மானங்காக்கும் மண்
கதையாசிரியர்: ச.வே.பஞ்சாட்சரம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: October 11, 2026
பார்வையிட்டோர்: 8
(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தமிழ், சிங்களம் முதலிய நம்நாட்டு மொழிகள் ஒவ்வொரு பாடமாக மட்டுமே ஈழத்துப் பள்ளிக்கூடங்களில் படிப்பிக்கப்பட்டு வந்த வெள்ளையராட்சிக் காலம் அது. அந்த நாளைய கல்லூரி ஒன்றில் சிரேட்ட வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான் சின்னத்தம்பி.
அன்று ஆங்கிலப் பாட நேரம், ”ஆங்கிலக் கல்வியின் அவசியம்” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதும்படி பணித்த ஆங்கிலபாட ஆசிரியர். ஒவ்வொரு மாணவனையும் ஒவ்வொரு குறிப்புக் கூறும்படியும் கட்டளையிட்டார். எல்லா மாணவர்களுக்கும் எ ஆங்கிலம் படித்தால் அரசாங்க உத்தியோகம் பெறலாம் என்ற பல்லவியை மட்டும்தான் பாடத் தெரிந்திருந்தது. சின்னத்தம்பி மட்டும் மௌனமாக இருந்தது கண்ட ஆசிரியர் ‘என்ன! ஆங்கிலப்புலி அடக்கமாக இருக்கிறது!” என்று அவனைச் சீண்டினார்.
மெல்ல எழுந்து நின்ற சின்னத்தம்பி “ஆங்கிலம் உலகமொழியாதலாலும், உலக இலக்கியங்களையும் அறிவியல் நூல்களையும் வேண்டிய அளவு படித்தறிய ஆங்கில மொழி ஒன்றைப் படித்தாலே போது மாதலாலும், நம்மருந்தமிழ் மொழியில் பல இலக்கிய, விஞ்ஞான நூல்களை மொழிபெயர்க்கலாமாகையாலும், சகலதுறைகளிலும் வளர்ச்சிபெற ஆங்கில அறிவு அவசியம் ஆதலாலும், தன்மானம் உள்ளவர்களும், பூமியில் எவர்க்கும் அடிமை செய்து கஞ்சி குடிக்க விரும்பாதவர்களும் ஆங்கிலத்தைக் கற்கலாம்” என்று குத்தலாக மொழிந்து அமர்ந்தான்.
ஆங்கிலத்தைப் பள்ளியில் பயின்றதோடு தமிழிலக்கண இலக்கியங்களையும் வீட்டில் அனுபவித்துப் படித்து மகிழ்ந்த சின்னத்தம்பி, பள்ளிப் படிப்பு முடிந்ததும் தேசத்து மொழிகளை மதங்களை கலை கலாச்சாரங்களை, நம்பிக்கைகளை, தனித் தன்மைகளை மதிக்காமல் தேசமக்களை அடிமை கொண்டு ஆண்ட ஆங்கில அரசுக்குத் தொண்டு செய்ய நினைக்கவில்லை.
முதுசொம்மாகக் கிடைத்த 2 ஏக்கர் வயல் மண்ணில் மாடாக உழைத்ததன் மூலம் பெருவாரி நிலங்களுக்குச் சொந்தக்காரனாகவும், ஓய்வு நேரங்களைப் புத்தகங்களுடனும், இல்லற வாழ்விலும் செலவிட்டதற்குப் பலன் பேரறிவாளனாகவும், ஐந்து பிள்ளைகளுக்குத் தந்தையாகவும் மாறிவிட்டான்.
தான் தேடிய விளை நிலங்களைப் பங்கிட்டளித்தும், தான் பயின்ற நூல்களைப் பங்கிடாதளித்தும், தன் பிள்ளைகளுக்குக் கூறிய அறிவுரை,
“என் மொழியை. என் மதத்தை, கலை கலாச்சாரங்களை இகழ்ந்தவர்களிடம் கையேந்திப் பிழைக்காத வண்ணம் என் தாய் தந்தையர் தேடி வைத்த நிலபுலங்கள் என்னைக்காத்தன. நான் தேடிவைத்தவைகள் உங்களை அந்த அவமானத்திலிருந்து காப்பாற்றும். இனி நீங்கள் தேடிவைக்கும் நில புலங்கள் உங்கள் பிள்ளை குட்டிகளையும் தன்மானத்தோடு வாழவைக்கப் போதுமானவையாக இருக்கவேண்டும்” என்பதுதான்.
– சின்னஞ்சிறு கதைகள் (முதலாம் தொகுதி), முதற் பதிப்பு: 1969, தமிழருவிப்பதிப்பகம், சுன்னாகம்.
தொடர்புள்ள சிறுகதைகள்
தானியங்கி பண இயந்திரம்
ரா.நீலமேகம்
October 18, 2026
ரத்தம் ஒரே நிறம்
காஞ்சி.தங்கமணி சுவாமிநாதன்
October 18, 2026
அமைதியின் குரல்
புஷ்பராஜ் கந்தசாமி
October 18, 2026