தந்தையும் மகனும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 19, 2026
பார்வையிட்டோர்: 94 
வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்

(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நீங்கள் செய்திப் பத்திரிகை படிக்கிறவரா? படிக்கிறவர் என்றால் உங்களுக்குப் பெருவழுதியைத் தெரிந்திருக்குமே. பெருவழுதி எதிர்க்கட்சிக்காரர்களுக்குவிட்ட சவால்; வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்குப் பெருவழுதி துணி மற்றும் சோற்றுப் பொட்டலங்கள் வழங்கியது; இந்தி எவ்வுருவில் அன்னை நாட்டில் நுழைந்தாலும், உயிரையும் கொடுத்து அதைத் தடுத்து நிறுத்துவேன் என்று அறிக்கை வெளியிட்டுள்ள பெருவழுதி… 

ஞாபகம் வந்துவிட்டதா? 

அந்தப் பெருவழுதியைத்தான் சொல்கிறேன். அவருடைய கதைதான் இது. 

நான் தமிழ்க் கல்லூரியில் சேர்ந்த புதிது. விடுதி பிடிக்காமல், கல்லூரிக்கு எதிரிலேயே இருந்த குதிரைக் கட்டித் தெருவில் ஒரு வீட்டு மாடியில் குடியிருந்தேன். தெருவை ஒட்டி ஒரு சின்ன அறை. அதில் மூன்று சைக்கிள், ஒரு சின்ன சைக்கிள் வைத்து வாடகை மிதிவண்டி நிலையம் நடத்திக் கொண்டிருந்தான் கோபாலு. 

பெருவழுதியின் பூர்வஜென்மத்துப் பெயர்தான் கோபாலு. கடைக்குப் பெயர்ப்பலகை உண்டு. பெயர்ப்பலகை கடையைவிடப் பெரியதாக இருக்கும். “அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி மிதிவண்டி நிலையம். உரிமை பெ.தி. பெருவழுதி” என்று எழுத்து ஒவ்வொன்றும் ஒரு ஜாண் இருக்கும், பெயர்ப்பலகையில்… 

என்னைக் கோபாலிடம் ஈர்த்த அம்சம் அவன் கடைக்கு வாங்கிப் போடும் பத்திரிகைகள்தான். விடுதலை, மாலை மணி, முரசொலி என்று எல்லாப் பத்திரிகைகளும் அவன் வரவழைப்பான். இவற்றைப் படிக்க என்றே அவன் கடைக்கு நான் போவது வழக்கமாயிற்று. 

எனக்கும் கோபாலுக்கும் இருந்த சினேகிதம் ரொம்ப உண்மையானது. கௌரவமானது. தமிழின் மேல் அவனுக்கிருந்த ஈடுபாடும் ரொம்ப உண்மையானது. தமிழ் படிக்கிறவன் என்பதால் அவனுக்கு என்மேல் அன்பு. வித்தியாசமானவன் என்பதால் அவனிடம் எனக்கு ஈடுபாடு. பத்திரிகைகளில் வெளிவரும் பிரமுகர் களின் சொற்பொழிவுகளைப் படித்தே தன் அறிவை வளர்த்துக் கொண்டிருந்தான் கோபாலு. அதோடு சங்க இலங்கியங்கள் சிலவும் வாங்கி வைத்திருந்தான். பாட்டுக்களைப் பிரித்து பொருள் அறிந்து படிக்க அவனுக்குச் சொல்லிக் கொடுத்தேன். அதனால் என்னை அவனுடைய ஆசிரியனாகவே கருதி வந்தான். 

காலை தூங்கி எழுந்தவுடனே கீழே இறங்கி அவன் கடைக்குத் தான் வருவேன். கோபாலும் கடையைத் திறந்து வைத்துவிட்டு எனக்காகக் காத்திருப்பான். இரண்டு பேரும் போய் டீ குடித்து விட்டுத் திரும்புவோம். நான் சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு வந்திருக்கும் காலைப் பத்திரிகைகளைப் படிப்பேன். அவன் வெள்ளை ஜிப்பாவையும் வேட்டியையும் அவிழ்த்து வைத்து விட்டு, கைலி பனியனோடு சைக்கிள்களைத் துடைக்கத் தொடங்குவான். 

பத்திரிகைகளைப் படித்து முடித்து மாடிக்கு வந்த உடனேயே திப்பிலியார் என்னைத் தேடி வருவார். கோபாலுவின் தந்தை, விளம்பரப்பலகையில் இடம் பெற்றுள்ள பெ.தி.க்கு விளக்கம், பெருமானேரி திப்பிலியார். 

அவர்தான் வந்தார். கோபாலுவிடம் எனக்குப் பிடிக்காத, புரிந்துகொள்ள முடியாத ஒன்று இதுதான். விருந்தோம்பும் குணத்தில் அவன் சிறந்தவன். கடைக்கு வருகிற அத்தனை பேருக்கும் டீ வாங்கித் தருவான். சாயங்காலங்களில் ராமையர் கிளப்பில் டிபன் கூட வாங்கித் தருவான். பெற்ற அப்பனை வயசான காலத்தில் டீக்குக்கூட பிறர் கையை எதிர்பார்த்து நிற்க வைத்தான். 

திப்பிலியார் நாலணாவை வாங்கிக்கொண்டு நகர்ந்தார். ‘இருங்க…’ என்றேன். அவர் நின்றார். இளைத்துப் போன உருவம். அந்தக் காலத்தில் உடலில் பலமும், கையில் வசதியும் இருந்த காலத்தில் போஷித்து வளர்க்கப்பட்ட பெரிய சுருண்ட மீசை மட்டும், திப்பிலியாரின் அந்தக் காலத்துப் பெருமையின் மிச்சமாக இருந்தது. துண்டு மட்டும் உடம்பில். அழுக்கான நாலுமுழ வேட்டி இடையில். ஓடி ஆடித் தொழில் செய்யமாட்டாது உடம்பு தளர்ந்திருந்தது. வெட்கம் கலந்த முகத்தோடு சாய்வாகத்தான் என்னைப் பார்ப்பார். 

‘நேத்து ராத்திரி சாப்பிட்டீங்களா-‘ என்றேன். தலையைக் குனிந்து கொண்டு சும்மா நின்றிருந்தார். 

‘என்கிட்ட வந்திருக்கலாமே-‘ ஏறிட்டு என்னைப் பார்த்து, ‘சும்மா உங்களைத் தொந்தரவு பண்ண வேண்டாம்னுதான்-‘ என்றார். 

‘எனக்கு ஒரு தொந்தரவும் கிடையாது. அப்படி இனிமே நீங்க நினைக்க வேணாம். ஒன்னு ரெண்டு உங்களுக்குக் கொடுக்கிறதுல எனக்கொன்னும் குறைஞ்சிடாது.’ என்று சொல்லிவிட்டு ரெண்டு ரூபாய் கொடுத்தேன். வாங்கிக் கொண்டு போனார். 


அப்பனையும் பிள்ளையையும் சேர்த்து வைத்துவிட வேண்டும் என்று நான் முயற்சி செய்தேன். முதலில் அப்பாவைத் தொட்டேன். அவர் சொன்னார்- ‘தம்பி… என்னவோ எங்கேயோ போட்டுக் கிட்ட முடிச்சு அது. ரொம்பப் பழைய முடிச்சு. என் பகுதிக்குக் கொஞ்சமும், அவன் பகுதிக்குக் கொஞ்சமும், முடுச்சே சிடுக்காக் கிட்டோம். நீங்க அவிழ்க்கிறது கஷ்டம். அந்த முயற்சியில உங்க சினேகிதத்துக்குப் பழுது வந்துறக் கூடாது! 

திப்பிலியார் தனக்கு முன் இருந்த காப்பியை விழுங்கினார். நாங்கள் ராமையர் கிளப்பில் உட்கார்ந்திருந்தோம். 

‘இப்போ என்ன பண்ணிக்கிட்டிருக்கீங்க-‘ என்றேன். 

‘வீடு, நிலம் தரகு பண்ணிக்கிட்டிருக்கேன் தம்பி. வெள்ளையும் சள்ளையும் கொஞ்சம் வசதியுமா இருந்து இந்தத் தொழில் பண்ணா, நல்லாவே காசு பண்ணலாம். அழுக்குத் துண்டும், கரிவேஷ்டியுமா போய் நின்னா நம்ம வார்த்தையை மதிக்க மாட்டாங்க யாரும்… அஞ்சு கொடுக்கிற இடத்துல ரெண்டுதான் கையில் வரும். வயிறு நிறைய சாப்பிட்டுப்போனா, சாப்பாடு உபசாரம் கிடைக்கும். பட்டினியும் பசியுமா இருந்தா யாரும் சாப்பிட்டியான்னு கூடக் கேக்க மாட்டாங்க…’ 

தன் தொழில் சூழ்நிலையைச் சொல்லிக் கொண்டிருந்தவர். தொடர்ந்து சொன்னார். 

‘அது கெடக்கட்டும் தம்பி… கோபாலு எனக்கு மகனா இருக்கிறதுனால, அவன்தான் என் அந்திக் காலத்துல சோறு போடனும்னு என்ன நியதி சொல்லுங்க…? தென்னங்கன்றுக்கு தண்ணி பாய்ச்சறது இளநீ குடிக்கவா? அப்படி நினைச்சுக்கிட்டுத் தண்ணீ ஊத்தறதே தப்பு. குருத்தை வாட விடக் கூடாது. குருத்து வாடுனா, வாடற இடத்துல மனுஷங்க இல்லேன்ன அர்த்தம்…’ 

‘சரிங்க… பெத்த அப்பனுக்குச் சோறு போடறது பிள்ளைங்க கடமை இல்லியா…’ 

திப்பிலியார் தலையை அசைத்தார். ‘இல்லீங்க… அப்பன் பிள்ளைக்குச் சோறு போடறதுதான் கடமை. பச்சைக் குழந்தைக்கு அப்பன்தானே பொறுப்பு. வளந்துட்டா தள்ளாத காலத்துல புள்ளை அப்பனை ஆதரிக்கறது நன்றி உணர்ச்சிங்க… அது எல்லாருக்கும் இருந்தாகணும்னு கட்டாயம் இல்லீங்… அத என்னாட்டம் அப்பன் எதிர்பார்க்கிறது அசிங்கம் தம்பி…’ என்றார். 

காப்பியில் நனைந்த மீசையைத் துடைத்து மேலேற்றி விட்டுக் கொண்டார். திப்பிலியார் முகத்தில் மட்டும் என்னவோ, வறுமை கோடு கிழித்துச் சிறுமைப்படுத்தவில்லை. ஆச்சரியம்தான். வாழ்ந்து கெட்டவர்களின் முகத்தில் மட்டுமே தெரியும் வளமை திப்பிலியார் முகத்தில் இருந்தது. 

மறுநாள், அதே ராமையர் கிளப்பில் கோபாலுடன் பேசினேன். பஜ்ஜியும், ரவாதோசையும். சாப்பிட்டு முடியும் வரை நானேதான் பேசிக் கொண்டிருந்தேன். கோபாலு கேட்டுக்கொண்டிருந்தான். கடைசியாக ‘பச்… விடுங்க சார்-‘ என்றான். அவன் முகம் வருத்தத் தைக் காட்டியது. அந்தக் குரல், ‘இந்த விஷயத்தை நீங்கள் பேச வேண்டாமே…” என்பதாகவும் இருந்தது. ‘இது என் சொந்த விஷயம். நீங்கள் ஏன் தலையிடுகிறீங்கள்’ என்பதாகவும் இருந்தது. ஆக, முடுச்சி மிகச் சிக்கலாகத்தான் விழுந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். இந்த ஒரு விஷயத்தில் மட்டும், எனக்குக் கோபாலு வின் மேல் வருத்தம் இருக்கத்தான் செய்தது. நான் தஞ்சையில் இருந்த அந்த ஐந்து ஆண்டுகளில் அவன் வளர்ச்சி என்னை மிகவும் மகிழ்வடையச் செய்தது. 


நூறாண்டுப் பாரம்பரியம் உள்ள ஆளுங்கட்சிக்கு எதிர் அணியில் இருந்த ஒரு கட்சியின் தொண்டனாக வாழ்க்கையைத் தொடங்கினான் கோபாலு. குடியிருந்த தெருவிலும், தொழில் செய்த குதிரைகட்டித் தெரு பகுதியிலும் ஒரு ‘கட்சிக்காரனாக’ முதலில் அறியப்பட்டான். வசீகரமான முகம், இனிமையான வாய்ப்பேச்சு, ஒல்லியான நெடுநெடுவென வளர்ந்த மஞ்சள்நிற உடம்பு, கத்தரித்து விடப்பட்ட அரும்பு மீசை, கலைஞர் கருணாநிதி மாதிரி நேர்வகிடு, உள்பனியன் தெரிகிற மாதிரி மெல்லிய வெள்ளை ஜிப்பா, கட்சிக் கொடியை நினைவு படுத்தும் வெள்ளைக் கைத்தறிக் கரை வேட்டி, இவையெல்லாம் சேர்ந்து அவனை மற்றவரிடமிருந்து தனிப்படுத்தின. எல்லாவற்றிலும் மேலாக அவனது மேடைப் பேச்சுத் திறம் பல நண்பர்களையும், மாவட்ட அளவில் தலைவராய் இருந்த ஒரு பிரமுகரின் நட்பையும் அவனுக்குச் சம்பாதித்துக் கொடுத்தன. நாங்கள் இருந்த பகுதியில், அவன் சார்ந்திருந்தக் கட்சிக் கூட்டங்கள் எது நடந்தாலும் அக்கூட்டங்களில் கட்சித் தலைவர் மேடைக்கு வருவதற்கு முன்பு கூட்டம் சேர்க்க, அல்லது சேர்ந்த கூட்டத்தைத் தக்க வைக்கக் கோபாலுவைப் பேசச் செய்தார்கள். கோபாலுவும் வாய்ப்பை மிக ஒழுங்காகப் பயன்படுத்திக் கொண்டான். 

‘அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி மிதிவண்டி’ நிலையத்தில், மாலைக் காலங்களில் ஓர் இளைஞர் கூட்டம் மொய்க்கத் தொடங் கியது. எல்லாருமே கோபாலுவை ‘அண்ணே… அண்ணே’ என்று அழைக்கத் தொடங்கினார்கள். கடைத் தெருவில் பரம்பரையாக கடை வைத்து நடத்தும் செட்டியார்கள். பிள்ளைமார்கள் கோபாலு வைப் பார்க்க நேர்ந்தால் எழுந்து நின்று வணக்கம் செய்தார்கள். கோபாலுவின் வளர்ந்து வரும் செல்வாக்கை நேரில் பார்க்கும். சந்தர்ப்பம் ஏற்பட்டது. 

கடை வீதியில் வெ.ப.குழ, கதிரேசன் செட்டியார் முக்கியப் புள்ளி. கதர்ச்சட்டைக்காரர். தேசியமும் முதலாளியமும் ஒன்று சேர்ந்த மனிதர். லட்சங்களில் வரவு செலவு பண்ணக் கூடியவர். அவர் கடையில், வேலை செய்த பையனை என்னவோ காரணம் சொல்லி லாக்அப்பில் அடைத்துவிட்டார்கள். செட்டியாரே போலீஸ் நிலையத்திற்குப் போயிருந்தால் காரியம் முடிந்திருக்கும். அவரோ போலீஸ் ஸ்டேஷன் படியை மிதிப்பது தேவடியாள் வீட்டுக்குப் போவதைப்போல என்று கருதிக் கூச்சப்பட்டுக் கோபாலுவிடம் வந்தார். கோபாலுவுக்கே உதப்பல்தான். தனக்கு அந்த இடத்திலும் செல்வாக்கு இருக்கக்கூடும் என்று அவன் எதிர் பார்க்கவில்லை. என்னையும் துணைக்குக் கூப்பிட்டான். நானும் உடன் போனேன். 

விஷயம் ரொம்பச் சின்னதுதான். ஏட்டு சுப்பையா பனை வெல்லம் கேட்டிருக்கிறான். செட்டியார் கடையில் இருக்கிற நேரத்தில், ஏட்டு மாதிரி ஊர்ச் சர்வாதிகாரிகளிடம் வாங்காமலே சரக்குப் போடுவார். பையன் இளவட்டம்தானே. ‘காசு கொடு’ என்று கேட்டிருக்கிறான். பனைவெல்லத்துக்கு காசு கேட்டது, ஏதோ கெட்டவார்த்தைச் சொல்லித் திட்டியதுபோல இருந்திருக்கும் போலும் ஏட்டுவுக்கு. பையன் ரெண்டாவது ஆட்டம் சினிமாவிட்டு திரும்புகிற நேரத்தில் மடக்கி, ‘சந்தேகக்கேஸ்’ போட்டு லாக்அப்பில் அடைத்துவிட்டார். 

நாங்கள் போகும்போது ஏட்டுதான் ஆசனத்தில் அமர்ந்தி ருந்தார். கோபாலைக் கண்டதும் எழுந்து சல்யூட் அடித்து உட்காரச் சொல்லி உபசரித்தார். கோபால் என்னை அவருக்கு அறிமுகப் படுத்தினான். நான் மாணவன் என்பதால், என்னை அவ்வளவாக அவர் கண்டு கொள்ளவில்லை. ஒரு போலீஸ்காரனை அனுப்பி டீ வாங்கிவரச் சொன்னார். ஸ்பெஷல் டீதான். 

‘இம்மாந்தூரம் வந்திருக்கீங்க-‘ என்றார் ஏட்டு. 

‘ஒண்ணுமில்லே- நம்ம செட்டியார் கடைப் பையனை லாக்அப்புல போட்டுட்டீங்களாம்… செட்டியார் ரொம்புப் பதறிப்பூட்டாரு… அதான்…’ என்றான் கோபாலு. 

இதா… பாருங்க கோபால் சார்… நாமெல்லாம் அண்ணன் தம்பியா ஒருதாய்… வயிற்றுப் புள்ளையா பழகிக்கிட்டிருக்கோம்… இந்தப் பய… நேத்து முளைச்ச பய… என்னடான்னா, பனை வெல்லத்துக்குக் காசு கேக்கறான்… என்கிட்டே காசா இல்லே… நாமவெல்லாம் காசு கொடுத்துப் பொருள் வாங்கினா அப்புறம் என்னா மரியாதை இருக்கு சார்…” 

‘வாஸ்தவம்…’ என்றான் கோபாலு. 

‘பயல கொஞ்சம் பயம்காட்டி வைக்கணும்னுதான் கொண் டாந்து உள்ளே தள்ளி வச்சிருக்கேன்… வரவர காக்கிச் சட்டைக் காரன்னா மரியாதையே இல்லாமே பூட்ச்சு சார்…” 

‘சரி… நான் புத்திமதி சொல்லி ஒழுங்கு பண்றேன்… அனுப்பி வைங்க சார்…’ 

‘நானே அனுப்பிடறதாதான் இருந்தேன்… நீங்களும் வந்திட் டீங்க…’ என்ற ஏட்டு, ஒரு கான்ஸ்டேபிளைக் கூப்பிட்டு பையனை ‘இட்டா’ என்றார். 

போலீஸ்காரன் பையனை அழைத்து வந்தான். பையன் முகம் கிலி பிடித்துப் போயிருந்தது. ரொம்பப் பயந்திருந்தான். 

‘இனிமேலயாவது யார் யார்கிட்ட எப்படி நடந்துக்கனும்னு ஓர் அத்து இருக்கட்டும், தெரிஞ்சுதா…’ என்றார் ஏட்டு. 

பையன் தலையை ஆட்டினான். கோபாலு பாக்கெட்டிலிருந்து ஒரு பத்து ரூபாயை எடுத்து ஏட்டிடம் கொடுத்தான். ‘காபி செலவுக்கு வச்சுக்குங்க…’ என்றான். 

‘இருக்கட்டும்… பணமா பெரிசு மனசுல மரியாதை இருக்க னும் – பெரிய மனுஷன் நீங்க – படியேறி நம்மகிட்டே வந்திட் டீங்க – நாளைக்கு எம்.எல்.ஏ. மந்திரின்னு வரப்போறவுங்க நீங்க அதையெல்லாம் அனுசரிச்சு நடந்துக் கிட்டாதானே அழகு’ என்று சொல்லிக் கொண்டு பணத்தை வாங்கிக் கொண்டார்… 

செட்டியாருக்கோ சந்தோஷம் தாங்கவில்லை. 

‘எனக்குத் தெரியுமே… கோபாலு போனா காரியம் ஜெயம்னு. செலவு நெறைய ஆயிருக்குமே…’ 

‘ஏதோ கொஞ்சம் ஆச்சு…’ 

செட்டியார் நூறு ரூபாய் தாளை எடுத்துக் கொடுத்தார். கோபாலு வாங்கிப் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டான். 


ஆக, கோபாலு சரியான அரசியல்வாதியாக என் கண் முன்னால் வளர்ந்து கொண்டிருந்தான். எனக்கு வருத்தமும், மகிழ்ச்சியும். வருத்தம், அவனுக்கும் அவன் தந்தைக்கும் ஏற்பட்டுப் போயிருந்த மனஸ்தாபம்தான். மகிழ்ச்சி, பத்து ரூபாய் செலவு பண்ணிவிட்டு நூறு ரூபாய் பெறுகிறானே என்று. 

இந்த நேரத்தில் அந்த மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடக்கத் தொடங்கியது. கல்லூரி மாணவர்களாகிய நாங்கள் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்தைத் தார்பூசி அழித்தும், பெயர்ப் பலகையை உடைத்தும் சிறைக்குப் போனோம். கோபாலு விசுவரூபம் எடுத்தது இந்த யுக்த களத்தில்தாள். அவன் சார்ந்திருந்த கட்சித் தலைவரின் பூரண கவனம் அவன் மீது விழுந்து அவன் பிரகாசிக்கத் தொடங்கினான். இரண்டாம் வரிசைத் தலைவர்களில் ஒருவனாக ஓர் ஆறுமாத காலத்தில் கோபாலு வளர்ந்து நின்றான். மாணவர் அணித் தலைவர்களாக உருவான காளிமுத்து, ராஜா முகமது, ஜெயப்பிரகாசம், சீனிவாசன் போன்றோர்களின் மரியாதைக்குரியவனாகக் கோபாலு உருவாகி இருந்தான். கோபாலுவும் சிறைப்பட்டான். 

1966-இல் என் கல்லூரிப் படிப்பு முடிந்து, நான் என் சொந்த ஊர் திரும்பிவிட்டேன். உண்மையாகவே என்னைப் பிரிவதில் கோபாலுவுக்குத் துன்பம் இருந்தது. என்னைப் பரிபூரணமாக நேசித்தவர்களில் ஒருவன் அவன். ஊர் திரும்பிய பின், கோபாலுவை, அவ்வப்போது அவன் எழுதுகிற கடிதத்தின் மூலமும், பத்திரிகைகளின் மூலமும் பார்த்து வந்தேன். கோபாலுவின் அறிக்கைகள், பேச்சுகள், நடவடிக்கைகள் அனைத்தையும் காலைப் பத்திரிகைகள் இரண்டு காலத்திலும், மாலைப் பத்திரிகைகள் நான்கு காலத்திலும் பிரசுரித்து வந்தன. 


1967-இல் அந்த மாபெரும் அரசியல் மாற்றம் நேர்ந்தபோது, கோபாலு எம்.எல்.ஏ. ஆகவில்லை. (பின்னால் தான் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அவன் வெற்றி பெற்றான்) 67 தேர்தலில் சட்டமன்றத்துக்கு அபேட்சகர்களைத் தேர்ந்தெடுக்கும் முக்கியப் பொறுப்பில் செயல்பட்டான். தவிரவும், முதலமைச்சருக்கு அடுத்த தாய் இருந்த அமைச்சரின் சொந்த மாவட்டம் அது என்பதால், அந்த அமைச்சரின் அதிகாரப்பூர்வமான பிரதிநிதியாகவும், இலாகா இல்லாத மந்திரியாகவும் அவன் இயங்கினான். சிறப்பு என்ன வெனில், இந்தக் கட்டத்தில்கூட மாதத்துக்கு இரண்டு கடிதங்கள் எனக்கு அவன் எழுதிக்கொண்டிருந்தான். இந்தப் பரபரப்பில்தான் ஒருநாள் திப்பிலியார் மறைந்த செய்தி பத்திரிகைகளில் வெளிவந்தி ருந்தது. பிரபலஸ்தர்கள் பலர் அவர் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறிய செய்திகள் எல்லாம்கூட பத்திரிகைகளில் வெளிவந்திருந்தது. அநாதைபோல முதுமைக் காலத்தில் சிரமப்பட்டுச் சீரழிந்து இறந்தும் போன அந்த மனிதர் எனக்குள் அடிக்கடி வந்து போய்க் கொண்டி ருந்தார். 

1968-ஆம் ஆண்டின் மத்தியில், கோபாலிடமிருந்து, அழைப்பு வந்தது. பெருமான ஏரி திப்பிலியார் முதல் ஆண்டு நினைவு அழைப்பு. ஒரு ஜாண் நீளமும், ஒன்றரை ஜாண் அகலமும் ஆன அழைப்பு. மூன்று வண்ணத்தில் அச்சிடப்பட்ட இதழ். இருவண்ணக் கொடி பார்டரும், நடுவில் பங்கேற்போர் பட்டியலும். இரண்டாம் நிலையில் இருந்த ஓர் அமைச்சரும் ஏழெட்டு எம்.எல்.ஏக்களும் கலந்துகொள்கிறார்கள். அழைப்போடு ஒரு கடிதமும் இருந்தது. 

‘அன்பார்ந்த தோழரும் ஆசானும் ஆனவர்க்குத் தங்கள் நண்பரும், என் தந்தையாரும் ஆன திருமிகு. திப்பிலியார் அமரரான முதல் ஆண்டு நினைவாஞ்சலியில் தாங்கள் கலந்து கொள்ள வேண்டி விரும்பி அழைக்கிறேன். இச்சிறுவனின் அழைப்பைப் புறக்கணிக்க மாட்டீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்’ என்று எழுதியிருந்தான் கோபாலு என்கிற பெருவழுதி இப்படி எழுதவில்லையென்றாலும், திப்பிலியாருக்காக நான் கட்டாயம் அந்த நினைவாஞ்சலியில் கலந்து கொள்பவன்தான். 

போயிருந்தேன். பஸ் ஸ்டாண்டை ஒட்டி, முனிசிபல் தங்கும் விடுதி புதிதாக ஏற்பட்டிருந்தது. அதில் தங்கினேன். வீடு, கோபா லுக்கு இப்போது சீனிவாசபுரத்தில் ஏற்பட்டிருந்தது. குதிரைக் கட்டித் தெருவில் இருந்த அ.நெ.அ. மிதிவண்டி நிலையம், பெரிதாகி, கிட்டத் தட்ட ஐம்பது நல்ல சைக்கிள்களுடன், சைக்கிள் பகுதிகளை விற்பனை செய்யும் கடையாகவும் வளர்ந்திருந்தது. முதல் அமைச்ச ரோடு கோபாலு எடுத்துக்கொண்ட புகைப்படம் பெரிது படுத்தி மாட்டியிருந்தது. கடையில் நாலைந்து பையன்கள் இருந்தார்கள். ‘இருங்க சார்… அவங்க எட்டு மணிக்குத்தான் கடைப்பக்கம் வருவாங்க’ என்றான் ஒரு பையன். நான் உட்கார்ந்து காத்திருந்தேன். காப்பி வந்தது. குடித்தேன். பத்திரிகைகளைப் புரட்டிக் கொண்டி ருந்தேன். எட்டுமணி போலக் கொடி கட்டின காரில் கோபாலு வந்திறங்கினான். என்னைக் கண்டதும் பாய்ந்து வந்து கட்டித் தழுவிக் கொண்டான். 

‘எங்கே தங்கியிருக்கீங்க…’ என்றான். சொன்னேன். 

‘நான் தனியா பங்களாவே எடுத்துப் போட்டிருக்கேன். வசதியா தங்கியிருக்கலாமே’ என்றான். ‘பரவாயில்லை’ என்றேன். 

நான் வந்தது அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சித் தருவதாகச் சொன் னான். அமைச்சர் இந்த விழாவுக்காகவே வருவதாகச் சொன்னான். ஏகப்பட்ட ஆடுகள், கோழிகள், இந்த விழா விருந்துக்காகவே அடிக்கப்பட்டதாகச் சொன்னான். கும்பல் ரொம்ப அதிகமாகிவிடக் கூடும் என்று அஞ்சினான். அது விஷயமாகப் பாதுகாப்புக்காக டி.எஸ்.பி.யிடம் பேசிவிட்டு வருவதாகச் சொன்னான். 

அவன் சொன்னபடியே, பயங்கரக் கும்பலாகத்தான் இருந்தது. ஏராளமான போலீஸ்காரர்கள் காவலுக்கு வந்திருந்தார்கள். அமைச்சர் பேசும்போது, திப்பிலியாரின் அருங்குணங்களை எடுத்துரைத்தார். அவர் மறைந்தது சமூகத்துக்கு நஷ்டம்தான் என்று திட்டவட்டமாகச் சொன்னார். தந்தை மகன்பால் செலுத்திய அன்பையும், மகன் தந்தையின்பால் செலுத்துகிற மரியாதையையும் அவர் புகழ்ந்துரைத்தார். 

நான் புறப்படும்போது கோபாலு சொன்னான். ‘அப்பா’ கடைசிக் காலத்தில் கஷ்டப்பட்டுச் செத்தது மனசுக்குக் கஷ்டமாகத் தான் இருக்கு. நான் சவுகர்யமாக வாழறதைப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை பாருங்க அவருக்கு’ என்றான். 

நான் மறுத்தும் எனக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்து வண்டி கிளம்பும் வரை இருந்து, பிறகு விடை பெற்றான். வண்டி ஓடிக் கொண்டிருந்தது. தினம் காலையில் டீக் குடிக்க நாலணாவுக்காக என் அறைக்கு வந்த திப்பிலியார் என் மனதுக்குள் தோன்றிச் சிரித்தார். 

– 1985

– பிரபஞ்சன் சிறுகதைகள், முதற் பதிப்பு: 2004, கவிதா பப்ளிகேஷன், சென்னை.

பிரபஞ்சன் பிரபஞ்சன் (ஏப்ரல் 27, 1945 - டிசம்பர் 21, 2018) தமிழ் எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். வார இதழ்களில் பணியாற்றிய இதழாளர். அரசியல் கட்டுரையாளர். தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது 1995-ம் ஆண்டு பெற்றவர். பிரபஞ்சன் 1980-1982-ல் குங்குமம் வார இதழிலும், 1985-1987-ல் குமுதம் வார இதழிலும் பின்னர் 1989-1990-ல் ஆனந்த விகடன் வார இதழிலும் பணியாற்றினார். நக்கீரன் இதழில் அரசியல்கட்டுரைகளும், மொழியாக்கங்களும் செய்துவந்தார். பிரபஞ்சன் பொதுவாசிப்புக்குரிய பெரிய இதழ்களில் பணிக்குச்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *