செக்கு மாடு! மக்குமண்டை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 11, 2026
பார்வையிட்டோர்: 81 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரவுப் பாடவகுப்புக்குப் போவதாக வீட்டில் சொல்லி விட்டுப் படம் தொடங்கும் நேரம் பார்த்து அந்தத் தியேட்டருள் நுழைந்து கொண்ட ஜெயம் ஒரு முக்காடிட்ட தும்புக்கட்டு மீசைக்காரனுக்குப் பக்கத்திலிருந்த காலி ஆசனத்தில் அமர்ந்து கொண்டான்.

படம் தொடங்கி விட்டது. சிரித்தும் கண்ணீர் விட்டும் ஆத்திரப்பட்டும் படத்திலே ஒன்றியிருந்த ஜெயத்துக்கு மறுபக்கத்திலிருந்தவர் ஓர் அம்மையாராக இருந்ததால் அவரிடம் அவன் பேசத் துணியாமல் முக்காடுகாரன் பக்கம் திரும்பி  “என்ன அருமையான படம்! நைட்கிளாசைக் கட் பண்ணினாலும் பரவாயில்லை” என்றான்.

அந்த அயலவரும் ”ஆமாம்! நல்ல படம்!” என்றார் கரகரத்த குரலில்!

“நான் பகல் ஷோ பார்த்திருப்பேன் பள்ளிக்கூடத்தில் அதிபர் இரண்டாம் தடவையும் வார்ண் பண்ணி விட்டார்!”

”ஆ! அப்படியா? பாவம்” கரகரத்த குரல் பரிந்தது.

“பரவாயில்லை. கேட்ட நேரமெல்லாம் அம்மா பணந்தருவதால் ஒரு படமும் நான் தவறவிடுவதில்லை!”

அயலவர் குரல் மீண்டும் கரகரத்தது. “ஏன்? அப்பா இல்லையா?”

“அந்தச் செக்கு மாட்டுக்கு  இந்தச் சினிமா அருமை எங்கே தெரியப்போகிறது? மாளிகைப் பக்கம் நான் தலைகாட்டப் படாதென்பது அதன் கட்டளை! அந்த மக்கு மண்டைக்கு என் ‘டூப்’ எட்டினால் தானே!” என்று சொல்லிக் கொண்டிருந்தவன், படத்தில் ஒரு நகைச்சுவையைக் கண்டு ‘ஹோ’வென்று சிரித்துத் துள்ளி விழுந்த பொழுது அந்த அயலவரின் முகத்தில் அவன் கைபட்டு அங்கிருந்த தும்புக்கட்டு மீசை கழன்றுவிழ முக்காடும் வழுகிப் பிடரிப்பக்கம் போய்விட “மன்னிக்க வேண்டும்” என்றபடி அவர்பக்கம் திரும்பித் திடுக்கிட்டு ஆளை உற்று உற்றுப் பார்த்தான்.

மறுகணம் பதறி எழுந்து உள்ளே இருந்தவர்களையும் மிதித்துழக்கிக் கொண்டு விழுந்த ஏச்சுக்களையும் பொருட்படுத்தாமல் விழுந்தடித்தோடி வெளியேறுகிறான்.

அவன் வெறிச்சோட விட்டிருந்த ஆசனத்துக்கு அயலவனாகிவிட்ட பழைய மீசைக்காரன் வெற்றிப் பெருமிதத்தோடும் சற்றே ஆத்திரத்தோடும் சிரித்துக் கொண்டிருந்தார்.

அது வேறுயாருமல்ல; அவனது செக்கு மாடு மக்கு மண்டை அப்பாவேதான். 

– சின்னஞ்சிறு கதைகள் (முதலாம் தொகுதி), முதற் பதிப்பு: 1969, தமிழருவிப்பதிப்பகம், சுன்னாகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *