கடவுளின் கால்
கதையாசிரியர்: நாஞ்சில்நாடன்
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: October 4, 2026
பார்வையிட்டோர்: 143
(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சூரத்திலிருந்து திரும்ப,ரயில் நிலையத்தில் காத்திருந்தேன்.
சூரத் தொன்மையான நகரம்.மதுரை,காஞ்சி,காசி,கயா,வாதாபிபோல.
காஞ்சிப் பட்டுக்கு சூரத்தின் ஜரிகை, மாட்டு வண்டிக் காலத்தில் இருந்தே.
சாரம்,துண்டுக்கு இன்று ஈரோடு. ஜமுக்காளத்துக்கு பவானி,கரூர்.
சன்ன ரக இரட்டை வேட்டிக்கும் துவர்த்துக்கும் பள்ளியாடி,
பட்டுக்கு காஞ்சிபுரம், ஆரணி, தர்மாவரம், திருப்புவனம்,போச்சம்பள்ளி.
காற்சட்டை மேற் சட்டைத் துணிகளுக்கு பிவாண்டி,
பின்னலாடைக்கும், துன்னலாடைக்கும் திருப்பூர்,
பெண்டிர் ஆடைத் துணிகளுக்கு மாலே காவ், பருத்திப் புடவைகளுக்கு கல்கத்தா போல சிந்தடிக் துணிகளுக்கு சூரத்.
இந்தியாவின் அனைத்து துணிக் கடைக்காரர்களும் பரபரப்பாக எந்த நேரமும் அலைந்து திரியும் நகரம். கொள்முதல் செய்து பார்சல் சர்வீசில் கொடுத்துவிட்டு கைவீசி ரயிலேறி சொந்த ஊருக்கு வந்து விடலாம். பலர் பாதுகாப்பாகப் பணத்தை வைத்துக்கொண்டு படுத் துறங்க வசதி கொண்ட நீள அறைகளை உடைய நூற்றாண்டுப் பழக்க முள்ள சாத்திரங்கள், சாவடிகள், விடுதிகள்.
எந்நேரமும் தூங்காத நகரம் சூரத். இட்லி, தோசை, வத்தக் குழம்பை சற்று மறந்துவிட்டு, ரொட்டி, டோக்ளா, பாப்டி, ஷீரா, லஸ்ஸி என்று பழகிக்கொண்டால் உணவு ஒரு கொண்டாட்டம்.நல் லுணவும் நாப்பழக்கம். மேலும் குஜராத் மாநிலத்தில் பால், தயிர், இனிப்புகள் உண்டு பழகியவருக்கு வேறு எந்த ஊரிலும் சுகப்படாது. ஒரே வசதிக் குறைவு குஜராத் இன்றும் மது வறட்சி மாநிலம்.
தொன்மை என்றாலேயே குழி விழுந்த கன்னங்கள், பலமிழந்து ஆடும் பற்கள், நரை திரை, எலும்பை விட்டு ஒதுங்கும் தசைகள், தள்ளாமை, நோய் எனத் தவிர்க்க இயலாது எந்த நகரானாலும். குப்பை, குப்பம், தும்பு, நெரிசல்,தூசு, புகை, இடிபாடு, எருமை, பன்றி, சாக்குப் படுதாவும் பாலிதீன் விரிப்புக் கூரையும் கொண்ட குடிசை, விலங்குகள் இழுக்கும் வண்டி, பாரம் ஏற்றி இறக்கும் லாரி, வரைவின் மகளிர், தரகர், சில்லறைத் திருட்டு, சந்துகளை அடைத்துக் கொண்டு கயிற்றுக்கட்டில், தெருக்களிலேயே சமையல் குளியல், கூடல், ஊடல்…
குளிர்காலம் எலும்பு துளைத்தால் கோடைகாலம் நரம்பு பொசுக்கும். மேலும் குஜராத் மாநிலம் முழுக்க பெருங்குரல்கள் மூச்சு முட்டச் செய்வன.
எனக்கு உண்மையில் வேலை, நவ்சாரி எனும் சிறு நகரத்தில் தான். மக்கள் தொகை இலட்சத்துச் சொச்சம் இருக்கும். எனினும் முக்கியமான சில தொழிற்சாலைகள், நூற்பாலைகள், வார்ப்புக் கூடங்கள் இருந்தன. மும்பையில் இருந்து நவ்சாரி இருநூற்று முப்பது கிலோ மீட்டர் என்றால் நவ்சாரியில் இருந்து சூரத் முப்பது கிலோமீட்டர். எல்லா ரயில்களும் நவ்சாரியில் நிற்பதில்லை. ஆனால் சூரத்தில் நிற்காத வண்டி இல்லை. மும்பையில் இருந்து போனால், விரைவு வண்டியானால், வசய், வாப்பி, வல்சாட், பில்லிமோரா என்று நவ்சாரி தாண்டிப் போய் சூரத்தில் இறங்கித் திரும்பி வர வேண்டும். சூரத் மிகப்பெரியதும் அழுக்கானதும் ஆனதோர் ரயில் நிலையம்.
எப்போதுமே விற்பனைப் பிரதிநிதி வாழ்க்கையில் பகலில் கடும் அலைச்சலும் இரவில் உல்லாசமும், அவரவர் மனோலயம் போல. குஜராத் மதுவிலக்கு மாநிலம் என்றாலும் தட்டினால் திறக்கும், தேடினால் கிடைக்கும், கேட்டால் கொடுக்கப்படும். அல்லது எந்தக் கட்சி ஆண்டாலும் ஆளுபவர்களின் உறவினர்கள் நடத்தும் சற்று செலவு கூடிய விடுதிகள் உண்டு. மக்களாட்சியின் நோக்கமே நமக்கு சேவை செய்வதுதானே!
மேலும் வாப்பியின் அருகில் இருந்தது டமன். உனா அருகில் இருந்தது டியூ. கோவா அரபிக் கடலில் என்றால் டியூ, டமன் கம்பாட் வளைகுடாவில். கடல் வழியில் டமன், டியூ இடையிலான தூரம் இருநூறு கிலோ மீட்டர். தரைவழியாக அறுநூறு கிலோமீட்டர்கள். நமது புதுச்சேரியும் தலைச்சேரி அருகிலுள்ள மய்யழியும் போல. ஒன்று வங்காள விரிகுடா எனில் மற்றது அரபிக் கடலில். தரை வழியில் அறுநூறு கிலோமீட்டர்தூரம் எனில் கடல் வழியாக ஆயிரத்து அறுநூறு கிலோ மீட்டர், மன்னார் வளைகுடாவைச் சுற்றிக்கொண்டு. அதாவது வங்காள விரிகுடாவில் புறப்பட்டு இந்துமகா சமுத்திரம் வழியாக அரபிக்கடல் போக வேண்டும். மதுவிலக்கு இருந்தாலும் அரபிக்கடலில் இருக்கும் கோவாவில் இருந்து அறுநூறு கிலோ மீட்டர் தாண்டி தரைவழியாக டமனுக்குச் செல்லும் பாவனையில் இரண்டு அல்லது மூன்று மதுக்குப்பிகள் கொண்டு செல்லலாம். ஏனெனில் அவை போர்ச்சுக்கீசியர் ஆண்ட நிலப்பகுதிகள். அதுபோல் மய்யழி யிலிருந்து புதுச்சேரிக்கும். அவை பிரஞ்சுக்காரர் ஆண்ட நிலப் பகுதிகள்.
சாணாங்கி நிறப் படிவங்கள் கொண்ட புத்தகத்தில் இருந்து பெர்மிட் ஒன்று கிழித்துத் தருவார்கள். கையெழுத்துப் போட்டு, கத்தரிப்பூ நிற மையில் அரசு முத்திரை இட்டு மதுக்கடைகளிலேயே வைத்திருப்பார்கள். ஐந்து ரூபாய் கொடுத்தால் போதும்.ஊரும் பேரும் நாளும் கோளும் நாமே நிரப்பிக் கொள்ளலாம். மனதிருந்தால் மார்க்கம் உண்டு. சட்டத்துக்கு ஒற்றைக் கண் எனில் ஓட்டைகளுக்கு ஓராயிரம் கண்கள். சட்டத்தின் பாதுகாப்பில் ஓட்டைகளில் உயிர் வாழும் தேசம் நமது.
எனது பூகோள அறிவைப் புகட்டுவதற்காக இதையெல்லாம் எழுதவில்லை. எப்போதும் பால் எடுத்த தேங்காப் பூ கோருகளைத் தானே பாடப் புத்தகங்கள் உண்ணத் தருகின்றன!
உப்பு சத்யாக்கிரகம் பற்றிப் படித்திருப்பீர்கள். எனது நண்பர் ஒருவர் அதை உப்பளப்போர் என்று தமிழ்ப் படுத்தினார். அது உப்பு அளக்கிறவர் என்று பொருள் தராதா எனக் கேட்ட போது சென்மப் பகையாகிவிட்டது. பின்பு உப்பு அறப்போர் என்று திருத்தினார். காந்தி உப்புக் காய்ச்ச நடந்தது தண்டியை நோக்கி. நமக்கு வேதாரண்யம் எங்கிருக்கிறது என்பதைத் தேடிக் கண்டடைய வேண்டும்.
தண்டி நவ்சாரியில் இருந்து இருபது கிலோமீட்டர். சுற்றுலாத் தலங்கள், சிற்ப ஓவியக் கலைக்கூடங்கள், வரலாற்றுத் தலங்கள் பற்றி வழிகாட்டிக் கையேடுகளில் குறிப்பிடுவார்கள். உதாரணமாக மாமல்லபுரம் பற்றிக் குறிப்பு எழுதுவதாக இருந்தால் அது சென்னை யிலிருந்து தரை வழியாக இத்தனை கிலோ மீட்டர் என்று. அது போல் தண்டியைத் தேடினால் ஆமதபாத்திலிருந்து முன்னூற்று ஐம்பது கிலோ மீட்டர் என்பார்கள். ஆனால் சென்னையிலிருந்து போகிறவன் எதற்கு ஆமதாபாத் போய், தண்டிக்கு கீழே மறுபடியும் இறங்க வேண்டும்? இரயிலில் அல்லது விமானத்தில் சூரத் போய் அங்கிருந்து ஐம்பது கிலோ மீட்டர் போனால் போதும். மூன்றாம் நிலைக்குப் போகிறவன் எதற்கு ஏழாம் நிலை ஏற வேண்டும்?
தண்டி சிறியதோர் கடற்கரை. வாழ்க்கையில் எனக்கு இப்படித் தான் கோயில்கள், கோட்டைகள், கடற்கரைகள், நதிகள், மலைகள் வாய்த்தன.
மாலை நான்கு மணிக்கு சூரத்திலிருந்து பன்வேல் வழியாகப் போகும் ரயிலொன்று இருந்தது. பன்வேலில் எனக்கொரு தம்பி இருக் கிறான். இரவு பத்து மணிக்கு இறங்கி தம்பி வீட்டுக்குப் போகும் உத் தேசம். ஒருநாள் அங்கு தங்கிவிட்டு அங்கிருந்து ஊருக்கு கிளம்பலாம்.
எப்போதுமே ஆமதாபாத் – மும்பை ரயில் போக்குவரத்து மிகவும் நெரிசல் கொண்டது. எந்த ரயிலானாலும் எந்த நேரமானாலும் எந்த நாளானாலும். சூரத் – பன்வேல் முன்பதிவு கிடைக்கவில்லை.
திரும்புகாலில் முன்பதிவு கொண்டு எனது பயணங்கள் அமைந்ததும் இல்லை. கையில் நடப்புப் பயணச் சீட்டு மட்டும் இருந்தது. எதிர்வரும் விதத்தில் வாழ்க்கையை நேர்கொண்டு பழகிவிட்டது.
மழை மாதங்கள். பொழிந்துகொண்டிருந்தது. ஈரமும் தண்ணீர் சொட்டலும் நசநசப்பும் நெரிசலும் நிறைந்த நடைமேடை. பயணிகள் மீது ஈக்கள் கூட்டமாய் மொய்த்தவாறிருந்தன.
சூரத்தில் பிளேக் வந்து மாறி சில காலமே ஆகி இருந்தது.
இரயில் வந்தது குறித்த நேரத்தில், படு வேகமாக, மழைத் துளிகளையும் ஈக்கள் கூட்டத்தையும் சிதறியபடி. எதிர் நின்ற படுக்கை வசதி கொண்ட பதிவுப் பெட்டியில் ஏறினேன். வழக்கம் போல் ஒரு தோள்பையும் சின்னப் பெட்டியும்தான். இருக்கைகள் அன்று அல்லது அப்போது காலியாக இருந்தன. அமர்ந்து, சாமான்களை இருக்கையின் கீழே தள்ளிவிட்டு, ஆற அமரக் கால் நீட்டி, ஊறிக் கொவர்ந்திருந்த காலணி, காலுறைகளைக் கழற்றி ஆசுவாசப்பட்ட போது சூடாய் மசாலா சாய் வந்தது. தொடர்ந்து வயதான பரிசோதகர் வந்தார். பணிவாக விவரம் சொன்னதும், ” அவுர்கியா… பைட் ஜாவ்’ என்றார்.
ஆறு மணி நேரம்தான். வாசிக்க எதுவும் எடுத்து வரவில்லை. மழையை, அதன் அசௌகரியங்களோடு அனுபவித்துப் பார்த்தேன். நல்ல விசையான வண்டி. அடுத்த நிறுத்தங்கள் பல்சாட், வசை, பிவான்டி, பன்வேல்.
உத்தேசமாக முகேஷ் பாடலொன்றைப் பாடிக்கொண்டு வந்தான் யாசகன் ஒருவன். நாற்பத்தைந்து வயதிருக்கும். தலைமயிர் சமீபத்தில் திருத்தப்பட்டிருந்தது. தாடி இல்லை. விளைந்து முற்றிய செங்கரும்பு போல உடல். வலது கால், பெருந்தொடைக்குக் கீழே இல்லை. இடது கை, மணிக்கட்டில் இருந்து இல்லை. ஊன்று கட்டை இருந்தது அக்குளில். பாட்டின் இடையே குஜராத்தியில் யாசகம் கேட்டான். குஜராத்தி யாசகத்துக்குத் தோதான மொழி இல்லை.
ஒரு கால் இல்லாவிட்டாலும் மறு கால் திராணியாக இருந்தது. வலது கை வலுவாக இருந்தது. நலத்துடன் இருந்தது உடல். வயதும் இருந்தது.ஏதும் சிறுதொழில், குறு வியாபாரம் செய்யாமல் யாசகத்தை ஏன் தேர்ந்தான் என்று தெரியவில்லை. கட்ச் பகுதியின் பாட்டாளி முகத்தின் சாயலில் கௌரவம் இருந்தது.
எனினும் யாகசம் ஏன்? அவரவர் நியாயங்கள் தனித்தனி. எனது நியாயம் உனக்கும், உனது நியாயம் அவனுக்கும் கட்டுபடி ஆகாது. முகம் மட்டும் அல்ல, சிந்தனையும் நூறு கோடிதான். நாலணா யாசகம் தருவதற்குள் எத்தனை ஒழுங்குப் பிரச்னை, உரிமை மீறல் பிரச்னை, கவன ஈர்ப்புப் பிரச்னை?
வண்டி போய்க்கொண்டே இருந்தது. இப்படியே போனால் கோவா வழியாக, கள்ளிக்கோட்டை வழியாக, கன்னியாகுமரி போய் விடலாம். ஆசை கிடந்து அடித்துக் கொள்கிறது.
எல்லாப் பெட்டிக்கும் போய்வரும் விதத்திலான தொடர்வண்டி. நாலைந்து முறை ஊன்றுகட்டை ஒலி எழுப்ப மாறிமாறித் தென் பட்டான். இல்லை என்று சொன்னாலும் இன்முகம்தான். ‘சாவு கிராக்கி’ இல்லை, ‘கஸ்மாலம்’ இல்லை, ‘பொறம் போக்கு இல்லை. மழை காரணமாய் இரவு எட்டே காலுக்கு வசை வர வேண்டிய வண்டி ஒன்பதரைக்கு வந்தது. இந்த கதியில் பன்வேல் போக பதினொன்று ஆகிவிடும். பரபரப்பாய் கேட்டரிங் சர்வீஸ் இயங்கிக் கொண்டிருந்தது.
வலுக்கிட்ட பூரிகளில் எண்ணெய் வடிந்தது. கொஞ்சம் போலச் சோறு. உருளைக்கிழங்கும் பட்டாணியும் சப்ஜி, டால், ஊறுகாய், தயிர். முப்பது ரூபாய்.
உண்டு, ஒதுங்கி, படுக்கை போட ஆரம்பித்தனர். மூன்று அடுக்கு படுக்கை வசதி. அவனது இருக்கைக்கு பன்வேலில் வருவார்கள் போலும். எல்லோரும் படுக்கைகளைப் போட்டுவிட்டால் கூனிக் குறுகி உட்கார வேண்டும். ஒன்றரை மணிக் கூறில் இறங்க இப்போது படுத்தால் ஆகாது. மழைக்காற்று ஈரக்கர்ப்பம் கொண்டிருந்தது. பெட்டி அடங்கிக்கொண்டிருந்தது. அந்தப் பெட்டியின் தொடர் பெட்டி பேன்ட்ரி கார். கதவோரம் சென்று சற்று நேரம் நிற்கலாம் என்று போனேன். ஒற்றைக் கால் யாசகன் ரயில் பெட்டியின் உட்சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருந்தான்.
“உறங்கவில்லையா?” என்றான்.
“பன்வேலில் இறங்கணும்.”
“பதினொண்ணு ஆயிரும்… நானும் பன்வேலில் இறங்கணும்.”
பிச்சைக்காரனுக்கு ஏது ஏற்றமும் இறக்கமும் என்று தோன்றியது. சிரமப்பட்டு எழுந்து நின்றான். கேட்டரிங் பெட்டி வாசலை எட்டிப் பார்த்தான். அவனைத் தெரிந்துகொண்ட மலையாளத்து வேலையாள் தட்டு நிறையச் சோறும் அதன் மேல் பருப்பும் ஊற்றி சப்ஜி வைத்துக் கொடுத்தான்.
சாய்ந்து நின்றுகொண்டு, இடது முழங்கையில் தட்டை இடுக்கிக் கொண்டு சோற்றை அள்ளித் தின்ன ஆரம்பித்தான்.
“இந்த வண்டியில் வந்தா ராத்கா கானா இங்க கிடைக்கும்’ என்றான்.
உண்டு முடித்து, தட்டைக் கழுவிக் கொடுத்துவிட்டு வந்தான். “பன்வேலில் எதற்கு இறங்கணும்?” என்றேன்.
“நம்ம டூட்டி சூரத்லேருந்து பன்வேல் வரைக்கும்” என்று சொல்லிச் சிரித்தான்.
”காலம்பற ராஜ்கோட் வருவான். அதுலே ஏறி மத்தியானம் சூரத். மறுநாள் சாயங்காலம் இதே வண்டி… வாரத்துக்கு ஐந்நூறு ரூவா வீட்ல குடுப்பேன். இரண்டு பிள்ளைங்க… க்யா கரேங்கா?”
“கால் கை ஏன் இப்டி ஆச்சு?”
“பான் கா துக்கான் வச்சிருந்தேன். கடையையும் வீட்டையும் கொளுத்தீட்டானுக… ஒரு கையும் போச்சு காலும் போச்சு… எல்லாம் ஊப்பர் வாலேக்கா மெகர்பானி…”
“கேப்பார் கேள்வி இல்லாம ஆயிப் போச்சு…”
“யாரு கேக்க முடியும்? இந்து வானா என்னா இஸ்லாம் ஆனா என்னா? ஏழையா இருக்கப்பிடாது….”
”பன்வேல்ல இறங்கி ஸ்டேஷன்ல படுப்பியா?”
“படுக்கலாம்… ஆனா பிச்சைக்காரன் பணத்தையும் காவாலிப் பயக்கோ புடுங்கிக்கிடுவான். மேற்கொண்டு அடி, வசவு… மாவாலி லோக்…”
“பின்னே எங்க போவ?”
“பன்வேல் எஸ்.டி.ஸ்டான்ட் போயிருவேன். அங்க நம்ம காவ்வாலா ஒருத்தன் சாயாக்கடை இருக்கு… ராப்பகலா திறந்துதான் இருக்கும். பிஸ்வியை அவன் கிட்டே குடுத்துட்டு ஓரமா படுத்து எந்திருச்சு காலம்பற ரயிலுக்கு வந்திருவேன்!”
“போக வர நடக்கணுமே!”
“அவுர் கியா கரேங்கா? ஊப்பர் வாலே கா மெகர்பானி”
அன்றைய சேகரங்களை எண்ண ஆரம்பித்தான். சின்ன நோட்டுக் கள், சில்லறைகள். தோளில் தொங்கும் துணிப்பையில் போர்வை ஒன்று, துண்டு ஒன்று, தண்ணீர் போத்தல், பித்தளைத் தம்ளர்…
பத்து ரூபாய் கொடுத்தேன். வாய் விட்ட சிரிப்பில் பளீரென ஆரோக்கியமான பற்கள்.
பன்வேல் ஸ்டேஷன் நெருங்கிக்கொண்டிருந்தது. அவனும் எழுந்து கொள்ள ஆயத்தமானான். எழும்போது மறுபடியும் அவன் காலைப் பார்த்தேன்.
“என் காலு போனாப் போகுது சாப்… கடவுளுக்கு காலை வெட்டாம இருக்கணும்…”
ஏழையின் சிரிப்பே இறைவனின் சிரிப்பெனில் ஏழையின் கால்களும் இறைவனின் கால்கள்தாம்.
– தினமணி – தீபாவளி மலர் – 2006.
நன்றி: https://nanjilnadan.com
![]() |
நாஞ்சில்நாடன் வாழ்க்கைக் குறிப்பு: பெயர் : G. சுப்ரமணியம் (எ) நாஞ்சில் நாடன்எழுதும் துறை : நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரைபிறந்த நாள் : 31 டிசம்பர் 1947பிறந்த இடம் : வீரநாராயணமங்கலம்தாழக்குடி அஞ்சல், தோவாளை வட்டம்,கன்னியாகுமரி மாவட்டம்.தமிழ் நாடு – 629 901.முகவரி : G. Subramaniyam (NanjilNadan)Plot No 26, First Street, VOC Nager, Near Euro Kids, KovaipudurCoimbatore – 641 042, Tamilnadu.Phone:…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
மிகச்சிறிய மிருகங்கள்
நீ.பி.அருளானந்தம்
October 12, 2026
நவீன நல்லதங்காள்
இரா.கலைச்செல்வி
October 12, 2026
ஸ்க்ரைப்
ஜூனியர் தேஜ்
October 12, 2026
