கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 8, 2026
பார்வையிட்டோர்: 75 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

(1947ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பாத்திரங்கள்

மிராசுதார் 

வசந்தகுமாரி : அவருடைய மனைவி 

மீனாக்ஷி : வசந்தகுமாரியின் தாயார் 

வேலன்: வீட்டு வேலைக்காரன் 

பிச்சைக்காரி


[ஓர். மாடி வீடு. மாலை சுமார் ஐந்து மணி. மிராசுதாருடைய நாகரீக மனைவி வசந்த குமாரியும் அவள் தாயார் மீனாக்ஷியம்மாளும். சிற்றுண்டி அருந்திய பின் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.] 

வசந்தகுமாரி : ஜனங்கள் படுங் கஷ்டத்தைக் கேட் டால் சகிக்க முடியலை யம்மா! ஒவ்வொரு நாளும் அவர் வந்து சொல்வதைக் கேட்டால் நெஞ்சைப் பிளக்குது! 

மீனாக்ஷி : ஆமாம் வசந்தா, நேத்து உன் வீட்டுக்காரர் என்னமோ சொல்லிக்கிட்டிருந்தாரே, என்ன சொன்னாரிண்ணு கேக்க நெனச்சேன்; அப்புறம் மறந்திட்டேன். என்னம்மா சொன்னார்?

வசந்தகுமாரி: கல்கத்தாண்ணு கேள்விப்பட்டிருக் கேல்லம்மா. அந்த ஊரிலே பெருவாரியா ஜனங்கள் பட்டினி கிடந்து சாகிறதுகளாம், அம்மா. 

மீனாக்ஷி: என்னடி அநியாயம்! சண்டையிண்ணு நடந்தா இந்தக் காலத்தில் சனங்கள் குண்டு விழுந்துதான் சாகுமிண்ணு கேள்விப்பட்டிருக்கிறோம். பட்டினி கிடந்து ஏண்டி சாகணும்?

வசந்தகுமாரி: அதுதான் கலிகாலமிண்ணு சொல்றது! அதுவும் ஒண்ணு ரெண்டா அம்மா? நூத்துக் கணக்கில் சாகிறார்களாம்! 

மீனாக்ஷி : பாவம், அந்த ஊர் எங்கே இருக்கு? 

வசந்தகுமாரி : இங்கிருந்து எண்ணூறு தொளாயிரம் மைலுக்கு அப்பால் இருக்காம். 

மீனாக்ஷி: அந்த ஊருக்குக் கிட்டமுட்ட வயல்களே கிடையாது போலிருக்கு. ஏன் வசந்தா, அப்படித்தானே? 

வசந்தகுமாரி: அதுதானம்மா வேடிக்கை. அந்த ஊரு வங்காளத்திலே இருக்குதாம். அந்த வங்காளந் தான் நம்ம நாட்டிலே ரொம்பச் செழிப்பான பாகமாம். அதை நம் நாட்டுக்குத் தானியக் களஞ்சியமிண்ணு சொல்வாங்களாம். 

மீனாக்ஷி : அதுக்கே இந்தப் பாடுண்ணா, நாமெல்லாம் என்ன பாடு படப் போறோமோ? 

வசந்தகுமாரி: அது தானம்மா பயமாயிருக்கு. ஊரெல்லாம் ஜனங்கள் பஞ்சம் பஞ்சமிண்ணு பரதவிக்குது! 

(பிச்சைக்காரி ஒருத்தி வாசலில் வந்து நின்று கத்துகிறாள்.) 

பிச்சைக்காரி : அம்மா, பெரியவீட்டு எசமாங்களே! கொஞ்சம் பிச்சை போடுங்கம்மா! 

வசந்தகுமார்: ஜனங்கள் படும்பாடு சொல்லி முடியாதம்மா! ஒரு பிடி சோறு கிடைக்காமல் உயிரை விடுதுகளாம்! 

மீனாக்ஷி: உயிரை விடாமல் பின்னே என்னடி செய்யறது! சோத்தாலடிச்ச சுவர்தானே இது! 

வசந்தகுமாரி : ஒரு நாளைக்குச் சமையலாகக் கொஞ்ச நேரமாய் வீட்டால், நாம் என்ன கஷ்டப்படு கிறோம்? அந்த ஜனங்களுடைய கஷ்டம்… அம்மா! நெனைக்கவே பயமா யிருக்கு. அந்த மாதிரிக்கஷ்டம் நமக்கு வரப்பிடாது, கடவுளே!

மீனாக்ஷி : நம்ம ஊருக்கே வரப்பிடாது! வேறே யாருக்குமே வரவேண்டாம் என்று சாமியைக் கும்பிடம்மா, வசந்தா. 

பிச்சைக்காரி: (வெளியிலிருந்து) அம்மா! கொஞ்சம் பிச்சை போடம்மா. பிள்ளைக்காரிக்கு இரங்குங்க அம்மா தாயே! 

மீனாr: இந்த ஓடம்பை அன்னமய கோசமிண்ணு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க? ஒருவேளை அன்னமில்லாட்டா இந்த உடம்பு என்ன பாடு படுது! 

வசந்தகுமாரி: உனக்கு விஷயம் முழுவதும் சொல்லலியே அம்மா! சொல்றதுக்கே நடுக்கமா யிருக்கு. 

பிச்சைக்காரி : (வெளியிலிருந்து) வயித்துப் பசி பிராணன் போகுதம்மா! கொஞ்சம் பழையதிருந்தாப் போடுங்களேன். தருமசாமி! 

மீனாக்ஷி : நாங்கள் பேசிக்கிட்டிருக்கிற விஷயமென்ன? நீ வேறே ஏண்டி தொண்தொணண்ணு கத்திக்கிட்டே இருக்கிறே? பேசிக்கிட்டிருக்கிறது தெரியலே? பிச்சை கேக்கிறதுக்கு இந்த ஊரிலேயே இந்த ஒரு வீடுதான் உனக்குக் கிடைச்சு தாக்கும்? 

வசந்தகுமாரி: கல்கத்தாக் கண்றாவியை என்னண்ணு சொல்ல முடியும் அம்மா! அவர் சொல்லக் கேக்கணும்; கல்லும் உருகும், இரும்பும் இளகும். தாய்மாரெல்லாம் குழந்தைகளைக் காப்பாத்த முடியாமல் தெருவிலே விரட்டி விடுகிறார்களாம்!

மீனாக்ஷி : அட பாவமே, பழிகாரிகளா!ச்!ச்!ச்! என்ன கொடுமை! 

பிச்சைக்காரி : (வெளியிலிருந்து) இந்தப் பச்சைக் கொழந்தைக்காவது ஒருபிடி சோறு போடுங்கம்மா! தர்மதுரைகளே, ஏளைக்கிரங்குங்க, அம்மா! 

வசந்தகுமாரி : நீயும் ஏண்டி இப்படித் தொல்லை பண்றே? அடுத்த வீடு, அண்டை வீடெல்லாம் அஸ்தமிச்சா போச்சு? 

மீனாr: இப்பிடி எந்தப் பொம்பளைக்காவது மனசு வருமாடி? நமக்குச் சோறில்லைண்ணா, நம்ம கமலத்தையும், கண்ணனையும் தெருவிலாதுரத்தி விடுவோம்? 

வசந்தகுமாரி: இன்னும் கேளம்மா. வயது வந்த பெற்றோர்களை எல்லாம் பிள்ளைகள் கைவிட்டு விட்டார்களாம். மனைவிமாரைக் கணவன்மார் துரத்தி விடுகிறார்களாம். சகோதர, சகோதரிகளை யெல்லாம் கைவிட்டு விடுகிறார்களாம். குடும்பமெல்லாம் சீரழிந்து கிடக்கிறதாம்! 

மீனாக்ஷி: என்னடி, தாது வருஷப் பஞ்சக் கதை சொல்வது போல் சொல்றே! இப்படி எங்காவது நடக்குமா? 

வசந்தகுமாரி: நம் கண் முன்னாலே, நம்ம காலத்திலேயே நடக்கிறதம்மா. தினந்தோறும் பத்திரிகையிலே படிக்கிறோமே! 

பிச்சைக்காரி (வெளியிலிருந்து) ஏளைக்கிரங்குவார் ஒருத்தரு மில்லையா சாமீ? வீடு வீடா அலஞ்சுட்டேனே! ஒருத்தராவது ஒரு பிடி சோறு போட மாட்டேங்கிறாங்களே சாமி! அம்மா, தாயே! கொஞ்சம் பழைய சோத்துத் தண்ணியாவது ஊத்துங்களேன்! 

வசந்தகுமாரி: பேசாமப் போறியா, நாயை ஏவி விடட்டுமா?… அம்மா இன்னொரு கதையைச் சொல்ல மறந்திட்டேனே! ஐயோ! அந்தப் பரிதாபத்தை ஏன் கேக்கிறே? 

மீனாக்ஷி: சொல்லு, சொல்லு, அதுவும் சொல்லு. அப்பறமும் சொல்லு. ஈசனே! எம்பெருமானே!

வசந்தகுமாரி: ஒரு பையன் – பாவம்-எத்தனை நாள் பட்டினி கிடந்தானோ? சாமிக்குத்தான் தெரியும். ஒரு வீட்டிலே எச்சிலை போட்டார்களாம். அதை எடுத்து அந்தப் பையன் ஆவலாச் சாப்பிடப் போனானாம். அந்தச் சமயம் அங்கே ஒரு நாய் வந்துதாம்! 

மீனாக்ஷி: ச்சூ,பாவம், அது எத்தனை நாள் பட்டினியோ!

வசந்தகுமாரி: பையனுக்கும் நாய்க்கும் அந்த எச்சிலைக்காகச் சண்டை நடந்ததாம். நாய்தான் ஜெயித்தது; பையனுக்கு நல்ல காயமாம். இப்போ ஆஸ்பத்திரியில் கிடக்கிறானாம்! 

பிச்சைக்காரி: (வெளியிலிருந்து) வளைக்கித் துளிக்கஞ்சிஊத்துங்க அம்மா! உங்களுக்குக் கோடி புண்ணியம் அம்மா!   

மீனாக்ஷி: இந்தப் பிச்சைக்கார நாய்களே இப்படித் தான். பிடிவாதக்கார நாய்கள் இதைப்போல வேறே கிடையாது. அரைமணி நேரமா நானுஞ் சொல்லிக்கிட்டே இருக்கேன் ‘தொண தொண’ண்ணு தொண்டையைக் கிழிக்கிறா நீ சொல்றதைக்கூட கேக்கவிடமாட்டேங்கறா ஆமாம். நீ இதை யெல்லாம் சொல்லும்போதே என் மனம் துடியாத் துடிக்குதே. அங்கேயுள்ள சனங்கள் இதை யெல்லாம் எப்படித்தான் கண்ணாலே பாத்துச் சகிச்சுக்கிட் டிருக்காங் களோ தெரியலே! அவங்க மனம் எல்லாம்: கல்லா? 

வசந்தகுமாரி: அதென்னமோ சனியன், நமக்கு அதெல்லாம் கேட்கவே பரிதாபமாயிருக்கு!

பிச்சைக்காரி: (வெளியிலிருந்து) சோறு தின்னு மூணு நாளாச்சம்மா! பசி மயக்கமா யிருக்கு. கொஞ்சம் பச்சைத் தண்ணியாவது ஊத்துங்களேன்! 

மீனாக்ஷி: இந்தச் சனியன் வேறு தொல்லை!… ஏண்டி வசந்தா, அங்கே சனங்கள் இப்படிப் படாத பாடு படுதுகளே, அதுக்து நம்ம ஒண்ணுஞ். செய்ய முடியாதாடீ? 

வசந்தகுமாரி: ஏனம்மா முடியாது? எல்லாரும் அந்தப் பஞ்ச நிவாரணத்துக்கு இங்கே யிருந்து பணம் அனுப்பறாங்க. ஒம் மருமகனும் அஞ்சு ரூபாய் அனுப்பி யிருக்கார். அவர் பேர்கூடப் பத்திரிகையிலே வந்துதே! 

மீனாக்ஷி: பேர்கூடப் பத்திரிகையிலே வந்துதா? புண்ணியந்தாண்டியம்மா, புண்ணியந்தான்! ஒன் வீட்டுக்காரருக்குக் கோடி புண்ணியம்! ஏளைக் கிரங்கிற நெஞ்சமில்ல அவர் நெஞ்சம்! நான் ரெண்டு ரூபாய் கொடுக்கிறேன்; அதையும் அங்கு அனுப்பச் சொல்லடியம்மா. 

பிச்சைக்காரி: (வாசலிலிருந்து) அம்மா, எரக்கமில்லீங்களா ஒங்களுக்கு? பச்சைப் பிள்ளை பட்டினியா வாடுதம்மா? 

(வெளியில் உலாவச் சென்றிருந்த மிராசுதார் கையில் ஒரு பிரம்பை வீசிக்கொண்டு வருகிறார்.) 

மீனாக்ஷி: ஏ பிச்சைக்காரி! என்ன சத்தம் போட்டுக் கொண்டிருக்கே? (பிரம்பை ஓங்குகிறார்.) போ, அப்பாலே. (உள்ளே நுழைந்து உடைகளைக் கழற்றிவிட்டு நாற்காலியில் சாய்கிறார். அவருடைய நாய்,வாலை ஆட்டிக் கொண்டு வருகிறது.) அடே, வேலா! நாய்க்குச் சோறு வைத்தாயாடா?. 

வேலன்: வைச்சேன் எசமான்! 

மிராசுதார்: பின்னே ஏண்டா அதற்கு வயிறு குறைந்திருக்கிறது? 

வேலன்: (மௌனம்) 

மிராசுதார்: டைகருக்குப் பால் வைத்தாயா? 

வேலன்: பூனைக்குத்தானே எசமான்,கால் படி பால் வைத்தேன். 

மிராசுதார். இரண்டுக்கும் கொஞ்சம் ஆட்டுக்கறி வாங்கிக் கொண்டு வாடா. (எட்டணாவை விட்டெறிகிறார்.)

வசந்தகுமாரி: (கணவனைப் பார்த்து) இண்ணைக் கென்ன சமாச்சாரம்? 

மிராசுதார்: அதை ஏன் கேட்கிறாய்? நூற்றைம்பத்தேழு பேரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனார்களாம். அதில் அறுபத்தெட்டுப் பேர் இறந்து விட்டார்களாம்! கொடுமை, கொடுமை! 

பிச்சைக்காரி (வீட்டுவாசலிலிருந்து நகர்ந்து கொண்டே) எல்லாரும் இதைப்பத்தித்தான் பேசிப் பேசிப் பரிதவிக்கிறாங்க.ஆனால் எனக்கு ஒரு பிடி சோறு போடுவாரைத்தான் ஒருத்தரையும் காணோம்! இங்கயும் ஒண்ணும் போடமாட்டாங்க. போவுலாம், என் தலைவிதி! 

(வீட்டிற்குள் ஒரு குழந்தை அழுங்குரல் கேட்கிறது) வசந்தகுமாரி: அம்மா! கண்ணன் அழுகிறான். ஒன்றுஞ் சாப்பிடாமல் படுத்தவன். வெகுநேரமாச்சு. பசி எடுக்கும். தூக்கம்மா! 

(வெளியில் ஒரு குழந்தை வீறிட்டலறும் சத்தம் சற்றுத் தூரத்தில் கேட்கிறது. அது பிச்சைக்காரியின் குழந்தை!)

வசந்தகுமாரி (திக்பிரமை பிடித்தவள் போல்) என்னம்மா செய்து கொண்டிருந்தோம்! வீண் பேச்சும் வெட்டிப் பேச்சும்! ஐயோ, அவள் குழந்தைக் காரி யம்மா! அதோ பார், அவள் குழந்தை அலறுகிறது? என் குடல் பதறுகிறதே! கூப்பிடம்மா அவளை. எங்கெங்கேயோ பஞ்சம் என்றோமே! நம் கண் முன்னாலிருப்பதையே நாம் பார்க்கவில்லையே. என்ன பேதமை! ஐயோ! கூப்பிடம்யா அவளை. அவள் குழந்தை நம் குழந்தையைப் போலில்லையா! அய்யய்யோ! 

(எழுந்து ஓடுகிறாள் வாசலுக்கு)

[திரை] 

– உபகுப்தர் (நாடகங்கள்), முதற் பதிப்பு: பிப்ரவரி 1947, அருணோதய நிலையம், வேலூர்.

சு.குருசாமி சு.குருசாமி (Trichi. S.V. Guruswamy Sarma, திருச்சிராபுரம் சு.வை.குருசாமி சர்மா) என்பவர், தமிழில் முதல் சில புதினங்களில் ஒன்றான "பிரேம கலாவதீயம்" (1893) எழுதிய ஒரு முக்கியமான தமிழ் புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் 1940களில் "வாடா விளக்கு" போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும், பல கதைகளைத் தொகுத்து வெளியிட்டதோடு, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவியவர். மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை, பண்டித எஸ்.எம்.நடேச சாஸ்திரி, பி.ஆர்.ராஜமையர், சு.வை.குருசாமி சர்மா, அ.மாதவையா ஆகியோர் முதற் காலக்கட்டத் தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *