இப்படியும் ஒரு பெண்!
கதையாசிரியர்: ச.வே.பஞ்சாட்சரம்
கதைத்தொகுப்பு:
காதல்
கதைப்பதிவு: October 11, 2026
பார்வையிட்டோர்: 95
(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கைகளுள் முகத்தைப் பொத்திக் கொண்டு குலுங்கினாள் சுசீலா.”உங்களை என்று கண்டேனோ, அன்றே என்னை நான் இழந்துவிட்டேன். நீங்கள் மணமானவர் என்று சொல்லி என் காதலை மறுத்த பின்னும், என்னை வெறுத்து ஏசிய பின்னரும், நான் தொல்லை கொடுப்பதாக நீங்கள் மேலிடத்தில் புகார் செய்ததை அறிந்தும், நான் வேலை நீக்கம் செய்யப்பட்டும் இன்று சோற்றுக்கும் சேலைக்குமே வழியற்று நடுத்தெருவில் நிற்கும் போதும், உங்களை என்னால் கோபிக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்றும் வெறுக்க முடியவில்லை. மறக்க முடியவில்லை”.
“என் மனைவிக்கு மட்டும் இப்படி ஒரு பாசம் என் மீதிருக்கக் கூடாதென்று எண்ணுகிறீர்களா?” சேகர் கல் மனங்கலங்காமல் கேட்டான்.
“இருக்கட்டுமே! அவர்களும் உங்களுக்குரியவராக இருக்கட்டுமே! சேகர்! என்னால் உங்களைப் பிரிந்து வாழ முடியவில்லை. சமூகம் பெரும்படியாக அமைத்த கட்டுப்பாடுகள் என்விடயத்தில் பலமற்று நிற்கின்றன. நான் என்ன செய்வேன்!” அவள் தேம்பினாள்!
அந்தச் சில வினாடிகள் நிலவிய பயங்கர அமைதியின் நடுவே…… ஒரு சோதிடன் சேகரின் சாதகத்தைப் பார்த்து அவனுக்கு நிச்சயம் இரு மனைவியர் இருப்பர் என்ற போது அவன் அப்பா கவலைப் பட்ட நிகழ்ச்சியும். அவன் திருமணம் புரிந்த புதிதில் கோயில் சென்று தன் இல்லற வாழ்வில் புயல் கிளம்பாமல் காக்கும்படி வேண்டியழுத அனுபவமும் நினைவில் வந்து போகின்றன.
சுசீலா கையிலிருந்த புட்டியொன்றை சேகரிடம் நீட்டி, “இந்தாருங்கள்! உங்கள் கையால் இதைத்திறந்து தாருங்கள். சாவிலாவது நிம்மதியை அளியுங்கள்” என்று கெஞ்சிச் சோர்ந்து அழுதபோது சேகர் உடல் பதற அவளை மிரண்டு மிரண்டு உற்றுப் பார்த்தான்.
அவன் நெஞ்சம் அதிர்ந்து, கலங்கி, நைந்து உருகி, இரங்கிப் பதைத்து, ஆவேசப்பட்டு, “சுசீலா!” என்று அலறிக் கொண்டே அவளை இறுகக் கட்டி அணைத்துக் கொண்டான்.
அவள் சிக்கேறிய கூந்தலும் அழுக்கேறிய முதுகுச் சட்டையும் சேகரின் கண்ணீரால் நனைந்து கொண்டிருந்தன.
”உங்கள் முதல் மனைவிக்கு இரண்டு கால்களும், அவற்றைக் கட்டிக் கொண்டு கெஞ்சிக் கண்ணீர் வடிப்பதற்கு எனக்குப் பொறுமையும் உள்ளவரை, நீங்கள் பயப்பட வேண்டாம்!” அணைப்பில் இருந்தபடி சுசீலா ஆனந்தமாகப் பேசினாள்.
– சின்னஞ்சிறு கதைகள் (முதலாம் தொகுதி), முதற் பதிப்பு: 1969, தமிழருவிப்பதிப்பகம், சுன்னாகம்.
தொடர்புள்ள சிறுகதைகள்
மறுபக்கம்
தில்சாத் எ.எச்.எம்.
October 18, 2026
தீரவே தீராத காதல்
புஷ்பராஜ் கந்தசாமி
October 15, 2026
அவள் கேட்ட கேள்வி
இரஜகை நிலவன்
October 12, 2026