கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 6, 2026
பார்வையிட்டோர்: 162 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

அன்றொரு நாள் . காலை நேரம் . சாரல் போல் இலேசான தூறலில் நனைந்தபடியே பெண்பால் கவிஞரான நான் என் வீட்டுத் தோட்டத்தைச்

சுற்றி சுற்றி நடந்து வந்து கொண்டிருந்த தருணத்தில் , தோட்டத்தின் மூலையில் இரண்டு காக்கைகள் , எதையோ கொத்திக் கொண்டு இருந்ததைக் கண்ட நான் அங்கே விரைந்து சென்று பார்த்த போது , சின்னஞ்சிறு அணில் குஞ்சு குற்றுயிரும் குலையிருமாய் இருப்பதைக் கண்டு துடித்துப் போனேன்.

காகங்களை விரட்டி விட்டு அந்த சின்னஞ்சிறு ஜீவனை உள்ளங்கைகளில் ஏந்தி வீட்டுக்குள் ஓடோடிச் சென்றேன்.

அதைக் காப்பாற்ற நான் செய்த முதல் உதவிகள் பலனளித்தன.

பசும்பாலில் பஞ்சைத் தோய்த்து தோய்த்து அதற்கு பால் ஊட்டினேன்.

அணில் குஞ்சு , தெம்பு பெற்றது. என் அறையில் சுற்றி சுற்றி வலம் வந்தது. நான் அதற்கு கில்லு என்று பெயரிட்டு அழைத்து வந்தேன்.

எனக்கு ஒரு துணையான அந்த அணில் நான் கொறிக்க கொடுப்பவற்றை தின்று நாளொரு மேனியும் பொழுதொரு மேனியும் வளர்ந்து வந்தது அந்த கில்லு . வெளி உலகைப் பார்க்க அறையின் ஜன்னல் கதவைத் திறந்து வைத்தேன்.

பகலில் எங்கெங்கோ சென்று அலைந்து விட்டு மாலை நேரத்தில் என் அறைக்கு வந்து சேரும். என்னுடைய கரங்களில் ஏறி விளையாடும்.

உண்ணும் ஆசை வந்தால் குரல் கொடுக்கும்.

நான் காய்ச்சலில் படுத்திருந்த போது என் நிலை அந்த ஜீவனுக்குப் புரிந்ததோ?

என் கூந்தலை வருடி என் படுக்கையிலேயே அமர்ந்து இருக்கும்.

இப்படியாக , என் வாழ்வில் கலந்து விட்ட கில்லு , இரண்டு வருடங்கள் என்னுடன் இருந்த பின் , இறுதி மூச்சு விடும் தருணம் வந்தது.

ஓர் ஓரத்தில் ஒடுங்கிப் போய்ப் படுத்திருந்த கில்லுவை என் உள்ளங்கைகளில் ஏந்தினேன்.

கில்லு, என்னிடம் விடை பெற்றது.

மஞ்சள் மல்லிகைப் பூக்கள் பூத்துக் குலுங்கும் பூந்தொட்டியை கில்லுவுக்கு சமாதி ஆக்கினேன்.

எனக்குள் ஒரு நம்பிக்கை – பொன் மல்லிகைப் பூவாய் கில்லு மலர்ந்து வரும் என்று.

– ஞானபீட விருது பெற்ற , முதுபெரும் இந்தி பெண் எழுத்தாளர் மகாதேவி வர்மா அவர்கள் (மார்ச் 26, 1907 – செப்டெம்பர் 11, 1987 ) எழுதிய கவிதையைத் தமிழில் கொடுக்கும் அடியேனுடைய முயற்சி இந்தச் சிறுகதை.

எஸ்.மதுரகவி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *