சிரிப்பாயிருக்கடி!
கதையாசிரியர்: ச.வே.பஞ்சாட்சரம்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: October 5, 2026
பார்வையிட்டோர்: 7
(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அது பொல்காவலைப் புகைவண்டி நிலையம்.
”இன்னும் ஐந்து நிமிடங்களில் நானுஓயா கடுகதி வந்துவிடும் ” என்று நண்பன் கூறிக்கொண்டிருக்கையில் மேடையில் பிரயாணிகள் வந்து திரண்டுகொண்டிருந்தனர்.
யாழ்ப்பாண மெயிலில் வந்திறங்கிய ஒரு முதியவரும் தமது மூட்டை முடிச்சுகளோடு வந்து என் அருகில் நின்றார். மகளிர் ‘வெயிட்டிங் ரூமி ‘ லிருந்து வெளியே வந்துகொண்டிருந்தனர் மங்கையர் சிலர். அவர்களின் சுயவிளம்பரப்படியும் உலகத்தையே கரைத்துக் குடித்துவிட்ட அசட்டு நினைவிலெழும் கொக்கரிப்புப் பேச்சின் படியும் அவர்கள் கண்டிப் பல்கலைக்கழக மாணவிகள்.
அந்த அடக்கமறியா மாணவகூட்டத்தில் ஒருத்தி என்னருகில் நின்ற முதியவரின் பெட்டி ஒன்றைச் சுட்டிக்காட்டி, “ஏ கலா! இதைப் பார்க்கச் சிரிப்பாயிருக்கடி!” என்று சொல்லிப் பெரிதாகச் சிரித்தாள்.
அந்தப் பெட்டி புகைவண்டிக்குள் மிதியுண்டு, நசிந்து, கிழிந்து, சிதைந்து காணப்பட்டது.
முதியவர் முகம் கறுத்து, வெட்கி வேதனைப்படுவது என் மனத்தை என்னவோ செய்தது. அந்த மண்டை வீக்கத்துக்கு உடனடியாக மருந்து கொடுக்காவிட்டால் என் மனக்கொதிப்பு அடங்காது என்பது நிச்சயமாக எனக்குத் தெரிந்தது.
அந்த அதிகம் படித்த மேதையைப் பார்த்தேன். தலை ‘பொப், குறோப்’ செய்யப்பட்டுக் குழம்பியிருந்தது. அருகில் நின்ற நண்பனைத் தட்டி, சற்றுப் பலமான குரலில் “அப்படியே ஒரு பைத்தியத்தின் தலைபோல இருக்கிறது! இல்லையா?” என்று குத்தலாகக் கூறி, அவள் கண்ணிற் படும்படியாக அவள் தலையை உற்றுப் பார்த்துவிட்டுக் கிழவரின் பெட்டியையும் பார்த்தேன்.
அவள் முகத்தில் அசடுவழிய நிலை கொள்ளாமல் தவித்து நின்றாள். அப்பொழுதுதான் விழித்துக் கொண்டு “என்ன? என்ன?” என்று தடுமாறிய நண்பனை ‘இந்தப் பெட்டிதான்!’ என்று சமாளித்துவிட்டு நிமிர்ந்து பார்த்தேன்.
அவள் பிளாட்பாரத்தில் நின்றவர்களை இடித்து விலக்கிக்கொண்டு தன்னந்தனியாக வெகுதூரத்தில் போய்க் கொண்டிருந்தாள்.
– சின்னஞ்சிறு கதைகள் (முதலாம் தொகுதி), முதற் பதிப்பு: 1969, தமிழருவிப்பதிப்பகம், சுன்னாகம்.
தொடர்புள்ள சிறுகதைகள்
மிகச்சிறிய மிருகங்கள்
நீ.பி.அருளானந்தம்
October 12, 2026
நவீன நல்லதங்காள்
இரா.கலைச்செல்வி
October 12, 2026
ஸ்க்ரைப்
ஜூனியர் தேஜ்
October 12, 2026