கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 11, 2026
பார்வையிட்டோர்: 8 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்று நோன்மதிக்கு முதல்நாள். அந்த வெண்கலப் பாத்திரத் தொழிற்சாலையில் அரை நாள் வேலை முடிந்து, நான் பக்கத்து உணவு விடுதியில் நண்பகல் உணவை வயிறு புடைக்க அருந்திக் கொண்டு, பஸ்தரிப்பு நிலையத்துக்கு வந்தேன். பட்டணத்து பஸ்நிலையம் போகும் பஸ் வந்தது. பஸ்ஸில் ஏறி அமர்ந்துகொண்ட என்பார்வை வீதியோரம் படிந்து சென்றுகொண்டிருந்தது.

பட்டணத்து வீடுகள் சில வற்றின் சுற்றுமதில்களில் ”விளம்பரம் ஒட்டாதீர்” என்ற வேண்டுகோள் பொறிக்கப்பட்டிருந்தது. ஆனால் “விளம்பரம் ஒட்டாதே” என்ற அறிவித்தலே மிகப் பல வீடுகளின் சுற்று மதில்களில் தென்பட்டு என் நெஞ்சில் அருவருப்பையும் ஆததிரத்தையும் வாரி இறைத்த வண்ணமிருந்தன. எதற் கும் ஒரு மரியாதை வேண்டாமா?

விளம்பரம் ஒட்டப்படும் வீடுகளின் சொந்தக்காரர்களுக்கு எவ்வகை நட்டங்கள் ஏற்படுவதாக இருந்தாலும் விளம்பரம் ஒட்டும் தொழிலாளிகள் கொலைஞர் கொள்ளைக்காரர் போன்று அத்தனை இழித்தவர்களா? அவமதிப்புக்கு ஆளாகவேண்டியவர்களா? விளம்பரம் ஒட்டாதீர் என்று மரியாதையாக எழுதத் தெரியாமலா இப்படி எழுதுகிறார்கள்? அப்படியானால் “இலஞ்சத்தாலும், சுரண்டல் சுருட்டல்களாலும் பணக்காரராகிவிட்ட இவர்களில் பெரும்பான்மையோரை எப்படி அழைக்க வேண்டும்?” என்று என் நெஞ்சு குமுறலாயிற்று. 

பஸ் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து நான்குமைல் தூரத்திலிருக்கும் எனது ஊருக்கூடாகச் செல்லும் பஸ்ஸில் ஏறி டிக்கட் வாங்கிக்கொண்டு வசதியான இடத்தில் உட்கார்ந்த என்னை என் வயிற்றுள் விம்மிக் கிடந்த தயி ரும் சோறும் உறக்கத்திலாழ்த்தியதோடு ஓர் அற்புதக் கனவையும் தொடக்கி விட்டன. 

தனிமையின் ஆட்சியில் ஒரு நள்ளிரவு! வார்ணிஷ் கிண் ணமும் தூரிகையுமாக நான் நகரத்து வீதிகளில் ஓடி ஓடிப் மதில்களிலிருந்த ‘விளம்பரம் ஒட்டாதே” களுக்கு “யோடா”? சேர்த்து “விளம்பரம் ஒட்டாதேயோடா?”களாக்குகிறேன். என் வேலையைத் திருப்திகரமாக முடித்துக் கொண்டு என் பாதுகாப்புக்காக நான் ஏற்பாடு செய்திருந்தபடி பின் தொடர்ந்து வந்த காரில் ஏறி வீடு போய்ச் சேர்ந்து விடுகிறேன். மறுவாரத்து இரண்டாம் நாட்காலை நான் தொழிற்சாலைக்கு பஸ்ஸில் போய்க்கொண்டிருக்கும் போது ‘விளம்பரம் ஒட்டாதீர்’ விளம்பரங்களே நகரத்து எல்லாச் சுற்றுமதில்களிலும் காணப்படுகின்றன. 

பஸ் கொண்டக்டரின் “கோயில் வாசல்”- கூக்குரல் கேட்டு உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட நான் கனவுக் குழப்பத்தோடு எனது ஊர் பஸ்தரிப்பில் இறங்கிக் கொண்டேன். 

– சின்னஞ்சிறு கதைகள் (முதலாம் தொகுதி), முதற் பதிப்பு: 1969, தமிழருவிப்பதிப்பகம், சுன்னாகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *