கோபம் வேண்டாம்
கதையாசிரியர்: வசுமதி ராமசாமி
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: September 20, 2026
பார்வையிட்டோர்: 98
(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்புக்குரிய சுஜாதா,
கோபம் பல காரணங்களால் வருகிறது. சில சமயம் முக்கியமான சந்தர்ப்பத்தில் நமக்கு வேண்டிய அவசியமான சாமான்கள் காணாமல் போனாலும் பிரமாதமான கோபம் வருகிறதல்லவா?
ஒரு சமயம் உறவினர் வீட்டுக் கல்யாணத்துக்குப் போயிருந்தேன். திடீரென்று கல்யாணப் பெண் கழுத்து மாங்காய் மாலையைக் காணோம் என்றார்கள். அது ஒவ்வொருவருக்குத் தெரிந்து சம்பந்தி வீட்டு வரை பரவிவிட்டது. அந்த நகை பெண்ணுக்கு மாமியார் வீட்டில் மணவறையில் அளிக்கப்பட்டது. பெண்ணின் தாயார் சிறிது நிதானமாகத் தேடி இருக்கலாம். சமையல்காரர்கள், வேலைக்காரர்கள் எல்லோரையும் மிரட்டி ஆர்ப்பாட்டம் செய்து சோதனை போட்டார்கள். அனைவரும் மனம் நொந்து விட்டார்கள். கொஞ்சம் ஏழைமையாயுள்ள உறவினர்கள் பெட்டிகளெல்லாம் சோதிக்கப்பட்டன. போலீஸுக்கும் தாவல் கொடுத்து விட்டார்கள். ஆசீர்வாத சமயமும் வந்து விட்டது. கல்யாணப் பெண் ஆணியில் மாட்டியிருந்த பூ மாலையைப் போட்டுக் கொள்ள எடுத்தாள். கூடவே ரத்னமாலை விழுந்தது. அன்று இரவு விருந்துக்குச் சமையல் செய்யச் சமையல்காரர்கள் மறுத்து விட்டார்கள், எவ்வளவோ நாட்கள் ஆசையாக ஏற்பாடு செய்த விருந்து நின்று விட்டது. பதட்டமாகப் பேசுவதோ, நடப்பதோ தவறல்லவா? இதனால் பின்னால் வருந்த நேருகிறது.
கொத்துச்சாவி இருக்கிறதே அது அடிக்கடி நம்மைப் பழி வாங்கும். ரயிலுக்குப் புறப்படுகிற சமயம், கல்யாண வீட்டுக்குக் கிளம்புகிற சமயம், எல்லாம் நம்மை ஒரு கை பார்க்கும். அந்தச் சமயம் சற்று நிதானமாக இருந்து தேடுவதற்குப் பயின்று கொள்ள வேணும்.
விருந்தினர்களை அழைக்கிறேம். வழக்கமாகச் சமையல் நன்றாகத் தயார் செய்யும் நம்முடைய சமையல்காரர்கள் அன்று சரியாகச் செய்திருக்க மாட்டார்கள். அவர்களுடன் சாப்பிடும்போதே, ‘அது தவறு, இது நன்றாக இல்லை’ என்றெல்லாம் சொல்வது பண்புக் குறைவுதான். ஸ்ரீமதி விஜயலக்ஷ்மி பண்டிட் ஒரு பெரிய விருந்தில் தம்முடைய சமையல்காரன் மோசமாக நடந்து கொண்டது பற்றி எழுதி யிருக்கிறார். காந்திஜியின் பொன்மொழிகளை நினைத்துத் தான் சாந்தமாக இருந்து வெற்றி அடைந்ததைப் பற்றி ஒரு பிரபல பத்திரிகையில் எழுதியிருக்கிறார்.
சில பெண்கள் பிறர் அபூர்வமாக வந்திருக்கும் சமயம் குழந்தைகளை அடிக்கிறார்கள். பாவம்! வந்தவர்கள் தங்கள் முதுகில் அடிபட்ட மாதிரி கருதுகிறர்கள்.
ஒரு தோழி எப்பொழுதும் தன்னுடைய கோபத்தைப் பற்றிப் பெருமையாகச் சொல்லுவாள். ‘நன்றாக டோஸ் கொடுத்து விட்டேன். விளாசி விட்டேன். சுடச்சுடக் கேட்டு விட்டேன்’ என்றெல்லாம் அடுக்கு மொழிகளில் சொல்லுவாள். ‘அதற்கெல் லாம் ஏதாவது பயனுண்டா?’ எனச் சிந்திப்பதில்லை. விபரீத பலன்தான் ஏற்படும் என்பதையும் உணர்வதில்லை.
கோபத்தை முழுவதையும் வென்றுவிட இயலாது. அதனால்தான் நமது பொய்யா மொழிப் புலவரான வள்ளுவர்,
“தீயினால் சுட்ட புண் உள் ஆறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு”
என்று கூறியிருக்கிறார். இதையே இன்னொரு அனுபவமுள்ள பெரியார், “நாக்கில் வரும் கடுசொற்களைச் சிந்தாமல் சற்று நேரம் வைத்துக் கொள். உமிழ் நீராக ஆறிக் குளிர்ந்து விடும்” என்றார். மற்றொரு அறிஞர் கோபம் வரும் போதெல்லாம் ஒன்று இரண்டு என நூறு வரை எண்ணச்சொன்னார். அவர் கணக்கு வாத்தியார் போலும்! நாமும் கோபத்தை வென்று விட முயற்சி செய்வோம். முயற்சியினால் ஆகாதது ஒன்றில்லை. வாழ்க்கையில் கூடியவரையில் சாந்தத்துடன் இருக்கவும், எல்லாரிடமும் இனிமையாகப் பழகவும் பயில வேண்டும்.
பூமாதேவி.
– தேவியின் கடிதம், கல்கியில் 1956-இல் தொடங்கிய தொடர்.
![]() |
ஏப்ரல் 21. பிரபல எழுத்தாளர் வசுமதி ராமசாமியின் பிறந்த தினம். வசுமதி இராமசாமி (21 ஏப்ரல் 1917 - 4 சனவரி 2004) இந்தியப் பெண் எழுத்தாளர் வரிசையில் குறிப்பிடப்பட வேண்டியவர். சமூக சேவையாளர். சென்னை அகில இந்திய வானொலியின் முதல் ஒலிபரப்பாளர்களுள் ஒருவர். இதழாசிரியராக இருந்தவர். காந்தியை நேரடியாகச் சந்தித்து, அவரிடம் சமூக சேவைக்கான பயிற்சி பெற்றவர். மகாத்மா தென்னிந்தியா வந்தபோது, அவர் சென்ற இடமெல்லாம் தானும் சென்றவர்.…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
கடைசி பேருந்து
புஷ்பராஜ் கந்தசாமி
October 3, 2026
சுகந்தம்
பொ.கருணாகரமூர்த்தி
October 3, 2026
கோணங்கள்
ரேவதி பாலு
October 3, 2026
