கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 7, 2026
பார்வையிட்டோர்: 128 
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

விழுங்கவும் முடியவில்லை, துப்பித் தொலைக்கவும் முடியவில்லை. அப்படியோர் உள்வேதனை சின்னாண் டிக்கு. நினைக்க நினைக்க முள்குத்தலாக வலி. 

நாயக்கர் புஞ்சையில் ஒரு மனசாய் வேலைசெய்ய முடியவில்லை. சின்ன நாயக்கர் ஏதேதோ சொன்னார். காதில் வாங்குகிற நிம்மதியில்லை. மன உளைச்சல். குசும்புக் கிழவன் சொன்ன அந்தத் தகவல்… 

தகவலா அது? அக்கினி. கனல் துண்டுகள். நெஞ்சின் சகல மூலைகளையும் சுட்டுத் துடிக்க வைக்கிற கனல் துண்டுகள். தாம்பத்தியத்தின் ஆணிவேரையே சுட்டுக் கருக்குகிற கனல் துண்டுகள். 

கல்யாணமாகிப் பதினெட்டு வருஷம் ஆகிவிட்டது. இத்தனை வருடத்தில் இப்படியொரு சிக்கல் தலை காட்டியதேயில்லை. முத்தக்கா நடந்த தடத்தில் வந்த பெண்ணுக்குக் கூட மானக்குறைவான காரியம் செய்ய மனசு வராது. அப்பேர்ப்பட்ட சாதி மான் கன்றாகத் தான் இருந்து வந்திருக்கிறாள். 

இத்தனைக்கும் முத்தக்காவுக்கு இவன் போட்டிருப்பது. மறுதாலிதான். 

ஏற்கெனவே சீவலப்பேரிக்காரனுக்கு வாழ்க்கைப் பட்டிருந்தாள். ஆறு மாதத்துக்கு மேலே குடித்தனம் நடத்திக் குப்பையும் கொட்டினாள். அப்புறம் என்ன இழவோ… ஒரே சண்டைச் சத்தம். தள்ளுமுள்ளு. தீராத மல்லுக்கட்டு. 

“விடு சனியனே” என்று சலிப்போடு கோபித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்து விட்டாள். 

சீவலப்பேரிக்காரன் வீடு தேடி வந்து கூப்பிட்டுப் பார்த்தான். “வா… வா. முத்து,” என்று கெஞ்சிக் கூத்தாடினான். 

“ஒன் திசையிலே கூடத் தலைவெச்சுப் படுக்க மாட் டேன்” என்று ஒரே பிடிசாதனையாகத் தலையைக் குலுக்கி விட்டாள். 

பிறகென்ன செய்ய? தெரு கூடி, பஞ்சாயத்துப் பேசியது. நூத்தியோரு ரூபாய் 

ரூபாய் பரிசுப் பணத்துக்கு மாற்றாக இருநூத்தி ரெண்டு ரூபாய் தீர்வை’யாக முத்தக்கா அப்பன் கட்டி, அந்தக் கல்யாணத்தைத் தீர்த்து’க்கிட்டார்கள். 

அப்போது… 

பெரிய நாயக்கர் பண்ணையில் குடிபடையாக வேலை பார்த்து வந்து சின்னாண்டி அப்பன் மண்டையைப் போட, முழுத்த இளவட்டமாய் சின்னாண்டி நாதியற்றவனாய் ஒற்றைமரமாய் தனித்து நின்றான். நாயக்கர் புஞ்சையிலும் தொழுவத்திலும் வேலை. தொழுவத்திலேயே கஞ்சி என்று நாளும் பொழுதும் பசையற்று நகர… 

நாயக்கர் மனசில் ஒரு பொறி தட்டியது. 

சின்னாண்டி நல்ல பயல். நல்ல பாட்டாளி. சாராயத்தைத் தவிர வேறு கெட்ட பழக்கமில்லாத பயல். முத்தக்காவும் நல்ல மானஸ்தி. பொறுமைக்காரி. பட்டுத்தேர்ந்தவள். ரெண்டு மாட்டையும் நுகக்காலில் சேர்த்துப் பூட்டிவிட்டால்… ஒரு வண்டி அதுபாட்டுக்கு ஓட ஆரம்பிச்சிருமே.. 

பெரிய நாயக்கருக்கு எப்பவும் ஒரு பழக்கம். எதையும் ஆறப் போடமாட்டார். உடனுக்குடன் நினைப்பு காரியமாகி விடவேண்டும். 

“ஏலேய்… ஆண்டி…” 

“என்ன சாமி…?” 

தொழுவில் மாடுகளுக்குள்ளிருந்து சத்தம் வந்தது.

“இங்க வாலே…” 

“கூப்பிட்டீகளா சாமி?” 

“ஆமடா… ஒனக்கொரு காரியம் பண்ணுவமடா…?”

“என்னது சாமி?” 

“உங்க அப்பன் போய்ச் சேர்த்துட்டான். நீயும் ஒத்தைக் கட்டையா எம்புட்டு நாளைக்கு இருப்பே? ஒரு குடும்பமா ஆகணுமில்லே?” 

“அதுக்கு இப்ப என்ன வந்துச்சு சாமி?” 

“என்ன வந்துச்சா? கல்யாணத்தை முடிச்சிருவமடா?” 

“யாரை?” 

“மாட்டையா முடிப்பாக? பொம்பளையைத்தான்…” 

நாயக்கர் மீசைக்குள் குறுஞ்சிரிப்பு வெடித்து மின்னியது. இவன் கூச்சத்தில் குழைந்து வளைந்தான். 

“முத்தக்காவை முடிச்சிருவமா? என்னலே சொல்லுதே?” இவனுக்குள் தேள் கொட்டின மாதிரி இருந்தது. ‘சாமியவுக’ முகத்தை எச்சரிக்கையாக நோட்டமிட்டான். கண்ணுக்குள் ஏதாச்சும் நிழலாடுகிறதா என்று கூர்மை யானான். உள்ளுக்குள் பயப் படபடப்பு… 

…இந்த ஒரு மாதமாய் யாருக்கும் தெரியாமல் முத்தக் காவைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறான். சாணி சகதியை அள்ளிப் போட்டவுடன் சாயங்காலக் குளிப்பு. கைலி, கலர் பனியன். வெள்ளி, செவ்வாய் பிள்ளையார் மாதிரி ‘குளுகுளு’வென்று எண்ணெய்த் தேய்ப்பு. ‘ஜில்’ லென்று தெருவுக்கு வந்து விடுவான். 

முத்தக்கா ‘வில், வில்’லென்று கடைக்குப் போய் வருவாள். விறகு எடுக்க வெளியே வருவாள். சட்டிப் பானை கழுவ முற்றத்துக்கு வருவாள். விரட்டி விரட்டி ‘விடாமல்’ பார்ப்பான், நிலைத்த பார்வையாக. 

முத்தக்காவும் வஞ்சமில்லாத தேகக்காரி. செய்து வைத்த செப்புச் சிலை மாதிரி ‘கிண்’ணென்று இருப்பாள். அவள் கண்களைப் பார்க்கிற போதெல்லாம் இவனுக்குள் அடிவயிற்றில் என்னவோ பண்ணும். அவன் கண்ணைக் கட்டி இழுப்பதே அவளது எடுப்பான மார்புதான். திண்ணக்கமான மதர்ப்பு. 

மீனை விரட்டுகிற கொக்கைப் போல ‘தொடுத்து’ப் பார்ப்பான். பார்க்கப் பார்க்க உள்ளுக்குள் றெக்கை முளைக்கும். படபடக்கும். தவிக்கும். நாக்கு உலர்ந்து, நெஞ்சமெல்லாம் காய்ந்து போகும். உன்மத்தம் கொள்ளும். 

‘அப்பவும் ஒரு பொட்டச்சி இம்புட்டு லட்சணமாவா இருக்குறது’ என்று நினைக்க நினைக்க நஞ்சடித்த கெண்டை மீனாகக் கிறுகிறுத்துப் போவான். 

இவன் பார்வையை எதிர்கொள்ளுகிற கணத்தி லெல்லாம், அவள் முகம் குப்பென்று கோபத்தில் விறைக்கும். வெறுப்பும் சாபமுமாய் வறுசட்டியாய்ச் சினசினக்கும். 

“கண்ணுலே புத்துப் பெறப்பட… பாம்பு கொத்திப் புடுங்க” என்று சபிக்கிற மாதிரி உதடுகள் துடிக்கும். 

அந்தக் கோப ரோஷமும், எதிர்ப்பும் தான் இவனை ஒரேயடியாக மயங்கடிக்கும். அடிமை பண்ணும். காலடி தஞ்சமாக உயிரைக் கிடத்தும்… 

…இந்தக் ‘குட்டுநட்டு’ சாமியவுக காதுக்கு எட்டி விட்டதோ…? அதனால்தான் இப்படிக் கொக்கி போடு கிறாரோ? சோதித்துப் பார்க்கிறாரோ? மானக்கேடாய்ப் பேசி வையப் போகிறாரோ? 

சின்னாண்டிக்குள் வியர்த்தது. பிடிபட்ட பறவை றெக்கையாகப் படபடத்தது. 

“என்னலே சொல்லுதே?” நாயக்கரின் அதட்டலில் உள் உலகத்திலிருந்து வெளிப்பட்டான். திருதிருவென முழித்தான். தடுமாறி உளறினான். 

“நெசமா… வா சாமி?” 

“என்னது நெசமா… வா?” 

“இதுக்கு முத்தக்கா சம்மதிப்பாளா?” 

“அது எம்பாடு. நீ என்ன சொல்லுதே? அதைச்சொல்லு, மொதல்லே…” 

“நீங்க பாத்து… இடிகெணத்துலே தள்ளினாலும் சரிதான் சாமி..”

“இடிகெணறா?” என்று எதிரொலித்த பெரிய நாயக்கர், ஏதோ அர்த்தம் கண்டவராகத் தொந்தி குலுங்கச் சிரித்தார். அவர் நெஞ்சுக்குழியிலுள்ள நரைத்த ரோமமெல்லாம் சேர்ந்து சிரிப்பது போலிருந்தது. 

சந்தோஷமாக ஆசீர்வதித்துத்தான் முத்தக்காவைச் சின்னாண்டிக்கு ‘முடித்து’ வைத்தார். பெரிய நாயக்கரும் போய்ச் சேர்ந்து விட்டார். அவர் வாக்கும் பொய்யாக வில்லை இதுவரைக்கும். 

இத்தனை வருஷ அந்நியோன்யத்தில் அவர்களுக்குள் எத்தனையோ சண்டை சத்தம் வந்ததுண்டு. ராசியாகிப் போனதும் உண்டு. ஆனால்…. 

அவள் ஒழுக்கம் குறித்த ஒரு பேச்சோ… நினைப்போ கூட இதுவரை வந்ததேயில்லை. நிஜமாகவே மானஸ்தி. துப்புரவானவள். ரோஷக்காரி. 

இவனாவது சாராயம் குடிக்கிற ஆசையில் ரோஷம் கெட்டுப்போய் எவனிடமாச்சும் பல்லை இளிப்பான். அவள் அப்படியில்லை. 

அந்தப் புண்ணியவதி மேல்தான் இப்போது ஒரு செய்தி. தீக்கோல் மாதிரியான தகவல். நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. நம்புவதற்கு தோதான பல சாட்சிகள். சம்பவங்கள். 

அவன் தவித்து மறுகினான். மெல்லவும் முடிய வில்லை. துப்பவும் முடியவில்லை. நெஞ்சுக்குள் செருகிக்கொண்ட முள்ளாக உறுத்துகிற நினைவுகள்… முள்ளைச் சுற்றி வழிகிற ரத்தம். 

மதியமாகி விட்டால், தெருவில் ஒரு சுடுகுஞ்சுகூட இருக்காது. எல்லாரும் காடுகரைகளில் மாய்ந்து கொண் டிருப்பார்கள். சின்னஞ்சிறிசுகள் கூட சத்துணவுப் பள்ளிக் கூடம் போய்விடும். பன்றிகளும், பன்றிக்குட்டிகளும், கோழிக் குஞ்சுகளும்தான் தெருவில் திரியும். கயிற்றில் காய்கிற மாட்டு ஜவ்வுகளைக் காக்கை கொத்தினால், துரத்துவதற்குக் கூட ஆள் இருக்காது. கால், கை விளங் காமல் முடக்கமாகி போன குசும்புக் கிழவன் மட்டும்தான் கூரை நிழலில் அசையும் பிரேதமாய்க் கிடப்பான். 

அவன்தான் இன்று காலையில் சின்னாண்டி காதில் அந்தத் தீக்கோலைச் சொருகினான்… 

“முந்தா நா மதியம். ஜவுளிச்செட்டியாரு ஒன் வீட்டுக் குள்ளே நொழைஞ்சாரு. கொஞ்சநேரங் கழிச்சுத்தான் வெளியேறிப் போனாரு….” 

அவனுக்குள் திகுதிகுவென்று தகித்தது. 

“ஏய் கெழவா… நீ சொல்றது பொய்யா இருந்துச்சுன்னா, ஒரே மிதிதான். ஒன்னைக் கொன்னே போடுவேன்… ஆமா…” 

-ஆத்திரத்தில் இறுகலாய்க் கத்தினான். 

“நா எதுக்குப் பொய் சொல்லப் போறேன்? சொல்லி எனக்கு என்ன ஆகப்போவுது?” என்று பரிதாபமாய்ப் புலம்பினான், கிழவன். 

கிழவன் சொல்வதை ஒரேயடியாய்த் தள்ளிவிடவும் முடியவில்லை. யூகங்களுக்குப் பொருத்தமாகச் சில சம்பவங்கள்… 

…முந்தாநாள், மதிய கரண்டு. பத்து மணிக்குப்பிறகு புஞ்சைக்குப் போனால் போதும். வீட்டுத் திண்ணையில் தான் சின்னாண்டி உட்கார்ந்திருக்கான். வழக்கமாய்க் கூலி வேலைக்குப் போகிற முத்தக்காவும் அன்றைக்குப் போகவில்லை. ‘ஏன் போகலை?’ என்றால், ‘போக மனசில்லே’ என்று சொல்லி விட்டாள். ஒன்பது மணிக்கே துணிமணிகளை அள்ளிக் கொண்டு போய், கிணற்றுக்குள் இறங்கித் துவைத்து குளித்துவிட்டு வந்தாள். குளித்த உடம்பில் பூவின் மலர்ச்சி. மஞ்சள் பூசிக் கழுவிய முகத்தில் ஒரு மங்களகரமான ஜ்வலிப்பு. ஈரச்சேலையோடு ஈரக் கூந்தலை அடித்து உலர்த்திக் கொண்டு நின்றாள். ஒரு தேவதை போல… 

அவளுக்கு ஒரு சேலைதான். மாற்றுச் சேலை இல்லை. ஒரு சேலை எடுத்துவிட வேண்டுமென்று ஆன மட்டும் முயற்சி பண்ணிப் பார்த்தான். போன இடமெல்லாம் ஒரே முட்டலும் மோதலுமாயிருந்தது. வறுமை, அவனை செல்லாக் காசாக்கி மூலை சேர்த்துவிட்டது. 

‘ஒரு சீலைத் துணி எடுத்துக் குடுக்கக்கூட வக்கத்துப் போயிட்டமே…’ என்று மனசுக்குள் நொந்து போகிற நினைவுகளோடு அவளையே பார்த்தான். 

வேலை முடிந்து புஞ்சையிலிருந்து சாயங்காலம் வந்தான். பொழுதடைந்து விட்டது. இருட்டு இன்னும் வரவில்லை. மேகத்து வெளிச்சம் மிச்சமாக இருந்தது. 

வீட்டுக்கு வந்தால், முத்தக்கா முகமெல்லாம் சிரிப்பாய் பூத்துக் கிடந்தாள். நெஞ்சின் குதூகலம், குழந்தைத் தனமாகக் கண்ணில் மின்னியது. கன்னக் கதுப்புகளின் மகிழ்ச்சி மின்னல். ஈர உதடுகளில் பரவசச் சிதறல்கள்… 

“என்ன முத்தக்கா, ஒரே ஆதாளியாயிருக்கே, என்னமும் விசேஷமா?” 

“ஆமாய்யா…” 

“சொல்லு…” 

“ஒரு சீலை எடுத்திருக்கேன்யா. நல்ல சீலை. எம்பது ரூபா…”

“யாருகிட்டே?” 

“ஜவுளிச்செட்டியாரு கிட்டேதான். சைக்கிள்லே பொட்டலம் கட்டிக்கிட்டு வித்துக்கிட்டு வருவாருல்லே?” 

“இங்கே வந்துருந்தாரா?” 

“இல்லேய்யா. காபிக்கடை முன்னாடி பொட்டலத்தை அவுத்து வெச்சிருந்தாரு. அங்க வெச்சுத்தான் விலைபேசி எடுத்துட்டு வந்தேன்யா…” 

“ரூபா ஏது?” 

“பத்து ரூபா மட்டும் குடுத்தேன் வாரத்துக்குப் பத்து ரூபாயா தாரேன்னேன். சரின்னாரு… 

“அவருகிட்டே நாங்கூட கடன் கேட்டேன். தர மாட் டேன்னு மூஞ்சியிலே அடிச்ச மாதிரி சொல்லிட்டாரே…!” 

“நீ எப்படிக் கேட்டீயோ…” 

“அதுவும் சரிதான். குடிகாரன் பேச்சுக்கு என்ன மதிப்பு கொடுப்பாரு…?” 

“அதாச்சும்… தெரிஞ்சு வெச்சிருக்கீயே… கடவுள் புண்ணியத்துலே…” 

ஒரு சிறுமியைப் போல ஒரு குதி குதித்துக் கொண்டு வீட்டுக்குள் ஓடினாள். அந்தப் புதுச் சேலையைக் கொண்டு வந்து காட்டினாள். அவள் முகமெல்லாம் மனப் பூரிப்பின் ததும்பல். 

“நல்லாயிருக்காய்யா…?” 

“உனக்குப் பிடிச்சிருக்கில்லே… அது போதும்…” 

“நல்லாயிருக்குய்யா…” 

“சரி ஒத்தைச் சீலையோட இருந்தியே… ஏன் இந்தப் புதுச் சீலையைக் கட்டலையா?” 

“ரெண்டு நா கழிச்சுத்தான் கட்டணும்…” 

“ஏன்?”” 

“சும்மாதான்…” 

“சரி, ஒன் இஷ்டம்…”

மனசிலிருந்த பெரிய பாரம் இறங்கிய நிம்மதி. அவள் சேலைப் பிரச்னை முடிந்த ஆசுவாசம். 

…அதுவே இப்போது நெஞ்சுக்குள் கட்டையாக நின்று அழுத்துகிறது. முள்முள்ளாய் உறுத்துகிறது. குசும்புக் கிழவன் சொன்ன தகவல்… 

வீட்டுக்குச் செட்டியார் வந்துபோன நிஜத்தை ஏன் மறைக்கிறாள்? காபிக் கடையில் வைத்துச் சேலை எடுத்ததாக ஏன் பொய் சொல்கிறாள்? காலையிலேயே மஞ்சள் பூசிக் குளித்தது, அந்தத் திட்டத்தில்தானா? எல்லாம் இதற்குத்தானா? கள்ளச்சுகம் காணுகிற தந்திரம் தானா? 

உடுமாற்றுச் சேலைக்காகவா இந்த அசிங்கம்? மானத்தை மறைக்கிற சேலைக்காக மானத்தை இழப்பாளா முத்தக்கா? பட்டப்பகலிலா… ச்சேய்! 

அவனுள் மாறி மாறி வந்து கொத்திப் பிடுங்குகிற காட்சிகள். செட்டியாரும் முத்தக்காவும் சாரைப் பாம்பாய்ப் பின்னிப் பிணைத்து முனங்கும் காட்சி. உள் மனசின் நரம்பு வரை சுட்டுப் பொசுக்குகிற காட்சி. 

காட்சி… காட்சி… காட்சிகள்… 

நினைக்க நினைக்க வெறி கொள்ள வைக்கிறது. திகுதிகு வென்று தீயாய் எரிகிறது. குத்திக்குடைகிற நமைச்சல். உள்ளுக்குள் பேயாடும் உன்மத்தம். 

அரிவாளை எடுத்து அவளை அப்படியே வகிர்ந்து சதை சதையாய் நறுக்கலாமா என்கிற ரௌத்ரம். கொதிபானைச் சோறாய்க் கொந்தளிக்கிற நெஞ்சில் குளிர்நீராய்த் தெறிக்கிற சில நினைவுகள். 

முத்தக்கா அப்படிப்பட்டவளா? இத்தனை காலமாய் இல்லாத அசிங்கத்தை இப்போது செய்திருப்பாளா? கேவலம், சேலைக்காகவா? மானத்தைப் பெரிதாய் மதிப்ப வளாயிற்றே! ஓரஞ்சாரத்தில் ‘அப்படியும் இப்படியுமாய் அலைகிற பெண்களைக்கூட ‘பன்னிப்பிறவிக’ என்று காறித் துப்புவாளே…. 

சேலைக்காகக் கடன் கேட்டு அலைந்து அலைந்து அலுத்துப் போன நிலைமையில், வேளார் செத்த அன்றைக்கு இழவு சொல்லிப் போனதில் ஊழல் செய்து, நூத்திமுப்பது ரூபாயை ஆசை ஆசையாய்க் கொண்டு போய் நீட்டியபோது, என்ன சொன்னாள்? 

“மானத்தை மறைக்கத்தானய்யா சீலை? மானத்தை உதுத்துட்டுச் சம்பாதிச்ச துட்டுலே சீலை எதுக்கய்யா? போய்யா, நீயும் ஒந்துட்டும்…” என்று ஆக்ரோஷமாக வீசியெறிந்தாளே… அந்த மானஸ்தியா இந்த ஈனக்காரியத்தைச் செய்திருப்பாள்? 

இதையெல்லாம் தாண்டிக் கொண்டு குசும்புக் கிழவன் சொன்ன தகவல்… காலைக் குளிப்பு… செட்டியார் வீடு வந்த நிஜத்தை மறைப்பது… சாயங்காலம் சேலைச் சிரிப்பு. 

அவன் மனசுக்குள் உலவுகிற பன்றிகள். சாக்கடையில் புரளுகிற பன்றிகள். பன்றித்தனமான நினைவுகள். செட்டி யாரும் முத்தக்காவும் வெற்றுடம்புகளோடு வியர்வைக் கலப்பு. ஆயாசப் பெருமூச்சின் சத்த அதிர்வு. 

அவனுள் கொதிப்பு… தகிப்பு… 

அவளிடம் எப்படிக் கேட்க? எப்படிச் சீற? என்ன சொல்லிச் சண்டை போட? மூளைக்குள், காயவைத்த கம்பியால் குடைவது போலிருந்தது. சினைப் பன்றியாய் உள்வேதனையில் திணறினான். 

ராத்திரி சாப்பிடச் சொன்னாள். சாப்பிட மனசில்லை. ஆனால் சோற்று முன்னால் உட்கார்ந்தான். உள் உறுத்தும் முட்களோடு முத்தக்காவையே பார்த்தான். வேரற்று அலைபாய்கிற பார்வை. 

உயிர்க்களையற்ற அவன் முகம். குழம்பிக் குழம்பிப் பறவையாடுகிற கண்கள். அடிபட்ட மனசோடு ஆதரவு தேடி அலைகிற அந்தப் பரிதாபமான பார்வை. அண்ணாந்து அண்ணாந்து முகத்தைப் பார்க்கிற புருஷன். 

அவளுக்குள் சுரக்கிற கருணை உணர்வு. பரிவோடு கேட்டாள்: 

“என்னய்யா?” 

“ம்…” 

“ஏன், ஒரு மாதிரியாயிருக்கே? சாராயம் குடிக்க இன்னிக்கு ஒண்ணும் கெடைக்கலையா?” 

“குடிக்கத் தோணலை…” 

“ஏன், உடம்புக்கு என்னமும் செய்யுதா?” 

பதில் இல்லாமல் சூன்யமாய் அலைகிற புருஷனின் பார்வை. உள் ரணத்தைச் சுமந்து தவிக்கிற பார்வை. 

மிருதுவான உணர்வுகளோடு நெருங்கி உட்கார்ந்தாள். அவனது காய்ந்த தலைக்குள் விரல்களால் கோதிவிட்டாள். அன்பு பிரவகிக்கிற அவள் கனிந்த முகம். தாய்மைப் பொலிவோடு கண்களில் வந்து நின்ற பாச இதயம். 

அவனுக்குள் சிலிப்பிக் கொண்டு உதறலோடு எழுகிற பன்றிகள், வாலைச் சுழற்றிக் கொண்டு சாக்கடைத் துளிகள் சிதற மூர்க்கமாய்த் திமிறுகிற பன்றிகள்…. 

தலைமுடியைக் கோதுகிற கையை அப்படியே இறுகப் பற்றி, ஒரு முறுக்கு முறுக்கி, ‘ஏண்டி பன்னீ, ஒரு சீலைத் துணிக்காகச் செட்டியார்கிட்டே படுத்தியா?’ என்று வெறியைத் துப்பிவிடலாமா என்று உள்ளுக்குள் பீரிடுகிற உன்மத்தம்… ரௌத்ரம். 

பல்லைக் கடித்துக்கொண்டான். சகித்துக்கொண்டான். மூர்க்கப் பன்றிகளைப் பட்டிக்குள் விட்டு அடைத்தான். 

அவனுக்குள் ஏகப்பட்ட குழப்பம். இறுக்கம். மனத் தவிப்பு. உதடு வரைக்கும் வந்துவிட்ட வெறியை உள்ளடக்கிக் கொண்ட பின்னும் நெஞ்சுக்குள் ஒரு தத்தளிப்பு. மூச்சு முட்டல். உள்ளத் திணறல். 

அரண்டு போய்க் கருத்துக் கிடக்கிற புருஷ முகம். சாப் பிடக் கூடத் தோன்றாமல் எதையோ பறிகொடுத்து விட்டுத் தவிக்கிற ஊமைப் பிள்ளை மாதிரி தேம்பி நிற்கிற அவனது பார்வை. 

‘இந்த ஆளுக்கு என்ன கேடு வந்துச்சு?’ என்று அவளுக்குள் ஏதேதோ குழப்பம்… சலனம்… நெருடல்… இருப்பினும் 

இப்போதைக்கு இந்த ஆளு மனசைத் திசை திருப்பணும். இறுக்கத்தை உடைக்கணும். அதுதான் இப்ப முக்கியம்… அவசரம்… அவசியம். 

“ஆ…ங்…” என்று ஏதோ திடுமென்று நினைவுக்கு வந்தது போல, குழந்தைக்கு உரிய குதூகலமாய் அலறினாள். 

“முந்தா நா… ஒரு கூத்து நடந்துச்சே… அதை ஓங்கிட்டே சொல்ல அயத்துட்டேன்லே?” 

சுரத்தில்லாமல் ‘ம்’ கொட்டினாலும் ‘முந்தா நா’ என்ற சொல் அவனுக்குள் ஒரு சிறு அதிர்வை ஏற்படுத்தியது. 

ஏதோ விளையாட்டான விஷயத்தைப் பகிர்கிற மகிழ்ச்சியான சகஜத்தோடு அவள் தொடர்ந்தாள். 

“காபிக்கடை முன்னாடி வெச்சு எம்பதுரூபா விலை சொன்னாரு, செட்டியாரு… கசறிப்பேசி, சண்டை போட்டு எழுவது ரூபான்னு வெலை தெகைச்சு, சீலையை வீட்டுக்குக் கொண்ணாந்துட்டேன். பின்னாடியே செட்டியாரு பதறிப் போய் ஓட்டமாய் ஓடியாந்துட்டாரு நம்ம வீட்டுக்கு…” 

“நம்ம வீட்டுக்கா…?!” 

“ஆமாங்கே…” 

“எதுக்கு?” 

“இந்தச் சீலை தொண்ணூறு ரூபாயாம்… தெரியாம எம்பது ரூபான்னு சொல்லிட்டாராம்…” 

“ம்…” 

“அவரு ஒரே புலம்பலா பொலம்பித் தவிச்சாரு. அழுகப் போற மாதிரி கண் கலங்கிட்டாரு. பாக்க பாவமா யிருந்துச்சு. பெறகென்ன செய்ய? அவரு சொன்னதை ஏத்துக் கிட்டு எம்பது ரூபான்னு வெலை தெகைச்சு, பத்துரூபா வாங்கிட்டுப் போனாரு…” 

“அப்படியா?” 

“ஆங்… பத்து ரூபா துட்டுக்கு அம்புட்டுப் பெரிய ஏவாரி பதறித் தவிச்சதை பாக்கணுமே, நீயும் இருக்கியே… பத்து ரூபாயைப் பத்து பைசா மாதிரி வீசியெறிஞ்சுட்டு, சாராயத்தை வாங்கி வாயிலே ஊத்திக்கிட்டு வர்றே… பெரிய சீமான்கணக்கா…” 

சிரிப்பும் பாவனைகளுமாய் அவள் சொல்லிக் கொண்டு வர வர… இவனுள்ளிருந்து வெருண்டோடுகிற பன்றிகள். நெஞ்சுக்குள் கட்டையாய் நின்று அழுத்திய முள் ஒரு பொய்யாய்… மாயமாய்…. 

வீட்டுக்குச் செட்டியார் வந்து போன நிஜத்தை இவள் ரகசியமாய் மறைக்கவில்லை. தந்திரமாய் ஒளிக்கவில்லை. கள்ளச்சுகம் காண்கிற கள்ளப்புத்தியில் மாய்மாலம் செய்யவில்லை. மறந்து போயிருக்கிறாள். அவ்வளவுதான்… 

இதோ…. கள்ளங்கபடமில்லாமல் கக்கிவிட்டாள். 

இறுகி முறுக்கேறிப் போய்க் கிடந்த அவனுக்குள், ஒரு விசாலம். சகல கதவுகளும் அகலத்திறந்து கொண்ட மாதிரி, காற்றும் வெளிச்சமும் மூலை மூடுக்கெல்லாம் பரவிப் படர… அந்த வெளிச்சம் தாங்காமல் அலறியடித்துக் கொண்டு ஓடி ஒளிகிற சிறுமைப் பன்றிகள்… 

அவன் உதட்டின் விளிம்பில் குற்ற உணர்வின் குறுகுறுப் போடு கூடிய ஒரு நெளிவு. அவள் முகத்தில் ஒரு நெகிழ்வு. கண்ணில் ஒரு புதிய தொனி. 

“முந்தாநாளே புதுச் சீலையைக் கட்டலையான்னு ஆசை ஆசையா கேட்டே… இல்லே?” 

“ஆமா …” 

“ஏன் உடுத்தலை தெரியுமாய்யா?” 

“ம்…” 

“வீட்டுக்கு விலக்காகியிருக்கிறப்ப புதுத் துணி உடுத்தக் கூடாதுன்னுதா அன்னிக்கு உடுத்தலே. நாளைக்கு உடுத்திக்கிடுதேன்… என்னய்யா?” 

கெஞ்சலும் குழைவுமாய்ச் சொல்லித் தலைகுனிகிற முத்தக்கா… ஒரு லஜ்ஜையோடு தலை தாழ்ந்த அவளை நிமிர்ந்து முழுசாகப் பார்த்தான் சின்னாண்டி. 

‘அட, அதுவா சங்கதி… அதனால்தான், அன்றைக்குக் காலையிலேயே குளித்துவிட்டு வந்தாயா?’ 

அவனுக்குள் குற்ற உணர்வின் உறுத்தல்கள். 

இப்படிப்பட்ட பத்தரை மாற்றுத் தங்கத்தையா அசிங்க அசிங்கமாய் நினைத்தேன்? ச்சே! நான் ஒரு கேணப்பயல். 

நல்லவேளை, பதற்றத்தில் அவளிடம் கேட்காமலிருந்தது நல்லதாய்ப் போயிற்று. கேட்டிருந்தால்… தாங்கவே மாட்டாள். மானஸ்தி. ஒன்று கிடக்க ஒன்றைக் கட்டாயம் செய்திருப்பாள். கல்லெறிபட்ட தேன்கூடாய் குடும்பம் சிதறிப் போயிருக்கும்… 

பெரிய கண்டத்திலிருந்து தப்பித்துவிட்ட உணர்வு. 

ஆனாலும்… 

உள்ளுக்குள் உலவிய சாக்கடைப் பன்றிகளை நினைத்து நிஜமாகவே வெட்கப்பட்டான். வெட்க உணர்வை மறைக்க, சாப்பாட்டில் குனிகிறபோது… 

பரிகாசச் சிரிப்புடன் பெரியநாயக்கர் முகம் மனசுக்குள் வந்தது. 

– செப்டம்பர் 1993, ஆனந்தவிகடன்.

– கணக்கு (சிறுகதைகள்), முதற்பதிப்பு: மார்ச் 1994, திருவரசு புத்தக நிலையம், சென்னை.

மேலாண்மை பொன்னுச்சாமி மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *