வாக்குப் பொறுக்கிகள்

0
கதையாசிரியர்: நாஞ்சில்நாடன்
தின / வார இதழ்: கணையாழி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
முதல் வெளியீடு: 1981
இணைய வெளியீடு: November 26, 2026
பார்வைகள்: 115
வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்

(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்தத் தொகுதியில் ஒரு லட்சத்து இருபத்தி மூவாயிரம் வாக்காளர்கள். பத்து வருஷம் முந்திச் செத்தவர்கள், நாடு விட்டுப் போனவர்கள் எல்லாம் சேர்த்து. இதில் சுமார் இருபதினாயிரம் நாடார் மகாஜன வாக்குகள். ஏறத்தாழ நாற்பதினாயிரம் அரிசன வாக்குகள். வண்ணார், நாவிதர், குயவர், குறவர்,மறவர்,ஆசாரி, பூசாரி எல்லாம் சேர்த்து மூவாயிரம் பேர் இருப்பார்கள். மீதி அறுபதினாயிரமும் வேளாளர் அல்லது வெள்ளாளர் அல்லது பிள்ளைமார்.

வேளாளர்களில் சைவர், காணியாளர், மக்கள்வழி, மருமக்கள்வழி, செட்டியப் பிள்ளைமார் என பிரிவுகள் பலவும் உண்டு. கொள்வினை கொடுப்பினை கிடையாது. இதில் மருமக்கள் வழி தவிர மற்ற வேளாளர் கள் எல்லோரும் சொற்பம்தான்.

எனவே அந்தத் தொகுதியில் – என்னதான் சமயச்சார்பற்ற சமத்துவக் குடியரசு என ஐந்தாம் வகுப்பு முதல் பாடம் நடத்தினாலும்-மருமக்கள் வழி வேளாளன் ஒருவனைத் தவிர மகாத்மாகாந்தியே வந்து தேர்தலுக்கு நின்றாலும் ஜெயித்து விட முடியாது. ஆகவே எல்லா அரசியல் கட்சிகளும் அங்கு ஒரு மருமக்கள் வழி வேளாளனைத் தான் வேட்பாள னாக நிறுத்தும். இங்குள்ள அரசியல் கட்சிகளுக்கு – தேர்தல் அறிக்கை களை வைத்து ஆராய்ந்து பார்த்தாலும் கூட – பெரிய வேறுபாடுகள் கிடையாதாகையால், வேட்பாளர் தேர்தலுக்கு முன்னும் பின்னும் எந்தக் கட்சியில் இருப்பார் என உத்திரவாதம் ஏதும் கிடையாது. இதில் போய் காவிரியில் சாக்கடை கலக்கிறதே என்ற சோகம் யாருக்கும் இருக்காது.

அது ஒரு சிறிய மாவட்டம்தான். ஏழே ஏழு சட்டப் பேரவைத் தொகுதிகளே உண்டு. அதில் ஐந்தில் நாடார் வேட்பாளர் மட்டுமே வெற்றி பெறமுடியும். ஆறாவதான கடற்கரையோரத் தொகுதியில் ஒரு பரதவர் வெற்றி பெறமுடியும். ஆனால் தேர்தல் புத்திசாலியான ஒரு தேசியத் தலைவர், ஐந்து நாடார் தொகுதிகளையும் ஆறாகப் பிரித்து, சிறியதாக, மற்ற ஐந்து தொகுதிகளையும் தொட்டுக் கொண்டு கடற் கரையோரமாக நீண்டு கிடந்த ஆறாவது பரதவர் தொகுதியைப் பிய்த்துப் பிய்த்து ஆறு தொகுதிகளிலும் சேர்த்து ஆறிலும் நாடார் வேட்பாளர்களே வெற்றி பெறுமாறு செய்தார். இந்த ஆறு சட்டப் பேரவைத் தொகுதிகளை யும் சேர்த்து ஒரு நாடாளுமன்றத் தொகுதி. அதில் அவரே வந்து தேர்தலுக்கு நின்று கொள்வார். தேர்தல் முடிந்தபிறகு சாதியைத் தனியாக ஒழித்துக் கொள்ளலாம் வசதி போல. என்ன காரணத்தாலோ இந்த வேளாளர் தொகுதியை மட்டும் புறவெட்டாகத் தள்ளி, பக்கத்து மாவட்ட நாடாளுமன்றத் தொகுதியோடு கூட்டிக் கொடுத்தார். ஒருவேளை நூற்றைக் கெடுத்த குறுணி போல் மற்ற தொகுதிகளைக் கெடுத்து விடக் கூடிய கிருத்திருமக்காரர்கள் என்பதால் தனித்து வைத்தாரோ என்னவோ?

அந்தத் தொகுதி தோன்றிய நாள் முதலாக எப்போதும் இரண்டு வேளாளர்களுக்கே கடுமையான போட்டி இருந்து வந்திருக்கிறது. சமயங்களில் அவர்கள் பெரியப்பா சித்தப்பா மக்களாகவோ அல்லது மாமன் மருமகன்களாகவோகூட இருந்திருக்கிறார்கள். ஆனால் சந்தேக மில்லாமல் பணக்காரர்களாக இருப்பார்கள்.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்தொன்றில் குடிசைக்கும் ஆல மரத்துக்கும் ஐம்பத்தாறில் ஆலமரத்துக்கும் யானைக்கும் அறுபத் திரண்டில் ஆலமரத்துக்கும் இரட்டைக்காளைக்கும் அறுபத்தி ஏழில் இரட்டைக்காளைக்கும் உதயசூரியனுக்கும் எழுபத்தொன்றில் உதய சூரியனுக்கும் பசுவும் கன்றுக்கும் எழுபத்தைந்தில் இரட்டை இலைக் கும் உதயசூரியனுக்கும் போட்டி.

வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் இந்த எண்பதாம் ஆண்டுத் தேர்தலில் விசித்திரமாய் மூன்று வேளாளர்கள் போட்டி போட் டார்கள். இவர்கள் தவிர சுயேச்சையாய் எப்போதும் சிலர் வேறுசில நோக்கங்களுக்காக – நிற்பதுண்டு. அதெல்லாம் ஒரு போட்டி அல்ல.

செல்வாக்குள்ள ஒரு நாடார் அல்லது அரிஜன சுயேச்சை மட்டும் போட்டியிட்டால் இந்த வேளாளர்களின் பெட்டி கிழிந்து போகும் என்றாலும் இந்தத் தேர்தலில் அவ்வளவு முன்னெச்சரிக்கையாய் யாரும் இருக்கவில்லை.


ஐயப்பன் பிள்ளையின் அப்பா ஆதிமூலம் பிள்ளை அந்தத் தொகுதி யிலேயே முதல் நம்பர் பணக்காரர். புள்ளி பெரியபுள்ளி. சுமார் எட்டுப் பத்து மைல் சுற்றளவில் அவருக்கு வயல்கள், தோப்புகள், விளைகள், குளங்கள், காடுகள் எனக் கிடந்தன.

வயல்கள் கிடக்கும் ஊர்களில் எல்லாம் அறுத்தடிப்புக் களம். களத்தை ஒட்டி நெல், உளுந்து என போட்டு வைக்க பத்தயப்புரை, சிறிய வீடு, உழவு சீசனில் போகும் மாடுகள் கிடக்க மாட்டுத் தொழுவம்…

அவர் தொழுவத்து மாடுகளை மேய்க்க அவிழ்த்துவிட்டால் தெரு கொள்ளாமல் போகும். எட்டுப் பத்து சக்கடா வண்டிகள், மூன்று வில் வண்டிகள் இதெல்லாம் போக போக்குவரத்துக்கு என கொக்கு நிறத்தில் ஒரு அம்பாசடர் கார்.

எளிமையான மனிதர். தூய கதர் வேட்டி, கதர்ச்சட்டை, கதர்த் துண்டு, கதர்கோமணம். அடக்கமாக வெட்டப்பட்டு, காய்ச்சிய தேங்காய் எண்ணெய் புரட்டி வாரப்பட்ட தலைமயிர். தினமும் காலை ஏழு மணிக்குள் முகம் வழித்து குளியலும் ஆகிவிடும். பிறகு காலைப் பல காரம் முடித்துவிட்டு ஏழரை மணிக்குக் காரில் ஏறி அமர்ந்தால் திரும்பி வர பன்னிரண்டு மணி ஆகும்.

அந்தப் பெரிய அம்பாசடர் காரில் முன் சீட்டில் டிரைவர். பின் சீட்டில், டிரைவருக்கு குறுக்கு வெட்டு மூலையில் காரினுள் அமுங்கி முகம் மட்டும் சன்னல் வழியாகத் தெரிய ஆதிமூலம் பிள்ளை. அந்த வட்டாரத்தில் பலருக்கும் இது பழகிப்போன காட்சி. நான்கு மக்களும் நல்ல நிலைமையில் இருந்தனர். அவரவர்க்கு கார் இருந்தது. எனவே காரில் அவர் மட்டும்தான்.

எப்போதும் எவரையும் உடன் ஏற்றிக்கொண்டு போனதை யாரும் பார்த்தது கிடையாது.

நெடுஞ்சாலையில் இருந்து ஆதிமூலம் பிள்ளையின் சொந்த ஊர் இரண்டு மைல் உள்வாங்கி இருந்தது. இடையில் இரண்டு சிறிய கிராமங் கள் உண்டு. ஒன்றே முக்கால் மணிக்கு ஒருமுறை அந்தப் பாதையில் ஆளை வாரி அடைத்துக்கொண்டு, புயல் வருவதுபோல் புழுதியைப் பறத்திக்கொண்டு ஒரு பஸ் போகும். அது நகருக்குப் போய்த்தான் மறுபடியும் திரும்ப வேண்டும். எனவே இடைப்பட்ட நேரத்தில் எல்லோரும் கால்நடையிலோ, சைக்கிளில் டபிள்ஸிலோ அல்லது எத்துக் குத்தாக வரும் பாரவண்டியிலோதான். எப்போதாவது பஸ் பிரேக்டவுன் ஆகிவிட்டால் அன்றைய கதை அவ்வளவுதான். பஸ் இல்லாதபோது வெயிலானாலும் மழையானாலும் குத்திருட்டு ஆனாலும் தனியாகவோ இரண்டு மூன்று பேராகவோ நடந்துதான் ஆக வேண்டும்.

இந்த மாதிரி நேரங்களில் எல்லாம் தான் மட்டும் ஒரு மூலையில் ஒதுங்கி இருந்துகொண்டு காலியாகக் காரைக் கொண்டுபோவதை பெரு மூச்சோடு பார்த்துக்கொண்டே நடப்பார்கள். சொந்த ஊர்க்காரர் ஆனாலும் சரி, நெருங்கிய சொந்தக்காரர் ஆனாலும் சரி ஏற்றுவது கிடையாது.

இதனாலேயே அந்தப் பக்கத்தில் அவருக்கு அவ்வளவு நல்ல பெயர் கிடையாது. ஆனால் எதனாலோ அவர் பிள்ளைகளுக்கு நல்ல பெயர் இருந்தது.

மகன் ஐயப்பன் பிள்ளை வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு – ஆதிமூலம் பிள்ளையின் காரில் அவருடன் ஒன்று இரண்டு என ஆட்கள் சவாரி செய்தனர். தெரிந்தவர்கள், சொந்தக்காரர்கள் என்று ஆரம்பித்து யார் யாரெல்லாமோ சவாரி செய்தார்கள்.

சந்தைக்குப் போய்விட்டு குட்டிச் சாக்கு மூட்டைகளோடு –

மலைக்குப்போய் கிழங்கு வாங்கி விற்றுவிட்டுச் சாக்குச் சுருணையோடு –

கழுவி ஈரம் உலராத மண்வெட்டியோடு –

கைக்குழந்தையும் தாயும், துணைக்கு அடுத்து வீட்டு அக்காளுமாக சர்க்கார் ஆஸ்பத்திரிக்குப் போய்விட்டு மருந்துக் குப்பியோடு –

பிள்ளையுண்டாயிருக்கும் செந்தக்காரப் பெண்ணைப் பார்த்துவர முந்திரிக் கொத்து நிரம்பிய பித்தளைப் போணியோடு –

டிக்கியில் அடைத்த அழுக்கு மூட்டையோடு –

அதே ஓரத்தில், அதே சலனமற்ற பாவத்தில் ரோட்டைப் பார்த்துக் கொண்டு ஆதிமூலம் பிள்ளையும் காரில் சவாரி செய்துகொண்டிருந்தார்.


டாக்டர். பரமேஸ்வரன் எம்.ஏ., (பொருளாதாரம்) எம்.ஏ., (சரித்திரம்): எம்.லிட்., பி.எச்டி., பாரத துணைக்கண்டத்தின் பொருளா தார நிபுணர்களில் ஒருவர். சில காலம் உள்ளூர் கல்லூரி ஒன்றில் பொருளாதாரத் துறைத் தலைவராக இருந்தார். பிறகு சென்னைப் பல்கலைக் கழகத்தில் ரீடரானார். பின்பு ஜெர்மன் பல்கலைக் கழகம் ஒன்றில் ‘சாளுக்கியர் காலத்தில் இந்தியப் பொருளாதாரம் என்று இரண் டாண்டு காலம் ஏதோ ஆராய்ச்சி செய்தார். தொடர்ந்து ஆப்ரிக்க நாடொன் றுக்குப் பொருளாதார ஆலோசகராக ஏழெட்டு ஆண்டுகள் பணிபுரிந்தார்.

இந்தத் தேர்தல் சகதியில் புரள என்றே ஆலோசகர் பதவியையும் அழகான பங்களாவையும் ஆடம்பர வசதிகள் பலவற்றையும் துறந்து விட்டு இந்தியா புறப்பட்டு வந்தார். ஆப்ரிக்காவிலேயே செட்டில் ஆகி யிருந்த பிரான்சிஸ் செல்வராஜின் மகள் எல்ஸி மரியம்மை செல்வ ராஜைத் திருமணம் செய்து எல்ஸி மரியம்மை பரமேஸ்வரனாக ஆக்கிக் கொண்டதால் அவளை மட்டும் உடன் அழைத்துக்கொண்டு வந்தார். உள்ளூரில் இருந்த முதல் தாரமான இசக்கியம்மை பரமேஸ்வரனுக்கு இது பற்றி எல்லாம் பெரிய சித்தாங்கம் இல்லை.

டாக்டர் பரமேஸ்வரனுக்கு ஐம்பத்தெட்டு வயது. சாம்பல் நிறத்தில் கதர் கால் சட்டை, சாம்பல் நிறத்தில் கதர் அரைக்கைச் சட்டை. ஆதி மூலம் பிள்ளை செய்வது போல் வேட்டியை பின்புறம் தூக்கிக்கொண்டு கோமணத்தை இறுக்கிக் கட்டுவதில்லையாதலால் இவர் அணிவது கதர் உள்ளாடைகள் தானா என்று பொது அறிவு இல்லை. வெள்ளியாய் நரைத்த தலையின் பின்புலத்தில் கறுப்பு பிரேமிட்ட கண்ணாடி. புல்லாங் குழல் கனத்தில் சிவப்பு நிறத்தில் பிரசிடென்ட் பேனா.

தோற்றத்தில், அவர் பெரிய அறிவாளி என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. இவர் எப்படி இந்தச் சாதிச் சேற்றில் பன்றியாய் புரள்கிறார் என்பதில் பலருக்கும் சந்தேகம் உண்டு. இவர் கட்சியும் இவரும் வெற்றி பெற்றால் தமிழ்நாட்டின் நிதியமைச்சராய் வரப் போகிறார் என்று பரவலாக ஒரு வதந்தியும் அந்தத் தொகுதி முழு வதும் இருந்தது. வெற்றி பெறாமல் போனால் கூட திட்டக்கமிஷனிலோ, பொதுத்துறை நிறுவனங்களிலோ, வேறு சில்லறை வெளிநாட்டுத் தூதரங்களிலோ இவருக்கு ஒரு நாற்காலி கிடைக்காமல் போகாது என்பதில் விஷயமறிந்த வட்டாரங்கள் நம்பிக்கை வைத்திருந்தன.

பிற்காலத்தில் மகனுக்கு ஒரு வேலைக்கோ, எம்.பி.பி.எஸ். அல்லது இன்ஜினீயரிங் அட்மிஷனுக்கோ உபயோகமாக இருக்கும் என பல ஊர்களில் பெரிய மனிதர்கள் ஓட்டுக்காக இறங்கி வேலை செய்தனர்.

டாக்டர் பரமேஸ்வரனின் வேர் அறுபட்டுப் பல ஆண்டுகள் ஆகிவிட்டபடியால், வீடு வீடாகச் சென்று ஓட்டு கேட்கும்போது- இசக்கியம்மைக்கு அவ்வளவு பஸ்காரம் இல்லாததால் – விஷயம் தெரியாமல் எல்ஸி மரியம்மை பரமேஸ்வரனோடு சென்றார். எல்ஸி மரியம்மையின் ஜாதி மாறிய கொச்சைத் தமிழும் கிராப்பும் கையில்லாத ரவிக்கையும் தங்க பிரேமிட்ட கண்ணாடியும் செருப்பும் சுத்த சுயம்பு வேளாளர் வீடுகளில் ஒருவிதமாய் முகச்சுளிப்பை ஏற்படுத்தியது. தாய்க் குலத்தின் வாக்குகள் பெருவாரியாய் ஏற்கெனவே வேறொரு பக்கம் சாய்ந்திருக்கும் இந்த நிலைமையில் இந்த அவமதிப்பும் சேர்ந்து விட்டால் டாக்டர் பரமேஸ்வரன் மறுபடியும் நைல்நதி தீரத்துக்கு போக வேண்டியது வந்துவிடும் என்றுணர்ந்த அவரது ஆலோசகர்கள் தயங்கித் தயங்கி அவரிடம் சங்கதியைச் சொன்னார்கள்.

மறுநாள் தொட்டு ஓட்டுக் கேட்க இறங்கும்போது காரில் இசக்கியம் மையும் இருந்தாள். வெட்டினால் வெட்டு இறங்காமல் கழுத்து நிறையீ முத்து மாலை, கொச்சக்கயிறு செயின், அட்டியல், காசுமாலை, காதில் பதினோரு சிவப்புக்கல்கம்மல், மூக்கின் இருபுறமும் ஏழுகல் மூக்குத்தி, கைகளில் கடயம்போல் தங்கத்தை உருட்டி அடித்த காப்புகள், அம்மனுக் குச் சாத்தியது போல் அரக்குக் கலர் பட்டு, தமிழ் சினிமா குடும்பப் பெண்’ வைப்பதுபோல் காலங்குல ஆரத்தில் குங்குமப் பொட்டு, பிச்சிப்பூ நாறும் பெரிய கொண்டை…

வேளாளர் தெருக்களில் டாக்டர் பரமேஸ்வரனோடு இசக்கியம் மையும் இறங்கி ஓட்டுக் கேட்க நடக்கையில் ரொம்ப ஐசுவரியமாக இருந்தது.

”யக்கா! இதுக்காச்சுட்டி நீ இந்த வெயில்லே அலையணு மாக்கும்…” என்று வெள்ளாங்குடிப் பெண்டுகள் உபசாரம் செய்தனர்.

வெள்ளாங்குடித் தெருக்களில் ஓட்டு வேட்டை முடிந்ததும் பக்கத் திலிருக்கும் அரிஜனச் சேரிகளில் ஓட்டுக் கேட்கப் போகையில்

இசக்கியம்மை காரில் இருந்தாள். எல்ஸி மரியம்மை, டாக்டர் பரமேஸ் வரளோடு இறங்கி நடந்தாள். கழுத்தில் கிடந்த சிலுவை டாலரை எடுத்து சாரிக்கு மேலே நெஞ்சில் விட்டுக்கொண்டாள். உபதேசியார்களிடம் அக்கறையோடு பேசினாள். சுற்றிக் கூடிய சேரிச்சிறுவர்களின் அழுக்கைப் பொருட்படுத்தாமல் முலைப்பாரம் இழுக்கக் குனிந்து கன்னத்தை நாடியைத் தொட்டு செல்லம் கொஞ்சினாள். கைக்குழந்தை களை வாங்கி முத்தம் ஈந்தாள்.


குலசை அறிவரசன் விபரம் தெரிந்த நாள் முதலாகவே தலைவரை உயிரின் உயிராய் நேசிப்பவன். உயிரைத் தமிழுக்கும் உடலை மண்ணுக் கும் ஈந்துவிட எப்போதோ சித்தம் செய்து விட்டவன். விலைவாசி உயர்வுப் போராட்டத்தில் மூன்றுமாதம், இந்தி எதிர்ப்புப் போராட்டத் தில் இரண்டு வாரம் சிறையில் இருந்து திரும்பியவன் எமர்ஜென்சி காலத்தில் மட்டும் ‘மிசா’வுக்கு அஞ்சி இதயக்கோளாறு வந்து இன்டென் ஸிவ் கேர் யூனிட்டில் இருக்கும்படி ஆகிவிட்டது. இன்றேல் பெயருக்கு முன் ‘மிசா’ பட்டம் சேரும் பேறு கிடைத்திருக்கும்.

வடசேரி நெசவு ஆபிசில் பதினாலு வயதில் தாரு சுற்றப் போன நாள் முதலாய் வெள்ளிக்கிழமை தோறும் அரசியல் கூட்டங்கள்கேட்பதுதான் வழக்கம். வீடெங்கும் தலைவரின் விதவிதமான காலண்டர் படங்கள். பத்மநாப சுவாமிக்கு ஆராதனையும் அர்ச்சனையும் ஆகும்போது குறுக் கிலும் நெடுக்கிலும் ஒளிந்து ஒளிந்து ஓடும் கண்டாங்கிப் பாச்சாக் களுக்கும் சேர்த்தே ஆவதுபோல் தலைவருக்கு நடக்கும் காகிதமாலை, ஊதுவத்திப் புகை கௌரவங்கள் யாவும் தலைவர் இடையில் கை போட்டு நிற்கும் ஆடலரசி, புன்னகை அரசி, நடையழகிகளுக்கும் கிடைத்ததை அறிவரசன் பொருட்படுத்தவில்லை.

தறியில் இறங்கி நெய்யப் புறப்பட்டபோது உள்ளூர் கிளையின் செயலாளர் – சினிமாவில் அடிக்கும் பெருமழை இடி மின்னலாய் தமிழ் நாட்டின் அரசியல் குட்டை குழம்பிய போது – அறிவரசன் எப்படியோ மாவட்டச் செயலாளர் ஆகிவிட்டார்.

மாவட்டச் செயலாளர் ஆனபிறகு நகரின் மையத்தில் இரண்டுமாடி வீடு. அசம்பு மலையில் நூற்றுப் பத்து ஏக்கர் ரப்பர் எஸ்டேட்டு. அடுத் திருந்த அரசாங்கப் புறம்போக்கு இருநூறு ஏக்கரை வளைத்தது தனி. இரண்டு அம்பாசடர்கார். இரண்டு லாரிகள். இந்து அறநிலையக்கோயில் ஒன்றில் வருமானமுள்ள அறங்காவலர் பதவி. மாவட்ட நிலவள வங்கி யில் நிர்வாக இயக்குனர். ஈதெல்லாம் எட்டு ஆண்டுகளில் இந்த நாட்டி லல்லாமல் வேறெங்கு சாத்தியம்?

ஒற்றை வேட்டியும் வியர்வை ஊறி உலர்ந்த கைத்தறிச் சட்டையும் தோளில் பிள்ளையைப் போல் கிடத்திக்கொண்ட துண்டுமாக அறிவரசன் வீடுவீடாக ஓட்டு வேட்டை ஆடினார்.

“யக்கா…மயினி… ஆத்தா…” என்று கால்களில் விழுந்து விழுந்து எழுந்தார்.

மத்தியானம் ஒரு வீட்டில் நுழைந்தபோது வீட்டுக்காரர் விபூதி பூசி சாப்பிடத் தயாரானவராய்க் காணப்பட்டார். புளிக்கறி கொதிக்கும் மணம்.

ஓட்டுக் கேட்க வந்தவரைப் பார்க்க வீட்டுக்காரியும் அடுக்களை யிலிருந்து வெளியே வந்தாள்.

ஒருவிதமாய் தளர்ச்சி வந்தவர் போல் ஓய்ந்து படிப்புரையில் அமர்ந் தார் அறிவரசன்.

”பெரீம்மா… சோறுவடிச்ச கஞ்சித் தண்ணியிலே ரெண்டு உப்புப் பரல் போட்டுத் தருவேளா? வெயில்லே அலைஞ்சு ஒருமாதிரி தலை சுத்துக்கு…”

“இன்னும் சாப்பிடல்லியாப்பா?”

“இல்லம்மா. காலம்பற இருந்தே அலைச்சல்லா? நம்ம ஊரிலே கிளப்பா இருக்கு. ஒரு டீ கூட குடிக்க முடியல்லே…”

“நம்ம வீட்டிலே சாப்பிடலாம்ணா கறி ஒண்ணும் சீரில்லியே!” வீட்டுக்காரர் இழுத்தார்.

”கறி என்னத்துக்கு கறி? கொஞ்சம் பழையதும் ரெண்டு உப்புப் பரலும் பச்சை மொளகாயும் குடுங்க போரும்…”

வெறும் புளிக்கறியையும் காணத் துவையலையும் வைத்துக் கொண்டு அறிவரசன் சாப்பிடுவதை அந்தப் பெரியம்மா மனம் கசியப் பார்த்துக்கொண்டு நின்றாள். அறிவரசன் சாப்பிடுவதைப் பார்க்க என்று வீட்டு முற்றம் கொள்ளாமல் அக்கம் பக்கக்கூட்டம்.


அந்தத் தொகுதியில் ஓட்டுப் பதிவு எல்லாம் முடிந்து ஓட்டு எண்ணிக்கை நடந்துகொண்டிருந்தது. மூவரில் ஒருவர் ஜெயிக்கத்தான் போகிறார்கள்.

– கணையாழி, ஜூன்1981.

நன்றி: https://nanjilnadan.wpcomstaging.com/

நாஞ்சில்நாடன்

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்நாஞ்சில்நாடன் வாழ்க்கைக் குறிப்பு: பெயர் : G. சுப்ரமணியம் (எ) நாஞ்சில் நாடன்எழுதும் துறை : நாவல், சிறுகதை, கவிதை,...

மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *