பிறை
கதையாசிரியர்: பிரபஞ்சன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: September 19, 2026
பார்வையிட்டோர்: 79
(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திண்னை ஓரம் படுக்கையையும், பெட்டியையும், வைத்து விட்டு, கையை உதறிக் கொண்டேன். தோள் வலித்தது. வீடு வத்திப் பெட்டி மாதிரி அடக்கமாய் இருந்தது. வீட்டுக்கு நேர் வகிடு எடுத்த மாதிரி படி. இப்புறமும் அப்புறமும் கொஞ்சம் திண்ணை. திண்ணை யையே கதவு வைத்துத் தடுத்து அறையாக்கியிருந்தார்கள். இடது புற அறைக் கதவு திறந்து கொண்டு ஒரு மாமி ‘யாரது’ என்றாள் தலையை மட்டும் நீட்டிக்கொண்டு.
‘நான் வைத்தியநாதன். இங்கு ரூம் இருக்குன்னு கைலாச மாமா சொன்னார்…’
‘ஆங்…கரந்தட்டாங்குடி காலேஜ்ல படிக்கறவா நீங்க தானா…’
‘ஆமா…’
மாமி வெளியே வந்தாள். தூங்கி எழுந்தாற்போல கசங்கலான தோற்றம். தலை கலைந்திருந்தது. நெற்றி வெறிச்சென்றிருந்தது.
‘காலமேயே அவர் சொல்லிண்டிருந்தார். நீங்க வருவேள்னு, என்று சொல்லிவிட்டு உட்பக்கம் பார்த்து, ‘பாகீ’ என்று குரல் கொடுத்தாள்.
குரலுக்குரியவள் வெளியே வந்தாள். ஜடையைப் பின்னிக் கொண்டிந்தவள் ரிப்பனை முடி போட்டவாறு வந்தாள். அசர வைக்கிற வளர்ச்சி. ஆல விழுது மாதிரி வாசலை அடைத்துக் கொண்டு நின்றாள். விளக்கிய பித்தளைக் குடம் மாதிரி நிறம்.
ஒரே பார்வையில் என்னை அளந்துவிட்டு, மாமியைப் பார்த்தாள்.
‘அந்த ரூம் சாவியை எடுத்துண்டு வா..’ என்றாள் மாமி. அவள் திரும்பிப் போனாள். காலில் கொலுசு தெரிந்தது. அதிர்ந்தது. நான் என் இருப்பை அந்தக் கணம் மறந்தது உண்மை.
‘தனியாத்தானே தங்கப் போறேள்.’
‘ஆமாம்.’
‘முந்தி இருந்த தடிப் பசங்க மாதிரி யாரையும் கூட்டி வச்சுண்டு கூத்து அடிக்கப் போறேள்?”
‘சேச்சே’
‘சமைப்பேளா?’
‘இனிமேதான் கத்துக்கணும்.’
‘செய்ங்கோ-ஆனா ஒரு கண்டிஷன். மாம்சம் மட்டும் சமைக்கப்படாது.’
‘சேச்சே.’
‘பீடி சுருட்டெல்லாம் பிடிப்பேளா?’
‘எப்பவாவது சிகரெட்…’
‘எனக்கு ஆசாரமா இருக்கனும். அதான் சொன்னேன்’ பாகி சாவியை எடுத்து வந்து திண்ணையின் மேல் ‘ணங்’கென்று வைத்தாள். நான் பக்கத்தில்தான் நின்றேன்.
சாவியை எடுத்துப் போய் கதவைத் திறந்தேன். கோட்டைக் கதவு மாதிரி பெரிய கதவு. நரநரவென்று மென்று கொண்டே திறந்தது. குப்பென்று ஒரு புழுக்கை வாசனை. ஜன்னல் இல்லை. கதவு திறந்தே இருப்பது கட்டாயம்.
படுக்கையால் தூசியைத் தட்டி உட்கார்ந்தேன்.
‘கொஞ்சம் தண்ணி வேணுமே?’ என்றேன்.
‘பா…. தூத்தம் கொண்டாடி…’
பாகீ கொலுசு சப்திக்க உள்ளே போய். மீண்டும் சப்திக்க வெளியே வந்தாள். செம்பையும், அதன் வாயில் கவிழ்த்த டம்ளரை யும் திண்ணை விளிம்பில் வைத்தாள்.
நான் டம்ளரை எடுத்தேன்.
“தூக்கிக் குடிங்கோ…” என்றாள் மாமி.
சட்டென்று மாமி அழகே இல்லாதவள் போலும் சூனியக்காரி யின் கையில் அகப்பட்ட தேவலோகத்துக் குழந்தை மாதிரி பாகீயை நான் கற்பித்துக் கொண்டேன்.
தண்ணீர் குடித்து டம்ளரைக் கீழே நான் வைத்ததும், பாகீ உள்ளே போய் ஒரு கிண்ணியில் தண்ணீர் கொண்டு வந்து, நான் குடித்துவிட்டு வைத்த செம்பின் மேலும், டம்ளரின் மேலும் நீர் தெளித்த பிறகே, அவற்றை உள்ளே எடுத்துச் சென்றாள்.
மாமி அறையில் இருந்தவாறே கூவினாள். ‘புளியைக் கரைச்சு வச்சுட்டேளோல்லியோ?’
‘வச்சாச்சு…’ அடுப்பங்கரையிலிருந்து மாமா கூவினார்.
வாணலியில் ஜலம் விட்டேளா?”
‘ஆச்சு…’
‘உப்பு, மிளகாய் பொடியை வாணலியில் போடுங்கோ…’
‘….’
‘என்ன போட்டுட்டேளா… சத்தத்தையே காணமே?’
‘மிளகாப் பொடிய எந்த டின்னிலேடி வச்சுருக்கே?’
‘அதான்னா…அந்த வெள்ளை மூடிப்போட்ட டின்னிலேதான்..’
‘எல்லா டின்னுக்கும்னா வெள்ளை மூடி போட்டிருக்கு…’
‘நன்னா பாருங்கன்னா…’
‘நன்னாத்தாண்டி பாக்கிறேன் சனியனே’
‘ஏன்னா… ஒவ்வொரு மாசமும்தான் சாம்பார் வக்கிறேள்… அப்பப்பயா மறந்துடும்?’
மாமாவிடமிருந்து பதில் இல்லை. டமார் என்று ஒரு பாத்திரம் விழுந்து உருளுகிற சப்தம் கேட்டது.
மாமி தூரமாகி, எதிர் அறையில் எனக்கு முன் உக்காருகிற அந்த மூன்று நாளும் எனக்கு இது ஒரு பொழுது போக்கு. பாகிக்கு நெல் மரத்தில் காய்ப்பதாக இருக்கும் போலும். பசிக்கிறபோது சோறு இருக்க வேண்டும். அன்றியும் காலேஜ், ‘டைப்’, தோழிகள் என்று அவளுக்கு எத்தனையோ ஜோலி!
அந்த மூன்று நாளும், மாமிக்கு நான்தான் பேச்சுத் துணை, மாமி ஒருநாள் சொன்னாள்.
‘நான் கட்டிண்டு வந்த புதுசுல, என்னமா பட்டிருக்கேன் தெரியுமோ? மூணு நாளும் என் மாமியா என்னைத் தோட்டத்துல உக்காத்தி வச்சுடுவா. தோட்டம்னா சொன்னேன்? காடுன்னா அது! செடி கொடி, மரம் மட்டை, இண்டு இடுக்குன்னு பயம்மா இருக்கும். ராவாச்சுன்னா ஒரு வாட்டி பாருங்கோ… பாம்பே வந்துடுத்து.’
‘பாம்பா?’
‘ஆமான்னா, இம்மாம் பெரிய பாம்பு.’
மாமி கைகளை விரித்தபோது சுவரில் கையை இடித்துக் கொண்டாள்.
காற்றுக்காக மாமாவும் மாமியும் திண்ணைக்கு வந்தார்கள். ‘சமைஞ்ச பொண்ணாட்டம் அறையிலேயே ஏன் இருக்கேள்…. இப்படி வாங்கோ…’ என்று மாமா சொன்னதால் நானும் அவர் களுடன் சேர்ந்து கொண்டேன். தேங்காக் கீற்று மாதிரி நிலாப்பிறை, நீந்தி நீந்தி வந்தது காற்று.
பேச்சூடே மாமா சொன்னார்.
அவர் ஆபீசுக்கு மாவட்ட அளவிலேயே பெரிய அதிகாரி புதுசாய் ஒருத்தன் வந்திருக்கிறானாம். வயசு இருபத்தேழுதானாம். கல்யாணம் கூட ஆகவில்லையாம்.
‘ஓட்டல் ரூம் சௌகர்யப் படலை. நல்ல வீடோ, அறையோ பாத்துக் குடுங்கோன்னு என்னண்டை சொன்னான். நம்மாத்து மாடி ரூம் சும்மாதாண்டி இருக்கு? வாங்கோன்னுட்டேன்…’
‘ஏன்னா… அவாள்ளாம் என்ன ஜாதியோ என்ன எழவோ? கண்ட கண்டவாளையெல்லாம் ஆத்துக்கு அழைச்சுண்டு வந்துட றேள்…”
எனக்குச் சுருக்கென்றது. மாமா புரிந்துகொண்டார்.
‘அசடே.. ஜாதி என்னடி ஜாதி? பெரிய மனுஷன், ஆபீசர். நம்ம ஆத்துல தங்குறார்னா நமக்குன்னா லாபம்!’
மாமி மறுப்பு சொல்லவில்லை.
டேவிட் முத்தையா மாடிக்கு வந்து தங்கின நாலாம் நாள்தான் எனக்கும் அவருக்கும் பரிச்சயம் ஏற்பட்டது. என்னைவிடக் கூடுதல் வயசு அவருக்கு. ஏனோ நொறுங்கிப் போயிருந்தார். ஒட்டுதலாகவும் பேசினார்.
‘மூணு நாளா ஐயர் வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டு நாக்கு செத்துப் போச்சி. நல்ல நான் வெஜ் ஓட்டலுக்குப் போவமா?’ என்றார். அழைத்துப் போனேன். நன்றாகவே சாப்பிட்டார். திரும்பி வரும்போது சொன்னேன்.
‘மாமி ஓட்டல்ல சாப்பிட்டதுக்காகக் கோச்சுக்கப் போறாள்.’
சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு டேவிட் சொன்னார்.
‘என் உத்தியோகத்துக்குத்தான், வைத்தியநாதன், இந்த மரியாதை…’ சில நிமிஷங்கள் நடந்த பிறகு மீண்டும் சொன்னார்.
‘இன்னும் எங்க கிராமத்துல, நான் செருப்பைக் கையில் எடுத்துக்கினுதான் நடக்க வேண்டியிருக்கு… இல்லேன்னா, ‘அவ் வளவு ரப்பாடா, தாழ்ந்த சாதிப்பயலே’ன்னு மரத்தில் கட்டி வச்சு அடிப்பானுங்க…’
‘இன்னிக்குமா?’
‘இன்னிக்குந்தான்.’
புத்தகம் எடுத்துப் போக என் அறைக்கு முத்தையா வருவார். நானும் பேசிக் கொண்டிருப்பதற்காக அவர் அறைக்குப் போவேன். மாமியே அறையைப் பெருக்கிவிட வருவாள். சாப்பாடு, கூஜாவில் தண்ணீர் வைப்பது போன்ற காரியங்களுக்காக மாமியே மாடிக்கு வந்து போய்க் கொண்டிருந்தாள். பிறகு மாடிப்படி ஏறச் சிரமமாக இருக்கிறது என்று சொல்லி பாகியை அனுப்பி வைத்தாள். பாகீ சிரித்தால் ரொம்ப அழகாக இருக்கும். பாகீ டேவிட்டோடு சிரித்துப் பேசுவதை நான் பார்த்திருக்கிறேன். நாங்கள் மூன்று பேரும் இருக்கும் நேரங்களில்கூட பாகீ என்னிடம் பேசுவதைத் தவிர்த்தாள். பாகீயே அழகாகச் சாப்பாடு பரிமாறுவாள். மொட்டை மாடியில், கோயிலில், பூங்காவில் என அவர்கள் நட்பு வளர்ந்து கொண்டி ருந்தது. எனக்கு மாலைகளில் திண்ணையும், எப்பவும் பிறையும் இருக்கவே செய்தது. என்ன காரணமோ நான் வானத்தைப் பார்க்கும் போதெல்லாம் பிறையாகவே இருந்தது.
முத்தையா வந்த பிறகு வீடே புதுமுகம் காட்டியது. நாற்காலி களில் பாகீ போட்ட பூத்தையல், சுவரில் நல்வருகை, அப்புறம் மான் மயில் என்ற பலவித எம்பிராய்டரிகள். வீட்டுக்குள் முத்தையா சிகரெட் பிடித்தார். தண்ணீரைத் தூக்கிக் குடித்து நான் பார்த்த தில்லை எனினும் மாமி ஆட்சேபிக்கவில்லை. ‘ஓர் ஆபீஸர்ட்ட போய் இதெல்லாம் சொல்றதாவது… டம்ளரை வாயில் வைச்சுக் குடிச்சா என்ன குடியா முழுகிடும்?’ என்று ஒருநாள் என்னிடம் நியாயம் கேட்டாள். மாமிகூட எப்போது பார்த்தாலும் புது உடை களோடு, சின்னப்பெண் மாதிரி, பாகீக்கு ஈடாகச் சிரித்துப் பேசி முத்தையாவை மகிழ்விக்க முயன்றாள். முத்தையா பாகீயைக் காதலிக்கிறார் என்றும் அவளையே திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்றும் நினைத்திருந்தேன்.
அவ்வாறெல்லாம் நேரவில்லை.
ஒருநாள் இரவு சாப்பிட்டுவிட்டுத் திரும்பும்போது முத்தையா சொன்னார்.
‘வேறு வீடு பாத்துகிட்டு இருக்கேன். கிடைச்சுடும். கிடைச் சுட்டா அம்மாவையும் அழைச்சுக்கிட்டு வந்துடலாம்னு இருக்கேன்.’
‘ஐயரோட அருமையான ‘கெஸ்டா’ இருக்கீங்க..
‘அதான் சங்கடமா இருக்கு… விருந்தாளி மாதிரி நடத்துறாங்க… விருந்தாளின்னு நினைக்கறப்பவே, வீடு ஒட்டாமப் போயிடுது… நாம தனின்னு நெனைக்கத் தோனுது…’ என்றார்.
முத்தையா அந்த மாசத்துக் கடைசியில் கீழவீதிப் பக்கம் வேறு வீடு பார்த்துக்கொண்டு போனார். நாங்கள் வெட்டாற்றங்கரைப் படியில் முதல் நாள் மாலை தொடங்கி பத்துப் பதினொரு மணிவரை பேசிக் கொண்டிருந்தோம். என் சந்தேகங்கள் எல்லாம் அப்போதுதான் தீர்ந்தன.
‘முத்தையா சார்… நீங்க பாகீயைக் காதலிக்கலையா?’
‘சேச்சே…’ அவர் சிரித்துக் கொண்டார். பிறகு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக்கொண்டு சொன்னார்.
‘நான் அவளைக் காதலிக்கல்லே. அவளும் என்னைக் காதலிக்கிறதா நினைக்கல்ல. நாங்க பேசிக்கிட்டிருந்தோம். அவ ஓர் அழகான பெண்ணா இருக்கிறதால, நான் சந்தோஷமா ஃபீல் பண்ணேன்னு நினைக்கிறேன். பாகீக்கு முதல் முதலா ஓர் ஆணோட நெருங்கிப் பேசற அனுபவம் சந்தோஷத்தைக் கொடுத்திருக்கும். சும்மா பரஸ்பரம் அது ஒரு கொடுக்கல் வாங்கல். அவ்வளவுதான். இதையே ஆதாரமா வச்சு அவளை நான் கட்டிக்கிட்டேன்னா, கொஞ்ச நாளைக்குப் பின்னால நாங்க ஒருத்தருக்கொருத்தர் சலிச்சுப் போயிடுவோம்.’
‘கோவிச்சுக்காதீங்க… உங்களுக்குத் தாழ்வு மனப்பான்மைன்னு நினைக்கிறேன்…’
முத்தையா சிரிப்பு அழகாக இருக்கும். இரண்டு வரிசையின் ஒழுங்கான எல்லாப் பற்களும் தெரியும்.
‘அப்படி இல்ல! ஒரேயடியா தாண்டிக் குதிச்சு எனக்குக் காம்ப்ளக்ஸ் இல்லேன்னு நிரூபிக்கறதே, ஒரு வகையில் காம்ப்ளக்ஸ் என்று தோனுது. நான் பாகீயை கட்டிக் கிட்டேன்னா, ஊருல களை எடுத்துக்கிட்டு பிழைக்கிற என் ஆத்தாகிட்டேந்தும், கூலியா இருக்கிற என் தம்பி கிட்டேந்தும் நான் வெட்டிக்க வேண்டியிருக்கும். புதுசா வந்த இந்த வாழ்வுக்காக, இதைக் காப்பாத்திக்க என்னை நானே வேறு ஆள்னு மத்தவங்களுக்குக் காட்ட வேண்டியிருக்கும்.. அப்படி யெல்லாம் என்னால் இருக்க முடியாது.. என்னையும் பாகீயையும் சேத்து வைக்கிற, உடம்பைத் தவிர வேற ஒன்றும் வேணும்… நான் யோசிச்சுப் பார்த்துட்டேன். அப்படி ஒன்றும் இல்ல..’
நான் தடுமாறினேன்.
காதலுக்கு அர்த்தமே இல்லையோ என்று தோன்றியது. முத்தையா கேட்டார்.
‘எனக்கு முன்னால நீங்க மாமா வீட்டுக்குக் குடி வந்து இருக் கீங்க… நீங்க என்னைவிடப் புத்திசாலி… என்னைவிட நல்லாயி ருக்கீங்க… பாகீ ஏன் உங்களைத் தவிர்க்கிறா? நீங்க வெறும் ஸ்டூடண்ட். மாமி, பாகீயை ஏன் என்கிட்டே தள்ளி விடறா? நான் ஒரு கெஜட்டட் ஆபீசர். அதாவது நான் சம்பாதிக்கிறவன். புரியுதா? ஓர் ஆணும் பெண்ணும், அவங்க ஆண், பெண்ணுங்கறத்துக்காகவே இணையறதுதான்உறவு. ஒருத்தர் துணை ஒருத்தருக்கு அவசியம்னு புரிஞ்சுக்கிறதுதான் காதல்… நம்ம தலைமுறையில் அது சாத்திய மில்லே… உங்க மனசுக்குள்ள உங்க யோக்யதையைப் பார்க்கிற இடத்துல காதலுக்கு இடமே இல்லை…’
அன்றைக்கும்கூட அந்தப் பிறைதான் காட்சி அளித்தது. மறுநாள் முத்தையா புறப்பட்டுப் போனார். பாகீ அழுதாள் என்பது உண்மைதான். நான் மாமி வீட்டில் அடுத்த ஆண்டும் இருந்தேன். ஆண்டுக் கடைசியில் பாகீக்குக் கல்யாணம் நடந்தது. எந்த விதமான குறுகுறுப்பும் இல்லாமல் நான் கல்யாணத்துக்குப் போயிருந்தேன். முத்தையாவும் வந்திருந்தார்.
– 1990
– பிரபஞ்சன் சிறுகதைகள், முதற் பதிப்பு: 2004, கவிதா பப்ளிகேஷன், சென்னை.
![]() |
பிரபஞ்சன் (ஏப்ரல் 27, 1945 - டிசம்பர் 21, 2018) தமிழ் எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். வார இதழ்களில் பணியாற்றிய இதழாளர். அரசியல் கட்டுரையாளர். தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது 1995-ம் ஆண்டு பெற்றவர். பிரபஞ்சன் 1980-1982-ல் குங்குமம் வார இதழிலும், 1985-1987-ல் குமுதம் வார இதழிலும் பின்னர் 1989-1990-ல் ஆனந்த விகடன் வார இதழிலும் பணியாற்றினார். நக்கீரன் இதழில் அரசியல்கட்டுரைகளும், மொழியாக்கங்களும் செய்துவந்தார். பிரபஞ்சன் பொதுவாசிப்புக்குரிய பெரிய இதழ்களில் பணிக்குச்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
கால ஓட்டம்
சாரல் நாடன்
September 30, 2026
உயிர் மல்லாரி
அனந்த் ரவி
September 30, 2026
இதுதான் ட்ரெண்ட்!
இரா.கலைச்செல்வி
September 30, 2026
