குணம் சாய்ந்து போனால்!…
கதையாசிரியர்: ச.வே.பஞ்சாட்சரம்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: October 11, 2026
பார்வையிட்டோர்: 95
(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தான் கறுப்பு என்பது பெரிய மனக்குறை மெரீனாவுக்கு உயிருக்குயிராக நேசித்து, மதித்து, துணைவியாகத் தழுவிக் கொள்வதாக வாக்களித்துக் காத்திருக்கும் பெருமாள் தன் வகுப்பில் இருப்பதை நினைத்தும் அவள் ஆறவில்லை.
பளபள மஞ்சட் பொன்மேனி கொண்ட தன் வகுப்பு மாணவியர் பலரைக் கணம் கணம் வண்டாக வட்டமிடும் மாணவரின் கண்களைப்பார்த்துப் புழுங்கினாள் மெரீனா, அந்தப் புகைச்சல் தீர வகுப்பில் எல்லா ஆசிரியர்களும் தன்னைப் புகழ வேண்டும் கல்லூரி நிகழ்ச்சிகளிலெல்லாம் தானே தலைமை தாங்கிப் பெருமையோடு உலாவரவேண்டும். இந்தப் புகழ்மூலம் பெருமாள் தன்னைக் குறைந்தவளல்ல என்றெண்ண வேண்டும். மற்றும் மாணவர் விழிகளும் தன் பக்கம் அலையவேண்டும் என்ற புகழ் வெறியும் பேராசையும் அவள் நெஞ்சில் இருளாகக்க்ப்பிக்கொண்டன.
ஆம்! மெரீனா இதயத்தாலும் கறுத்து விட்டாள். ஒவ்வொரு பாடத்திலும் நேரிய முயற்சியால் முதன்மை பெற அவளால் முடியவில்லை. பல ஆசிரியர்களிடமும் பலவிதமாகப் பழகி அவர்கள் செல்லமாகிக் குறுக்கு வழியில் புகழ் தேடத் தலைப்பட்டாள் அவள்.
வகுப்பின் ஒரு மூலையில் அமர்ந்தபடி அடக்கமாக இதையெல்லாம் அவதானித்துக் குமுறிய பெருமாள் ஒரு நாள் ‘மெரீனா வெறும் புகழைத் தேடப் போய் பண்பை மானத்தை இழந்துவிடக்கூடாது.பண்பும் பரிசுத்தமும் தான் ஒருவர் மேல் உண்மையான அன்பைத் தோற்றுவிக்கும். உன் புகழ் வெறி எனக்கு உன் மேலுள்ள அன்பைத் குறைத்து வருகிறது. இனி உன் இஷ்டம்!’ என்றபோது அவள் மெளனமாகத் தலை குனிந்து நின்றாள்.
மீண்டும் பழைய விளையாட்டு! இடிந்த மனத்தோடு தனிமையில் அழுது தீர்த்துவிட்டு பெருமாள் நிரந்தரமாக அவளிடமிருந்து ஒதுங்கிவிட்டான்.
அன்பாகப் பழகி வந்த மாணவியரும் சாக்கடையாகிநின்ற அவளைப் புறக்கணிக்கத் தொடங்கி விட்டனர். அதற்காகவும் இதற்காகவும் செல்லங் கொடுத்து அவளைக் கொண்டு திரிந்தவர்களும் மெல்ல விலகிக் கொண்டனர்.
கல்லூரிக்காலம் முடிந்து வீட்டில் முடங்கிய மெரீனாவை அவள் கதையறிந்த அக்காள் தங்கையரும் அருவருத்து வெறுத்துத் தள்ள வாழ்வில் பயங்கரமான தனிமையில் விடப்பட்டு, மனச்சாட்சி குடைந்தெடுக்க எனக்கு இந்த உலகில் யாருமில்லை! என்ற எண்ணம் அவளிதயத்தை வாட்டி வதைக்கலாயிற்று.
அன்பின் துணையை அழித்து, வாழ்வின் பிடிப்பை அறுத்து அவள் நிம்மதியையே தகர்த்தெறிந்துவிட்ட பேராசையையும், புகழ்வெறியையும், பெருமாளின் துயரமுகத்தையும் நினைத்து நினைத்து அழுது கலங்குவதைவிட இனி வேறு ஆறுதலேது அவளுக்கு.
– சின்னஞ்சிறு கதைகள் (முதலாம் தொகுதி), முதற் பதிப்பு: 1969, தமிழருவிப்பதிப்பகம், சுன்னாகம்.
தொடர்புள்ள சிறுகதைகள்
நிலவு பேசியது…!
எஸ்.சசிகலா
October 18, 2026
நிஜ மரமும் பண மரமும்
இளையவேணி கிருஷ்ணா
October 18, 2026
நீ வருவாயென..!
வளர்கவி
October 15, 2026