சரசுவின் சௌந்தர்ய லஹரி
கதையாசிரியர்: கவிஞர் கண்ணதாசன்
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: October 15, 2026
பார்வையிட்டோர்: 389
(1980ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 22-24 | அத்தியாயம் 25-27 | அத்தியாயம் 28-30
25. தன்யாசி

“என் கனவில் வந்த அந்த அம்மையார் என் பூர்வ ஜென்மத்தைப் பற்றி நீங்கள் அன்று சொன்ள விஷயத்தையே சொல்வார்கள். இது என்ன அதிசயம் என்று எனக்குப் புரியவில்லை. இத்தகைய அதீதமான விஷயங்களில் எல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. நான் பத்திரிகைகளில் வரும் ராசி பலனைக் கூடப் படித்த வனல்ல. நேற்று என்ன நடந்தது; நாளை என்ன நடக்கும் என்பதைப் பற்றியெல்லாம் நான் கவலைப்படுவதில்லை. அன்றாட நடப்பு ஆண்டவன் செயல் என்று போய்க் கொண்டிருப்பது என் வழக்கம்” என்றான் ஜெயசந்திரன்.
தான் எதையோ சொல்ல வந்து விழுங்குவது போலவே அவனுக்குத் தோன்றிற்று.
எதையுமே மனம் திறந்து பேசுகிறவர்கள் கூட சில ரகசியங்களுக்குக் கட்டுப்பட்டே ஆக வேண்டி இருக்கிறது. மூடப்பட்ட சட்டியில்தான் குழம்பு சீக்கிரம் கொதிக்கிறது. மூடி வைக்கப்படும் விஷயம் தானே உணர்ச்சியை அதிகம் தூண்டுகின்றன!
உள்ளுக்குள்ளே உணர்வுகள் பொங்க வார்த்தைகளில் தெளிவில்லாமல் தடுமாறினான் ஜெயசந்திரன்,
வார்த்தைகளே இல்லாமல் முழு உணர்ச்சியில் தடுமாறினாள் சரசு.
‘இப்படியெல்லாம் கனவில் வந்து’ என்று அவன் சொல்லும்போது ‘அப்படியா’ என்று கேட்டுக் கொள்வதைத் தவிர அவள் செய்யக் கூடியது என்ன இருக்கிறது?
‘என் பூர்வ ஜென்மக் கணவர் நீங்கள்தான்’ என்று சொல்லக்கூடிய நேரடியாகச் துணிவு அவளுக்கு வரவில்லை. ஒரு புதிய காதலியைப் போலவே அவள் நாணமடைந்தாள். இடது கையை மெத்தையில் ஊன்றி உயரமில்லாத கட்டிலின் தலை குனிந்து உட்கார்த்திருந்த அவள், வலது கையால் அந்த மெத்தையிலேயே ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள். அதுவே நின்று கொண்டிருக்கும் நிலையாக இருந்தால் கால் பெருவிரலால் நிலம் கீறுவார்கள் பெண்கள்.
ஹோட்டல் பையன் கதவைத் தட்டி. “காபி வேண்டுமா?” என்று கேட்டான்.
“அவருக்குக் கொண்டு வா!” என்றாள் சரசு.
அந்த வார்த்தைகளில் இருந்த உரிமையைக் கவனித்தான் ஜெயசந்திரன், “ஏன் நீங்கள்…?” என்று கேட்டான்.
“ம்… எனக்கும் கொண்டு வா!” என்று பையனை அனுப்பினாள் சரசு.
அந்த இரண்டு பக்கமும் வெள்ளம் நிரம்பி நின்றது. எந்த அணை உடைந்தாலும் இரண்டும் கலந்துவிடக் கூடிய நிலைதான்.
எது உடையும்? யார் உடைப்பார்கள்? இதிலே பெண் மிகவும் சக்தியுடையவள். அதற்குத் துணிய மாட்டாள். ஆடவனே பலகீனமானவன்.
ஜெயசந்திரன் எழுந்து முன்னும் பின்னும் நடந்தான். உட்கார்ந்தபடியே அவனை ஓரக் கண்ணால் ரசிக்கத் தொடங்கினாள் சரசு.
‘கல்யாணமே வேண்டாம் என்று எண்ணிய சரசு எங்கே? இப்போது நாம் எங்கே?’ என்று எண்ணிய போது அவளுக்கு அவமானமாக இல்லை. சிரிப்புத்தான் வந்தது.
எந்தப் பெண்ணும் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டே தீருகிறாள். கால நேரம்தான் வித்தியாசப்படுகிறது.
சரசுவின் பெருமூச்சு அவளது அழகிய மார்பகங்களைத் தாலாட்டியது.
நடந்து கொண்டே இருந்த ஜெயசந்திரன், ஒரு கட்டத்தில் சரசுவுக்குப் பக்கத்தில் போடப்பட்டிருந்த மேஜையின் மீது சாய்ந்தான்.
“ஒரு உண்மையை நான் சொல்லுகிறேன். தப்பாக நினைக்காதீர்கள். போன ஜென்மத்தில் நீங்கள் தான் என் மனைவி என்று அந்த அம்மையார் சொன்னார்கள்!” என்று எப்படியோ துணிந்து சொல்லி விட்டான்.
சரசுவின் நெஞ்சம் திக்கிற்று. விக்கிற்று. அந்த விக்கலோடு ஒரு பெரிய பெருமூச்சு வந்தது.
கொஞ்சம் துணிச்சலோடு அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அந்தப் பார்வையில் அவன் சரணமடைந்தான். மனோ உணர்ச்சி உடலுணர்ச்சியாக மாறிற்று.
“சரசு!” என்றான் அவன்.
“ம்…” என்றாள் அவள்.
அவன் அவள் எதிரிலேயே அமர்ந்து விட்டான்.
“நான் கொஞ்சம் கூட எதிர்பார்த்ததில்லை. இந்தக் கனவு உண்மையாக இருக்குமானால் நாம் எப்படி நடந்து கொள்வது?” என்று கேட்டான் ஜெயசந்திரன்.
சரசு திடீரென்று விக்கி விக்கி அழுதாள்.
‘கொஞ்ச காலத்துக்கு முன்பே அது தெரிந்திருந்தால் நான் உனக்கே மாலையிட்டிருப்பேன்’ என்ற ஆதங்கம் அந்த அழுகையில் தொனித்தது.
அவன் அவள் கண்ணீரைத் துடைத்தான். அந்தத் தீண்டுதலில் ஒரு இன்பத்தைக் கண்டவள் போல் அவள் அவனைப் பார்த்தபடியே கண்ணீரை நிறுத்தினாள். தாங்க முடியாத நிலையில், “சரசு!” என்று அவளை மார்போடு அணைத்துக் கொண்டான்,ஜெயசந்திரன். அவள் அதை மறுக்கவில்லை.
ஆனால் சாரதாம்பாளே வந்து கதவைத் தட்டுவது போல ஹோட்டல் பையன் வந்து கதவைத் தட்டினான். திடுக்கிட்டு இருவரும் விலகினார்கள்.
காபியை உள்ளே வைத்து விட்டு என்னமோ ஏதோ என்றெண்ணியபடி பையன் வெளியேறினான்.
கதலைத் தாழிட்ட ஜெயசந்திரன் ஒரு காபியை எடுத்து அவள் கையில் கொடுத்தான். தான் கொஞ்சம் குடித்து விட்டு வைத்து விட்டான்.
“பாலும் செல்லவில்லை; படுக்கை கொள்ளவில்லை” என்ற நிலையல்லவா, அது?
சரசுவின் வேலி உடைந்தது. தாலி சிரித்தது. அது தெய்வ நியாயம் என்று முடிவு கட்டியவளைப்போல, அவனது அணைப்புக்குள் அவள் அடங்கி விட்டாள்.
மெய்மறந்த நிலை. திடீரென்று மறுபடியும் கதவு தட்டும் சத்தம். சரசு ஆடையைத் திருத்திக் கொண்டாள். ஜெயசந்திரன் ஓடிப்போய்க் கதவைத் திறந்தான். அங்கே பாமா நின்றாள்.
“ஓ! மைத்துனரா…?” என்றபடி உள்ளே வந்தாள்.
ஏற்கெனவே அவளுக்கிருந்த சந்தேகம் இப்போது பூர்த்தியாகி விட்டது. தனியாக அந்த இருவரைப் பார்த்ததும் அவளுக்கு எதுவும் கேட்கத் தோன்றவில்லை.
“என்னக்கா, இங்கேயாவது நிம்மதியாக இருக்கிறாயா…?” என்று கேட்டாள், பாமா.
பாமாவை எதிர்பாராத சரசு ஓரளவு அதிர்ச்சியுற்றாலும் அவளுக்கிருந்த ஆனந்த லயத்தில், “நிம்மதியாக இருக்கிறேன்” என்று பதில் சொன்னாள்.
அக்காளும் தங்கையும் பரிமாறிக் கொள்ளட்டும் என்று கருதி, “இதோ நான் ஆபீஸ் வரை போய் அரை மணி நேரத்தில் வந்து விடுகிறேன்” என்று வெளியேறினான் ஜெயசந்திரன்.
அவன் போனதும் கதவைத் தாழிட்டாள் பாமா.
“அக்கா! நான் ஒன்று சொல்லுகிறேன். பயமில்லாமல் கேட்டுக் கொள், நீ எப்படி வாழ்ந்தாலும் சரி, நிம்மதியாக வாழவேண்டும். உன்னைவிட நான் அறிவாளியல்ல. உனக்கு உபதேசம் செய்யக்கூடிய யோக்கியதையும் எனக்குக் கிடையாது. ஆனால் மனதைப் போட்டு வாட்டிக் கொள்ளாதே! நீ எந்த வழியில் போனாலும் அது உன் மனதைப் பொறுத்தவரை அநியாயமாகவே இருக்கும் என்று எனக்குத் தெரியும். அம்மா வேண்டுமானால் அப்படி இப்படிப் பேசலாமே தவிர, எந்தக் காரணம் கொண்டும் நான் உன்னைக் குற்றம் சொல்ல மாட்டேன். நீ வாழ்ந்தால் போதும். பெண்ணுக்கு வாழ்க்கையென்பது வெறும். ஆடையும் சாப்பாடும் மட்டுமல்ல. அவள் நெஞ்சுக்கும் உடம்புக்கும் நிம்மதி வேண்டும். காலையிலிருந்து நீ தனியாக இருக்கிறாயே என்று கவலைப் பட்டுத்தான் நான் இங்கே ஓடி வந்தேன். நல்லவேளை; மைத்துனர் கூட இருந்தார். நிம்மதி;” என்றாள் பாமா.
அவள் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் பேசினாள். தான் சொல்ல வந்த விஷயத்தைத் தெளிவாகவும் அக்காளிடம் சொல்ல முடியவில்லை.
ஆனால் அவள் என்ன சொல்கிறாள் என்பதைப் புரிந்து கொள்ளக்கூடிய அறிவு, சரசுவுக்கு இருந்தது.
“பாதி வாழ்க்கையோடு மடிந்து போன என் பூர்வ ஜென்மக் கணவர், ஜெயசந்திரன் தான் என்று சொல்லி விட்டால் என்ன?” என்று கூட சரசுவுக்குத் தோன்றிற்று. இருந்தாலும், பேசுபவள் தங்கையல்லவா. அந்த அச்சம் குறுக்கிட்டது.
“திரும்பவும் சொல்கிறேன் அக்கா, எதுவாக இருந்தாலும் தைரியமாக நீ என்னிடம் சொல், நான் கட்டுப் பெட்டியுமல்ல; தற்குறியுமல்ல. உன் அளவுக்கு இல்லா விட்டாலும் ஓரளவுக்கு உலகம் புரிந்தவள் தான். அவர் வருவதற்குள் மனத்திலுள்ளனதச் சொல்லிவிடு” என்றாள் பாமா!
“அன்றிரவு உன்னிடம் என் பூர்வ ஜென்மக் கதைகளைச் சொன்னேன் இல்லையா, தன் விட்டகுறை தொட்ட குறை தான் கோடைக்கானல், பத்தினியா வாழ்ந்த சரசு கெட்டுப் போகவேண்டும் என்றே அவளுக்கு இந்த பூர்வ ஜென்ம ஞாபகத்தை தேவி கொடுத்தாளோ என்னமோ தெரியவில்லை. அந்த ஞாபகம் வந்ததிலிருந்து என் மனம் ஒரு நிலையில் இல்லை; நான் அபரஞ்சியாக பிறந்தபோது, என் ஆவியாக வந்து சேர்ந்தது யார் தெரியுமா? உன் மைத்துனர் தான்!” என்று ஒரே மூச்சில் சொல்லி விட்டாள் சரசு.
“எனக்கு அப்போதே சந்தேகம் இருந்தது அக்கா! நாம் கேட்டுக் கொள்ள வேண்டாம் என்று விட்டு விட்டேன். இப்படி நீ வாழ்க்கையை மாற்றிக் கொள்ளவதானால் எனக்குப் பரிபூரண சம்மதம். உலகத்தில் எதெ தெல்லாமோ எப்படி எப்படியோ வாழுகிறது. நீயோ ஒரு நம்பிக்கையின் பேரில் கட்டிய கணவனைப் பிரிந்து ஒரு முடிவுக்கு வருகிறாய். பத்துப் பேர் இது பற்றிப் பேசினாலும் கூட, நமக்கு நிம்மதி என்றால் நிம்மதி தானே!” என்றாள் பாமா. “பாமாவா இப்படிப் பேசுகி பேசுகிறாள்” என்று அதிசயித்தாள், சரசு.
நியாயமாக இது மாதிரி யோசனைகளை எல்லாம் மற்றவர்கள் தான் சரசுவிடம் கேட்பார்களே தவிர, சரசு யாரிடமும் கேட்டுக் கொண்டதில்லை.
தங்கை சொன்ன யோசனை அவளுக்கு சுகமளிக்கக் கூடியதாக இருந்ததால், பாமாவை ஒருமதி மந்திரியாகவே கருதத் தலைப்பட்டாள், சரசு. அவளது அவளது ஆசைக்கோர் துணிச்சல் வந்தது.
“இதோ பார், பாமா! நான் இவரோடு வாழ்வு தென்று முடிவு செய்தால், அதில் ஒன்றும் பாவ மில்லையே…?” என்று கேட்டாள் சரசு.
“இந்தப் பாவ புண்ணியத்தைப் பற்றி இன்னுமா நினைக்கிறாய்? நம் மனதுக்கு எது நியாயமோ, அதுதான் புண்ணியம்!” என்றாள் பாமா.
அப்போது மீண்டும் கதவு தட்டும் சப்தம் கேட்டது
“பார்த்தாயா, உன் வீட்டுக்காரர் வந்து விட்டார்” என்று உரிமையோடும், வேடிக்கையாகவும் சொல்லிவிட்டு, கதவைத் திறந்த பாமா, “வாருங்கள் மைத்துனரே!” என்று, கொஞ்சலாக அழைத்தாள்.
கையில் எதையோ மறைத்துக் கொண்டிருந்தான் ஜெயசந்திரன்.
“என்ன அது?” என்று கேட்டாள் பாமா.
“ஒன்றுமில்லை…வழியில் வந்து கொண்டே இருந்தேன்…எதிரே மல்லிகைப் பூ வந்தது…அவர்களுக்கு மல்லிகை பிடிக்கும் என்றார்கள்…!” என்று இழுத்தான், ஜெயசந்திரன்.
“அவர்கள் என்ன அவர்கள்? அவள் என்றே சொல்லலாம். முறைப் பெண்தானே! என்னை மட்டும் நீ நான் என்கிறீர்கள்? அங்கென்ள மரியாதை? சரி சரி, அக்காளோடு பேசிக் கொண்டிருங்கள். நானும் அவரும் ஒரு சினிமாவுக்குப் போகப் போகிறோம்!” என்றாள், பாமா.
“என்ன சினிமா?” என்று கேட்டான், ஜெயசந்திரன்.
“ஏழு ஜென்மங்கள்” என்றாள், பாமா.
”சரி, போதும், போதும்!” என்று அவள் வாயை அடக்கினாள் சரசு.
பாமா சிரித்துக்கொண்டே வெளியேறினாள்.
அவள் போனதும், “ஐயையோ! எல்லாம் அவளிடம் சொல்லிவிட்டாயா!” என்று கேட்டான் ஜெயசந்திரன்.
“தங்கைக்குத் தெரியாத ரகசியமா? அவளுக்குப் பரிபூரணச் சம்மதம்! சரி. நாம் அம்மன் கோவிலுக்குப் போய் வந்து விடுவோம்” என்றாள் சரசு,
“ஓ!” என்றான் ஜெயசந்திரன்.
”இருங்கள். சேலை மாற்றிக் கொண்டு வத்து விடுகிறேன்” என்று உள்ளே போய், அலங்கார தேவதையாகத் திரும்பி வந்தாள் சரசு.
அவர்கள் அம்மன் கோவிலுக்குப் போன போது இரவு மணி ஏழு. அங்கே ஒரு அகல் விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. ஆனால் வெளியில் இருந்த பளிங்குத் தரைக்கு மேல் சில விளக்குகள் போட்டிருந்தார்கள்.
தேங்காய் உடைத்தாள் சரசு. அது சரியான வடிவத்தில் உடைந்தது. அவளே அந்தத் தேங்காயின் மீது சூடத்தை வைத்து தீபாராதனை காட்டினாள்.
கோவில் முன்புறத்தில் தொங்கிக் கொண்டிருந்த மாலை ஒன்று அவள் கையில் விழுந்தது.
“இது என்ன சகுனம்?” என்று அவள் வியந்து கொண்டிருந்த போது. “என்னம்மா, செளக்கியமா?” என்ற குரல் கேட்டது.
அவர்கள் இருவருமே திடுக்கிட்டார்கள்.
26. சரஸாங்கி
அங்கே பழைய சாரதாம்பாளே நின்றாள்.
இந்த சாரதாம்பாள் விஷயம் ஜெயசந்திரனுக்கு ஓரளவே தெரியும். ஆனால் அவரை அடிக்கடி சந்தித்தகளும். அவரைப் பற்றி ஆயிரம் முறை சித்தித்தவளும் சரசு மட்டுமே.
தனக்குப் பூர்வ ஜென்ம எண்ணங்கள் தோன்றுவதற்கு சாரதாம்பாள் தான் காரணம் என்பதால், சரசு வியப்போடு அந்த அம்மையாரைப் பார்த்தாள். எதிர்பாராத ஆனால் தேவையான நேரத்தில் அவர் வந்திருப்பதாகவே சரசுவுக்குத் தோன்றிற்று.
தேவியை வணங்கிக் கொண்டிருந்த சரசு அப்படியே போய் சாரதாம்பாளின் கால்களில் விழுந்தாள்.
சாரதாம்பாள் கால்களை மடக்கிக்கொண்டு பளிங்குத் தரையில் உட்கார்ந்தார். ஆனால் முன்பு போல் அவர் மௌனமாக இல்லை. “மகளே, உன்னுடைய ஆசையும், ஆதங்கமும் எனக்குப் புரிகின்றன. ஒவ்வொருவருக்கும் சாட்சியங்களிலெல்லாம் பெரிய சாட்சி மனச்சாட்சி. அது என்ன சொல்கிறதோ. அதன்படியே நட, ஆனால் இப்போது நீ எடுத்திருக்கிற முடிவு சரியானதாக எனக்குத் தோன்றவில்லை!” என்றார் சாரதாம்பாள்.
அதற்கு மேல் சரசு அவரை ஆயிரம் கேள்விகள் கேட்டாள். எதற்கும் அந்த அம்மையார் பதில் சொல்லாதது மட்டுமல்ல. எழுந்து மெதுவாக வெளியே போய் விட்டார்.
‘இதென்ன விசித்திரமான குறுக்கீடு! பலமுறை இந்த அம்மையார் துறந்து போயிருக்கிறார்கள்! மீண்டும் மீண்டும் தோன்றுகிறார்கள்!’ என்று என்று குழப்பமடைந்த சரசு, அவரிடமே இது பற்றி விசாரித்து விடலாம் என்று கருதினாள். பின்னாலேயே ஓடினாள். ஆனால் எங்கு தேடியும் அந்த அம்மையாரைக் காண முடியவில்லை!
ஜெயசந்திரனுக்கு இது ஆச்சர்யமாகத்தான் இருந்தது.
முக்கியமான கட்டங்களிவெல்லாம் எந்த ஊரிலும், எந்த நேரத்திலும் இந்த உருவம் எப்படித் தோன்றுகிறது என்பது அவனுக்கு வியப்பாக இருந்தது.
இருவரும் ஹோட்டலுக்கு வந்து சேரும் வரை இதைப் பற்றியே பேசிக் கொண்டு வந்தார்கள்.
‘தனது புதிய முடிவு சரியில்லை’ என்று சாரதாம்பாள் சொன்னது சரசுவுக்கு அச்சமாகவே இருந்தது. ‘தன்னை இப்படி திசை மாற்றித் திருப்பி விட்டுவிட்டு நன்கு மயங்கிக் கிடக்கும் நேரத்தில், பழையபடியும் தெய்வம் நம்மைச் சோதிக்கிறதே’ என்று அவள் கலங்கினாள்.
போகும் போது சாவியை ஹோட்டலிலேயே கொடுத்து விட்டுப் போயிருந்ததால் திரும்பி வந்த போது படுக்கை நன்றாகத் தட்டி அழகாகப் போடப்பட்டிருந்தது. மேஜையின் மீது இட்லியும் சட்டினியும் ஒரு தட்டில் வைத்து மூடப்பட்டிருந்தன.
“சரி, பார்த்துக் கொள்ளலாம். முதலில் இதைச் சாப்பிடு” என்றான் ஜெயசந்திரன்.
இக்கட்டான சிந்தனைகள் தோன்றிவிட்டால் சாப்பாடு செல்லாது. அதிலும் பெண்களின் உடம்பு இதிலே மென்மையானது.
“எனக்குப் பசி இல்லே” என்று சொன்ன சரசுவைப் பலவந்தப்படுத்தி ஒரு தட்டில் மூன்று இட்லிகளை வைத்துக் கொடுத்தான் ஜெயசந்திரன்.
லேசாகச் சாப்பிட்டாள் சரசு. ஏனோ அது வேப்பங் காயை விட அதிகக் கசப்பாக இருந்தது. அப்படியே துப்பி விட்டுக் கை கழுவப் பாத்ருமிற்குள் போனாள். வாஷ்பேஸினில் கை கழுவி வாய் கொப்பளித்துவிட்டு அவள் நிமிர்ந்து கண்ணாடியைப் பார்த்த போது அவளுக்குப் பின்புறம் ஒரு கறுப்பான உருவம் தெரிந்தது. ஒரு காட்டுமிராண்டி உருவம் போல அது இருந்தது. பற்கள் வெளியே நீட்டிக் கொண்டிருந்தன. கழுத்திலே சங்கு மாலை போட்டிருந்தது. மேலாடை இல்லாத அரக்க பெண்ணாக அது தோன்றிற்று.
சரசுவின் கை கால்கள் வெடவெடவென நடுங்கின. சத்தம் போட முயன்றாள்; முடியவில்லை. கால்களை எடுத்து வைக்கவும் இயலவில்லை.
எப்படியோ சிரமப்பட்டுக் கதவைத் திறந்து வெளியே வந்தவள், ஓடிப் போய் படாரென்று கட்டிலில் சாய்ந்தாள்.
“என்ன…என்ன…?” என்று கேட்டான் ஜெயசந்திரன்.
“ஏதோ பூதம்…ஏதோ பூ… த… ம்” என்று நடுங்கினாள் அவள்.
“அதெல்லாம் ஒன்றுயிருக்காது” என்று சொன்ன அவன் பாத்ருமைத் திறந்து பார்த்தான். உள்ளே யாரும் இல்லை.
“என்ன இது பிரமை? உள்ளே யாரும் இல்லையே..?” என்றான் அவன்.
“சத்தியமாக நான் பார்த்தேன்” என்று நடுங்கினாள் அவள்.
அவளுக்கு நல்ல காய்ச்சல் அடித்தது.
“குளிரடிக்கிறது” என்றாள் அவள்.
ஜெயசந்திரன் ஒரு கம்பளியை இழுத்துப் போர்த்தி விட்டான். அப்படியே பக்கத்தில் உட்கார்ந்து பொழுது விடியும் வரை அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் நன்றாகத் தூங்கி விட்டாள்.
இரண்டு மூன்று நாட்கள் சரசுவுக்குக் காய்ச்சல் தணியவில்லை. பசுளிலும் இரவிலும் அவளுக்குக் கெட்ட கனவுகள் மாறிமாறித் தோன்றின.
பாமா செய்தியறித்து வந்து, அவன் பக்கத்திலேயே இருந்தாள்.
“ஒரு வேளை மைத்துனர் கொஞ்சம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டிருப்பாரோ?” என்று தான் அவளுக்குத் தோன்றிற்று.
அந்தச் சூழ்நிலையில் யாருக்கும் அதுதானே தோன்றும்.
“அடி பாமா! எனக்குத் தூக்கமும் வருகிறது; தூங்கினால் கெட்ட கனவும் வருகிறது. கழுத்தை ஒரு பாம்பு சுற்றிக் கொண்டிப்பது போலவும், அதை எடுக்கவும் முடியாமல் துரத்தவும் முடியாமல் நான் தவிப்பது போலவும் ஒரு கனவு கண்டேன். இது என்ன கனவோ எனக்குப் புரியவில்லை. தேவி ஏதாவது ஒரு வழியை எனக்குக் காட்ட மாட்டாளா? இப்போது நான் மேற்கொண்டிருக்கும் முடிவு தனக்குப் பிடிக்கவில்லை என்று கோவிலில் சாரதாம்பாள் கூறினார். அப்படியென்றால் நான் சாவதைத் தவிர வேறு வழியில்லை. என்னால் இனி அந்தக் கணவரோடு போய் வாழ முடியாது. ஏன் இப்படி அந்த அம்மையார் பின்னி எடுக்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை!” என்று புலம்பினாள் சரசு.
“இது என்ன குழப்பம்? நீ எடுத்த முடிவின்படியே வாழ்ந்து பார்த்துவிடு!” என்று தைரியமூட்டினாள் பாமா.
“என்ன வரும்? இறுதியில் சாவுதானே வரும்!” என்று துணிந்தாள், சரசு.
ஆனால் அவள் அப்போது மிகவும் பலவீனமாக இருந்தாள்.
டாக்டரைக் கூட்டி வருவது, மருந்து கொடுப்பது ஆகிய அனைத்தையும் அக்கறையோடு ஜெயசந்திரன் கவனித்தான்.
அவளால் அவனை மறக்க முடியவில்லை.
சற்று உடல் நலம் தேறி அவள் எழுந்தபோது, நாளையோ மறுநாளோ அவனோடு உறவு வைத்துக் கொள்வது என்று முடிவு கட்டினாள்.
மறுநாள் அவள் உடம்பு நன்றாகயே தேறிவிட்டது.
அன்று அவள் தலை முழுகினாள். பூகத்திற்குப் பயந்து பாத்ரூமைத் திறந்து வைத்து மறைவாக ஜெயசந்திரனை இருக்கச் சொல்லி அவள் குளித்து முடித்தாள்.
புதிய சேலை கட்டி, பொட்டு வைத்து அவள் நின்ற அழகைக் கவனித்தபோது ஜெயசத்திரனுக்கு அவளை அப்படியே கட்டி முத்தமிட வேண்டும் போலிருந்தது. அதற்காக அவன் நெருங்கிய போது கதவு தட்டும் சத்தம் கேட்டது.
கதவைத் திறந்தாள் சரசு. அங்கே அவளது கணவன் தணிகைவேலன் நின்றான். எதிரிலே ஒரு காரும் நின்றது.
அவன் முன்பு அவள் பார்த்த தணிகைவேலனாக இல்லை. சினம் கொண்டு சீறும் வேங்கையாக நின்றான். எடுத்த எடுப்பிலேயே, “என்ன தட்டுவாணித்தனம் ஹோட்டலிலே நடக்கிறதா?” என்றான்.
உள்ளே நுழைந்து கதவைச் சாத்திய தணிகைவேலனை அடையாளம் கண்டுகொண்டான் ஜெயசந்திரன். தான் குறுக்கிட முடியாத நிகழ்ச்சி நடைபெறப் போகிறது என்பது அவனுக்குத் தோன்றிவிட்டது.
“மரியாதையாகப் புறப்படு!” என்று மிரட்டினான் தணிகைவேலன்.
சரசு படித்தவளல்லவா? அவளும் சளைத்தவளாக இல்லை.
“சீ! உன்னைப் போன்ற குஷ்டரோகியோடு யார் வாழ்வது? இனி எந்த ஜென்மத்திலும் உனக்கும் எனக்கும் பந்தம் கிடையாது!” என்றாள் அவள்.
“ஏன் புதுக் கணவனைப் பிடித்து விட்டாயா? இதற்குத் தானேடி பூர்வ ஜன்ம வேஷம் போட்டாய்?. உன்னிடம் பேச்சு என்ன பேச்சு?” என்று சொன்ன தணிகைவேலன், அவள் முடியைப் பிடித்து இழுத்துக் காரில் ஏற்றினான்.
27. வாசஸ்பதி
கணவனுக்கு மனைவியின் மீது பிரியமில்லா விட்டாலும் ஆதிக்கம் இருப்பது அடிக்கடி நினைவுக்கு வருகிறது.
தாலி கட்டிவிட்ட ஒரு காரணத்தினாலேயே சகல காரியங்களிலும் அவள் கணவனோடு ஐக்கியமாகிவிட வேண்டும் என்பது ஹிந்து தர்மத்திலுள்ள கட்டுப்பாடு.
கணவனை விட்டு விளகிச் செல்வோர், கணவன் இருக்கையிலேயே கள்ளத்தனம் புரிவோர், கணவனைப் பிடிக்கவில்லை என்று பகிரங்கமாகத் தவறு செய்வோர், எத்தனையோ ரகங்கள் இங்கேயும் உண்டு.
சரசு இயற்கையிலேயே தவறு செய்வதில் சுகத்தை கண்டவளல்ல. பூர்வஜன்ம ஞாபகம் என்று ஒன்று வந்து அதில் கற்பழித்ததே கணவனாகத் தோன்றியதால் தான் அசல் கணவனை அவள் தேடினாள். இது அதிசயமான நிலை தான்.
சரசுவின் காரியங்களுக்கு இதுதான் காரணம், என்பதை யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அதிலும் தணிகைவேலன் கண்டிப்பாக ஒப்புக்கொள்ளமாட்டான். அவன் அவளை நடத்தை கெட்டவளாகவே கருதினான்.
ஊரார் தன்னையும் பார்த்துச் சிரித்தாலும் சரி, அவளை அவமானப்படுத்த வேண்டும் என்ற வஞ்சமே அவனுள் எழுந்து விட்டது.
காரிலே அவள் திமிறினாள்; கதறினாள், புரிய காதல் பிணைப்பு ஏற்பட்டு விட்டதால், கணவன் மீது வெறுப்பு அதிகமாகவே இருந்தது.
வழியிலே அந்தக் காரைப் பார்த்தவர்கள் கூட யாரோ ஒருவன் ஒரு பெண்ணைக் கடத்திக் கொண்டு போவதாகத் தான் கருதினார்கள்.
சிறிது நேரத்தில் சரசு சோர்வுற்றுவிட்டாள். மேலும் சிறுது நேரத்தில் மூர்ச்சையடைந்து விட்டாள்.
கார் கிராமத்திற்குள் நுழைந்து, தணிகைவேலன் விட்டருகே சென்றபோது சரசுவை நாலு பேர் தூக்கிக் கொண்டு போய்த்தான் உள்ளே சேர்க்க வேண்டியிருந்தது.
சரசுவின் மாமியாருக்கு இது பிடிக்கவில்லை.
“சனியன், போனால் போய்த் தொலையட்டுமே! ஏன் இந்தக் கூத்தெல்லாம்” என்றுதான் அவள் கருதினாள்.
தணிகைவேலன் அவளை இழுத்து வந்ததோடு நின்று விடவில்லை. ஒரு லேடி டாக்டரை அழைத்து வந்து, அவள் கெட்டுப்போயிருக்கிறாளா என்றும் சோதித்து வைத்தான். மேலும் அவள் தூங்குவதற்காக ஊசி போடச் செய்தான்.
அதற்குள் கோடைக்கானலில் ஜெயசந்திரன் ஓடிப் போய் பாமாவிடம் விஷயத்தைச் சொல்ல, பாமாவும், ராஜேந்திரனும், ஜெயாந்திரனைக் கூட்டிச் கொண்டு மற்றொரு காரில் விரைந்தார்கள்.
தணிகைவேலன் சரசுவை இழுத்துக் கொண்டு கிராமத்திற்கு வந்து சேர்ந்த பன்னிரண்டு மணி நேரத்தில், ஜெயசந்திரன் கோஷ்டியும் வந்துவிட்டது.
வந்ததும் வராததுமாக பாமா உள்ளே ஓடிப்போய் சரசுவைப் பார்த்தாள். சரசு அலங்கோலமான நிலையில் படுத்துக் கிடந்தாள்.
ஆம்! அலங்கோலமான நிலையில் தான் இருந்தாள். பாமா விஷயத்தைப் புரிந்து கொண்டாள்.
“சரசு சொன்னாளே. போன ஜன்மத்தில் கற்பழித்தவன் இவன்தான் என்று அந்த சுபாவம் இந்த ஜன்மத்திலும் விடவில்லை போலிருக்கிறது” என்று எண்ணியபடி, “மிருகங்கள் எந்த ஜன்மத்திலும் மிருகங்களே” என்றாள்.
இதில் ராஜேந்திரனோ, ஜெயசந்திரனோ தலையிட என்ன இருக்கிறது? அவர்கள் அமைதியாகவே இருந்தார்கள்.
“நான் அக்காளைக் கூட்டிக்கொண்டு கோடைக்கானலுக்குப் போகப் போகிறேன்” என்று சரசுவின் மாமியாரிடத்தில் பாமா சொன்னாள்.
அதுவரை நாற்காலியில் முழங்காலைக் கட்டிக் கொண்டு உட்கார்த்திருந்த தணிகைவேலனுக்கு ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது.
“அவள் இந்த இடத்தை விட்டு ஓர் அடி நகரட்டும், அவளை வெட்டிப் புதைத்து விடுகிறேன்” என்றான் தணிகைவேலன்.
அந்த வார்த்தையைக் கேட்டதும் ராஜேந்திரனுக்கே கோபம் வந்துவிட்டது.
“இந்த மாதிரிப் பேசக்கூடாது. அவள், அவர்களின் தங்கை, அக்காளைக் கூட்டிக்கொண்டு போக தங்கைக்கு உரிமை இல்லையா…?” என்று கேட்டான் ராஜேந்திரன்.
“இது கணவன் மனைவி விவகாரம், இதில் நீங்கள் தலையிடக் கூடாது” என்றான் தணிகைவேலன்.
“அந்த விவகாரத்தைக் கோர்ட்டிலே பார்த்துக் கொள்ளுங்கள். நாங்கள் கூட்டிக் கொண்டு தான் போகப் போகிறோம்” என்று முடிவாகச் சொன்னாள் பாமா.
இப்போது மாமியார் குறுக்கிட்டாள்.
“இந்தா, கூட்டிக்கொண்டு போனால் போகட்டுமே! நீ ஆண்பிள்ளை. ராஜா மாதிரி எத்தனை முறை வேண்டுமானாலும் கல்யாணம் செய்து கொள்ளலாம், இது என்ன அபூர்வப் பொருள்? போகட்டும் போகட்டும்; விடு விடு!” என்றார்கள்.
கணவனுக்கு மனைவியிடம் உள்ள வெறி, இந்த வார்த்தைகளால் தீர்ந்துவிடுமா?
“போவதைப் பார்க்கிறேன்” என்று கருவினான் தணிகைவேலன்.
அவனது சுபாவமும் மாறி இருப்பதை, அப்போது தான் கவனித்தாள் அவனது தாயார்.
ஜெயசந்திரன் ஒன்றும் சொல்லாமல் வெளியேறினான். நேரே போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் ஒரு புகார் எழுதிக் கொடுத்தான்.
இது குடும்ப விவகாரம் என்றும் இதில் நாங்கள் தலையிட முடியாதென்றும் போலீசார் மறுத்து விட்டார்கள்.
திரும்பி வத்த ஜெயசந்திரன் ராஜேந்திரனிடம் ஏதோ ரகசியமாகச் சொன்னான்.
சரசு கண் விழிக்கட்டும் என்று இரவு எல்லோரும் காத்திருந்தார்கள். யாரும் அந்த வீட்டில் தண்ணீர்கூடச் சாப்பிட மறுத்து விட்டார்கள். மீண்டும் ஊசி போட வந்த டாக்டரைத் தடுத்து விட்டார்கள்.
அதிகாலை நான்கு மணிக்கு சரசு கண் விழித்தாள்..
ஏதோ நிறையக் குடித்துவிட்டவள் போதையிலிருப்பது போல், அவளிருந்தாள். ஆனாலும் தங்கையை அடையாளம் கண்டு கொண்டாள். ஏதோ சொல்ல வந்து உளறினாள்.
“நீ ஒன்றும் சொல்ல வேண்டாம். நாம் மீண்டும் கோடைக்கானலுக்கே போகிறோம்” என்று, அவளை எழ வைத்துத் தாங்கலாக நடக்க வைத்தாள் தங்கை பாமா.
தணிகைவேலன் உண்மையிலேயே அரிவாளைத் தூக்கி வந்து விட்டான்.
அப்போதுதான் ராஜேத்திரன் தான் யார் என்பதைக் காட்டினான். முஷ்டியால் ஓங்கி ஒரு குத்துக்குத்திவிட்டு அரிவாளைப் பறித்துக் கொண்டான் ராஜேந்திரன்.
ஜெயசந்திரன் சினிமாவில் வரும் வில்லனைப்போல அவனை ஓர் அறைக்குள் போட்டுப் பூட்டினான்.
“உங்களுக்கே இது நியாயமாக இருக்கிறதா…?” என்று கேட்டாள் மாமியார்.
நியாயத்தை கோர்ட்டிலே கேளுங்கள் என்று சொன்னபடி சரசுவைக் காரில் ஏற்றிக் கொண்டு அவர்கள் புறப்பட்டுவிட்டார்கள்.
அறைக் கதவைத் திறந்துவிட்டு மகனை வெளியே வரச் சொன்ன நாயார், “ஏண்டா, மானங்கெட்டவனே; அதுதான் ஊர்சுற்றி நாய் என்பதை அப்போதே பார்த்தோமே? அதில் உனக்கேன் இன்னும் சபலம்? பேசாமல் வீடு. ஆறு மாதம் கழித்துக் கோர்ட்டிலே போட்டு, இதை வெட்டி விட்டு, நம்ம கோவிலார்ப்பட்டி ராஜமாணிக்கம் மகளை உனக்குக் கட்டி வைத்து விடுகிறேன்” என்றாள் அவள்.
தணிகைவேலனுக்கு எதுவும் காதிலேறவில்லை. அவன் விழுந்து படுத்து அழுதான்.
பாமாவும் பிறரும் சென்ற கார் கோடைக்கானலை நோக்கிப் பறந்தது.
கோடைக்கானலின் குளிர்ந்த காற்றுப் படப்பட சரசுவுக்கும் ஓரளவுக்குப் பிரக்ஞை வந்தது.
தன்னைச் சுற்றிலும் பாமா, ஜெயசந்திரன், ராஜேந்திரன் இருப்பதைப் பார்த்ததும் அவள் முகம் மலர்ந்தது.
“அந்த மிருகத்திடமிருந்து நான் காப்பாற்றப் பட்டேன்” என்றாள் சரசு.
“ஆமாம் ஒரு ஜன்மத்துக்குணம் மறு ஜன்மத்திலும் தொடர்ச்சியாக வருமா?” என்று கேட்டாள். பாமா.
“ஒரு ஜன்மத்துத் தவறுக்குப் பரிகாரம் தான் மறு ஜன்மம். ஆனால் இவரென்னவோ அதிசயமாக இருக்கிறார்!” என்று அரைகுறைப் பிரக்ஞையில் சொன்னாள் சரசு.
“யார் என்ன சொன்னாலும் சரி, நீயும், மைத்துனரும் தனி வீடு பிடித்தே வாழ்ந்து விடுங்கள்!” என்றாள் பாமா.
– தொடரும்…
– 1978 – 1979, தினமணி கதிர் வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது.
– சரசுவின் சௌந்தர்ய லஹரி, முதற்பதிப்பு: பிப்ரவரி 1980, வானதி பதிப்பகம், சென்னை.
தொடர்புள்ள சிறுகதைகள்
நாடகம் போட்டுப்பார்
மெரீனா
October 15, 2026
புது வாழ்வு
இரா.துரைமாணிக்கம்
October 15, 2026
பதவிப் பரிதாபங்கள்…
காரை ஆடலரசன்
October 15, 2026