புது வாழ்வு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 15, 2026
பார்வையிட்டோர்: 306 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“மணிமாறன் இங்கே வா!” என்றேன். கூடத்திற்கு வெளியில் இருந்த மணி உள்ளே வந்தான். 

“இந்தா” என்றேன். 

“இது என்னாங்கா?” என்றான் மணி. 

“தெரியவில்லையா? வெண்சுருட்டு.” 

மணி தயங்கியவாறு ‘வேண்டாங்க” என்றான். 

“எனக்கு முன்னால் புகைப்பதற்குத் தயங்க வேண்டாம்” என்றேன். 

“நான் உன் நண்பன். உனக்கு நல்லவற்றை எடுத்துக் கூறும் பொறுப்புடைய நண்பன். உன்னைப் போன்றவர்களுக்குச் சமூகத்தில் மறு வாழ்வு அளிக்க வேண்டியதற்காகப் பாடுபட வந்துள்ள நண்பன். நீ தாராளமாக புகைக்கலாம்” என்றேன். 

“அதற்கில்லை. நான் புகைப்பதையே விட்டு விட்டேன்.” என்றான். 

”அப்படியா? ஏன் அப்படி? மீண்டும் பழைய நிலைக்குப் போய் விடுவோம் என்ற எண்ணமா?” என்றேன். 

“அதைவிட இன்னொரு முக்கியமான காரணம் உண்டுங்க” என்றான். 

“என்ன?” 

“உங்களைப் பார்த்த பிறகு, உங்களுடன் பழகிய பிறகு அந்தப் பழக்கத்தை விட்டுவிடுவது என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டேன்” என்றான். 

“ஏன் அப்படி?” 

“உங்களிடம் அந்தப் பழக்கம் இல்லையே” 

“அதனால் என்ன?” 

“பன்றியோடு சேர்ந்த கன்றுதானே பவ்வி உண்ணும்!” என்றான். “நல்லவரான உங்களுடன் பழகும் போது நல்ல பழக்க வழக்கங்கள் தானே வரும்” என்றான். 

“அப்படியா? ரொம்ப சந்தோசம். ஆமாம்! நீ எப்படி இந்தச் சின்ன வயதிலேயே போதை பழக்கத்திற்கு அடிமையானாய்?” என்று கேட்டேன். 

“அது ஒரு பெரிய கதைங்க.” 

“அப்படியா! அக்கதையை நான் தெரிந்து கொள்ளலாமா?’ 

“ஓ! தாராளமாக. அதை யாரிடமாவது கூறினால்தான் என் மனதிலுள்ள பாரம் குறையும்” என்றான். 

“எனக்கு அப்போது வயது ஏழு இருக்கும். என் அப்பா ஒரு நாட்சம்பள ஊழியர். எங்க குடும்பம் அரசாங்கக் குவர்ட்டர்ஸில் இருந்தது. என் அப்பாவுக்கு குடி/ பழக்கம் இருந்தது. அதனால் அவர் எப்போதும் குடித்து விட்டு வந்து என் அம்மாவை அடிப்பார். என் அம்மா வாய்விட்டு அழாமல் கண்ணீர் வடிப்பார். அவரைப் பார்த்து நான் அழுவேன். என்னை அணைத்துக் கொண்டு தேற்றுவார். 

நாளா வட்டத்தில் என் அப்பா வீட்டுக்கு வருவது குறைந்தது. அதனால் சாப்பாட்டுக் கூட வழியில்லாமல் கஷ்டப்பட்டோம். ஒரு நாள் உணவை ஒழிக்க முடியாத வயிற்றோடு பலநாள் உணவு இல்லாமல் இருக்க முடியுமா? என் தாய் அண்டை அயலாரிடம் கேட்டு வாங்க வேண்டிய அளவுக்கு வாங்கி விட்டார். அதற்கு மேல் யாரும் எதுவும் கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டார்கள். இந்த நிலையில் ஒரு நாள் எங்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் இருந்த ஒரு மாமா வீட்டுக்கு வந்தார். 

எனக்கு மிட்டாய்கள் வாங்கி வந்து கொடுத்தார். மாமாவும் அம்மாவும் பேசிக் கொண்டு இருந்தார்கள். நான் கீழே விளையாட ஓடிவிட்டேன். இவ்வாறு மாமா ஒவ்வொரு நாளும் வருவார். அதன் பிறகு எனக்கு நேரம் தவறாமல் சாப்பாடு கிடைத்தது. நான் மாமா. மாமா என்று அழைப்பேன். அவர் எனக்குக் காசு கொடுப்பார். 

திடீரென்று ஒரு நாள் என் அப்பா வீட்டுக்கு வந்தார். அப்போது மாமாவும் அம்மாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். உடனே மாமா வெளியில் ஓடிப்போய்விட்டார். குடி போதையில் இருந்த என் அப்பா. என் அம்மாவின் தலைமுடியைப் பிடித்துக் கொண்டு, என்னென்- னமோ சொல்லி அடித்தார். வீட்டை விட்டு வெளியே போ என்றார். வெளியே தள்ளி கதவைத் தாழ்ப்பாள் போட்டார். நான் பயந்து போய் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தேன். கொஞ்ச நேரத்தில் என் அப்பா தூங்கி விட்டார். என் தாயார் என்னைக் கூப்பிட்டு கதவைத் திறக்குமாறு கூறினார். நான் கதவைத் திறந்தேன். என்னை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். அந்த இரவு நேரத்தில் மக்கள் நடமாட்டமே இல்லை. எனக்குப் பயமாக இருந்தது. அப்போது அந்த மாமா எங்களைச் சந்தித்தார். அவர் எங்களை அவருடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அதன் பிறகு அம்மாவும் நானும் அவருடைய வீட்டிலேயே இருந்தோம். 

ஆரம்பத்திலே என்னிடம் அன்பாக இருந்த அந்த மாமா நாளடைவில் என் மீது வெறுப்பு, காட்டத் தொடங்கினார். இதற்கிடையில் எனக்குத் தங்கையும் பிறந்தாள். என் அம்மா இனிமல் அவரை மாமா என்று கூப்பிடக் கூடாது, அப்பா என்று அழைக்க வேண்டும் என்றார். ஆனால் என்னால் அவரை அழைக்க முடியவில்லை. அவரை அப்பா என்று அழைக்க நினைக்கும் போது என் அப்பாவின் உருவம்தான் என் கண்ணில் தெரியும். 

பள்ளிக்குச் செல்லும் வயதை அடைந்தேன். எல்லோரும் புத்தகப் பையைத் தூக்கிக் கொண்டு போவதைப் பார்த்தவுடன் எனக்கும்அப்- படி போக வேண்டும் என்று ஆசையாக இருந்தது.ஆனால் என்னுடைய புதிய அப்பா. வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு புரொட்டா ரொட்டிக் கடையில் கொண்டு போய் விட்டுவிட்டார். 

அங்கே நான் எச்சில் தட்டுகள் கழுவ வேண்டும். எனக்குத் தினமும் சாப்பிட ரொட்டி தருவார் கடைக்காரர். மாத கடைசியில் புதிய அப்பா கடைக்காரரிடம் பணம் வாங்கிக் கொள்ளுவார். தந்தை போனால் கல்வியும் போகும் என்பது என் வாழ்வில் உண்மையாயிற்று. 

ஒரு நாள் ஒரு தட்டைக் கைத்தவறி கீழே போட்டுவிட்டேன். அதற்காக அந்த கடைக்காரர் என்னை அடி அடி என்று அடித்துவிட் டார். அடி தாங்க முடியாமல் அங்கிருந்து வீட்டுக்கு ஓடி வந்து விட்டேன். மறுநாள் கடைக்குப் போகவில்லை. புதிய அப்பா கடைக்குப் போகுமாறு சொன்னார். நான் போக முடியாது என்றேன். அவரும் என்னை அடித்தார். வலி தாங்க முடியாமல் அலறினேன். பெற்ற பாசத்தால் அம்மா என்னை அடிக்க வேண்டாம் என்று சொன்னார். 

”உனக்கும் இவனுக்கும் நான் சம்பாதித்துப் போட வேண்டுமா? இவனுக்காக ஏதாவது நீ கேட்டுக் கொண்டு வந்தே நீயும் வீட்டை விட்டு போய்விட வேண்டியதுதான். முன்பு ஒருவனை விட்டு விட்டு வந்தாய். இப்போது என்னை விட்டுவிட்டு போய் விடலாம்” என்றார். 

என் அம்மா வாயை மூடிக் கொண்டு உள்ளே போய்விட்டார். அவர் தன் கை வலிக்கும் வரையில் என்னை அடித்தார். என் உடம்பில் இருந்து இரத்தம் கசிந்தது. அப்போதுதான் என் மீது அன்பு காட்ட ஒருவரும் இல்லை என்பதை உணர்ந்தேன். வீட்டை விட்டு வெளியேறினேன். என் அப்பாவிடம் போனேன். அவரும் என்னை விரட்டி விட்டார். போவது எங்கே என்று தெரியாமல் நின்றேன். அப்போது என்னை ஒத்த சிலர் என்னிடம் வந்தார்கள். அவர்களுடன் நானும் சேர்ந்து கொண்டேன். அதன் பிறகு நான் ஒரு புதிய உலகத்திற்கு வந்தேன். ஆமாம்! அது உண்மையிலேயே புதிய உலகம்தான். நான் மட்டும்தான் அன்புக்காக அலைவதாக எண்ணியி- ருந்தேன். ஆனால் என்னைப் போன்ற ஏராளமானவர்கள் இருக்கிறார்- கள். அவர்கள் எல்லோரும் சேர்ந்து அமைத்துக் கொண்டதுதான் அந்தப் புதிய உலகம். இங்கு இருப்பவர்கள் எல்லாம் பெரும்பாலும் சிறுவர்களே. 

நான் காலை வேளைகளில் எல்லாம் ஊரைச் சுற்றித் திரிந்தேன். மாலையில் பாரர் பார்க் விளையாட்டுத் திடலுக்குப் போவேன். அங்கு டென்னிஸ் பந்தாட்டம் விளையாடுபவர்களுக்குப் பந்து பொறுக்கு வேன். அவர்கள் தரும் பணத்தைக் கொண்டு சாப்பிடுவேன். பக்கத்திலுள்ள நீச்சல்குளத்தில் குளிப்பேன். இரவில் சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் லாரிகளில் படுத்து தூங்குவேன். இவ்வாறாக வளர்ந்து காளைப் பருவத்தை அடைந்தேன். 

பிஞ்சிற் பழுத்த பழம் போல இளமையிலேயே புகைப்பதற்கு கற்றுக் கொண்டேன். அதன் விளைவு நாளடைவில் போதைப் பொருள் பழக்கத்திற்கு வந்து விட்டேன். கஞ்சா புகைப்பதும், எம் எக்ஸ் போன்ற மாத்திரைகளைச் சாப்பிடுவதும், போதை மயக்க ஊசி போட்டுக் கொள்வதும், சர்வசாதாரணமாக போய்விட்டது. அந்த நேரங்களில் துன்பத்தை மறந்து இன்ப உலகத்திலே மிதக்கலாம். அந்த பேரின்பத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது. 

அளவுக்கு அதிகமாக இன்பத்தைப் பெற வேண்டிய நேரத்தில் கையில் காசு இருக்காது. அதனால் வீடுகளில், கடைகளில் புகுந்து திருட தொடங்கினேன். சில சமயங்களில் வீதியில் செல்லும் பெண்களின் பணப்பையையும் பிடுங்கிக் கொண்டு ஓடி விடுவேன். 

எனக்குச் சில சீன நண்பர்களும் கிடைத்தார்கள். அவர்கள் தரும் போதைப் பொருள்களை அவர்கள் குறிப்பிடும் இடங்களில் கொண்டு போய் கொடுப்பேன். சமயங்களில் அதை விற்றும் கொடுப்பேன். இதனால் பணமும் போதைப் பொருளும் கிடைத்தன. நாளடைவில் போதைப் பொருள் இல்லாமல் கொஞ்ச நேரங்கூட இருக்க முடியாத நிலைக்கு வந்து விட்டேன். 

இந்த நிலையில் என்னை ஒருத்தி காதலிக்கத் தொடங்கினாள். நம்முடைய இனப் பெண்கள் இன்று செய்கின்ற பெருந்தவறு இதுதான். தான் விரும்பும் ஒருவன் எப்படிப்பட்டவன்? அவன் பெயர் என்ன? இருக்கும் இடம் எது? எங்கே வேலை செய்கிறான்? என்று எதையுமே தெரிந்து கொள்ளாமல் காதலிப்பது. கற்பை இழப்பது. கருவுறுதல், அவன் கைவிட்டு விட்டு ஓடிய பிறகு கருவைக் கலைப்பது எல்லாம் சர்வ சாதாரணமாக போய்விட்டது. 

என்னைக் காதலித்தவள் பெயர் அமுதா. தோபாயோவில் குடியி ருக்கிறாள். தொழிற்சாலையில் வேலை செய்கிறாள்- என்ற விவரங்க ளைத் தெரிந்து கொண்டேன். ஆனால் அவள் என்னைப் பற்றி எது வுமே தெரிந்து கொள்ளவில்லை. அவளை நான் உண்மையிலேயே விரும்பினேனா? என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவள் என்னை உண்மையிலேயே விரும்பினாள் என்பது மட்டும் எனக்குப் புரிந்தது. போதைப் பொருட்களுக்கு அடிமையாகிவிட்ட என்னை அவள் விரும்புவது அறிந்து சில சமயங்களில் அவளுக்காக வருத்தப் பட்டதும் உண்டு. ஆனால் அதிலிருந்துஎன்னை மீட்டுக் கொள்ள என்னால் முடியவில்லை. 

ஒருமுறை அவளிடம் என்னை மறந்து விடுமாறு கூறினேன். அதற்கு அவள், “நீங்க என்ன விளையாட்டுப் பொம்மையா? வேண் டும் பொழுது வைத்துக் கொண்டு. வேண்டாத போது தூக்கி எறிய” என்றாள். 

என் நிலையை அப்பொழுதுதான் சொன்னேன். 

அவள், “தவறு செய்வது மனிதனுக்கு இயற்கைதானே! தவறு செய்யும் பழக்கம் பிறக்கும்போதே வருவதில்லை. இடையில் வருவது தான். தெரியாமல் சூழ்நிலையால் சந்தர்ப்பத்தால் செய்யக்கூடிய தவற் றைத் திருத்திக் கொள்ள முடியும். மன்னிப்புமுண்டு. அதனால் நீங்கள் உங்களின் கெட்ட பழக்கத்தை விட்டு விடுங்கள். நான் உங்களை மன்னித்து ஏற்றுக் கொள்ளுகின்றேன். உங்களின் பழக்கத்தை உடனே விடுவது சிரமம்தான். கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டு நல்ல மனிதனாக வாருங்கள். அதுவரையில் உங்களுக்காக நான் காத்துக் கொண்டிருப்பேன்’ என்றாள். 

பொருத்தம் பார்த்து பத்திரிகை அடித்து பலர் அறிய திருமணம் செய்து கொண்டு குடிகாரன்என்ற காரணத்தால் கட்டிய கணவனுக்குத் துரோகம் செய்த என் தாய் எங்கே? என்னைச் சரியாக புரிந்து கொள்ளாத நிலையில் கூட தன்னுடைய மனதில் என்னை நினைத்த தற்காக எனக்காக காத்திருப்பேன் என்று கூறும் இவள் எங்கே? என்று எண்ணினேன். 

இதுநாள் வரையில் எதற்காக ஏங்கிக் கொண்டு இருந்தேனோ? அந்த அன்பை அவள் என்னிடம் காட்டினாள். அந்த அன்பை முழுமையாக பெறுவதற்காகவாவது நான் என்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அக்கணம் நினைத்தேன். “நீ கூறியது போல் நான் என்னை மாற்றிகொள்ள பார்க்கிறேன்” என்றேன். 

அதைக் கேட்டு. அவள் அடைந்த மகிழ்ச்சியை அவளின் முகம் காட்டியது. 

குடிகாரன் பேச்சு பொழுது விடிந்தால் போச்சு. இந்தப் போதைப் பொருள் அடிமையின் பேச்சும் அப்படியே ஏன் இருக்கக் கூடாது? என்று நான் எண்ணாமலில்லை. அவளைப் போகச் சொல்லிவிட்டு என்னுடைய புகலிடம் வந்தேன். என் வரவுக்காகத் காத்திருந்தார்கள் என் நண்பர்கள். அவர்கள் கொடுத்த புகையில் சற்று முன்பு அமுதாவி டம் சொன்ன சொல்லும் சேர்ந்து போய்விட்டது. 

அன்றிரவு ஒரு காரை உடைத்து அதன் உள்ளே இருந்த சில பொருள்களை எடுத்தேன். அப்பொழுது அங்கே வந்த காவற்காரர் கைது செய்தார். அத்தை வீட்டுக்கு ஆறு மாதங்கள் அனுப்பினார். அந்த ஆறு மாதங்களில் நான் பட்ட பாட்டை வார்த்தையால் கூறவோ எழுத்தால் எழுதவோ முடியாது. 

போதைப் பொருள் என்ற எண்ணெயால்தான் இது நாள் வரை யில் என் உடல் இயங்கியது என்பதை அது கிடைக்காது போதுதான் உணர்ந்தேன். என் உடல்நிலை மிகவும் மோசமாகி விட்டது. எப்போ தும் போதை இன்பத்தில் இருந்த நான், அது இல்லாதபோது உயிரை விட்டு விடலாம் என்று எண்ணினேன். 

என் தலை முடியைப் பிடித்து பிடுங்குவது போன்ற உணர்வு ஏற்படும். ஒரு நாள் சுவற்றில் மோதிக் கொண்டேன். விளைவு மருத்து வமனையில் கிடந்தேன். படிப்படியாக எனக்கு மாற்றம் ஏற்பட்டது. பிறகு எனக்கு விடுதலை கிடைத்தது. 

நான் என்ன அரசியல் கைதியா? நாட்டுக்கு உழைத்தவனா? விடுதலை ஆன என்னை வரவேற்க பூமாலையுடன் மக்கள் வர என்று எண்ணிக் கொண்டே வெளியில் வந்தேன். ஆனால் என்னை வர வேற்க எனது நண்பர்கள் வந்திருந்தார்கள். மாலையோடு அல்ல. அந்த மயக்க மருந்தோடு. எங்கள் நட்பு இன்று நேற்று ஏற்பட்டதா? எத்தனை ஆண்டு நட்பு? எப்படிப்பட்ட நட்பு? மறுக்க முடியுமா? மறுபடியும் இன்ப உலகத்திற்கே சென்றேன். கழுதை கெட்டால் குட்டிச் சுவர் தானே? சேற்றில் விழுந்த எருமை சேற்றுக்குத்தானே போகும்? அதுபோல் நானும் மீண்டும் சேற்று எருமையானேன். 

கட்டான உடல் கரையத் தொடங்கியது. கன்னங்கள் காய்ந்தன. கண்கள் இருண்டன. கால்களும் தடுமாறத் தொடங்கின. போதையின் மயக்கத்தில் புழுதியில் கிடந்தேன். காவற்காரர்களின் கண்ணில் பட்டேன். 

இம்முறை சிறையில் அடைக்கவில்லை. மாறாக போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களுக்குரிய சானா எனப்படும் இடத் திற்கு அனுப்பப்பட்டேன். எனக்குப் படிப்படியாக சிகிச்சை அளிக்கப் பட்டது. நானும் மாறி வந்தேன். முற்றாக மாறிய பிறகு வெளியில் அனுப்பினார்கள். வெளியில் வந்த என்னை இம்முறை நீங்கள் வந்து வரவேற்றீர்கள். அதன் பிறகுதான் உங்களுக்குத் தெரியுமே” என்றான். 

போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு வெளியில் அவர்களை அனுப்பி விடுகிறார்கள். ‘அவர்களைக் கவனித்துக் கொள்ளும் அதிகாரிகளில் நானும் ஒருவன். நான் மணியைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். இதற்கு ஊதியம் இல்லை. சமுதாயத்திற்குச் செய்யும் ஒரு தொண்டுதான். 

மணி செல்வதற்கு இடமும் இல்லை. என் வீட்டிற்கே அழைத்து வந்தேன். அவனுக்கு வேண்டிய அன்பையும் பாசத்தையும் கொடுத்- தேன். எனக்குத் தெரிந்த ஒருவரின் அலுவலகத்தில் அவனுக்கு வேலை வாங்கிக் கொடுத்தேன். அவன் தனக்கும் இந்த சமூகத்தில் இடமுண்டு என்பதை எண்ணி மகிழ்வடைகிறான். 

அவன் கொடுத்த முகவரிக்கு ஒரு நாள் சென்றேன். அவனுடைய அமுதாவைப் பார்த்தேன். அப்பெண் இன்னும் மணியின் நினைவா- கவே இருப்பதை அறிந்து வியப்படைந்தேன். மகிழ்ந்தேன். அமுதா மணியை ஏற்றுக் கொள்வதாக/ கூறினாள். 

அமுதாவின் பெற்றோரிடம் அமுதா மணி திருமணத்தைப் பற்றிக் கேட்டேன். அமுதாவின் அப்பர் ஒரு சீர்திருத்தவாதியாக இருந்ததால் என் வேலை எளிதாக முடிந்தது. 

மணிக்குப் புதுவாழ்வு ஏற்படுவதைக் கண்டு நான் பெருமகிழ்ச்சி அடைந்தேன். இன்று மணி ஒரு புதிய தளிர். அவன் வாழ்வு புது வாழ்வு. 

– காலம் கடந்து விட்டது, முதற் பதிப்பு: ஏப்ரல் 1990, 25வது ஆண்டு நிறைவு விழா, இந்தியர் பண்பாட்டு நிகழ்ச்சி ஏற்பட்டுக் குழு, சிங்கப்பூர்.

இரா.துரைமாணிக்கம்2 இரா.துரைமாணிக்கம் (பிறப்பு: அக்டோபர் 15 1945) இவர் ஒரு சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளராவார். தமிழ்நாடு, தஞ்சை மாவட்டம் வேப்பக்குளம் எனுமிடத்தில் பிறந்த இவர் சிங்கப்பூருக்கு புலம்பெயர்ந்து அங்கு விவேகானந்தர் தமிழ்ப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியையும், உமறுப் புலவர் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும் கற்றார். தமிழ், ஆங்கிலம், மலாய் போன்ற மொழிகளில் தேர்ச்சிமிக்க இவர் தமிழாசிரியராகப் பணியாற்றிவந்தார். அத்துடன் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் சார்பில் 1999ல் சிங்கப்பூர்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *