மகள் முகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 8, 2026
பார்வையிட்டோர்: 268 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“யய்யா.” 

வெளித்திண்ணையில் கவலை படிந்த நினைவுகளின் மொய்ப்புக்குள் மூழ்கிக் கொண்டிருந்த சங்கர பாண்டியை லௌகீக வாழ்வின் கையாகப் பற்றியிழுக்கிறது, மகளின் குரல். தயக்கமான பயந்த குரல். 

“என்னம்மா?” 

ஏழு வயதுச் சிறுமி. ஒரே மகள். தலைப்பிள்ளையாக வந்து பிறந்தவள். அம்மா பெயரை வைத்திருக்கிறான். ராஜம்மா. நீல நிறப் பாவாடையின் அடிப்பகுதி தையல் விட்டு நூல்நூலாகத் தொங்குகிறது. வெள்ளை மேல் சட்டை. அவளாகவே எண்ணெய் தேய்த்து, சீப்பால் இழுத்துக் கட்டி, ‘தத்தக்கா, புத்தக்கா’ என்று கற்றுக்குட்டித்தனமாகப் போட்டுக்கொண்ட சடைப் பின்னல். 

“சொல்லும்மா, ராஜம்.” 

“பள்ளிக்கோடம் போவட்டா…?” 

“ம்… போய்ட்டு வா..” 

தயங்குகிறாள். மருட்சியில் அங்கும் இங்குமாக அலை 

பாய்கிற கண்கள். 

“என்னமும் வேணுமா… ம்மா?” 

“ம்… துட்டு.” 

“எதுக்கும்மா?” 

“அம்மா,தீம்பண்டம் ஒண்ணும் வாங்கி வைக்கலே. ஸ்கூல் போவணும்.” 

“சரி… கடையிலே என்னாச்சும் தீம்பண்டம் வாங்கிக்க.” 

“துட்டு?” 

“போய் வாங்கிக்கோ. குடுத்துட்டு கடைப்பாக்கியிலே எழுதிக்கிடுவாரு…” 

கனிவும் குழைவுமான குரலில் மென்மையாக சொல்கிற சங்கர பாண்டி. 

கனத்த பைக்கட்டை அய்யா பக்கத்திலேயே வைத்துவிட்டு, அனுமதி கிடைத்துவிட்ட மகிழ்ச்சியிலும் குதூகலத் துள்ளலிலும் ஓடுகிற ராஜம். பாவாடையின் அடிப்பகுதி, காலில் ‘சட், சட்’ டென்று அடித்து தடுப்பதால், பாவாடையின் முன் பகுதியை ஒரு கையால் உயர்த்திப் பிடித்துக் கொண்டு குதித்துக் குதித்து ஓடுகிறாள். அவளுக்குள் மனச்சிறகடிப்பு, ‘என்ன தீம்பண்டம் வாங்கலாம்’ என்ற யோசனையில் ஆசைப் பரபரப்பு. 

அவள் ஓடுவதையே பார்க்கிற மனசின் நெகிழ்வு. மனைவி லட்சுமி வயிற்றில் பிறந்த அம்மா. தனது உதிர நிழல். உயிர்களை உருவி வருடிக் கொண்டு பிறந்த உயிர். 

துள்ளலாக ஓடிய அந்த வண்ணத்துப் பூச்சி, அடிபட்ட அவமான இருட்டின் அழுகையோடு திரும்ப வருகிற ராஜம். குறாவிப் போன சிறுமுகம். அறுத்துப் போட்ட பசுங்கொடியின் முகவாட்டம். கண்ணின் நீர்த்துளிகளில் மனச்சிதறல். 

இவன் மனசு கிடந்து துடித்தலறுகிறது. பதறிப் பதைக்கிறது. ‘தடாபுடா’ வென்று எழுந்தான். 

“என்னம்மா…? என்னாச்சி?” 

“கடன் தரமாட்டாராம்.” 

“அப்படியா… சொன்னாரு?” 

“பெரியாளுகளைக் கூட்டிட்டு வான்னு சொல்லிட்டாக.” 

கோபமும் கொதிப்புமாக சங்கரபாண்டி. ஏமாற்றத்தால் அறையப்பட்ட பூச்செண்டு. ஆசை ஆசையாய் ஓடி, அரண்டு துவண்டு வருகிற தனது ஒரே மகள். 

இவனுக்குள் சண்டாளமாகப் பொங்கிக் குமுறிய ஆத்திரம். போய்… கடை வாசலில் நின்று, தாறுமாறாக வைது, பேசி, கத்திக் கூப்பாடு போட வேண்டும் என்று தகிக்கிற மனசு. கடைக்காரரை ‘கிழி, கிழி’ யென்று வார்த்தைகளால் கிழித்து, நார் நாராகத் 

நார் நாராகத் தொங்கவிடத் துடிக்கிற மனக்கொதிப்பு. 

“ஏங்கூட வாம்மா.” அந்தப் பிஞ்சுக்கையைப் பற்றிக் கொண்டு வேகவேகமாய் நடக்கிற சங்கரபாண்டி. 

“இன்னைக்கு அவருக்கு இருக்கு, வசவு. இப்ப குடுக்குற கொடைமானத்துலே அவருக்கு எப்பவும் நெஞ்சுலே பயமிருக்கணும். எம்புள்ளையை முகம் வாட வைச்சுப் பாக்குற நெனைப்பே வரக் கூடாது” என்று வன்மம் கூறிக்கொண்டே, மூச்சிரைக்கிற கோபக் குமுறலோடு கடைபோய்ச் சேருகிற சங்கர பாண்டி. 

றெக்கை ஒடிந்த பறவையின் வலியுடனும், அவமான அவஸ்தையுடனும் பின் தொடர்கிற ராஜம். 

“ஏம்புள்ளைக்கு கடன் இல்லேன்னு ஏன் சொன்னீரு? என்னத்துக்கு திருப்பியனுப்புச்சீரு?” 

“கடன் இல்லேன்னு யாரு சொன்னது? பெரியாளுக வரட்டும்னு சொல்லத்தான் செய்ஞ்சேன்.” 

“தீம்பண்டம் வாங்குறதுக்கெல்லாம் பெரியாளுக வந்துக்கிட்டிருக்க முடியுமா? பச்சைப் புள்ளை கேக்குறதை குடுத்துட்டு, கணக்குலே எழுதிக்கிட வேண்டியதுதானே?” 

“சின்னஞ்சிறுசு கேக்குற தீம்பண்டத்தை குடுத்துட்டு கணக்கு எழுதி வைச்சா… நம்பணும். ஓம் பொண்டாட்டி ஏழு நாளு கழிச்சு வந்து, ‘அது என்ன… இது என்ன’ன்னு நம்பாம ஆயிரத்தெட்டு கேள்வி கேக்கா. ‘இது, இதுதான் நா வாங்குன கணக்கு, மத்தெதல்லாம் கள்ளக் கணக்கு’ன்னு சண்டை போடுதா. கடைச் சரக்கு குடுத்துட்டு கடன் எழுதி வைச்ச பாவத்துக்கு, ‘கள்ளக்கணக்கு’ன்னு பேரா? இது எனக்குத் தேவையா?” 

கடைக்காரரும் பேய்ச்சீற்றம் சீறுகிறார். நெடுநாள் கோபக் குமைச்சலை கொட்டித் தீர்க்கிற மனவெக்கை. 

திகைத்துப் போகிற சங்கரபாண்டி. அவரது எதிரடியில் கலகலத்துப் போகிற மனத்தடுமாற்றம். 

அவரது சிடுசிடுப்பிலும் நியாயம் இருக்கிறது. ‘கள்ளக் கணக்கு’ என்று குற்றம் சாட்டினால், மனசு கொதிக்காதா? கோபம் வராதா? லட்சுமி என்னத்துக்கு அப்படிப் பேசுகிறாள்? 

விறைப்பும் வேகமும் அடங்கி, நிதானத்துக்கு வருகிறான். தாழ்ந்த குரலில் சொல்லுகிற சங்கர பாண்டி. 

“சரி சரி… கோபப்படாதீரும். நா லட்சுமிகிட்டே பேசுறேன். இப்ப… எம்மகள் கேக்குறதை குடுத்தனுப்புங்க.” 

கடைக்காரர் ராஜத்தைப் பார்க்க, அவள் ஏதோ ஓர் இனிப்புப் பண்டத்தை கை நீட்டி, “அது வேணும்” என்றாள். 

“அது ரெண்டு ரூவா, தரவா?” 

“தாங்க.” 

அதைக் கையில் வாங்கியவுடன், பூத்துச் சிரிக்கிற பூச்செண்டாக அவள் முகமலர்வு. கண்ணில், மனத்துள்ளலின் மின்னல். 

அந்தச் சின்னஞ்சிறுசின் அதீத மகிழ்ச்சி இவனுக்குள் ஆழ்ந்த சோக இருட்டாகப் படிகிறது. 

‘இம்புட்டுச் சாதாரண தீம்பண்டத்துக்கு இம்புட்டுச் சந்தோஷமா? அப்படீ… ன்னா, எம்புள்ளை என்னமும் கிடைக்காம ஏங்கிப் போயிருக்கா. நாக்குக்கு ருசியான பலகாரம்… நல்ல நல்ல பதார்த்தம் கண்ணுலே பாக்காம… மனசுக்குள்ளே ஏங்கி ஏங்கி மருகிக்கிடந்துருக்காள். ஒத்தைப்புள்ளே. அதுக்கு ஆசைப்பட்டதை வாய்க்கு ருசியானதை வகைவகையா வாங்கித் தரணும்னு நானும் நெனைக்கலே. நெனைக்குற மாதிரி… மடியிலேயும் கனம் இல்லே.” 

வருத்தக் கருமையுடன் அவனுள் படர்ந்து விரிகிற அவலமான நினைவு நிழல். 

“சரிம்மா… நீ பள்ளிக்கோடம் போறீயா?” 

“ஆட்டும்யா.” 

லட்சுமி விடிந்தும் விடியாத வைகறைப் பொழுதிலேயே கூலி வேலைக்குப்போய் விட்டாள். காலைக் கரண்டு. ஆறுமணிக்குத்தான் த்ரீபேஸ் கரண்டு வரும். பம்ப்செட் மோட்டார் ஓடும். புழுதிப் பாத்திக்குள் தண்ணீர் பாயப்பாய… பருத்தி விதை ஊன்றணும். அதுக்குத்தான் லட்சுமி போயிருக்கிறாள். 

இவன் விடியற்காலம் டீ குடித்துவிட்டு சொந்தப் புஞ்சையான தெற்காட்டுப் புஞ்சைக்குப் போயிருந்தான். பூப்பருவத்தில் நிற்கிற கம்பப்பயிர், நெஞ்சுயரத்துக்கு வளர்ந்திருக்கிறது. பூட்டை வாங்கிவிட்டது. முழுக்க பூ பூத்து மொய்த்திருக்கிறது. உருக்கிய தங்கமென செங்கழித்த நிறத்தில் கண்ணுக்குக் குளிர்ச்சியாக நிறைகிறது. கதிர்கள் மாதிரியே இருக்கிற பூம்பூட்டை. காற்றுக்கு ஆடுகிறது. ராணுவ அணிவகுப்புத் தலையசைப்புபோல ஒரே சீரான அசைவலை. ஒரு சீரான அதன் அசைவலையின் நளினத்தில் காற்றின் உருவம் கண்ணுக்குத் தெரிகிறது. 

‘இன்னும் ஒரு தண்ணி பாய்ஞ்சிட்டா போதும். கருது மணிபுடிச்சு பால்கோதிரும்’ என்று நினைத்துக் கொள்கிற சம்சாரி மனசு. மேலப்புஞ்சைக்கும் போய்விட்டு, வெள்ளாமையை சுற்றிப் பார்த்தான். 

பொழி நிறைய அருகம்புல் செழித்துக் கிடந்த பசுமையைக் கண்ட கணத்தில் வந்த முனைப்பு. கையாலேயே பர்ருச் பர்ருச் சென்று பற்றிப் பற்றி பறித்தான். உடுத்தியிருந்த இடுப்புவேட்டியை அவிழ்த்து, அதிலேயே பறித்துப் போட்ட அருகம்புல்லை பெரிய பொதியாகக் கட்டிக் கொண்டான். மேல் துண்டை இடுப்பில்கட்டி, அண்டிராயரை மறைத்துக் கொண்டான். 

தலையில் புல்சுமையுடன் வீடு வந்தான். பசுவுக்கு புல்லையள்ளிப் போட்டான். ஆடுகளுக்கு அகத்திக் கொழை கட்டினான். உஸ்ஸென்று அயற்சியோடு திண்ணையில் உட்கார்ந்த போதுதான், 

“யய்யா…” என்று கூப்பிட்ட ராஜம். 

அவளாகவே குளித்து, துணிமாற்றி, சோறு வைத்து, உண்ட வட்டிலைக் கழுவி வைத்து, எண்ணெய் தேய்த்து, சடைபின்னி… எல்லாமே அவளாகவே ‘விடியக்கால வேலைக்கு அம்மா போயிருக்கா. நம்ம வேலையை நாமதான் பார்த்துக்கணும்’ என்கிற அக்கறை. பொறுப்புணர்வு. பெண்பிள்ளைக்குரிய மனச்சுபாவம். 

‘எல்லாம்… எங்க அம்மா மாதிரிதான். அதே அச்சு. அப்பேற்பட்ட தங்கப்புள்ளையை வாய்க்கு ருசியா வாங்கிப் போடாம… காயப்போட்டு ஏங்க வைச்சுட்டோமே…’ என்கிற முள்குத்தலான நினைவுகள். அவனுள் குடைந்து ஊடுருவுகிற குற்ற உணர்வு. 

தொழுவத்தில் எட்டிப் பார்த்தான். இவனைப் பார்த்ததும் “ம்ம்ம்ம்ம் க்க்க் ம்ம்மேய்ய்ய்க்” கென்று அடிவயிற்றிலிருந்து குரலெடுத்து கனைக்கிற பசு. இடிமுழக்கத்தின் அதிர்வும் உருள்வுமாகத்தோன்றுகிற அதன் கனைப்புச் சத்தம். 

‘புஞ்சைக்குப்போன எடத்துலே பசுவை நெனைச்சு புல்லைப் பறிக்கத் தெரியுது. பெத்தப்புள்ளையோட ஆசை அறிஞ்சுக்கிடத் தெரியலே. நமக்கு.’ 

அலுமினிய வாளியில் இருந்த கழிவு தண்ணீரைத் தூக்கிக் கொண்டு போய்ப் பசுவின் முன் வைத்தான். அருகம்புல்லை அசை போட்டு அசைபோட்டு அதன் கடைவாயில் பச்சைநிற நுரைகள் ஒழுகியது. பசித்தாகத்தில் ஆவல் பறப்போடு வாளிக்குள் வாய்வைத்த பசு, தண்ணீரைக் காலி செய்து விட்டுத்தான் தலையை நிமிர்த்தியது. தன் கரிய கண்ணில் மகிழ்ச்சி மின்னல். 

மறுபடியும் புல்லையள்ளிப் போட்டு விட்டு, அதன் முதுகில் ஒரு தட்டு தட்டி, பாசத்துடன் வருடிவிட்டு, காலைக் கஞ்சி குடிக்க வீட்டுக்குள் நுழைந்தவன் மனசுக்குள் கவலை இருட்டு. புண்ணை மொய்க்கிற ஈக்களாக வருத்த நினைவுகள். நினைவெல்லாம் மகள். 

‘மண்ணைக் கட்டி மாரடிக்கிற சம்சாரி… கால நேரம் கணக்கு பார்க்காம பொழுதுக்கும் பாடுபட்டு உசுரை வேர்வையா வடிச்சாலும், பெத்தபுள்ளை ஆசைக்கு ஒரு நல்ல பலகாரம் வாங்கித் தர முடியலே. காலைக் கஞ்சிக்கு ஒரு கடிச்சிக் கிடை இல்லே… ம்ள்ச்சூ! என்ன பய பொழைப்பு! 

விரக்திவசப்பட்ட மனசெல்லாம் பரவுகிற கசப்புணர்வு. உண்ட மயக்கம் அவனுக்குள் ஒரு கிறுகிறுப்பை ஏற்படுத்துகிறது. தாமதமாகக் காலைக்கஞ்சி குடித்த ஆயாசமும் சேர்ந்து கொண்டது. 

டீக்கடை போனான். “ஒரு டீ போடுப்பா.” 

அவன் பக்கத்திலிருந்தவனிடமிருந்து வந்த பிராந்தி வாடை. நல்ல மப்பில் இருந்தான். 

‘ஏழு மாசமாச்சு. முத்துக்காளை கல்யாணத்தன்னிக்கு நடந்த பார்ட்டியிலே தண்ணியடிச்சது’ என்று சம்பந்த மில்லாமல் நினைத்துக் கொண்டான். 

பத்து நாட்களுக்கும் மேலாயிற்று. ஒவ்வொரு நாளிலும் பல்வேறு சம்பவங்கள். பல்வேறு நினைவுகள். அந்தந்த நாளுக்குரிய நிகழ்வுகளின் சுவடுகளும், தழும்புகளும் பழைய தடங்களை அழித்துச் செல்கின்றன. 

அன்றைக்குச் சாயங்காலம். காலடிநிழல் கிழக்காக நீள்கிறது. தெற்காட்டுப் புஞ்சையில் வேலையை முடித்துவிட்டு, பசுமாட்டைப் பத்திக்கொண்டு ஊருக்குள் நுழைகிற சங்கரபாண்டி. தன் நடையாக மெது நடை போடுகிற பசு. இவன் தலையில் புல்கட்டின் கனத்த பாரம். 

“சங்கரபாண்டி… ஏப்பா… சங்கரபாண்டி.” 

பலத்த சத்தத்தின் அழைப்பு, முத்துமாமாவின் உரத்த குரல். நின்றான். அவரும் கிட்டத்தில் வந்தார். 

“என்ன மாமா.?” 

“இந்தாப்பா… ஏரநூறு ரூவா. சரியாயிருக்கான்னு பார்த்துக்கோ.” 

“என்னத்துக்கு?’ 

“சங்கரன் கோவில் போயிருந்தப்ப… ஒங்கிட்டே வாங்குன கைமாத்து ரூவா. ஒனக்கு அயத்துப் போச்சா?” 

“அது… ரெண்டு மாசத்துக்கு முந்தியில்லே?” 

“எப்ப வாங்குனாலும்… கடன் கடன்தானே? வாங்குன கடன் அடைஞ்சாகணும், வழி நடந்தாகணும்.” 

அவர் போய்விட்டார். அந்த ரூபாயை நாலாக மடித்து, அண்டிராயர் பைக்குள் வைத்துக் கொண்டான். 

இந்தப் பணம் கொடுத்ததுவும் லட்சுமிக்குத் தெரியாது. வந்ததுவும் தெரியாது. லட்சுமியிடம் கணக்கு சொல்ல வேண்டியதில்லை. பதில் சொல்ல வேண்டியதில்லை. 

அவனுக்குள் ஏதோ ஒரு கதவு திறந்துகொண்டது. 

பசுவைத் தொழுவில் கட்டினான். கொண்டு வந்து போட்ட புல்கட்டிலிருந்து, புல்லையள்ளிப் போட்டான். 

அண்டிராயர் பைக்குள் உறுத்துகிற ரூபாய் மடிப்பு. 

வைக்கோற் படப்புக்குப் பக்கத்தில் கிடந்த சைக்கிளை நிமிர்த்தினான். தூசியும் துப்பட்டையுமாக இருந்தது. பழைய துணியால் வண்டியைத் துடைத்தான். டயரில் நசுக்கிப் பார்த்தான். காற்று கிண்ணென்றிருந்தது. 

“எங்க… தூரவா…?” 

லட்சுமி கேட்டாள். 

“திருவேங்கடம் வரைக்கும்.” 

“என்ன ஜோலி.’ 

“வந்து… சொல்லுதேன்.” 

அவனுக்கு ரகசியமான குறுஞ்சிரிப்பு, பெடலில் காலை வைத்தான். சைக்கிள் திருவேங்கடம் நோக்கிப் பறந்தது. 

பைக்குள் ரூபாய் மடிப்பு. நூறு, நூற்றைம்பதில் ஒரு புதுச் சேலை எடுத்துக் கொண்டு வந்து, திடுதிப்பென்று நீட்டினால்…அவள் முகம் எப்படி விரியும்? எப்படி மலர்ந்து பூரிக்கும்? சந்தோஷத்தில் எப்படி திக்குமுக்காடி, திணறித் தவிப்பாள்? 

அதை மனசுக்குள் நினைத்துப் பார்த்தால்… மீண்டும் அவனுக்குள் வெடிக்கிற குறுஞ்சிரிப்பு. 

சைக்கிள் சாமிநாதபுரம் தாண்டியது. அந்திவெயிலின் தங்கமின்னல். கரிசல்மண்ணெல்லாம் வெயிலின் தங்கக் கரைசல். 

திருவேங்கடம் ஊருக்குள் போகிறவரை… எந்த ஜவுளிக்கடையில் சேலை எடுக்கலாம்… என்ன கலரில் எடுக்கலாம், என்று நினைவுகளில் மிதந்து வந்த சங்கரபாண்டி, திருவேங்கடத்துக்குள் நுழைந்தான். அவன் சைக்கிளை ஓரம்கட்டி நிறுத்தி, ஸ்டாண்டு போட்டு கிளிப்பை தட்டி நிமிர்ந்து பார்த்தால்- 

டாஸ்மாக் கடை அரசின் ஒயின்ஷாப். அவனே எதிர் பார்க்கவில்லை. திகைத்துப்போய். சைக்கிளை எடுக்கப்போனவனுக்குள் திடுதிப் பென்று வந்த சபலபுத்தி. குரங்குத்தாவல். 

லட்சுமிக்குத் தெரியாத பணம். கணக்கு சொல்ல வேண்டியதில்லை. வந்தது தெரியாது. இஷ்டப்படி செலவழிக்கலாம். 

‘அடிச்சு… ஏழு மாசமாச்சு. லேசா… அடிச்சுப் பார்த்தா… என்ன… 

சபலப்பட்ட மனசின் சரிவு. நிறமாறிய நினைவுகள். கடைப்படி ஏறினான். 

“எம்பது ரூவா பாட்டிலு ஒன்று.”

பக்கவாட்டிலிருந்த பாருக்குள் நுழைந்து, உட்கார்ந்து, தண்ணீர் பாக்கட் வாங்கி, பிளாஸ்டிக் கிளாஸ் வாங்கி… 

கையில் நடுக்கம். மனப்பரவசம். ஏதோ தப்பு செய்கிற மனசின் பதற்றம். மனப்பரபரப்பு. காய்ச்சல் கண்ட மாதிரியோர் குதுகுதுப்பு. உல்லாச விசிலடிப்பு. 

இது புது அனுபவம். நல்லது, பொல்லது நிகழ்வுகளில் வேண்டப்பட்ட ஆட்களோடு ஆளாக தண்ணியடித்த பழக்கம். இப்படி காசு கொடுத்து வாங்கி, தனியாக அடிப்பது புதுசு. 

அவனுக்குள் ஏதோ ஒரு குற்றக் குறுகுறுப்பு. ஆர்வப் படப்படப்பு. பரவசச் சிலிர்ப்பு. முரண்பட்ட மனமுறுக்கு. 

நாக்கில் மதுரத் தித்திப்பு, நெஞ்சுக்குள் ஒரு காந்தலான ருசிப் பரவல். 

வெளியே வந்தான். பக்கத்தில்தான் புரோட்டாக் கடை. “மூணு புரோட்டா” என்று ஆர்டர் கொடுத்துவிட்டு உட்கார்கிற போது… மிதப்பது போன்றதோர் பிரமை. 

தொண்டை கமறியது. அடிக்கடி செருமுகிறான். 

புரோட்டாவையும் சால்னாவையும் பிசைகிறபோது… மனசில் ஓர் ஆவல் பறப்பு. பிய்த்துப் போட்ட புரோட்டா இணுக்குகளைப் பரவலாக நனைக்கிற சால்னா குழம்பு. அவனது கண்ணுக்குள் ஏதோ ஒரு நிழலாட்டம். எங்கோ பறப்பது போன்றதோர் மயக்கம். 

அடிவயிற்றிலிருந்து வருகிற பசி. ஆசைஆசையாக சாப்பிட்டான். நாலுவாய் சாப்பிட்டிருப்பான். 

கடைவாசலில் கல்லாப் பெட்டி முன்னால், காய்ந்த தலையுடன் ஒரு சிறுமி. அவள் கையில் சிறிய தூக்குச் சட்டி, 

“ரெண்டு புரோட்டா பார்சல் குடுங்க. சால்னா கூடுதலா குடுங்க.” 

பார்சலுக்காகக் காத்திருக்கிற அந்தச் சிறுமியின் பார்வை, உள்ளுக்குள் மேய்கிறது. மேஜையில் மிதக்கிற பார்வை. சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கிற சிறுமியின் கண்ணில் எச்சில் ஊறுகிறது. ஏக்கப் பார்வை. 

இவனையும் பார்க்கிறாள். இவனும் பார்க்கிறான். ராஜமே அங்கு வந்து நின்று, ஏக்கமும் ஆசையுமாகப் பார்க்கிற மாதிரியோர் பிரமை. அவனுக்குள் அதிர்வலை. 

அவ்வளவுதான். 

அவனுக்குள் குமட்டல் எடுக்கிற மாதிரியோர் உணர்வு. அடிவயிற்றின் புரள்வு. குடலின் சீர்குலைவு. 

தன் மகளையே ‘பார்க்க வைத்து’ சாப்பிடுகிறேனா? அவனுக்கே அவன் அசிங்கமாகி… உள்ளுக்குள் பரவுகிற அருவருப்புணர்வு. 

நல்லவேளை… வாந்தியெடுத்துவிடவில்லை. சாப்பிடவும் முடியவில்லை. சாப்பிடாமல் அப்படியே எடுத்துப் போட்டு விட்டு கைகழுவுகிற சங்கர பாண்டி, 

“பெத்த புள்ளையோட ஆசையையும் ஏக்கத்தையும் காயப்போட்டு விட்டு… நான் மட்டும் ஆசைப்பட்ட படி குடிச்சு… வளைச்சுத் திங்கிறேனா…? நா… ஒரு தகப்பன்தானா? ஈரமுள்ள மனுச ஜெம்மந்தானா?” 

செருமிச் செருமி காறித்துப்புகிற சங்கரபாண்டி காறித்துப்புகிற எல்லா எச்சிலும் அவன் முகத்திலேயே தெறிப்பது போன்றதோர் பிரமை. அசூயை. 

“எனக்கும் மிருகத்துக்கும் என்ன வித்தியாசம்? ச்சேய்… ச்சேய்…” வாய்விட்டே முணுமுணுத்துக் கொள்கிற சங்கரபாண்டி. 

லட்சுமிக்கும், ராஜத்திற்கும் புரோட்டா பார்சலும், கால்கிலோ இனிப்புப் பூந்தியும், கால்கிலோ அல்வாவும், கால்கிலோ பக்கோடாவும் வாங்கி… ஹாண்டில் பாரில் தொங்க விட்டு… சைக்கிளை எடுக்கிற போது, 

அவனே அவனை மன்னிக்கத்துவங்கியிருந்தாலும், தன்னைத்தானே வைது கொள்வதை நிறுத்தவில்லை. 

– 2009, திரிசக்தி தீபாவளி மலர்.

மேலாண்மை பொன்னுச்சாமி மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *