கதையாசிரியர்:
தின/வார இதழ்: மங்கையர் மலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 3, 2026
பார்வையிட்டோர்: 74 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

(1983ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கல்யாண அலுப்புத் தீர இன்னும் ஒரு வாரம் ஆகும் போலிருந்தது. அதுவும் இந்தப் பால்காரன் வந்துவிடுவானே. வேலைக்காரி வந்துவிடுவாளேன்னு பயந்து பயந்து தூங்குகிற இந்த மத்தியான வேளைத் தூக்கத்தில் உடம்பு வலி இன்னும் ஜாஸ்தியாகிறாப் போல் தோன்றுகிறது. கல்யாணம் ஆன கையோடு புது மணத் தம்பதிகள் ஹனிமூன் போவது போல், பெண்ணைப் பெற்றவர்களும் எங்கேயாவது கண்காணாமல் போயிருந்து ஒரு வாரம் சாப்பாடு தூக்கத்தைத் தவிர வேறு வேலையில்லாமல் ரெஸ்டாக இருக்கும்படி ஏதாவது ஏற்பாடு இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே மெதுவாய் எழுந்து உடம்பு சுவாதீனப்படும் வரை உட்கார்ந்து இருந்து விட்டுக் காரியங்களைக் கவனிக்கப் போனேன்.

“என்னம்மா தள்ளாடறே?” என்றாள் என் இளைய மகள் உமா. அவளுக்குத் தன்னுடைய அலுப்பைப் பொருப்படுத்த முடியாதபடி அடுத்த வாரம் செமஸ்டர் பரிட்சை. படித்துக் கொண்டிருக்கிறாள். பரிட்சை முடிந்துதான் மொத்தமாய் ரெஸ்ட் எடுக்கணும்.

“ஒண்ணுமில்லேடி! உடம்பு பக்கம் பக்கமாய் வலிக்கிறது. ஒண்ணுமே முடியலை. அதான்” என்றேன்.

“என்னம்மா, நீயும் அக்கா மாதிரி ஆரம்பிச்சுட்டே?” என்று சிரித்தாள் உமா.

எங்கள் பேச்சு சப்தத்தில் விழித்துக் கொண்டார் என் கணவர்.

”ஐயையோ! சுசிக்கு உடம்பு கிடம்பு ஒண்ணும் படுத்தாமல் இருக்கணுமே. நான் வேணா சாயங்காலம் ஒரு நடை போய்…” என்று நீளமாய் ஆரம்பித்தவரை “ஒன்றும் வேண்டாம்” என்று இடைமறித்தேன்.

“கல்யாணமாகி ஒரே வாரம்தான் ஆறது. அவ அந்தச் குழ்நிலைக்கெல்லாம் தன்னைச் சரிப்படுத்திண்டு குடித்தனம் ஆரம்பிக்கட்டும். அடுத்த வாரம் ரெண்டு பேருமா போகலாம்.”

“பெண்ணை வீட்டை விட்டு அனுப்பிவிட்டு நான் தவியாய்த் தவிச்சிண்டிருக்கேன். நீ ராக்ஷஸ ஜன்மம்டீ! துளிக்கூட இரக்கமே கிடையாது உனக்கு!”

“இருங்கள் இருங்கள்” என்று கையமர்த்தினேன் அவரை, “ஊர் ஓலகத்தில இல்லாத அதிசயமா நீங்கதான் பெண்ணைப் பெத்துக் கல்யாணம் பண்ணிக் குடுத்திட்டேளா இப்படி மாஞ்சு போறதுக்கு. எனக்கும் அக்கறை இருக்கு. டாக்டர் சொன்னதை மறந்து போயிட்டேளா?”

அவர் யோசனையில் ஆழ, நான் வேலையைப் பார்க்கப் போனேன். எங்களுக்கு சுசீலா உமா ரெண்டே பெண்கள். சுசீலாவுக்கு படிப்பு ரொம்ப ஏறவில்லை. எஸ்.எஸ்.எல்.ஸி. மூன்று தடவை எழுதியும் பாசாகவில்லை. பிடிவாதமாய் வீட்டிலேயே இருந்து விட்டாள். உமா அவளுக்கு நேர் எதிர். படிப்பு, பாட்டு எல்லாவற்றிலும் முதல். அதைத் தவிர, ஒவியம், யோகா என்று எத்தனை யெத்தனையோ விஷயங்களில் ஆர்வம். ரொம்பத் துடி.

சுசீலா சுபாவத்திலேயே சிறிது சோம்பேறி. அதிலும் முதல் பெண் என்று அப்பா செல்லம் வேற ஜாஸ்தி. படித்துக் கொண்டிருந்த நாட்களில் சாதாரணமாக ஜுரம் கூட வராதவள், வீட்டில் இருக்க ஆரம்பித்த நாள் முதல் தினமும் ஏதாவது வியாதி சொல்ல ஆரம்பித்தாள்.

அவளுக்கு எப்போதும் சினிமாப் பாட்டு கேட்க வேண்டும். ‘ஹாய்’யாகப் படுத்து கொண்டு கதைப் புத்தகம் படிக்க வேண்டும். வீட்டில்தானே இருக்கிறாள் என்று ஏதாவது ரெண்டு காரியம் சொன்னால் அரை மனதாய்ச் செய்வாள். செய்து விட்டு, கால் வீங்கி விட்டது. கை குடைகிறது. மண்டையைத் தெறித்துப் போகிறது என்று விதவிதமாய் வியாதி சொல்வாள். நான் முதலில் இதைச் சட்டையே செய்யவில்லை. பொண்ணாகப் பொறந்துட்டு, அதுவும் நாளைக்கு இன்னொரு எடத்துக்குப் போக வேண்டியவ காரியம் ஒண்ணும் கத்துக்காம கதை பண்ணிணா எப்படி?

ஆனால் இது நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு வந்தது. திடீரென்று ”அம்மா எனக்கு என்னவோ பண்றதே. தலையைச் சுத்தற மாதிரி இருக்கே! ஒருவேளை ரத்த அழுத்தம் இருக்குமோ?” என்பாள். இன்னும் தனக்கிருக்கிற அறிகுறிகளுக்குத் தனக்கு எப்பேர்ப்பட்ட வியாதிகளெல்லாம் வரக்கூடும் என்று ஆராய்ந்து சொல்லிக் கொண்டிருந்தாள்.

”அசடு! தத்துப் பித்துன்னு உளறாதே சும்மா படுத்திண்டிருக்காம எழுந்து சுறு சுறுப்பா வளைய வந்தா ஓரு வியாதியும் வராது” என்பேன்.

“உனக்கு இரக்கமே கிடையாதே! என்னை கண்டாலே ஆகாதே! நான் கஷ்டப்பட்டா சந்தோஷப்படறவ தானே நீ” என்று என்னென்னவோ ஆத்திரத்தில் கத்துவாள். ‘ஓ’வென்று அழுவாள். எத்தனை நல்ல வார்த்தை சொன்னாலும் சமாதானமாக மாட்டாள்.

சாயந்திரம் அவ அப்பா எப்போ வருவார்னு காத்திருந்து அன்னிக்கு அவளுக்கு உடம்பு படுத்தின விதத்தை அவரிடம் விஸ்தாரமாக விவரித்து அழுவாள்.

உடனே, ”கொழந்தை முடியலேங்கறாளே. கொஞ்சம் கவனிக்கக் கூடாது? காலுக்குத் தவிட்டு ஒத்தடம் கொடு. கையில் ஐயோடக்ஸைத் தேய்” என்று எனக்கு உத்தரவுகள் பறக்கும்.

முதலில் சாதாரண டாக்டர்களிடம் காண்பித்துப் பார்த்தோம். ஒன்றும் குணம் தெரியவில்லை. சுலோ விடாமல் மூச்சுக்கு முன்னூறு வியாதி சொல்லிக் கொண்டு தான் இருந்தாள். சரிதான், இந்தப் பெண்ணுக்கு நெஜமாகவே உடம்பில் எங்கேயோ ஏதோ கோளாறுதான் போலிருக்கிறது என்று பயந்து போய் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்வரை அது அதற்கான ஸ்பெஷலிஸ்டுகளிடம் அழைத்துச் சென்று காட்டினோம். பணம் தண்ணீராய்ச் செலவழிந்தது. எங்கேயும் எந்தக் கோளாறும் இல்லை. நார்மல்தான் என்று சொல்லிவிட்டார்கள்.

கடைசியாய் மண்டையிடிக்காக ஒரு நியூரோலாஜிஸ்டிடம் காட்டியபோது. அவர்தான் சொன்னார்: ”தலைவலி என்பது மனசு சம்பத்தப்பட்ட காரணங்களால் கூட வரலாம். எதுக்கும் ஒரு சைக்கியாட்ரிஸ்ட்டையும் பார்த்து விடுங்கள்.”

சைக்கியாட்ரிஸ்ட் ராஜகோபாலன் சிரித்த முகமாய், பொறுமையாய், அவளுக்கு எந்தெந்தச் சமயத்தில் உடம்பு எப்படி யெப்படிப் படுத்துகிறது என்று சுசிலா பட்டியல் போட்டுச் சொன்ன விவரங்களைக் கேட்டார். பிறகு இவரிடம் திரும்பினார்.

“படிக்க வெக்கலேன்ன என்ன? வேற ஏதாவது விஷயத்தில் உங்க மகளை நீங்க ஈடுபடுத்தியிருக்கலாமே!”

“உடம்பு படுத்தி அவ ஒரே ‘வீக்’கா இருக்காளே. அவளாலே ஒண்ணும் முடியாதே!” என்றார் இவர்.

டாக்டர் ஒரு நிமிடம் தன் முன்னாலிருந்த லெட்டர் பேடையே வெறித்தபடி யோசனையில் ஆழ்ந்தார்.

பிறகு சுசிலாவை அடுத்த அறையில் போய் அமரச் சொன்னார்.

நாங்கள் மனச் சஞ்சலத்தோடு அவரையே பார்த்தோம். என்ன சொல்லப் போகிறார்?

“முதல் விஷயம். நீங்க உங்க பெண் எதிரே, அவளுக்கு உடம்பு சரியில்லை அவளால முடியாதுன்னு சொல்லவேகூடாது. அதுவே அவ மனகல படிஞ்சு போயிடும். உங்க பெண்ணைத் தெரிஞ்சோ, தெரியாமலோ ஒண்ணும் கற்றுக் குடுக்காம அப்படியே விட்டுட்டீங்க. உங்க ரெண்டாவது பெண் எல்லா விஷயங்களிலும் ரொம்பக் கெட்டிக்காரின்னு சொன்னீங்க. அப்ப, சந்தேகமில்லாம நீங்க ரெண்டு பேரும் அந்தப் பெண்ணை சுசிலா முன்னிலையில் புகழ்ந்திருப்பீங்க. அவளுக்குத் தான் அந்த மாதிரி இல்லையேங்கற ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டிருக்கலாம். என்னடா இது. அப்பா அம்மா நம்மைக் கவனிக்காமப் போயிடப் போறாகளோங்கிற பயத்தில அட்டென்ஷன் தனக்கு வேணுங்கிற வெறியிலே கற்பனையாய் வியாதி சொல்ல ஆரம்பித்திருக்கலாம். உடனே நீங்க மாய்ஞ்சு மாய்ஞ்சு சிசுருஷை பண்ணினதில் ஒரு திருப்தி கிடைத்தது. அந்தத் திருப்தியைத் தொடர்ந்து பெறுவதற்காகவே திரும்பத் திரும்ப உடம்பு முடியவில்லை என்று கூறி, கடைசியில் இந்த மாதிரி கேஸில் அவர்கள் கற்பனை பண்ற விஷயங்களை நாளடைவில் அவர்களே தீவிரமாய் நம்ப ஆரம்பித்து விடுவார்கள். பிறகு நீங்க எத்தனை டாக்டரைப் பார்த்தாலும் பிரயோஜனமில்லை. டாக்டருக்குக் கண்டுபிடிக்கத் தெரிய வில்லை. ஆனால் எனக்கு உள்ளூர ஏதோ இருக்கு என்பார்கள். ஆமாம்! உங்கள் பெண்ணுக்கு இருபத்திமூணு வயசாகிறதே கல்யாணம் பண்ற உத்தேசமில்லையா உங்களுக்கு?” என்றார்.

“உடம்பு படுத்திண்டே இருக்கிற போது எப்படின்னுதான்….” என்று இழுத்தார் இவர்.

“உஸ்! உங்களுக்கு மொதல்ல வைத்தியம் பண்ணணும் போலிருக்கே! இதோ பாருங்க. இந்த நொடி முதல் ‘சுசிலாவுக்கு ஒரு உடம்புமில்லை. எல்லாப் பெண்களையும் போல நார்மலாத்தான் இருக்கிறாள்’ என்று முதல்ல நீங்க நம்பணும், பிறகு மெதுவாய் அவளை நம்ப வைக்கணும். அவரை விட நீங்களே தைரியமா யிருப்பீங்க போலிருக்கு. அதனால உங்க கிட்டயே சொல்றேன். கேளுங்க! எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சுசிலாவுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணுங்க. அவளுக்குன்னு ஒரு குடும்பம், பொறுப்புன்னு வந்து குழ்நிலையில் ஒரு மாறுதல் ஏற்பட்டால் நிச்சயம் மனநிலையிலும் மாறுதல் ஏற்பட்டு உடம்பு குணமாகிவிடும்.”

அவரிடம் விடை பெற்றுக் கொண்டு எழுந்த எங்களை “ஒரு நிமிடம்!” என்று நிறுத்தினார் டாக்டர்.

“இன்னொரு விஷயம், கல்யாணம் பண்ணிக் குடுத்தீங்கன்னா கொஞ்ச நாளைக்குக் குறைஞ்ச பட்சம் ஒரு பதினைத்து நாளைக்காவது அவளைப் போய்ப் பார்க்கற வேலை வெச்சுக்காதீங்க, அந்த சூழ்நிலைகளுக் கெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு அவ ஒரு மாதிரியா ‘செட்டில்’ ஆக ‘டைம்’ குடுத்துட்டு அப்புறம் போய்ப் பாருங்க. இது ரொம்ப முக்கியமான விஷயம்” என்றார்.

அன்று டாக்டர் சொன்னதைத்தான் இப்போது இவருக்கு நினைவு படுத்தினேன். இவரும் சுசிலாவும் பலமாய் எதிர்த்தும் டாக்டர் சொன்னபடி நானே தீவிரமாய் வரன் பார்த்து, முனைப்பாய் நின்று எல்லாக் காரியங்களையும் கவனித்து ஒரு வழியாய் ஒருவன் கையில் பிடித்துக் கொடுத்தாயிற்று.

அவளுடைய நன்மைக்காக நான் கண்டிப்பாய் இருக்கிறேனே தவிர எனக்கு மட்டும் கல்யாணம் பண்ணிக் கொடுத்த பெண்ணைப் போய் பார்க்க ஆசையில்லையா? பதினைந்து நாட்கள் எப்போ முடியும் என்று காத்திருந்து இருவரும் ஆவலாய் ஓடினோம்.

எங்களை எதிர்பாராமல் பார்த்த மகிழ்ச்சி சுசீலா முகத்தில் வெளிப்படையாய்த் தெரிந்தது. ஓடிவந்து வரவேற்றாள்.

“எப்படி அம்மா இருக்கே? மாப்பிள்ளை இல்லையா?” இவர் சுபாவமான உரத்த குரவில் ஆரம்பிக்க, “உஷ்” என்று வாயில் விரலை வைத்து எச்சரித்தாள்.

“அவருக்கு ஒரே தலைவலி. உள்ளே படுத்திண்டிருக்கார். இதோ அவருக்குக் தான் அடுப்பில் கஷாயம் போட்டுண்டிருக்கேன்” அடுப்பைப் பார்க்க ஓடினாள்.

நான் அவளையே கண் கொட்டாமல் பார்த்தேன். என்ன துள்ளல்! என்ன சுறுசுறுப்பு!

மாப்பிள்ளைக்குத் தொந்திரவில்லாதபடி அவர் அறைக் கதவைச் சாத்திவிட்டு வந்து அமர்ந்தாள்.

“பாக்டரியிலே ஓயாம நின்னுண்டே சூபர்வைஸ் பண்றாரா, அப்பப்ப கால்வலி வந்து அவஸ்தைப் படுவார். பாவம்! நான் தைலம் தடவி உருவினாத்தான் மறு நாள் வேலை செய்ய முடியறதும்பார். நான் பாட்டுக்குப் பேசிண்டே இருக்கேனே. இருங்கோ காப்பி டிபன் கொண்டு வரேன்”.

திரும்பி ‘ஒரு ஓட்டம்’ சமையலறைக்கு.

“எங்களோட வந்து ஒரு வாரம் இருந்துட்டுப் போயேம்மா!” என்றார் அவருடைய அப்பா.

“ஐய்யய்யோ! நான் இல்லாட்டா அவருக்கு ஒரு நிமிஷம் கூட முடியாது. அப்புறமாய்ப் பார்க்கலாம்.”

அடேயப்பா! நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். கல்யாணமான பதினைந்தே நாள்ல எவ்வளவு மாற்றம்!

“இப்படி ஓடு ஓடுன்னு ஓடறாளே… இவளுக்குத் திரும்பி ஏதாவது உடம்புக்கு வராம இருக்கணுமே” – வீட்டுக்குத் திரும்பும் போது என்னிடம் கவலையுடன் அங்கலாய்த்தார் இவர்.

நான் பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டேன்.

– 01-03-1983, மங்கையர் மலர்.

Revathy சிறு குறிப்பு சென்னை தொலைபேசி அலுவலகத்தில் பணியாற்றி சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்றிருக்கும் ரேவதி பாலு கால் நூற்றாண்டுக்கும் மேலாக சிறுகதை, நாடகம், குறுநாவல், ஆன்மிகம் என்று எல்லா துறைகளிலும் தடம் பதித்து பல்வேறு பரிசுகளை வென்ற்ருக்கிறார். இலைக்கிய பீடம் சிறுகதைப் போட்டியில் இரு முறை பரிசு, கலைமகள் சிறுகதை போட்டி, மற்றும் குறுநாவல் போட்டியில் பரிசு கிடைத்துள்ளது. இலக்கிய சிந்தனை அமைப்பின் மாதப் பரிசினை, இரு முறை வென்றிருக்கும்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *