ஒழுகும் பாரதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 4, 2026
பார்வையிட்டோர்: 84 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பசியோடுதான் திரும்பிக் கொண்டிருந்தேன். வெயிலும் தூசியும் நல்ல அலைச்சலும். வெளியே போனால் வீடு திரும்ப எப் படியும் மூன்று, மூன்றரை ஆகிவிடுகிறது. காலையில் ஒன்பதுக்கு சாப்பிடும் இரண்டு தோசை அல்லது மூன்று இட்டிலி எத்தனை நேரம் தாங்கும்? பசித்தால் இரண்டு மாரி பிஸ்கட்டும் சர்க்கரை இல்லாத சாயாவும் பரிந்துரைத்தது மருத்துவம். பஜ்ஜி, போண்டா என்றால் எளிதில் சாத்தியம். அல்லது மாரி பிஸ்கட்டை சுமந்து திரிய வேண்டும். எந்த வெளிஉணவும் பத்தியக்காரருக்குப் பாது காப்பானதல்ல.

பெரியாஸ்பத்திரி முன்னால் சற்று காத்து நின்றால் நகரப் பேருந்து கிடைக்கும். பெரியாஸ்பத்திரி என்பதை நோய்களின் கொள்முதல், சேமிப்பு, விநியோகக் கிட்டங்கி எனச் சொலல் தகும். சிதறிய தானியமணிகள் போல் சுற்றுச்சுவருக்கு உள்ளேயும் வெளியேயும் நோயாளிகள் தென்படுவார்கள். காலை ஆறு மணிக்கு போத்தலில் வெந்நீர் விலைக்கு வாங்க, சாய் வாங்க, சிற்றுண்டி வாங்க, பற்பசை சோப்பு பீடி வெற்றிலை பாக்கு வாங்க என நோயாளிகள் ஆஸ்பத்திரி வாசலில் இரவில் சொரிந்திருந்த பவளமல்லி மலர்கள் போல் தென்படுவார்கள்.

மதியம் தாண்டிவிட்டது. எனினும் புண் வடிந்தவர், அரைக்கால் முறிபட்டவர், தொடைவரை கட்டுப் போட்டவர், இன்ன நோய் என எவராலும் இந்நேரம் வரை கண்டுபிடிக்கப் படாதவர், ஆற்றொணாத் துன்பத்தின் முகபாவம் தரித்தவர், சாவே மானுட உருவெடுத்து வெங்கொடுமை வரிவில் ஏந்தித் தன்மீது கணை தொடுக்கும் சாபம் பெற்றவர். பலரும் சுற்றுச்சுவர் தொட்ட நடைபாதையில் நின்றும் இருந்தும் கிடந்தும் சாவின் திருமுகம் காணக் காத்துக் கிடந்தவர்.

பெரியாஸ்பத்திரி வாசலின் இடப்பக்கம் இருந்த பேருந்து நிறுத்தத்தில் காத்துக் கிடந்தேன். பேருந்து நிறுத்த நிழற்குடையின் கீழ் எவரும் நிற்பதில்லை . நிழற்குடையின் கீழும், அடுத்தும் குன்மம் நொந்தவர், கை கால் துணிபட்டவர், பெருநோய்ப் பட்டார், யாவும் இறந்தவர்… சுற்றுச்சுவர் தலைகீழான ட போல் திரும்பும் மூலையில் நகரத்துப் பல்வகைச் சிறுநீர்க் கவைலயின் துர்நாற்றம் – மேயர், அமைச்சர், சட்டமன்ற பாராளுமன்ற மாநக ராட்சிமன்ற உறுப்பினர் நீங்கலாக தாராளமான மனமுள்ளவர் பெருங்குப்பமாய்ப் பேண்டு வைத்த மலம், நாற்றம், ஈரச் சாத சொதப்பு, ஈக்கள், சாலைக்கும் மருத்துவமனைக்கும் எக்ஸ்பிரஸ் ஹை வே அமைத்த பெருச்சாளிகள், பெருச்சாளிகள் ஆட்சியில் ஊழலும் இல்லை .

தலைக்கு மேல் கவிந்து நிற்கும் சீமைவாகை, வாத நாராயண மரங்கள், வல்லரசுகளின் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவு கணைகள் போல எப்போது வேண்டுமானாலும் தோள்பட்டை யில், உச்சியில் விழக் காத்திருக்கும் பறவை எச்சங்கள். மருத்துவ மனை வளாகத்தில் மரங்களும் நோய்ச் சூழலில் செழித்து வளர்ந் திருந்தன.

யாவற்றையும் சகித்துக்கொண்டு தென்திசை நோக்கி திருச்சி சாலையில் விரையும் பேருந்துகளுக்குக் காத்திருப்போர், எனது இருபதாண்டு கோவை வாழ்க்கையில் மிக சமீபத்தில் மூன்றாவது வாடகை வீட்டுக்குக் குடிபெயர்ந்திருந்தேன். தேசிய அறுவழிச் சாலையான அவிநாசி சாலைக்கும் நால்வழி திருச்சி சாலைக்கும் நடுவில் சிக்கிய நிலப்பரப்பு. எத்திசை போகும் சாலைக்கும் இரண்டு கிலோமீட்டர் நடக்கவேண்டும்.

நூறு ஏக்கர் தோட்டம் அழித்து ஐந்நூற்றுச்சொச்சம் மனைகள் பிரித்து அதில் இருநூற்றுக்கும் குறைவான வீடுகளே அமைந்த குடி இருப்பு. அகன்ற சாலைகள், கவிந்த மரங்கள், காலிமனைகள், புதர்கள் எனவாங்கு. தினமும் காலையில் நாகணவாய்ப்புள் எனப் படும் மைனா, செம்போத்து எனப்படும் செண்பகம், காடை, நாரை, கொக்கு, காகம், அணில்கள் எனப்படும் அணிற்பிள்ளை கள், ஒடக்கான் எனப்படும் ஓந்தான் அல்லது ஓணான், செவலை நாய்கள், சிட்டுக் குருவியைப்போன்று ஆனால் அதைவிடப் பெரியதான ஏழின் கூட்டங்களாய் வந்தமரும் Seven Sisters எனப் பட்ட சாம்பற் குருவிகள், அவ்வப்போது சாலையைச் சரசர வெனக் கடக்கும் சாரை, விரியன், நாகப் பாம்புகள், பகலில் மட்டும் மேய்ச்சலுக்கு வரும் பசுமாடுகள், ஆடுகள், மற்றும் இந்தக் கதாசிரியன்.

சுருக்கமாய்ச் சொன்னால் காட்டு பங்களாக்கள் கொண்ட காலனி அது. கார்கள் இல்லாத வீடுகள் இல்லை. காலை ஒன்பது மணிக்குமேல் மாலை ஆறுமணி வரை ஆள் நடமாட்டமும் இருக்காது. முன்கதவு சாத்தப்பட்ட வீடுகளுக்குள் ஓய்வு பெற்றவர் ஒடுங்குவர். முகவரி கேட்க உதிரி நாய்களுக்கு நம் மொழி புரியாது.

பங்களாவாசிகள் நடுவே நானோர் கால்நடை. பெரியாஸ் பத்திரி வாசலில் இருந்து குடியிருப்பு வழியாகப் போகும் பேருந் துகள் கிடைக்கும். மசக்காளிபாளையம், வரதராஜபுரம், உப்பிலிப் பாளையம் செல்பவை. இருபது நிமிடம் பயண தூரம், மூன்று ரூபாய்க் கட்டணம். S-2 என்றொரு பேருந்து வந்தது, தனியார் உந்து. அதிகக் கூட்டம் இல்லை . அரசுப் பேருந்தோ , தனியார் பேருந்தோ, சற்றுக் சுவனமாக ஏறவோ இறங்கவோ செய்யாவிட் டால் பேண்டும் கிழிந்து குண்டிச் சதையில் தையல் போட வேண்டியது வரலாம். எனினும் காருண்யம் மிக்க மக்கள் நலன் அரசு அந்தத் தடத்தில் பேருந்துகள் இயக்கிக் கொண்டிருந்தது.

பயணம் செய்கையில் ஏழெட்டு கல்லறைத் தோட்டங் களைக் காணவேண்டியதிருக்கும். திருக்குறளின் நிலையாமை அதிகாரம் வாசித்திராவிட்டாலும் கூட, வாழ்வின் நிச்சயமற்ற தன்மை சர்வ நிச்சயத்துடன் போத்தியப் பட்டுக்கொண்டே இருக்கும்.

உடையாம்பாளையம் நிறுத்தத்தில் அந்தச் சிறுவன் ஏறினான். எனது முன்சீட்டில் அமர்ந்து நடத்துநருக்கு இலவசப் பயண அட்டையைக் காட்டினான்.

மழை பெயர்வதற்கான ஆயத்தங்களைக் காட்டிற்று வானம். சுந்தர ராமசாமியிடம் இரவல் கேட்டால் – ஆயத்தங்களில் கழி கிறது காலம். பெரும்பாலும் ஆயத்தங்கள் ஏமாற்றம் அளிப்பவை. பெருமழைக் காலங்களில் பேருந்துகள் மேலே ஒழுகும், சன்னல் களைச் சாத்த முடியாது, கீழிருந்து சக்கரம் சுழற்றும் தண்ணீர் இண்டு இடுக்குகள் வழியாகப் பேருந்துத் தளத்தில் கொப்பளிக்கும்.

எனினும் மழை புல்லுக்கும் ஆங்கே பொசியும்.

எனது நிறுத்தம் வந்தது. பேருந்தின் படிகளை ஏன் இத்தனை உயரத்தில் வைக்கிறார்கள் என்பது வயதானவருக்கே உறைக் கிறது. நிறுத்தத்தில் கிடங்கில் வீழ்வது போல் படிக்கட்டில் இருந்து இறங்கி நடந்தேன். துல்லியமாக 600 மீட்டர் நடக்கவேண்டும். இதுவோர் வியாதி எனக்கு, நடக்கும் தொலைவை நேரத்திலும் தூரத்திலும் கணக்கிட்டு வைத்துக்கொள்வது.

சாலை மருங்குகளில் சோலைபோல் மரங்கள் வேம்பு, புங்கு, வாதநாராயணன், மஞ்சட்கொன்றை, செங்கொன்றை, மஞ் சணத்தி, பவளமல்லி, நீர்த்தேக்கு எனக் கவிந்து காடடைந்து கிடந் தது. மின்துறை வள்ளற்பெருமான்கள் கவாத்து எனப்படும் கொலைப்பணி தொடங்க ஆரம்பிக்கவில்லை போலும்.

சற்று நடந்து திரும்பிப் பார்த்தேன். ஒரு வீட்டு வாசலில் – நின்று இரு முழு மரங்களை இடுப்புக்கு மேல் தறித்துக் கொண்டி ருந்தனர். பங்களாவின் உள்ளும் வாசலிலும் இலை உதிர்ந்து குப்பை சேருகிறதாம். முடி உதிருகிறது என்று தலையை வெட்டும் அறிவாளிகள்.

உடையாம்பாளையத்தில் ஏறிய மாணவச் சிறுவன் வந்து கொண்டிருந்தான், இடது பக்கம் நுனிப்புல் மேய்ந்து கொண்டி ருந்த ஆறேழு வெள்ளாடுகளைப் பார்த்தவாறு. வெள்ளையாகத் தனது சீவிதம் தொடங்கி பழுப்பு நிறத்தில் ஆவியை விட்டுக் கொண்டிருந்த அரைக்கைச் சட்டை. துவைத்து உலர்த்திய ஆனால் தேய்த்து மடிக்காத காக்கிக் காற்சட்டை. பிற கான்வென்ட் பள்ளி மாணவன் போலன்றி முதுகுப்பார புத்தக மூட்டை, உணவுப் பை ஏதுமற்று வந்தான். கையில் கோர்த்து தோளில் தொங்கிய காக்கிப் புத்தகப்பை. கால்களில் செருப்புக்கே வழியில்லை, சாக்ஸ் ஷூவுக்குப் போவதெங்கே? அதென்னவோ இந்தியா முழுக்க கான்வென்ட் மாணாக்கர் தனித்தினுசாகவும் முனிசிபாலிட்டி, கார்ப்பரேசன், அரசுப் பள்ளி மாணாக்கர் வேறு தினுசாகவும் இருக்கிறார்கள். யாவரையும் 2020-ஐக் கனவு காணச் சொன்னார் முன்னாள் குடியரசுத் தலைவர். கனவு ஒரேவிதத்தில் வருமா என்ற யோசனை அவருக்கு இருந்திருக்குமா?

பெருந்தனவந்தர், தொழிலதிபர், மருத்துவர், நூற்பாலை சொந்தக்காரர் வாழும் குடியிருப்புக்குள் இவனெங்கே போகிறான் என்று தோன்றியது. சற்றுத் தழைய நடந்தேன். முந்திய நாட்களில் பெய்த மழையில் இடப்பக்கம் இருந்த கிரிக்கெட் ஆடும் மைதானம் ஏரிபோல் தோன்றியது.

அவன் அருகில் வந்ததும், ” இங்கே எங்க வீடு?” என்றேன்.

“மசக்காளி பாளையம்”

“S-4 போகும்லா ?”

“பிரேக் டௌன், அடுத்த பஸ் நேரமாகும். இப்பிடி குறுக்குப் பாதையிலே போயிருவேன்.”

எப்படியும் என் வீட்டு வழிதான் போகவேண்டும்.

“என்ன படிக்க?”

“எட்டு “

பள்ளியின் பெயர் சொன்னான். அவசரமாய்த் தலைக்கு மேல் பறந்துபோன கிங்ஃபிஷர் விமானத்தின் இரைச்சலில், சொன்னது சரியாகக் காதில் விழவில்லை. உடையாம்பாளையத்தில் இருக் கும் மாநகராட்சிப் பள்ளியாக இருத்தல் வேண்டும். புலியகுளம் சாலையில் இருக்கும் கார்மல் கார்டனோ, மீனா எஸ்டேட்டில் இருக்கும் கேந்த்ரீய வித்யாலயாவோ இவ்வகை மாணவரை ஆதரித்துப் பயிர் செய்வதில்லை. அது வேறு உலகத்தார் சேவை.

“சாப்டியா?”

“சத்துணவு தாறாங்கள்ள…”

வானம் இருண்டு குமுறியது, மின்னலடித்தது. மலையாள மின்னல் ஈழமின்னல் போல் கொங்குமின்னலும் சூழ மின்னியது. பொழியலாம், பொய்க்கவும் செய்யலாம். ஆனால் இத்தனை ஆயத்தங்களுடன் பொழிய ஆரம்பித்தால் சரிக்கும் பெய்யும்.

சற்று அதிரத் துளிகள் வீழ்ந்தன. ஒரு நனைதலைத் தவிர்க்கலாம் என வேகமாக நடந்தோம். அலுவல் காகிதங்கள், தோல் காலணி, கைக்கடிகாரம், செல்ஃபோன் யாவற்றையும் நனையாமல் காபந்து செய்தல் வேண்டும். பெரிதாயும் அவசர மாயும் ஒருச்சாய்ந்தும் அடர்ந்தும் துளிகள் சொரிந்தன. இனி, பசும்புல் தலை காண்பது இனிது.

புங்கமரம் சின்னத் தூறல் குடை தாங்கும். ஒதுங்கத் தலைப் பட்டான்.

“இந்த மழைக்கு மரம் தாங்காது. ஓடியா… என் வீடு பக்கம்

தான். “

ஓட்டமும் நடையுமாகக் கேட்டைத் திறந்து போர்ட்டிகோ அடைந்தோம். பெரிதாக நனைந்து விடவில்லை. சிறிய ஓட்டம் தான் எனினும் என் வயதுக்கு இளைத்தது மூச்சு. காலணியை உதறிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தேன்.

“உள்ள வா?”

“இல்லீங்க.”

“சும்ம வா… வந்து உக்காரு…”

வெளியில் மூலையில் நின்றிருந்த டிரம்மில் தண்ணீர் கோரி, வெற்றுக் கால்களைக் கழுவிவிட்டு உள்ளே வந்தான்.

ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து மழை, சார்ங்கம் உதைத்த சரமழையாய்க் கொட்டிற்று.

“சாப்பிடலாமா?” என்றாள் மனைவி. சட்டை, பேன்ட் கழற்றி வேட்டிக்கு மாறினேன்.

“சாப்பிடலாமாப்பா?” என்றேன்.

“சொன்னம்லா சார், சாப்டாச்சு.”

“பரவால்ல, எங்கூட கொஞ்சம் சாப்பிடு.”

மனைவி என் முகம் பார்த்தாள். எனக்குத் தெரியும் இரு வருக்குத்தான் சோறு இருக்கும் என. இது நகர வாழ்க்கை . அவளுக்கு சிக்கல் கிடையாது. பற்றாக்குறைக்கு இரண்டு தோசை சுட்டுக்கொள்வாள் தனக்கு.

“இல்ல சார், நீங்க சாப்பிடுங்க.”

“சும்ம வா… பையைக் கீழ வை, எதுக்கு சுமக்க? மழை வெறிக்கட்டும்!”

அரை மனத்துடன் வந்தமர்ந்து உண்டான். வெண்டைக்காய் புளிக்கறி, தண்டன்கீரை துவரன், மோர், நெல்லிக்காய் ஊறுகாய். மனைவி பார்த்துப் பார்த்துப் பரிமாறினாள். எப்படியும் தோசைக் கல் போட வேண்டியதுதான்.

மழை வெறிப்பதற்கான கோள் இல்லை. வழக்கமாய், சாப்பிட்ட உடன் சற்றுப் படுப்பேன்.

ஏஷியா – நெட்டில் சுரேஷ் கோபி படம் ‘டைகர்’ ஓடிக் கொண்டிருந்தது.

“ஒரு குடை இருந்தாக் குடுங்க சார்… நாளைக்குக் கொண்டாந்திருவேன். மழை நிக்காது போல்ருக்கு.”

“அவசரமாப் போயி என்ன செய்யப் போறே?”

“படிக்கணும் சார். நாளைக்கு பௌதீகம் டெஸ்ட்.”

“ராத்ரி பூராப் படிக்கலாமே! மணி நாலு தானே ஆகு?”

“ஒம்பது மணிக்கு மேல படிக்க முடியாதுங்க.”

“ஏன், ஒறக்கம் வந்திருமா?” “இல்லங்க, வௌக்க அணைச்சிருவாங்க.”

“என்னது. பசங்க தேர்வுக்கு படிக்கச்சிலே யாராவது வௌக்க அணைப்பாங்களா? யார் அந்தப் புத்திசாலி? அம்மாவா, அப்பாவா?”

“பெரியம்மா சார்! சேந்த வீடு. ரெண்டு வீட்டுக்கும் ஒரே கனெக்சன். கரண்ட் சார்ஸ் ஆளுக்குப் பாதி. ஒம்பது மணி உண்டும்ணா வௌக்கு அணைஞ்சிடும்.”

“ஏன், பெரியப்பா கிட்டே சொல்லப்பிடாதா?” “அவுருட்டே சொன்னா எட்டரைக்கே அணைச்சுருவாரு!”

“அவங்க பசங்களும் படிப்பாங்கல்ல?”

“ரெண்டு பேருக்கும் படிப்பு ஏறல்ல. காளப்பட்டி வொர்க் ஷாப் போறாங்க…”

“காலையிலே படிக்க விடுவாங்களா?”

“சூரிய வெளிச்சத்துல படிக்கலாம். ஸ்கூலுக்கு பொறப்படணும்லங்க…”

மனைவி முகத்தைப் பார்த்தேன்.

“இந்தக் காலத்திலே இப்பிடியும் ஆளுகோ…” என்றாள்.

“அப்பா என்ன செய்றாரு?”

“கேரளாவுக்கு கொல்லத்து வேலைக்குப் போனாரு… திரும்பி வரல்லே. மூணு வருசம் ஆச்சு… அம்மா மில்லுக்குப் போவுது.”

மழை சற்று வெறித்தாற் போலிருந்தது.

“ஒத்த ஓட்டத்திலே ஓடிருவேன் சார்.”

“செத்த இரு…”

ஏதோ ஒரு செமினாரில் தமிழுக்கு களை பிடுங்கியதற்குக் கொடுத்த ரெச்சின் தோள்ப்பை ஒன்று கிடந்தது புதிதாகவே. பள்ளிப் பையாகவும் பயன்படுத்தலாம். எடுத்துக் கொடுத்தேன். மனைவி உபயோகிக்காமல் கிடந்த மடக்குக் குடை ஒன்று கொண்டு வந்தாள்.

“வச்சுக்கோ… திரும்பக் கொண்டாராண்டம் என்ன?”

“சரி, பாத்துப் போ… நல்லாப் படி என்னா ? படிப்பு ஒண்ணுதான் பெலம் பாத்துக்கோ… என்னமாம் வேணும்ணா கூச்சப்படாம வந்து கேளு…”

இன்னும் தூற்றிக்கொண்டுதான் இருந்தது.

குடையை விரித்துப் பிடித்தபடி, இரண்டு பைகளையும் கையில் தொங்கப்போட்டு நடந்து போனான். மசக்காளிப் பாளையம் இன்னும் ஒரு கல் தொலைவு.

போகும் அவன் முதுகைப் பார்த்தபடி நின்றேன். ஒளிரும் பாரதத்தின் வரைபடம் தெரிந்தது.

– ‘இருவாட்சி’ பொங்கல் சிறப்பிதழ் சனவரி – 2010.

நன்றி: https://nanjilnadan.wpcomstaging.com/

நாஞ்சில்நாடன் நாஞ்சில்நாடன் வாழ்க்கைக் குறிப்பு: பெயர் : G. சுப்ரமணியம் (எ) நாஞ்சில் நாடன்எழுதும் துறை : நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரைபிறந்த நாள் : 31 டிசம்பர் 1947பிறந்த இடம் : வீரநாராயணமங்கலம்தாழக்குடி அஞ்சல், தோவாளை வட்டம்,கன்னியாகுமரி மாவட்டம்.தமிழ் நாடு – 629 901.முகவரி : G. Subramaniyam (NanjilNadan)Plot No 26, First Street, VOC Nager, Near Euro Kids, KovaipudurCoimbatore – 641 042, Tamilnadu.Phone:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *