ஒரு முற்பகல் காட்சி
கதையாசிரியர்: நாஞ்சில்நாடன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: October 4, 2026
பார்வையிட்டோர்: 95
(1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முன்னின்றவர் போலீஸ்காரர். சீருடையில் இல்லாதபோதும் இதை யாரும் சொல்வார்கள். கண்கள் போதையின் நிரந்தரச் சிவப்பில் இருந்தன.காதோரம் மெஷின் ஒட்டிக்கரம்பிய கிராப். உத்யோகத்துக்கு பொருத்தமும் தொடர்பும் இல்லாத வயிறு.
அவருக்கும் முன்னின்றவர் சனிக்கிழமை வியாதி ஒன்றை லயித்துப் படித்துக்கொண்டிருந்தார்.
அவர்க்கும் முன்னால் அந்த ஓட்டலில் ஆண்டாண்டு காலமாய் பதிந்து சாப்பிடும் இருவர் நின்றிருந்தனர். அவர்கள் பேசியது எல்லோர் காதிலும் விழும்படியாக உரத்து இருந்தது. மலிந்த தமிழ் சினிமா ஒன்றை விவாதித்துக் கொண்டிருந்தனர். ‘நான் தமிழ் பேசுவதால் பத்தினியாக இருக்கவில்லை; பத்தினியாக இருப்பதால் தமிழ் பேசுகிறேன்’ என்ற ஒற்றை வரி வசனத்துக்காகவே அந்தப் படத்துக்கு அவார்டு வழங்கப்பட வேண்டும் என்றனர்.
மேலும் இருவர் ஓட்டலின் கம்பி அளிகளைப் பிடித்த வண்ணம் உள்ளே பார்த்துக்கொண்டிருந்தனர். எவர் எழத் தயாராகிறார். எவர் சோற்றில் மோர்ஊற்றிப் பிசைகிறார் என்ற கண்காணிப்பில் இருந்தனர்.
அந்த வரிசையில் அவன் கடைசியான ஆள். எண்ணிப் பார்த்ததில் அவனுக்கு முன்னால் ஆறு பேர்கள் இருந்தனர். அவன் முறை வந்து, அவனுக்கோர் இருக்கை அமைய இன்னும் பத்துப் பதினைந்து நிமிடங் கள் ஆகலாம். அது ஒன்றும் பெரிய சமாச்சாரம் இல்லை. சில சமயம் இருபத்தி மூன்றாவது ஆளாக அடுத்த கடையின் வாசலை மறித்துக் கொண்டு நீளும் வரிசையில் நிற்க நேர்ந்ததுண்டு. பெரும்பாலும் எல்லா வார நாட்களிலும் இரவு ஏழரை முதல் ஒன்பது வரை இந்தக் கதி இருக் கும். அப்போது காத்து நிற்பது முப்பது நாற்பது நிமிடங்கள்கூட ஆகும். பசித்த வயிற்றுடன் சோற்றுக்கு வரிசை கிடப்பது மிக வசதியான காரியம் அன்று. அதுவும் வெக்கையாக வெளிப்பரவும் குழம்பு, கூட்டு வாசனை யைத் தாங்கிக்கொண்டு காத்திருப்பது மிகவும் தொந்தரவு தரக்கூடியது.
நீளவாட்டத்தில் வரிசைக்கு ஆறு பேராகப் பன்னிரண்டு பேரே அமர்ந்து உண்ணும் வசதி கொண்ட ஓட்டல் அது. அதை ஓட்டல் என்று சொல்வது கூட அவ்வளவு பொருத்தமில்லை. பெயர் மகேஷ் கபே. ஆனாலும் காப்பி, டீ, சாம்பார் வடை, உப்புமா, மசால் தோசை சமாச் சாரங்கள் ஏதும் கிடையாது. காலையில் பத்துமணி முதல் இரண்டு மணி வரையிலும் இரவு ஆறு மணி முதல் பத்துமணி வரையிலும் சாப்பாடு மட்டும்தான். சாப்பாடு தீர்வது போல் பத்திருபது நிமிடங்கள் நேரம் சுருங்கவோ நீளவோ செய்யும்.
முதலாளியின் இருக்கையை வெளியேயுள்ள வராந்தாவுக்கும் வாஷ்பேஸினை அடுக்களைக்கும் தள்ளினால் இரண்டு இருக்கைகள் அதிகமாகப் போடலாம்தான். அதை இது நாள் வரை முதலாளி யோசிக் காமலா இருப்பார். வேறு ஏதும் அசௌகரியங்கள் இருக்கக் கூடும். எனவே மகேஷ்கபேயில் அவன் சாப்பிட்டு வந்த கடந்த ஆண்டுகளிலும் அதற்கு முன்பாகவும் இதே கதியில்தான் இயங்கிக் கொண்டிருந்தது.
அந்த வழியாகப் போவோருக்கு ‘இது என்னத்துக்கு இந்த வரிசை” என்று தோன்றும். சங்கதி தெரிந்தவர்களுக்கு இவனுகளுக்கு கிறுக் கோவ்? இதை விட்டா சோறு திங்க வேற ஓட்டல் கெடையாதா?’ என்றும் தோன்றும்.ஆனால் அது அவ்வளவு இலகுவான விஷயம் அல்ல.
முக்கியமாய், மகேஷ் கபேயில் நல்ல திருத்தமான பாலக்காட்டு சமையல். மலிந்த காய்கறிகளையே பட்டர் ஆக்கிப் போட்டாலும் ஒரு சூடும் சுவையும் உண்டு. குழம்பில், கூட்டில், பொடித்துவளில் தினமும் மாற்றம் இருக்கும்.
மேலும் தனிச்சாப்பாடு நாலரை ரூபாய்தான். முப்பது சீட்டுக்கள் கொண்ட சாப்பாட்டுக்கு கூப்பன் புத்தகம் நூற்றிருபது ரூபாய். அதாவது பதிந்து இங்கேயே சாப்பிடுபவர்களுக்கு நான்கு ரூபாய் ரேட்டுத்தான் விழும். விருந்தாளியை அழைத்துக்கொண்டு போனால் கூப்பனுடன் எட்டணா அதிகம் தரவேண்டியதிருக்கும்.
நான்கு சப்பாத்திகள். ஆலிலை கனமாகவும் அவ்வளவு ‘மொடக்’ கில்லாமலும். இரண்டு சின்னக்கிண்ணம் சோறு. சப்பாத்தி வேண்டாம் என்றால் மாற்றாகக் கூடுதல் ஒரு கிண்ணம் சோறு. கூட்டு, பொடுத்துவள், ஊறுகாய், சின்னக்கிண்ணம் தயிர், குழம்பு, ரசம், மோர். இதில் சோற்றுக் கிண்ணம் அல்லது சப்பாத்தி மேலும் வேண்டும் என்றால் எக்ஸ்ட்ரா.
தொடர்ந்து அங்கேயே சாப்பிடுபவர்களில் சிலர் சாப்பிட வரும் போது குங்குமச்சிமிழ் கிண்ணத்தில் நெய் கொண்டுவந்து சோற்றின் மேல் ஊற்றிக் கொள்வார்கள். சிலர் காய்ந்து சுருண்ட உப்பு நாரத்தங் காயைத் தாளில் மடக்கிக் கொண்டுவருவார்கள். சிலர் சீசனில் மாம்பழம் கொண்டுவருவார்கள்.
ஊரில் இருந்து வந்த புதிதில், இலையை விட்டு எழாமல் தொடராக, இதே சாப்பாட்டை மூன்று தரம் சேர்ந்து சாப்பிட முடிந்தி ருக்கும். நாகரீகம் கருதியும் கட்டுபடி கருதியும் அவ்வாறு செய்ய முடிந்ததில்லை. பின்னால் குடலும் சுருங்கிப் போயிற்று.
அறையில் இருந்து பத்து நிமிட நடை, காத்து நிற்பு, பசியின் தீவிரம் எல்லாம் சேர்ந்து, இலையின் முன்பு அமர்ந்ததும் இரண்டு தம்ளர் தண்ணீர் வாங்கும். சாப்பிட்டு முடிந்ததும் எதற்கும் இருக்கட்டும் என்று இன்னுமோர் தம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு வெளியே வரும்போது நிரம்ப உல்லாசமாக இருந்தாலும் இரண்டுமணி நேரம் பொறுத்துப் பசிக்கும். அதற்காக மறுபடியும் சாப்பிட முடியுமா என்ன?
நிறைய ஓட்டல்களில் அலைந்து அலுத்தும் வசதி குறித்தும் மகேஷ் கபே நிரந்தரமாகிவிட்டது. பழக்கம் காரணமாய் பட்டர் ஒரு புன்சிரிப்பும் சர்வர் குழம்பின் காய்களையும் சிந்துவர்.
இருவர் உட்புக, இருவர் வாய் துடைத்துபடி வெளிப்போந்தனர். அவனுக்குப் பின்னால் மேலும் நாலைந்து பேர் வந்து நின்றிருப்பதைக் கண்டான். தொட்டுப் பின்னால், முன்தலை வழித்த, தார்பாய்ச்சி வேட்டி கட்டி மேலே இன்னுமோர் வேட்டி போர்த்திய, நரை முகம் கொண்ட, ரெக்ஸின் பை வைத்திருந்த புரோகிதர் ஒருவர். அவரை அடுத்து அவரது மகனே போலும் பையன். பதினேழு அல்லது பதினெட்டு வயதிருக்கும். கல்லூரிக்குப் போகும் களையில்லை. நகரத்து மண்டி இன்னும் தூசாகப் படிய ஆரம்பித்திருக்கவில்லை. கிராமத்து வியப்பின்சுவடுகள் முகத்தில் மீந்திருந்தன.
சிறிய ட்ரங்குப்பெட்டி வைத்துக்கொள்ள இடம். கக்கூஸ் போக, பல் தீற்ற, குளிக்க அனுமதி, வெளி வராந்தாவில் அல்லது கம்பி வரிசை கள் அமைந்த பால்கனியில் படுக்க வசதி, இவை அமைந்த ‘பேயிங் கெஸ்ட்டாக’ இருப்பவர் போலத் தெரிந்தனர். ஒருவேளை காலையில் ஒரு கப் காப்பியும் கூடுதலாகக் கிடைக்கலாம். இரவு பத்து மணிக்கு முன்பு படுக்கப் போகலாகாது என்று நியதி இருக்கலாம்.
மூன்று பேர் வெளிப் போக, மூன்று பேர் உட்புக முனைந்தனர். கம்பி அளியைப் பிடித்துக்கொண்டு நிற்கும் இரண்டாவது ஆளாக அவன் இருந்தான். உள்ளே விழியோட்டியதில் – ஒருவர் அப்போதுதான் மோர்க் கிண்ணத்தில் எச்சில் விரலை விட்டுக் கலக்கி சோற்றில் சரித்தார். இன்னொருவர் மோர்ச் சோற்றை உறிஞ்சிக்கொண்டிருந்தார். மோர்ச் சோற்று ஆளின் இருக்கைதான் அவனுக்கு வாய்க்கும் போலிருந்தது.
வராந்தாவுக்குக் கீழே நின்றிருந்த வாத்தியாரையும் பையனையும் கவனிக்க ஆரம்பித்தான். அந்த ஊரில் புரோகிதம் செய்யும் எல்லா வாத்தியார்களையும் போல அவரிடம் இருந்த ரெக்ஸின் பையினுள் கைவிட்டு சிறிய சுருக்குப்பை ஒன்றை எடுத்து, பத்து ரூபாய்த் தாளை எடுத்தார்.
முதலில், அதென்ன இவர்கள் எல்லோரும் ரெக்ஸின் பை வைத்திருக்கிறார்கள் என்று அவனுக்குத் தோன்றியது. துணிப்பையானால் பிறர் தொட்டால் தீட்டு. தோல்பை தொடாமலேயே தீட்டு. ரெக்ஸின் பையானால் தீட்டு தீண்டுவதில்லை என்று யோசித்துப் பார்த்ததில் புரிந்தது.
தெலாங் ரோட்டில் நடக்கும்போது, காலையிலும் மாலையிலும் ஹிந்து ஸமாஜ வாசலில், குடுமியும் முன்தலை மழிப்பும் பஞ்சகச்சமும் மேலே போர்த்திய சோமனும் ரெக்ஸின் பையுமாக குப்பம் குப்பமாய் அவர்களைக் காணும்போது திராவிட இனத்துக்கான எரிச்சலும் இளக் காரமும் ஏற்படும்.
அமாவாசை இரவு சோறு தின்னக்கூடாது என்பதால், இரண்டு சாதா ஊத்தப்பங்களை சாம்பாரில் தோய்த்துத் தோய்த்து ஆனந்தபவனில் தின்னும்போது, அரோரா சினிமாவில் முலை குலுங்கும் தெலுங்கு டப்பிங் படத்துக்கு அல்லது தமிழ் ரசனைக்கு என்றே எடுக்கப்பட்ட மலையாளப் படத்துக்கு பன்னிரண்டுமணி காட்சிக்கு வரிசையில் நிற்கும்போது, மட்கா சூதாட்டத்துக்கு சீட்டெழுதி வரும்போது காண நேர்ந்தால் அந்த இளக்காரம் வளர்ந்து பெருகும். அதீதமானதோர் கொச்சையில் சலம்பித் திரிகையில் எரிச்சல் ஏற்படும்.
ஆனால், தீவிரமான சனாதனவாதிகள் கூட, பொது இடங்களில், பிறரைச் சிரிக்கச்செய்ய வேண்டும் என்ற உள்நோக்குடன் அவர்களை கேலி செய்கையில் ஒரு அனுதாபம் பிறக்கும்.
அவ்வளவாகக் கூட்டம் இல்லாத லோக்கல் ரயில் ஒன்றில், ஒரு பின்னிரவில், அமர்ந்து படித்துக்கொண்டு பிரயாணம் செய்தபோது பக்கத்தில் ஒரு வாத்தியாரும் அவர் சாதிக்கார இன்னொருவரும் உரை யாடியது மாற்று வடிவக் கொச்சையில் இன்னமும் ஞாபகத்தில் படிந்து நின்றது.
“என்ன ஓய்? இன்னைக்கு நல்ல கோளு போல இல்லா இருக்கு?” “அந்தப் பவுந்திரத்தை என்ன எளவுக்குக் கேட்கிறீர்?”
“ஏன்? ஒண்ணும் மாட்டல்லியா!’
“மாட்டல்ல ஓய்? நம்ப ராமசாமி வாத்தியார் ராத்திரி எட்டுமணிக்கு வந்து கூப்ட்டுப்போனார்…. காலம்பற மொதல் ட்ரெய்ன் பிடிச்சுப் போணும் வீட்டுக்கு வந்திரும்னு… இந்தப் பனியிலே பச்சைத் தண்ணி யிலே குளிச்சு, நாலரை மணிக்கு நாய்க் கடிக்கு பயந்துண்டே அவர் வீட்டுக்குப் போனேன். மனுஷன் சொல்றார் அபத்தம் பற்றிப் போச்சு ஓய் நீலகண்டன் வரமாட்டாம்ணு ஒம்மை வரச்சொன்னேன். அவன் ராத்திரி ஒம்பது மணிக்கு வந்து அண்ணா நானும் வறேன்கிறான். என்னத்தைச் செய்ய! நீர் ஒண்ணும் தெற்றா எடுக்கப்பிடாதுண்ணு சொல்றார்… சண்டை போட முடியுமா? சொல்லுங்கோ.. இதான் நமக்கு வாச்ச கோளு …”
பனிப்பிரதேசத்தில் ஓநாய் பிடிக்கப் போகிறவர்கள், கொக்கியாய் வளைந்த கூர்ங்கத்தியில் மாட்டுக் கொழுப்புப் பூசி எறிந்து வைப்பார்கள். மாட்டெலும்பு என்று எண்ணிக் கவ்வி, தன்வாய் கிழிபட்டுப் பெருகும் ரத்தத்தை மாட்டெலும்பில் இருந்து ஊறும் ரத்தமெனச் சுவைத்து ஓநாய் மயங்கும் என்றெங்கோ படித்தது மனப்பறையில் அதிர்ந்தது.
அவனுக்கு முன்னின்றவர் உள்ளே போய்க் கைகழுவி வந்து மறுபடியும் வரிசையில் நின்றுகொண்டார்.
அவன் இலை துடைக்கும் சாக்கில் கையையும் இலேசாகத் துடைத்துக் கொள்ளும் உத்தேசத்தில் இருந்தான். பின்னால் பேச்சுக்குரல் கேட்டது.
”அப்பா! அதென்னது மீல்ஸ் நாலரை ரூபாய்ண்ணும் ரைஸ்பிளேட் மூணே முக்கால் ரூபாய்ண்ணும் போட்டிருக்கு?”
“ரெண்டும் ஒண்ணுதான்.. மீல்ஸ்ண்ணா ரெண்டு கிண்ணம் சோறும் நாலு சப்பாத்தியும் போடுவா… ரெண்டாந்தரம் கூட்டு, பொரியல், சாம்பார், ரெசம் தருவா… ரைஸ் பிளேட்டுண்ணா ஒருகிண்ணம் சோறும் நாலு சப்பாத்தியும்… ரெண்டாந்தரம் ஒண்ணும் தரமாட்டா… நமக்கு ரைஸ்பிளேட் போராதா?”
“போதும்பா…”
மோர்வடியும் எச்சிக்கையை மடக்கிப்பிடித்துக் கொண்டு ஒருவர் எழ, அந்த இடத்துக்கு அவன் நகர்ந்தான்.
– இங்கே இன்று, 1986.
நன்றி: https://nanjilnadan.com
![]() |
நாஞ்சில்நாடன் வாழ்க்கைக் குறிப்பு: பெயர் : G. சுப்ரமணியம் (எ) நாஞ்சில் நாடன்எழுதும் துறை : நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரைபிறந்த நாள் : 31 டிசம்பர் 1947பிறந்த இடம் : வீரநாராயணமங்கலம்தாழக்குடி அஞ்சல், தோவாளை வட்டம்,கன்னியாகுமரி மாவட்டம்.தமிழ் நாடு – 629 901.முகவரி : G. Subramaniyam (NanjilNadan)Plot No 26, First Street, VOC Nager, Near Euro Kids, KovaipudurCoimbatore – 641 042, Tamilnadu.Phone:…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
மிகச்சிறிய மிருகங்கள்
நீ.பி.அருளானந்தம்
October 12, 2026
நவீன நல்லதங்காள்
இரா.கலைச்செல்வி
October 12, 2026
ஸ்க்ரைப்
ஜூனியர் தேஜ்
October 12, 2026
