பால்ய சோகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 15, 2026
பார்வையிட்டோர்: 212 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

கிராமங்களில் பெத்த பிள்ளைகளை இன்னதுக்குத்தான் என்று காரணமில்லாமல் கழுதையை வெளுப்பது பொல் போட்டுஅடித்து நொறுக்குவதில் அப்பா அம்மாக் களுக்கு சம பங்கு உண்டு. அப்பாக்கள் அடிக்கும்போது அம்மாக்களையும்,அம்மாக்கள் குழந்தைகளை அடிக்கும்போது அவர்கள் அப்பாக்களையும் நினைத்துக்கொண்டு பிள்ளைகளை போட்டு வெளுத்து வாங்குவார்கள் போல.

அன்று பெருமாளுக்கு மண்டகப்படி..நம்ம பெருமாளுக்கு வயசு பத்துக்குள் தான்.
சேட்டையில் குத்தாலத்துக் குரங்கு.இங்கன குத்த வச்சிருக்கிறது போலத்தான் இருக்கும் மூடிக்கிட்டு முழிக்குமுன்ன பூசாரி கிணத்து கொடிக்காப்புளி மரத்துல உச்சில தொங்கிட்டு கிடப்பான் முகம் பார்க்கும் கண்ணாடியை உடைப்பான் சைக்கிளை பஞ்சராக்கி விடுவான். பாட்டி வளர்க்கும் கோழிக் குஞ்சுகளை கல்லால் எறிந்து கொண்ணுருவான்.தங்கச்சியின் காதைத்திருகி தொங்கட்டானை நசுக்கி ரத்த காயம் உண்டாக்கிருவான்

அடுக்குப்பானைகளை தள்ளி விட்டுருவான் இதே தொழுவாடாப் போச்சு என்று யாரிடமாவது ஒருத்தரிடம் வசவும் ஒதையும் வாங்கிக்கிட்டே இருப்பான்.

அண்ணைக்கும் ஒண்ணு நடந்து அதுக்குத்தான் இப்போ குரு பூசையும் நடந்துக் கிட்டிருக்கு. விழும் அடியிலிருந்து தப்பிக்க முதலில் குய்யோ முறையோ என்றுகொல பழி விழுந்த மாதிரி கத்தி ஊரைக் கூட்டி விட்டான்.

ஏம்ப்பா பச்சப் புள்ளையப் போட்டு எதுக்கு இப்பிடி அடிக்கிறே என்று அப்பனைத்  தடுத்த பாட்டி என்னலே குசும்பு பண்ணினே ஓடிரு என்று பேரனிடம் கண் ஜாடை காட்டினாள்.

ஓடினால் அப்பாவுக்கு கெட்ட கோபம் வந்துரும். கோட்டி புடிச்ச நாயை விரட்டி விரட்டி அடிக்கிற மாதிரி புளிய விளாரால் ரவ ரவையா உரிச்சு உப்பத் தடவிருவார்.

தப்பிக்க முடியாது என்று அதையும் நினைத்து நினைத்து ஓ ராமா என்று அழுதான் பெருமாள்.

அன்று நடந்தது பெருமாளின் தலைக்கு மேல போன ஒரு விவகாரம். எப்பவும் பக்கத்து டவுனுக்குப் போய் பார்பர் ஷாப்புல முடி வெட்டும் கூடப்படிக்கிற கோய்ந்தன் உள்ளூரில் மரத்தடியில் நல்லுவிடம் முடி வெட்டிக்கொள்ளும் சுப்பிரமணி மாதிரி நம்மளும் ஷேக் வெட்டிக்கணும் என்பதுதான் பெருமாளின் ஆசை.

அந்தச் சோலியெல்லாம் இங்க நடக்காது டவுணுக்கெல்லாம் இப்ப போக முடியாது உனக்கு நான்தான் ஷேக் வெட்டி விடுவேன் குத்த வையிலே என்று பெடதியைப் புடிச்சு அமுக்கி ஒக்கார வைத்து மாட்டைக்கட்டிப் போட்டு காயடிப்பது போல கதற கதற முடி வெட்டி விட்டுட்டார் தகப்பனார் கந்தன்.

இவன் போய் கண்ணாடியில் பார்த்தான் அவன் நினைத்த மாதிரி இல்லை மண்டை.
சைடு உச்சி இல்ல.கர்லிங் இல்ல. சலூன்ல மை கத்தி வச்சு பார்டர் வழிச்சுவிடுவானே அப்பிடி விடல நாய் கடிச்சு குதறிப் போட்ட கந்தல் துணி போல இருந்தது தலை.

அது சரியில்லேன்னு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி அவுக ஐயா குளிக்கப்போன நேரம் பார்த்து கத்தரிக்கோலை எடுத்து கர்லிங் கர்லிங்காக அவனுக்கு அவனே முடியை வெட்டிக்கிட்டான்.அது காட்டுக்குள் போகும் ஒத்தயடிப்பாதை போல அவன் தலையில் வளைஞ்சு வளைஞ்சுபோனது பார்க்க தமாஷாக இருந்தது.

நம்ம கிட்ட இருக்கிற கண்றாவியெல்லாம் நமக்குத் தெரியவா செய்யுது ரொம்ப நல்லா ஜோரா ராஜேஷ்கன்னா ஸ்டைல் மாதிரி இருக்கணும்னு நினைச்சுதான் நமக்கு நாமே திட்டத்தை அவன் அப்பவே பரீட்சித்துப்பார்த்தான்.அது இந்த பழைய பஞ்சாங்கங்களுக்குப் பிடிக்கலை.

மாமி அவன் தலயப் பாருங்க மண்டையில அடிபட்டவன் தலையை சிரைச்சு தையல்
போட்டு ஆஸ்பத்திரி பெட்டுல படுக்க வச்சிருப்பாங்களே அது மாதிரி என்ன கந்தர கோளம் பண்ணி வச்சிருக்காமுன்னு.

ஐயா வந்து பார்த்தாஹ. அம்புட்டுதான் கேந்தியாகிட்டார் புளிய விளாரை எடுத்து புளிச்சு புளிச்சுன்னு நாலு போடு போட்டாக. அதான் குக்கு முக்காடு போட்டுக்கிட்டு உக்காந்துக் கிட்டிருக்கு புள்ளி.

மூஞ்சியப்பாரு நரி புடிக்கிறவனாட்டம் ஏமுல உனக்கு புத்தி இப்பிடிப் போகுது குரங்குக்கு பொறந்த பய என்று பாட்டி அவள் பங்குக்கு திட்டினாள்.

இந்த மண்டயைக்கொண்டுபோய் வெளில காட்ட முடியுமா  நாளைக்கு பக்கத்து டவுன் சலூனுக்குப் போய் மொட்டை போடப்போறாகளாம்.

அந்த மொட்டையை நம்ம சொள்ள மாடன் கோயில்ல போட்டுறலாமுல்லா  ?

ஏன் பெரிசு எல்லாம் தெரிஞ்சு நீயும் இப்பிடி பேசுதே உள்ளுர்லயே நல்லு நமக்கு முடி வெட்ட மாட்டேங்குறான் பக்கத்து டவுனுல சலூன் வச்சிருக்கிற அவன் தம்பியே பயந்து பயந்து நம்ம ஊர்க்காரன் கண்ணுல தட்டுப்பட்டுறக்கூடாதேன்னு அக்கம் பக்கம் பாத்துதான் டவுன் பார்பர் ஷாப்புலயே நம்மாளுகளுக்கு முடி வெட்டுதான்.

நேத்து கம்மாக்கரை நவ்வா மரத்தடில முடி வெட்டுனாரே அது வாரா வாரம் செவ்வாக்கெழம பார்பர் ஷாப்புக்கு லீவு எதுக்கு வீடுதாங்க தெரியுமில்லகிராமத்துக்கு வந்து ஊர் சனங்களுக்கு சிரைக்கத்தானாம் நேத்து செவ்வாக்கெழமை இல்ல வந்திருக்கான் இசக்கி சொன்னாம்.

கோயிலு பொங்கலுக்கே உங்க ஆளுக கைக்குழந்தைகளுக்கு மொட்ட போடக்கூடாது அப்பிடிப் போட்டா ஊர்க்காரங்க அடிக்க வாராங்கன்னு முடியாதுன்னுட்டான் அப்புறம் நான் பனாமா பிளேடு வாங்கியாந்து நம்ம புள்ளைகளுக்கு மொட்டை போட்டேன். பிளேடை புடிக்கத்தெரியாம புடிச்சு பச்சப்புள்ளைக தலையில எம்புட்டு வெட்டுக்காயம் பாத்தியில்லே

எளவு காடையங்களுக்கு சாவு மொட்டை போடுறதுக்கே ஒரு தலைக்கு எத்தன பேரு பிளேடு புடிக்கோம் என்று தகப்பனாரிடமே குமுறினான் கந்தன்.

ஆமாமா தலையில வெட்டுக்காயம் படாத பய நம்ம ஜாதில எவன் இருக்கான் எங்கப்பன் எனக்கு முடி வெட்டி விட்டான் நான் உனக்கு வெட்டி விட்டேன் நீ உன் மவனுக்கு வெட்டி விடு இது இன்னைக்கா நேத்தா தலமுற தலமுறயா நடந்து வாரதுதானே ?

இந்த பிரபஞ்சத்தின் வேதனை ஒரு யுகத்தின் சோதனையைபற்றி எதுவும் தெரியாமல் என்ன பேசுகிறார்கள் என்று அறியாமலேயும் சம்பாதித்த அனுதாபத்தில் தப்பி ஒரு ஓரமாக உரலில் உட்கார்ந்து முழு நேரக்கச்சேரி செய்யும் பாகவதரைப்போல அனுபவித்து அழுதான் பெருமாள்.

அவன் செமையாக அடி வாங்கி முடித்த பெறகு சினிமா போலீஸ் போல அப்பதான்
சப்போட்டுக்கு வருவார்கள் பக்கத்து வீட்டு மாமா அக்கா சித்தப்பா சித்திமார் எல்லாம்.

அதுக்குண்ணு இப்பிடியா ஈவு இரக்கமில்லாம மாட்டை அடிக்கிற மாதிரி புள்ளைய போட்டு அடிப்பாக என்று ஆள் ஆளுக்கு சமாதானம் சொல்வார்கள்.

கிராமத்து ரெட்டச்சுழியன்களுக்கு4.1/2to 6 , 7.1/2 to10என்றெல்லாம் கணக்கு கிடையாது. எல்லா நாளிலும் கெட்ட நேரம் இருக்கும் அவர்களுக்கே தெரியாமல் சனியன் எப்பவும் பெடதியில உக்காந்திருப்பான் பாத்துக்கிடுங்க.

இப்படி அவன் ரசிச்சு ருசிச்சு அழுதுக்கிட்டிருக்கும் போதுதான் பாலா சித்தப்பா வருவார்.ஏல இவனே அப்பிடியே அழுதுகிட்டே போயி சித்தப்பனுக்கு ஒரு கெட்டு சொக்கலால் பீடியும் தீப்பெட்டியும் வாங்கிட்டு ஒரே ஓட்டமா ஓடியாந்துருறா என்னப் பெத்த அப்பமில்ல என்பார்.

ஏ ராசா அப்படியே எனக்கு பொரி கடலையும் ரெண்டு தேங்கா சில்லும் வாங்கியாந்தி ருப்பே.அப்பத்தான் ஏம்புள்ளைய உனக்கு கெட்டிக்குடுப்பேன் மூத்தவளக் கெட்டிக்கிடுதயா இல்லே இளையவள கெட்டிக்கிடுதையா என்று வேலம்மாக்கா சைஸ் பண்ணி ஆட்டுரலில் இருந்து தூக்கி விடுவாள்.

மிச்சமிருக்கிற காலணாவுக்கு கல்கோனா வாங்கித்தின்னுக்கோ செரியா …?

ஏல நா மட்டும் புடிக்கலேன்னு வையி உங்க அம்மே அன்னா கெடக்குல்லா உலக்களுந்து அதாலையே உன்ன அடிச்சுக்கொண்ணுருப்பா பாதகத்தி எந்தக்காட்டுக்காரி இவ .. இங்க வந்து சேர்ந்திருக்கா பாரு அரக்கி கெணக்க என்று அம்மாவை திட்டியது கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்.

ஓடிப்போய் ரெண்டு பேருக்கும் வேண்டியதை வாங்கிக்கொண்டு வந்து கொடுத்து விட்டுதிரும்பவும் உரலில் உட்கார்ந்து கல்கோனாவை கடக்கு முடக்குன்னு மெண்ணு தின்னுக்கிட்டே விட்ட இடத்திலிருந்து அழுகையைத் தொடங்கும்போது தாத்தா வந்து கேட்பார்.

ஏ என்னலே பெருமாளு இன்னைக்கு உங்கப்பன் மண்டகப்படியாமுல்லா கொடை குடுத்தானா?

ஊங் கூங்கு என்று குட்டி நாய் கொணையுமே அது போல சாவி கொடுக்காத பூனக்கரப் பெட்டிகீழாக்க போற மாதிரி அழ ஆரம்பித்தான் பெருமாளு.

ஆமா. பெருமாளு போயி பெத்த பெருமாள் வந்திருக்கு அவனே ஆத்த மாட்டாம அழுதுக்கிட்டு கிடக்கான் இவரு வேற என்றாள் பாட்டி. இப்போ அழுகை சவுண்டு கொஞ்சம் கூடும்.

அழாதலே ஒங்கப்பன் வரட்டும் அவனுக்கு இன்னைக்கு இருக்கு வச்சுக்கிடுதேன்
கேக்கதுக்கு ஆள் இல்லன்னு நெனைச்சிட்டானா என்பார் தாத்தா ஆறுதலாக.

இந்தா காலணாவுக்கு கடல மிட்டாய் வாங்கிக்கிட்டு அப்படியே தாத்தாவுக்கு அரையணாவுக்கு கீழக்கடையில போயி பட்டணம் பொடி வாங்கியாருவியாம்

செரியா என் ராசா இல்ல    …?

சரியென்று அழுகையை ஒத்தி வச்சுட்டு கண்ணீரைத்துடச்சிட்டு கடைக்குப் போய் தாத்தாவுக்கு பொடிய வாங்கிக் குடுத்துட்டு கடலை மிட்டாயையும் தின்னு முடிச்சிட்டு உரலில் உட்கார்ந்து மேற்காமின்ன பார்த்து திரும்பவும் ரசிச்சு அழ ஆரம்பித்தான் பெருமாளு.

அடுத்து யாராவது வேலை சொல்லி துரத்தும் வரை தனி ஆவர்த்தன கச்சேரி தொடரும்.குளிக்கப் போய்விட்டு கிணற்றிலிருந்து திரும்பிய ஐயா இவன் இன்னும் கல்லுரலில் ஒக்காந்து அழுவதைப்பார்த்து காண்டாகி கொஞ்சம் கூட ஈவு இரக்கமின்றி  —

எலே அழுகைய நிப்பாட்டுதியா இல்லே புளிய விளாரை எடுத்து புளிச் புளிச்சுண்ணு

குடுக்கவா என்று மிரட்டினார் அப்பா

கெதக் என்று நிமிர்ந்து உட்கார்ந்தான். கட்டபொம்மனை தூக்கிலிட்டதாலும் அவனுக்கு பத்து வயசு ஆகும் வரை அடி குடுக்க விளார் கொடுத்து உதவியதாலும் அவனுக்கு அந்தப் புளிய மரத்தை மட்டும் துப்புரவாகப் புடிக்காது. அதோடு அப்பா சைக்கிளுக்கு பஞ்சர் பாக்க ரப்பர் வெட்டற அந்தக்கத்தரிப்பானையே வச்சு முடி வெட்டுறதும் வளுசா அவனுக்கு பிடிக்கலை.

பெரிய ஆளு ஆனதும் சேக் வெட்டுதமோ இல்லையோ மொதல்ல இந்த மரத்தை வெட்டணும் பெறகு அந்த கத்தரிப்பானைத் தொலைச்சிரணும் என்று தீர்மானித்துக் கொண்டான் பெருமாள் –

அய்யா சைக்கிளை துடைத்தார். சரி சந்தைக்குப் போறாரு போல.

யப்பே ஏர் புடிக்கவா என்று பம்பை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து விட்டு மவுத்தில் ரப்பர் ட்யூப்பை மாட்டி பிடித்துக் கொண்டான்.

அப்பனின் முகத்தில் லேசாக கோபம் மறைவது தெரிந்தது.

அப்பிடின்னா யப்பே சந்தைக்குப் போய்ட்டு வரும்போது நீ எனக்கு புரோட்டா செட் வாங்கியாரணும் என்றான் அப்பாவிடம் பகைமையை மறந்து.அவர் சைக்கிளில் ஏறி அமர்ந்ததும் எலே ரோடு வரைக்கு வரலையா என்றார்

வழக்கமாக அவர் சைக்கிள் ஏறினால் தொக்குன்னு குரங்கு மாதிரி தாவி குதித்து ஏறி
சைக்கிள் கேரியரில் உக்காந்து கொஞ்ச தூரம் போனதும் அதே ஸ்பீடில் குதித்து வீட்டுக்கு வந்து விடுவான். இன்னைக்கு அவன் போகாமல் இருந்ததுக்கு ஒரு காரணம் இருந்தது.

காலையில் சைக்கிளை எடுத்து குரங்குப்பெடல் போட்டு முள்ளுக் காட்டுக்குள் விட்டு பஞ்சாராக்கினது அவனுக்கு மட்டும்தான் தெரியும்.

அவன் அடிச்ச ஏர் கரை வரைக்கும் கூட தாங்காது அதுக்கங்கிட்டு அப்பா சைக்களை உருட்டிக்கிட்டுதான் போகப்போறார்., திரும்பி வந்ததும் நடக்கப்போகும் அடுத்த மண்ட

கப்படியை எதிர்பார்த்து உரலில் மேற்காமின்ன பார்த்து உட்கார்ந்திருந்தான் பெருமாள். 

– கும்பிடுதேன்சாமி (தொகுப்பு) 

கரடிகுளம் ஜெயாபாரதிப்ரியா கரடிகுளம் ஜெயாபாரதிப்ரியா என்பவர் ஒரு பிரபல தமிழ் எழுத்தாளர், கவிஞர் மற்றும் பத்திரிகையாளர் ஆவார். குறிப்புகள் இயற்பெயர்: பாரதி பிறந்த ஊர்: கரடிகுளம் (கழுகுமலை அருகில், தூத்துக்குடி மாவட்டம்) பிறந்த தேதி: மே 22, 1957 பெற்றோர்: வி.எம். சம்பாரி - மாரியம்மாள் பணி: இந்தியன் வங்கி அதிகாரி (ஓய்வு) எழுத்துப் பணி: கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு தமிழ்ப் பத்திரிகைகளில் நகைச்சுவைத் துணுக்குகள், சிறுகதைகள் மற்றும் நாவல்களை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *