மீ டூ…
கிராமத்து திருவிழா முடிந்து, சிறுமி பார்வதி, வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தாள். அப்போது, ஊரில் எல்லாரும் மதிக்கும் பெரியவர், தெரு முனையில் நின்று கொண்டிருந்தார்.
பார்வதியைக் கண்டதும், அவர் அருகில் வந்து, “அம்மா வரலையா?” எனக் கேட்டபடி, அவளைக் தடுத்து, அவள் தோளைப் பிடித்து கீழ்நோக்கி தடவினார். பின்னர், அவள் கழுத்தில் கை வைத்து, தன் முகத்தை அவள் முகத்திற்கு அருகில் கொண்டு வந்தார்.
பார்வதிக்கு உள்ளுக்குள் ஏதோ உறைந்தது. என்ன செய்வது என்று தெரியாமல், அவரிடமிருந்து விலகி, வீட்டிற்கு ஓடினாள். அன்றிரவு, தூக்கமின்றித் தவித்தாள். இதை யாரிடம் சொல்ல முடியும்? ‘யாரும் நம்ப மாட்டார்கள்’.
சில வருடங்கள் கழிந்தன. பார்வதி இப்போது கல்லூரி மாணவி. அவளுடைய தோழி ஒரு நாள் மிகவும் சோகமாக இருந்தாள். காரணம் கேட்டபோது , கீதா கண்ணீருடன், “நம்ம ஊர் பெரியவர்… என்னை தனியா கூப்பிட்டு , நாளை என் வீட்டுக்கு வா என்கிறார். அவர் பார்வையே சரியில்லை” என்று விம்மினாள்.
சில வருடங்களுக்கு முன், தான் உணர்ந்த அதே பயம், அதே சங்கடம்! கீதாவின் கைகளைப் பற்றிக் கொண்டு, “கீதா, எனக்கும் இதுபோல் நடந்ததை நான் உன்கிட்ட சொல்லவே இல்லை. மீ டூ!”
கண்களில் இருந்த பயம், இப்போது துணிச்சலாக மாறியது. இருவரும், காவல் நிலையம் நோக்கி நடந்தனர்.
November 16, 2026