படக்காட்சி பார்க்கப்போன விசாலாட்சியம்மை
கதையாசிரியர்: அல்வாயூர் மு.செல்லையா
தின/வார இதழ்: ஈழகேசரி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: September 11, 2026
பார்வையிட்டோர்: 117
(1938ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

புருஷன் விசுவநாதபிள்ளை செத்துப்போனார். பத்துப் பதினைந்து வருசங்களிருக்கும். வயது சுமார் அறுபதாயிற்று. புதினம் பூராயம் பார்க்க இவ அதிகம் போவதில்லை. குடியிருப்பதும் ஒரு கிராமத்தில். இவவின் பேரன் ஒரு பள்ளிக்கூடத்தில சட்டம்பியார். சம்பளம் இப்போது 35 ரூபா. இன்னும் மூன்று வருடத்தால் இருபது ரூபாவால் உயர்ந்து விடும். இவன் ஒருநாள் கிழவியைப் பார்த்து, “பெத்தாச்சி ஒருநாளைக்காயினும் நீ படக்காட்சி பார்க்கக்கூடாதா? இன்றைக்குப்போவோம் வாணை” என்று கேட்டான். “கிழவிக் கேன் படக்காட்சி, அல்லாமலும் நெடுநேரம் நித்திரை முழிக்க வும் ஏலாது எண்டாலும் அங்காலை இருக்கிற சிவகாமி அக்கை நேத்து போனவவாம். நல்ல கூத்தாம். படத்தில நிக்கிற ஆட்களும் வியளம் பேசுகினமாம்! கதிரையிலையாம் இருந்தவ! ஒட்டொட்டியில்லயாம்! நானும் வாறன் தம்பி! இக்கட்டுக்கு எத்தனை பணம் வேணும்” என்று கிழவி வினாவியது.
“ஒருரூபா வேணு” மென்றான் பேரன். “ஊ உ..பதினாறு பணமும் எட்டு வெள்ளையுமோ? எனக்கேன் ஒரு உருவால்க் கதிரை, நான் கிழவி. மக்கள் மருமக்கள் கதிரையிலே இருக்க நானும் அதில இருக்கிற மரசாதியில்லை. நிலத்திலே இருக்கிறேன் அல்லது கிழவிக்கேன் புது இக்கட்டு, பழசாகப்பார்த்து ஒண்டை விலை குறைய வாங்கு” என்றது கிழவி. பேரன் கிழவியோடு தலையுடைக்கமுடியாமையால் உனக்கு இருபத்தைந்து சதத்திற்கு வாங்குகிறேன் என்று பொய்யாகச் சொல்ல அவாவும் உடன் பட்டா. இருவரும் “பஸ்” ஏறிப்போய் ஐந்தரை மணிக்கு முற்றவெளி றீகல் மண்டபத்தில் அருகை அடைந்தனர். அங்கே வெளியே வழக்கம்போல் லயிற்றுக்கள் எரிந்து கொண்டிருந்தன. பல படங்கள் சார்த்தப்பட்டு இருந்தன. கிழவி விளக்குகளையும் படங்களை யும் நன்றாகப் பார்த்துவிட்டு “படக்காட்சி நல்லாய்தான் இருக்கு. விளக்குகளும் நல்லதுகள்! ஆனால் இருக்குங் கதிரையைக் காண வில்லை! இந்தப் புல்லிலை இருந்தால் ஒட்டொட்டி பிரளும் தானே” என்றது கிழவி.
“இல்லையணை பெத்தாச்சி, படக்காட்சி அந்தப்பெரிய மண்ட பத்தில் நடக்கும். இன்னுங் கொஞ்ச நேரஞ் செல்ல இந்த சின்ன அறையிலே “ரிக்கற்” எடுத்துக்கொண்டு போக வேண்டும், என்றான். கிழவி “இந்த இக்கட்டு வேண்டுகிற அறையை ஏன் மேயவில்லை. மழை வெய்யில் உள்ளுக்குப் படாதோ! ஐயோ! நான் கொட்டைப்பெட்டியை வீட்டில் விட்டிட்டு வந்திட்டன்! வாய் புளிக்கும் வெத்திலையில்லாமல், அறிஞ்ச ஆட்களும் இல்லை வாங்க” என்று சொன்னதும். பேரன் பக்கத்துக் கிழவியிடம் காசுக்கு வெற்றிலை வாங்கிக் கொடுத்தான். பின் படக்காட்சியாரம்பிக்க, பதினைந்து நிமிஷம் முந்தி இருவரும் ரிக்கற்றுடன் உள்ளே போய் வாங்கில் இருந்தனர். ஆரம்பப் பாட்டு மாத்திரம் பாடிக் கொண்டிருந்தது. அப்போது கிழவி சற்றுத் தூரத்தே போன ஒரு மனிசியைப் பார்த்து, “பத்தினி மச்சாள் இங்கை வாணை ஒருமிக்க இருப்பம்” என்று உரத்துக்கூப்பிட்டதும். எல்லா ஆட்களும் அதிசயத்து, கிழவியைப் பார்த்தார்கள். பேரன் தம்புவுக்கு வெட்கம் நிறைந்து விட்டது. அவன் தலைகுனிந்தான். பின்பு கிழவி “பேரர் அண்டைக்கு அந்த வெட்டையிலை நடந்த கூத்தில நல்ல நல்ல திரைச்சீலைகள் (சீன்கள்) கட்டியிருந்தார் கள். இங்கை அது காணவில்லை. வரவில்லை! படிக்கிறான் வெளிலை இப்ப வருவானோ சத்தமும் கொஞ்சம் அடைப்பா இருக்கு வெள்ளன வரயிக்கை சொன்னாய் நெடும் நேரம் படம் பார்த்தால் கண் கூசுமெண்டு. இப்ப நான் கன நேரம் பார்த்தேன் கண் கூசவில்லை” என்று கூறியது.
“அப்பாச்சி படக்காட்சியின்னுந் தொடங்கவில்லை” என்றான் தம்பு. இதற்கிடையில் காட்சியாரம்பத்திற்காக விளக்குகள் யாவும் தணிக்கப்பட்டன. கிழவி திடுக்கிட்டு போ.போ விளக்கு நூந்து போச்சு எண்ணையில்லையாக்கும். உந்தத் தோச்சு லைத்தைக் கொழுத்து தம்பி!” என்று சொல்லிய போது நடிகர் முதலியோரின் பெயர்கள் இங்கிலிசில் காட்டப்பட்டன. “இது என்ன இங்கிலிசுக்கூத்து, என்னையேன்ரா கூட்டிவந்தாய்? என்று கேட்டா விசாலாட்சியம்மை சட்டம்பியார் நாணம் மேலிட்ட வராய்த் தம்மை அறிந்தவர்கள் யாரேனும் இருக்கின்றனரோ என அங்குமிங்கும் பார்த்துவிட்டு “பேத்தி பேசாதே கொஞ்சம் பொறு” என்று கடுகடுத்துப் பேசினான். அப்பால் காட்சிகள் ஆரம்பமாயின.
முதலில், இராசசபையில் டான்ஸ் காட்டப்பட்டது. இதைப் பார்த்ததும் கிழவிக்குத் திகைப்புத்தான் இது என்ன கூத்தோ, திருவிழாவோ, எங்கள் கோயில் திருவிழாவில் ஆடின தேவடியாள் “இறைவி” இங்கேயும் ஆடுகிறாளென்று கிழவிகேட்பதற்கிடையில் அடுத்த காட்சி தொடங்கிற்று, சற்று நேரம் அமைதியாக விசாலாட்சியம்மை இருந்தா, பின்பு காட்டில் வேட்டைக்காட்சி தோன்றினதும். புலி, சிங்கம், கரடி, எல்லாங் காணப்பட்டன. கிழவிக்கு பயம். “ஐயோ! நான் ஓடப்போறன் புலி! புலி!” என்று கூறி கண்ணைப் பொத்திக் கொண்டது கிழவி. “இது உண்மைப் புலியல்ல. படம் எடுத்தது, பயப்படாதே. என்னும் மலையில் இருந்து ஆட்கள் விழுவது போலவும், கடல் பெருகுவது போலவும் காணப்படும்” என்றான் பேரன். அதற்கு கிழவி “ஏன் படம் எடுக்கிறது எனக்குத் தெரியாதோ? அண்டைக்கு ஒருநாள் அந்த ஈச்சம் பத்தைக்குகிட்ட ஒரு செட்டி நாகம் படம் எடுத்தது. நான் என் கண்ணாலையே பார்த்து இருக்கிறேன்! எனக்கு அவ்வளவு புத்தியில்லையா? நீ ஏன் விளங்கப்படுத்துவான்” என்று சொன்னது.
சிறிது நேரத்தால் காடு எரியுங்காட்சி வந்தது. கிழவி “திரைச்சீலை எரியுது! இந்த வீட்டை தகரத்தால் மேஞ்சபபடியால் நெருப்புப்பிடியாது. ஆனாலும் இங்கே ஒரு முறையும் இந்தக் கூத்துப்பழக்கின அண்ணாவி வரவில்லையே! ஏன்? ஏதோ கோபமோ!” என்று கேட்டா. தம்புவுக்குப் படக்காட்சி பார்க்க வந்த ஆசை முற்றாக நீங்கி விட்டது. “அப்பாச்சி இது கூத்து அல்ல படக்காட்சி. அண்ணாவியில்லை” என்றான். இவ்வளவில் இடைவேளை ஓய்வுக்காக லயிற்றுகள் எரிந்தன. “படக்காட்சி முடிஞ்துபோச்சு, போவம் வா தம்பி” என்றது கிழவி. “இல்லை இது ஓய்வு நேரம்” என்றான் பேரன். பின் மறுபடியும் வழக்கம் போல் காட்சி ஆரம்பித்தது. ஒரு தாசி அழகுற அலங்கரித்துக் கொண்டு பூஞ்சோலைக்குள் படிக்கும் படத்தைக் கண்ட கிழவி “பேரா, விதவிதமான நகை நட்டுகளும் சீலையும் இவளுக்கு எங்கத்தை யான்! புருசன் பெரிய உத்தியோகமோ! பொடிச்சி பாட்டும் நல்லாப் படிக்கிறாள். எங்கடை பொடிச்சிகளுக்கு இவ்வளவு ஆட்களுள்ள சபையில் வெளிக்கிடவே வெட்கம். இவள் கூச்சநாச்சமில்லாமற் படிக்கிறாள்! இது கலிபோகந் தானே! என்று கூறினாள். சட்டம்பியார் மௌனமாக இருந்தார். காட்சியும் முடிவடைந்து விட்டது. கிழவி வெளிவரும் போது “மனுசன் செத்தால் பிழைக்கறியான் மற்றதெல்லாம் செய்கிறான்” என்று கூறிக்கொண்டு போனது.
– ஈழகேசரி,13.02.1938.
– அல்வாயூர்க் கவிஞர் மு.செல்லையா படைப்புகள், பதிப்பாசியர்: கலாநிதி சு.குகேஸ்வரன், மா.செல்வதாஸ், முதற் பதிப்பு: 09.12.2018, அல்வாயூர்க் கவிஞர் செல்லையா நிறுவனம் வெளியீடு.
![]() |
மு. செல்லையா - Tamil Wiki யாழ்ப்பாணத்தைச் சார்ந்த பருத்தித் துறைக்கு அண்மையிலுள்ள அல்வாய் என்னும் ஊரிலே தோன்றிய வர் இவர். பயிற்றப்பட்ட தமிழாசிரியராய் விளங்கிய இவர், பழைய தமிழ் மரபு வழுவாத வகையில் அரிய கவிதைகள் யாப்பதில் வல்லவராய் விளங்கினார். 'ஈழ கேசரி' வார இதழ் தொடங்கப்பெற்ற காலத்திலிருந்து 'அநுசுயா’ என்னும் பெயருடன் நகைச்சுவைக் கட்டுரைகள் பலவற்றை எழுதி வந்தவர். இலங்கை வானொலித் துறையினரால் நடாத்தட்பட்ட கவிதைப் போட்டியிலே,…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
உறவுகள்
முல்லை அமுதன்
September 27, 2026
வேண்டுகோள்
மா.வீ.தியாகராசன்
September 27, 2026
பாட்டி சொன்ன கதை
தெளிவத்தை ஜோசப்
September 27, 2026
