சிக்கி
கதையாசிரியர்: பிரபஞ்சன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: September 19, 2026
பார்வையிட்டோர்: 83
(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மூர்த்தி, அப்போது செல்வ நகர் கோயில் தெருவில், மாடி வீட்டில் குடியிருந்தான். வசதியான வீடுதான் அது. நிறைய ஜன்னல்கள். நாலா பக்கம் இருந்தும் சுகமான காற்றும், வெள்ளை யாக வெளிச்சமும் வந்து கொண்டிருந்தன.
மூர்த்தியின் நண்பர் ஒருவர், ஒருநாள் நாய்க்குட்டியொன்றைக் கொண்டுவந்து அன்பளிப்பாகக் கொடுத்தார். தொட்டி ஆலமரத்தின் விழுதுகள் மாதிரி புசு புசுவென்று மயிர் அடர்ந்த நாய்க்குட்டி அது. தொங்கிய காது. காபி நிறத்து நாய்க்குட்டி. நகம் மாதிரி சின்ன நாக்கைத் தொங்க விட்டுக் கொண்டு சின்னதாகக் குரைத்தது. கறுப்புக் கோலிக் குண்டுகள் மாதிரியான கண்கள். மூர்த்தியின் குழந்தை ‘ஹை’ என்று குதித்துக்கொண்டு அந்த நாயை அணைத்துக் கொண்டது. “அப்பா… எனக்கு இந்த நாய் ரொம்பப் பிடிச்சிருக்கு” என்று நாயை அணைத்துக்கொண்டாள் குழந்தை மீனா.
மூர்த்திக்கு மிருக வளர்ப்பில் ஈடுபாடு இல்லை. மிருகங்களை அவன் நேசிப்பவன்தான். எனினும், மிருகங்களை அருகில் உடம் போடும் சேர்த்து அணைத்துக் கொண்டு; கொஞ்சிக் கொண்டு இருக்கிற சுபாவம் அவனுக்கு இல்லை. அது அவனுக்கு அருவருப் பான சமாசாரமும்கூட, என்றாலும், குழந்தை விரும்புகிறாளே என்று அந்த நாயை வளர்க்க ஏற்றுக்கொண்டான் அவன்.
“இது ரொம்ப உசந்த சாதி நாயாக்கும்” என்றார் அவர். “நாயில் கூடவா, சாதி?” என்றான் மூர்த்தி.
நண்பர் ரொம்ப யோசனையில் இருந்துவிட்டு, “மனுஷர்கள் ஏற்படுத்திக் கொண்டது. நாம் எல்லாவற்றிலும் நம்மைத்தானே காண்கிறோம்” என்றார்.
ஆக, மூர்த்தியின் வாழ்க்கையில் ஒரு நாய் வந்து சேர்ந்து விட்டது. மாடியில், கூரை நிழலில் அதற்கான இடம் ஒன்றை ஏற்பாடு செய்தான். வெயில், மழை தொடாத இடம். கீழே பழஞ் சாக்கு விரித்து, மெத்தென்று நாயைப் படுக்க வைத்தான். நாய்க்கு என்று தனியாகப் பால் கிண்ணம், சாப்பாட்டுக்கு எவர் சில்வர் தட்டு, அதுக்குச் சமைக்க என்று தனி பாத்திரம் எல்லாம் தயாரா யிற்று. மூர்த்தியின் மனைவி பழந்துணிகளை எடுத்து, நாய் குளித்தால் துடைத்துக் கொள்ளவென்று சித்தம் பண்ணினாள்.
“அப்பா, நாய்க்கு என்ன பேர் வக்க?” என்றாள் மீனா.
அது ஒரு பெண். ஆகவே பெண் பெயர் வைப்பது அவசியம்.
பல பெயர்கள் பேசப்பட்டன. கிறிஸ்டி, லட்சுமி, ப்ரியா, எலிசபெத், செண்பகா எத்தனைப் பெயர்கள். மூர்த்தியின் மனைவி, லட்சுமி நல்ல பெயர் என்றும் சொன்னாள். மனைவியின் ஊரி லிருந்து வந்திருக்கிற படித்த சகோதரி, நாய் ரூபத்தில்தான் லட்சுமி நம் வீட்டுக்கு வர வேண்டுமா என்று கேட்டாள். சுமார் ஐம்பது பெயர்களுக்கு மேல் அலசப்பட்டன. எதுவும், நாய்க்குரிய பெயராகப் படவில்லை. எல்லாம் மனுஷப் பெயர்கள்!
சொன்னால், அது நாயின் பெயர்தான் என்று புரிந்து கொள்வது மாதிரி இருக்கவேண்டும். பெண் சாமிப் பெயர்களை நாய்க்கு வைத்து அழைப்பது சாமிகளைச் சீண்டுவதாய் இருந்தால் என்ன செய்வது? (உதாரணத்துக்கு, பார்வதி, உமா, லட்சுமி, சரசுவதி) மனிதக் குற்றங்கள் வரலாம். தெய்வக் குற்றங்கள் வரலாமோ?
கடைசியில் ‘சிக்கி’ என்று பெயர் வைப்பது என்று முடிவா யிற்று. சிக்கி என்று எந்த சாமியும், சொந்தத்தில், பந்தத்தில் யாரும் பெயர் வைத்துக் கொள்ளவில்லை. ‘சிக்கி’ என்று மீனா, அந்த நாயை அழைத்தாள். அது, யாரையோ அழைக்கிறார்கள் என்று இருந்தது. மூர்த்தியும் அவன் மனைவியும், பலமாகக் கூப்பிட, அதிர்ச்சி யடைந்த சிக்கி திரும்பிப் பார்த்தது.
“பரவாயில்லையே… நாய், நம் பாஷையைப் புரிந்து கொள் கிறதே” என்றார், நாயைக் கொண்டுவந்த நண்பர்!
சிக்கி, முனகிக் கொண்டது. அதுக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. அம்மாவை விட்டுப் பிரிந்த முதல் இரவு அது. ஒரு கான்டிராக்ட் காரர் வீட்டில் அதன் அம்மாவை வளர்த்தார்கள். சிக்கியுடன் மூன்று குட்டிகள் அதன் அம்மாவுக்கு. இது காபி நிறம் என்றால், மற்றது இரண்டும் ஒன்று வெள்ளை மற்றது கறுப்பு. ஆனாலும் அவை அதன் சகோதரர்கள். மூன்றும் முட்டி மோதிப் பால் குடிக் கையில், அரைக்கண் மூடி, அதன் அம்மா, அவர்களுக்கு ஆனந்த மாகப் பால் பருகத் தருவாள். வெள்ளைக் குட்டி ரொம்ப அலைச்சல் கொண்ட நாய். ஆளுக்கொரு காம்பு குடிக்க இருந்தா லும், அந்த வெள்ளையோ, மற்ற இரண்டும் குடிக்கிற காம்புக்கே போட்டி போடும்.
பிறந்து கொஞ்ச நாளே ஆனாலும், வாழ்க்கை அது பிறந்த வீட்டில் மிகவும் சந்தோஷமாகவே இருந்தது. கடித்தும், கரைத்தும், இடித்தும் அவை ஒன்றோடொன்று விளையாடும் காட்சியை அது களின் அம்மா, நாக்கைத் தொங்க விட்டபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும். பசித்தால் பால். தூக்கம் வந்தால் உறக்கம். அப்புறம் விளையாட்டு. ஒளி தரும் சூரியன். இருட்டை விரட்ட விளக்க. வாழ்க்கை எவ்வளவு ரம்மியமானது.
ஒருநாள் காலை பருத்த தொந்தி, காதில் மயிர் முளைத்த வரும் ஆன அந்த மனிதர் அந்த வீட்டுக்கு வந்திருந்தார். கான்டிராக்ட் காரரின் மனைவி, அவருக்குக் காபி கொடுத்து உபசரித்தாள். அவர் அவளிடம் சொன்னார்.
“நம்ம நண்பர் மூர்த்திக்கு ஒரு குட்டி தரனும்மா. உன் வீட்டுக்காரண்டை சொல்லியிருந்தேனே.”
“எடுத்துக்குங்க, அண்ணா. உங்களுக்கு இல்லாததா?”
அவர் மூன்றையும் ஒரு நோட்டம் விட்டார். சிக்கியின் மார்பு, துடித்தது. படபடவென்று அடித்தது. அவர், சிக்கியைக் கையில் எடுத்து, ஒரு பிரம்புக் கூடையில் விட்டார்.
அம்மா, அண்ணா என்று அலறியது, சிக்கி. அம்மா, வெறித்த பார்வையுடன் சிக்கியையே பார்த்துக் கொண்டிருந்தாள். சிக்கி, அழ அழ அவர் சிக்கியைத் தூக்கிக்கொண்டு வந்து மூர்த்தியிடம் சேர்ந்தார். சிக்கிக்கு மீண்டும் மீண்டும் அம்மா ஞாபகம் வந்தது. சகோதரர்கள் ஞாபகம் வந்தது. அந்த இடம் பிடிக்கவில்லை அதுக்கு. கழுத்தைப் பிணைத்திருந்த சங்கிலி அறுந்து விழும்படி அதை இழுத்தது. சங்கிலி அறக் காணோம்.
“நாய் அழறதே” என்று விழித்துக் கொண்ட மூர்த்தியின் மனைவி கேட்டாள். “புது இடம். நாளைக்குச் சரியாயிடும்” என்று மூர்த்தி சொல்வது சிக்கிக்குக் கேட்டது. அது கேட்டு, சிக்கிக்கு ஆத்திரம் பொங்கியது. அப்படியே பாய்ந்து சென்று அவனைக் கடித்துக் குதற வேண்டும்போல் இருந்த. கம்பிச் சங்கிலி, அதன் எண்ணத்தைச் செயல்படுத்த முடியாமல் தடுத்தது.
‘இந்த மனுஷன் தன் மகளை மட்டும் தன்னோடு வைத்துக் கொண்டு கொஞ்சுகிறான். என்னை மட்டும் ஏன் என் அம்மாவிடம் இருந்து பிரித்தான்’ என்று நினைத்துக்கொண்டு அம்மாவை நினைத்துக்கொண்டு மேலும் அழுதது சிக்கி.
பருத்த தொந்தி கொண்ட அந்த மனிதர் வந்திருந்தார். சிக்கியைப் பார்த்துச் சொன்னார்.
“அடடே… சிக்கி, அடையாளம் தெரியாமே வளந்துட்டுதே…” என்றவர், அதைப் பார்த்து ‘ச்சு… ச்சு… ச்சு…’ என்று கைச்சிட்டிகை போட்டார்.
சிக்கிக்கு அந்த ஆளைப் பார்த்ததும் எரிச்சல் மேலோங்கியது. ‘சர்த்தான் போடா, பெரிய இவனாட்டம்’ என்று நினைத்து, தன் வாலை இப்படியும் அப்படியும் அடித்துக் கொண்டது.
‘வாலை ஆட்டுது பார்த்தியா… என்ன இருந்தாலும் நாய் நாய்தாம்பா! மனுஷனுக்கு இந்த நன்றி உணர்ச்சி வருமா?”
அதற்கு மூர்த்தியும் அவன் மனைவியும் ‘ஹி… ஹி…” என்று சிரிப்பதாக சிக்கிக்குத் தோன்றியது.
வேளா வேளைக்கு மூர்த்தியின் மனைவி சிக்கிக்குப் பால் வார்த்தாள், அது மட்டுமின்றி குழந்தை மீனாவும் பாதி வயிறு நிரம்பு முன்னே தனக்கு கொடுத்த ஆர்லிக்ஸ், காபி, பால் முதலான வற்றை சிக்கிக்கு வார்த்தாள். அதையெல்லாம் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், பால் மட்டுமா, சந்தோஷம்? இட்லியும், வேக வைத்த கறியும், சோறும் மட்டும் தானா சந்தோஷம்?
அன்று மூர்த்தி குடும்பத்தார் கடற்கரைக்குப் போனார்கள். சிக்கியையும், சங்கிலி கொண்டு கழுத்தில் கட்டி அழைத்துக் கொண்டு போனார்கள். சின்னக் கடை மணிக்கூடு அருகே, சிக்கியைப் போலவே பல நாய்கள் இருந்தன. கழுத்துச் சங்கிலியோடு, மனுஷனுக்குப் பிறகே போகிற சிக்கியைப் பார்த்து அவை ஏளனமாகக் குரைத்தன. சிக்கிக்கு அவமானமாகவும், அதே சமயம் வருத்தமாகவும் இருந்தது. திடீரென்று அதில் இருந்த இரண்டு நாய்கள், திடுமென வெறிகொண்டவை போல ஓடத் தொடங்கின. நாலு கால் பாய்ச்சலில் ஓடின அந்த நாய்கள். மின்சாரக் கம்பம் வரை ஓடின. அதன் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புத்தம் புது மோட்டார் சைக்கிளின் மேல் காலைத் தூக்கி, சுகமாகச் சிறுநீர் பெய்தன. பிறகு எதையோ நினைத்துக் கொண்டாற்போல கிழங்குப் பக்கமாக மெல்ல நகர்ந்தன. சிக்கி கவனித்ததில் அதில் ஒன்று ஆண் என்று தெரிந்தது. திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே சிக்கி நகர்ந்தது. அந்த ஆண் நாய் ஓரக்கண்ணால், சிக்கியைப் பார்த்து, ஒரு ரூபாய் தபால் தலை மாதிரியான நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டே இளம் சிரிப்பு சிரித்தது. சிக்கிக்கு உடம்பு சிலிர்த்தது.
காலை வேளைகளில் சிக்கியை அவிழ்த்து விடுவது வழக்கம். மீனாவும் உடன் வருவாள். கீழே இறங்கி, மூலைக் குப்பைத் தொட்டி வரை அதை அழைத்துச் செல்வாள். அங்கு சிக்கி, தன் காலைக் கடனைக் கழிக்கும். குப்பைத் தொட்டி, அதன் கற்பனையை மிகவும் தூண்டி விடுவதாக இருந்தது. பல விதமான வாசனையை அது தருவதாக இருந்தது. அந்தத் தொட்டியை முகர்ந்து, அதற்கு உள்ளே வாசம் செய்ய வேண்டும் என்று அதற்கு உந்துதல் எழுந்தது. தொட்டியை முகர்ந்து, மோப்பம் பிடித்தபடி, சிக்கி குப்பைத் தொட்டிக்குள் தாவி உட்கார்ந்து கொண்டது.
“சிக்கி… சிக்கி… வெளியே வா” என்று மீண்டும் மீண்டும் கத்தினாள் மீனா. அவளைக் கடிக்கப் போவது போல, கோபமாக ‘உர்’ என்றது சிக்கி.
“அம்மா” என்றபடி மீனா வீட்டுக்கு ஓடினாள்.
“என்னாச்சு” என்றபடி மூர்த்தியும் அவன் மனைவியும் ஓடி வந்தார்கள். மூர்த்தி, ஒரு கோலை எடுத்துக் கொண்டு வந்து சிக்கியை அடித்தான். சிக்கி, வீட்டுக்கு வாலைப் புட்டத்தில் இடுக்கிக் கொண்டு ஓடி வந்தது.
மூர்த்தி தன் தொந்தி நண்பருடன் கவலை தோய்ந்த குரலில் சொல்லிக் கொண்டிருந்தான்.
“என்ன, இந்த சிக்கி இப்படிப் பண்ணுது. எவ்வளவு சுத்தமா நான் அதை வளர்த்துகிட்டு இருக்கேன். அதுக்குன்னு ஒரு சோப்பு. அதுக்குன்னு ஒரு டவல். வேளை தவறாமே நல்ல சாப்பாடு. வாக்கிங். எதுல குறை. எதனால் அது குப்பைத் தொட்டிக்குள்ளே போய்ப் புகுந்துக்குதோ.”
“நாளானா சரியாப் போயிடும். விடுப்பா” என்றார் அந்த நண்பர். சிக்கி அவர்கள் உரையாடலைக் கேட்டுக்கொண்டுதான் இருந்தது. மூர்த்தியின் முகத்தைப் பார்க்கவே அதுக்கு எரிச்சலாய் இருந்தது. இவனைப் பெரிய படிப்பாளி என்று வேறு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் நம் மனசை இவனால் புரிந்துகொள்ள முடியாமல் போய்விட்டது. எவ்வளவு பெரிய முட்டாள் இவன்?
சின்னக் கடை மணிக்கூண்டில் சிக்கி பார்த்த அந்த சக ஜீவன்கள், அதன் ஞாபகத்துக்கு வந்தன. அதைப் பார்த்துச் சிரித்த அந்த வீரியமிக்க ஆண் நாயின் ஞாபகம் வேறு வந்தது. திரண்டு, வலிமை பொருந்தின அதன் உடல்வாகு, அடிக்கடி சிக்கியின் கனவில் வந்து அதன் உறக்கத்தைக் கெடுத்தது.
எதிர் காற்றைக் கிழித்துக்கொண்டு, ஒரு விசைப் பந்தைப் போல, தெரு முனைக்கு ஓட வேண்டும் போல இருந்தது. சங்கிலி அதைப் பிணைத்திருக்கிறதே! வெளிச்சத்தில், வெறி கொண்டாற் போல அலைந்து திரிய வேண்டும்போல இருந்தது. ராத்திரிகளில் குப்பை மேட்டில், பின்னங்கால்களால் மண்ணைச் சீண்டி விட்டுக் கொண்டு மண்ணில் படுத்துப் புரண்டு ஆனந்தமாகத் தூங்க வேண்டும் போல இருந்தது. மூர்த்தியின் சங்கிலி அதை அதன் இஷ்டத்துக்கு விடாமல் கட்டிப் போட்டிருக்கிறதே!
சிக்கிக்கு சீக்கிரமே வாய்ப்புக் கிடைத்தது!
அன்று காலை, விடியும் நேரம், மழை திடுமென வானத்தைப் பொத்துக்கொண்டு பெய்யத் தொடங்கியது. பைத்தியம் பிடித்தாற் போல வானம் வெட்டி எடுத்தது. இடி உறுமிற்று. சிக்கி மழைச் சாரலில் நனைந்தபடி சுத்தத் தொடங்கிற்று.
“சிக்கி என்னத்துக்குக் கத்துது?” ‘மழையில பயப்படுறது போல.”
“அவிழ்த்து வந்து நடையில விடு, ஞாபகமா மாடிக்கதவைச் சாத்தி வை. ஓடிறப் போவுது.”
அவள், சிக்கியைக் கொண்டுவந்து நடையில் விட்டு, பாத்ரூமுக் குச் சென்றாள். கீழே யாரோ அழைப்பு மணியை ஒலித்தார்கள். மூர்த்தி படுக்கை அறையை விட்டுக் கைலியும் துண்டுமாகப் படி இறங்கிக் கீழே போய், கதவைத் திறந்தான். பால்காரர் நின்றிருந்தார். பால் பாத்திரம் எடுத்து வர அவன் மாடி ஏறி வந்தான். கதவு திறந்தபடி இருந்தது. சிக்கியின் காதில் யாரோ, ‘நல்ல சமயம், இதை நழுவவிடாதே’ என்று சொல்வது போல் இருந்தது.
படியைத் தாவி இறங்கித் தெருவில் ஓடத் தொடங்கியது சிக்கி.
மனம் குதிபோட்டது.
வாழ்வில் முதல் முறையாகச் சந்தோஷமாக இருப்பதாக சிக்கிக்குத் தோன்றியது. காற்றோடும், வேறு எதனோடும் போட்டி போட்டது போல, இரைக்க இரைக்க ஓடிவந்து மணிக்கூண்டு மீன் கடை வாசலில் நின்றது. மூன்று நாய்கள் விளையாட்டாக ஒன்றோடு ஒன்று கடித்துக்கொண்டு இருந்தன. அதுகளின் அருகில் சிக்கி நிற்கவே, அவை அதை ஆச்சரியமுடன் பார்த்து ‘அடே’ என்று குரைத்தன.
“தனியாகவா வந்தே? உன் எஜமான் எங்கே, என்றது ஒன்று. “எஜமானா? அவன் கிடக்கிறான் சொண்டி. போடான்னுட்டு உங்கிட்டே வந்துட்டேன்.”
“அதான் சரி. நம்ம இஷ்டம் போல இருக்கிறதை விட்டுட்டு, நம்மளை வளக்கிறானுவளாம், மயிராண்டிக” என்றது ஒன்று.
சிக்கி சுற்றும் முற்றும் தேடியது. தண்ணீர் குழாய்க்குப் பிறகால், அந்த ஆண் நாய் படுத்துக்கொண்டிருந்தது. ஓர் எலும்பை வைத்துக் கொண்டு கடித்தபடி இருந்தது. அது சிக்கியைப் பார்த்து லேசாகச் சிரித்தது.
“எலும்பு வேணுமா? கொஞ்சம்?”
“சீ! எச்சல் எல்லாம் நான் சாப்பிடுகிறதில்லை.
எங்கிருந்தோ சொறி வந்து மயிரெல்லாம் இழந்த ஒரு பெரிய ஆண் நாய் வந்து, சிக்கியை உரசிக்கொண்டு நின்றது. மேனி மயிர்கள் எல்லாம் குத்திட்டு நிற்க, மெய்ம்மறந்து நின்றது சிக்கி.
“உர்ர்” ஆண் நாய் உறுமிற்று.
“அவளை விடு” என்றது அது மீண்டும்.
சொறி நாய் அலட்சியமாக ஆண் நாயைப் பார்த்து, “என்ன?” என்றது இளக்காரமாக.
“அவளை விட்டு நகரு.”
நீ என்ன தாலியா கட்டியிருக்க அவளுக்கு?”
ஆண் நாய் வெறி கொண்டு பாய்ந்தது.
இரண்டு நாய்களின் சண்டையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. வெகு ஆக்ரோஷமுடன் நடந்த அந்தச் சண்டை, ஏதோ ஒன்றின் உயிரைப் பலி கொள்ளப் போவதாகத் தோன்றியது. மனிதர்கள் அஞ்சிக்கொண்டு அப்பால் அகன்றார்கள். சொறி நாய், உடம் பெல்லாம் இரத்தம் ஒழுக வாலைப் புட்டத்துக்குள் அடக்கிக் கொண்டு அழுதுகொண்டு ஓடியது. நெஞ்சை நிமிர்த்துக்கொண்டு சிக்கியைப் பார்த்தது அது. இரண்டும் ஒரே ஓட்டமாக ரயில்வே ஸ்டேஷன் சுவரைப் பார்த்து ஓடின.
உடம்பெல்லாம் வலித்தாலும், உடம்பு முழுக்க ஆனந்தம் பரவியதுபோல் உணர்ந்தது சிக்கி. அரைக்கண் மூடி, கல்யாண வீட்டு எச்சில் சோற்றுக் குப்பையின் மேல் கிடந்தது அது. திடுமென யாரோ அதுக்கு மாலை போட்டாற் போல் இருந்தது. திடுக்கிட்டுக் கண் விழித்தது. எதிரே காக்கிச் சட்டை அணிந்த இருவர் நின்றி ருந்தார்கள். ஒருவன் கையில் கயிறு இருந்தது. அவன் கையில் இருந்த கயிறின் மறுமுனைதான் தன் கழுத்தை இறுக்கியது என்பதைச் சிக்கி உணருமுன் வண்டிக்குள் வந்து விழுந்தது அது. அங்கு நாலைந்து நாய்கள், பயத்தில் உதறிக் கொண்டிருந்தன.
மூர்த்திக்கு முப்பது ரூபாய்க்கு மேல் செலவாயிற்று. சிப்பந்திகள் மூவருக்கு ஆளுக்கு அஞ்சு ரூபாய். அவர்களில் மேஸ்திரி மாதிரி இருந்தவன் முப்பது ரூபாய் கேட்டான். நல்லவேளை அதிகாரி ஆசனத்தில் இல்லை.
தலை கவிழ்ந்தபடி சிக்கி ஆட்டோவில் வந்து கொண்டிருந்தது. மூர்த்தி தன் நண்பரைப் பார்த்துச் சொல்லிக்கொண்டு வந்தான்.
“என்ன தொந்தரவு. என்ன செலவு. இன்னிக்கு ஆபீசுக்குப் பர்மி ஷன் வேறே! நாம இந்த நாயை எப்படி நேசிக்கிறோம்னு இதுக்குப் புரியவே இல்லையே. கண்ட கண்ட பொறுக்கி நாயோட சேர்ந்தா இது என்னாவது? இப்பவே மயிர் விழ ஆரம்பிச்சுட்டது. அதுதான் கவலையா இருக்கு. எப்படி வளர்த்தேன். குப்பைத் தொட்டியும் எச்சில் இலையும், பொறுக்கி நாயும் சுகம்னு போவுது, இது, என்ன பண்ண?”
மிகுந்த வருத்தமுடன் புலம்பிக்கொண்டே வந்தான் மூர்த்தி. வீட்டு வாசலில் ஆட்டோ நின்றது. மூர்த்தி பாக்கெட்டில் கையைவிட்டான் பணம் எடுத்து எண்ணி ஆட்டோவுக்குக் கொடுத் தான். குனிந்த சிக்கியைத் தூக்கினான். சிக்கி அவன் கையைக் கடித்துக் காயப்படுத்தி விட்டுப் பாய்ந்து குப்பை மேட்டை நோக்கி ஓடியது.
“பிடி, பிடி” என்று கத்தினார் நண்பர்.
“வேணாம், போகட்டும்” என்றான் மூர்த்தி, விரக்தியாக.
– 1991
– பிரபஞ்சன் சிறுகதைகள், முதற் பதிப்பு: 2004, கவிதா பப்ளிகேஷன், சென்னை.
![]() |
பிரபஞ்சன் (ஏப்ரல் 27, 1945 - டிசம்பர் 21, 2018) தமிழ் எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். வார இதழ்களில் பணியாற்றிய இதழாளர். அரசியல் கட்டுரையாளர். தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது 1995-ம் ஆண்டு பெற்றவர். பிரபஞ்சன் 1980-1982-ல் குங்குமம் வார இதழிலும், 1985-1987-ல் குமுதம் வார இதழிலும் பின்னர் 1989-1990-ல் ஆனந்த விகடன் வார இதழிலும் பணியாற்றினார். நக்கீரன் இதழில் அரசியல்கட்டுரைகளும், மொழியாக்கங்களும் செய்துவந்தார். பிரபஞ்சன் பொதுவாசிப்புக்குரிய பெரிய இதழ்களில் பணிக்குச்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
ஒரு உறவு ஒரு பிரிவு
இரா.துரைமாணிக்கம்
September 30, 2026
சரசுவின் சௌந்தர்ய லஹரி
கவிஞர் கண்ணதாசன்
September 30, 2026
உறவுகள்
முல்லை அமுதன்
September 27, 2026
