ஐந்து சதம்

0
கதைத்தொகுப்பு: சமூக நீதி
முதல் வெளியீடு: 1999
இணைய வெளியீடு: November 15, 2026
பார்வைகள்: 112
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவசரத்துடனும் பரபரப்புடனும் காலை வேளை இந்த நரகத்துள் புகுவது போல் எனக்குப்பட்டது. எங்கள் ஊரில் எங்கள் வீட்டில் உதய காலம் எப்படித் தோன்றும்? 

பட்டென்று 1995 மனதிலே பட்டுவிட, அது துடித்துத் துவண்டது. 

எங்கேயிருந்தாலென்ன? இதே இயந்திரத்தனமான அவசர வாழ்க்கை தானே! – மனம் அலுத்துக்கொண்டது. 

பணிமனைக்கு சரியான நேரத்திற்குப்போக வேண்டுமென்ற அவசரத்துடன் வீட்டிலிருந்து புறப்படுகிறேன். 

ஐந்தாறு அடிகள் வைத்திருப்பேன். பளிச்சென்று அந்த நாணயம் காலடியில் தெரிகிறது. வெள்ளி வண்ணத்தில் சதுரமாகத் தான் ஐந்துசத நாணயமென இனங்காட்டிக்கொண்டு கிடக்கிறது. 

நீண்டகாலமாக அது நாட்டில் கண்ணில் படாது போயிருந் தாலும், என் நினைவில் அது மறக்க முடியாததாக ஒரு பதிவை ஏற்படுத்தியிருந்ததால் முதன் முதலிலே கண்ணிற் பட்டதுமே அதனை நான் அடையாளம் கண்டு கொண்டேன். 

எத்தனை நாட்களாக இது இங்கே கிடக்கிறது? 

சுமார் இரண்டு வாரங்கள் இருக்குமென மனம் கணக்கிட்டது. ஒவ்வொரு நாளும் நான் இந்த வழியால் போகும்போது கண்ணில்படுகிறது. நானும் கண்டும் காணாததுபோல் போய் வந்து கொண்டிருக்கிறேன். இப்பொழுது கூட அப்படித்தான் பணியகத் திற்குப்போகவேண்டுமென்ற அவசரத்தில் அதைக் கடந்து, நடந்து கொண்டிருக்கின்றேன். 

எத்தனை பேர் போய் வரும் வழி? ஒருவர் கூட அதை எடுக்கவில்லையே! 

சீ! எப்பொழுதும் மற்றவர்களைப் பற்றியே ஏன் நினைக்க வேண்டும்? என்னையே எடுத்துக்கொள்வோமே. இது ஒரு இருப்பத்தைந்து சதமாகவேனும் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன்? 

சட்டென்று பதில்கூற மனம் தயங்கியது. தயங்கியதா? வெட்கப்பட்டதா? 

எங்களை நாங்களே இப்படி ஆராயப்புறப்பட்டால் நிச்சயமாக உண்மையான பதிலைக் கூற நாங்களே தயங்குவோம். அல்லது பெரும்பாலும் தவறான ஒரு மதிப்பீட்டை வைத்துக் கொண்டு பொய்யொன்றைக்கூறுவோம். 

நானென்ன தெய்வமா? அல்லது மகாத்மாவா? மனித வர்க்கந்தானே! 

முதலில் ஏதேதோ பதில் கூற மனம் தொடங்கினாலும் அறிவு மெல்லச் சிரித்தது. அதற்கு ஒரு குட்டுப் போட்டதும் தலையைக் குனிந்துகொண்டு உண்மையை ஒப்புக்கொண்டு விட்டது. 

“நிச்சயமாகக் கண்டவுடனேயே எடுத்து எனது தேவைக்கு பயன்படுத்தியிருப்பேன்” 

வெட்கப்பட வேண்டிய செயல்தான். ஆனால் இப்படி எவ்வளவு காரியங்களைச் செய்துவிட்டு நல்ல பிள்ளைவேடம் போடுகிறேனென்று மீள்பரிசீலனை செய்ய ஆரம்பித்தால்… 

ஒரு மனிதன் உண்மையை ஒப்புக்கொள்ள நிகரற்ற வீரமொன்று தேவைப்படுகிறது. 

என்னை நானே ஆராயத்தொடங்கியபோது மற்றொன்றையும் நான் உணர்ந்தேன். அந்த ஐந்துசதம் அநாதரவாகக் கிடப்பதைக் கண்டபோது எனது மனம் ஒரு குரூரத் திருப்தியை அடைந்திருந்தது. அதற்கு என்ன காரணமாக இருக்கும்? 

சுமார் முப்பந்தைந்து நாற்பது வருடங்களுக்கு முன் இந்த ஐந்து சதம் மிகுந்த பெறுமதியுடையது. 

எனது பாடசாலை நாட்களில் ஐந்து சதத்திற்கு வாங்கிய கச்சானை இப்பொழுது வாங்குவதானால் இருபது ரூபாவுக்குமேல் கொடுக்கவேண்டும். 

எனது நினைவோட்டத்தினூடே அந்தப் பள்ளிப்பருவச் சம்பவமொன்று, மறதிப்பாசியின் பிடியிலிருந்து சிரமப்பட்டு விடுபட்டு மெல்ல மேலெழுந்து மிதக்கிறது. 

எனது கிராமம் இளவாலை. நான் பஸ்ஸில் பாடசாலைக்குச் சென்றுவந்தேன். பாடசாலையிலிருந்து வீட்டிற்கு பஸ்ஸில் போகத் தேவையான அளவு பணந்தான் அன்று என் கையிலிருந்தது.

எனது பெற்றோருக்கு நான் செல்லப்பிள்ளை. என் தந்தை எப்போதும் அதிகமாகத்தான் பணம் தருவார். அன்று வேறேதோ தேவைக்குப் பணத்தைச் செலவு செய்ததால் அந்தநிலை. 

கச்சான் வாங்க வேண்டும் போலிருந்தது. சிறுபிள்ளை களுக்கு எதையும் பார்த்ததும் வாங்க வேண்டுமென்ற ஆசை அதிகம். ஏன் பெரியவர்களும் அப்படித்தான். 

வீதியோரக் கடைகளில் இப்படி எல்லாப் பொருட்களையும் அடுக்கிவைப்பது அந்த ஆசையைத் தூண்டுவதற்குத்தானே? 

என் கண்ணெதிரேதென்பட்ட கடைகளில் மிரான்டா. ஸ்பிறைற், நெக்ரோ என்று பலவர்ணச் சோடாப் போத்தல்கள் கண்ணைக் கவர்ந்தன. சொக்லேற் அடுக்குகள், ரொபி, இனிப்பு வகைவகையாகப் போத்தல்களில்… 

வீதியோரத்தில் அந்த அதிகாலை வேளையிலேயே ஒருவர் சுரணையற்றுச் சுருண்டு கிடந்தார். சற்றுத் தள்ளி அழகான கடையில் அடுக்கடுக்காக மதுபான வகைகள்! 

பத்தடிக்கொன்றாக இருந்த வீடியோக் கடைகள். ஒவ்வொன் றும் ஒவ்வொரு பாடலை உச்ச ஸ்தாயியில் அலற விட்டிருந்த தால் எதையும் இரசிக்க முடியாத ஒரு நிலை! ஒரே வகைப் பாடல்களையே கேட்ட காலம் மனதுள் வந்து மெல்லச் சிரித்து விட்டுச் சென்றது. 

இவ்வளவும் இருந்தென்ன? அரிசியைத் தேடி அலைய வேண்டியிருக்கிறதே. உள்ளூர் உற்பத்திப் பொருள்கள் ஓடுங்கி, ஒதுங்கிக் கிடக்கின்றன. கப்பலில் ஏறிவந்தவை. இந்தக் கலக்குக்கலக்குகின்றன. குருபரனின் பிலாக்கொட்டைக் கவிதை எம்மை அழகாகப் படம் பிடித்திருக்கிறது. 

“வாய்த்துவிட்டதென் இறுக்கி வயிற்றுள்ளே அடையாமல்” 

இந்த பலாப்பழ சீசன் எம்மை எவ்வளவு நோயாளிகளாக்கப் போகிறதோ? 

ஆ… இப்பொழுதுதான் எனக்கு நினைவு வருகிறது. அன்று முதலிலே காசு எடுத்து வல்வெட்டித்துறை பழச்சோடா வாங்கிக் குடித்திருந்ததால்தான் காசு பற்றாக்குறை ஏற்றபட்டது. யானைப் படம் போட்டு வரும் கொழும்புச் சோடா எனக்குப் பிடிக்காது. வல்வெட்டித்துறையிலிருந்து வரும் சோடா தான் பிடிக்கும். விலை இருபதோ இருபத்தைந்து சதந்தான். 

மிகுதிப் பணத்தில் ஐந்து சதத்திற்கு கச்சான் வாங்கிவிட்டு இளவாலைச் சந்தியில் இறங்கி வீடடிற்குப் போகலாமெனத் திட்டமிட்டேன். எனது வீட்டிற்கு அதற்கு அடுத்த தரிப்பிடத்தி லிறங்கித்தான் போகவேண்டும். அதற்கு ஐந்து சதம் அதிகம். முதலுள்ள இளவாலைச் சந்தியில் இறங்கி நடந்தால் ஐந்து சதம் குறைவாகக் கொடுக்கலாம். 

திட்டம் நிறைவேறியது. கச்சான் வாங்கி நண்பர்களுடன் பகிர்ந்துண்டு மகிழ்ந்தாகிவிட்டது. விளையாடிக் கொண்டிருக்க பஸ்ஸும் வந்தது. பஸ்ஸினுள் ஏறியும் எங்கள் கவனம் பாடசாலைக் கதைகளிலேதான். நடத்துனர் வந்ததும் “சேந்தான் குளம்” என்று கூறிவிட்டு, வாய் கதையைத் தொடர்ந்தது. ரிக்கற் கையிற்கு வந்ததும் பணத்தை எடுத்தபோதுதான். ஐந்து சதம் குறைவது நினைவிற்கு வந்தது. 

‘இளவாலை’ என்று கூறியிருந்தால் ஐந்து சதம் குறைவாக ரிக்கற் இருந்திருக்கும். 

இப்போது என்ன செய்வது? திக்திக்கென்று இதயம் அடித்துக் கொண்டது. 

“ரிக்கற்றை இளவாலைக்குத் தாறீங்களே?” நடத்துனரிடம் இரந்து கேட்டேன். 

“சேந்தாங்குளந்தானே கேட்டனீர்? இனி எப்படி மாத்திறது?” அவரது பதில் சற்று சூடாகவே வந்தது. 

இ.போ.ச.வுக்கு எதிர்க்கடையில்லாத காலம். எல்லா நடத்துனர் களின் நாவுகளும் சொற்களுக்குச் சூடேற்றி உதிர்ப்பதைக் கண்டு பழக்கப்பட்ட எனக்கு மேலே கதைக்கப் பயமாக இருந்தது. 

ஆனால் ஐந்து சதத்திற்கு ஏதாவது செய்தேயாக வேண்டும். 

“காசைக் கெதியாய் தாரும்” நடத்துனர் கையை நீட்டினார். 

என் விழிகளின் மிரட்சி பார்த்தவர்களுக்கு என் நிலையைப் புரிய வைத்திருக்கும். நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது போலப் புரள மறுத்தது 

சமய சந்தர்ப்பம் தெரிந்து அப்பாவின் சட்டைப்பை நிறைய இருக்கும் பணம் நினைவுக்கு வந்தது. 

அங்கு எவ்வளவு இருந்தென்ன? எனக்கு இப்போது ஐந்து சதம் வேண்டுமே. 

“ஐந்து சதம் குறை இ…ல்..லை” நான் தடுமாறினேன். குரல் குளறியது. 

“ரிக்கற் போட்டாச்சு, முதலே சொல்லியிருக்கவேணும்” நடந்துனர் இளகுவதாக இல்லை. 

சுற்றிவரப் பார்க்கிறேன். தெரிந்த முகம் எதுவுமில்லை. அந்த நெரிசலிலும் பல முகங்கள் எட்டி என்னை வேடிக்கை பார்ப்பதைக் காண மனம் குன்றிக் குறுகியது. கண்கள் கலங்க பரிதாபமாக நான் நின்றேன். 

ஒரு பெண் என்னை ஆதரவாகப் பார்த்தாள். சந்தையில் வியாபாரம் முடிந்து திரும்புகிறவளாக இருக்கவேண்டுமென அவளது தோற்றம் கூறியது. 

“காசைத் துலைச்சுப் போட்டீரே?” அன்பான அவளுடைய விசாரணைக்குட் பதிலாகப் பொய் கூறமனம் துணியவில்லை 

“ம்.. ம்… கச்சான் வாங்கி சாப்பிட்டனான். இளவாலை யிலை இறங்க நினைச்சனான். மறந்துபோய் எப்போதும் போலை சேந்தாங்குளம் எண்டு சொல்லிப் போட்டன்” ஓர் ஆதரவைக் கண்டதும் என் நிலையை மனம் விட்டுக் கூறினேன். 

“இந்தாரும் ஐந்து சதம், கொண்டக்ரரிட்டைக்குடும்” அந்தப் பெண் அன்போடு தந்தாள். ஆனால் என்கை பிச்சையேற்பது போல வாங்கக் கூசியது. 

இருப்பினும் வேறு வழியேது? கை நீட்டி வாங்கினேன். 

அச்சம்பவம் மனதில் ஆழமான ரணத்தை ஏற்படுத்தி விட்டது. காலவோட்டத்தில் மறதி மருந்து அந்த ரணத்தைப் படிப்படியாகக் குணப்படுத்தியிருந்தாலும் மாறாத வடுவொன்று மனதினுள் நிலைத்து விட்டதோ? அதன் பலன்தான் இந்தக் குரூரதிருப்தியோ? 

ஆனால் அந்த ஐந்து சதத்தைப் பார்த்து நான்தான் பரிதாபப்பட்டேனே தவிர அது எந்தக் கவலையுமில்லாமல் முழுமையான சிரிப்போடு நிர்ச்சிந்தையாகக் கிடக்கிறதே. உயர்விலும் தாழ்விலும் இப்படித்தானிருக்க வேண்டுமென்று உபதேசிக்கிறதோ? 

நினைவுகளில் ஆழ்ந்துபோய் நடந்துகொண்டிருந்த நான் பணிமனையின் வாயிலை அடைந்தபோதுதான் அங்கே எனது உயரதிகாரிகள் நிற்பதை அவதானித்தேன். அந்தக் கணத்தில் ஐந்து சதம் மனதை விட்டுப் பறந்தோடி விட்டது. 

அடிக்கடி வங்கி நடவடிக்கைகளைப் பரிசீலிக்க வரும் அவர்கள் இப்போதும் அதற்காகவே வந்திருந்தார்கள். 

அவர்கள் தம் கடமையை ஆரம்பித்தனர். நானும் எனது கடமையில் ஈடுபட்டிருந்தேன். 

காசாளரின் கையிருப்பு பரிசீலிக்கப்பட்டு முடிவடையும் வேளைபோல் அது தென்பட்டது. காசாளர் முகாமையாளரிடம் சென்று ஏதோ கூறுவதையும் முகாமையாளர் உயரதிகாரிகளிடம் வந்து உரையாடுவதையும் அவதானித்தேன். 

ஏதாவது பிரச்சனையோ? கையிருப்பு எக்காரணங்கொண்டும் குறைந்தோ கூடியோ இருக்கமுடியாதே! அன்றாடம் சரிபார்க்கப் பட்டுத்தானே பணம் வைக்கப்படும். அதில் என்ன தவறு நடந் திருக்கும்? 

எவ்வளவோ மூளையைக் குடைந்தும் பதில் தெரியவில்லை. எப்போது பரிசீலனை முடிந்து காசாளர் வருவாரென ஆவலோடு காத்திருந்தேன். 

அவர் வந்ததும் வராததுமாக ஒவ்வொருவராகப் போய் விசாரிக்க ஆரம்பித்தோம். 

“என்ன மச்சான் பிரச்சனை?” 

“பெரிசாய் ஒண்டுமில்லை. ஐஞ்சு சதத்திலை ஒண்டு கையிருப்பிலை இருக்கிறதாய் கணக்கு. இப்ப ஐஞ்சு சதத்துக்கு எங்கை போறது மச்சான்? எப்படியோ இருபத்தைஞ்சு சதம் ஒண்டு தேடி அதுக்குப் பதிலாய் வைச்சிருந்தனான். அதுதான்” காசாளர் செந்தில் விவரித்தான். 

“இங்கும் ஐந்து சதப் பிரச்சனையா?” 

“என்ன செய்யட்டுமாம்?” பக்கத்தில் நின்ற சந்திரன் விசாரித்தான். 

“இந்தச் சில்லறையளைத்தேடி எடுத்து ஓர் இடத்திலை வைச்சால் இப்பிடித் தேவைப்படேக்கை பாவிக்கலாமாம்” செந்தில் கூறினான். 

அந்த ஐந்து சதம் என் நினைவில் ஓடோடி வந்து ஒட்டிக் கொண்டது. 

“மச்சான், மத்தியானம் சாப்பிடப்போட்டு வரேக்கை ஒரு ஐந்துசதம் கொண்டுவாறன்.” நான் பேருதவி செய்யும் தோரணையில் கூறினேன். 

நடுத்தெருவில் கிடக்கும் அது இன்று மாலை இரும்புப் பெட்டியுள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பத்திரப்படுத்தப்படப் போகிறது. 

– சஞ்சீவி, 06-11-1999.

– கணநேர நினைவலைகள் (சிறுகதைத்தொகுதி), முதற் பதிப்பு: சித்திரை 2001, பிரணவன் வெளியீட்டகம், கோப்பாய், ஸ்ரீலங்கா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *