எல்லாருக்கும் கிடைப்பதில்லை இன்னொரு வாய்ப்பு
கதையாசிரியர்: அபிநந்தினி மோகன்
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: February 8, 2026
பார்வையிட்டோர்: 3,096
“விதி மாற்ற வல்லவளே புவனேஸ்வரி.. என் வாழ்வே உன் விழிதான் என் சர்வேஸ்வரி”
ஏம்மா என் விதிய மட்டும் மாத்தல, என அழுது கொண்டிருந்தவளின் துப்பட்டா அவள் கழுத்தை இறுக்கி கொண்டிருந்தது. அந்த இறுக்கம் அவளை கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் என்ற அந்த மர்ம உலகிற்கு இழுத்து கொண்டிருக்க பயணப்பட்டாள்.
பயணத்தின் பாதியில் அவள் செய்த புண்ணியத்தின் பலனாக யார் குரலுக்கோ ஓடிக்கொண்டிருந்த பகவானை பாதி வழியிலேயே சந்திக்க முடிந்தது.
“அதுக்குள்ள ஏன் வந்த? உனக்கான காலம் இன்னும் முடியலயே?” என பரந்தாமன் கேட்க,
“எவ்ளோ கஷ்டத்த தான் நான் பொறுத்துக்கறது, என்னால முடில நான் ஏன் இருக்கனும், என்ன கஷ்டப்படுத்துரவங்க. எல்லாம் சந்தோஷமாத்தான் இருக்காங்க. ஏன் என் விதிய மட்டும் இப்டி எழுதினீங்க?” என ஒரே மூச்சில் முடித்தாள்.
பூமியில் கிடத்தப்பட்டிருந்த அவளது உடம்பை பார்த்தவாறே, “அங்க பாரு” என எந்த வித அறிவியல் உபகரணமுமின்றி லைவ் டெலிகாஸ்ட் செய்தார் கடவுள்.
அறிந்தவர், அறியாதவர் என சிலர் அவளுக்காகவும், அவளைச் சேர்ந்தவர்களுக்காகவும், அழுது கொண்டிருக்க, சிலர் என்னவா இருக்கும்? என்ன பிரச்சினை? இவ மேல எதும் தப்போ எனவெல்லாம் அளவளாவி கொண்டிருக்க, அவள் யாரால் எல்லாம் இம்முடிவை எடுத்தாளோ அவர்கள் அதே நிலையில் இன்றும் அவளை வெவ்வேறு விதமாய் குறை கூறிக்கொண்டே இருக்க, தான் பெற்றவர்களும் தன்னைப் பெற்றவர்களும் மட்டும் தவித்து கொண்டிருந்தனர்.
தனக்காக இதுவரை தவித்தவர்களை இறந்த பின்னும் தவிக்கச் செய்கிறோமே என அவள் அழுத கண்ணீரில் பூமியெங்கும் மழை பொழிந்தது.
சீக்கிரம் தூக்கிடலாம். போலிஸ் கேஸ் ஆகிடப்போகுது. மழை வேற என எவரோ ஒருவர் ஆரம்பிக்க,
கடவுளே! தெரியாம பண்ணிட்டேன். வேணாம் சொல்லுங்க.
என்ன கஷ்டப்படுத்துனவங்க சந்தோஷமா இருக்கும் போது என் சந்தோஷமே, தன் சந்தோஷம்னு இருந்தவங்கள நான் ஏன் கஷ்டப்படுத்தனும்?
நான் வாழணும் இன்னொரு வாய்ப்பு கொடுங்க பிளீஸ் என அழுது வேண்ட,
சிரித்து கொண்டே பரந்தாமன் “எல்லாருக்கும் கிடைப்பதில்லை இப்படியொரு வாய்ப்பு” எனக்கூற,
கண் விழித்தாள்.
கழுத்தில் காயத்துடனும், கட்டிலைச்சுற்றி சுற்றத்துடனும் மருத்துவமனையில் அகலிகா.
தொடர்புள்ள சிறுகதைகள்
டயட் டயட் டயட்
மனோகர் மைசூரு
April 18, 2026
கைக்கடிகாரம்
கோசின்ரா
April 18, 2026
கடவுள் ஒரு பாவி
எஸ்.ராமமூர்த்தி
April 18, 2026