கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 10, 2026
பார்வையிட்டோர்: 71 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஐரோப்பாக் கண்டத்தில் சுவிட்சர்லாந்து நாடு உள்ளது. அந் நாட்டில் வில்லியம் தெல் என்ற மலைவாசி ஒருவன் வாழ்ந்துவந்தான். அவன் உடல்வலிமை உடையவன்; உள்ள உறுதி உடையவன். அவன் நாடு அவனுக்கு உயிர். 

இளமையில் கல்வி கற்பதற்கு வேண்டிய வசதிகள் அவனுக்குக் கிடைக்கவில்லை. வேட்டையாடுவதே அவன் தொழில். குறி தவறாமல் அம்பு எய்வதில் மிகவும் கெட்டிக்காரன். 

ஆத்திரிய நாட்டை ஓர் அரசன் ஆண்டுவந்தான். அவன் மண்ணாசை பிடித்தவன். சுவிட்சர்லாந்து நாட்டின்மீது அவன் படையெடுத்துவந்தான். பெரும் போர் நடந்தது. கடைசியில் ஆத்திரிய மன்னன் வெற்றி பெற்றான். அவன் சசுலர் என்னும் ஒருவனை அந் நாட்டிற்குத் தலைவனாக்கினான். சசுலர் இரக்கம் இல்லாதவன். அவன் கொடுங்கோல் ஆட்சிபுரியத் தொடங்கினான்; மக்களை மக்களாகவே மதிக்க வில்லை; ஆடுமாடுகளைப் போல் எண்ணிக் கொடுமைப் படுத்தினான். 

ஏழைகள் என்ன செய்வர்? மிகவும் துன்புற்றனர். பொறுக்கமுடியாத துன்பத்தினால், கண்ணீர் சிந்தினர். மக்கள் அழுத கண்ணீர் அவன் மனத்தை கரைக்க வில்லை. அரச பதவியின் ஆணவம் அவன் அறிவை மழுங்கவைத்தது. அந்தக் கொடியவனிடம் சென்று யாரும் எடுத்துச் சொல்லவும் துணியவில்லை. 

சசுலர் வெட்டவெளியில் தூண் ஒன்றை நிறுத்தி னான். அதன்மேல் தொப்பி ஒன்றை மாட்டினான். அவ்விடத்தில் வீரர் சிலரைக் காவலுக்கு நிறுத்தினான். வீரர்கள் இரவும் பகலும் காவல் காத்தனர். அந்தத் தூண் நிறுத்தப்பட்டுள்ள வழியாக வருகின்றவர் எவராக இருந்தாலும் முழங்கால் மண்டியிட்டு அந்தத் தொப்பிக்கு வணக்கம் செலுத்த வேண்டும். எவரேனும் அந்தத் தொப்பிக்கு வணக்கம் செலுத்தாமல் போனால் கடுந்தண்டனைக்கு ஆளாவார்கள். அதற்கு உடன் படாத சிலரைச் சசுலர் கொன்றுவிட்டான். 

அடிமை வாழ்வு வாழ விரும்பாத சிலர் மலைப் பக்கங்களில் சென்று மறைந்து வாழ்ந்தனர். அவ்வூரி லேயே தங்கியிருந்த சிலர் அந்தத் தூண் நிறுத்தப் பட்ட வழியாகச் செல்வதையே விட்டுவிட்டனர். இன்றி யமையாத செயலை முன்னிட்டு வேறு வழியின்றி அவ் வழியே செல்ல நேரிட்டபோது வெறுப்பு உணர்ச்சியோடு ஒருசிலர் அந்தத் தொப்பிக்கு வணக்கம் செலுத்திவிட்டுச் சென்றனர். பொதுவாக அந் நாட்டு மக்கள் அனை வருக்கும் அந்நிகழ்ச்சி உள்ளக் கொதிப்பை உண்டாக்கி விட்டது. அவனுடைய ஆணவப்போக்கு யாருக்கும் பிடிக்கவில்லை. 

வில்லியம் தெல் ஒரு நாள் காட்டில் வேட்டை யாடியபின் களைப்புடன் வீடு திரும்பினான். அன்று அவன் வந்த வழியில் தொப்பி இருந்தது. தொப்பிக்கு வணக்கம் செலுத்தவேண்டும் என்பதை அவன் அறிய வில்லை. அவன் அந்தத் தூணைக் கடந்து நேரே போய்க்கொண்டிருந்தான். உடனே அங்குக் காவல் புரிந்துவந்த வீரர்கள் ஓடிவந்தனர். வில்லியம் தெல்லைச் சூழ்ந்துகொண்டனர். அவனை இறுகப் பிடித்துக் கொண்டுபோய்ச் சசுலர்முன் நிறுத்தினர் ‘தொப்பிக்கு இவன் வணக்கம் செலுத்தவில்லை’ என்று கூறினர். 

சசுலர், “அடே! நீ ஏன் தொப்பிக்கு வணக்கம் செய்யவில்லை?” என்றான். 

வில்லியம் தெல், “உயிரில்லாத தொப்பிக்கு வணக்கம் செலுத்துவது என் பழக்கம் இல்லை” என்று அஞ்சாமல் பதில் கூறினான். சசுலர் கோபமாக “நீ என் தொப்பிக்கு மரியாதை செலுத்தாததோடு என்னையும் அவமானப்படுத்திவிட்டாய். இக் குற்றத் திற்கு மரண தண்டனைதான் விதிக்கவேண்டும். ஆனால் நீ ஒரு வீரனாக இருப்பதால், உனக்கொரு பந்தயம் வைக்கிறேன். அதில் நீ வெற்றிபெற்றால் உன்னை விடுதலை செய்கிறேன். இல்லையானால் நீ இறப்பது உறுதி” என்றான். 

வில்லியம் தெல் அமைதியாக “என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான். 

அப்போது வில்லியம் தெல்லின் மகன் ‘அப்பா! அப்பா!’ என்று அழைத்துக்கொண்டே அங்கு ஓடி வந்தான். தெல்லின் இரண்டு கால்களையும் இறுகக் கட்டிப் பிடித்துக்கொண்டான். 

கொடுமையே உருவாக அமைந்த சசுலர் தெல்லின் குடும்பத்தையே அழித்துவிடவேண்டும் என்று திட்ட மிட்டான். அதற்கான எண்ணத்துடன் “வில்லியம்! நீ வில்வித்தையில் பெரிய வீரனாயிற்றே! இப்பொழுது நான் உன் ஆசை மகனின் தலைமேல் அழகிய ஒரு பழத்தை வைக்கிறேன். சிறிது தொலைவில் அவனை நிறுத்திவைக்கிறேன். குறி தவறாமல் நீ அந்தப் பழத்தின்மீது அம்பு எய்து வீழ்த்தினால் உனக்கு விடுதலை அளிப்பேன் இல்லையானால் நீ இறப்பாய்!” என்றான். 

சசுலர் சொல்லியபடியே வில்லியம் தெல்லின் மகனைத் தொலைவில் நிறுத்தினான். சிறுவனின் தலையில் ஓர் ஆப்பிள் பழத்தை வைத்தான். அம்பு எய்து அந்த ஆப்பிளை வீழ்த்துமாறு ஆணையிட்டான். 

நாடு அடிமைப்பட்டிருந்த அந்த நிலையில் வில்லியம் தெல்லால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆணைக்கு அடங்குவது ஒன்றே அப்பொழுது செய்யக் கூடிய செயலாக இருந்தது. எதிரிலே நிறுத்தப்பட் டிருந்த மகனைப் பார்த்ததும் தெல்லுக்குத் துயரம் தாளமுடியவில்லை. தன் மகனைத் தன் கை அம்பினாலேயே கொல்லும்படியாக ஆகிவிட்டால் என்ன செய்வது என்று எண்ணிச் சொல்லமுடியாத துன்பம் அடைந்தான். 

பிறர் துன்பத்தில் இன்பம் காண்பதே கொடியவர்களின் செயலாகும். சசுலர் வில்லியம் படும் மன வேதனையைக் கண்டு சுவைத்துக் கொண்டிருந்தான். தன்னுடைய புத்திசாலித்தனத்தால் மகனையும் தந்தை யையும் ஒருசேரப் பழிவாங்கிவிட்டதாகப் பூரித்துக் கொண்டிருந்தான். 

வேறு வழி இல்லாமையால் வில்லியம் தெல் தன் மகன் தலையில் வைக்கப்பட்டிருந்த ஆப்பிள் பழத்தைக் குறிபார்த்து அம்பு எய்தான். இறைவன் அருளால் வில்லியம் தெல் எய்த அம்பு ஆப்பிளைப் பிளந்து கொண்டு ‘விர்’ரென்று பாய்ந்து சென்றது. பயந்து தடுங்கிக்கொண்டிருந்த சிறுவன் ‘அப்பா!’ என்று அலறிக்கொண்டு ஓடிவந்தான். வில்லியம் தெல் தன் மகனைத் தழுவிக்கொண்டான். அங்குக் கூடியிருந்த மக்களும் கொடுமையே உருவான சசுலரும் வியப்போடு அக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தனர். 

சசுலர் தன் எண்ணம் மண்ணாகிப் போனதை நினைத்து வருந்தினான். இருந்தாலும் அவனுடைய தீய எண்ணம் போகவில்லை. 

வில்லியம் தெல் தன் மகன் தலையில் இருந்த ஆப்பிளைப் பிளக்க அம்பு எய்த பிறகு மற்றோர் அம்பைக் கையில் எடுத்தான். சசுலர் அதனைக் கவனித்துவிட்டான். எனவே, அவன் வில்லியம் தெல்லைப் பார்த்து “அடே! நீ ஓரம்பு எய்த பிறகு மற்றோர் அம்பை ஏன் எடுத்தாய்?” என்றான். 

வில்லியம் தெல் சிறிதும் அஞ்சாமல் அமைதியாக, ‘முதல் அம்பு குறி தவறி என் உயிரனைய மைந்தனைச் கொன்றுவிட்டால் அடுத்த நொடியே உன்னையும் விண்ணுலகிற்கு விருந்தாக அனுப்பவே இரண்டாவது அம்பை எடுத்தேன்?” என்றான், 

சசுலருக்கு அடக்கமுடியாத கடுங்கோபம் பொங்கி எழுந்தது. உடனே தன் ஆள்களை அழைத்தான் வில்லியம் தெல்லைச் சிறையில் அடைக்கும்படி கட்டளை இட்டான். 

வீரர்கள் பாய்ந்துசென்று வில்லியம் தெல்லைப் பிடித்துக் கெட்டியாகக் கட்டினர். சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனர். சிறைச்சாலை ஓர் ஏரிக்கு அப்பால் ஒரு குன்றின்மேல் இருந்தது. வீரர்கள் தெல்லை ஒரு படகில் ஏற்றினர். சசுலர் தானும் அந்தப் படகிலேயே அமர்ந்து படகைச் செலுத்துமாறு பணித் தான். படகு ஏரியின் நடுவே சென்றுகொண்டிருந்தது. எங்கிருந்தோ திடீரெனப் புயல் வீசத் தொடங்கிற்று. படகைச் செலுத்தியவர்கள் புதியவர்கள். கரைக்கு எப் பக்கம் செல்வது என்றே அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் திக்குத் தெரியாமல் திண்டாடினர். கொடிய வனான சசுலர் தவியாய்த் தவித்தான். ‘வீரர்களே! இம் முரடனின் கைவிலங்கைக் கழற்றிவிடுங்கள். இவனுக்கு வழி தெரியும். இவனே படகைக் கரைக்கு ஓட்டிச் செல்வான்” எனக் கூறினான். வீரர்கள், வில்லியம் தெல்லின் கை விலங்கைக் கழற்றினர். வில்லியம் தெல் படகைத் திசையறிந்து செலுத்தினான். 

படகு கரையை நோக்கி வந்தது. அப்பொழுது வில்லியம் தெல் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவனைப்போல் காணப்பட்டான். மிகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தான். அவன் படகிலிருத்து குபீரெனத் தாவிக் குதித்தான். படகு பாறையில் மோதிக் கவிழுமாறு வேகமாகத் தள்ளினான். படகு பாறையில் மோதிற்று. படகு உடைந்தது. சசுலரும் வீரர்களும் ஏரியில் மூழ்கி மாண்டனர். 

“கூரம் பாயினும் வீரியம் பேசேல்.” – கொன்றைவேந்தன் 

”கொடுங்கோல் மன்னர் வாழும் நாட்டில் 
கடும்புலி வாழும் காடு நன்றே.” – வெற்றிவேற்கை 

– கதைத் திரட்டு, ஆறாம் வகுப்பு, முதற் பதிப்பு: 1980, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை.

புலவர் த.முருகேசன் புலவர் த. முருகேசனார் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு சிறந்த தமிழறிஞரும், மாகாணத் தமிழாசிரியர் கழகத்தின் முக்கிய ஆளுமையும் ஆவார். புலவர் த. முருகேசனார் (24.06.1921 -18.02.2005) - முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: சிதம்பரம் புலவர் த. முருகேசனார் அவரைப் பற்றிய முக்கியத் தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன: மாநாடுகள் ஒருங்கிணைப்பு: இவர் 1954 ஆம் ஆண்டில் மாகாணத் தமிழாசிரியர் கழகத்தின் நான்காவது மாநாட்டினை அண்ணாமலை நகரில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *