கொடுக்கல் வாங்கல்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தீபம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 4, 2026
பார்வையிட்டோர்: 129 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

(1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காரணங்களை முன்வைப்பதன் மூலம் அக்கதைப் பாத்திரங்களின் செய்யல்பாடுகளை நேரிடையாக நியாயப்படுத்திடவில்லை எனினும் வாசகனுக்கு அக்கதாபாத்திரங்கள் மீது வெறுப்பு ஏற்படுவதில்லை. “கொடுக்கல் வாங்கல்; சிறுகதையில் வரும் பொன்னம்மை தானியலின் உடற்பரப்பை மேய்ந்து கொண்டிருப்பவள். அதுவும் அவன் மரத்தில் ஏறி நிற்கும் போது கீழே விழுந்தக் காய்களைப் பொறுக்காமல் தலைதூக்கி அண்ணாந்து அவனைப் பார்த்துக் கொண்டிருப்பவள். தார் பாய்ச்சிக்கொண்டு வந்திருக்கலாமோ என்று தானியல் யோசிக்கும் அளவுக்கு அவனையும் அவன் உடலையும் மேயக் காத்திருக்கும் பசு அவள்…(நாஞ்சில் நாடன் படைப்புகளில் பெண்கள், புதியமாதவி, மும்பை)


நாலு புறமும் நஞ்சை வயல்கள். அரை வைத்த நெற்பயிர்கள் பச்சைப் படாம் விரித்துக் காட்டுகின்றன. வானைக் குத்திக் கிழித்துவிடத் துடிக்கும் கூர்மையான நெற்தாள்களில் சூரியன் ஒளியை அள்ளித் தெளித்துக்கொண்டிருக்கிறான். காற்றில் அசையும் போதெல்லாம் அவை சாணை பிடிக்கப்பட்ட கத்திகள் போல் வெள்ளியாகப் பளிச்சிடுகின்றன. முப்பது மரக்கால் பாதியில் மேற்கு வரப்பில் புல்லைக் கரம்பி எடுத்துக்கொண்டிருந்த தானியல் திரும்பிப் பார்த்தான். அறுத்துச் சேர்த்துக் குப்பம் குப்பமாக வைக்கப்பட்டிருந்த புல் வரிசை. ஏற்கனவே பனை ஓலைக் கடவத்தின் வாய் மட்டத்துக்குப் புல் இருந்தது. கோபுரம் போலக் குத்துப் புல் வைப்பதற்கு மாத்திரம்தான் இரண்டு தூக்கு வேண் டும். அறுத்துக் குவித்திருந்தது போதும் என்று அவனுக்குத் தோன்றியது.

பதினொரு மணி வெயில் படைபடையாக முதுகில் விழுந்து கடித்தது. கையிலிருந்த பிடிப் புல்லை வரப்பில் வைத்துவிட்டுத் தானி யல் நிமிர்ந்தான். பன்னரிவாளின் பின்புறத்தால் குறுக்கில் நசநசத்த வியர் வையை வழித்தான். அரிவாளின் விளிம்பில் சொட்டுகளாகச் சேர்ந்திருந்த துளிகளை இடது கை ஆள்காட்டி விரலால் தடவிச் சுண்டினான்.

கடவத்தை நகர்த்திக்கொண்டு வந்து புல் குப்பங்களைப் பிடி பிடியாக அடுக்கி அதன் மேல் உச்சியில் தலைகீழாக ஒரு தூக்குப் புல்லை நாட்டினான். பன்னரிவாளை அதன் உச்சியில் இறக்கிக் கடவத்தில் புல் இறுக்கமாக அழுந்தும்படி முத்திரை வைத்தான். குடையின் மேல் நீண்டி ருக்கும் குடைக் கம்பு போல, அரிவாளின் கைப்பிடி நேராக நின்றது. கடவத்தை இரு கைகளாலும் தூக்கிக் கனம் பார்த்தபோது அவனுக்குத் திருப்தியாக இருந்தது.

தானியலுக்குப் புல்லறுப்பது தாற்காலிகமான தொழில். ஆவணி மாதத்தில் ஆரம்பிக்கிற தொழி உழவு வேலை கிட்டத்தட்ட அறுபது நாட் கள் தொடர்ந்து இருக்கும். வெள்ளை நடவு முடிந்த பின்னர், தளை கொத்தி வைப்பதும், உரம் போடுவதும், வேப்பம் பாசி ‘சமுண்டு வதும் ஜப்பான் நடவுக்குக் களை உருட்டுவதுமாக ஒருமாதம். அதுவும் ஆகிய பிறகு பயிர் அரைவைக்க ஆரம்பித்ததும் விவசாய வேலைகள்தாமாகவே நின்றுவிடும்.

வேலை இல்லையே என்பதற்காகப் பசிக்காமலா இருக்கிறது?

அவனை நம்பி இரண்டு சிறிய வயிறுகள் காத்திருக்கின்றனவே? எப்படியாவது தினம் மூன்று ருபாய் இல்லாவிட்டால் பொழுது கழியுமா?

வேலை இல்லையென்று முட்டைச் சொறிந்துகொண்டோ பல்லைக் குத்திக்கொண்டோ, இறக்கு, வெட்டு என்று தாயம் ஆடிக் கொண்டோ, சோம்பி இருப்பவனல்ல தானியல். காலையில் நிலைச் சாக்குக்கு ஒரு சாக்குப் புல் அறுப்பான். கல் வீட்டில் கொண்டுபோட்டால் ஒன்றே கால் ரூபாய். சாயங்காலம் அதுபோல் ஒரு சாக்குப் புல் அறுத்துக் கொண்டு பூ முகத்து வீட்டில் போடுவான். காலையில் கல் வீட்டுக்குப் புல்லறுத்துப் போட்டுவிட்டு, வீட்டுக்குப் போய் வயிற்றுக்கு எதையா வது ஊற்றிவிட்டு, திரும்பவும் பத்துக்கு வந்து கடவத்தில் அறுக்கின்ற புல், அவன் வளர்க்கின்ற எருமைக் கிடேரிக்கு.

எருமைக் கன்றுக்குட்டி என்பதால் வேலியோர ஓலைப் புற்கள், நொறிஞ்சான் குழை, குப்பைக் கீரை, தொட்டாவாடி அல்லது அது போன்ற பதவல்களை அறுத்தாலே போதும். ஆனால் அதெல்லாம் வேறு வசமாகப் புல் வாய்க்காவிட்டால்தான். இருக்கின்றபோது வேலியோரச் செடிகொடிகளை நாடுவானேன்?

இனிமேல் போய்த்தான் மத்தியானத்துக்குக் கஞ்சி ஏதாவது வைக்க வேண்டும். இரண்டு தம்பிகளும் சாயங்காலம் வருவார்கள். பள்ளியி லேயே மத்தியான உணவு ஆகிவிடும். தனக்கு மாத்திரம்தான் என்பதால் அசவரப்படாமல் நடந்தான் தானியல்.

வழக்கமாக இவ்வளவு நேரம் அவனுக்கு ஆவதில்லை. நேற்று மாலை பூ முகத்து வீட்டுக்காகப் புல்லறுத்துவிட்டு வரும்போது கல்லுக் கட்டு வயலின் மேற்கு இடை வரப்பில் வளரியும் குழலியும் யானை அருகும் வல்லாரையும் கொடுப்பையும் மண்டிக் கிடப்பதைப் பார்த் தான். நாளை காலை கிடேரிக் கன்றுக்கு அறுக்கலாம் என்று அதைக் கண்டு வைத்துவிட்டு வந்தான். கால் மணி நேரம் அறுத்தால் கடவம் நிறைந்துவிடும். அத்தனை செறிவு. இடைவரப்பு ஆகையால் யார் கண்ணிலும் படவில்லை.

இன்று காலை, முதல் சுற்றுப் புல்லை அறுத்துக் கல் வீட்டில் போட்டுவிட்டு, ஒன்பதரைக்கு வீட்டுக்குப் போய், காலையில் அவித்து வைத்திருந்த மரச் சீனிக்கிழங்கை உப்பு மிளகுப் பொடியில் தொட்டு இரண்டு துண்டுகள் தின்று ‘பழஞ்சித்தண்ணி’யும் குடித்து ஒரு பீடியைப் பற்ற வைத்துக்கொண்டு, இரண்டாவது சுற்றுப் புல்லறுக்கக் கிளம்பி னான்.பாதித்துண்டுப் பீடியை அணைத்துக் காதிடுக்கில் செருகிய போதே அவன் சிந்தனை அவிழ்ந்தது.

தினமும் வேலைக்குப் போய் வந்து, தன் கையாலேயே பொங்கித் தானும் தின்று, தம்பிகளுக்கும் தந்து… அவனுக்கு அலுப்பாக இருந்தது. வேலையாவது தினமும் உண்டா என்றால் இல்லை. அன்றாடப் பாட்டுக்கு வழி தேடுவதே பெரும்பாடாக இருந்தது. இந்த லயத்திலேயே நடந்து கல்லுக்கட்டு வயல் இடைவரப்பில் கண்டு வைத்திருந்த இடத்தை அடைந்தான்.

அவனுக்குப் பகீரென்றது. எதையோ பறி கொடுத்ததைப்போல வெளமும் வெப்ராளமும். ‘ வரப்பைக் கரம்பியிருந்த நேர்த்தியைப் பார்த்து தால் அந்தக் கடுக்கரைக் கிழவிதான் அறுத்திருப்பாள் என்று தோன்றியது. “நீக்கம்புலே போவா… எப்படி கதுக்கட்டி வச்சு அறுத்திருக்கா…’ எரிச்சலில் திட்டினான்.

இனிமேல் கரையடிகளைத் தேடிப் போவது கடினம்.ஒரு வயல் தாண்டி, பத்து நாள் துளிரைச் சிரமப்பட்டு அரைக் கடவம் அறுத்தான். கால் வரப்பில் முதிராத நீர் முள்ளிகளாகப் பார்த்து மீதி அரைக் கடவத்தை நிறைத்தான். குத்துப்புல் வைப்பதற்குத் தோதாக முப்பது மரக்கால் பாதியின் இடைவரப்பு பயன்பட்டது.

மேற்குமலையில் ஏறி ஒரு கட்டுக் குதிரைவாலியோ, இளம் சுக்கு நாறியோ அறுத்துக் கொண்டுவரவும் அவன் தயார். ஆனால் அது பால் மாட்டுக்குச் சரிப்பட்டு வராது. பால் வற்றிப் போகும். பூ முகத்து வீட்டிலும் கல்லுக் கட்டு வீட்டிலும் கறவை மாடுகள். வண்டியிலோ, உழவிலோ வருகிற காளைகள், எருமைக் கடாக்கள் ஆகியவற்றுக்குத் தான் தோதுப்படும். ஆகவே அவன் காலையும் மாலையும் பத்துக் காட்டில் கிடந்து சாக வேண்டியுள்ளது.

இல்லையென்றால், காலை ஐந்தரை மணிக்கு நாவற்காட்டு மலையில் ஏறப் புறப்பட்டால், இரண்டு மணிக்குள்சுமைப்புல்லோடும் வடிக்க ஈச்சஞ் சுள்ளி விறகோடும் திரும்பிவிடலாம். தம்பிகள் சாயங் காலம் பள்ளி விட்டு வந்தால் கடிப்பதற்கு இரண்டு மூன்று கிழங்கு களோ, மாம்பிஞ்சுகளோ, ஒன்றும் இல்லாவிட்டால் ஈச்சம் பழக் குலையோ கூடக் கொண்டுவரலாம்.

பயிர்கள்கதிராகி விட்டால் பத்தில் புல் ஓய்ந்து போகும். அறுவடை வேலைகள் தொடங்கும்வரை காற்றையா குடிப்பது? தானியேல் கிழங் குக்குப் போவான். கிடார ஊத்து மலையானாலும் மஞ்சள் பாறை மலை யானாலும் ஏறிச் சுமட்டளவு மரச்சீனிக் கிழங்கு கொண்டுவந்து ஊர் ஊராகச் சுமந்து விற்று மீதியை அவித்துத் தின்று…

அது இல்லாவிட்டால் கறிச் சக்கை வியாபாரம். அதற்கானால் வடக்கு மலை ஏற வேண்டும். பாலமோர் எஸ்டேட்டோ, பயனீர் எஸ்டேட்டோ ஏறி, பலாக்காய்களை ஏலம் பிடிக்க வேண்டும். கிழட்டு சைக்கிள் ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, ஆறேழு கறிச் சக்கைகளை வாங்கி, மலையிலிருந்து இறங்கி, சைக்கிளின் பின்புறம் வைத்துக் கட்டி, பிளந்து, கீறி விற்று. மரச்சீனிக் கிழங்கைப்போல உத்தர வாதமும் இல்லை. சக்கையைச் சூர்ந்தா பார்க்க முடியும்? புறத்தே நல்ல நிரப்பாக இருந்தாலும் உள்ளே வெறும் பூஞ்சாகப் போய்விட்டால்? இல்லை, சாரைப்பாம்பு ஏறிய கிளையின் காய்களாக இருந்து சுளையும் மடலும் கசந்து போய் வாயில் வைக்க இயலாததாக ஆகிவிட்டால்? இழவுக்குப் போனவளைத் தாலியறுக்கச் சொல்வதைப் போல அவன் கைப்பணம் பழுத்துவிடும்.

இல்லையென்றால் தாடகை மலையிலிருந்து கொழுஞ்சிக் குழை பிடுங்கி வரலாம். கட்டுக்கு மூன்றரை ரூபாய் கிடைக்கும். புல்லறுப் பதைப் போல மூலதனம் தேவையில்லாத தொழில். எப்போதாவது கார்டர்கள் கண்டுவிட்டால் ஒன்றோ இரண்டோ கொடுத்தால் போதும். ஆனால் கொழுஞ்சி நிற்கும் இடமாகத் தேடி அலைய வேண்டும். அலைந்து கண்டுபிடித்தாலும் அரிவாளால் அறுக்கக் கூடாது. கையினால் பிடுங்க வேண்டும். வேரின் இணைப்புகளில் உருண்டிருக்கும் முண்டு களில்தான் உரச் சத்தே இருக்கிறது. பிடுங்கி ஒரு கட்டுச் சேர்ப்பதற்குள் கைகள் செத்து, தோள்பட்டைகள் இற்றுவிடும்.

அதையெல்லாம் பார்த்தால் முடியுமா? அவன் மூதாதையர்கள் எந்தச் சிற்றரசனுக்கும் அடைப்பம் தாங்கவில்லையே. அவன் இனத்தில் அழகான பெண்கள் பிறந்திருப்பதும் சாத்தியமில்லாதது. எந்தக் கடவு ளும் கனவில் தோன்றிப் புதையலைக் காட்டவில்லை.

எங்காவது ஒரு பண்ணையில் பதிந்த வேலையாக, மாதச் சம்பளத் துக்குக் கிடைத்தால் இந்த நோக்காடு இருக்காது உண்டான வேலையைச் செய்தால் போதும். மாதா மாதம் சம்பள நெல் வந்து விடும் அவன் இரண்டு மூன்று இடங்களில் கேட்டுப் பார்த்துவிட்டான். யாரும் தரத் தயாராக இல்லை.

அப்பாவும் போய்ச் சேர்ந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. பதினெட்டு வயதில் ஏற்ற சுமை. அவனும் படித்திருக்க வேண்டியவன் தான். ஆனால் வயிறுகளின் நிர்ப்பந்தம். பர மண்டலத்திலிருக்கும் பிதா அவசரப்பட்டு விட்டார்.

கடுமையான உழைப்பு இருபத்திரண்டு வயதிலேயே தானியலின் உடம்பை இரும்புலக்கை ஆக்கிவிட்டது. தெரியாத வேலையும் இல்லை, சாமர்த்தியத்துக்கும் குறைவில்லை. தாய்மாமன் கல்யாணத் துக்கு நெருக்கிக்கொண்டிருக்கிறார். எத்தனை நாள் தான் கையினால் பொங்கிக் சாப்பிடுவாய் என்ற கரிசனம். ஆனால் அம்மாவும் அப்பாவும் போய்ச் சேர்ந்தபிறகு இரண்டு மாதங்கள் மாமன் வீட்டில் இருந்ததும் அங்கு பட்ட பாடும்…

மாமன் மகள் மனோண்மணி மீது தானியலுக்கு ஒரு கண் உண்டு. கல்யாணம் செய்துகொண்டால் இரண்டு பேருமாகச் சேர்ந்து பாடுபடலாம். என்றாலும் தம்பிகள் ஆளாக வேண்டுமே! பெண்டாட்டி என்று வந்த பிறகு அந்தப் பசலைகள் நாதியற்றுப் போய்விட்டால்-

பெரியதம்பி பதினொன்று தேற இன்னும் மூன்று ஆண்டுகள் ஆகும். அதுவரை மனோண்மணி காத்திருப்பாளா? கால்வரப்பில் நடக்க ஆரம்பித்த தானியலின் எண்ணச் சிதறல்கள். அந்த நினைப்பினூடேயே சில ஏக்கப் பெருமூச்சுக்கள்… வாலிபக் கனவுகள் தீய்ந்து கருகும் வாசனை.

புல் கடவத்தைச் சுமந்துகொண்டு, கால் வரப்பிலிருந்து விலகி, கிழக்கே நடந்து, ஆற்றங்கரையை நெருங்கினான். ஆற்றங்கரையோரமாக இருந்த தென்னந்தோப்புகளின் நடுவே வரப்பின் வழியாக நேரே பாயும் ஆற்றை அடையலாம். ஆனால் அந்த வழி கொஞ்சம் சுற்று. உடனேயே குளித்து விடலாம் என்ற நினைப்பில் வயல் வரப்பின் வழித்தடம் வழியாக ஆற்றங்கரை மேட்டில் ஏறி, சுள்ளி வேலியின் இடையே இருந்த தொண்டை நெருங்கினான்.

“யாரது? தானியலா…?”

பெண்குரல் என்றது தானியலின் உணர்வு. குரல் வந்த திக்கில் திரும்பினான். யாரையும் காணோம். இடது பக்கத் தோப்பிலிருந்து யாராவது கூப்பிட்டிருப்பார்கள். உயரமான சீமை உடைவேலியின் நெருக்கத்தில் ஆள் நின்றாலும் தெரியாது. வரப்பில் வரும்போதே தன்னைக் கண்டு விட்டுத்தான் குரல் கொடுத்திருக்க வேண்டும் என்று தானியல் நினைத்தான். தோப்பின் வாசலருகில் போனான். திறந்திருந் தது. உள்ளே பார்த்தான். பொன்னம்மை நின்றிருந்தாள். கையில் கல்மூங்கில்கழையின் மேல் நுனியில் வளைந்த கொக்கி.

”நாச்சியாரே…கூப்பிட்டேளா?”

“ஆமா… கொஞ்சம் இங்கிண வந்திட்டுப் போ…”

பொன்னம்மை தோப்பின் சொந்தக்காரி. மட்டுப்பா வீட்டு மயி லேறும் பெருமாளின் மனைவி. எப்போதாவது ஓரிரு நாள் வேலைக்கு – விறகு கீறவோ, வெள்ளை அடிக்வோ, தானியல் போனதுண்டு.

நொச்சிப்படல் கதவைத் தள்ளித் திறந்துகொண்டு தோப்பினுள் நுழைந்தான்.புறுபுறுத்துக் கொண்டு கதவு தானாக அடைந்தது. நுழைந்த வனை ஏறிட்டுப் பார்த்தாள் பொன்னம்மை.

“அஞ்சாறு முரீங்கா பறிச்சுத்தாலே… எனக்கு எட்ட மாட்டேங்கு…’ தானியலுக்குச் சுரீலென்றது. ‘ஏலே’ என்று விளி கேட்கும் போதெல் லாம் மேலெழுகின்ற கோபப் பொருமலும் அவமானக் குறுகலும். அதுவும் மாடு போல வளர்ந்து நிற்கும் முழு மனிதனான தன்னைப் பார்த்து… அவனுக்கு எரிச்சல் வந்தது. கையாலாத கோபத்தை மென்று விழுங்கினான்.

பெரிய தாக்கிழவி போல ‘எலே’ என்கிறாள். முப்பது இருக்குமா? ஆனால் முப்பதுக்கு மதிக்க முடியாது. பிள்ளை குட்டி எதுவும் இல்லை என்பதாலோ படை குதிரை போல்தான் இருக்கிறாள்!

“கடவத்தை இறக்கு… நான் ஒரு கை குடுக்கட்டா…?”

கைகளை உயர்த்தி, கோபிகாஸ்தீரி போல நின்றாள் பொன்னம்மை. எதிர்பாராமல், பக்தனுக்குக் காட்சி தந்த பகவானைப் போல, திடீரெனக் கிடைத்த ‘தரிசனம்’, தானியலின் மனதில் ஒரு புதிய தடதடப்பு.

புல் கடவத்தை இறக்கி வைத்துவிட்டு, முருங்கை மரத்தை அண் ணாந்து பார்த்தான். பறிக்கின்ற பக்குவத்தில் வார்வாராக நீண்டு கிடந்த காய்கள்.

“ரெண்டு நாளா மாடு மேய்ச்சிப் பயகிட்டே சொல்லீட்டு இருக் கேன்… அறுதப்பய வுள்ளை மூண்டு கேட்க மாட்டேங்கு… அதான் தீயலுக்கு அரைச்சு வச்சுக்கிட்டு நாலைஞ்சு காய் பறிச்சுகிட்டுப் போலாம்ணு வந்தேன்… அந்த எழவும் நமக்கு எட்டவா செய்யி… நல்ல காலந்தான்… நீயாவது வந்தியே!”

தானியலின் உடற்பரப்பை மேய்ந்த கண்களைப் பிடுங்காமல் பொன்னம்மை பேசிக்கொண்டிருந்தாள். அவனுக்குக் கூச்சமாக இருந் தது. அவள் கையிலிருந்த கழையை வாங்கினான். முருங்கை மரத்தின் மீதேறி வாகான கவடி மீது நின்றான். சில நிமிடங்களில் பருவமான காய்கள் ‘சொத் சொத்’தென்று தோப்பினுள் விழுந்தன. போதுமா என்று கேட்பதற்காகக் கீழே குனிந்தான். விழுகின்ற காய்களைப் பொறுக்காமல் தலைதூக்கி அண்ணாந்து இவனைப் பார்த்துக்கொண்டு பொன்னம்மை..

தார் பாய்ச்சிக்கொண்டு வந்திருக்கலாமோ என்று தானியலுக்குத் தோன்றியது.

கழையை வீசித் தோப்பினுள் எறிந்துவிட்டுப் பதனமாக மரத்தி லிருந்து இறங்கினான். அவனைப் பார்த்து ஒரு மாதிரியாக அவள் சிரித்தாள்.

“காயைப் பொறுக்கீரப் பிடாதா…?”

சொற்களை மென்று விழுங்கி அவன் கேட்டான். சிதறிக் கிடந்த முருங்கைக் காய்களை ஒவ்வொன்றாக அவள் பொறுக்க ஆரம்பித்தாள். ஒவ்வொரு முறை குனிந்து நிமிரும்போது இடம் பெயர்ந்த முந்தானை. அதை முழுவதுமாகக் கையில் எடுத்து மீண்டும் நேராகப் போடப் போட… அதற்கு என்னவோ அத்தனை பிடிவாதம்.

காய்களைப் பொறுக்கிவிட்டு அவனருகில் வந்தாள். அவனை ஆழமாகப் பார்த்தாள்!

“நீ இப்போ எங்கலே சோலி பார்க்கே… நம்ம வீட்டுக்குப் பதிஞ்ச சோலிக்கு ஒரு ஆளு வேணும்… மாசம் ஒரு கோட்டை நெல்லும் மத்தியானம் கஞ்சியும்… என்னா வாறயா? வாறயிண்ணா சாயங்காலமா நயினாரை வந்து பாரு…”

சொல்லிவிட்டுத் தானியலைப் பார்த்துச் சிரித்தாள் பொன்னம்மை.

அவனுக்குக் ‘குப்’பென்று உடலெங்கும் பரவிய அனல். படபட வெனத்துடித்த கீழுதட்டைப் பற்களால் கடித்தான். கண்கள் சிவப்பேறிக் கனன்றன. சில சூடான மூச்சுத் தொடர்கள்.

முருங்கைக்காய்களை சேர்த்துக் கட்டி, நாலைந்து காய்களை அவன் கடவத்தின் மேல் வைத்துவிட்டுப் பக்கத்தில் நின்ற தென்னை மரத்தில் சாய்ந்து நின்றாள் அவள்.

எச்சிலைக் கூட்டி விழுங்கிச் சற்றுமுற்றும் பார்த்தான் தானியல். ஆளரவமே இல்லை!

– தீபம், ஏப்ரல் 1982.

நன்றி: https://nanjilnadan.com

நாஞ்சில்நாடன் நாஞ்சில்நாடன் வாழ்க்கைக் குறிப்பு: பெயர் : G. சுப்ரமணியம் (எ) நாஞ்சில் நாடன்எழுதும் துறை : நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரைபிறந்த நாள் : 31 டிசம்பர் 1947பிறந்த இடம் : வீரநாராயணமங்கலம்தாழக்குடி அஞ்சல், தோவாளை வட்டம்,கன்னியாகுமரி மாவட்டம்.தமிழ் நாடு – 629 901.முகவரி : G. Subramaniyam (NanjilNadan)Plot No 26, First Street, VOC Nager, Near Euro Kids, KovaipudurCoimbatore – 641 042, Tamilnadu.Phone:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *