வேண்டாம் சார்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 5, 2026
பார்வையிட்டோர்: 11 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எங்கள் பாடசாலைக்கு அன்றுதான் புதிதாக வந்திருக்கிறாள் அந்த ஆசிரியை. ஆச்சரியத்தோடு அவளை நெருங்கினேன் நான்.

“பிள்ளை! நீங்கள் சசிகலாதானே?” என்ற என் சந்தேகத்தைச் சரியாக்கத் தலையசைத்தவள் என்னை உற்று உற்றுப் பார்த்துவிட்டு “சார்! நீங்களா சார்” என்று ஆனந்தப்பெருக்கில் பதறினாள்.

கையில் தங்க வளையல்கள், கழுத்தில் தேர் வடம் போன்ற சங்கிலி, பளபளப்பான கரஷ் மீர்ச் சேலை. அவள் செல்வச் செழிப்பைக் கண்களால் அளந்து வியந்த எனக்கு நான் 15 வருடங்களுக்கு முன் கண்ட தீர்க்க தரிசனம் சரியாகிவிட்டதை நினைக்க ஆனந்தமாக இருந்தது. 

15வருடங்களுக்கு முன்பு ஒரு நாள்.

2ம் வகுப்புப்பாட்டுப் பாடநேரம்! வண்ணாத்திப் பூச்சிகள் போன்ற குழந்தைகள் நடுவே உட்கார்ந்து பாடல் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

“பட்டுப்பட்டுச் சட்டை! பலரும் பார்க்கும் சட்டை! வெட்டித் துணியைத்தைத்த விலையுயர்ந்த சட்டை!” எல்லாப் பிள்ளைகளும் உற்சாகத்தோடு துள்ளியாடி ஆனந்தமாகப் பாடுகின்றன. ஆனால் அந்தச் சிறுமி மட்டும் வழமையான ஆர்வமின்றி வாட்டம் பரவிய முகத்தோடு உயிர்ப்பு மெலிந்த குரலில் பாட முடியாமல் பாடுகிறாள்.

அவளைப் பிடித்து வைத்துக் கொண்டு மற்றப்பிள்ளைகளை இருக்கைகளுக்கு அனுப்புகிறேன். அவள் வீட்டில் அப்பா, அம்மா சண்டை, அல்லது வீட்டில் அவளை எதுக்காகவோ கண்டித்தோ தண்டித்தோ விட்டார்கள். அல்லது பசி தூக்கம்!

அவளை அன்போடு மெல்ல அணைத்து “சசி! காலையில் என்னம்மா சாப்பிட்டாய்?” என்று மெல்ல வினவுகிறேன். அவள் பதில் பேசாமற் சிரிக்கிறாள்.

நான் துருவித்துருவிக் கேட்ட தன்பின் “ஒன்றும் சாப்பிடவில்லை சார்!” என்று முகங் கறுத்துத் தயங்குகிறாள். எனக்கு நெஞ்சில் இடிவிழுந்தது போன்றதோர் அதிர்ச்சி பதைப்பு! என் கண்கள் என்னையும் மீறிக் கலங்குகின்றன.

உதட்டைக்கடித்து அடக்கிக்கொண்டு பாடசாலை வளவுள் கிடந்த தேனீர்ச்சாலையைச் சுட்டிக் காட்டி “வாம்மா சசி! பிள்ளையும் நானும் தேனீர் குடித்து வடையும் வாழைப்பழமும்…” என்று நான் கூறிமுடிப்பதற்குள் “வேண்டாம் சார்” என்று பதறிய சசியின் முகம் வாடி இருண்டு விடுகிறது.

நான் மீண்டும் அன்பாக வற்புறுத்திய போது அழத்தொடங்கி பிடிவாதமாக மறுத்து விடுகிறாள்.

இந்தச் சின்ன வயதில் இத்தனை மான உணர்ச்சியா என்று என்னுள்ளம் வியந்ததோடு நின்றுவிட வில்லை. இந்த ஓர் உணர்ச்சியே போதும் இவள் ஊக்கத்தோடு படித்து கல்வியில் மேம்பட்டு சுயமுயற்சியாலே வறுமையை வென்று வளம் பெறுவதற்கும் என்று நான் எண்ணினேன் இன்று அது சரியாகிவிட்டது.

– சின்னஞ்சிறு கதைகள் (முதலாம் தொகுதி), முதற் பதிப்பு: 1969, தமிழருவிப்பதிப்பகம், சுன்னாகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *