பேச்சுப் பல்லக்கு……!
கதையாசிரியர்: ச.வே.பஞ்சாட்சரம்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: October 11, 2026
பார்வையிட்டோர்: 8
(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பேச்சாளர் நித்தியசீலன் சலவை செய்யப்பட்ட ஜிப்பாவை எடுத்து மடிப்புக் குலைத்து அணிந்து கொண்ட போது மணி நாலே முக்கால்! ஐந்து மணிக்குள் போய்ச் சேராவிட்டால் மாலை மரியாதைகளோடு ஊர்வலத்தில் சென்று விழாமேடையில் ஏறும் வாய்ப்புத் தவறிவிடும் என்ற அங்கலாய்ப்பில் விரைந்து தலைவாரி, பறந்து பௌடர் பூசி, பாய்ந்து கார்க் கதவைத் திறக்கையில் “ஐயா! சாமீ!” என்ற அபசகுனக்குரல்!
நரைத்துத்திரைத்து வயது எண்பதையும் தாண்டி விட்ட கூனல் கிழவன், பசியில் உடம்பு பதற, ”ஐயா சாகப்போகிறேன்… கஞ்சியைத்தண்ணியை ஊற்றுங்கையா”. என்று பொக்கை வாயால் கெஞ்சினான்.
”வீட்டில் யாருமில்லை அப்புறம் வா” என்ற நித்திய சீலனின் கார் புறப்பட்டுப் பறக்கலாயிற்று!
கழுத்து நிறைந்த மாலைகள், காது நிறைந்த மேளதாளம், தெரு நிறை ந்த மக்கள் கூட்டம், மனம் நிறைந்த பெருமிதம் – ஊர்வலத்தில் வந்த நித்திய சீலன் சொற் பெருக்காற்றும் போது “பலர் பசித்துச் சாகும் போது வேறு பலர் பணத்தை மலைபோல் குவித்து வைத்துக் கொண்டு பிச்சையிடாமல் விரட்டும் கொடுமை பண்டைத் தமிழர்களிடம் இருக்கவில்லை. அள்ளி அள்ளி ஏழைகளுக்கு வழங்கினார்கள் அன்றெல்லாம்! இன்றோ ஒரு மனிதன் தெருவோரத்தில் பட்டினியால் விழுந்து சாக ஒரு மனிதன் உப்பரிகையிலிருந்து அதை வேடிக்கை பார்க்கிறான். இப்படியான உலகைப் பார்த்துத்தான் தனி ஒருவனுக்கு உணண உணவில்லை எனில் இந்தச் சகத்தினை அழித்திடுவோம் என்று புரட்சிக்கவி பாரதி பாடினான். என்ன உலகம் இது!” என்று கூறும்போது நித்தியசீலன் கண்களைத் துடைத்துக் கொண்டதைக் கண்டு சபையோர் உருகிப் பொருமிக் கண்ணீர் விட்டு அழுதனர்!
விழா முடிந்து 8மணியிருட்டில் காரில் நித்திய சீலன் வீடு திரும்பிப் படலைக்குள் நுழைந்த போது பளீரென்றடித்த கார் வெளிச்சத்தில் வீட்டுப்படியில் விறைத்துக் கிடந்த ஒரு பிணம் அவர் வள்ளற் குணத்தை நினைத்துச் சிரித்துக் கொண்டிருந்தது.
– சின்னஞ்சிறு கதைகள் (முதலாம் தொகுதி), முதற் பதிப்பு: 1969, தமிழருவிப்பதிப்பகம், சுன்னாகம்.
தொடர்புள்ள சிறுகதைகள்
நிலவு பேசியது…!
எஸ்.சசிகலா
October 18, 2026
நிஜ மரமும் பண மரமும்
இளையவேணி கிருஷ்ணா
October 18, 2026
நீ வருவாயென..!
வளர்கவி
October 15, 2026