வேலி
கதையாசிரியர்: எஸ்.பொன்னுத்துரை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: September 22, 2026
பார்வையிட்டோர்: 93
(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அறுவடைக்குப் பின் விதைப்பு. பகலின் அறுவடையும், இரவின் விதைப்பும்.
பூரணையை அண்டிய இரவு. மேகம் கலக்கிய குளம். நிலவுக்குத் துகிலுடுத்தி, மழைத் துளிகளை அடைகாக்கின்றது.
‘மழை வந்தால் அரைக் கரைவாசி நாசம். எல்’ லாம் சித்திரவேலாயுதசாமி சித்தப்படிதான் நடக்கும்.’
களத்து மேட்டிற் சூடுகள் எழுந்து நிற்கின்றன.
‘ஒண்டு, ரெண்டு, மூண்டு… பதினைஞ்சு. காப்பதின அளவு மிச்சம்.’
நல்ல களைப்பு. பசி வயிற்றை உழுகிறது. உப் பட்டி கட்டிய வெள்ளாமை வெட்டுக்காரர் போய் எவ்வளவோ நேரம். காவலுக்காக வயலே தஞ்சமாகக் கிடக்கிறான் சித்திரவேலு.
பசியின் கிள்ளல். அவன் களத்து மேட்டில் ஏறு கிறான். சூட்டடி ஒன்றிலே போடப்பட்டிருந்த உப்பட்டி கட்ட உதவும் வெல்லநார்க் கட்டில் குந்துகிறான். கடுத்த கால்கள் ஓய்வெடுக்கின்றன.
‘ஒரு வாய்க்கு வெத்திலை போட்டால் பசி புடிக்கும். ‘
மடிக்குள் பத்திரப்படுத்தியிருந்த ‘வெத்திலைக் கடுதாசி’யை வெளியே எடுத்து விரிக்கிறான். பாக்குச் சீவலில் ஒரு சிறங்கையை வாய்க்குள் போட்டு, கொடுப்புப் பற்களால் பொடியாக்கி…
‘ஏன் இண்டைக்கு கனகி இவ்வளவு சுணக்கம்?’
வெற்றிலையில் நரம்பைக் கிள்ளி, சுண்ணாம்பைத் தடவி சுருளாக்குகின்றன விரல்கள், அச்சுருள் பாக் குடன் குதப்பிக் குழைக்கப்படுகிறது. ஒரு துண்டு யாழ்ப் பாணத்துப் புகையிலையைக் கிள்ளியெடுத்து, வெற்றி லைக் காகிதத்தை மடித்து மறுபடியும் மடிக்குள் வைக் கிறான். முன்னிரண்டு பற்களிலும் படிந்திருந்த காவியைப் புகையிலையினால் துடைத்து, அதுவும் அவசியமான அனுமானமாகக் குதப்பப்படுகிறது.
உதடுகளில், கைவிரல்களிரண்டைக் கெவராகப் பிடித்துக்கொண்டு, அதன் நடுவெளியில், வெற்றிலைத் துப்பலைப் ‘புளிச்’ சென்று பீச்சுகிறான். அது சீறி யடித்துச் சுழன்று, மழைத் தூவானமாக அவன் முகத் திலும் பெய்கிறது.
காத்து எழும்பீட்டுது. இனி மழை வராது. அதுக் கிடையில் என்ர வெள்ளாமை எல்லாம் சூட்டில் ஏறிடும்.’
நம்பிக்கைப் பயிர், சிந்தனை வாய்க்காலிற் புரண்டு வரும் நீருண்டு, கிசுகிசுத்து வளருகிறது. தினவு ஊரும் மனத்துடன் அவன் வயலைப் பார்க்கிறான்.
ஜீவசிருஷ்டியில் – அதன் விளைவுப் பூரிப்பில் – உப்பிப் பெருத்த வயிற்றை, பிரசவ சமயம் சுமையிறக்கி விட்ட பிள்ளைத்தாய்ச்சியின் சாயலில், அறுவடையாகி விட்ட பத்து ஏக்கர் வயல், அந்த விளைச்சல், இப் பொழுது, பதினைந்து சூடுகளாக மமதையுடன் எழுந்து நிற்கின்றன. பக்கத்தில், ஏக்கரில் நாலு கதிர்க்கட்டுகள். அதற்கு இடப் பக்கத்துத் துண்டு நாலு வெட்டப்பட்டுக் காய்கிறது. ஏக்கர் வெளாண்மை நாளை இரவுக்குள் சர்வமும் சூடேறிவிடும்.
வாய்க்காலை மருவியிருக்கும் அரசடித் துண்டுதான் கஷ்டம் தந்துவிட்டது. என்றுமில்லாச் செழிப்பில், இம்முறை நல்ல விளைச்சல். நிறைமாதக் கர்ப்பிணி யாகக் கதிர்க்கொத்துக்கள் சரிந்து, வெயிலின் தங்கப் பொலிவு காட்டி மயக்குகின்றன. அறுவடையாகியிருக்க வேண்டும். மூன்றாம் நாள் வாய்க்கால் தண்ணீர் அடித்துவிட்டது. மூன்றாம் கொலனியிற் குடியேறியுள்ள சிங்களவரால் வந்த வினை. அவர்கள் குடியேறி யுள்ளது மேட்டு நிலம் நிலம். மாரி வேளாண்மை மட்டுந் தான் வாசி. அவர்களுக்குப் பாயும் தண்ணீர், இங்கு பொசிகிறது.
‘நாளைக்கு உப்பட்டி எல்லாம் நல்லாக் காய்ஞ் சிடும். அப்பிடியெண்டால் புதன் கிழமை ராவைக்கா வது அது சூட்டிலேறும். வியாழன் சூட்டு வேலியும் கட்டி முடிச்சிட்டால், பிறகு என்ன? வெருகலுக்கு போற ஒழுங்குகளப் பாக்கலாம்’
நினைவுகள், குடலை தள்ளி அசைந்தாடும் பயிரின் லாவண்யம் காட்டுகின்றன.
சொக்கலிங்கன் சோற்று முடிச்சுடன் களத்து மேட் டில் ஏறி வருகிறான். சோற்றைக் கண்டதும், ‘சாப் பிட்டுத்தான் மத்த வேலயளப்பாக்கவேணும்’ என்ற எண்ணம் வெகு இயல்பாக முளைவிடுகிறது.
“என்ன தம்பி, இண்டைக்கு நேரம் போயிட்டு. சரி போய் குடிக்கிற தண்ணி ஒரு வாளி எடுத்தா.”
“இப்பதான் அக்கா சமைச்சுமுடிச்சது” என்று பதில் கொடுத்துக் கொண்டே, வாளியுடன் வாய்க்கா லோரம் குடிதண்ணீர் எடுப்பதற்கு வெட்டப்பட்டிருக் கும் மடுவுக்குச் சொக்கன் செல்கிறான்.
சொக்கன் அவன் நிழலில் வாழ்பவன். சித்திரவேலு வுக்கு இவன் மீது இனந்தெரியாத பாசமும் இரக்கமும். பாம்பு வயிறு. மூச்சுப் பிடித்து மூன்று கோப்பை சோற்றை ஒரு கை பார்க்கக் கூடியவன். வீட்டில், கூட மாட ஏதாவது வேலை செய்வான், கமக்காரனாக வேண்டுமென்பதில் கரிசனம் கிடையாது. ஊர்க்கதை யும் ஊர்வேலையும் தினசரிப் பகலை விழுங்கிவிடும். இரவு நேரங்களிலும் வீட்டிலே தங்குவது ஒறுப்பு. வீட்டில் அவனைப் ‘பொடியன் என்றழைத்தாலும். வயது அற்ப சொற்பமா? தை பிறந்தால், இருபது வயதுகளை முற்றாக விழுங்கிவிட்டான். குடலை பருவக் காலத்தில், பரணிலிருந்து தகரமடித்து சில்லித் தாராக்களை விரட்டவேண்டும். கிளிப்பருவத்தில் பயிரில் விழும் பச்சைக் கிளிகளை விரட்டவேண்டும். இவற் றிற்குக்கூட வரமாட்டான். உறவு முறை இல்லை. தோட்டத்துக் குடிசையிற் பிறந்தவன். வேளாவேளையில் தந்தையையும் தாயையும் விழுங்கிவிட்டு, அனாதையாக சித்திரவேலு குடும்பத்துடன் ஒட்டிக் கொண்டான். அவனைத் திருத்துவதற்காகச் சித்திர வேலு கண்டிக்கத் தவறுவதில்லை. ஆனால், அன்னப் பிள்ளை உயிரோடு இருக்கும் மட்டும் அவளும், இப் பொழுது கனகியும் ‘செல்லம்’ கொடுக்கத் தவறவில்லை.
அவனைப் பற்றிய நினைவு வழிப்பாட்டில் ஊர, அவனே வாளியில் தண்ணீருடன் வந்துவிடுகிறான். வெற்றிலை வாயை அலம்பி, கை கால்களைக் கழுவிக் கொண்டு ,குடிப்பதற்கு ஓர் ஏனத்தில் தண்ணீர் எடுத்து வைத்து, முடிச்சை அவிழ்க்கிறான். கொட்டி யாரக் கடலிற் கிடைக்கும் பாரை மீன் குழம்பும், வாகரை முருங்கைக் காய் வெள்ளைக் கறியும். மரவள்ளிக்கிழங்கு ஆணமும் சுவையாக இருக்கின்றன. வஞ்சகமில்லாமல் பசிக்குச் சாப்பிடுகிறான். சாப்பிடும் சொக்கன் கலகலப்பாக ஊர்ப் பேச்சுக் பொழுது, கொடுப்பது வழக்கம். இன்று அதற்கு மாறாக மௌன நிஷ்டையிலிருக்கிறான்.
சாப்பிட்டு, கைகளைக் கழுவித் துண்டில் துடைக்கும்பொழுது, வயிற்றின் நிறைவை எதிரொலித்து ஓர் ஏவறை. வாயிற் சிங்கம் பீடியொன்று ஏற்றப்படுகின்றது. கதைப்பதை மனம் நள்ளுகிறது.
“ஏது கொட்டியார மீன்? மத்தியானமும் இல்லை”
“நான் பின்னேரமா மூதூருக்குப் போயிருந்தன்.”
“அக்கா என்னைப் பத்திக் கேக்கலியா?”
“களம் களம் காவல் காவல் எண்டு இந்தான் உசிரை விடுகுது. இப்பிடி வயலிலேயே படுத்துட்டா உடம்பு என்னத்துக்கு ஆகும்? வீட்டில நானிருக்கிற எண்டு கூட இந்தாளுக்கு நினப்பில்லப்போல’ எண்டு புறுபுறுத்தா. வீட்ட எப்பவாரெண்டு கேட்டரச் சொன்னா”
உதட்டிலிருந்த பீடியைக் கையிலெடுத்து உள்ளே இருந்த புகையை மூக்கினாலும் வாயினாலும் வெளிப்ப டுத்திக்கொண்டே, “நான் என்னடா செய்யிற? என்ர வாரக்காரன்கள் பாடும் பெரும் கஷ்டம். அந்தக் கங்கு வேலிக் கணபதியனைக் கண்ணாலும் காணல்ல என்ன கோதாரி வந்துதோ? பள்ளிக்குடியிருப்புக் கதிர் காமன் சோக்கான ஆள்தான். ஆனா, அவன்ர பெண்சாதி இந்த நேரம் பாத்துத்தானா புள்ளப் பெறவேணும்? மூதூர் ஆஸ்பத்திரியில் இருந்து அவளை வீட்டுக்குக் கொண்டந்ததும் வயலுக்கு வந்துடறதாகச் சொல்லி அனுப்பினான். நாளைக்கு வந்தாலும் வருவான். அப்பிடி வந்தா ஒருதரம் வீட்டுப் பக்கம் வருவனெண்டு சொல்லன். இந்த முருக்கட்டி வெளியில, முன் விதைப் புக்காரங்களின் வேலி இல்லாத மாட்டுத் தொந்தரவு மட்டுந்தானா? கள்ளப் படையள். காளி மனுஷி கூட்டத் திலிருந்து தப்ப வேணுமே” என்கிறான்.
“அப்ப நாளைக்குத்தான் வாரண்டு அக்காட்டச் சொல்லுறன் என்று சொல்லியவண்ணம், அரிக்கன் லாம்பிற்கு அணித்தாக இருந்த சாப்பிட்ட மிச்சமான சோற்று முடிச்சுக்குக் கிட்டச் சொக்கன் செல்கிறான்.
“தம்பி, கொஞ்சம் மிச்சமிருக்கு. சாப்பிடன்.”
“எனக்குப் பசிக்கல்ல.”
வாழை இலைத் துண்டிலிருந்த மிச்சத்தை, களத்து மேட்டின் மேற்குப் புறத்திற் சடைத்திருந்த இலுப்மை மரத்தின் கீழ் வீசுகிறான்.
“இந்த ஊர்க்காரங்களுக்கு பனங்கழி அரிசி திண்டதில அரிசிவிலை தெரியாது. வாய்க்கு வாய் கல்லுக் கடிபடும் கூப்பன் அரிசிகூட வேளைக்குக் கிடைக்கல்லை யெண்டு எத்தின சனங்கள் கஷ்டப்படு குதுகள்” என்று முணுமுணுத்தவாறே கடைசித் தம்’ மை உறிஞ்சி, பீடிக்குறளை எறிகிறான்.
சோற்று முடிச்சின் சீலைத்துண்டை மடித்தெடுத்துக் கொண்டு, ”அப்ப நான் போயிட்டு வாறன்” என்று சொக்கன் புறப்படுகிறான்.
“ஓம். அக்கா பாவம். தனிய இருக்கும். கதவை நல்லாப் பூட்டீட்டுப் படுக்கச் சொல். நீயும் காவலுக்குப் படுக்கிறாய்தானே?”
சொக்கன், சித்திரவேலுவின் பேச்சுக் காதில் விழாதவனைப் போல கிழக்குப் பக்கத்து அரச மரத்தடி யில் நித்திய தவத்தில் உறங்கும் பிள்ளையார் விக்கிர கத்தையுந் தாண்டி, வரம்பில் நடந்துசெல்வது முகிலுக்கு. ஊடாக வெளிச்சம் போடும் நில வொளியிலே தெரிகிறது. அவன் செல்லுந் திக்கைப் பார்த்தபடியே சித்திரவேலு நார்க்கட்டிலில் உட்காருகிறான்.
தூரத்தில், பெரியவெளிக் கிராமம் நிமைகளில் றக்கப் போர்வை விரிக்கும் சோபிதத்திற் காட்சி தரு கிறது. அதைத் தாண்டினால் மணற்சேனை. அவனு டைய வீட்டில் கனகி இந்நேரம் நித்திரையை வாலாயப் படுத்திக் கொண்டிருப்பாள்.
பயிரில் பால்பிடிக்கிற சமயம், அதனைக் குடிக்கக் கூட்டம் கூட்டமாகப் பறக்கும் சில்லித்தாரா வாக்கில் அவனுடைய நினைவுக் குதிர் விரிகின்றது.
பத்தர் தற்குறி யென்றாலும், தன் மகன் சித்திர வேலுவைப் படித்தவனாக்கப் பிரயாசைப்பட்டார். பஸ்ஸுகள் ஏறி, துறைகள் தாண்டி, புளியந்தீவு ‘முத்த வெளிப் பள்ளி’யில் ‘போர்டிங்’கிற் சேர்த்துப் படிப்பித் தார். பெரியவெளிச் சாத்திரியார் சித்திரவேலுவுக்கு கல்வி மத்திமம் என்று கணித்தது உண்மை. தன் மக னைப் பற்றிய ஆசைகள் நெஞ்சில் வெறும் நாற்றுப் பயிராக இருக்கும் பொழுதே, பத்தர் நிலத்தில் மண் டையைப் போட்டுவிட்டார். அன்னப்பிள்ளை வீடென்ற கிணற்றுக்குள் வாழ்ந்த தவளை. தன் கணவனின் வயல் நிலங்கள் எந்தத் திக்கில் இருக்கின்றன என்பதைக்கூட அறியாதவள். மகனைப் படிப்பித்துக் கொண்டு, நிலத்தை ஆயத்திற்கு விட்டுச் சுகங்காண முடியவில்லை. நிலத்தை விற்க வேண்டுமென்ற நிலையே வந்தது. அப்பொழுது, சித்திரவேலு புளியந்தீவுப் படிப்பிற்கு ஒரு ‘கும்பிடு’ போட்டு விட்டு, எட்டுப் ‘புணயல்’ எருமையுடன் நிலத்தை மிதிப்பிக்க வயலுக்குச் சென்றான்.
ஏழு வருடச் சம்பாத்தியம் பிழையில்லை. பழைய வீட்டை விற்று விட்டு, மணற்சேனையில், கிராமத்து அந்தஸ்திற்குப் பங்களாவாகக்காட்சி தரும்புதுமனையை அமைத்தான் அத்துடன் முருக்கட்டிவெளியில் தன் வயலுக்குப் பக்கத்திலிருந்த ஈச்சிலம்பற்றை வீரக்குட்டி யின் நான்கு ஏக்கர் நிலத்தையும் கிரயத்திற்கு வாங்கிக் கொண்டான்.
வாழ்க்கைச் சக்கரம், விக்கனமின்றி, வசதியுடன் நேர்த்தியாகச் சுழன்று கொண்டிருக்கையில், பருவத் திற்கே வந்த மழையாக நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், கனகி என்றழைக்கப்படும் கனகம்மாவை வெருகல் சித்திரவேலாயுத சுவாமி சந்நிதியிற் கண்டான்.தீர்த்தத்தின் போது, வெருகல் கங்கையில் நீர்க் காகமாகத் தலையை மூழ்கி இரண்டு முரடு தண் ணீர் வயிற்றுக்குள் புகுந்துவிட்ட அவதியுடன் தலையை நீருக்கு மேல் நிமிர்த்தியபொழுது தனக்குச் சற்றுத் தூரத்தில், கரையில் குளித்துக் கொண்டிருந்த கனகி தன்னுடைய திணறலைப் பார்த்துச் சிரிப்பதைக் கண்டான்
சூட்டிலே ஏறத் தயாராகக் காய்ந்து விட்ட பயிரின் தங்கத் திருமேனி. கமுகஞ் சம்பா அரிசியை வரிசையாக அடுக்கி வைத்திருப்பதைப் போன்ற பற்கள். இரத்த வெறியன் நெல்லின் நிறத்தில், நெளிந்து புரளும் இதழ் கள். விளைச்சற் காலத்தில் கதிர் கொய்ய வரும் பச்சைக் கிளிகள் சொண்டினைப் போல சற்றே நிமிர்ந்து வளைந்த மூக்கு. நெற்கதிரின் சுணையாக, நுட்பமாக வளர்ந்திருக்கும் புருவங்கள். வரிக்கனில் மீன் வேட் டைக்கு வரும் கிக்கிலுப்பையின் நீலம் படிந்த விழிகள். அதே சமயம் வரால் மீன்களின் துள்ளல் காட்டுஞ் சாயல். களத்து மேட்டிலிருக்கும் சந்திரகாந்தி மரத்தில் தொங்கும் குரும்பைகளாக உடுத்தாடை முடிச்சிலே திமிறிக்கொண்டு மறைவிடந் தேடுந் தனபாரங்கள்.
தோட்டத்து வெருளியாக நிலைத்தான்!
அவள் குறும்புக் குஞ்சிரிப்பிற்குப் போர்வையிட்டு, தலையைக் கவிழ்த்து நாணினாள்.
கிளிவெட்டி நெல்லு ஸ்ரோர்மனேஜரும், ‘லோயர்’ என்ற பட்டப் பெயரின் உரிமையாளருமான வைரமுத்து வும் வெருகலுக்கு வந்திருந்தார். எல்லா விவகாரங் களிலும் ஆள் வெகு சுழியன். பன்னிச்சங்கேணித் துறை கிண்ணியா வரையுமுள்ள சகலரைப் யடியிலிருந்து, பற்றியும், சகலவற்றையும் பற்றியும் அறிந்திருக்கும் நடமாடும் கலைக் களஞ்சியம். பிள்ளையார் சிலையிருக்கும் அரசமரத்தடியிற் கும்பிட்டுக் கொண்டிருந்த அவளை வைரமுத்துவுக்குக் காட்டி விசாரித்தான்.
அறளி நிறச்சீலை கட்டியிருக்கிறதே? ஓம், அவள் கொட்டியாரத்துப் பெட்டை. நல்லா இருந்து கஷ்டப் படுகிற குடும்பம். அந்தோனியார் பள்ளிக்குடத்தில இங்கிலீசும் படிச்சிருக்கு. தாய் தந்தை கிடையாது. தாய்மாமன் தான் தஞ்சம். மாமிக்காரி கொடிசூரி.. நல்ல குணம்.
“வைரமுத்தம்மான்! புண்ணிய இடத்தில-அது வும் சித்திரவேலாயுத சாமியின் கோயிலடியில இப்பிடி நேர்ந்தால் அது விதிதான். கடவுள் புண்ணியத்தில எனக்குச் சொத்திருக்கு. சீதேவியப் போல இவ என்ர வீட்டுக்கு வந்தா…”
சித்திரவேலு ஒற்றைக்காலில் நின்றான். வைர முத்துவும் பூரண ஒத்துழைப்புக் கொடுத்தார். பெண் வீட்டாருடன் எதையும் பேசி முடிக்கக் கூடிய லீயோ மாஸ்டரின் உதவியும் கிடைத்தது. அவர்களிருவரும். ‘குழை யடித்து, அரை மனதில் பிரசவமான தாயின் சம்மதம் பெற்று, பொங்கல் கழித்த தைத்திருநாளுக்கே, வெருகல் சந்நிதியிலேயே கனகியைச் சித்திரவேலுவின் மனைவியாக்கி விட்டனர்.
விவாகச் செலவுகளில் அவன் கஞ்சத்தனங் காட்ட வில்லை. இரு போகமும் விளையும் இருபது ஏக்கர் நிலத்தின் கமக்காரன். ஐந்து ‘தனிக்கார்’ பிடித்து டாம்பீகமாக நடத்தப்பட்டது கல்யாணம். அவளுக்கு மனக்குறை இருக்கக் கூடாது என்பதற்காகத் தன் பணத்தில் அவளை ஒரு நகைக்கடையாக்கினான் கையில் ரொக்கமிருந்ததில்லை. கொட்டியாரத்து வியாபாரி கலந்தரிடமும், வைரமுத்துவிடமும் கடன்பட்டுத் தான் இவ்வளவு விமரிசைகளையுஞ் செய்தான். ‘இது ஒரு கடனே? ரெண்டு வருஷம் வெள்ளாமை நல்லா விளைஞ்சா கண்மூடித் திறக்கிறதுக்கிடையில் கடனைக் குடுத்திடலாம்’.
கனகி வந்த வேளையோ என்னவோ முருக்கட்டி வெளிப் பகுதியிற் கோடை வெள்ளாமை நல்ல விளைச்சல். அப்படி எந்தக் காலமும் விளைந்ததில்லை; பொலிந்ததில்லை. பயிரைச் சூட்டில் அடுக்கி வைத்து விட்டுச்சூடடிக்க அவசரப்படாமல், மாரி வெள்ளாமைக்கு மாடு மிதிப்பித்தான். கையோடு விதைப்பும் நடந்தது. கடனைச் சீக்கிரம் அடைத்துவிட வேண்டுமென்ற தன்மான உணர்வு உந்திய வேகம். வயலில், ‘ஈஷா’ப் பருவத்துப் பயிர்கள், பச்சைப் பசேலென்று வானைப் பார்த்தன. அவற்றையும், கோபுரம் கோபுரமாக எழுந்து நின்ற சூட்டையும் பார்த்து நெஞ்சங் குளிர்ந்தான்.
‘பொங்கலும் அதுவுமாகச் சூடடித்தால், கடனில் ஒரு பகுதியைக் குடுத்திட்டுப் பொங்கலையும் சோக்காக் கொண்டாடலாம். இவ்வெண்ணத்திலே சூடடிப் பதற்கு ஏற்பாடு செய்தான். பொங்கலுக்கு மூன்று வாரங்கள் இருந்தன. அதற்கிடையில் மழை தூறிக் கொண்டேயிருந்தது. ‘தூற்றல் நிற்கட்டுமே எனக் காத்திருந்தான். அவன் நினைத்தது போல அது நிற்காது நாளாக நாளாக மழை கனத்து சரியாக வேதக்காரரின் நத்தார்ப் பண்டிகையன்று பெரு வெள்ளம் போட்டது. ‘நூறு வருஷத்துக்குள்ள இப்பிடி ஒரு வெள்ளத்தை நாங்க பாத்ததில்லை’ என்று தொடு கிழங் ‘கட்டைகள்’ அபிப்பிராயப்பட்டனர். சித்திர வேலுவின் ஒரு பயிரையாவது விட்டு வைக்காமல். சூட்டையாவது மிச்சம் விடாமல் வெள்ளம் கொண்டு போயிற்று. வெள்ளம் வடிந்தது. வெள்ளத் தால் வயல் பாழ்பட்டிருந்தது.வயலிலும் பார்க்க அவனு டைய உள்ளம் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தது.
ஆறுதல் செத்தது. வீட்டில் அமைதியில்லை. மாமியார்-மருமகள் சண்டை வலுத்தது. இந்த அரிசிப் பல்லுக்காரி கால் வெச்ச முதல் வருஷமே இப்பிடி யெண் டால், இனி என்ன இடி விழக் காத்திருக்கோ?’ என்று மாமியார் சீறுவாள். ‘என்ர தலைவிதி இப்படியாப் போச்சு. தொட்டதெல்லாம் கரியாகுது’ என்று கனகி விசும்பிப் பொருமுவாள்.
‘இந்த மூதேவியைக் கொண்டு வந்த கையோட என்ர குடும்பச் செழிப்பு நாசமாய்ப் போச்சு’ என்று முணுமுணுத்துக் கொண்டே, அதே ‘மூதேவி’யின் கையால் கடைசித் தடவையாகத் ‘தெளிவு’ பருகி, இக ஆயுளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் அன்னப்பிள்ளை.
அடுத்து வந்த இரண்டு ஆண்டுகளும்வெள்ளாண்மை வாய்க்கவில்லை. சித்திரவேலு நாணயமானவன். கனகியின் நகைகளை – தாலியைத் தவிர-ஈடுவைத்துப் பணம் பிரித்துக் கல்யாணக் கடன்களை அவன் அடைத்திருந்தான்.
‘அவளுக்குப் பூட்டி வடிவு பாக்கிறவயசு. கல்யாணத் துக்குப் புறகு, வெருகலுக்குப் போகேல்ல. நகை நட்டொண்டும் இல்லாமல்… இந்தத் தடவை சித்திர வேலாயுதசாமி கண்களைத் திறந்து அள்ளித் தந்திருக் கிறார். இதைப் பாத்த அண்டைக்கே கலந்தர் ஆயிரம் தர ஓம் எண்டான். வெள்ளிக்கிழமை காலம் காசு கைக்கு வரும். அண்டைக்கே ஈட்டில இருக்கிற நகை எல்லாத்தையும் மீட்டு, அவளுக்குப் போட்டுப் பாத்து… ஊரில அவளை மலடி எண்டும் பேசுதுகள். வெருக லானே! நீதான் கண் திறக்க வேணும். ஒரு பூச்சியோ புழுவோ ஏற்பட்டு…’
குடலைப் பருவத்திற் கதிர் தள்ளும் பயிரின் வாக்கிற்குதிரும் நினைவுத் தொடரை, “தம்பி! தம்பி!” என ஒலித்த குரல் தடுத்து நிறுத்துகின்றது. எதிரில் பள்ளிக் குடியிருப்புக் கதிர்காமன்.
“மதியத்துக்குப் பிறகுதான் என்ர பெண்சாதியை வீட்டுக்குக் கொண்டு போக டாக்குத்தர் சொன்னார். வீட்டை வந்த பிறகு வஸ் கிடைக்கல்ல. சாப்பிட்டிட்டு நடந்துதான் வாறன். தம்பியும் மூண்டு நாள் காவல். நீ தம்பி வீட்டுக்குப் போயிட்டு நாளைக்கு வாருங்க.
“ஓம் அண்ணை. ஒருக்காப் போயிட்டு வருவம். எப்பிடியும் விடியக்காலமைக்குள்ள வந்துடறன். பாவம், கனகி தனிய. அவளைப் பாத்துட்டு வாறதுதான் நல்லது. ”
“கணபதி வரல்லயே?”
“அவன் பச்சைக் கள்ளன். மாரி வெள்ளாமைக்கு அவனை வாரக்காரனாகச் சேத்துக் கொள்ளவும் மாட்டன்… புள்ளையும் தாயும் சுகமே?”
“வெருகலான்ர புண்ணியத்தில எல்லாம் சுகம். இந்தத் தடவை தம்பிக்கு பயிர் விளைஞ்சிருக்கிற மாதிரி, ஒரு குழந்தையும் பிறக்கப்போகுது.”
கருகிக் கிடக்கும் வானம் பார்க்கும் பயிருக்கு கிடைத்த வான் மழையைப் போன்றிருக்கிறது கதிர்காமனின் பேச்சு. வெற்றிலைக் காகிதத்தை எடுத்து உற்சாகத்துடன் ‘கொடுப்பு’க்கு வெற்றிலை போடுகிறான். சாறன் உதறிக் கட்டப்படுகிறது. தூக்கணாம் குருவிகள் கூடு கட்டியிருக்கும் விளாத்தி மரத்திலே போட்டிருந்த ‘பெனிய’ னை உதறிப் போட்டுக்கொண்டு, “அப்ப பாத்துக்க அண்ணை’ என்று சொல்லி, நாய் விரட்டுந் தடியுடன் வீட்டுக்குப் புறப்படுகிறான்.
அரசமரத்தடித் துண்டால் இறங்குகிறான். வாய்க் காலில் இன்னும் நீர் வடியவில்லை. அந்த நீரில் நடப் பதில் சிறு பிள்ளைத்தனமான குதூகலம் இருக்கிறது. நடக்கிறவன், ஏதோ கால்களிலே தட்டுப்பட நிற் கிறான். குளத்து மீன் பிடிக்க யாரோ வைத்த பறி. எடுத்துப் பார்க்கிறான். ஒரு பனையான் மீன் துள்ளிக் கொண்டிருக்கிறது. ‘எந்த ஏழையின்ர பிழைப்போ என்று பறியை மீண்டும் நீருக்குள் அமுக்கிவிடுகிறான்.
மீன் பறிகளிற் கால் தடக்குப் படலா மென்ற நினைப்பில் வரம்பில் நடக்கிறான். ‘சளக்’ வலக்கால் புதைகிறது. குனிந்து பார்க்கிறான். வக்கடையை மறித்து, நீர் வராமல் எழுப்பப்பட்டிருக்கும் ஈரவரம்பை மிதித்துவிட்டான். வாய்க்கால் நீர் உணர விடப்பட்டி ருந்த வயலுக்குள் கசிந்து கொண்டிருக்கிறது. ‘பாழாப் போன நிதானம்’ என்று முணு முணுத்துக் கொண்டே, கையினால் சேற்றை அள்ளிவரம்பைச் சரி செய்கிறான். சேறுபட்ட கையை வாய்க்கால் நீரில் அலம்பிக்கொண்டு மறுபடியும் வாய்க்காலில் இறங்கி நடக்கிறான். வாய்க் காலின் இந்தப் பக்கம் நீரில்லை. சேற்று மயம். மேட்டு நிலத்திற்கு வந்து சேற்றை உதறும் பொழுது, பெரு விரற்கெவருக்குள் ஏதோ கடிப்பதை உணர்கிறான். ஓர் அட்டை இரத்தம் உறிஞ்சிக் கொண்டிருக்கிறது. காற்றிலே சுழன்றடிக்கும் நுனிக் கொம்பராக கால்களை அப்படியும் இப்பிடியும் உதறுகிறான். நல்ல வேளை. அட்டை கழன்று விடுகிறது. வெற் றிலைக் கக்கலைக் கடித்த இடத்தில் இடுகிறான். நடை திடலிலே தொடர்கின்றது. கம்பிவேலியைத் தாண்டி ஒழுங்கைக்கு வந்து விடுகிறான்.
‘இனி நேர்வழி. ரெண்டு கட்டை தூரந்தான் நான் கதவைத் தட்டிக் குரல் குடுத்ததும் கனகி ஆச்சரி யத்துடன்..’
மல்லிகைத் தீவுக்கும், தேத்தா அடிச்சேனைக்கும் ஒழுங்கைகளைக் கெவர் விடும் பெரியவெளிச் சந்திக்கு வந்துவிடுகிறான். வீச்சு நடையில், தூரம் கால் எட்டிற் குள் நிற்கிறது. வாசிகசாலை உறங்கவில்லை . ஜனசமூக நிலைய மான்யத்தின் ஆசியுடன் எழும்பிய இரு இரும்புக் கம்பிகளின் மத்தியில் எழுந்து நிற்குஞ் சிறிய கட்டடம் அது. அதன் முகப்பிலே தபாற்பொட்டி யொன்று தூங்கி வழிகின்றது.
வாசிகசாலையின் விறாந்தையில் அமர்ந்து மணி யம், இளையதம்பி, கோணாமலை, காசுபதி ஆகியோர் அரசியற் ‘சமா’ நடத்துகிறார்கள். இலங்கை அரசிய லின் மிகச் சிக்கலான மொழிப் பிரச்சினையைக் கந்தப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
‘இவங்களுக்கு என்ன? முன் விதைப்பு. சூடுகூட அடிச்சாச்சு!’
சித்திரவேலுவை அடையாளங் கண்டு, “‘ 6T GUT னண்ணை, இந்த நேரத்திலே?” என்று மணியம் குரல் கொடுக்கிறான்.
“ஓம், தம்பி களத்திலிருந்து இப்பதான் வீட்டை போறன். வரட்டுமா?” என்று சொல்லிக்கொண்டு. பேச்சுச் சள்ளைக்குள் மாட்டிக் கொள்வதிலிருந்து தழுவி, நடையைத் துரிதப் படுத்துகிறான்.
‘இதுகளோட நிண்டு பேசினா பியதாசா கடையும் பூட்டீடும். ஜேமீஸ் கடை இந்த நேரத்தில் திறந்திருக்கு மெண்டு நம்பத் தேவையில்லை. மூண்டு நாளாப் போகல்ல. ஆசையாப் போற நேரம் ஏதாவது வாங்கிப் போகலாம்!’
பியதாசா கடை வந்துவிடுகிறது. வெற்றிலைக் கடுதாசிக்குள் வைத்திருந்த சில்லறைகளை எடுத்துக் கொடுத்து, இரண்டு மூன்று தொதல் கட்டிகளும், நாலைந்து வாழைப்பழங்களுங் கட்டித்தரச் சொல்லு கிறான். ”மல்லி, பக்குவமாக மடிச்சுத் தா”.
பொட்டளம் கைக்கு வருகிறது. அதனைக் கக்கத் திற்குள் வைத்துக் கொண்டு நடக்கிற வேகம்… பிரிவில் மதாளித்து வளரும் விரகதாபத்திற்கு எப்பொழுதுமே ஒரு வேக முண்டு..
வீடு நெருங்கி விடுகிறது.
‘வோக்கு’க்குக் கீழே வரிக்கன் ஓடாமல், மண் புழுக்கள் நெளியும் வாக்கில் சிற்றலைகளை சுழித்து நகர்கின்றது.
முகிற் கூட்டங்கள் கலைந்து, சந்திரிகை அம்மணப் பொலிவு சிந்துகிறாள். வீட்டின் முகப்பிலுள்ள நசிவித் தெங்கின்பசும் ஓலைகளினூடாக நிலவொளி முற்றத்தில் ஒழுகுகின்றது. சீதளச் சூலுற்ற காற்று. சில்வண்டின் சங்கீதம். மனற்சேனை, இரவு நாயகனின் மார்பிலே தன்னை மறந்து சயனிக்கிறாள்.
‘கனகியும் தூங்கிக் கொண்டிருப்பாள். என்ர குரலைக் கேட்டதும்…?’
கடப்பைத் தாண்டுகிறான். அவனைக் கண்டதும் சொக்கன் கொல்லைப்பக்கமாக ஓடுகிறான். ‘என்னைக் கண்டு ஏன் ஓடவேணும்? காவலுக்குப் படுக்கச் சொன்னா.
கதவு இலேசாகத் திறந்து கிடக்கிறது, கனகியின் குரல் கேட்கிறது. சித்திரவேலுவின் உள்ளம் வெள்ளத் திற் கழுவப்படும் பயிராக அலைகின்றது.
”அவர்தான் என்ர புருஷன். ஒரு நாளும் துரோகம் செய்யமாட்டன்”.
“இப்ப பத்தினி வேஷம் போடுறியா? மூதூரிலை படிக்கும்பொழுது நீ என்னுடன் வைத்திருந்த தொடர்பு கள் எல்லாவற்றையும் சொல்லி உன்னை அவமானப் படுத்துவன். இணங்கு”
”அந்தக் காலத்தில் நீ என்னைக் கட்டுவாயென்று நினைச்சு நடந்தன், நீ மாஸ்டர். என்னை விட்டிட்டு பெரிய சீதனத்தோடை ஒரு ரீச்சரை முடிச்சாய். ரெண்டு எடுத்துக் கும்பிட்டன்…கலியாணங்கட்டி கையையும் கோணமலைக்குத் துலைஞ்சு போன நீ. இஞ்ச திரு இண்டைக்கு எப்பிடி வந்தாய்?”
“கனகி நான் மல்லிகைத் தீவுப் பாடசாலைக்கு மாறி வந்ததிலிருந்து இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தேன்”
”பாவி!”
“ஏன் சத்தம் போடுகிறாய்? உன்ர புருஷன் இன்றிரவு வரமாட்டான். சொக்கன் சொன்னான். நானும் வந்த காரியத்தை முடிக்காமல் போகவும் மாட்டன்”
‘‘அவனுக்குப் போட்ட சோத்தை ஒரு நாய்க்குப் போட்டு வளத்திருந்தாலும் உன்னை இப்ப கடிச்சுத் துரத்தியிருக்கும். சித்திரவேலாயுதச் சாமியறியச் சொல்லுறன். கையைத் தொடாதை விடு.”
“இணங்கா விட்டால், நீ எனக்கு எழுதியிருக்கிற கடிதத்தை எல்லாம் உன்ர புருஷனுக்குக் காட்டி, உன்னை விலக்கி வைக்கச் செய்வேன்”
“செய். உன்னோட கூடீட்டுச் சின்னத்தனம் படமாட்டன்.”
‘ஈப்பூச்சி பயிரில் விழுந்து பாலைக் குடிச்சால் அது பதராகும். சூடடித்து, தூற்றும் பொழுதுதான் அது அகற்றப்படும். ஆனால் கனகி?’
சிந்தனையில் நின்ற சித்திரவேலு சுய உணர்வு பெறுகின்றான்.தொண்டையைக் கனைத்து, ”கனகி!” என்று குரல் கொடுக்கிறான்.
– வீ (சிறுகதைகள் தொகுப்பு), முதற் பதிப்பு: நவம்பர் 1992, மித்ர வெளியீடு, சென்னை.
![]() |
எஸ்பொ என அறியப்படும் ச.பொன்னுத்துரை (24 மே 1932 - 26 நவம்பர் 2014) ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, புதினம், நாடகம், கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, அரசியல் என பல பரிமாணங்களிலும் எழுதியவர். 40திற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 1989 முதல் புலம் பெயர்ந்து ஆத்திரேலியாவின் சிட்னி நகரில் வாழ்ந்து வந்தார். சென்னையில் மித்ர என்ற பதிப்பகத்தை நிறுவி அதன் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டிருந்தார். பொன்னுத்துரையின்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
சுகந்தம்
பொ.கருணாகரமூர்த்தி
October 3, 2026
கோணங்கள்
ரேவதி பாலு
October 3, 2026
சரசுவின் சௌந்தர்ய லஹரி
கவிஞர் கண்ணதாசன்
October 3, 2026
