அணைத்த கை
கதையாசிரியர்: உதயணன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: October 7, 2026
பார்வையிட்டோர்: 88
(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நான் எனக்காக வாழ்வதா? அப்பா அம்மாவுக்காக வாழ்வதா? ஊர் உலகத்துக்காக வாழ்வதா? இந்த பிரச்சினைக்கு நான் இந்த நிமிடத்திலேயே முடிவு காணவேண்டும்.
நான் எனக்காகத்தான் வாழ்வேன் என்று சொன்னதன் பலன் நேற்றுத் தெரிந்தது. எனது தகப்பனார் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்ய முயன்று தெய்வாதீனமாக உயிர் தப்பினார். அம்மாவோ, வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு, “உன்னைப் பெற்ற நேரம் ஒரு மரக்கட்டையைப் பெற்றிறாக்கலாமே’ என்று ஒப்பாரி வைத்தாள். ஊர் மக்களோ எனது முகத்தில் காறி உமிழ்ந்தார்கள்.
அப்படியென்றால்…?
எல்லோருமாகச் சேர்ந்து எனக்குக் ‘குழையடி’த்தார்கள். பெண்ணை ரதி என்றார்கள். சீதனமாக யானை வரும் குதிரை வரும் தேர் வரும் சப்பரம் வரும் என்று சொல்லி என்னைப் பைத்திய மாக்கிவிட்டார்கள்.
ஆமாம், எனது பிதா மாதாவை உயிரோடு விட்டுவைக்க விரும்பினால், அவர்கள் காட்டிய பெண்ணுக்கு நான் மாலையிட வேண்டியதுதான்
“இங்கே கையெழுத்துப்போடுங்கள் என்று கல்யாணப் பதிவுகாரர் சொன்னார். போட்டுவிட்டேன். இனி, தமயந்தி சட்டப்படி எனது மனைவி. அவளுக்குப் பெயர் தமயந்தி என்று யாரோ சொல்லக் கேட்டதே தவிர, அவளுடைய முகத்தை நான் ஏறிட்டுப் பார்த்ததுகூட இல்லை.
கையெழுத்துப் போட்ட பேனாவை மூடிவைக்குமுன்னர் ஒரு தந்தி வந்தது. எனது நண்பன் ஒருவன் கொழும்பிலிருந்து அடித்திருந்தான் – உடன் வரும்படி!
கொழும்பில்-
“நடராஜா! நீ அப்பாவாகி விட்டாய். சுமதி ஒரு ஆண் குழந்தையைப் பெற்றிறாக்கிறாள்” என்று நண்பன் என்னை வரவேற்றான்.
என்ன…?
ஆஸ்பத்திரிக்கு ஓடினேன்.
”குழந்தைக்கு தகப்பனார் யார்?” என்று யாரோ ஆஸ்பத்திரியில் கேட்டார்கள். உண்மையைச் சொல்லவும் பயமா?
“நான்தான்-!” என்றேன்.
“இங்கே கையெழுத்துப் போடுங்கள்”
என்றார்கள். அங்கே தமயந்தியின் கணவனாகக் கையெழுத்துப் போட்டு இன்னும் இருபத்திநாலு மணித்தியாலங்கள் ஆகவில்லை. அதற்கிடையில்….
‘காதல் செய்வோம் வாரீர்’ என்று என்னை யாரும் அழைத்ததன்பேரில் நான் பல்கலைக் கழத்தில் நுழையவில்லை. எனக்கும் ஒரு நோக்கம் இருந்தது; அதனால்தான் பிரவேசித்தேன். அதற்காக-
கோவிலுக்குப் போகும்பொழுது பாதையில் புதையலைக் கண்டால், ‘அந்தோ! கோவிலுக்குச் செல்வதுதான் என் நோக்கம், புதையலைக் கண்கொண்டு பார்க்கவும் மாட்டேன்,’ என்று எந்தப் பைத்தியக்காரனாவது சொல்லுவானா? உண்மை; நான் என் பாதையிலே கண்டெடுத்த புதையல்தான் சுமதி.
சாதாரண பெண்களின் மத்தியில் சுமதியை நிற்கவைத்துச் சுமாரான அழகி என்று சொல்லலாம். பத்து ரூபாச் சேலையைப் பாதி உடல் தெரியக்கட்டும் பகட்டுப் பாவையர் நடுவில் நிறுத்திப் பேரழகி என்று சொல்லலாம். கலீர் கலீர் என்று தங்க நாணயங் கள் உருளும் அவள் நகைத்தால்! காதுகளில் தேன் ஓடிப் பெருகும் அவள் முத்துக்களை உதிர்த்தால்!
இத்தனைக்கும் –
நான் தொடர்ந்தாற்போல இரண்டு நிமிடங்களுக்கு அவளோடு பேசியதில்லை. சேர்ந்தாற்போல ஐந்து நிமிடங்களுக்கு அவளை உற்றும் பார்த்ததில்லை. ஏன், அவளைப்பற்றி நான் அதிகம் நினைத்ததுக்கூட இல்லை.
என்னோடு படிக்கிறார்களே மாணவர்கள் என்ற பெயரில் சில ‘எமகாதகப் பேர்வழிகள், அவர்கள் ஒரு கைங்கரியம் செய்தார்கள். அனாவசியமாக என் பெயரையும் சுமதியின் பெயரையும் சேர்த்து ஒரு கதையைக் கட் வகுப்பிலும் விடுதியிலும் குதிக்க விட்டார்கள். அதன் பயன்
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நான் சுமதியின் போக்கை அறிய ஆவற்பட்டேன். அவள் என்னோடு பேசச் சங்கோசப்பட்டாள். எனது ஆவல் அவளுடைய சங்கோசத்தை விழுங்கி ஏப்பம் விட்டது. அங்கே பிறந்தது. காதல்…..
சுமதி! நீ காட்டிய. அன்பினால்தான் நான் உண்டேன். நீ காட்டிய பரிவினால்தான் நான் உறங்கினேன். நீ காட்டிய ஆதரவி னால் தான் நான் உயிர்தரித்தேன். நீ காட்டிய கண்டிப்பினால்தான் கல்வியில் நாட்டம் வைத்தேன். ஆமாம், என் ஆசைக் கண்ணே உன்னால்தான் நான் இன்று மனிதனாக உலவுகிறேன்.
எமது படிப்பு ஒரு முடிவுக்கு வந்தது. அதோடு நாங்கள் பிரியவேண்டிய கடைசி நிமிடமும் வந்தது. ஐயோ. சுமதியும் நானும் கொட்டிய கண்ணீர் யாராவது நம்பாவிட்டால் போய்ப்பார்க் கலாம்: இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. நதி.
மழை இருட்டிலும் ஒரு மின்னல் தோன்றுவது போல எங்கள் கெட்ட காலத்திலும் ஒரு நல்ல நேரம் வந்தது. எனக்கு கொழும்பில் ஒரு உத்தியோகம் கிடைக்க, அவளும் அங்கு ஒரு ஆசிரியை ஆனாள்.
நான் அவளுடைய மடியிலே தலையை வைத்துப் படுத்து, அவளுடைய விழிகள் ஊடாக ஆகாயவெளிக்குத் தாவி ஒவ்வொரு கல்லாக எடுத்து வைத்துச் சுவர் எழுப்பினேன்.
சமயம் வந்தபொழுது காற்றுச் சுழன்றடித்தது சுவர் இடிந்து தரைமட்டமாகியது மிஞ்சியதோ?
ஒரு குழந்தை
அவளுடைய
வயிற்றில்!
‘எஸ் நடராஜன்’…
கையெழுத்துப் போட்டுவிட்டு நிமிர்ந்த என்னை. கால்கள் இழுத்து வந்து சுமதியின் கட்டிலுக்கு எதிரே விட்டன.
எவ்வளவோ நேரத்துக்குப் பிறகு அப்பொழுதுதான் பிரக்ஞை திரும்பியதாம். மிகவும் பலவீனமாகக் காணப்பட்டாள். எங்களுக்கு ‘பிள்ளைக் கலி தீர்க்க’ வந்த குறைமாதக் குழந்தை அவளுடைய தலைமாட்டில், ஒரு தொட்டிலில், உணர்வற்றுக் கிடந்தது.
”உங்களுக்குக் கல்யாணப் பதிவு முடிந்துவிட்டதாம்!”. சுமதி சொன்னாள்.
நான் திடுக்கிட்டேன்.
”அப்பா எல்லாம் எழுதியிருந்தார்.” சுமதி தொடர்ந்தாள். “தமயந்தி எனது உடன் பிறந்த அக்காதான். நீங்கள் எங்கே யென்றாலும் சந்தோஷமாக வாழ்ந்தால் போதும்”
அவளுடைய உள்ளக்கடல் பெருக்கெடுத்துக் கடைக் கண்களில் வழிபறித்துக் கன்னம் வழியே பாய்ந்தது. அவள் மாடிப்படியில் மயங்கி விழுந்து குறைமாதப் பிரசவம் ஆனதன் காரணம் எனக்கு இப்பொழுதுதான் புரியத்தொடங்கியது. அடித்து வைத்த சிலையாக நின்றேன்.
எனக்கு இதயம் நின்று, இரத்தம் உறைந்து, உடல் சில்லிட்டு, தொண்டையை எதுவோ அடைத்துக் கொண்டதால் நான் பேசவில்லை; பேசமுடியவில்லை.
‘இவனோடு பேசி இனி என்ன பயன்’ என்ற இறுதி முடிவுக்கு அவள் வந்துவிட்டாள் போலும். அதன் அவளும் பேசவில்லை!
(கற்பனை)
– இளங்கதிர், 1959-1960, பன்னிரெண்டாவது ஆண்டு மலர், தமிழ்ச் சங்கம், இலங்கை பல்கலைக்கழகம், பேராதனை.
தொடர்புள்ள சிறுகதைகள்
புது வாழ்வு
இரா.துரைமாணிக்கம்
October 15, 2026
சொல்லாத முடிவுகள்!
கல்பனா ராஜகோபால்
October 15, 2026
சரசுவின் சௌந்தர்ய லஹரி
கவிஞர் கண்ணதாசன்
October 15, 2026