ஆனந்தரகசியம்!
கதையாசிரியர்: ச.வே.பஞ்சாட்சரம்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: October 11, 2026
பார்வையிட்டோர்: 8
(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நான்கு ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பனைவடலிகளும் நெடும்பனந்தோப்புகளும் மலிந்த அந்தத் தூரத்துக் கிராமத்திலிருந்து வைகறை இருளில் புறப்பட்டு நடந்து வந்து எங்கள் வயலில் வேலைசெய்து கூலியும் வாங்கிக்கொண்டு மாலையில் மன நிறைவோடு தன்னூர் திரும்பும் மாரிமுத்து எத்தனை உற்சாகமாக ஆனந்தமாக அந்த ஐம்பது வயது முதுமையிலும் காணப்பட்டான்.
எனக்கு இருபத்தைந்து வயதிலேயே, நடத்தும் இல்லறம், பார்க்கும் உத்தியோகம், ஆண்டனுபவிக்கும் சொத்துச் சுகங்கள் எல்லாமே வெறுத்து வாழ்வே சுமையாகிவிட்டதே!
அவனது ஆனந்தவாழ்வின் அடிப்படை இரகசியத்தை அறிந்து என் வாழ்வைத் திருத்தி அமைத்துக்கொள்ளும் வேட்கையில் பஸ் ஏறினேன். அவன் சொந்தமாக வயல் வாங்கிவிட்டதாக அவன் மனைவி கூறியபோது எனக்கு இன்னும் வியப்பாக இருந்தது. அவளுடன் நின்ற பிள்ளைகளைத் தற்செயலாக எண்ணத் தொடங்கி, தொகை பதினான்கையும் தாண்டுவதைக் கண்டு கூச்சப்பட்டு, எண்ணுவதை அவ்வளவில் நிறுத்திக் கொண்டேன்.
மாரிமுத்துவைத் தேடி நான் வயலை அடைந்தபோது அவன் களைபிடுங்கிக் கொண்டு நின்றான். என்னைக் கண்டானோ இல்லையோ “வாருங்கள் தம்பி வாருங்கள்”‘ என்று குதூகலித்தபடி கையிலிருந்த களைப்பிடியை வயல் வரப்பில் சடைபின்னி, வீசி எறிந்துவிட்டு ஓடோடி வந்தான்.
முடி தாடி சுருண்டுவிட்டாலும் முன்பிருந்த அதே உற்சாகம்! இளமை மாறாச் சிரிப்பு! சுறுசுறுப்பு!
“என்னமாரி! எங்களை எல்லாம் அடியோடு மறந்தாயிற்றா?’ என்று நான் கேட்கையில் அவன் தென்னை மரத்திலிருந்து ஒற்றைக் கையில் இள நீரோடு இறங்கிக் கொண்டிருந்தான்.
“இல்லைத் தம்பி! இங்கே வேலை அதிகம்!” என்று சொல்லிக்கொண்டே இளநீரை வெட்டித் தந்தான் பருகும்படி! இளநீரின் வழுக்கலை விரல்விட்டுக் கலக்கி வெய்யிலின் தாகம் தீர மாந்திக்கொண்டே கேட்டேன்:
”நீ எப்படி இவ்வளவு சுறுசுறுப்பாக ஆனந்தமாக இருக்கிறாய்?” அவன் என்னுள்ளத்தை எப்படியோ புரிந்துகொண்டு பதிலுக்குக் கேட்டான்:
“தம்பியின் கடைசிக் குழந்தைக்கு எத்தனை வயது?”
நான் “ஒரே ஒரு பையன். ஐந்து வயது” என்றேன்.
“வாழ்வு சலிக்கக் கையோடு காரணம் இருக்கிறதே! எந்த நாளும் வீட்டில் பிஞ்சுக் குழந்தையின் செல்லக் குரல் கேட்டுக் கொண்டிருந்தால் ஆனந்தமேன் குறையப் போகிறது! நீங்கள் பிள்ளையென்று பிறந்தால் அரசாங்க உத்தியோகம் பார்க்கவேண்டும் இல்லாவிட்டால் பிறக்கக்கூடாது என்று கருத்தடை மாத்திரை பாவிக்கிறீர்களாக்கும்” என்று கூலிப் பிழைப்பை நம்பிப் பிள்ளை பெற்று ஆனந்தமாக வாழும் அவன் சிரித்தபோது, மீறமுடியாத என் போலிக் கெளரவத்தை நினைத்து புழுங்கினேன் நான்!
– சின்னஞ்சிறு கதைகள் (முதலாம் தொகுதி), முதற் பதிப்பு: 1969, தமிழருவிப்பதிப்பகம், சுன்னாகம்.
தொடர்புள்ள சிறுகதைகள்
நிலவு பேசியது…!
எஸ்.சசிகலா
October 18, 2026
நிஜ மரமும் பண மரமும்
இளையவேணி கிருஷ்ணா
October 18, 2026
நீ வருவாயென..!
வளர்கவி
October 15, 2026