங்களை அந்த டிரெயினிலேயே ஏற்றி விடுகிறேன்,யாழினி மட்டும் அவர்கள் சொன்ன இடத்தில் இறங்கட்டும், போலீஸ் அவளை சுற்றி கண்காணித்துக்கொண்டிருக்கும். நீ சென்னைக்கு சென்று இறங்கிக்கொள். மற்றதை போலீஸ் பார்த்துக்கொள்ளும்.

சார் எங்களை இந்த தேர்வு எழுத அனுமதி கொடுங்க சார், அது முடிச்ச உடனே திரும்ப வந்துடறோம், சிறிது யோசித்தவர், சரி நீ முதல்ல போ, யாழினியை போலீஸ் கொண்டு வந்து அங்க விடும். எல்லாம் முடிஞ்சு நீங்க கமிசனர் ஆபிஸ் வந்துடணும்.

சென்னையில் தேர்வினை எழுதி விட்டு பாபுவும், யாழினியும், போலீஸ் கமிசனர் அலுவலகம் வந்தனர். காத்திருந்த போலீஸ் அதிகாரிகளிடம் நடந்த விசயங்கள் அனைத்தையும் சொன்னார்கள். பாபு தான் யாழினிக்காக விளையாட்டாய் “வெடிகுண்டு” வைத்துள்ளதாக போனில் சொன்னதையும் சொன்னான்.அதனால், இரயில் தாமதமாக கிளம்பியதையும், ஆனால் யாழினியே வெடிகுண்டுடன் வருவாள் என எதிர்பார்க்கவில்லை என்றும், ஆனால் அதை உடனே ஆற்றில் வீசி விட்டதையும் சொன்னான்

ஒரு போலீஸ் அதிகாரி கமிசனரிடம் ஆற்றில் விழுந்த அந்த சூட்கேஸ் எடுக்கப்பட்டு விட்டதையும்,.அதில் வெடி குண்டு இருந்தது, என்றும் தெரிவித்தார். பாபு போனில் சொன்ன வெடி குண்டு புரளிக்கு அவனுக்கு தண்டனை உண்டு என்றாலும், அந்த வெடிகுண்டை ஆற்றில் வீசியிருக்கா விட்டால் பெரிய ஆபத்தே நேர்ந்து ஏராளமான உயிர்கள் பலியாகி இருக்கும். அதனால் அவனுக்கு மன்னிப்பு கிடைக்க வாய்ப்பு உண்டு என்று தெரிவித்தார்கள்.

அவன் கவலையுடன் யாழினியை பார்க்க அவளின் அப்பா இரணுவத்தில் அதிகாரியாய் இருந்த பொழுது தீவிரவாதிகளை எதிர்த்து அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறார். அவரை பழி வாங்கவே அந்த கூட்டத்தினர், இந்த பெண்ணை பயன் படுத்தி அவர்கள் குடும்பத்திற்கு, அவப்பெயரை உண்டாக்க முயற்சித்துள்ளனர். நல்ல வேளை போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கையில் அவர்களை பிணைக்கைதிகளாக வைத்திருந்த கூட்டத்தை பிடித்து விட்டதாகவும் கமிசனரிடம் தெரிவித்தனர்.

கமிசனர் இருவரையும் போக சொல்லிவிட்டு, கூப்பிடும் பொழுது வரவேண்டும் என்றும் சொன்னார்.

வெளியே வந்த இருவருக்கும் உலகத்திலேயே தாங்கள் மட்டும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிந்த்து

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *