தண்டல் காரர்களா?
கதையாசிரியர்: ச.வே.பஞ்சாட்சரம்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: October 11, 2026
பார்வையிட்டோர்: 95
(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இன்று ஈழநாட்டில் ஆயிரக்கணக்கான இலக்கியப் பிரமாக்களும், இலக்கியச் சிந்தனைகளும் இரசனையுணர்வும் பெருகி நிற்பதற்குக் காரணம் கடந்த காலத்தில் இங்கே ஒருவர்பின் ஒருவராக இலக்கியப் பித்தர்கள் பலர் வாழ்ந்து இலக்கியப் பத்திரிகைகள் வெளியிட்டுச் சொத்துச் சுகங்களைக் கரைத்து ஓட்டாண்டிகளாகி மனைவி மக்களுடன் நடுத்தெருவில் நின்றமைதான் நம் நாட்டில் பத்திரிகையாளர்களுக்கு ஏனிந்தக்கதி பரம்பரை பரம்பரையாக ஏற்பட்டு வர வேண்டும்? என்று எனக்கு விளங்கவில்லை.
இன்று ஆயிரக்கணக்கில் சிறு கதைகளை கவிதைகளை, நாவல்களை, விமர்சனங்களை, அரசியல் ஆய்வுகளைக் காவியங்களை எழுதித் தள்ளிக் கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான புதிய தலைமுறை எழுத்தாளர்களை இலக்கிய உலகுக்கு அறிமுகமாக்கிப் பிரபலப்படுத்தி வைத்த ‘கலைத் தென்றல்’ மாத சஞ்சிகையின் ஆசிரியர் சரவணனிடம் இச் சந்தேகத்திற்கு விடை அறியக் கிளம்பினேன்.
“இந்த உண்மையை இன்னுமா நீங்கள் அறிந்து கொள்ளவில்லை? கொஞ்சம் பொறுங்கள்! நேரில் கண்டறியலாம்!” என்றார் அவர்.
அப்பொழுது இருவரும் கீரிமலைக் கடற்கரை மணலில் பூவரச மரத்தின் கீழே உட்கார்ந்து அந்திக் காற்றை மாந்திக் கொண்டிருந்தோம். எங்களைச் சூழ்ந்து பலதரப்பட்ட மக்கள் காற்று வாங்கி நடமாடிக் கொண்டிருந்தனர்.
அந்தச் சன சந்தடியில், தூரத்தில் “வாங்குங்கள் கலைத் தென்றல்! ஆனி இதழ் முப்பது சதம்!” என்று கூவுவது கேட்கிறது.
“ஈழத்துச் சூழ்நிலையில் எழுந்த சிறுகதைகள். இனிக்கும் கவிதைகள், இலக்கிய விமர்சனங்கள் அலங்கரிக்கும் கலைத்தென்றல்…” குரல் எம்மை நெருங்கிக் கொண்டிருந்தது. இதோ பத்திரிகை விற்பனையாளன்!
சரவணன் அவனை அழைத்து “எத்தனை போயின?” என்றார். “கத்திக் கத்தி என் தொண்டைதான் சார் போயிற்று!” என்றான் அவன் சலிப்போடு!
“உனக்குத் தொண்டைதான் போயிற்று எனக்குச் சொத்துச் சுகங்கள் வீடு வாசல் கடன்காரர்களால் என் தலையே எல்லாம் போய் போகப்போகிறது” என்று அவர் எண்ணியிருப்பாரோ என்னவோ!
தூரத்தில் கடல் நீரலைகள் வந்து வந்து கால்களைக் கழுவிச் செல்லச் சிவக் கோலத்தில் நின்ற ஒருவரை அணுகிய விற்பனையாளன் கலைத்தென்றல் பத்திரிகையை நீட்டி “எடுங்களேன் ஐயா!” என்றான்.
அவர் நாடறிந்த ஒரு பேச்சாளர், பண்டிதர், சைவப்புலவர். தமிழ்க் கலைகளுக்காக, ஈழத்து இலக்கிய தனித்துவத்துக்காக மாரடிப்பவர் “தண்டல் இப்படியுமா?” என்றவர் “தேவையில்லைப்போ,” என்று கூறிய சொற்கள் என் நெஞ்சில்பழுக்கக் காய்ச்சிய வேல்களாகப் பாய்ந்தன.
இவர்களே இப்படி என்றால் சாதாரணமாகப் படித்த தமிழன் எப்படி இருப்பான்? எனக்குச் சரவணனைப் பார்த்தபோது அழவேண்டும் போல் இருந்தது.
– சின்னஞ்சிறு கதைகள் (முதலாம் தொகுதி), முதற் பதிப்பு: 1969, தமிழருவிப்பதிப்பகம், சுன்னாகம்.
தொடர்புள்ள சிறுகதைகள்
நிலவு பேசியது…!
எஸ்.சசிகலா
October 18, 2026
நிஜ மரமும் பண மரமும்
இளையவேணி கிருஷ்ணா
October 18, 2026
நீ வருவாயென..!
வளர்கவி
October 15, 2026