கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 20, 2026
பார்வையிட்டோர்: 101 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்புமிக்க சகோதரி சுஜாதா,

தாம்பத்தியத்தில் ஒரேமாதிரி அன்பும் ஒற்றுமையும் இல்லையே, ஒவ்வொரு காலத்தில் ஒரு புது மாதிரி சிக்கல் வருகிறதே யென்று நீ கேட்டிருக்கிறாய்.

உண்மைதான். தாம்பத்திய கால வயதை மூன்று பருவங்களாகப் பிரிக்கலாம். கல்யாணம் ஆன புதிதில் தாம்பத்தியத்தின் அன்பில் அவ்வளவு சிரமமில்லை. இளம் வயதின் இன்ப நினைவுகள், கவர்ச்சிகரமான தோற்றம், பேச்சு, இப்படி யெல்லாம் அழகான சூழ்நிலை. அந்தச் சமயம் ஊடல் ஏற்படுவதெல்லாம் பரஸ்பரம் அன்பு வார்த்தைகள் போதாத காரணம். ஒருவன் கல்யாணம் செய்து கொண்டு தன் மனைவியுடன் ரயில் பிரயாணம் செய்யப் புறப்பட்டாளும், வழக்கம் போல் ஒரு டிக்கட் மட்டும் வாங்கி இருக்கிறான். மனைவி “அதற்குள்ளாகவா என்னை மறந்து வீட்டீர்கள்?” என்று கேட்டிருக்கிறாள். அவன் “நன்றாகச் சொன்னாய். உன் நினைவில் என்னையே மறந்துவிட்டு உனக்கு மட்டும் ஒரு டிக்கெட் வாங்கியிருக்கிறேன்” என்று பதில் ‘சொல்லித் தப்பித்துக் கொண்டானாம். விஷயம் சிறியதுதான். அந்தப் பெண்ணுக்கு இவனுடைய தவறை அறியும் சக்தியில்லை. வாழ்வின் அதிகாலை, எல்லாமே புதுமை. அனைத்தும் பசுமை. தனக்கு அப்பால் ஒரு உலகம் சுழல்கின்றது என்ற எண்ணமே இல்லாத மோன நிலை. எனவே அந்த நிலையில் சிக்கல் வருவதில்லை.

நடுவயதில்தான் மிகுந்த கஷ்டங்கள் வருகின்றன. வளரும் குழந்தைகள், குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பு, பிறந்த வீடு, புருஷன் வீடு – இரண்டுக்கும் நடுவிலுள்ள அபிப்பிராய பேதங்கள். பண வருவாயின் ஒத்துழையாமை, செலவினங்களின் சீற்றம், இப்படிப் பலவிதமான போராட்டங்களுக் கிடையே ஒரு பெண் தன்னுடைய நிலையைக் கௌரவமாகக் காப்பாற்றிக் கொள்ள வேண்டி யிருக்கிறது. அப்பொழுதெல்லாம் பெண்களுக்கு உற்ற தோழி பொறுமை தான், அதற்காக மக்களுக்கும், மற்றவர்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளை விட்டுப் பொறுமையாக இருக்க வேண்டுமா? அது மடமையாய் விடுமல்லவா? ஒருவரையும் அதிகாரத்தில் வெல்ல முடியாது. அன்பால் வென்று விடலாம்.

ஒரு கல்யாண விஷயம் பேச ஒருவர் வீட்டுக்கு என் சிநேகிதியுடன் போயிருந்தேன். பிள்ளையின் தகப்பனார் அப்பாவியாக இருந்தார். நாங்கள் சீர் வரிசைகளைப் பற்றிப் பேசும் போதெல்லாம் அவர் மனைவியின் முகத்தைப் பார்த்துக் கொண்டே பட்டியலை ஏற்றிச் சொன்னார். அந்தம்மாள் தம்முடைய கண்களின் வீச்சிலேயே கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டிருந்தார். வெளியில் வந்த பிறகு, அவர் “என் மனைவி அதிகப்படியாகக் கேட்கிறாள். என்ன செய்வது, ஏதோ முன்னே பின்னே அவள் மனம் கோணாமல் செய்து விடுங்கள்” என்று பணிவாகச் சொன்னார்.

அந்தம்மாள் தமக்குப் பிள்ளை பிறப்பதற்கு முந்தியே பட்டியல் தயார் செய்து விட்டார் போலும். துரதிர்ஷ்டவசமாகக் கணவன் மனைவியிடம் பயப்பட்டு நடந்தாலும் மனத்தின் அடியில் கசப்பு இருக்கத்தான் செய்யும் என்பதை நினைத்து வியந்தேன், அது தேவை யில்லை. காரியங்களைச் சரிவர நடத்த, நமக்கு நடத்திக் கொடுக்க இருவருக்கு மிடையே அன்பு ஒன்று போதும். எந்தத் துஷ்ட சுபாவமுள்ள புருஷனும் மனைவியிடம் அன்பு செய்யாமல் இருக்க மாட்டான். எனவே நம்முடைய நிலையில் கஷ்டம் வராது.

பொதுவாகத் தங்களுடைய அம்மாவும், அப்பாவும் சண்டையிட்டுக் கொள்வதை எந்தக் குழந்தைகளும் விரும்புவதில்லை.

அப்படி நேர்ந்தால் வயது ஏற ஏறக் கட்சி பேதங்கள் வீட்டில் புகுந்து விடுகின்றன. சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இவைகளும் நாம் வளருவது போல் வள்ர்ந்து கொண்டு வந்தால் தான் தாம்பத்தியம் பூர்த்தியாகும். உண்மையான அன்புள்ள தம்பதிகளை உலகம் வரவேற்கிறது.

சென்ற வாரம் ஒரு சஷ்டிஅப்த பூர்த்தி கல்யாணத்துக்குப் போயிருந்தேன். தம்பதிகள் மணப் பந்தலில் உட்கார்ந்திருந்தார்கள். இந்தக் காலத்து இளம் வயதுக்கல்யாண தம்பதிகளும் மணப் பந்தலில் உட்கார்ந்திருந்தனர்.

அவர்கள் எவ்வளவோ ஜன்மங்களாகத் தெரிந்து பழகின மாதிரி பேசிச் சிரித்தார்கள்! அது போலவே சஷ்டியப்த பூர்த்தி செய்து கொள்ளும் இந்தக் கல்யாண அம்மாளும் புன்சிரிப்புடன் பேசிக் கொண்டுதான் இருந்தார். ஆனால் இரண்டு வித தம்பதிகளுக்கிடையே அளவற்ற வித்தியாசம். கடமைகளைக் குறைவின்றி ஆற்றிய பெருமிதம் இந்தம்மாள் முகபாவத்தில் இருந்தது. சுஜாதா!

அறுபது வயதானாலும் தாம்பத்தியத்தின் சுவை குன்றமல் வாழ்வதற்கு முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது, கடமை தவறாமல் கணவனுக்குப் பணியாற்ற வேண்டியது தான். அதில் தான் தாம்பத்தியத்தின் ரகசியமே அடங்கிக் கிடக்கிறது.

இப்படிக்கு,
பூமாதேவி.

– தேவியின் கடிதம், கல்கியில் 1956-இல் தொடங்கிய தொடர்.

வசுமதி ராமசாமி2 ஏப்ரல் 21. பிரபல எழுத்தாளர் வசுமதி ராமசாமியின் பிறந்த தினம். வசுமதி இராமசாமி (21 ஏப்ரல் 1917 - 4 சனவரி 2004) இந்தியப் பெண் எழுத்தாளர் வரிசையில் குறிப்பிடப்பட வேண்டியவர். சமூக சேவையாளர். சென்னை அகில இந்திய வானொலியின் முதல் ஒலிபரப்பாளர்களுள் ஒருவர். இதழாசிரியராக இருந்தவர். காந்தியை நேரடியாகச் சந்தித்து, அவரிடம் சமூக சேவைக்கான பயிற்சி பெற்றவர். மகாத்மா தென்னிந்தியா வந்தபோது, அவர் சென்ற இடமெல்லாம் தானும் சென்றவர்.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *